அரசுப் பள்ளிகள் படுகொலைக்கு யார் காரணம்?


ரசுப் பள்ளிகளின் மரணச் செய்திகளை அத்தனை எளிதாகக் கடக்க முடிவதில்லை. சமீபத்திய மரணம் ராமகோவிந்தன்காட்டில் நடந்திருக்கிறது. வேதாரண்யம் பக்கத்தில் உள்ள கிராமம் இது. அரை நூற்றாண்டுக்கும் மேல் இங்கு செயல்பட்டுவந்த ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி இன்றைக்கு மூடப்பட்டுவிட்டது. கடந்த ஆண்டு வரை ஐந்தாம் வகுப்பில் மூன்று மாணவர்களும் இரண்டாம் வகுப்பில் ஒரு மாணவரும் படித்திருந்திருக்கின்றனர். இந்த ஆண்டு ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் உயர் வகுப்புக்கு வேறு பள்ளிக்குச் சென்றுவிட்டனர். உடன் படிக்கும் துணை யாரும் இல்லாத சூழலில் மூன்றாம் வகுப்புக்கு வந்த அந்தக் கடைசி மாணவனையும் பெற்றோர் வேறு பள்ளியில் சேர்க்க, மாணவர்களே இல்லாத வெறும் செங்கல் கூடாக மாறியிருக்கிறது. வேறு வழியில்லாமல், பள்ளிக்கூடத்தில் பணியாற்றிய இரு ஆசிரியர்களையும் வேறு பள்ளிக்கூடங்களுக்கு மாற்றிவிட்டு, பள்ளிக்கூடத்தை மூடியிருக்கின்றனர்.

பள்ளிக் கல்வி மேலாண்மைத் தகவல் மைய ஆய்வறிக்கையின்படி, தமிழகத்தில் 500 பள்ளிகளில் வெறும் ஐந்து குழந்தைகள் மட்டுமே படிக்கின்றனர். அரசின் அதிகாரபூர்வமான தகவல்கள் ஏதும் இல்லை என்றாலும், கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 1,000 பள்ளிக்கூடங்கள் தமிழகத்தில் மட்டும் மூடப்பட்டிருக்கின்றன என்கிறது ஓர் ஆய்வறிக்கை. ராமகோவிந்தன்காடு பள்ளிக்கூடம் ஆயிரத்து ஒன்றாக இருக்கலாம். இன்னும் கொஞ்ச நாட்களில் அந்த மூடப்பட்ட வெற்றுக்கட்டிடம் சிதிலம் அடையும். ஒரு பெருமழை நாளில் உத்திரமும் சுவர்களும் உடைந்து குட்டிச்சுவராகும். புதர்களும் புற்றுகளும் வளரும். பாம்புகள் நுழையும். 1,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குக் கல்வி கொடுத்த அந்தக் கோயில், நம்முடைய சுயநல வேட்கையையும் சமூக அலட்சியத்தையும் பிரகடனப் படுத்திக்கொண்டு புதர் மண்டிய ஒரு சமாதிபோல் நிற்கும். இந்தியாவின் 100 பள்ளிகளில் 40 பள்ளிகள் இன்றைக்குத் தனியார் பள்ளிகள். அடுத்த சில 10 ஆண்டுகளில் மீதியுள்ள 60 பள்ளிகளும் இப்படிச் சமாதிகள் ஆகலாம்.

இந்தியா ஏன் எப்போதும் வேடிக்கை பார்க்கிறது?


வேடிக்கையாக இல்லை இது! உலகக் கோப்பைப் போட்டியில் இந்த முறை களம் இறங்கும் 32 நாடுகளில் ஒன்றான போஸ்னியாவின் மக்கள்தொகை வெறும் 38.71 லட்சம். அதாவது, சென்னை மாவட்டத்தைவிடக் குறைவு (சென்னை மக்கள்தொகை 46.46 லட்சம்). இந்திய மக்கள்தொகையுடன் ஒப்பிட்டால், இங்கு 312 போஸ்னியாக்கள் இருக்கின்றன. உலகக் கால்பந்து சம்மேளனத்தின் தகுதிப் பட்டியலைப் பார்த்தாலோ 154-வது இடத்தில் இருக்கிறோம் நாம்.

இந்தியக் கால்பந்தாட்டத்தின் வயது
உங்களுக்குத் தெரியுமா? இந்தியாவின் கால்பந்து வரலாறு நீண்டது, நெடியது. 19-வது நூற்றாண்டின் நடுப்பகுதியிலேயே பிரிட்டிஷ் ராணுவ வீரர்களிடமிருந்து இந்தியர்களிடம் கால்மாறத் தொடங்கிவிட்டது பந்து. உலகின் மிகப் பழைய கால்பந்து சங்கங்களின் பட்டியலில் இந்தியாவுக்கும் இடம் உண்டு. சிம்லாவில் 1888-ல் கால்பந்தாட்டத்துக்காக உருவாக்கப்பட்ட டியூரன்ட் கோப்பை உலகின் மிகப் பழைய கோப்பைகளில் மூன்றாவது. 1898-ல் உருவாக்கப்பட்ட கல்கத்தா கால்பந்துக் கழகம் ஆசியாவிலேயே பழமையானது மட்டும் அல்ல; உலகின் பழமையான கால்பந்துக் கழகங்களிலும் ஒன்று. 1893-ல் இந்திய கால்பந்துக் கழகம் உருவாக்கப்பட்டது. ஒலிம்பிக்கில் முதன்முதலில் பங்கேற்ற ஆசிய அணி இந்திய அணி. ஒலிம்பிக் போட்டிகளில் அடுத்தடுத்து மூன்று கோல்களைப் போட்டு ஹாட்ரிக் அடித்த முதல் ஆசியர் நெவில் டிசௌசா இந்தியர்.

உங்களால் மட்டும்தான் முடியும் கருணாநிதி!




டுமையான விமர்சனங்களுடன் நரேந்திர மோடியை எதிர்கொள்பவர்கள்கூட ஒரு விஷயத்தில் இன்றைக்கு அவரை மெச்சுகிறார்கள். சமூகத்தில் பின்தங்கிய ஒரு சாதாரணக் குடும்பப் பின்னணியிலிருந்து, நாட்டின் மிக உயரிய பிரதமர் பதவியை நோக்கி அவர் உயரக் காரணமாக இருந்த அவருடைய கடுமையான உழைப்பு. சற்றேறத்தாழ 45 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் முதல்வர் பதவியில் அமர்ந்த கருணாநிதியின் குடும்பப் பின்னணி, தமிழகத்தின் அன்றைய சமூக நிலை ஆகியவற்றோடு மோடியின் சூழலை ஒப்பிட்டால், கருணாநிதியின் உழைப்பு இன்னும் அபாரமானது, அசாதாரணமானது. அதற்குப் பிறகும் கிட்டத்தட்ட மோடியின் வயதில் மூன்றில் இரு பங்குக்கும் அதிகமான காலம் இன்னும் கூடுதலாக உழைத்திருக்கிறார் கருணாநிதி. ஆனால், காலம் எத்தனை இரக்கம் அற்றது? கருணையே இல்லாமல் இன்னும் கருணாநிதியிடம் உழைப்பைக் கேட்கிறது!