சூரியனுக்கு ஒரு வாழ்த்து

ரணத்துக்கு மிக நெருக்கமாகச் செல்லுதல் பெரும் கொடுமை. அதிலும் என்ன நோய் என்றே தெரியாமல், மரணத்தின் முன் மருத்துவத்தின் சகல முயற்சிகளாலும் நீங்கள் கைவிடப்பட்டு நிற்பது பெரும் பரிதாபம். வாழ்வில் பல முறை அந்தப் பரிதாபகரமான சூழலில் நான் நிறுத்தப்பட்டிருக்கிறேன். இதுதான் கடைசி இரவாக இருக்கும் என்று கிட்டத்தட்ட நிச்சயிக்கப்பட்ட ஓர் இரவு முழுவதும், “இறைவா... இந்த ஓர் இரவை மட்டும் எனக்குக் கொடு. நாளை நிச்சயம் நான் உயிர் பிழைத்துக்கொள்வேன்” என்று மன்றாடியிருக்கிறேன். கடைசி முறை மருத்துவமனையிலிருந்து வெளியேறியபோதுகூட, என்ன நோய் என்பதை எந்த மருத்துவராலும் கண்டறிய முடியவில்லை; ஒரு மாத கால மருத்துவமனைவாசம், நூற்றுக்கும் மேற்பட்ட பரிசோதனைகளுக்குப் பிறகும். கை - கால்களின் இயக்கம்கூடச் சரியாக இல்லை. ஆனால், வீடு திரும்பியவுடன் எல்லாம் சரியாகிவிடும் என்ற எண்ணம் மட்டும் அசைக்க முடியாததாக இருந்தது. யோகா தரும் நம்பிக்கை அது. மருத்துவர்களே வியக்கும் வகையில் பல முறை அது உயிரைத் தக்கவைத்திருக்கிறது. உடலியக்கத்தை நீட்டித்துத் தந்திருக்கிறது.

என் அனுபவம் சாதாரணம். இன்னும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள், மருந்து பலனிக்காது என்று முற்றிலுமாகக் கைவிடப்பட்டவர்கள், மருத்துவச் சிகிச்சைக்கே வழியில்லாதவர்கள், மன அழுத்தத்தில் உறைந்தவர்கள் என்று எத்தனையோ பேரை யோகா மீட்டெடுத்திருக்கிறது. அடிப்படையில், அது நோயுற்றவர்களுக்கான சிகிச்சை முறையோ, நோய் வராமல் பார்த்துக்கொள்வதற்கான தற்காப்புக் கலையோ அல்ல; நம்முடைய உயிரியக்கத்துக்கும் இயற்கையின் பேரியக்கத்துக்கும் இடையிலான உறவை ஒரு சமநிலைக்குக் கொண்டுவருவதற்கான அறிவியல். அதை உடல் - மனம் இரண்டையும் பேணிப் பாதுகாத்துக்கொள்வதற்கான கருவியாக நாம் பயன்படுத்திக்கொள்கிறோம்.
ஆண்டுக்கு மருத்துவத்துக்காக ரூ. 4 லட்சம் கோடிக்குக் குறைவில்லாமல் செலவிடப்படும் இந்தியாவில், தன்னுடைய குடிமக்களுக்கு, முக்கியமாக குழந்தைகளுக்கு யோகா கற்றுத் தர அரசே முன்வருகிறது என்றால், கொண்டாடி வரவேற்க வேண்டிய முயற்சி அது!

யோக்கியர்கள் அரசு இது... சொம்பு பத்திரம்!


முதன்முதலில் அந்த வீட்டுக்குள் நுழைந்தபோது காவல் துறை அதிகாரிகளே கொஞ்சம் திகைத்துதான் போயிருக்கிறார்கள். அதுவரை சினிமாவில்கூட அவர்கள் இதையெல்லாம் பார்த்திருக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் ரெட்டி சகோதரர்களைப் பற்றிக் கேள்விப்படாதவர்கள் இல்லை. “அவர்கள் பண்ணை வீடு மட்டும் எத்தனை ஏக்கர் தெரியுமா? 50 அறைகள் இருக்கின்றன தெரியுமா? குண்டு துளைக்காத பாதாள அறை தெரியுமா? மூன்று ஹெலிகாப்டர்கள் தெரியுமா? வீட்டைச் சுற்றி பாதுகாப்புக்கு மட்டும் 100 பேர் தெரியுமா? தங்க நாற்காலியின் விலை ரூ. 2.2 கோடி தெரியுமா?” என்ற பேச்சுகளையெல்லாம் அவர்களும் கேட்டவர்கள். ஆனால், காதால் கேட்பதும் கண்ணால் கேட்பதும் ஒன்றல்லவே? மலைத்துப்போனார்கள்!

சுமார் ரூ.50,000 கோடிகளுக்கு அதிபதிகளாகச் சொல்லப்படும் ரெட்டி சகோதரர்களுக்கு எங்கிருந்து வந்தது அந்தப் பணம்? கர்நாடகத்தில் உள்ள குழந்தைகள்கூடச் சொல்லும், “பெல்லாரியின் இரும்புச் சுரங்கங்கள் சூறையாடப்பட்டதிலிருந்து வந்தது.”

நம் கற்பனைக்கெல்லாம் அப்பாற்பட்ட வகையில் நடந்த சுரண்டல் அது. பெல்லாரியின் சுரங்கங்களுக்கு இடையில் தடை விதிக்கப்பட்டபோது, சுரங்க லாபி ஆட்கள் எழுதினார்கள், “ஐயோ, 1.5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துவிட்டார்கள், 65,000 டிரக் உரிமையாளர்கள் தலையில் கை வைத்து உட்கார்ந்திருக்கிறார்கள், தடை விதிப்பவர்கள் இதையெல்லாம் யோசிக்க மாட்டார்களா?” ஆமாம். இயற்கை அவ்வளவு கொடூரமாகச் சூறையாடப்பட்டது, எல்லோரும் பார்த்திருக்க. ஆனால், அன்றைக்கு ரெட்டி சகோதரர்கள் மீது கை வைக்கும் துணிச்சல் யாருக்கும் கிடையாது. ஏனென்றால், அவர்கள் கையில் பண அதிகாரம் மட்டும் அல்ல; அரசியல் அதிகாரமும் இருந்தது. தென்னிந்தியாவில் முதல் முறையாக பாஜக கர்நாடகத்தில் ‘இந்து ராஜ்ஜியம்’ அமைப்பதற்கான ‘ஆபரேஷன் தாமரை’யை வெற்றிகரமாக நடத்தியவர்கள் அவர்கள்.

காக்கா முட்டையும் கோழி முட்டையும்


திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் ‘காக்கா முட்டை’ படத்தில் சுவாரசியமான காட்சிகள் நிறைய உண்டு. சிறுவர்கள், மரத்திலிருக்கும் காக்காவின் கவனத்தைத் திசை திருப்பிவிட்டு, கூட்டிலிருந்து காக்கா முட்டைகளை எடுத்துக் குடிப்பதும் அவற்றில் ஒன்று. அடுத்தடுத்த காட்சிகளில் அவர்கள் காக்கா முட்டைகளைக் குடிப்பதற்காகத் திட்டு வாங்கும்போது அவர்களுக்கு வக்காலத்துக்கு வரும் பாட்டி, “கோழி முட்டை விக்குற விலையில வாங்கிக் குடிக்க முடியுமா, காக்கா முட்டை குடிச்சா என்ன; அதுவும் பறவைதானே?” என்பார். இந்தக் காட்சியைப் பார்த்த உடன் வந்த நண்பர் அதிர்ச்சியடைந்தார். “இது யதார்த்தமாக இல்லை. கோழி முட்டைகூட வாங்க முடியாத குடும்பங்கள் இருக்கின்றனவா என்ன? காக்கா முட்டை குடிப்பதை நியாயப்படுத்திக் காட்டுவதற்கு இதெல்லாம் ஒரு சாக்கு” என்றார். உண்மையில், மிக யதார்த்தமான காட்சிதான் அது. எளிய மக்களின் உணவுப் பண்பாட்டின் நியாயத்தை இயல்பாகப் பேசும் காட்சியும்கூட!

சென்னை வந்த பிறகுதான் முதன்முதலில் ஈசல் விற்பவர்களையும் அதை வாங்கிச் சாப்பிடுபவர்களையும் பார்த்தேன். சைதாப்பேட்டை சந்தை வாசலில் ஒரு வயதான ஆயா கூடையில் வைத்து விற்றுக்கொண்டிருப்பார். ஒரு பொட்டலம் பத்து ரூபாய். அரைப்படி அளவுக்கு இருக்கும். ஆரம்பத்தில் ஏதோ ருசிக்காக வாங்கிச் சாப்பிடுகிறார்கள் என்று நினைத்திருக்கிறேன். அப்புறம் ஒரு நாள் அந்த ஆயாவிடம் பேசிக்கொண்டிருந்தேன். “ஏம்பா, கோலா மீன்ல ஆரம்பிச்சு வஞ்சிரம், சுறா வரைக்கும் உள்ள வெச்சிருக்கான். அதுல எல்லாம் இல்லாத ருசியா இந்த ஈசல்ல இருக்கு? இல்லாதப்பட்டவன் கவுச்சியை மோந்துக்க இதெல்லாம் ஒரு வழிப்பா. அப்படியே பழக்கிக்கிறது” என்றார் அந்த ஆயா.

மோடி சொல்ல விரும்பாத ஒரு சாதனைக் கதை!


துவும் ஒரு சாதனைக் கதைதான். மோடியின் குஜராத்தில், எல்லையோர சிறு நகரமான தாரட்டிலிருந்து அகமதாபாத் நோக்கி பிழைப்புக்காகக் குடிபெயர்ந்த ஒரு ஜவுளி வியாபாரக் குடும்பத்தின் கதை. ஒரு தொழில் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய சாமானியனின் கதை. மோடியின் தோழர் கௌதம் அதானியின் கதை.

சர்வ பலமிக்க எதிராளி!



சீனத் தத்துவ ஞானியான லாவோ ட்சு போர்கள், போட்டிகளை ஆதரிப்பவர் அல்ல. ஆயினும், போர்கள், போட்டிகளில் நாட்டமுள்ளவர்களுக்கு - முக்கியமாக அரசியல்வாதிகளுக்கு - அவருடைய புகழ் மிக்க இந்தக் கூற்றுக்கு இணையான அடிப்படைப் பாடம் இல்லை: “எதிராளியைக் குறைத்து மதிப்பிடுவதுபோலப் பேராபத்து எதுவும் கிடையாது.”

நரேந்திர மோடி யுகத்தில் இந்திய எதிர்க்கட்சிகள் இந்தப் பேராபத்தை எதிர்கொள்கிறார்கள். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் கட்சியைத் தன்வசப்படுத்தி, தேர்தல் களத்துக்கு முன்வந்து களத்தையே அவர் தனதாக்கிக்கொண்டபோதும் சரி; ஓராண்டுக்கு முன் பொதுத் தேர்தலில் அவர் பெற்ற பிரம்மாண்ட வெற்றியின்போதும் சரி; அவருடைய ஓராண்டு ஆட்சிக்குப் பின் அவருடைய செயல்பாடுகளை மதிப்பிடும் இன்றைய சூழலிலும் சரி... மோடியின் எதிரிகள் இன்னும் அவரைச் சரியாக மதிப்பிடக் கற்றுக்கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது.