மோடி, சோனியா பொம்மைகளுக்கு டெல்லி தேர்தலில் என்ன வேலை?


மூன்று பொம்மைகள். இந்தப் பக்கம் மோடி பொம்மை. அந்தப் பக்கம் சோனியா பொம்மை. இரண்டும் உதட்டைப் பிதுக்கி, தலையை உதறுகின்றன. நடுவேயுள்ள அர்விந்த் கேஜ்ரிவால் பொம்மை வெற்றிக் களிப்புடன் ஆட்டம் போடுகிறது. தொலைக்காட்சிகளில் தேர்தல் முடிவு அறிவிப்புகளோடு இப்படியான குட்டி கேளிக்கைகளும் சேர்ந்துகொள்வது குதூகலமாகத்தான் இருக்கிறது. அதுசரி, நாடு தழுவிய மக்களவைத் தேர்தல் முடிவு வெளியாகும்போது, நாட்டின் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சியைக் கையில் வைத்திருக்கும் தலைவர் பொம்மைகள் யுத்தத்தில் மோதினால் அதில் ஒரு நியாயம் உண்டு; டெல்லி போன்ற நாட்டின் ஒன்றரை சதவீத மக்களை மட்டுமே பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சின்ன மாநிலத்தின் தேர்தலுக்கும் ஏன் இந்தியாவின் தேசியக் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்த தேசியத் தலைவர்கள் தேவைப்படுகிறார்கள்?

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியின் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு ஈடான ஒரு முகம் இன்று பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளிலுமே வற்றிப்போனது தற்செயல் அல்ல; பிராந்தியங்களில் சுயாதீனமான தலைவர்களை இன்று இரு தேசியக் கட்சிகளுமே விரும்பவில்லை. தேர்தல்களில் எதிர் வரிசையிலும் அப்படியான தலைவர்கள் இல்லாத நிலையில், தேசியக் கட்சிகளின் கணக்குகள் செல்லுபடியாகின்றன; எதிரே வலுவான பிராந்தியத் தலைவர்களின் கட்சிகள் நிற்கும்போது தேசியக் கட்சிகள் பின்னுக்குத் தள்ளப்படுகின்றன. எப்படியும் முழு அதிகாரமும் தம் கைகளிலேயே இருக்க வேண்டும் என்ற தேசியத் தலைவர்களின் அதிகார வேட்கையைப் பிராந்தியங்கள் தொடர்ந்து நிராகரிக்கின்றன.

தொடர்ந்து மூன்றாம் முறையாக டெல்லி மக்கள் அர்விந்த் கேஜ்ரிவாலுக்குப் பெரும் வெற்றியைப் பரிசளித்திருப்பதானது, ஒரு புதிய செய்தியை இந்திய அரசியல் பரப்பின் கவனத்துக்குக் கொண்டுவருகிறது:  தாம் எப்படி நிர்வகிக்கப்பட வேண்டும் என்பதை இந்திய நகரங்கள் இன்று இந்நாட்டின் தேசியக் கட்சிகளுக்குச் சொல்கின்றன; தம்மைத் தாமே ஆண்டுகொள்வதற்கு அவை தயாராகிவிட்டதைச் சுட்டுகின்றன; கூடவே, இதுநாள் வரை நம் அரசமைப்பானது மாநிலங்களுக்கும், உள்ளாட்சிகளுக்கும் கொடுத்திருக்கும் அதிகாரத்தின் போதாமையையும், கூடுதல் அதிகாரத்தின் மீதான தேட்டத்தையும் அவை பிரகடனப்படுத்துகின்றன.