மன்னார்குடி ஏன் இப்படி ஆனது?


     ன்னார்குடி ஓர் அற்புதமான நகரம். இந்தியாவின் மிக நேர்த்தியாகக் கட்டமைக்கப்பட்ட நகரங்களில் ஒன்று அது. ஒரு காலத்தில் சுமார் 6 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட நகரமாக அது இருந்தபோது, அந்தச் சின்ன நகரத்தில் நாட்டின் பெரிய குளங்களில் ஒன்றான 'ஹரித்ராநதி' உள்பட சிறிதும் பெரிதுமாக 98 குளங்கள் இருந்தன. இவை யாவும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டிருந்தன. வடுவூர் ஏரியிலிருந்து ஏறத்தாழ 15 கி.மீ. நீளம், 100 அடி அகலத்தில் வாய்க்கால் அமைக்கப்பட்டு அதன் வழியே தண்ணீர் கொண்டுவரப்பட்டு இந்தக் குளங்கள் நிரப்பப்பட்டன. காவிரியின் கிளைநதியான பாமணி அரவணைத்திருக்க, மிகக் கச்சிதமாக மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி அமைக்கப்பட்ட தெருக்களும் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி அமைக்கப்பட்ட வீதிகளும் சொல்லொண்ணா அழகை அந்த நகருக்குத் தந்தன. ஆங்கிலேயர்கள் அந்த நகரின் அழகை உணர்ந்திருந்தார்கள். 1866-ம் ஆண்டிலேயே மன்னார்குடியை நிர்வகிக்க நகர சபையை உருவாக்கினார்கள் அவர்கள்.

ஊழல் நமக்குப் பழகிவிட்டதா?


ரூ. 1763790000000. ஒரு சராசரி இந்தியன் இந்தத் தொகையைக் குழப்பமின்றி எழுத்துக் கூட்டிக் கணக்கிட சில நிமிஷங்கள் ஆகும். ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரத்து முன்னூற்று எழுபத்தியொன்பது கோடி ரூபாய்கள். இந்தியத் தொலைத்தொடர்புத் துறையின் இரண்டாம் தலைமுறைக்கான அலைக்கற்றை ஒதுக்கீட்டில், நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் வருவாய் இழப்பாக தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம் கணக்கிட்டிருக்கும் தொகை இது.

அழிவு சக்தி!

            
              ப்பான் சுனாமி காட்சிகளை சேனல் சேனலாகத் தாவித் தாவிப் பார்த்துக்கொண்டே, நமது வீட்டுக்குள் நாம் மிகப் பாதுகாப்பாக இருப்பதாக நினைக்கிறோம். ஆனால், அது உண்மையா?

                    ஜப்பான் அடுத்தடுத்து எதிர்கொண்டுவரும் நிலநடுக்கங்கள், சுனாமி, ஃபுகுஷிமா அணு உலையின் சிதைவிலிருந்து பரவும் கதிர்வீச்சு என ஜப்பானின் சோகம்... உலகத்துக்கே ஒரு பாடம். குறிப்பாக இந்தியாவுக்கு. ஜப்பானுக்கு நிலநடுக்கங்கள் புதிதல்ல; யுரேஷியன், பசிஃபிக், பிலிப்பைன்ஸ் கண்டத்திட்டுகள் சேரும் இடத்தின் அமைவிடம் டோக்கியோ. நிலநடுக்கங்கள் அதிகம் ஏற்படும் வாய்ப்பு உள்ள பிரதேசம். உலகிலேயே ஜப்பானில்தான் இதுவரை அதிக அளவு சுனாமி ஏற்பட்டு இருக்கிறது. வரலாற்றைப் புரட்டினால், சராசரியாக ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை சுனாமியை ஜப்பானியர்கள் எதிர்கொள்கிறார்கள். ஆனால், இந்த முறை ஏற்பட்டிருக்கும் நிலநடுக்கமும் சுனாமியும் ஜப்பானியர்களைப் பல ஆண்டுகள் பின்னோக்கிப் பார்க்க வைத்திருக்கின்றன. சுமார் 1,326 வருஷங்களுக்கு முன் ஏற்பட்டதாகக் கூறப்படும் 'ஹகுவா மஹா’ சுனாமிக் கதைகளையும் ஜப்பானின் மிக மோசமான நிலநடுக்கமான 1923-ம் வருடத்திய 'கான்டோ’ நிலநடுக்க நினைவுகளையும் ஜப்பானியர்கள் பேசத் தொடங்கி இருக்கின்றனர். எல்லாவற்றுக்கும் மேல் அணு சக்தி தேவையா என்ற குரல் வலுக்க ஆரம்பித்திருக்கின்றன.

இது எந்த நாகரிகத்தின் எச்சம்?



    மிழகத்தின் பிரதான கட்சிகள் திருச்சியில் அண்மையில் அடுத்தடுத்து நடத்திய மூன்று பிரம்மாண்ட பொதுக்கூட்டங்களின்போதும், கூட்டம் முடிந்த இரவுப் பொழுதுகளில் அந்தக் காட்சியைக் காண முடிந்தது. வெறிச்சோடிய காலி மைதானம், அதில் லட்சம் காலிக் கோப்பைகள், பல்லாயிரக் கணக்கான பொட்டலத் தாள்கள், போத்தல்கள், பாக்குத் தாள்கள், பாலிதீன் பைகள், அறுந்த செருப்புகள், நொறுக்கப்பட்ட கண்ணாடித் துகள்கள்...
 

எதற்கான சாட்சிகள் இவை? 
அரசியல் கட்சிகளுக்கு இப்போதெல்லாம் ஒரு பெரிய பொதுக்கூட்டத்தை நடத்துவது என்பது ஒரு பெரிய காரியமாக இருப்பதில்லை. தொண்டர்களுக்கும் திரள்வதற்குப் பெரிய நோக்கங்கள் ஏதும் தேவைப்படுவதில்லை. பொதுக்கூட்டம் என்றால் வாகனங்கள், சுவரொட்டிகள், விளம்பரப் பதாகைகள், ஒலிப்பெருக்கிகள், பிரியாணி பொட்டலங்கள், மது போத்தல்கள், பணத்தாள்கள், முழக்கங்கள். பரஸ்பர புரிதல்கள் எளிமையாக இருப்பதால், இந்தக் கூட்டங்கள் சுலபமாக முடிந்துவிடுகின்றன.  ஆனால், கூட்டம் நடைபெறும் இடம் வெறும் உரைகளோடும் முழக்கங்களோடும் கைத்தட்டல்களோடும் மட்டும் முடிந்துவிடுவதில்லை. ஒரு கூட்டத்தில் லட்சம் பேர் கூடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். சில மணி நேரங்களுக்குள் அந்தப் பகுதியில் எப்படியும் லட்சம் டீ, காபி விற்பனையாகிறது. பல்லாயிரம் லிட்டர் தண்ணீர் விற்பனையாகிறது. தின்பண்டங்கள் விற்பனையாகின்றன. சில ஆயிரம் சிகரெட்டுகளும் பீடிகளும் வெற்றிலைப் பாக்கு புகையிலைப் பொருட்களும் பான் பொருட்களும் விற்பனையாகின்றன. யாவும் அங்கேயே பயன்படுத்தப்படுகின்றன. யாவற்றின் எச்சங்களும் அங்கேயே உமிழப்படுகின்றன.  
ஒரு சின்ன நிலப்பரப்பு. முழுவதும் குப்பைகள், எச்சங்கள், எச்சில்... ஒரு சாதாரண பொதுக்கூட்டமானது சூழல் சார்ந்தும் சுகாதாரம் சார்ந்தும் எவ்வளவு மோசமான விஷயமாக மாறிவிடுகிறது? 

ஏன் உறைக்கவில்லை?
ஒரு பொதுக்கூட்டத்துக்கு அரசியல் கட்சியினர் எவ்வளவோ திட்டமிடுகிறார்கள். கட்சித் தலைவர்கள் ஊர்ஊராகச் செல்கிறார்கள். தெருத்தெருவாகக் கூடுகிறார்கள். ஆள்களைச் சேர்க்கிறார்கள். வாகனங்களைச் சேர்க்கிறார்கள். கூட்டம் நடைபெறும் இடத்தைக் கோட்டையாக்குகிறார்கள். மேடையை அரசவையாக அலங்கரிக்கிறார்கள். வரலாற்றுக் காலத்துக்குத் தம் தலைவர்களையும் தொண்டர்களையும் அழைத்துச் செல்ல எவ்வளவோ மெனக்கெடுகிறார்கள்.  ஆனால், லட்சம் பேர் கூடும் இடத்தில் ஒரு குப்பைத்தொட்டியைக்கூட காண முடிவதில்லையே ஏன்? குறைந்தபட்சம் அது தொடர்பான பிரக்ஞைகூட இன்னும் நம்மிடம்  வரவில்லையே ஏன்? 

உண்மையில் இது ஒரு வெளிப்பாடு. நம்முடைய அகம் வேறு; புறம் வேறு என்பதை அம்பலப்படுத்தும் வெளிப்பாடு. இந்தியர்கள் தன்னளவிலும் வீட்டளவிலும் மிகுந்த சுத்தமானவர்கள்தான். ஆனால், இந்தியர்களின் சுத்தம் ஏன் அவரவர் வீட்டு வாசலைத் தாண்டும்போது முகம் மாறிவிடுகிறது? 

உள்ளே வெளியே
இந்திய கிராமப்புறங்களிலுள்ள சின்ன தனியார் மருத்துவமனைகளாகட்டும், மாநகரங்களிலுள்ள பெரிய தனியார் மருத்துவமனைகளாகட்டும்; அவற்றில் காணப்படும் சுத்தத்தை கிராமப்புறங்களிலுள்ள சின்ன அரசு மருத்துவமனைகள், மாநகரங்களிலுள்ள பெரிய அரசு மருத்துவமனைகளில் காணப்படும் சுத்தத்தோடு ஒப்பிட்டுப் பாருங்கள். வெளிநாடுகளுக்குச் சென்றுவிட்டு திரும்பிய பின்னர், அங்கு பேணப்படும் பொது சுகாதாரம் குறித்து இந்தியர்கள் சொல்லி சொல்லி மாய்க்கும் கதைகளை அவர்கள் இங்கு நடந்துகொள்ளும் விதத்துடன் ஒப்பிட்டுப் பாருங்கள்.  உண்மையில் இந்தியாவில் சுத்தம் என்பது கிராமம் - நகரம் சார்ந்த விஷயம் அல்ல; ஏழை - பணக்காரர் சார்ந்த விஷயம் அல்ல; படித்தவர் - படிக்காதவர் சார்ந்த விஷயம் அல்ல; கவனிக்க யாருமற்ற சூழலில் - கட்டுப்படுத்த யாருமற்ற சூழலில் - பிறர் நலனைப் பொருட்படுத்தாமல் அசிங்கமாக நடந்துகொள்வதை நாம் ஒரு தேசிய ஒழுங்கீனமாக வளர்த்தெடுத்துக்கொண்டிருக்கிறோம்.
நாம் நம் குழந்தைகளுக்கு உயர்ந்த கல்வியைக் கற்றுக்கொடுக்கிறோம். உயரிய தனி மனித ஒழுக்கத்தைக் கற்றுக்கொடுக்கிறோம். எல்லாவிதமான கலைகளையும் கற்றுக்கொடுக்கிறோம். ஆனால், பொது இடத்தில் ஒரு நல்ல குடிமகனாக நடந்துகொள்ள ஏன் கற்றுக்கொடுப்பதில்லை? குறைந்தபட்சம் ஏன் அதுகுறித்து யோசிப்பதுகூட இல்லை?

இந்திய குடிமைச் சமூகமானது பல்வேறு இனங்களையும் சேர்த்து கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதிலுள்ள எல்லா இனங்களுக்குமே தம்முடைய இனம் சார்ந்து மிக உயரிய மதிப்பீடுகள் இருக்கின்றன. நாம் எல்லோருமே நம்முடைய வரலாற்றைக் குறைந்தது சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலகட்டத்திலிருந்தே தொடங்க விரும்புகிறோம். வாய்ப்பு கிடைத்தால் சிந்து சமவெளி நாகரிகத்தை மெசபடோமிய நாகரிகத்துக்கு முந்தைய காலகட்டத்துக்கோ எகிப்திய நாகரிகத்துக்கு முந்தைய காலகட்டத்துக்கோ நகர்த்திவிடும் சாமர்த்தியம் நமக்கு உண்டு. ஆனால், நாம் இன்று கடைப்பிடித்துக்கொண்டிருக்கும் இடத்துக்கேற்ற சுத்தம் எந்த நாகரிகத்தின் எச்சம்?



 
அக். 2010  தினமணி

கொண்டலாத்திகளும் குக்குறுவான்களும்...

கொண்டலாத்தி...
தமிழ்க் கவிதையுலகில் முன்னுதாரணம் இல்லாத முயற்சி இது; பார்த்தவுடனேயே பரவசப்படுத்துகிறது. முழுக்க முழுக்க பறவைக் கவிதைகளால் நிரம்பியிருக்கும் இந்தச் சின்ன புத்தகத்தின் மூலம் தமிழ்க் கவிதையில் ஒரு பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறார் கவிஞர் ஆசை.
நவீன கவிதை உருவாக்கியுள்ள இறுக்கமான வறண்ட உலகை ஆசையின் கொண்டலாத்திகளும் குக்குறுவான்களும் தேன்சிட்டுகளும் தவிட்டுக்குருவிகளும் உடைத்தெறிகின்றன. பறவைகளின்றி இந்த உலகமே  இல்லை என்கிறார் ஆசை. அவர் தொடர்கிறார்:

எந்திரன் என்றோர் ஏகாதிபத்தியன்!



 ஏறத்தாழ ரூ. 160 கோடி முதலீடு, ஒரே நேரத்தில் 3 மொழிகளில் 2,250 பிரதிகளுடன் உலகின் பல்வேறு நாடுகளிலும் வெளியீடு, ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு, இதுவரை இந்திய கதாநாயகிகள் யாரும் பெற்றிராத ரூ. 6 கோடி சம்பளத்தில் கதாநாயகியாக முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய், ஆஸ்கர் விருதுபெற்ற ஏ.ஆர். ரஹ்மான் இசை, எல்லாவற்றுக்கும் மேலாக 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த்...  வரலாறுதானா 'சன் பிக்சர்'ஸின் 'எந்திரன்'?

நிச்சயமாக 'எந்திரன்' ஒரு வரலாறுதான். ஒரு ஜனநாயக நாட்டில் விஞ்ஞானத்தின் உதவியுடன், அரசாங்கத்தின் ஆசியுடன் வணிக மோசடியும் வணிக ஏகாதிபத்தியமும் எப்படி ஜனநாயகமாக மாற்றப்படுகிறது என்கிற வரலாறு.

மொத்தம் 3,000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள். முதல் நாளன்று சராசரியாக ஒரு திரையரங்குக்கு 500 இருக்கைகள் (தமிழகத்தில் 650-க்கும் மேற்பட்ட இருக்கைகளைக் கொண்ட திரையரங்குகளே அதிகம்); 4 காட்சிகள் (6 காட்சிகள்கூட திரையிடுகிறார்கள்); டிக்கெட் விலை ரூ. 250 (ரூ. 1,000 வரை விற்கிறது) எனக் கொண்டால்கூட  முதல் நாள் வசூல் மட்டும் ரூ. 150 கோடி. 'சன் குழும' ஊடகங்கள் பறைசாற்றும் தகவல்களின்படி, தமிழகம் மட்டும் இன்றி ஐரோப்பாவின் மிகப் பெரிய திரையரங்கமான 'கோலோஸியம்' உள்பட எல்லா இடங்களிலும் முன்பதிவில் புதிய சாதனைகளை 'எந்திரன்' உருவாக்கி இருக்கிறது; வசூலில் சாதனை நிகழ்த்தி 'அமெரிக்க பாக்ஸ் ஆஃபி'ஸில் முதலிடம் பிடித்திருக்கிறது. ஆக, எப்படிப் பார்த்தாலும் ஒரு வாரத்துக்குள் மட்டும் குறைந்தது ரூ. 1,000 கோடி வருமானம்! எனில், மொத்த வருமானம்?

வரலாற்றின் மீதான சூதாட்டம்



                              ரலாற்றில் நமக்குள்ள மிகப் பெரிய சௌகரியம், அதை எங்கிருந்து வேண்டுமானாலும் நம் வசதிக்கேற்ப தொடங்கிக்கொள்ளலாம். அயோத்தி விவகாரத்தில் அலாகாபாத் உயர் நீதிமன்றத்தின் லக்னௌ கிளை அளித்துள்ள தீர்ப்பின் மூலம் வரலாற்றை, வரலாற்றுக் காலத்துக்கெல்லாம் அப்பாலும் தொடங்கிக்கொள்ளும் வசதியை இந்திய நீதிமன்றங்கள் எடுத்துக்கொள்கின்றன.

யாருடைய எலிகள் நாம்?


     அமெரிக்கக் குழந்தைகளுக்கான மருந்துகளை மேம்படுத்தும் வகையில், புதிய மருந்துகளைக் கண்டுபிடிக்க இந்தியா உள்ளிட்ட மூன்றாம் உலக நாடுகளைச் சேர்ந்த குழந்தைகள் மீது மருந்துப் பரிசோதனைகள் நடத்த அனுமதி அளித்திருக்கிறது அமெரிக்க அரசு. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக நவீனமயமாக்கல் சட்டத்தின் ஒரு பகுதியாக இயற்றப்பட்ட குழந்தைகள் மருத்துவச் சட்டத்தின் கீழ் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒரு மனிதன்... ஒரு கோயில்... ஒரு புத்தகம்...


 தஞ்சை பெரிய கோயில் கட்டப்பட்டதன் ஆயிரமாவது ஆண்டு விழாவை நாம் கொண்டாடிக்கொண்டிருக்கும் சூழலில்,  சமகாலத்தில் இந்த விழாவில் கொண்டாடப்பட வேண்டியவர் யாராக இருக்க முடியும்? கேள்வி நீளமானது. ஆனால், பதில் சுருக்கமானது. குடவாயில் பாலசுப்ரமண்யன்.
        தஞ்சாவூர் பெருவுடையார் கோயில் என்றாலே, இன்றைக்கு ஆன்மிகவாதிகளிலிருந்து அரசாங்கம் வரை எல்லோரும் அவரைத்தான் தேடுகிறார்கள். கோயில் பற்றி அவர் பேசுவதைக் கேட்பதே ஓர் அலாதியான அனுபவமாக இருக்கிறது. பேசத் தொடங்கிய சில நிமிஷங்களில் சோழர் கால வரலாற்றினூடே நம்மை ஒரு சுற்றுலா அழைத்துச் சென்றுவிடுகிறார் மனுஷர். முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது வரலாற்றோடு தத்துவ விசாரங்களிலும் அவருக்கு இருக்கும் ஈடுபாடு. அது நம்மையும் தொற்றிக்கொள்கிறது.

எப்படி கட்டப்பட்டிருக்கும் இப்படி ஓர் அற்புதம்?


  
                  
ராஜராஜேச்சரத்தின் நெடிதுயர்ந்த ஸ்ரீ விமானத்தைப் பார்க்க நேரும்போதெல்லாம் என்னுள் இந்தக் கேள்வி எழும்: எப்படி கட்டப்பட்டிருக்கும் இப்படி ஓர் அற்புதம்?

                   இந்தக் கேள்விக்கு ஒரே மாதிரியான பதில்தான் கிடைக்கிறது: ஸ்ரீ விமானத்தைச் சுற்றி மண் சாய்வுத்தளம் அமைக்கப்பட்டு, அதன் வழியாக யானைகள் துணையுடன் கற்கள் கொண்டுசெல்லப்பட்டு கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். தஞ்சாவூர்ப் பகுதியில் இது தொடர்பாக  சரளமாகப் புழங்கும் இரு கதைகள் உண்டு. ஒன்று, பெரிய கோயிலைச் சுற்றி குளங்கள் வெட்டப்பட்டு, அவற்றின் மூலம் பெறப்பட்ட மண்ணால் மண் சாரம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த கதைக்குச் சாட்சியாக குளங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன. மற்றொன்று, தஞ்சாவூருக்கு வடகிழக்கேயுள்ள சாரப்பள்ளம் என்னும் ஊரிலிருந்து மண் சாய்வுதளம் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். இந்தக் கதைக்கு சாட்சியாக சாரப்பள்ளம் ஊர் சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனால், இந்த விளக்கங்கள் எப்போதுமே எனக்கு திருப்தி அளித்ததில்லை. நாம் நம் முன்னோரின் திறனைக் குறைத்து மதிப்பிடுகிறோமோ என்று தோன்றும். இதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். ராஜராஜேச்சரத்தில் ஸ்ரீ விமானத்தின் மையத்தில் இருக்கிறது பெருவுடையார் திருமேனி. இதிலிருந்து ஏறத்தாழ 191 அடி உயர இடைவெளிக்கு அப்பால் உச்சத்தில் இருக்கிறது ஸ்ரீ விமானத்தின் சிகரக் கலசம். பெருவுடையார் திருமேனியின் மையமும் சிகரக் கலசத்தின் மையமும் ஒரே நேர்க்கோட்டில் சந்திக்கின்றன. இந்த நேர்க்கோட்டைக் கற்பனை செய்தவாறே சுற்றியுள்ள ஸ்ரீ விமானத்தைக் கற்பனை செய்யுங்கள். எப்பேர்ப்பட்ட மகத்துவமான கட்டமைப்பு இது?!

காலை உணவுத் திட்டம்!



இந்தியாவின் பிரச்சினைகளுக்கான தீர்வு எங்கே இருக்கிறது? அது பயன்படுத்திக்கொள்ளாமல் வீணாக்கும் வளங்களில்தான் இருக்கிறது!

சாதிவாரிக் கணக்கெடுப்பில் என்ன தவறு?





நான் சாதிக்கு எதிரானவன்;  நீங்களுக்கும்கூட சாதிக்கு எதிரானவராக இருக்கலாம். ஆனால், ஒரு சாதிக்கு 4,830 கோத்திரங்கள் உள்ள ஒரு நாட்டில், 25,000-க்கும் மேற்பட்ட சாதிகளும் துணை சாதிகளும் உள்ள ஒரு நாட்டில் சாதி இல்லை என்று நாம் சொல்ல முடியாது. அப்படிச் சொன்னால், நாம் ஏமாற்றுகிறோம் அல்லது ஏமாந்துகொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்.

ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியர்களுக்காக பிரிட்டனில் குரல் கொடுத்தவர்களில் குறிப்பிடத் தக்க சிந்தனையாளரான எட்மண்ட் பர்க் ஒருமுறை இப்படிச் சொன்னார்: “இந்திய நாட்டின் மத வரையறைகள், நில வரையறைகள், மரியாதைக்கான கோட்பாடுகள் யாவும் சாதிச் சட்டங்களுடன் காலாகாலத்திற்கும் பிரிக்க முடியாதபடி பிணைக்கப்பட்டிருக்கின்றன.”

போராட்டமா; யாரங்கே?

     மது, மது வகைகள், மதுப் பழக்கம், மது விற்பனை, மதுவிலக்கு இவற்றையெல்லாம்பற்றி நம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்து உண்டு. தமிழகத்தில் மதுவிலக்கை அமலாக்க வேண்டும் என்று ஒரு சாரார் வலியுறுத்திவருகின்றனர். மதுவிலக்கு தேவையில்லை; ஆனால், உள்நாட்டு மது வகைகளுக்கும் - குறிப்பாக கள்ளுக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என்று இன்னொரு சாரார் வலியுறுத்திவருகின்றனர். ஆனால், தமிழக அரசோ இந்த விஷயத்தில் ஒரு வினோதமான கொள்கையைப் பின்பற்றிவருகிறது.

உடைபடும் சீழ்க்கட்டிகள்

                தமிழக அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் களிப்பில் ஆழ்த்தியுள்ளதாக அறிக்கை வெளியிட்டிருக்கிறார் தமிழக முதல்வர் மு. கருணாநிதி. அத்திட்டம் தொடங்கப்பட்டு, ஓராண்டு நிறைவடைந்ததையொட்டி வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தன்னுடைய களிப்பை அவர் வெளியிட்டிருக்கிறார். அவருடைய அளவில் இந்தக் களிப்பு நியாயமானது.   ஏனெனில், தமிழகத்தை முன்னுதாரணமாகக் கொண்டு ஏனைய மாநில அரசுகளும் இத்தகைய காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு விரும்புகிறது. இதனால், பல மாநில அரசுகள் இத்தகைய காப்பீட்டுத் திட்டத்தை தத்தமது மாநிலங்களில் அறிமுகப்படுத்தும் யோசனையில் இருக்கின்றன.
      ஆனால், தமிழக முதல்வர் இப்படி ஓர் அறிக்கையை வெளியிட்டிருக்கும் இதே காலகட்டத்தில்தான் நாட்டின் தலைநகரத்திலிருந்து மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் குரூர முகபாவங்கள் வெளிப்படத் தொடங்கியிருக்கின்றன. இந்தியாவில் மருத்துவக் காப்பீட்டில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் 4 பொதுத் துறை நிறுவனங்கள் உள்ளிட்ட 18 பெரிய நிறுவனங்கள் பணமில்லாமல் சிகிச்சை அளிக்க வகை செய்யும் காப்பீட்டுத் திட்டங்களை (கேஷ் லெஸ் மெடி க்ளைம்)  சில முக்கிய நகரங்களிலிருந்து விலக்கிக்கொண்டுள்ளன. அடுத்த சில வாரங்களில் நாட்டின் பல நகரங்களுக்கு இந்நடவடிக்கை நீளலாம்.

தமிழ் ஆதிமொழியாக வேண்டுமா; அழியாமொழியாக வேண்டுமா?


                               
 
                                    உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் தொடக்க விழாவில், "தமிழே உலக முதல் தாய்மொழி'' என்று பிரகடனப்படுத்தியிருப்பதன் மூலம் காலங்காலமாக தமிழின் வளர்ச்சியை அழுத்திக்கொண்டிருக்கும் ஒரு கருத்தாக்கத்துக்குப் புத்துயிர் அளித்திருக்கிறார் முதல்வர் மு. கருணாநிதி.

என்ன செய்யப்போகிறோம்?

    
     முரண்கள் சூழ்ந்த ஒரு தருணம் இது. ஒருபுறம், உலகின் தொன்மையான மொழிகளில் ஒன்றான நம் மொழியின் பழைமையையும் அதன் செவ்வியல்தன்மையையும் கொண்டாடும் வகையில் மாநாடு எடுக்கிறோம்; மறுபுறம், அம்மொழியின் இன்றைய நிலை, அது எதிர்கொள்ளும் நவீன மாற்றங்கள் - சவால்கள், அதன் எதிர்காலம்குறித்த கவலை நம் யாவருடைய மனத்திலும் கவிந்திருக்கிறது. ஆனால், செம்மொழியான எம் மொழியின் எதிர்காலம் இந்த முரண்களுக்கு இடையில்தான் சிக்குண்டிருப்பதாகத் தோன்றுகிறது.

ஒரு கோப்பை கேழ்வரகு கூழிலிருந்து புரட்சியைத் தொடங்குவோம்!



    
                  சீன பிரதமர் வென் ஜியாபோ, "மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த சீனா கடைப்பிடித்துவரும் ஒரு குழந்தை கட்டுப்பாட்டுச் சட்டம் நல்ல பலனைத் தந்துவருவதால் தொடர்ந்து அமலில் இருக்கும்'' என்று அறிவித்திருக்கிறார். எப்போது தெரியுமா? இந்தியாவின் உணவுத் தேவை, உணவு உற்பத்தியில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு, விலைவாசி உயர்வுக்கான காரணம், பொருளாதாரத் தேக்க நிலை ஆகியவை குறித்து 55 நிமிஷ நீண்ட நெடிய உரையை நம்முடைய நாடாளுமன்றத்தில் பிரதமர் மன்மோகன் சிங் ஆற்றிக்கொண்டிருந்ததற்கு கொஞ்சம் முன்பு. "இப்பிரச்னையை எதிர்கொள்ள அரசு எத்தகைய நடவடிக்கையும் எடுக்கத் தயார்'' என்று மன்மோகன் சிங் சூளுரைத்ததற்கு சற்று முன்பு.

உலகம் அழிந்துவிடுமா?

      விரைவில் உலகம் அழிந்துவிடுமா?
   காலங்காலமாக மனிதகுலத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கும் இந்தக் கேள்வி இப்போது இன்னும் வேகமாகப் பரவுகிறது.
    திருச்சியில் கல்லூரி நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமிடம் ஒரு மாணவி இதைக் கேட்டாள். ஒரு கணம் மௌனித்த  அந்த முன்னாள் விஞ்ஞானி, அப்புறம் இப்படி பதில் தந்தார்:  "இல்லை. பூமியில் 1,000 கோடி ஆண்டுகள் சூரிய வெளிச்சம் இருக்கும் என்று விஞ்ஞானி சந்திரசேகர் தன் ஆய்வில் கண்டறிந்திருக்கிறார். தற்போது 500 கோடி ஆண்டுகளே முடிவடைந்துள்ளன. இன்னும் 500 கோடி ஆண்டுகள் உள்ளன. ஆகையால், கவலைப்படத் தேவையில்லை.''
       ஆனால், எல்லோருடைய ஆழ்மனத்திலும் விடை தெரியாத அந்தக் கேள்வி புதைந்திருக்கிறது. மாயர்களின் நாகரிகத்தில் தொடங்கி புவி வெப்பமயமாதல் கருதுகோள் வரை சகலமும் மனிகுலத்தை இந்தக் கேள்வியை நோக்கித் தள்ளுகின்றன.
     பனிமலைகள் உருகுகின்றன; மலைகள் சரிகின்றன; கடல்மட்டம் உயர்கிறது; தீவுகள் மூழ்குகின்றன. உலகம் அழிந்துவிடுமா?
காஷ்மீர், தெலங்கானா, தண்டகாரண்யா....   

காத்திருக்கும் புதைகுழி


    வரலாறு என்பது திட்டமிட்டு நிகழக் கூடியதல்ல. காலத்தின் அபத்தமான நிகழ்தகவில் கண நேரத்தில் நடந்துவிடக்கூடியது. சொல்லப்போனால், மிக சாதாரணமான - பொருட்படுத்தத் தகாத - அபத்தமான முடிவுகளே பெரும்பாலான வரலாறுகளை உருவாக்கி இருக்கின்றன. அமெரிக்க வரலாற்றில் வியூக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முடிவை அறிவிக்கும் முன் இந்திய பிரதமருடன் அந்நாட்டு அதிபர் உரையாடியிருப்பதைச் சாதாரண நிகழ்வாகப் பார்க்க முடியவில்லை.

வெப்பத்தின் அரசியல்


        
             ரம்பமாகிவிட்டது அடுத்த சூதாட்டம். 'உலகைக் காக்கக் கடைசி வாய்ப்பு' என்ற கோஷத்துடன் டிசம்பரில் கோபன்ஹேகன் நகரில் கூடவுள்ள சர்வதேச பருவநிலை மாநாட்டுக்கான முஸ்தீபுகள் தலைநகர் தில்லியில் தொடங்கிவிட்டன. ஒருபுறம், "வளரும் நாடுகளின் வளர்ச்சியை பலி கொடுக்கமாட்டோம்'' என்று கூறிக்கொண்டே மறுபுறம், "வளர்ந்த நாடுகளுடன் நாம் சேர்ந்துகொள்ள வேண்டும்'' என்று பிரதமருக்குக் கடிதம் எழுதுகிறார் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ். பிரதமர் மன்மோகன் சிங்கோ, "இந்தியாவின் முந்தைய நிலைப்பாட்டில் மாற்றமில்லை'' என்று கூறிக்கொண்டே, "செம்மையான தொழில்நுட்பத்துக்கு மாறுவது காலத்தின் கட்டாயம்'' என்கிறார். பொருளாதார தாராளமயமாக்கம், அணுசக்தித் துறை ஒப்பந்தங்களைத் தொடர்ந்து காங்கிரஸ் அரசு தேசத்தின் இறையாண்மையை முன்வைத்து ஆடப்போகும் அடுத்தகட்ட ஆட்டம் ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.

             கடந்த மாத இறுதியில் ஐ.நா.சபையில் பருவநிலை மாற்றம் குறித்த சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது. இதையொட்டி, இந்தியாவில் பசுமை இல்ல வாயுக்கள் வெளியீட்டைக் கட்டுப்படுத்தும் சட்டத்தைக் கொண்டுவருவதற்கான அறிவிப்பை வெளியிட்டார் ஜெய்ராம் ரமேஷ். குறிப்பிட்ட காலகட்டத்துக்குள் இந்தியா கட்டுப்படுத்த வேண்டிய வாயுக்களின் அளவை இந்தச் சட்டம் நிர்ணயிக்கும். பசுமை இல்ல வாயுக்கள் வெளியீட்டைக் குறைக்கும் இலக்குகளுக்கான வரையறைகளையும் இந்தச் சட்டம் வகுக்கும்.

             இந்த அறிவிப்புக்காக கருத்தரங்கில் ஜெய்ராம் ரமேஷை ஐ.நா.சபையின் பொதுச் செயலர் பான் கீ மூன் பாராட்டினார். ஆனால், இந்திய எதிர்க்கட்சிகளிடையே இந்த அறிவிப்பு கடுமையான எதிர்ப்புகளை உருவாக்கியது. காரணம், கட்டாய பசுமை இல்ல வாயுக்கள் வெளியீட்டுக் குறைப்பை எந்த வகையிலும் ஏற்கமாட்டோம் என்ற இந்திய அரசின் இதுவரையிலான நிலைப்பாட்டுக்கு நேர் எதிரான நடவடிக்கை இது. ஆனால், இந்த விஷயத்திலும் மேற்கத்திய நாடுகளின் நிர்ப்பந்தத்துக்கு இந்தியா இப்போது அடிபணிந்துவிட்டது.

             நம் அரசியல்வாதிகளின் நோக்கத்தை நாம் முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், முதலில் புவி வெப்பமாதல் பிரச்னையை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டும். அதாவது, புவி வெப்பமாதல் என்பது வெறும் சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்னை மட்டுமல்ல; வளரும் நாடுகளின் எதிர்காலத்துடனும் பல லட்சம் கோடி ரூபாய்களுடனும் பின்னிப் பிணைந்திருக்கும் பிரச்னை என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

நவீன சாலைகளின் இன்னொரு முகம்




    சாலைக் கட்டுமானத் துறையானது சாலைகளை மட்டும் அமைப்பதில்லை; தேசத்தையே கட்டியமைக்கிறது என்று சொல்லப்படுவதுண்டு. உண்மைதான் அது. ஒரு நாட்டின் வளர்ச்சியின் முகம் சாலைகளாலும் அறியப்படுகிறது.

அரசு உருவாக்கும் புதிய இனம்

   உதவிப் பேராசிரியர்களுக்கு ரூ. 26,352; பேராசிரியர்களுக்கு ரூ. 62,085 மாத ஊதியமாகக் கிடைக்கும் வகையில், பல்கலைக்கழக மற்றும் கல்லூரி ஆசிரியர்களுக்கு மிகக் கெளரவமான ஊதிய உயர்வு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது தமிழக அரசு.

இந்த மஞ்சள் உண்மையாகவே ஜொலிக்கிறதா?

  
          மிழகத்தின் நிகழாண்டு 'பிளஸ் 2' தேர்வு முடிவுகளைப் பார்ப்பது வான்காவின் ஓவியங்களைப் பார்ப்பதுபோல இருக்கிறது. எங்கு பார்த்தாலும் மஞ்சள், மஞ்சள், மஞ்சள்...
   
         நிகழாண்டில் 6,40,844 பேர் 'பிளஸ் 2' தேர்வெழுதினர். இவர்களில் 5,32,222 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 83 சதம். கடந்த ஆண்டைவிட 1.4 சதம் குறைவு என்றாலும் மோசமான தேர்ச்சி விகிதமில்லை இது. நான்கு பேர் முதல் மதிப்பெண் பெற்றுள்ளனர் (1,183/1200). 4,060 பேர் வெவ்வேறு பாடங்களில் சத மதிப்பெண்கள் (200/200) பெற்றிருக்கின்றனர். நூற்றுக் கணக்கான பள்ளிகள் நூறு சதத் தேர்ச்சிப் பெற்றுள்ளன. தேர்வு முடிவுகள் தொடர்பான ஒவ்வொரு செய்தியும் ஜொலிக்கிறது.
   
         இந்த மஞ்சள் முழு உண்மையாக இருந்தால், இந்த மஞ்சளின் ஜொலிப்பு முழு உண்மையாக இருந்தால், இந்தத் தேர்வு முடிவு உண்மையான கல்வியின் முழு வெளிப்பாடாக இருந்தால், நாம் எல்லோருமே கொண்டாடலாம். ஆனால், நம்மால் கொண்டாட முடியாது. ஏன்?

சச் கா சாம்னா

    ஒரு சராசரி இந்திய அரசியல்வாதிக்கும் மிகச் சிறந்த பிரெஞ்சு சமூகவியல் சிந்தனையாளருக்கும் முடிச்சு போடுவது நகைப்புக்குரியதாக இருக்கலாம். ஆனால், நடந்து முடிந்த மாநிலங்களவைக் கூட்டத்தில், சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினர் கமல் அக்தர் முன்வைத்த சில கருத்துகள், ழான் பால் சார்த்ருக்குப் பின்னர் பிரெஞ்சு சமூகத்தின் பெரிய அறிவுஜீவியாக மதிக்கப்படும் சமூகவியல் சிந்தனையாளர் பியர் பூர்தியுவின் கருத்துகளை நினைவூட்டுவதைத் தவிர்க்க முடியவில்லை.

இப்படி ஒரு அப்பா! இப்படி இரு பிள்ளைகள்!!

        
                              ஆரம்பத்திலிருந்து ஆரம்பிக்கலாம். இந்தக் கதையைக் கொஞ்சம் கேளுங்கள். ரோச்சுக்கு அப்போது வயது 35. தன்னுடைய இரு பெண் குழந்தைகளும் படிக்கும் பள்ளி ஆண்டு விழாவுக்குச் செல்கிறார் ரோச். விழாவில் அவருடைய பிள்ளைகளின் வகுப்பாசிரியை பேசுகிறார். குழந்தைகள் அதிக மதிப்பெண்களைக் குவிப்பது எப்படி என்று விளக்கும் அவர், அதற்கான நேர அட்டவணையையும் ஒப்பிக்கிறார். காலை 6 மணிக்குத் தொடங்கும் அந்த அட்டவணை இரவு 10 மணிக்கு முடிகிறது. ரோச் வீடு திரும்புகிறார்.

                             நல்லது. நீங்கள் ரோச்சாக இருந்தால் என்ன செய்வீர்கள்? அது ஒருபுறமிருக்கட்டும். ரோச் என்ன செய்தார் தெரியுமா? மறுநாள் தன் இரு பிள்ளைகளையும் அழைக்கிறார். கதையை நன்றாகக்  கவனித்துக்கொள்ளுங்கள். அப்போது அவரது மூத்த மகள் எஸ்தர் 5-ம் வகுப்பு மாணவி. இளையவர் ஜூடி 3-ம் வகுப்பு மாணவி. இருவரிடமும் ரோச் என்ன கேட்டார் தெரியுமா?  "இனியும் நீங்கள் இப்படிபட்ட ஆசிரியைகளிடமும் பள்ளிக்கூடத்திலும் படிக்க வேண்டுமா என்ன?''

ரூ. 2.26 லட்சம் கோடி கேள்விகள்



          மெளனமாக மற்றொரு பிரளயத்துக்கு வித்திட்டிருக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். 1991-ல் ஓர் அமைச்சராக இந்தியப் பொருளாதாரத்தில் தாராளமயமாக்கல் என்ற வார்த்தையை அவர் அறிமுகப்படுத்தினார். தேசம் முதல் பிரளயத்தைச் சந்தித்தது. தாராளமயமாக்கம் என்ற வார்த்தையின் உண்மையான பொருள் தனியார்மயம் என்று தேசம் முழுமையாக உணர்ந்துகொண்டது. சரியாக 18 ஆண்டுகளுக்குப் பின்னர், இப்போது அவருடைய அமைச்சரவை சகா இன்னொரு பிரளயத்துக்கு வழிவகுக்கும்போது வார்த்தையை நேரடியாகவே பிரயோகப்படுத்துகிறார்: "கல்வியைத் தனியார்மயமாக்குதல்.''

நேற்று நீ; நாளை நான்!

       புதுதில்லியில் அண்மையில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல், "மக்கள் நுகர்வை அதிகரிக்க வேண்டும்'' என்று அறைகூவல் விடுத்திருக்கிறார். மேலும், "இதன் மூலம் பொருளாதார மந்தநிலையைச் சமாளிக்க முடியும்'' என்றும் அவர் யோசனை தெரிவித்திருக்கிறார். சர்வதேசப் பொருளாதார மந்தநிலையால், வளர்ந்த நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதையும் பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் அதன் தாக்கம் மிகக் குறைவு என்பதையும் இந்த உரையில் ஓர் இடத்தில் பிரதிபா சுட்டிக்காட்டுகிறார். இந்நிலையில், வளர்ந்த நாடுகளின் பொருளாதார வீழ்ச்சிக்கு எது காரணமாக இருந்ததோ, அதற்கு அவரே இங்கு அழைப்பு விடுப்பது வியப்பைத் தருகிறது.

பாவப் பரிகாரம்

       தான் கனவு காணும் இந்தியா குறித்து காந்தி ஒரு முறை இப்படிச் சொன்னார்: "நாட்டின் கடைகோடி ஏழை இந்நாட்டை தன்னுடைய நாடு என்று கருத வேண்டும்; அப்படிபட்ட தேசமாக இந்தியா திகழ வேண்டும்.''
     இந்திய அரசியல்வாதிகளுக்கும் காந்தியின் கனவுக்கும் சம்பந்தம் ஏதுமில்லை. ஆனாலும், வறுமைக்கோட்டுக்குக் கீழ் 45.58 கோடி பேர் வாழும் ஒரு தேசத்தில் ஏழைகளைத் தவிர்த்த அரசியல் சாத்தியமானதில்லை என்பதாலேயே இந்நாட்டில் நூற்றுக்கும் மேற்பட்ட வறுமை ஒழிப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.  இவற்றுக்காக ஆண்டுக்கு ரூ. 1.2 லட்சம் கோடிக்கு மேல் செலவிடப்படுகிறது. என்ன பயன்? அரசியல்வாதிகள் அசைந்துகொடுத்தாலும் அதிகார வர்க்கத்தின் சிகப்பு நாடாக்களில் சிக்கிக் கழுத்தறுபடுகின்றன அரசுத் திட்டங்கள்.

ஈழம்: கனவிலிருந்து யதார்த்தத்துக்கு...


         
               லங்கையில் போர் முடிவுக்கு வந்திருக்கும் சூழ்நிலையில், ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திலும் ஓர் ஆழ்ந்த மௌனத்தை அவதானிக்க முடிகிறது. "அடுத்தது என்ன; இனி நாம் என்ன செய்யப்போகிறோம்?'' என்ற கேள்வி ஒவ்வொருவரிடமும் தொக்கி நிற்பதையும் உணர முடிகிறது.

மன்னியுங்கள், வெட்கித் தலைகுனிகிறோம்!

                                  
           பல்லாயிரக் கணக்கான பிச்சைக்காரர்கள். ஆம். பிச்சைக்காரர்கள்தான். கொஞ்சம் பைத்தியம் வேறு. கூடவே பெண்கள். அவர்களும் அப்படிதான். கூடவே குழந்தைகள். அவர்களும் அப்படிதான். எல்லாம் நடைப்பிணங்களாய்க் கையேந்தி நின்றுகொண்டிருக்கிறார்கள்; ஒரு வேளை கஞ்சிக்கு, ஒரு வாளி தண்ணீருக்கு. சின்னச்சின்ன கூடாரங்களில் அஞ்சி ஒடுங்கிக்கிடக்கிறார்கள்; வெட்டவெளியில், பொட்டல் காட்டில்; சூழ்ந்திருக்கும் ராணுவத்தினரின் கொடிய சந்தேக நடவடிக்கைகளுக்கும் கூரிய வேலிக்கும் நடுவே.

           இன்னும் சில காத தூரத்தில் இன்னும் பல்லாயிரக் கணக்கான பிச்சைக்காரர்கள். ஆம். பிச்சைக்காரர்கள்தான். கொஞ்சம் பைத்தியம் வேறு. கூடவே பெண்கள். அவர்களும் அப்படிதான். கூடவே குழந்தைகள். அவர்களும் அப்படிதான். எல்லாம் நடைப்பிணங்களாய் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்; மிச்சமிருக்கும் உயிரை மட்டுமாவது காப்பாற்றிக்கொள்ள எங்கேனும் இடமிருக்குமா என்று தேடி; வெட்டவெளியில், பொட்டல் காட்டில்; ஓயாது பாயும் குண்டுகளுக்கும் சூழ்ந்திருக்கும் ஆயுததாரிகளுக்கும் நடுவே.

           இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா 'நலன்புரி நிலையங்க'ளிலிருக்கும் தமிழர்களின் நிலைக்கும் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டிலிருக்கும் முள்ளிவாய்க்கால் 'பாதுகாப்பு வளைய'த்திலிருக்கும் தமிழர்களின் நிலைக்கும் உள்ள வேறுபாடு இவ்வளவுதான். இயற்கை உபாதைகளைக் கழிக்கக்கூட ஒதுங்குமிடம் ஏதுமின்றி வவுனியாவும் முள்ளிவாய்க்காலும் மனிதர்களால் நிரம்பி வழிகின்றன. ஆனால், குண்டுகள் சத்தமும் மனிதக் கூக்குரலும் கண நேர ஓய்வின்றி ஒலித்துக்கொண்டே இருக்கின்றன.  உலகின் அத்தனைக் கண்களும் பார்த்திருக்க இப்படியோர் அவலம் மாதக் கணக்காய் தொடர்வதைவிடவும் சர்வதேச நாடுகளுக்கும் சர்வதேச அமைப்புகளுக்கும் ஒரு கேவலமில்லை. இதன் பின்னணியில் உள்ள நாடுகள், அரசியல்வாதிகள், அரசியல் சூட்சமங்கள், தேர்தல் கால நாடகங்கள் எல்லாவற்றையும் நாம் எல்லோருமே அறிந்திருக்கிறோம். எனினும், இதில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை. நவீன அரசியல் அகராதியில் மனிதநேயம், மனித உரிமைகள் போன்ற வார்த்தைகளுக்கெல்லாம் நேரடியான அர்த்தம் ஏதும் கிடையாது. எல்லாமே ஆதாயம் சார்ந்த விஷயங்கள்தான். ஆகையால், அரசியல்வாதிகளிடம் எதிர்பார்க்க ஏதுமில்லை. ஆனால், சமகாலத்தின் வரலாற்றுத் துயரமான இந்த மனிதப் பேரவலத்தை ஊடகங்கள் குறிப்பாக - இந்தியாவின் தேசிய ஊடகங்கள் கையாளும் விதம் மிகுந்த அதிர்ச்சியையும் வெட்கத்தையும் ஏற்படுத்துகின்றது. நாம் நமக்கென்று ஏதேனும் தார்மிகக் கொள்கைகளைக் கொண்டிருக்கின்றோமா என்ற கேள்வியை  ஏற்படுத்துகின்றது.

கவனித்துக்கொண்டிருக்கிறது வரலாறு


                    ரலாற்றால் சபிக்கப்பட்ட இரு நிலங்கள். நவீன உலகைப் பின்னோக்கி இழுக்கும் இரு போர் வெறியர்கள். துப்பாக்கிகள், எறிகணைகள், வெடிகுண்டுகள், பீரங்கிகள்,  ஏவுகணைகள், ரத்தம், ஓலம், மரண ஓட்டம், சாவு...

நீதிமன்றச் சீர்திருத்தங்கள்

    
   கடந்த சில மாதங்களாகவே இந்திய நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் தொடர்பான விவாதம் தேசிய அளவில் பரவலாகிவருகிறது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன், தான் பங்கேற்கும் ஒவ்வொரு விழாவிலும் இதுகுறித்து பேசுவதும்கூட இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

கொஞ்சம் பால்; நிறைய விஷம்!


      ஞாபகம் இருக்கிறதா? சில மாதங்களுக்கு முன் நம்முடைய உணவு ஆய்வாளர்கள் குப்பைக்கிடங்குகளிலும் நீர்நிலைகளிலும் வாளி வாளியாக பாலை ஊற்றி அழித்தார்கள். கலப்படப் பால் எனக் கூறி கைப்பற்றப்பட்டு, அழிக்கப்பட்ட இந்தப் பாலின் மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் முடிவுகள் வந்ததும் தவறிழைத்தோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவித்தார்கள். எல்லா ஊடகங்களிலும் முக்கியச் செய்தியாக அது வெளியானது. என்னவாயிற்று அந்த ஆய்வு முடிவுகள்?

13 / 12 + 26 / 11 = ?

     
மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதலில் சிந்தப்பட்ட ரத்தக்கறை இன்னும் முழுமையாகக் கழுவப்படவில்லை. அதற்குள் அசாமில் ரயிலில் குண்டு வெடித்திருக்கிறது. இப்போது யாரெல்லாம் ராஜிநாமா செய்யப்போகிறார்கள்? பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு ஒவ்வொருமுறை ஆளாகும்போதும் பயங்கரவாதத்தின் குரூரமான முகம் மட்டும் இந்தியர்களுக்கு உணர்த்தப்படவில்லை.  அதற்கு இணையான மற்றொரு ஆபத்தான முகமும் உணர்த்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது. நாம்தான் ஒவ்வொரு முறையும் அதை நினைவில் வைத்துக்கொள்ள தவறிவிடுகிறோம். மும்பை நவம்பர் 26-ம் தேதி பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு ஆளான மறுநாள் இங்கிலாந்து பத்திரிகை ஒன்று இப்படி எழுதியது:  "ஏறத்தாழ இது ஒரு போர்தான். ஆனால், பயங்கரவாதத்தின் தீவிரத்தை இன்னமும் இந்திய அரசியல்வாதிகள் உணராதது பயங்கரவாதத்தைவிடவும் ஆபத்தானது.''

யார் அந்த நீதிமான்?



    
                         புது தில்லியில் தொடர் குண்டுவெடிப்புகள் நடந்த மறு வாரம். மும்பை, ஜெய்பூர், பெங்களூர், ஆமதாபாத் என நாட்டின் முக்கிய நகரங்களில் அடுத்தடுத்து குண்டுவெடிப்புகளும் முஸ்லிம்கள் கைதும் ஒரு சேர நடந்த நேரம். முஸ்லிம் சமூகத்தை மையப்படுத்திய விவாதங்கள் நாடு முழுவதும் கிளர்ந்தெழுந்தன. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, எவ்வித மதப் பேதமுமற்ற சாதாரண இந்துக்களிடமும்கூட கசப்பான வார்த்தைகளையும் முணுமுணுப்புகளையும் கேட்க முடிந்தது. பயங்கரவாதத்தின் நோக்கம் எதுவாக இருந்தாலும் அதை அனுமதிக்க முடியாது என்பதில் எல்லோரும் தெளிவாக இருந்தனர். "தேச விரோத நடவடிக்கைகளுக்கான பொறுப்பு தங்கள் மீதே சுமத்தப்படுவது ஏன் என முஸ்லிம்கள் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்'' என்றெல்லாம் குரல் எழுப்பினார்கள். மத அடிப்படைவாதிகளின் தாக்குதல்கள் ஒரு சமூகத்தின் மீதான பார்வையையே மாற்றிக்கொண்டிருப்பதையும் சந்தேகம், விரோதம், புறக்கணிப்பு, அவமதிப்பால் முஸ்லிம் சமூகம்  தனிமைப்படுத்தப்பட்டுக்கொண்டிருப்பதையும் ஊடகங்கள் சுட்டிக்காட்டின. ஏறத்தாழ செப். 29-ல் மலேகானில் குண்டுகள் வெடிக்கும் வரை இந்த விவாதங்கள் தொடர்ந்தன. மலேகான் சம்பவத்துக்கும்கூட 'முஸ்லிம் தீவிரவாதி'களே காரணம் என்று உள்ளூர் போலீஸ்காரர்கள் முதலில் குற்றஞ்சாட்டினார்கள். ஆனால், வழக்கு மஹாராஷ்டிர பயங்கரவாதத் தடுப்புப் படை விசாரணைக்கு வந்ததும் எல்லாமும் மாறியது. விவாதங்கள் நின்றுவிட்டன. சிறப்புச் செய்திகள், கட்டுரைகள் நின்றுவிட்டன. மறு பரிசீலனை அறிவுரைகள் நின்றுவிட்டன. ஓர் அசாத்தியமான அமைதி மட்டுமே நிலவுகிறது. ஏன்?

உளவுத் துறைச் சீர்திருத்தங்கள்

     புதுதில்லிக்கு அதிக அச்சுறுத்தல் தந்த ஆண்டு என்று 1997ஆம் ஆண்டைக் குறிப்பிடுவதுண்டு. ஏனெனில், அந்த ஓராண்டில் மட்டும் 9 குண்டுவெடிப்புச் சம்பவங்களை தில்லிவாசிகள் சந்தித்தனர். சில நாள்களுக்கு முன் குண்டுவெடிப்பை எதிர்கொண்ட கரோல்பாக்கும்கூட அப்போது குண்டுவெடிப்பை எதிர்கொண்டது. எனினும், பதினோரு ஆண்டுகளுக்கு முன் கரோல்பாக் எதிர்கொண்ட குண்டுவெடிப்பையும் இப்போதைய குண்டுவெடிப்பையுயும் நாம் ஒன்றாகப் பார்க்க முடியாது. இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் எல்லாமே மாறிவிட்டன. பயங்கரவாதிகளின் சதித்திட்டங்கள், அவர்களுடைய நுணுக்கங்கள், அவர்களிடமுள்ள நவீன சாதனங்கள், கையாளும் தொழில்நுட்பம் என எல்லாமும் மாறிவிட்டன. மாறாதவையும் உண்டென்றால் அது பயங்கரவாதிகளின் நோக்கமும் நம் உளவுத் துறையின் கட்டமைப்பும்தான்.

இது மீன்பிடித் திருவிழாக் காலம்!

      கடல்புறத்தில் மீன்பிடித் திருவிழா என்பதற்கான பொருள் வேறு. ஆனால், நாட்டுப்புற வாழ்க்கையில் மீன்பிடித் திருவிழா என்பது ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வரும் முக்கியமான ஒரு கொண்டாட்டம். கோடையில் நீர் வற்றும் சூழலில் உள்ள ஏரிகள், கண்மாய்கள், குளங்களில் அதிகாலையில் தொடங்கும் மீன்பிடித் திருவிழாவும் அதையொட்டி பிற்பகலில் நடைபெறும் களேபர விருந்துக்கும் பழக்கமானவர்களுக்கு நீர்நிலைகளில் தண்ணீர் சேராத வருடங்கள் கசப்பானவை.

சூதாடிகளின் தேசம்

வரலாறு காணாத என்ற சொல்லாடல் ஊடகங்களுக்கு மிகவும் பிடித்தமான சொல்லாடல்களில் ஒன்று. ஆனால், வரலாறு காணாத விலைவாசி உயர்வு, வரலாறு காணாத பணவீக்கம் என்னும் இப்போதைய செய்திகள் வழக்கமான வரலாறு காணாத ரகங்கள் அல்ல. இந்த விலைவாசி உயர்வும் பணவீக்கமும் அத்தனைச் சீக்கிரம் குறையப்போவதாகத் தெரியவில்லை.

தேவை: தேசியப் போக்குவரத்துக் கொள்கை

      
   
    
ஒவ்வொரு விலை உயர்வின்போதும் கச்சா எண்ணெய் விலை விகிதப் பட்டியலையையும் எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டக் கணக்கையும் படித்துக் காட்டுவது நம் அமைச்சர்களுக்கு மிக எளிதான ஒரு சம்பிரதாயமாகிவிட்டது. ஆனால், விலை உயர்வின் பின்விளைவுகளை எதிர்கொள்வது மக்களுக்கு அத்தனைச் சுலபமானதாக இல்லை. கச்சா எண்ணெய் விலை உயர்வு தவிர்க்க முடியாதது என்பதும் இனிவரும் காலங்களில் கச்சா எண்ணெயின் விலை பல மடங்கு அதிகரிக்கவே செய்யும் என்பதும் உண்மை. ஆனால், இப்பிரச்னையை எதிர்கொள்ள அரசு இதுவரை என்ன ஆக்கபூர்மான நடவடிக்கையை எடுத்திருக்கிறது?

37, தோப்புத் தெரு

     
     37, தோப்புத் தெரு.
     ஒரு காலத்தில் தமிழ் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் கும்பகோணத்தில் மிக பரிச்சயமான முகவரி இது. தறிக்கூடங்களின் ஓயாத தறியோசையுயும் நெசவாளர்களின் புழக்கமும் நிறைந்த தோப்புத் தெருவில் கதவிலக்கம் 37-ம் எண் கொண்ட வீடு ஒரு விதிவிலக்கு.பகலெல்லாம் நெசவிலும் இரவெல்லாம் கனவிலும் கரையும் அந்தத் தெரு மனிதர்கள் வாழ்விலிருந்து முற்றிலும் வேறுபட்ட வாழ்க்கையை வரித்துக்கொண்ட ஒரு மனிதர் இங்கு வாழ்ந்தார்; தமிழ்ச் செவ்வியல் புதினங்களில் ஒன்றான 'வேள்வித்தீ'யின் கரு உருவான இடமும் 'தேனீ' இலக்கிய இதழ் வெளியான இடமும் இதுதான். ஆம். எம்.வி. வெங்கட்ராம் வாழ்ந்து மறைந்த முகவரி இது!