இந்தியாவுக்குத் தேவை மூன்றடுக்குக் குடியுரிமை


அன்புக்குரிய கேளிர், வணக்கம்!

உலகின் பழமையான விவாதங்களில் ஒன்று இந்தக் கொள்ளைநோய் காலகட்டத்தில் மீண்டும் உயிர் பெற்றிருக்கிறது. ‘நகரமா, கிராமமா; எது நம் நீட்டித்த நிம்மதியான வாழ்வுக்கு உகந்தது?’ லண்டன், நியூயார்க், மாஸ்கோ, சாவ்பாவ்லோ என்று மனித குலம் உருவாக்கிய கனவுப் பெருநகரங்கள் பலவும் கரோனா தொற்றுக்கு அதிகம் இலக்கானதும், பெருநகரங்களை ஒப்பிட நெரிசலும் நெருக்கடியும் அற்ற கிராமங்களும், சிறுநகரங்களும் பாதுகாப்பாக இருப்பதும் இந்த விவாதத்துக்குக் கூடுதல் உத்வேகம் தந்திருக்கிறது. உலகின் பல நாடுகளில் நகரங்களில் வாழ்வோர் இன்று அங்கிருந்து வெளியேற இருப்பதாகச் சொல்கின்றனர்; குறைந்தபட்சம் நகரின் மையத்திலிருந்து புறநகருக்கேனும் சென்றிட வேண்டும் என்று தெரிவிக்கின்றனர். அதேசமயம், பெருநகரங்களிலிருந்து வெளியேறியோர் மீண்டும் பிழைப்புக்காக அதே பெருநகரங்களை நோக்கித் திரும்புகின்றனர்.

இந்தியாவில் இந்த விவாதம் இன்னும் கூடுதல் ஆழத்துக்குச் செல்கிறது. டெல்லி, மும்பை, அகமதாபாத், பெங்களூரு, சென்னை என்று வாய்ப்புள்ள பெருநகரங்களை நோக்கிப் புலம்பெயரும் பல கோடிப் பேர் இடையில் தங்கள் மாநில எல்லையைக் கடக்க வேண்டியிருக்கிறது. ஊரடங்கின்போது வெளிமாநிலப் பெருநகரங்களிலிருந்து திரும்பிய பலர் தங்கள் மாநில எல்லையைத் தொட்டதும் மண்ணில் விழுந்து வணங்கியதும், மண்ணை அள்ளி முகத்தில் பூசிக்கொண்டதும், தேம்பி அழுததுமான உணர்ச்சிப் பெருக்குக் காட்சிகள் சாதாரணமானவை அல்ல; உள்ளபடி நகரம் – கிராமம் விவாதத்தைத் தாண்டி, இந்தியாவில் மாநிலம் என்னவாக அர்த்தப்படுகிறது என்ற ஆழமான கேள்வி நோக்கி நம்மைத் தள்ளும் வெளிப்பாடுகள் அவை.
 

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது நாட்டின் கிழக்கு, மேற்கு எல்லைகளை ஒட்டி பல லட்சம் பேர் அகதிகளாக நடந்ததோடு, இந்தக் கொள்ளைநோய் ஊரடங்குக் காலகட்டத்தில் தத்தமது மாநில எல்லைகளை நோக்கிப் பல லட்சம் பேர் நடந்ததைப் பலர் இணைத்துப் பேசியது சரியான ஓர் உருவகம்தான். புலம்பெயர்வை நாம் தொழிலாளர்கள் பிரச்சினையாக அல்லது பொருளாதாரப் பிரச்சினையாக விவாதித்துக் கடந்துவிட முனைகிறோம். அது சரியல்ல. இந்தியா எதிர்கொள்ளும் பெரும் சமூக – அரசியல் விவகாரமும் இது. தன்னுடைய மொத்த நிர்வாகப் பார்வையையும் இந்தியா மறுவரையறைக்கு உள்ளாக்கிக்கொள்ள வேண்டிய காலம் வந்துவிட்டது.

இந்தித் திணிப்பு நோக்கத்தைத் தூர வீசுங்கள்… தமிழ்நாட்டின் இருமொழிக் கொள்கையை இந்தியா முழுமைக்கும் விரிக்க வேண்டிய காலம் இது!


நூறு வருடங்களை ஒரு கூட்டுவண்டியாக உருமாற்றி, அந்த வண்டியின் மாடுகளை ஒரு பானைக்குள்ளேயே சுற்றிச் சுற்றி ஓடவைக்க முடியுமா? இந்திய ஆட்சியாளர்களால் முடியும். இந்தியா முழுமைக்கும் இந்தியைப் பரப்புவதன் மூலம் இந்திய தேசியத்தைக் கட்டுறுதியானதாக்க முடியும் என்பது நூற்றாண்டு பழைய சிந்தனை. காங்கிரஸ் கைக்கு ஆட்சியதிகாரம் கொஞ்சம்போல வரத் தொடங்கிய 1938 முதலாக இந்த அபிலாஷையை டெல்லி முயன்றுகொண்டிருக்கிறது; தமிழ்நாடு எதிர்த்துக்கொண்டிருக்கிறது. இடையில் நாடு சுதந்திரம் அடைந்து, அதற்குப் பின் எழுபதாண்டுகளாக ஒரு கூட்டு வாழ்க்கையை நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்; உலக வரைபடம் எவ்வளவோ மாறிவிட்டிருக்கிறது. டெல்லியின் எண்ணங்கள் மாறவில்லை; கடந்துவந்திருக்கும் பாதையிலிருந்து எந்தப் பாடத்தையும் அவர்கள் படிக்கவும் இல்லை.

ஏன் தமிழ்நாடு உரிய கவனம் பெறவில்லை?

புதிய கல்விக் கொள்கை ஆர்வம் கொள்ளும் மும்மொழிக் கொள்கை - தாய்மொழி, ஆங்கிலம், கூடவே இன்னொரு மொழி - தொடர்பான விவாதங்களை ஒரு வார காலமாகக் கவனித்துவருகிறேன். ‘இந்தி வேண்டும்’ என்று பேசும் அரசியல்வாதிகள் மட்டும் அல்ல; ‘இந்தி கூடாது’ என்று பேசும் கல்வியாளர்களும்கூட ஒரு விஷயத்தை எப்படி கவனிக்கத் தவறுகிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது. டெல்லிக்கு மாற்றான ஒரு மொழிக் கொள்கையைக் கடந்த அரை நூற்றாண்டாக தமிழ்நாடு கைக்கொண்டுவருகிறது. அது உண்டாக்கியிருக்கும் சமூக, பொருளாதார மாற்றங்கள், தாக்கங்களுக்கு ஏன் இந்த விவாத அரங்குகள் கவனம் அளிக்க மறுக்கின்றன?

தமிழ்நாட்டுப் பள்ளிக்கூடங்கள் தமிழ் - ஆங்கிலம் இரண்டையும் கற்பிக்கும்; தமிழுக்கு அடுத்து, உலக மொழியான ஆங்கிலத்துக்குத் தமிழ்நாட்டு அரசு முக்கியத்துவம் கொடுக்கும் என்பது திராவிடக் கட்சிகளின் முதல் முதல்வரும், திராவிட இயக்கத்தின் ராஜ்ஜியக் கனவுகளுக்கு உயிர் வடிவம் கொடுத்தவருமான அண்ணாவின் முடிவு. இந்த முடிவு எத்தகைய தொலைநோக்கிலானது என்பதை உலகின் முன்னணி நாடுகள் இன்று எத்தகைய மொழிக் கொள்கையைப் பின்பற்றுகின்றன என்கிற பார்வையினூடாகத்தான் உணர முடியும்.

உலகம் எந்த மொழியில் படிக்கிறது?

உலகின் பெரும்பாலான நாடுகள் தங்களுடைய குழந்தைகளுக்கு ஒரு மொழியை - பெரும்பாலும் தாய்மொழியை - கற்பிக்கும் ஒரு மொழிக் கொள்கையையே தொடக்கக் கல்வியில் பின்பற்றுகின்றன. குழந்தைகள் நடுநிலைக் கல்விக்கு மாறும்போது இரண்டாவதாக ஒரு மொழியைப் பயிலும் வாய்ப்பை வழங்குகின்றன; இந்த மொழியாகப் பெரும்பாலும் ஆங்கிலமே அமைகிறது.

பிரிட்டனும் அமெரிக்காவும் ஆங்கிலத்துக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை ஜெர்மன், பிரான்ஸ், இஸ்ரேல் போன்ற நாடுகள் முறையே பிரெஞ்சு, ஜெர்மன், ஹீப்ரூ - அரபி மொழிகளுக்கு வழங்குகின்றன; சர்வதேச அளவில் எல்லாத் துறைகளிலும் ஆங்கிலத்துக்கு ஈடுகொடுக்கும் அளவுக்குத் தங்கள் மொழியை வளர்த்தெடுத்திருப்பதன் வாயிலாக இம்முடிவை அவை வெற்றிகரமானதாக்கி இருக்கின்றன. அதேசமயம், பள்ளிக்கூடம் வழியே திணிப்பு நடப்பதில்லை என்பதால், ஏனைய மொழிகளைக் கற்பது ஆர்வத்தின் அடிப்படையில் இங்கெல்லாம் நிறைய நடக்கிறது. இலக்கியமோ சமூகவியலோ படிப்பவர்கள், நாடு கடந்து வணிகத்தில் ஈடுபடுபவர்கள் சர்வ சாதாரணமாக ஐந்தாறு மொழிகள் வரை அறிந்திருக்கிறார்கள்.

புதிய நூற்றாண்டுக்குள் பெரும் சவால்களுக்கு இடையே தங்களை முன்னகர்த்திக்கொள்ள வேண்டியிருந்த நாடுகள் அனைத்துமே தாய்மொழிக்கு அடுத்து ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வழக்கத்தையே கொண்டிருக்கின்றன. சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்கு மொழிக் கொள்கையை ஒரு முக்கியமான கருவியாகக் கையாண்ட இரு வெற்றிகரமான ஆசிய முன்னுதாரணங்கள் என்று ஜப்பானையும் சிங்கப்பூரையும் சொல்லலாம். இதில் சிங்கப்பூரின் வெற்றி மிக வேகமானது; இந்தியாவோடு ஒப்பிட நெருக்கமானது. தாய்மொழியையும் ஆங்கிலத்தையும் சரிசமமாகப் பாவிப்பதன் வாயிலாக உலகச் சமூகங்களோடு இணைந்து பணியாற்றுவதோடு, பெரும் மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என்பதில் நவீன சிங்கப்பூரைச் செதுக்கிய லீ குவான் யூவின் பார்வையை அண்ணாவின் பார்வையோடு பல விதங்களில் ஒப்பிட முடியும்.