தமிழகத்தில் பாஜகவின் முதன்மைக் குறி யார்?




இது பலருக்கு ஆச்சரியம் தரலாம். அதாவது, அதிமுக மீது திமுக தலைவர் கருணாநிதி கொண்டிருந்த அபிமானம். கட்சிக்குத் தடை விதிக்கப்படலாம்; அமைப்பே முடக்கப்படலாம் என்கிற சூழலை வரலாற்றில் மூன்று சந்தர்ப்பங்களில் திமுக எதிர்கொண்டிருக்கிறது. நெருக்கடிக் காலகட்டத்தில் இப்படியொரு பேச்சு இருந்தபோது, கட்சியின் முக்கியத் தலைவர்கள் யாவரும் சிறையில் தள்ளப்படலாம் என்ற வதந்தியும் உலவியது. சரி, அப்படி ஏதேனும் நேர்ந்தால் என்ன செய்வது? அமைப்பின் அதே பெயரில் தலைமறைவு அரசியலில் ஈடுபடுவதா அல்லது புதிய பெயரில் ஒரு அமைப்பைக் கட்டுவதா; யாரெல்லாம் அதை நிர்வகிப்பது? இப்படிப் பல எண்ணங்கள்.  

அன்றாடம் பொழுது சாய்ந்தால் மெரினா கடற்கரையில், நெருக்கமான கட்சித் தோழர்களுடன் அமர்ந்து விவாதிக்கும் வழக்கம் அப்போது கருணாநிதிக்கு இருந்தது. அன்றைக்கு நெடுநேரம் அமைதியாக இருந்தவர் சொன்னார், “வாழ்வோ சாவோ திமுகவோடுதான். திமுக இல்லாவிட்டால் என்னவாகும் என்ற கேள்விக்கு எனக்கு ஒரே ஒரு ஆறுதல்தான் இருக்கிறது. அதிமுகதான் அது. அண்ணாவால் உருவாக்கப்பட்ட திமுக முடக்கப்பட்டாலும், அண்ணாவின் பெயரில் உருவாக்கப்பட்ட அதிமுக நம்மைக் கொஞ்சமேனும் பிரதிபலிக்கும். நிச்சயமாக தேசியக் கட்சிகளைப் போல அதிமுகவினர் தமிழ்நாட்டுக்கு அந்நியமாகச் செயல்பட மாட்டார்கள்!”

அதிமுகவின் தலைமைப் பதவியை அலங்கரித்த எம்ஜிஆர், ஜெயலலிதா எந்தச் சந்தர்ப்பத்திலும் திமுகவைப் பற்றி இப்படிக் கூறவில்லை என்றாலும், திமுக அல்லது அதிமுக என்ற இருமுனை அரசியலைத் தமிழ்நாட்டில் அரை நூற்றாண்டாக நிலைநாட்டியதில் இரு தரப்புமே உறுதியாக இருந்தார்கள் என்று சொல்ல முடியும். அரசியல் களத்தில் பரம வைரிகளாகச் செயல்பட்டுவந்த திமுகவும் அதிமுகவும் இன்னொரு தரப்பின் மீது கொண்டிருந்த இந்தப் பற்றுறுதியை எப்படிப் பார்ப்பது?