பதில் சொல்லுங்கள் பன்னீர்செல்வம்!


இந்தியர்களை இந்தியர்களே ஆண்டுகொள்ளும் ஜனநாயக முறைக்கான ஆரம்பக் கட்டுமானங்களில் ஒன்று இன்றைய தமிழகச் சட்டப்பேரவையும் தலைமைச் செயலகமும். தமிழ் மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் வளாகத்திலுள்ள தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் அறையில், அவர் முறைகேட்டில் ஈடுபட்டிருக்கும் சந்தேகத்தில் வருமான வரித்துறையினர் சோதனையிட்ட நாள் தமிழ்நாட்டின் அரசியல் - அரசு நிர்வாக வரலாற்றின் கறுப்பு நாட்களில் ஒன்று. இப்படியொரு நாளும் வரும் என்று நம் முன்னோர் எண்ணியிருப்பார்களா?

தமிழ்நாட்டின் எதிர்க்கட்சிகள் என்ன செய்கின்றன?


ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிந்தைய, கருணாநிதியின் தள்ளாமைக்குப் பிந்தைய இந்த இரு வாரக் காட்சிகள் மீண்டும் ஒரு கேள்வியைத் திட்டவட்டமாக எழுப்புகின்றன. தமிழ்நாட்டின் எதிர்க்கட்சிகள் என்ன செய்கின்றன? மாநில நலன்களை விடுத்து, ஒரு சீட்டு நிறுவனம்போல அவரவர் நலன், பாதுகாப்பு சார்ந்து காய் நகர்த்தும் இந்த அரசாங்கத்தை எதிர்கொள்ளத் தொலைநோக்கும் துடிப்பும் செயலூக்கமும் ஒருங்கமைந்த, மக்களிடம் இடைவிடாது சுழலும் ஒரு தலைவர் இன்று இருக்கிறாரா?

சசிகலாவை நீக்கிவிட்டால் அதிமுக பரிசுத்தமாகிவிடுமா?


நேரலைச் செய்தியில் பார்த்தேன், 'ஜெயா பிளஸ்' தொலைக்காட்சியில், எவ்வளவு சுமுகமாகவும் இயல்பாகவும் அதிகார மாற்றம் நடக்கிறது அதிமுகவில்! காலைச் செய்தியில், 'வி.கே.சசிகலா' ஆக இருந்தவர், மாலைச் செய்திக்குள் 'சின்னம்மா' ஆகிவிட்டார்! ஜெயலலிதா மறைவுக்குப் பின்னரும் அதிமுகவினரிடம் தொடரும் கச்சிதமான ரகசியத்தன்மை உள்ளபடியே வியக்க வைக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை தேர்ந்தெடுக்கப்பட்ட விதமாகட்டும், அடுத்தடுத்த நாட்களில், கட்சியின் மூத்த தலைவர்கள் போயஸ் தோட்ட இல்லத்தில் வரிசையாக அணிவகுத்து நின்றதாகட்டும், சசிகலாவிடம் தலைமைப் பதவியை ஏற்கச் சொல்லி அவர்கள் மன்றாடியதாகட்டும், ஒரு துறவியைப் போல அவர்களுக்கு சசிகலா முகங்கொடுத்ததாகட்டும்; ஜெயலலிதா சமாதியில் மலர் தூவிவிட்டு வரிசையாக அதிமுக தலைவர்கள் சசிகலா காலில் விழுந்து எழுந்து தங்கள் புதிய தலைமையை உலகுக்கு உணர்த்தியதாகட்டும்; இன்றைய அதிமுகவுக்கு சசிகலாவே பொருத்தமான தலைவராகத் தோன்றுகிறார்.

அதிமுக நிர்வாகிகள் பலரிடமும் பேசினேன். சசிகலா தலைமையேற்பதில், அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனென்றால், அதிமுகவுக்கு வெளியிலிருந்து, சாமானியப் பார்வைக்குத் தோற்றமளிக்கும்படி சசிகலா இதுவரை வெறுமனே ஜெயலலிதாவுக்குத் தனிப்பட்ட தோழியாக மட்டும் இருந்திருக்கவில்லை. ஜெயலலிதா அதிமுகவின் பொதுச்செயலாளராகப் பதவியேற்றது முதலாக அவருடைய மறைவு வரைக்கும் கட்சியில் நிர்வாகிகள் நியமனம், வேட்பாளர்கள் தேர்வு, அமைச்சரவை நியமனம் எல்லாவற்றிலும் சசிகலாவின் பங்களிப்பு இருந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், தமிழக முதல்வர் முதல் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் வரை இன்றைய அதிமுக நிர்வாகிகளில் பலர், சசிகலாவாலும் அவருடைய சுற்றத்தாராலும் இந்த இடத்துக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள் அல்லது இந்த இடத்தில் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் எப்படி சசிகலாவையும் அவருடைய சுற்றத்தாரையும் எதிர்ப்பார்கள்?

தமிழ்நாட்டுக்கு ஜெயலலிதா விட்டுச்சென்றது என்ன?


சிதம்பரம் பக்கத்திலுள்ள கொடியம்பாளையம் ஒரு தீவு கிராமம். அரசுசார் எந்தத் தேவைக்கும் கொள்ளிடம் ஆற்றைக் கடக்க வேண்டும். தேர்தல் சமயத்தில் நானும் நண்பர் முருகேசனும் அங்கு சென்றிருந்தோம். நல்ல பசி. “டீ குடிக்கலாமா?” என்றார் முருகேசன். போனோம். ஒரு மூதாட்டி நடத்தும் டீக்கடை அது. அவருடைய தோழிகள்போல மேலும் ஐந்தாறு மூதாட்டிகள் அங்கு உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். வயது எண்பது, தொண்ணூறு இருக்கும். அரசாங்கத்தின் செயல்பாடு, அதிமுக ஆட்சியைப் பற்றி முருகேசன் மெல்ல அவர்கள் வாயைக் கிளறினார். கடும் அதிருப்தியான வார்த்தைகள் வெளிவந்தன. “சரி, இந்த முறை யாருக்கு ஓட்டுப் போடப்போகிறீர்கள்?” என்றார். “ரெட்டலைக்குத்தான்” என்றார்கள். முருகேசன் திகைத்துவிட்டார். “ஏம்மா, இந்நேரமும் அரசாங்கத்தை அவ்ளோ திட்டினீங்க; இப்போ திரும்பவும் அந்தம்மாவுக்கே ஓட்டுப்போடுறேன்றீங்க?” என்றவரிடம், “ஆயிரம் இருந்தாலும் அம்மா கட்சியில்ல?” என்றார்கள். வாக்கியத்துக்கு வாக்கியம் அம்மா, அம்மா, அம்மா. “ஏம்மா, உங்களுக்கெல்லாம் அந்தம்மாவோட அம்மா வயசு இருக்கும்போல இருக்கே, எப்படி அவங்களை நீங்க அம்மான்னு சொல்றீங்க?” என்றார் முருகேசன். ஒரு ஆயா சொன்னார், “நாங்கல்லாம் அம்மா அப்பா இல்லாத பிள்ளைகளா, அவோ அம்மான்னு இருக்காவோளா, ஏத்துக்கிட்டோம். தாய், தகப்பனில்லா எங்களுக்கு அவக அம்மாவா இருக்காங்க!”

ஜெயலலிதா இறந்த செய்தி அதிகாரபூர்வமாக வந்த இரவில் வீட்டில் எல்லோரும் தூங்கிக்கொண்டிருந்தார்கள். அந்நேரத்திற்குக் கணினியை இயக்க ஆரம்பித்த வெளிச்சத்தில் விழித்த என் மகள், “என்னப்பா?” என்றாள். செய்தியைச் சொன்னேன். அடுத்த கணம் ஓவென்று அழ ஆரம்பித்தாள். பள்ளிச் சிறுமி. இதுவரை ஜெயலலிதாவைப் பற்றி அவள் ஒரு வார்த்தை பேசி நான் பார்த்ததில்லை.

காலையில் ராஜாஜி மண்டபத்தில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த நின்ற நீண்ட வரிசையைக் கவனித்தேன். கணிசமாகக் கல்லூரி மாணவிகள் காத்திருந்தார்கள்.

மக்கள் எதன் பொருட்டெல்லாம் ஒரு தலைவரைத் தம்முடையவராக வரித்துக்கொள்கிறார்கள், எப்படியெல்லாம் ஒருவரைத் தமக்குள் உருவகித்துக் கொள்கிறார்கள் என்பதைப் பொதுவான ஒரு வரையறைக்குள் கொண்டுவந்துவிட முடிவதில்லை. ஜெயலலிதாவோடு சேர்ந்து அவர் இறந்த செய்தி கேட்ட அதிர்ச்சியில் 203 பேர் இறந்திருக்கிறார்கள். ஜெயலலிதா இறந்த அடுத்தடுத்த நாட்களில் அவருடைய சமாதிக்கு முன் எவ்வித எதிர்பார்ப்புமின்றி வந்து மொட்டையடித்துக்கொண்டு அழுது, தங்கள் துயரம் தீர்த்துக்கொண்ட நூற்றுக்கணக்கானோரின் கதைகளையும் கேட்டுப் பாருங்கள், இறந்தது ஒரு ஜெயலலிதா அல்ல!

தனிப்பட்ட வகையில், ஒரு காவியத்தன்மை வாய்ந்த சர்வதேச சினிமாவுக்கான திரைக்கதைக்குத் தகுதியானது ஜெயலலிதாவின் வாழ்க்கை. செல்வாக்கான குடும்பம். அது நொடித்துப்போகும்போது பிறக்கும் குழந்தை. வெகு சீக்கிரம் தன் தந்தையையும் இழக்கும் அக்குழந்தையை வளர்ப்பதற்காக சினிமாவைத் தேர்ந்தெடுக்கும் தாய். சிறு வயதிலேயே தாயின் பிரிவும் தனிமையும். ஒருவித லட்சிய வேட்கையோடு வளரும் அந்தக் குழந்தையின் கனவு ஒரு சராசரி நடுத்தர வர்க்கப் பெண்ணின் கனவுகளிலிருந்து பெரிதும் மேம்பட்டதல்ல. படிப்பு, வேலை, காதல், கணவர், குழந்தைகள், குடும்பம். எதுவும் எண்ணியபடி நிறைவேறவில்லை. மாறாக, அது சினிமாவில் கால் பதிக்கிறது. உச்சம் தொடுகிறது. அரசியலில் நுழைகிறது. தன்னைச் சுற்றி ஒரு பிம்பத்தை எழுப்புகிறது. பின், அந்தப் பிம்பமே அது என ஏனையோரையும் நம்பவைத்துத் தானும் நம்பலாகிறது. அதற்குள் அடைப்பட்டுக்கொள்கிறது. வழிபடலாகிறது. அந்தப் பிம்பத்துக்குள் சிறைப்பட்டிருந்த உயிர் என்ன நினைத்தது, எப்படி வாழ்ந்தது? தெரியாது. ஒருநாள் உயிர் பிரிகிறது. அப்போதும் சடலம் எனப் பிம்பமே மக்கள் முன் பார்வைக்கு வருகிறது, புதைகுழிக்குள் செல்கிறது. வாழ்வும் மர்மம், சாவும் மர்மம்!