கட்டுமரக்காரர் எனும் சாகசக்காரர்!


ந்த உலகையே சூழ்ந்திருக்கும் கடலை, ஒரு மரத் துண்டைக் கொண்டு கையாள முடியுமா? முதன்முதலில் கட்டுமரத்தை அத்தனை நெருக்கமாகப் பார்த்தபோதும், அதில் ஏறியபோதும் ஆச்சரியமாக இருந்தது. நான்கு மரத் துண்டுகள் இணைத்துக் கட்டப்பட்ட ஒரு கலம். எவ்வளவு எளிமையான ஒரு கருவி இது. மீனவர்கள் வேகவேகமாகத் தொளுவை (துடுப்பு) போட்டபோதும், கரையிலிருந்து நீரில் தளும்பித் தளும்பி முன்னேறியபோதும்கூட, கட்டுமரத்தை ஒரு மிதவைக் கலனாக மட்டுமே நினைத்திருந்தேன். அலைகள் மீது ஏறி, கொஞ்சம் கொஞ்சமாகக் கடலுக்குள் நுழைந்தபோதுதான் தெரிந்தது, கட்டுமரம் என்பது மிதவைக் கலன் மட்டும் அல்ல; காற்றின் கலன். ஒரு கட்டுமரத்தின் இயக்கம் எளிமையானது மட்டும் அல்ல; நுட்பமானதும்கூட!

கடல் அல்ல; உயிர்!

ஒரு கி.மீ. தூரம் நடந்து வந்து ஊற்றில் தண்ணீர் எடுக்கும் தனுஷ்கோடி பெண்கள்.
படங்கள்: முஹம்மது ராஃபி

“ஆடைக்கும் கோடைக்கும் காத்துக்கும் மழைக்கும் இங்கேதான்... இன்னும் எத்தனை புயல் வந்தாலும் சரி; பூகம்பம் வந்தாலும் சரி; செத்தாலும் இங்க கிடந்து சாவோமே தவிர, எங்க கடலை விட்டு அகல மாட்டம்...”
- தனுஷ்கோடியில் கேட்ட இந்த வார்த்தைகள்தான் ‘நீர், நிலம், வனம்' தொடரின் மிக முக்கியமான வார்த்தைகள் என்று சொல்லலாம். இன்னமும் கடலோடும் வயலோடும் வனத்தோடும் ஒட்டி வாழும் நம்முடைய ஆதி சமூகங்களைப் பற்றி நாம் புரிந்துகொள்வதற்கான அடிப்படையும்கூட இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது என்றும் சொல்லலாம்.

ஒரு வாழ்க்கையை வெளியிலிருந்து வேடிக்கை பார்ப்பது வேறு. அதற்கு உள்ளிருந்து வாழ்ந்து பார்ப்பது வேறு. இந்த வேறுபாடு தனுஷ்கோடியில் கொஞ்சம் வாழ்ந்து பார்த்த தற்கும் அங்குள்ள கடலோடிகளிடம் பேசிப் பார்த்ததற்கும் பின்புதான் புரிபட ஆரம்பித்தது.

தனுஷ்கோடியில் வாழ்தல்
தனுஷ்கோடி வாழ்க்கைக்கு மிகப் பெரிய முக்கியத்துவம் ஒன்று இருக்கிறது. இன்னமும் அழிந்துவிடாத ஒரு பாரம்பரிய மீனவக் கிராம வாழ்க்கைக்கான உதாரணம் அது. ராமேசுவரத்திலிருந்து தனுஷ்கோடிக்குச் செல்லும் பாதையை ஜீப்புகள் வழியாகத்தான் கடக்க வேண்டியிருக் கின்றன என்று எழுதியிருந்தேன் அல்லவா? இப்படி ஜீப்புகளிலோ, வேன்களிலோ தனுஷ்கோடிக்குச் செல்வதும் கூட வருடத்தில் எட்டு மாதங்களுக்கு மட்டுமே சாத்தியம். புரட்டாசி தொடங்கிவிட்டால், அடுத்த நான்கு மாதங்களுக்கு இப்படி ஜீப்புகளில் செல்லும் பாதையையும் கடல் சூழ்ந்துவிடுகிறது. திரும்ப, தைக்குப் பின்தான் கடல் உள்வாங்கி, பாதை தெரிகிறது.

அப்படியென்றால், எப்படி வெளியுலகோடு தொடர்புகொள்கிறார்கள்? ஒரு அமயஞ்சமயம் என்றால், எங்கே செல்கிறார்கள்? எப்படிச் செல்கிறார்கள்?

ஜெயகாந்தன் அப்படிச் செய்திருக்கக் கூடாது - ஜெயகாந்தன்


ஜெயகாந்தன் எழுதி ஆண்டுகள் பல ஆகின்றன. பேச்சும் அப்படித்தான். முதுமை நிறைய தளர்ச்சியைத் தந்திருக்கிறது. ஆனால், எந்தச் சூழலிலும் சிங்கம் சிங்கம்தான். எண்பதாவது பிறந்த நாள் விழாக் கொண்டாட்டத்துக்குத் தாயாராகிவிட்டது ஜெயகாந்தனின் உடல்நிலை.  “ம்...” என்று கனைத்துவிட்டு, மீசையை வருடியதும் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தேன்.

இந்த வயதில், தேசம் செல்லும் பாதை, எழுத்துலகத்தின் போக்கு இவற்றை எல்லாம் பார்க்கும்போது எப்படி இருக்கிறது?
காலந்தோறும் மாற்றங்களை நாம் பார்க்கிறோம். நாமும் மாறிக்கொண்டே இருக்கிறோம்.

தனுஷ்கோடி புயல்: ஒரு கண்ணீர் சாட்சியம்!

புயலில் சிக்கிய ரயிலை அனுப்பிவைத்த அப்போதைய
ராமேஸ்வரம் ரயில் நிலைய அதிகாரி ராமச்சந்திரன்.

னுஷ்கோடி புயல் மனரீதியாக அடித்துப் போட்டவர்களில் பி. ராமச் சந்திரன் முக்கியமானவர். புயலில் அடித்துச் செல்லப் பட்ட பயணிகள் ரயிலை அனுப்பிவைத்தவர். அப்போதைய, ராமேசுவரம் ரயில் நிலையத்தின் நிலைய அதிகாரி. அங்குள்ள மீனவ மக்களோடு மிக நெருக்கமான உறவைப் பராமரித்த ராமச்சந்திரனை ராமேசுவரத்தைவிட்டு மாற்றக் கூடாது என்று மனு மீது மனு போட்டு 9 ஆண்டுகள் அந்த ஊரிலேயே தக்கவைத்திருக்கின்றனர் உள்ளூர் மக்கள். ராமச்சந்திரனுக்கு இப்போது 93 வயதாகிறது. தனுஷ்கோடி புயலைப் பற்றிப் பேச ஆரம்பித்ததும், ஒரு குழந்தையைப் போலத் தேம்பித் தேம்பி அழுதவர் கண்ணீரின் இடையே பேசினார். புயலோடு மறைக்கப்பட்ட வரலாற்றின் இன்னொரு பக்கத்தை ராமச்சந்திரனின் சின்ன பேட்டி தருகிறது.

மக்களின் ஆவணங்கள் வரலாறு இல்லையா?

பாம்பன் பால மறுக்கட்டமைப்புப் பணியைப் பார்வையிடும் ஸ்ரீதரன் (நடுவில்).

பாம்பன் பால மறுகட்டுமானப் பணியைத் தம் சொந்த வீட்டு வேலைபோல,
இழுத்துப்போட்டு செய்த மீனவ மக்கள்.

யிரோட்டமான தனுஷ்கோடி அழிந்த அத்தியாயத்தை வாசித்த ஏராளமான வாசகர்கள் கேட்ட கேள்வி: “இப்படி ஒரு பேரழிவைப் பற்றி நமக்கு ஏன் முழுமையாகத் தெரியவில்லை? இந்தச் செய்திகளெல்லாம் ஏன் நம்முடைய பாடப் புத்தகங்களில் இல்லை?”

நம்முடைய பெரும்பாலான வரலாறுகள் களத்தில் அல்ல; தலைநகரங்களில் சௌகரியமான இடங்களில் உட்கார்ந்திருப்பவர்களால் உருவாக்கப்படுகின்றன என்பது ஒரு காரணம். எது வரலாறாக வேண்டும் என்பதையும் எதுவெல்லாம் வரலாறு ஆகக் கூடாது என்பதையும் அவர்கள் தீர்மானிக்கிறார்கள் என்பது ஒரு காரணம்.  அரசின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் பதிவுகளைத் தொகுப்பவர்கள், மக்களிடம் உள்ள பதிவுகளைச் சீந்துவதே இல்லை என்பது ஒரு காரணம்.  பதிவுசெய்யப்படாத எவ்வளவு பெரிய உண்மையும் வரலாறு ஆவதில்லை என்பது முக்கியமான காரணம்.

துடிப்பான தனுஷ்கோடியைப் பார்த்திருக்கிறீர்களா?

துடிப்பான தனுஷ்கோடியின் படகுத்துறை.

காலங்காலமாகத் தமிழ்க் கடலோடிகளுக்கு வணிகத்தில் முக்கியமான கேந்திரம் கொழும்பு. தவிர, கலாச்சாரரீதியாகவும் நம் கடலோர மக்களின் வாழ்வில் கொழும்பு பிணைந்திருந்தது. ஒருமுறை எழுத்தாளர் ஜோ டி குரூஸிடம் பேசிக்கொண்டிருந்தபோது அவர் சொன்ன வார்த்தைகள் அந்த நாட்களின் நெருக்கத்தை நமக்கு உணர்த்தும்: "அன்றைக்கெல்லாம் ஊரில் ஒரு பிள்ளை நல்ல சட்டை போட்டிருந் தால், அது கொழும்பு சட்டையாக இருக்கும். நல்ல மிட்டாய் சாப்பிட்டால், அது கொழும்பு மிட்டாயாக இருக்கும். கடற்கரையில் அதுவரைக்கும் பார்த்திராத ஒரு வண்ணத்துப்பூச்சியைப் பார்த்தால், அதுவும்கூட கொழும்பு வண்ணத்துப்பூச்சியாக இருக்குமோ என்று பேசிக்கொள்வோம்."

இலங்கையுடனான இந்த உறவில் ஏனைய பகுதியினரை விடவும் கூடுதல் நெருக்கம் தனுஷ்கோடி தீவுக்காரர்களுக்கு இருந்தது. பல ஆண்டுகளாகவே தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே படகுகள் வாயிலாகச் சரக்குப் போக்கு வரத்து நடந்துவந்தது. மலையகத் தொழிலாளர்களும் தமிழ்நாடு வந்துபோக இந்தத் தடத்தைப் பயன்படுத்திவந்தனர்.

‘பேய் நகரம்’ நோக்கி ஒரு பயணம்!


ரு ஊருக்குப் பயணமாகிறோம். முன்பின் தெரியாத ஊர். ஆனாலும், அந்த ஊரைப் பற்றி அதுவரை கேள்விப்பட்டிருந்த, அதுவரை படங்கள் வழியாகப் பார்த்திருந்த, புத்தகங்கள் வழியாகப் படித்திருந்த விஷயங்கள் நம் மனதுக்குள் ஒரு சித்திரத்தை உருவாக்கும் இல்லையா? தனுஷ்கோடியைப் பற்றி அப்படி எனக்கும் ஒரு சித்திரம் இருந்தது. தனுஷ்கோடி என்றால், நம் எல்லோருக்கும் உடனே என்ன ஞாபகத்துக்கு வரும்? கடலில் சிதிலமடைந்த அந்த தேவாலயமும் அதையொட்டிய கடலும்... என் மனச்சித்திரத்தில் உயிர்பெற்றிருந்த தனுஷ்கோடி அதைத் தாண்டியும் வளர்ந்திருந்தது. இந்திய வரைபடங்களும் வரலாற்றுப் புத்தகங்களும் ஆவணப் புகைப்படங்களும் ஊட்டி வளர்த்த சித்திரம் அது. கடலில் புதையுண்ட ஒரு பண்டைய துறைமுக நகரத்தின் எச்சங்களிலிருந்து உருவான ஊரின் சித்திரம் அது.

இந்தியாவின் 8,118 கி.மீ. நீளக் கடற்கரையில் தனுஷ் கோடிக்கு முக்கியமான இடம் உண்டு. இந்தியாவைக் கடல் வழியே தொட நினைக்கும் ஒரு அந்நிய நாட்டுக்கு, நம்முடைய கடற்கரையில் மிக எளிய நுழைவாயில் தனுஷ்கோடிதான். தனுஷ்கோடியிலிருந்து வெறும் 15.6 கடல் மைல் தொலைவில் இருக்கிறது இலங்கையின் தலைமன்னார். இந்திய - இலங்கை அளவில் மட்டும் அல்ல; சர்வதேச அளவிலும் இரு நாடுகளுக்கு இடையேயான மிக நெருக்கமான கடற்கரையோர எல்லைகளைக் கொண்ட நுழைவாயில்கள் தனுஷ்கோடியும் தலைமன்னாரும்.

மரணத்தின் அருகே ஏன் வாழ்கிறார்கள்?

குமரி மாவட்டம், இறையுமண்துறையில் பொங்கும் கடல் அருகே இருக்கும் மீனவர் வீடுகள்.
நீங்கள் கடலைப் பற்றி எழுத ஆரம்பிக்கும் முன் கட்டாயம் கடற்கரையை ஒருமுறை பார்க்க வேண்டும். இந்தத் தொடருக்காகப் பலரையும் சந்தித்து, ஆலோசனை கலந்தபோது, மீனவ இனத்தைச் சேர்ந்த பேராசிரியர் வறீதையா கான்ஸ்தந்தின் எனக்குச் சொன்ன முதல் ஆலோசனை இது.

நான் சிரித்துக்கொண்டே சொன்னேன், “சின்ன வயதிலிருந்து நான் நிறைய முறை கடற்கரைக்குச் சென்றிருக் கிறேன் சார். மேலும், சென்னையில் நான் பணியாற்றும் ‘தி இந்து' அலுவலகத்திலிருந்து கூப்பிடு தூரத்தில்தான் மெரினா கடற்கரை இருக்கிறது என்பதும் உங்களுக்குத் தெரியும்தானே?”

வறீதையா சிரித்துக்கொண்டே மறுத்தார், “மன்னித்துக் கொள்ளுங்கள். எனக்காக நீங்கள் ஒருமுறை அசல் கடற் கரையைப் பார்க்க வேண்டும். அப்போதுதான் உங்களுக்குக் கடல் உணர்வு வரும். கடலோடிகள் பிரச்சினையை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றால், நீங்கள் கடல் உணர்வைப் பெறுவது அவசியம்.”

இது என்னடா வம்பாப் போச்சு என்றாகிவிட்டது எனக்கு. அவருடன் உரையாடுவதற்காக அவர் கொடுத்த நேரமே குறைவாக இருந்தது. அந்த நேரமும் கடற்கரையில் கழிந்து விட்டால் என்ன செய்வது என்ற கவலை என்னை அரிக்கத் தொடங்கியது. வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. சம்பவம் நடந்துகொண்டிருப்பது குமரி மாவட்டத்தில். தூத்தூரில். அவர் பணியாற்றும் கல்லூரியில்.

“சரி... போவோம்... எங்கே போகலாம்?” என்றேன்.

திமிங்கில ராசா!


ரு நள்ளிரவில் அந்தச் சத்தம் எனக்குக் கேட்கக் கிடைத்ததை இப்போது நான் பாக்கியம் என்று சொல்லலாம். ஆனால், சத்தியமாக அன்றைக்கு அந்த மனநிலை இல்லை. “ராசா பாட்டு பாடுறார், இப்ப எங்கே இருக்கும்னு நெனைக்கிறீங்க, பல கடல் மைலுக்கு அந்தாண்ட போய்க்கிட்டு இருக்கும்” என்றார் அருகில் இருந்த மீனவ நண்பர். அப்படியும் என்னால், நடுக்கத்தை மறைக்க முடியவில்லை. திமிங்கிலங்களுக்கு அவற்றின் குரல்தான் அவை பெற்றிருக்கும் மிகச் சிறந்த கருவி. சப்தம் எழுப்பி, அது எதிரொலிக்கும் அலைகளை வைத்து, இரை எங்கே இருக்கிறது என்று கண்டறிவதில் தொடங்கி, பல நூறு கடல் மைல் தொலைவில் உள்ள சக திமிங்கிலங்களுக்கு சமிக்ஞைகளை அனுப்புவதற்கு வரை அவை தம் குரலைப் பயன்படுத்துகின்றன. அவர் முகத்திலும் கொஞ்சம் கலக்கம் தெரியத்தான் செய்தது. கடலைக் கூர்ந்து கவனித்தவர், “நீங்க பயப்பட ஒண்ணும் இல்ல தம்பி. புலால்க சத்தியத்துக்குக் கட்டுப்பட்டதுங்க” என்றார். அப்புறம் கைகூப்பி ஒரு நிமிடம் முணுமுணுவென்றார். அதன் பின்னர் அவர் கண்களில் இதற்கு முன் தெரிந்த கொஞ்சநஞ்ச பயத்தையும் பார்க்க முடியவில்லை. “சத்தியத்துக்கு மரியாதை இருக்குல்ல?” என்றார் சிரித்துக்கொண்டே.

வேட்டையன் வரிப்புலியன்!


காட்டில் புலி எப்படி? கடலில் வரிப்புலியன் அப்படி!
சுறா என்றாலே, மிரள வைக்கும் ஓர் உருவம் நம் மனதில் உருவாகியிருந்தாலும் எல்லாச் சுறாக்களும் ஆபத்தானவை அல்ல என்பதே உண்மை. உலகில் உள்ள 470 சுறா இனங்களில், விரல் விட்டு எண்ணக்கூடிய இனங்களே ஆபத்தானவை. அவற்றில் முக்கிய மானது வரிப்புலியன் என்று நம் மீனவர்களால் அழைக்கப்படும் புலி சுறா. வேட்டையன்!

ஐயய்யோ புலியன்
கடலோடிகள் திமிங்கிலத்துக்குக்கூட அஞ்சுவ தில்லை. ஆனால், வரிப்புலியனைக் கண்டால் அரளு வார்கள் (சுறா வேட்டை என்பது தனிக் கலை. எல்லோருக் கும் அது சாத்தியமானது அல்ல). தனி ஒருவர் செல்லக்கூடிய கட்டுமரமான ஒத்தனா மரத்தில் மீன் பிடிக்கச் சென்று வரிப்புலியனிடம் சிக்கிய ஒரு மீனவரின் அனுபவம் இது.

மீனவ நண்பன் ஓங்கல்!


டலுக்குள் எவ்வளவோ மீன்களும் இன்னபிற உயிரினங்களும் இருக்கின்றன, ஓங்கல்போல (டால்பின்) ஒரு நண்பன் கடலோடிகளுக்குக் கிடைப்பதில்லை. உலகம் முழுக்கக் கடலோடிகள் சமூகம் ஆராதிக்கும் உயிரினம் ஓங்கல்.

தமிழக மீனவர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை உண்டு, ஓங்கல்கள் கடந்த காலத்தில் மீனவர்களாகப் பிறந்தவர்கள் என்று. ஏனென்றால், கடலோடிகளிடம் அப்படி ஒரு பாசத்தை வெளிப்படுத்துபவை ஓங்கல்கள். மீனவர்கள் எவரிடமாவது ஓங்கல்களைப் பற்றிப் பேச ஆரம்பித்தால் நாளெல்லாம் நாம் கதை கேட்கலாம். மீன்பிடி படகுகளை ஒட்டி ஒட்டி வந்து, மூக்கைத் தேய்த்து அவை அன்பை வெளிப்படுத்தும் கதைகள்... கடலுக்கு மேலே தாவிக் குதித்து உற்சாகத் துள்ளல் போட்டு, மகிழ்ச்சியாட்டம் போடும் கதைகள்... வித்தியாசமான ஒலிகளை எழுப்பி ஏதேதோ செய்திகளைச் சொல்லவரும் கதைகள்.... யாரேனும் கடலடியில் சிக்கி, தத்தளித்துக்கொண்டிருப்பதைக் கண்டால், கூட்டத்தோடு அங்கு சூழ்ந்து, தத்தளிப்பவர்களை மூக்கில் தாங்கி உந்திஉந்தி அவர்களைக் கடற்கரைக்குக் கொண்டுவந்துவிடும் கதைகள்...

செல்லக்குட்டி நெத்திலி, கூத்தாடி சூரையன், மவராசன் இறால்!


டலுக்கும் மனித இனத்துக்கும் உள்ள இணைப்புப் பாலம் என்று மீன்களைச் சொன்னால், அந்த வர்ணனை மிகையாக இருக்காது என்று நினைக்கிறேன். கடலோடிகளின் உலகில் எவ்வளவு சுவாரசியங்கள் உண்டோ, அதற்குக் கொஞ்சமும் குறைவில்லாத சுவாரசியம் கொண்டது மீன்கள் உலகம்.

உங்களுக்கு எத்தனை தெரியும்?
உலகில் மொத்தம் 35,000 மீன் இனங்கள் இருப்பதாக அறிவியல் உலகம் சொல்கிறது. இவற்றில் 2,500 இனங்கள் தமிழகக் கடற்கரைப் பகுதியில் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஒருகாலத்தில், தமிழகக் கடற்கரையோரக் கிராமப் பெரியவர்கள் யாரைக் கூப்பிட்டுக் கேட்டாலும், அநாயாசமாக ஐநூறுக்கும் மேற்பட்ட மீன்களின் பெயர்களைப் பட்டியலிடுவார்களாம். இன்றைக்கெல்லாம் நூறு மீன்களின் பெயர்களைச் சொல்லும் மீனவர்களையே தேட வேண்டியிருக்கிறது. பாரம்பரிய அறிவை இழத்தல் என்பது நம் சமூகத்தின் எல்லாத் தரப்பிலும் நடந்துகொண்டிருப்பதன் சாட்சியங்களில் ஒன்று இது. நூற்றுக்கும் மேற்பட்ட மீன் இனங்களை நாம் ஒவ்வொருவரும் பார்த்திருந்தாலும், அவற்றில் விரல் விட்டு எண்ணக்கூடிய - நம் வாழ்க்கையோடு நெருக்கமான - சில மீன்களின் உலகை மட்டும் இங்கே கொஞ்சம் பார்க்கலாம்.

செல்லக்குட்டி நெத்திலி

அளவில் சின்ன மீனான நெத்திலி உலகின் பெருங் கடல்கள் அத்தனையிலும் காணக் கிடைக்கும் இனம். மீன் உணவு அறிமுகமே இல்லாத சைவப் பிரியர்களைக்கூடச் சுண்டியிழுக்கும் மணமும் ருசியும் கொண்டவை நெத்திலி மீன்கள். நெத்திலிக் கருவாட்டு வருவல் என்றால் இன்னும் விசேஷம்! மீன் ருசியர்களுக்கு மட்டுமல்ல; மீனவர்களுக்கும்கூட நெத்திலிகள் செல்லங்கள். நெத்திலி மீன்பாட்டில் மீனவர்கள் எதிர்கொள்ளும் சங்கடம் என்னவென்றால், அது கூடவே மழையையும் கூட்டிக்கொண்டு வரும் என்பது. கூட்டம்கூட்டமாகப் பிடிபடும் பல்லாயிரக் கணக்கான நெத்திலிகளை உடனே விற்கவும் முடியாது; கருவாடாக்குவதும் சிரமம் என்கிறார்கள்.

பறக்கும் கோலா

கோலா என்றால், கரையில் உள்ளவர்களுக்கு மீன் கோலா உருண்டை ஞாபகத்துக்கு வரலாம். கொஞ்சம் வயதான கடலோடிகளைச் சந்தித்தால், “அது ஒரு வீர விளையாட்டு அல்லா?” என்று சிரிப்பார்கள். இப்போதுபோல, அந்நாட்களில் வலை கொண்டு கோலாவைப் பிடிக்க முடியாதாம். ஆழ்கடல் தங்கலுக்குச் சென்று கோரிதான் பிடிப்பார்களாம். விரதம் இருந்து, வீட்டிலிருந்து வேப்பங்குழை எடுத்துச் சென்று, கயிற்றில் கட்டி கடலில் மிதக்க விட்டு, “ஓ வேலா, வா வேலா, வடிவேலா...” என்று கூப்பிட்டுக் காத்திருந்தால், ஒரு கோலா மீன் வருமாம். அதைப் பிடித்து, மஞ்சள் தடவி வணங்கி, “ஓ வேலா, வா வேலா, கூப்பிட்டு வா வேலா...” என்று நீரில் விட்டால், அது கூட்டத்தையே கூட்டிவருமாம். கோலா மீன்கள் புயல் வேகத்தில் பறக்கக் கூடியவை. அதுவும் கூட்டம்கூட்டமாக. பறக்க ஆரம்பித்தால் ஆயிரம் அம்புகள் படகு நோக்கிப் பாய்வதுபோல இருக்கும்; அதைச் சமாளித்துப் பிடிப்பதுதான் சவால் என்கிறார்கள்.

சொற்களில் இருக்கிறது வரலாறு; அறிதலில் இருக்கிறது அரசியல்!


லகின் மிகச் சிறந்த படைப்புகளில் ஒன்றான அந்துவான் து செந்த் எக்சுபரியின் ‘குட்டி இளவரசன்' நாவலில், கதை நாயகனான சிறுவனுக்கும் ஒரு நரிக்கும் இடையே நடக்கும் உரையாடலின் ஒரு பகுதி இது:

“....நான் நண்பர்களைத் தேடுகிறேன். ‘பழக்கப்படுத்துவது' என்றால் என்ன?” என்றான் குட்டி இளவரசன்.

“அது மறந்துபோன ஒன்று. ‘பழக்கப்படுத்துவது என்றால், உறவை ஏற்படுத்திக்கொள்வது என்று பொருள்’’ என்றது நரி.

“உறவை ஏற்படுத்திக்கொள்வதா?”

“ஆமாம். என்னைப் பொறுத்தவரை நீ இன்னும் சின்னப் பையன்தான். உன்னைப் போன்ற லட்சக்கணக்கான பையன்களைப் போல. எனக்கு நீ தேவையில்லை. உனக்கும் நான் தேவையில்லை. உன்னைப் பொறுத்தவரை என்னைப் போன்ற லட்சக் கணக்கான நரிகளில் நானும் ஒரு நரி. ஆனால், என்னை நீ பழக்கப்படுத்திக்கொண்டால் நாம் ஒருவருக்கொருவர் தேவைப்படுவோம். உலகத்தில் நான் உனக்கே என்று ஆகிவிடுவேன்… உலகத்தில் நீ எனக்கே என்று ஆகிவிடுவாய்…”
……

“பழக்கப்படுத்திக்கொண்ட பொருட்களைத்தான் தெரிந்து கொள்ள முடியும்... மனிதர்களுக்கு இப்போதெல்லாம் எதையும் தெரிந்துகொள்ள நேரம் இருப்பதில்லை.”

ஏன்… ஏன்… ஏன்?
கடல் பழங்குடிகளான கடலோடிகளிடத்தில் மட்டும் அல்ல; நிலப் பழங்குடிகளான விவசாயிகளிடத்திலும், வனப் பழங்குடிகளான வனவாசிகளிடத்திலும் நடக்கும் எந்த விஷயமும், நம்மிடம் தாக்கத்தை ஏற்படுத்தாததற்கான காரணத்தை ஒரு வார்த்தைக்குள் உள்ளடக்கிவிடலாம்: அறியாமை.
எப்போதுமே, தெரியாத ஒரு விஷயத்தை நம்மால் நேசிக்க முடிவதில்லை. அக்கறை காட்ட முடியாது. ஆகையால், நம்முடைய கடல் பயணத்தை முழுவீச்சில் தொடர்வதற்கு முன், அடிப்படையான சில விஷயங்களை - கடல்புறத்தில் புழங்கும் சில சொற்களை - நாம் தெரிந்துகொள்வது அவசியம் என்று நினைக்கிறேன்.

கடலில் எத்தனை கடல்?

பண்டைய காலத்திலேயே கடலியலின் நுட்பத்தைப் புரிந்துகொண்டு, கப்பல் படை நடத்திய முன்னோடிச் சமூகங்களில் ஒன்று தமிழ்ச் சமூகம். கடலோடிச் சமூகத்தினுள் நுழைந்தால் ஆயிரமாயிரம் சொற்கள் புதிதுபுதிதாக நம்மைச் சூழ்கின்றன. ஒவ்வொரு சொல்லுக்கும் பின்னணியில் எத்தனை புதுப்புது விஷயங்கள்? எவ்வளவு பரந்து விரிந்த வரலாறு? இன்றைக்கெல்லாம் நிலத்தைச் சூழ்ந்திருக்கும் நீல நீர்ப்பரப்பு எதுவென்றாலும் கடல் என்கிற ஒரு சொல்லில் உள்ளடக்கிவிடுகிறோம். ஆனால், கடலுக்குள் சென்றால், உள்ளே எத்தனை எத்தனை கடல்கள்?

கடலுக்கு மட்டுமே தமிழில் 200-க்கும் மேற்பட்ட சொற்கள் இருப்பதாகச் சொல்கிறார் புத்தன்துறையைச் சேர்ந்த தாமஸ். அவற்றில் சில சொற்களை மட்டும் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்: அரலை, அரி, அலை, அழுவம், அளக்கர், அளம், ஆர்கலி, ஆலந்தை, ஆழி, ஈண்டுநீர், உரவுநீர், உவர், உவரி, உவா, ஓதம், ஓதவனம், ஓலம், கயம், கலி, கார்கோள், கிடங்கர், குண்டுநீர், குரவை, சக்கரம், சலதரம், சலதி, சலநிதி, சலராசி, சுழி, தாழி, திரை, துறை, தெண்டிரை, தொடரல், தொன்னீர், தோழம், நரலை, நிலைநீர், நீத்தம், நீந்து, நீரகம், நிரதி, நீராழி, நெடுநீர், நெறிநீர், பரப்பு, பரவை, பரு, பாரி, பாழி, பானல், பிரம்பு, புணர்ப்பு, புணரி, பெருநீர், பௌவம், மழு, முந்நீர், வரி, வலயம், வளைநீர், வாரி, வாரிதி, வீரை, வெண்டிரை, வேழாழி, வேலை...

இவற்றையெல்லாம்விட முக்கியமானவை சமகாலத்தில் கடலைக் குறிப்பிட அறிவியல் சமூகமும் மீனவச் சமூகமும் குறிப்பிடும் சொற்கள்.

கடல் - பெருங்கடல்
உலக மாக்கடலை ஐந்து பெருங்கடல்களாக வகைப்படுத்துகிறது அறிவியல் சமூகம். 1. பசிபிக் பெருங்கடல், 2. அட்லாண்டிக் பெருங்கடல், 3. இந்தியப் பெருங்கடல், 4. அண்டார்க்டிக் பெருங்கடல், 5. ஆர்க்டிக் பெருங்கடல். பொதுவாக, தனித்தனிப் பெயர் களில் இவை பார்க்கப்பட்டாலும், ஒன்றோடு ஒன்று தொடர்புடைய, பரிமாற்றமுடைய உலகப் பெருங்கடலின் ஐந்து பகுதிகளே இவை. கடல்கள் என்பவை பெருங்கடல்களின் பகுதிகள். குட்டிக் கடல்கள். பெருங்கடல்களின் எண்ணிக்கை ஐந்து என்றால், கடல்களின் எண்ணிக்கை ஐம்பதுக்கும் மேல்.

கரைக்கடல், அண்மைக்கடல், ஆழ்கடல்
மீனவச் சமூகம் கடலை வகைப்படுத்தும் மூன்று சொற்கள் இவை. கரைக்கடல் என்பது கரையை ஒட்டியுள்ள கடல். அண்மைக்கடல் என்பது கரைக்கடலுக்கு அப்பால். ஆழ்கடல் என்பது அண்மைக்கடலுக்கும் அப்பால். உத்தேசமாக, கரையிலிருந்து முதல் ஆறு நாட்டிக்கல் மைல் தொலைவைக் கரைக்கடல் என்றும், அடுத்த ஆறு நாட்டிக் கல் மைல் தொலைவை அண்மைக்கடல் என்றும், அதற்கு அப்பாற்பட்ட தொலைவை ஆழ்கடல் என்றும் சொல்லலாம்.

கடவுளுக்கும் காலனுக்கும் நடுவில்...


மிழகக் கடலோடிகளின் வாழ்க்கை வரலாற்றைப் பேசும் சாகாவரம் பெற்ற ‘ஆழி சூழ் உலகு' நாவலின் நதிமூலத்தை ஜோ டி குரூஸ் தொடங்கும் வரிகள் இவை:
“எனக்கு அப்போது வயது பன்னிரண்டு. ஆறாவது படித்தேன். பங்குக் கோயிலின் அடக்க பூசை ஒன்றில் குருவோடு பீடபரிசாரகனாக நான். ஊரே திரண்டு கோயிலில் கூடியிருந்தது. கோயிலுக்குள் வந்த மையப் பெட்டி வைக்கப்பட்ட மேசை மீது ‘இன்று நான் நாளை நீ' என்று பொறித்திருந்தது.
மலைஉருட்டியாரின் கண்களை மீன்கள் கொத்திவிட்டன. தலைவிரி கோலமாய் அவர் மனைவி. நிர்க்கதியாய் ஏழு குழந்தைகள். என்னைக் கதிகலங்க வைத்தது அந்தக் கடல்சாவு. மரணத்தின் தன்மையை அவதானிக்க ஆரம்பித்தேன்; பயத்துடன், ஆர்வத்துடன். பிறப்பொக்கும் அனைத்துயிர்க்கும் ஜனன வழி ஒன்றாயிருக்க, மரண வழிகள்தான் எத்தனையெத்தனை? ஒருபோதும் வெல்ல முடியாத அந்த மகா வல்லமை நமக்கு உணர்த்துவது என்ன?
என் அனுபவங்களின் விளைவாய் எழும் எண்ணமெல்லாம் எப்போதும் ஓர் எளிய கேள்வியையே சென்று சேரும். மரணத்தின் முன் வாழ்க்கையின் பெறுமதி என்ன?”

அப்பா எங்கேம்மா?


நான் நீரோடிக்குச் சென்ற நாளில்தான் அந்தச் சம்பவம் நடந்திருந்தது. பள்ளம் கிராமத்திலிருந்து வழக்கம்போல், தங்கள் கட்டுமரத்தில் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றனர் அருள் ஜோஸ் (31), ஜேசுதாஸ் (27) சகோதரர்கள். இன்னும் முழுக்க விடிந்திராத அதிகாலை. கடலில் ஒரு வள்ளம் கட்டுமரத்தின் மீது மோதியது. தூக்கி வீசப்பட்டார்கள் இருவரும். ரொம்ப நேரம் கழித்து, அந்த வழியே சென்ற மீனவர்கள் தூரத்தில் ஒரு உயிர் தத்தளிப்பதைப் பார்த்தார்கள். உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு காயங்களோடு கை நீட்டினார் ஜேசுதாஸ். அருள் ஜோஸைக் காணவில்லை.

கடல் தேடல்
பரபரவெனப் பற்றிக்கொண்டது பள்ளம். மீனவர்கள் அத்தனை பேரும் கடலில் ஜோஸைத் தேட ஆரம்பித்தார்கள். முதல் நாள் காலையில் தொடங்கிய இந்தத் தேடுதல் பணி, மறுநாள் இரவு வரை நீடித்தது. பொதுவாக, இப்படி மீனவர்கள் கடலில் சிக்கிக்கொள்ளும்போது முதல் இரு நாள் வரை ஊர்க்காரர்கள் எல்லோரும் தேடுதல் பணியில் ஈடுபடுவார்கள். நெருங்கிய உறவினர்கள், நண்பர் கள் ஒரு வாரம் வரைகூடத் தேடுவது உண்டு. ஒரு வாரம் கடந்தும் ஆள் கிடைக்கவில்லை என்றால், அப்புறம் விதி விட்ட வழி என்று அர்த்தம்.

நீரோடியிலிருந்து...


ர்ப்புராணம் பாடும்போது, “எங்கள் ஊர்போல எந்த ஊரும் வராது” என்கிற பல்லவி நம்மூரில் சகஜமான ஒன்று. குமரிக்காரர்கள் அப்படிச் சொன்னால், அது சுயதம்பட்டம் அல்ல. ஐந்திணைகளில் வளம் மிக்க நான்கு திணைகளைத் தன்னகத்தே உள்ளடக்கிய மாவட்டம் குமரி மாவட்டம். குமரியிலிருந்து நீரோடி நோக்கிச் செல்லும் பாதையில் ஒரு தூறல் நாளில் பயணம் அமைந்தது பாக்கியம் என்றுதான் சொல்ல வேண்டும். மலைப் பயணத்துக்கு இணையான அனுபவம். வண்டிக்கு வெளியே காணும் இடமெங்கும் பச்சை. இடையிடையே கடற்கரையோரக் கிராமங்கள்...

நீரோடி ஒரு சின்ன கிராமம். தமிழகத்தின் கடல் எல்லை முடியும் கிராமம் என்பதைத் தாண்டி நீரோடிக்கு இன்னொரு முக்கிய மான சிறப்பு இருக்கிறது. தூத்தூர் தீவின் ஒரு பகுதி இது. தாமிரபரணி, அனந்த விக்டோரியா மார்த்தாண்ட வர்மா கால்வாய், நெய்யாறு, கடல் என்று நாற்புறமும் சூழப்பட்டிருக்கும் 10 கிராமங் களைத் தூத்தூர் தீவு என்று அழைக்கிறார்கள் உள்ளூர் மக்கள். நாற்புறமும் இப்படி நன்னீரும் கடல் நீரும் சேர்ந்த ஒரு பகுதியின் செழிப்பையும் வனப்பையும் விவரிக்கவும் வேண்டுமா என்ன? கையில் தூக்கும் உருவமாக இருந்தால் வாரி அணைத்து நாளெல்லாம் முத்தமிடலாம். அத்தனை அழகு!

நீராலானது உலகு!


ன்னியாகுமரியில் என்னவோ இருக்கிறது. முக்கடல் சங்கமத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். சுற்றிலும் சுற்றுலாப் பயணிகள். ஒரே ஆரவாரமும் கொண்டாட்டமும். அலைகள் பாறைகளில் மோதுவதும் பாறைகளைத் தழுவுவதும் பாறைகளைத் தாண்டுவதுமாக இருக்கின்றன. பார்வை நீள்கிறது. தூரத்தில் இரு படகுகள். தவிர, நீலம், நீலம், எங்கும் நீலம்.

இன்னும் கொஞ்ச நேரத்தில் வண்டி வந்துவிடும் என்றார் நண்பர். நீரோடிக்குப் போக வேண்டும். தமிழகக் கடற்கரையின் எல்லை நீரோடி. கன்னியாகுமரி, அடுத்து மணக்குடி, சொத்த விளை, பள்ளம், புத்தன்துறை, பொழிக்கரை, பெரியகாடு, முட்டம், கடியபட்டினம், மண்டைக்காடுபுதூார், குளச்சல், குறும் பனை, இணையம், தேங்காய்ப்பட்டினம், இறையுமண் துறை, பூத்துறை, தூத்தூர் தாண்டினால் நீரோடி. கடலையே பார்த்துக் கொண்டிருந்தேன். கடல் பார்த்தல் பெரும் சுகம். அநேகமாக, பார்த்தலின் பேரின்பம்!

முதன்முதலில் கடலைப் பார்த்த ஞாபகம் உங்களுக்கு இருக்கிறதா? அந்த நாளை இன்றைக்கு நினைவுகூர முடியுமா?
எனக்கு ஞாபகம் இருக்கிறது. வேளாங்கண்ணியில் பார்த்தேன். வேளாங்கண்ணி கோயிலுக்குப் போய்விட்டு, முல்லையம்மாள் ஆத்தா மடியில் உட்கார்ந்து வேண்டுதல் மொட்டை போட்டுக்கொண்டு, சந்தனத் தலையோடு, ஒரு கையில் ஆத்தா கை விரலையும் இன்னொரு கையில் வாளியுமாகக் கடற்கரையில் இரு பக்கக் கடைகளையும் பராக்குப் பார்த்துக்கொண்டே போய்க்கொண்டிருந்தவன், திடீரென கண் முன்னே விரிந்த அந்தப் பெரும் பிரம்மாண்டத்தைப் பார்த்து ஓவென அழுதது ஞாபகத்தில் இருக்கிறது. ஆத்தாவின் பிடியைப் பிய்த்துக் கொண்டு ஓட முயற்சிக்க, ஆத்தா இரும்புப் பிடியாகப் பிடித்துக் கடலில் குளிப்பாட்டியது ஞாபகத்தில் இருக்கிறது. ஒவ்வொரு அலை வரும்போதும் ஆத்தா காலைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு கண்ணை மூடிக் கத்தியது ஞாபகத்தில் இருக்கிறது. குளிப்பாட்டி முடித்து, தூக்கிக்கொண்டு கோயிலை நோக்கி நடக்க ஆரம்பித்ததும், ஆத்தா தோளைக் கட்டிக்கொண்டு தயங்கித் தயங்கி, கடலைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக் கண்களை இறுக மூடிக்கொண்டது ஞாபகத்தில் இருக்கிறது.

பிணந்தின்னும் சாத்திரங்கள்


“அம்மா... முடியலையேம்மா... நான் என்ன பதில் சொல்வேன்?”
“என் ராசா, உங்களை இனிமே என்னைக்குப் பார்ப்பேன் ராசா... என்னைச் சிரிக்கச் சொல்லி அழகுபார்ப்பீங்களே... இன்னிக்கு முகமே தெரியாம சிதைஞ்சு கெடக்குறீங்களே...

ஏ, அய்யா, ஏ அய்யா...”

“பாவா, பாவா... யே... பாவா...”

“கடவுளே உனக்குக் கண்ணில்லையே... ஊருல பொழைக்க வழி இல்லாமத்தான இங்கே வந்தோம்... வந்த எடத்துல எங்களை வதைச்சுட்டீயே... நாங்க என்ன பாவம் செஞ்சோம்...”

“பாவி பாவி... விட்டுட்டுப் போயிட்டியே பாவி... இனி நான் எப்படி வாழ? ம்ம்ம்ம்...”

- இன்னும் தெலுங்கில், ஒடியாவில், இந்தியில் காதில் கேட்டுக்கொண்டே இருக்கின்றன அழுகுரல்கள், கேவல்கள், புலம்பல்கள், சாபங்கள். மீண்டும் மீண்டும் கண்களை மறைக்கின்றன சுக்குநூறாகச் சிதைந்து கிடந்த கட்டிடச் சிதறல்களும், கருப்பு பாலிதீன் உறைகளில் மூடப்பட்டுப் பிண்டங்கள் அரைகுறையாக வெளியே தெரிய தூக்கிச் செல்லப்பட்ட சடலங்களும். கிரிக்கெட் ஸ்கோர் போர்டுபோல, இறந்தவர்களின் எண்ணிக்கையை ஆந்திரம், தமிழகம், ஒடிசா, அடையாளம் தெரியாதவர்கள் என்று பிரித்து எழுதப்பட்டிருந்த அந்தக் கரும் அறிவிப்புப் பலகையைக் காலம் முழுவதற்கும் மறக்க முடியாது. மருத்துவமனைச் சுவரில் ஒட்டப்பட்டிருக்கும் புகைப்படங்களில் மூக்கு எது, வாய் எது என்று தெரியாமல் கூழாகிக் காட்சியளிக்கும் முகங்களைவிடவும் வேகமாகக் கண்ணீரை வரவழைக்கின்றன அவற்றைப் பதைப்பதைப்போடு பார்த்துக் கதறிய உறவினர்களின் முகங்கள். நாசியிலிருந்து பிணவாடையைப் பிய்த்து வீச முடியவில்லை. அந்த வாடை உடையில் ஒட்டிக்கொண்டிருக்கிறதா, உடம்பில் ஒட்டிக்கொண்டிருக்கிறதா, காற்றில் ஒட்டிக்கொண்டிருக்கிறதா என்று தெரியவில்லை. செல்லும் இடமெல்லாம் துரத்துகிறது.

மருத்துவக் கொள்ளையர்களை என்ன செய்யப்போகிறோம்?

சேவைத் துறைகளில் பெரும் மூலதனத்தைக் கட்டுப்பாடின்றி அனுமதித்தால், எப்படியெல்லாம் அது பேயாட்டம் போடும்? உதாரணமாகியிருக்கிறது மும்பை கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை (KDAH). நாட்டின் அதிநவீன மருத்துவமனைகளில் ஒன்றான கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை ரிலையன்ஸ் குழுமத்துக்குச் சொந்தமானது. அனில் அம்பானியின் மனைவி டினா அனில் அம்பானியின் நேரடித் தலைமையில் இயங்குவது. "இந்திய மருத்துவப் பராமரிப்புத் துறையில் இருக்கும் இடைவெளியைக் குறைப்பதே எம் மருத்துவமனையின் முக்கிய இலக்கு" என்று மருத்துவமனையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் முழங்குகிறார் டினா. ஆனால், அம்பானி மருத்துவமனையோ மருத்துவத் துறையின் அடிப்படை அறநெறிக் கட்டுமானம் எதுவோ அதையே பகிரங்கமாகச் சுக்குநூறாக உடைத்தெறிந்திருக்கிறது.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் தம் பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்ப்பது வெட்கக்கேடு! - இமையம்


ளிய மக்களின் வாழ்வை அவர்களுடைய மொழியிலேயே தந்து சமகாலத் தமிழுக்குச் செழுமை சேர்த்த படைப்பாளிகளில் முக்கியமானவர் இமையம். ‘கோவேறு கழுதைகள்’, ‘செடல்’, ‘மண்பாரம்’ எனத் தன்னுடைய படைப்புகள் வெளியாகும் போதெல்லாம் தமிழ் இலக்கிய உலகில் அதிர்வுகளை உருவாக்குபவர் இப்போது பொதுப் பள்ளிகளின் முக்கியத்துவத்தைப் பற்றி மேடைகளில் பேசி அதிரவைக்கிறார். அரசுப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றும் இமையம் கல்வித் துறைக்கு உள்ளிருந்தே கொடுக்கும் கலகக் குரல் ஆசிரியர்களோடு, கல்வித் துறையோடு, பெற்றோர்களோடு என நம் ஒவ்வொருவரின் மனசாட்சியுடனும் உரையாடுகிறது.

அரசுப் பள்ளிகளின் தொடர் வீழ்ச்சிக்கு எது அடிப்படைக் காரணம் என்று நினைக்கிறீர்கள்?

ஆசிரியர்களோட பொறுப்பற்றத்தனம், அதிகாரிகளோட அக்கறையின்மை, தனியார் பள்ளியில, அதுவும் ஆங்கிலத்தில படிச்சாதான் வேலை கிடைக்கும்கிற பெற்றோர்களோட மூடநம்பிக்கை எல்லாமும்தான் இதுக்குக் காரணம். ரொம்ப அடிப்படையா சொல்லணும்னா, அரசுப் பள்ளின்னா தரமற்றது, அரசு மருத்துவமனைன்னா தரமற்றது, அரசு நிர்வாகம்னாலே தரம் கெட்டது அப்படிங்கிற எண்ணம் சமூக உளவியலா இங்கே உருவாயிடுச்சு.