ஒரு தேசத்தையே தோற்கடித்த மாய எண்!


1,76,000,00,00,000. இந்த எண்களை எழுத்துக்கூட்டிப் படிக்க எடுத்துக்கொண்ட சிரமத்தைப் பெரும்பான்மை இந்தியர்கள் தம் வாழ்வில் வேறு எந்த எண்களுக்கும் கொடுத்திருக்க மாட்டார்கள். ஞாபகம் இருக்கிறது. அநேகமாக, ‘அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல்’ என்று செய்தியைத் தந்த பெரும்பான்மை தேசிய ஊடகங்கள் ‘நாட்டுக்கு இழப்பு: ரூ.1.76 லட்சம் கோடி’ என்று தொகையை எழுத்தில் கொடுப்பதைக் காட்டிலும், எண்ணாகக் கொடுப்பதிலேயே உவகை அடைந்தன. ஏனென்றால், இதற்கு முன் இவ்வளவு பெரிய எண்ணை ஊடகங்கள் கையாண்டதில்லை.

அறிவியலாளர்கள், கணிதவியலாளர்கள்போல எண்களின் உலகத்துக்குள் சஞ்சரித்திருப்பவர்கள் அல்ல ஊடகவியலாளர்கள். தவிர, இந்தியச் சூழலில் லஞ்சம், ஊழலை வெளிக்கொணர்வதும் விவாதிப்பதும் ஊடகவியலாளர்களுக்கு அவ்வளவு இலகுவான சமாச்சாரமும் அல்ல. அது உயிர் விளையாட்டு. ஆட்சியாளர்களிடம் எல்லையற்ற அதிகாரம் இருக்கிறது. வாசல் வழியாகவும் வரலாம்; கொல்லைப்புறம் வழியாகவும் வரலாம் ஆபத்து. ஊடகவியலாளர் எந்த மிரட்டலுக்கும் அசையாதவர் என்றால், அமித் ஷா பாணியில் செய்தியை வெளியிடுவதற்கே நீதிமன்றத்தின் துணையுடன் சட்டபூர்வத் தடை வாங்கிவிடலாம். இவை எல்லாவற்றிலிருந்தும் விதிவிலக்கான, அரிதான விவகாரம் இது.

அலைக்கற்றை என்ற வார்த்தையையே நாட்டின் பெரும்பான்மை மக்கள் அப்போதுதான் முதல் முறையாகக் கேள்விப்பட்டனர். ‘இது சரி - தவறு’ என்று விவாதிக்கப் பலருக்கும் புரிபடாத விஷயம். தொகையைக் குறிப்பிட்டிருப்பதோ தலைமைக் கணக்காயர் அறிக்கை. தலைமைக் கணக்காயர் அலுவலகமானது, ஒரு தன்னாட்சி அமைப்பு. அரசியலமைப்புச் சட்டப்படி உருவாக்கப்பட்டது. ஆக, இந்த எண்ணை உச்சரிக்க, அதாவது இந்த எண்ணை ஊழல் தொகை என்று சொல்லவும் நிரூபிக்கவும் ஊடகங்கள் மெனக்கெட வேண்டியது இல்லை. சட்டரீதியிலான நம்பகத்தன்மையும் பாதுகாப்பும் இருக்கிறது. ஒரு ‘கட்டுக்குள் வளர்ந்த பிள்ளை’யான இந்திய ஊடகங்களுக்கு அலைக்கற்றை விவகாரத்தில் இருந்த ‘பாதுகாப்பான விளையாட்டு’ அளப்பரிய கிளுகிளுப்பையும் பரவசத்தையும் கொடுத்தது.

இந்திய ஜனநாயகத்தை மேம்படுத்தவும் நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும் சில ஆண்டுகளுக்கு முன்புதான் (2005) தகவல் உரிமைச் சட்டத்தை மன்மோகன் சிங் அரசு கொண்டுவந்திருந்தது. விளைவாக, சின்னதும் பெரிதுமாக நிறைய முறைகேடுகள் ஆதாரத்துடன் வெளிவந்த வண்ணம் இருந்தன. இந்திய வாய்கள் அப்போதுதான் ஊழலைப் பொதுவெளியில் தயக்கமின்றிப் பேசவும் ஆரம்பித்திருந்தன. இந்தப் பின்னணியில்தான் அது நிகழ்ந்தது. எண்களை விசாரணையின்றிப் பயன்படுத்துவது ஒரு நாட்டின் அரசியலையும் வரலாற்றையும் எப்படியெல்லாம் மாற்றியமைக்கும் என்பது தொடர்பில் எந்தப் பிரக்ஞையும் இல்லாமலேயே பெரும்பான்மையோர் அதைக் கையாண்டனர் (உணர்ச்சிவசப்பட்டு எழுதியவர்களில் நானும் ஒருவன்; பின்னாளில் திருந்தியவன்).

அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான வழக்கு, தொலைத்தொடர்புத் துறையை ஆ.ராசா கையாண்ட விதம், ராசாவை வழக்கிலிருந்து விடுவிக்கும் இப்போதைய தீர்ப்பு… இவை எல்லாவற்றைக் காட்டிலும் இந்த வழக்கு இந்தியச் சமூகத்திலும் அரசியலிலும் எப்படியான மாற்றங்களை உண்டாக்கியிருக்கிறது; அது ஏற்படுத்தியிருக்கும் மோசமான ஒரு விளைவுக்கு நம்மிடம் என்ன பதில் இருக்கிறது என்பதே நாம் பிரதான கவனம் அளிக்க வேண்டிய விஷயம் என்று நினைக்கிறேன். ஏனென்றால், இந்தத் தீர்ப்பு வருவதற்குப் பல காலம் முன்னரே ‘1,76,000,00,00,000’ என்ற எண் பல்லிளித்துவிட்டது. நம்முடைய அமைப்பும் மனமும் எவ்வளவு பெரிய ஓட்டைகளை வைத்திருக்கிறது என்பதைக் காட்டிவிட்டது!

காங்கிரஸுக்குத் தேவை புதிய கனவு!


உத்தர பிரதேச சட்ட மன்றத் தேர்தலில், பாஜகவின் வரலாறு காணாத 325/403 வெற்றிக்குப் பின் காங்கிரஸை நோக்கி ஏராளமான விமர்சனக் கணைகள் பாய்ந்துகொண்டிருந்த நாட்கள். சரியாக ஓராண்டுக்கு முன்பு, அதே காலகட்டத்தில் எழுதிய கட்டுரையை நினைவூட்டியது ஃபேஸ்புக்: ‘நீங்கள் இருக்க வேண்டிய இடம் டெல்லி அல்ல ராகுல்!’

132 ஆண்டு பாரம்பரியம் மிக்க நாட்டின் மூத்த கட்சிக்கு அதன் வரலாற்றில் பலவீனமான, சவால் மிக்க தருணம் ஒன்றில் தலைவராகப் பொறுப்பேற்கிறார் ராகுல் காந்தி. மக்களிடமிருந்து அவருக்குச் சொல்ல தலையாய செய்தி ஒன்று இருக்குமானால், அது இதுவாகவே இருக்கும்: மேலிருந்து கீழே, டெல்லியிலிருந்து இந்தியாவைப் பார்க்கும் பார்வையை காங்கிரஸ் மாற்றிக்கொள்ள வேண்டும்!

தன்னுடைய 34-வது பிறந்த நாளுக்குச் சில நாட்களுக்கு முன்பு, 2004-ல் ராகுல் அரசியலுக்குள் நுழைக்கப்பட்டதற்குப் பிந்தைய இந்த 13 ஆண்டுகளாக அவருடைய செயல்பாடுகளைக் கவனித்துவருகிறேன். மாறிவரும் புதிய யுகத்துக்கேற்ப காங்கிரஸையும் இந்தியாவையும் மாற்றியமைக்க வேண்டும் என்ற எண்ணம் தனக்கிருப்பதைப் பல தருணங்களில் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். முக்கியமான ஒன்றைக் குறிப்பிட வேண்டும் என்றால், நேரு தொடங்கி ராஜீவ் வரை பெரிதாகக் கவனம் கொடுக்காத ஒரு விஷயம் காங்கிரஸுக்குள் உள்ள உயர் சாதி  ஆதிக்கம். ஆச்சரியமூட்டும் வகையில், இந்தியாவில் சமூக மாற்றமானது கீழ்நிலைச் சமூகங்களுக்கான பிரதிநிதித்துவத்தில், அது வழியிலான அதிகாரப்பரவலாக்கலில் இருக்கிறது என்ற புரிதல் ராகுலிடம் இருக்கிறது.

2007-ல் பொதுச்செயலாளரானதும், இளைஞர் காங்கிரஸைக் கையில் எடுத்தவர் அதன் நிர்வாகிகள் தேர்தலை வெளிப்படையானதாக மாற்றியமைத்தார். சமூகத்திலும் பொருளாதாரத்திலும் கீழ்த்தட்டுகளிலிருந்து ஆளுமைகளைப் பொறுக்கியெடுத்தார். துடிப்பும் ஆளுமையும் மிக்க ஒரு புதிய கூட்டத்தைக் கட்சியால் ஈர்க்க முடிந்திருக்கிறது. 2014 தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களைக் கட்சியினரே தொகுதி அளவில் தேர்ந்தெடுக்கும் முறையை அவர் முன்மொழிந்தார். பரீட்சார்த்த முறையில் சிறு அளவில் முயற்சிக்கப்பட்டு, தோல்வியடைந்த காரியம் இதுவென்றாலும் முக்கியமான முயற்சி. அடுத்து, 2015-ல் கட்சியில் உயர் சாதியினரின் ஆதிக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவரும் வகையில், கட்சிப் பதவிகளில் 50% இடங்களை பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினச் சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்க காங்கிரஸ் தீர்மானித்தது ராகுல் முன்னெடுத்த முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்று.

ஆக, ராகுலிடம் நாம் நம்பிக்கை வைக்கலாம்; அவருக்கு ஒரு வாய்ப்பளிக்கலாம். ஆனால், வரலாறு திரும்ப திரும்ப வாய்ப்புகளை வழங்காது என்பதை ராகுல் உணர வேண்டும். ஏனென்றால், இந்த 13 ஆண்டுகளில் அப்படிப் பல வாய்ப்புகளை அவர் வீணடித்திருக்கிறார்.

நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தின் பல பகுதிகள் செத்துவிட்டன - நாகநாதன் பேட்டி


திமுகவின் சித்தாந்தக் குரல்களில் முக்கியமானவர் நாகநாதன். தமிழகத்தின் குறிப்பிடத்தக்க பொருளாதார நிபுணர்களில் ஒருவர். அரசியலமைப்புச் சட்டத்திலும் நிபுணத்துவம் உடையவர். பெரியார், அண்ணா, கருணாநிதி என்று திராவிட இயக்கத்தின் மூன்று பெரும் ஆளுமைகளுடனும் உறவில் இருந்தவர். குடும்பப் பின்னணி சார்ந்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் இயக்கங்களின் செயல்பாடுகளையும் நெருக்கத்தில் பார்த்தவர். கருணாநிதியின் நடைப்பயிற்சி இணையுமான நாகநாதன், திமுக ஆட்சியில் மாநிலத் திட்டக் குழுத் துணைத் தலைவராகவும் இருந்தவர். வரலாற்றில் தொட்டு திராவிட இயக்கம், தமிழகம், இந்தியா செல்ல வேண்டிய பாதை என்றெல்லாம் பேசினார் நாகநாதன்.

சாதி ஒழிப்பில் நெருக்கக் கூட்டாளி திராவிட இயக்கம்! - தொல்.திருமாவளவன் பேட்டி


தமிழகத்தில் தலித் அரசியல் எழுச்சியின் சமகால வடிவம் தொல்.திருமாவளவன். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர். அம்பேத்கரையும் பெரியாரையும் ஒரு புள்ளியில் இணைத்து நெருக்கமாகப் பார்ப்பவர். அம்பேத்கரிய இயக்கங்களில் நாட்டிலேயே துணை தேசியத்தை - இங்கே தமிழ்த் தேசியத்தைச் சாதி ஒழிப்புக்கான ஒரு அரசியல் ஆயுதமாகக் கையில் எடுத்தவர். நூறாண்டு திராவிட இயக்கத்தின் பணி, அரை நூற்றாண்டு திராவிடக் கட்சிகளின் ஆட்சி, கருணாநிதியின் அறுபதாண்டு சட்ட மன்றப் பணி மூன்றையும் சாதி ஒழிப்பு - சமூக நீதித் தளத்தில் மதிப்பிட்டார். ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ நூலிலிருந்து...

திராவிட இயக்கத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இந்தியச் சமூகம் சாதியக் கட்டமைப்புகளால் ஆனது. சாதியக்கூறுகள் இல்லாமல் ஒரு தனி மனிதனின் வாழ்க்கை இங்கே நகர்வதில்லை. இது ஆயிரக்கணக்கான தலை முறைகளாக நிலவுகிறது. சாதிக்கு எதிராக, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று வள்ளுவர் பாடிய காலத்தில் இருந்து, ‘ஆண் சாதி பெண் சாதி ஆக இரு சாதி. வீண் சாதி மற்றதெல்லாம்’ என்று சித்தர்கள் பாடிய காலத்திலிருந்து எதிர்க் குரல்களும் ஒலிக்கின்றன. சாதியை எதிர்த்துப் போராடியவர்கள் சாதியை ஒழிக்கவில்லை. காரணம், முடியவில்லை. ஆனால், ஒவ்வொரு போராட்டமும் ஒரு தாக்கத்தையும் விளைவையும் உருவாக்கியிருக்கிறது. திராவிடர் இயக்கத்தையும் இதன் நீட்சியாகவே நான் பார்க்கிறேன்.

பெரியாருடைய பணிகளை இன்றைக்கு எப்படிப் பார்க்கிறீர்கள்?

தமிழகத்தைப் பொறுத்தவரை பெரியாருக்கு முன், பெரியாருக்குப் பின் என்றே இரண்டாகப் பகுக்கலாம். பெரியாருக்கு முன் இங்கே இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாசப் பண்டிதர், எம்.சி.ராஜா என்று தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே சாதி அமைப்புக்கு எதிராக அரசியல் தளத்தில் பேசியிருக்கிறார்கள். பெரியார்தான் இதை உடைக்கிறார். பிராமண ஆதிக்க எதிர்ப்பை மையமாகக் கொண்டிருந்தாலும் நீதிக் கட்சி சாதி ஒழிப்பைப் பிரதானப்படுத்தவில்லை. சமூக நீதியை, இட ஒதுக்கீட்டை ஒரு ஆயுதமாக அது கைக்கொண்டது சாதி அமைப்புக்கு அது கொடுத்த வலுவான அடி. என்றாலும், சாதி சமத்துவத்தை நோக்கியே அது நகர்கிறது; சாதி ஒழிப்பை நோக்கி அல்ல. பெரியார்தான் அந்தப் புள்ளியை நோக்கி நகர்கிறார். சாதி ஒழிப்பைப் பேசுகிறார். பெண் விடுதலையை உயர்த்திப்பிடிக்கிறார். மொழி, இன உரிமைகளையும் பேசுகிறார். பெரியார் ஏன் கடவுள் மறுப்பை முன்வைக்கிறார் என்று நாம் ஆராய்ந்தால், அவருடைய அக்கறையையும் தொலைநோக்கையும் நாம் விளங்கிக்கொண்டுவிடலாம். சாதியத்தை இங்கே கட்டிக்காப்பது மதமும் கடவுளும் என்று பெரியார் உணர்கிறார். மக்கள் கடவுளுக்கு அஞ்சுகிறார்கள், மதத்திற்குக் கட்டுப்படுகிறார்கள். ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை எல்லாம் கடவுளாலும் மதத்தாலும் ‘முற்பிறவியின் பயன்’ என்று நியாயப்படுத்தப்படுகின்றன. ஆகையால்தான், ‘மதமும் பிழை, கடவுளும் பொய்’ என்று சொல்ல வேண்டிய நிலை பெரியாருக்கு ஏற்படுகிறது. சாதி ஒழிப்பானது குடும்பம் என்ற அமைப்பிலிருந்தே கற்பிக்கப்பட வேண்டியது. ஏனென்றால், குடும்பத்திலிருந்துதான் கடவுள் நம்பிக்கை கற்பிக்கப்படுகிறது, உயர்வு தாழ்வு கற்பிக்கப்படுகிறது, சாதிப் பெருமை, சாதித் தாழ்வு கற்பிக்கப்படுகிறது. பெண்கள் துணையின்றி குடும்பத்தில் சீர்திருத்தம் சாத்தியம் இல்லை. ஆனால், குடும்ப அமைப்பானது பெண்களையும் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது. அவர்களுடைய சிந்தனையையும் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது. ஆகையால், பெண் விடுதலையைப் பேசுகிறார். இதனூடாகவே மொழிரீதியாக, இனரீதியாக நிகழ்கிற ஒடுக்குமுறைகளையும் எதிர்க்க வேண்டும் என்கிற நிலைக்கு அவர் வருகிறார். அதற்குக் காரணம் இந்து என்கிற பெயரால், இந்தியா என்கிற கட்டமைப்பு இங்கே நிறுவப்பட்டிருக்கிறது. இந்தியா என்கிற கட்டமைப்பின் பெயரால் இந்தி பேசுகிறவர்களின் ஆதிக்கம், வடவர் ஆதிக்கம் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. விளைவாக தமிழ் உள்ளிட்ட ஏனைய மொழிகள் நசுக்கப்படுகின்றன. தமிழர் கள் உள்ளிட்ட ஏனைய இனத்தவர் நசுக்கப்படுகிறார்கள். ஆகையால், அந்தந்தப் பிராந்திய மொழிகளுக்கான உரிமைகளை உயர்த்திப் பிடிப்பதன் மூலமாகவே இந்த ஆதிக்கத்தைத் தகர்க்க முடியும் என்று கருதுகிறார். இப்படிப் பெரியார் பிராமண ஆதிக்க எதிர்ப்பில் தொடங்கி, சமூக நீதி, சாதி ஒழிப்பு, பெண் விடுதலை, மொழி, இன உரிமை, மாநில உரிமை என்று முன்னெடுத்த அரசியலானது சாதாரணமானதல்ல. இன்றைக்கு நாடு எதிர்கொள்ளும் ‘இந்து - இந்தி - இந்துஸ்தான்’ ஆதிக்க அரசியலுக்கு நேர் எதிர் அரசியலை, தீர்வை முன்வைப்பது. அம்பேத்கரியத்துக்கு மிக நெருக்கமான அரசியல் கருத்தாக்கமாகவே பெரியாரியத்தைப் பார்க்கிறோம்.

இந்தப் பிறவி தலைவருக்கானது - சண்முகநாதன் பேட்டி

படம்: பிரபு காளிதாஸ்

கருணாநிதியின் நிழல் என்று இவரைச் சொல்லலாம். சண்முகநாதன். கருணாநிதியின் செயலர். அவர் இல்லாமல் இவருக்கும் இவர் இல்லாமல் அவருக்கும் முடியாது. சண்முகநாதனுக்கும் இப்போது 75 வயது ஆகிவிட்டது. உடலில் ஏகப்பட்ட கோளாறுகள். முதுமையின் விளைவாக கருணாநிதி மௌனமாகி ஓராண்டு நெருங்கும் நிலையிலும், வழக்கம்போல அன்றாடம் கருணாநிதியின் வீட்டுக்கு வந்துவிடுகிறார் சண்முகநாதன். “தலைவர் சீக்கிரமே தேறிவிடுவார்; கூப்பிடுவார்” என்று கோபாலபுரம் வீட்டில் அவருக்கென உள்ள சின்ன அறையில் எந்த நேரமும் வேலைக்கான ஆயத்த நிலையில் கணினி முன் உட்கார்ந்திருக்கிறார். பத்திரிகையாளர்கள் சூழவே இருந்துவந்தாலும் இதுவரை சண்முகநாதன் தன் வேலையைத் தாண்டி யாரிடமும் பேசியதில்லை. தன் வாழ்வில் அவர் அளித்த முதல் பேட்டி இது.

தமிழ்ப் பாதையே ‘தினத்தந்தி’யின் பாதை!


தமிழ்ச் சமூகத்தை நாளிதழ் வாசிப்பை நோக்கி அலையலையாகத் திருப்பிய ‘தினத்தந்தி’ 75 ஆண்டுகளை நிறைவுசெய்திருக்கிறது. சி.பா.ஆதித்தனார், பா.சிவந்தி ஆதித்தன், அடுத்து சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் என்று மூன்றாவது தலைமுறையாகக் குடும்ப நிர்வாகத்தால் இயக்கப்படும் ‘தினத்தந்தி’ இன்று இந்தியாவிலேயே அதிகம் வாசிக்கப்படும் பத்திரிகைகளில் முதல் வரிசையில் உள்ள நாளிதழ். அச்சு ஊடகத்தைத் தாண்டி வானொலி, செய்தித் தொலைக்காட்சி என்று விரியும் ‘தினத்தந்தி குழும’த்தின்’ பயணம் குறித்து அதன் இயக்குநர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தனிடம் பேசினேன். அவருடைய முதல் பேட்டி இது.

தலைவர் என்றொரு அப்பா - மு.க.ஸ்டாலின் பேட்டி!

படம்: பிரபு காளிதாஸ்

கருணாநிதியின் தள்ளாமைக்குப் பிறகு, திமுகவின் செயல் தலைவரான மு.க.ஸ்டாலினின் தோள்களில் முழுச் சுமைகளும் இறங்கியிருக்கின்றன. கருணாநிதியின் வேலைகளை ஒருவர் பதிலீடு செய்வது சாத்தியமற்றது - ஒரே நேரத்தில் பல தளங்களில் இணையான தீவிரத்தோடு அயராது இயங்கியவர் அவர். ஸ்டாலின் ஈடுகொடுக்க முயற்சிக்கிறார். ஒரு தலைவராகத் தன்னுடைய வழிகாட்டியான தந்தையைப் பற்றி ஆத்மார்த்தமாகப் பேசினார்.

பிள்ளைகளுடனான உறவு உங்கள் அப்பாவுக்கு எப்படி இருந்தது?

எனக்கு மட்டும் இல்லை, சின்ன வயசுல எங்க அண்ணன் தங்கச்சி எல்லோருக்குமே அம்மாதான் நெருக்கமா இருந்தாங்க. அவங்க மூலமாதான் எந்தக் காரியமும் நடக்கும். மாசத்துக்கு ஒரு முறை தலைவரோட பேச முடிஞ்சா அதிசயம். மாடியில அவரோட அறை. நேரா அங்கே போய்டுவார், சாப்பாடு - குளியல் எல்லாமே அங்கேதான். கிளம்பும்போதும் மாடியிலேர்ந்து இறங்கி நேரா வெளியே போய்டுவார். உண்மையைச் சொல்லணும்னா, அவரோட கட்சித் தோழர்கள் பலருக்கு அவர்கூட கிடைச்ச நேரத்துல சொற்பம்கூட எங்க யாருக்கும் கிடைக்கலை. எங்களோட படிப்பு விஷயங்களையெல்லாம்கூட மாறன் மாமாதான் கவனிச்சார். ஆனா, ஒரு பெரிய பிரியம் எங்க மேல அவருக்கு உண்டுங்கிறதை மட்டும் எப்படியோ உணர்த்திட்டார். மத்த அப்பாக்கள் மாதிரி அவர் இல்லைங்கிற குறை தோணியது இல்லை. பொங்கல் அன்னிக்கு வீட்டோட உள்கூடத்துல எல்லோரும் தலைவர்கூட உட்கார்ந்து ஒண்ணா சாப்பிடுவோம். அப்புறம், வெளியூர் பயணங்கள் புறப்படுற அன்னிக்கு வழியனுப்புறதுக்கு அவருக்கு எல்லோரும் இருக்கணும். அவங்க அம்மா, அப்பா படத்தை வணங்குவார். எங்க எல்லோரையும் பார்த்து, பெயர் சொல்லித் தனித்தனியா ‘போய்ட்டு வர்றேன்’னு சொல்வார். அதுவே எங்களுக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கும்.

தெற்கிலிருந்து ஒரு சூரியன்!



கருணாநிதி மூன்றாவது முறையாக 1989-ல் முதல்வர் பொறுப்பேற்றிருந்த சமயம். காலையிலேயே ஏதோ சிந்தனைவயப்பட்டவராக இருந்தவர், தன்னுடைய செயலர் ராஜமாணிக்கம் மூலமாகத் தனது மனதுக்கு நெருக்கமான சிற்பி கணபதி ஸ்தபதியைத் தொடர்புகொள்கிறார். ‘‘ஸ்தபதியாரே, கன்னியாகுமரி கடல்ல வள்ளுவருக்கு ஒரு சிலை வைக்கணும். நாடு இங்கே முடியுதுங்கிறாங்கள்ல! இல்லை; இங்கே நம்ம தமிழ்நாட்டுலேர்ந்துதான் தொடங்குதுங்கிறதைச் சொல்ற மாதிரி அமையணும்! குமரியிலேர்ந்து வள்ளுவர் நேரா இமயத்தைப் பார்க்கிறார்!’’

கன்னியாகுமரி வள்ளுவர் சிலையைப் பார்க்கையில் அந்த உணர்வைப் பெற்றிருக்கிறேன். அங்கு கடலில் விவேகானந்தர் அமர்ந்து தியானித்த பாறை உண்டு. ‘இந்து - இந்தி - இந்துஸ்தான்’ ஒற்றைக் கலாச்சாரத் தூதர்களில் ஒருவராகப் பின்னாளில் இந்துத்துவச் சக்திகளால் விவேகானந்தர் உருமாற்றப்பட்டபோது, இந்தப் பாறையில் அமைக்கப்பட்ட நினைவிடம் அதற்கான சின்னங்களில் ஒன்றானது. அவர்கள் அளவில் நாட்டின் கடைக்கோடி எல்லையிலும் காவிக் கொடி நிலைநிறுத்தப்பட்டிருக்கும் இடம் அது. அலைகள் மோதும் கடற்பாறையில் பறக்கும் காவிக் கொடி, சங்கொலி, எங்கும் ஆக்கிரமித்திருக்கும் இந்தி - வடக்கத்திய கலாச்சாரம் இவை யாவும் சேர்ந்து அழுத்தத் தொடங்கும்போது, சற்றே தொலைவில் நிற்கும் வள்ளுவர் சிலை ஈர்ப்பு விசையாக மாறத் தொடங்கும். விவேகானந்தர் நினைவிடத்திலிருந்து படகு புறப்பட்டு வள்ளுவர் சிலை நோக்கிச் செல்கையில் இரண்டும் இரு வேறு அரசியல் பாதைகளை உலகுக்குச் சொல்வதைப் புரிந்துணர முடியும்.

சாதிய இந்தியச் சமூகத்தில் பெரியார் பேசிய சமூக மாற்றங்களை அரசியல் தளத்தில் செயலாக்கிய தளகர்த்தர், இந்த இந்திய ஒன்றியத்துக்குள் தமிழர்கள் உள்ளிட்ட பல்வேறு தேசிய இனங்களும் தங்களுடைய உரிமைகளை இழந்துவிடாமல் இருப்பதற்கு அண்ணா தந்துவிட்டுப்போன ‘மாநில சுயாட்சி’ முழக்கத்தை முன்னெடுத்த முன்னோடி என்பதையெல்லாம் தாண்டி, கருணாநிதிக்குத் திராவிட இயக்க வரலாற்றில் மிக முக்கியமான ஓரிடம் இருக்கிறது. தமிழ் அரசியலுக்கான ஒரு உயர் விழுமியக் குறியீட்டை அவரே நிறுவுகிறார். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று சொன்ன வள்ளுவரைத் தமிழ் அரசியலின், ஞானத்தின் குறியீடாக கருணாநிதி நிறுவியது மிகப் பெரிய அரசியல் கனவு!

வள்ளுவரின் திருக்குறளை ஒரு அரசியல் பிரதியாக வாசிக்கும் பழக்கம் நம்மிடம் இல்லை. கருணாநிதியே அதைத் தொடக்கிவைக்கிறார். போர், வன்முறை, ஆக்கிரமிப்பு, ஆதிக்கம், பிரிவினை, வெறுப்புக்கு எதிராகப் பேசும் ‘திருக்குறள்’, அரசியல், இல்வாழ்க்கை, துறவு மூன்று புள்ளிகளைத் தொடுவது. அரசாட்சியின் பெயரால், ‘எது தேவையோ அதுவே தர்மம்!’ என்று எல்லாவற்றையும் தர்மமாக்கும் சாணக்கியனின் ‘அர்த்தசாஸ்திர’த்தோடும், இந்தியா முழுமைக்கும் சாணக்கிய நியாயங்கள் இன்று அடைந்திருக்கும் செல்வாக்கோடும் ஒப்பிடுகையில்தான் அரசியலுக்கான அறமாகவும் அன்பை வரையறுக்கும் திருக்குறளின் உன்னதமும், அது முன்வைக்கும் மாற்று உரையாடலும், கருணாநிதி அதைத் தூக்கிச் சுமந்ததன் நுட்பமான அரசியலும் புரியவரும். திராவிட இயக்கத்தின் வழி தமிழ் நிலம் இந்த மாபெரும் இந்திய தேசத்துக்கு நிச்சயமாக ஒரு மாற்று அரசியல் பார்வையைத் தொடர்ந்து வழங்கிவருகிறது. திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு, திராவிடக் கட்சிகள் ஆட்சியின் ஐம்பதாண்டு, திராவிட இயக்கத் தளகர்த்தர்களில் ஒருவரான கருணாநிதி சட்ட மன்றத்தில் நுழைந்த அறுபதாண்டு நிறைவுத் தருணத்தில் இந்தியா முழுமைக்கும் இங்கிருந்து செல்ல வேண்டிய ஒரு செய்தி உண்டென்றால், அது இதுவே: தமிழ் நிலம் தரும் உண்மையான கூட்டாட்சிப் பார்வையைப் பெறும் தேசிய கண்களை டெல்லி எப்போது பெறும்?

சுதந்திர இந்தியாவின் அரசியல் அரங்கில் முன்வைக் கப்பட்ட மாற்றுச் செயல்திட்டங்களில் மிகுந்த முக்கியத் துவம் வாய்ந்தது திமுகவின் ‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி!’ முழக்கமே ஆகும். கூட்டாட்சித் தத்துவத்தின்படி உருவெடுத்திருக்கும் நாடு என்றாலும், இந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் மாநிலங்களுக்குரிய நியாயங்களை, உரிமைகளை, அதிகாரங்களை வழங்கவில்லை. மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கும் உரிமையிலும் பெரும்பான்மை இடங்களில் மக்கள்தொகை அடிப்படையில் பெரும்பான்மைவாதத்துக்கேற்பவே நம்முடைய அரசியலமைப்பு வளைகிறது. மாநிலங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாநிலங்க அவையில்கூட மாநிலங்களுக்குச் சமமான இடம் இல்லை; உத்தர பிரதேசத்துக்கு 31. தமிழ்நாட்டுக்கு 18. காஷ்மீருக்கு 4. பெரும்பான்மையான வடகிழக்கு மாநிலங்களுக்குப் பெயருக்கு 1. பெரும்பான்மை வாதத்தின் வழியில் ஒற்றை ஆட்சிக்கும் ஒருமைக் கலாச்சாரத்துக்கும் அடிகோலுவ தாகவே இன்றைய அமைப்பு இருக்கிறது.

தத்துவங்கள், பாதைகள் வெவ்வேறு என்றாலும், இந்திய வரலாற்றை அணுகும் கதையாடலில் காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மூன்றுமே டெல்லியி லிருந்தே இந்தியாவைப் பார்க்க விரும்புகின்றன. மாநிலங்களைக் கிளைகளாக அல்லாமல், அவற்றை இந்த இந்தியப் பெருமரத்தின் ஆன்மாவாகப் பார்க்கும் பார்வை யைத் திமுகவே முன்வைக்கிறது. அண்ணா வழிவந்த கருணாநிதி 1971-ல் டெல்லியின் முன்வைத்த ‘ராஜமன்னார் குழு அறிக்கை’ ஒரு மாற்று அரசியல் சட்டத்துக்கான முன்மொழிவு. 1974-ல் தமிழ்நாடு சட்ட மன்றத்தில் திமுக நிறைவேற்றிய மாநில சுயாட்சித் தீர்மானம், ஒரு மாற்று அரசியல் பாதைக்கான தொடக்கப் பிரகடனம்! இந்தியா என்ற வரையறைக்கு உட்பட்டு மாநிலங்களுக்கான, இங்கு வாழும் பல்வேறு தேசிய இனங்களுக்கான உச்சபட்ச அதிகாரப் பகிர்வுச் சாத்தியங்களைத் தமிழகம் முன்வைக்கிறது. அரசியலமைப்பில் மட்டும் அல்லாமல், சமூகத்தைப் பார்க்கும் பார்வையிலேயே டெல்லியிடம் இருந்து திட்டவட்டமான மாற்றுப் பார்வை ஒன்று தனக்கு இருப்பதையும் திராவிட இயக்கம் வழி தமிழகம் வெளிப்படுத்தியிருக்கிறது.

சாதி, மதத்தைக் கடக்கும் வல்லமை தமிழ் அரசியலுக்கு இருக்கிறதா?


சென்னை அண்ணா சாலை புகாரியில் டீ குடித்துக்கொண்டிருந்தேன். சாலை முழுவதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிகள் பறந்தன. மாநிலச் சுயாட்சி மாநாடு நடந்த ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடல் கூப்பிடு தூரத்தில்தான் இருந்தது. சாயங்காலத்துக்கான வானிலை கனிந்திருந்தது. வெளியே சாலையில் போன கூட்டத்தின் இடையே ஒரு குதிரை ஊர்வலம் கவர்ந்திழுத்தது. இரண்டு குதிரைகளில் பதின்ம வயது சிறுவர்கள் இருவர் உற்சாகமாக உட்கார்ந்திருந்தார்கள். பேண்டு செட்காரர்கள்போல அவர்கள் உடை அணிந்திருந்தார்கள். ஒரு கையில் குதிரையின் லகான். ஒரு கையில் தட்டி. ‘தமிழ் வெல்லும்!’ என்றது அது. குதிரைக்கு முன்னே நான்கு பையன்கள் பறையடித்தபடி செல்ல, குதிரைக்குப் பின்னே ஒரு கூட்டம் உற்சாகமாக ஆடியபடியும் முழக்கமிட்டபடியும் அணிவகுத்துச் சென்றது. பெரும்பாலும் பதின்ம வயது ஏழைப் பையன்கள். எதிர்வரும் காலம் ஒன்றின் கனவைக் கூறுவதுபோல இருந்த அந்த ஊர்வலம் மன எழுச்சியைத் தந்ததோடு கூடவே ஒரு குற்றவுணர்வையும் உண்டாக்கியது. இந்தப் பிள்ளைகளின் நம்பிக்கைக்கு எந்த அளவுக்கு நேர்மையாக நம்முடைய இன்றைய தமிழ் அடையாள அரசியல் இருக்கிறது?

யோசித்துப்பார்க்கிறேன். இந்தியாவில் எந்த மாநிலத்திலாவது விசிக மாதிரி ஒரு தலித் அரசியல் கட்சி மாநில உரிமைகள் சார்ந்து மாநாடு நடத்துமா? இந்தியாவில் இன்றைக்கு எந்த மாநிலத்தின் ஆட்சி ஒரு தலித் கட்சி அல்லது ஒரு தலித் தலைவர் கையில் இருக்கிறது? தம் கையில் இல்லாத, யார் கையிலோ இருக்கும் அதிகாரத்தைக் காக்க ஏன் இவர்கள் ஒரு மாநாடு நடத்த வேண்டும்? ஒரு தமிழராகப் பிறந்திருக்காவிட்டால் அல்லது இந்தி பேசும் மாநிலங்களில் பிறந்திருந்தால் தேசிய அளவில் பெரிய ஆளுமையாகக் கவனிக்கப்பட்டிருக்கக் கூடியவர் திருமாவளவன் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு.

தன்னுடைய ஆரம்ப நாட்களிலிருந்தே தலித் அடையாள அரசியலுடன் தமிழ் அடையாள அரசியலையும் சேர்த்துப் பொருத்தியே சமத்துவத்துக்கான சாதி ஒழிப்புப் பயணத்தைத் தொடர்ந்திருக்கிறார் திருமாவளவன். தேசிய அடையாளத்தைத் தாங்கிய ‘தலித் பேந்தர்ஸ்’ அமைப்பிலிருந்து விலகி தமிழ் அடையாளத்துடன் ‘விடுதலைச் சிறுத்தைகள்’ அமைப்பை அவர் தொடங்கியதே இந்திய தலித் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்பம். ஏனென்றால், மாநிலங்களில் பிறந்தாலும் தேசிய அடையாளத்துடன் தன்னைக் கட்டமைத்துக்கொள்வதாகவே தலித் அரசியல் இயக்கங்களின் வரலாறு இருந்திருக்கிறது.

திருமாவளவனின் முடிவு ஒரு விதத்தில் தமிழ்நாட்டிற்கே உரிய தனித்துவம் அல்லது தேசிய அரசியலுக்குத் தமிழ்நாடு கொடுத்துவரும் கொடையின் நீட்சி என்று சொல்லலாம். எப்படி சமூக நீதி அரசியலையும், மாநில சுயாட்சி முழக்கத்தையும் திராவிட இயக்கங்கள் வழி தமிழ்நாடு கொடுத்ததோ அப்படி. தமிழ்நாட்டின் தலித் அரசியலில் இதற்கு ஒரு வரலாற்று முன்னோடியும் உண்டு. சாதி ஒழிப்பை உரக்கப் பேசிய முன்னோடிகளில் ஒருவரான அயோத்திதாசர், முதலில் திராவிட அடையாளத்தையும் தொடர்ந்து தமிழர் அடையாளத்தையும் சாதி ஒழிப்புப் புள்ளியில் பொருத்தியவர்.

மாநில சுயாட்சி எனும் தேசிய முழக்கம்!


இம்பாலில் உள்ள ‘இமா கைதேல் - அம்மா சந்தை’ மணிப்பூரைத் தாண்டியும் புகழ் பெற்றது. முழுக்கவும் பெண்களால் நிர்வகிக்கப்படும் உலகின் பெரிய சந்தைகளில் ஒன்று இது. மணிப்பூரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வரும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் அன்றாடம் தங்கள் பொருட்களைக் கொண்டுவந்து விற்றுவிட்டு செல்லும் இடம் இது. பூக்கள், காய் - கனிகளில் தொடங்கி கருவாடு, வாசனைத் திரவியங்கள், கைவினைப்பொருட்கள் வரை சகலமும் கிடைக்குமிடம். இந்தச் சந்தை வெறும் பொருளாதார நடவடிக்கைகளுக்கான மையம் மட்டுமல்ல; மணிப்பூர் வரலாற்றின் ஒரு பகுதி. தாய்வழி மரபின் செல்வாக்கு நிரம்பிய மணிப்பூரின் கலாச்சாரத்தில் மட்டும் அல்லாமல், பொருளாதார வளர்ச்சியிலும் பெண்களின் நேரடிப் பங்களிப்பு அதிகம். உள்ளூர் வாணிபத்தில் அவர்களுடைய நூற்றாண்டு செல்வாக்குக்கான தொடர்ச்சியின் மையம் ‘இமா கைதேல்’. பல்வேறு பழங்குடிகள், மீத்தேக்கள், முஸ்லிம்கள் என்று பல்வேறு இனக் குழுக்கள், மொழிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் பாகுபாடின்றிக் கூடும் இந்தச் சந்தைக்குச் சென்றதன் நோக்கம் அங்குள்ள பெண்களின் அன்றாட வாழ்க்கை, சந்தைக் கதைகளை அறிவது. அரசியல் கதைகளும் பேசுவதற்கான இடமாக அது மாறியது ஆச்சரியம்!

உரிமையைப் பாதுகாக்க முடியாதவர்களுக்குப்பதவி எதற்கு? விலகுங்கள்!


ஜெயலலிதா தன்னுடைய மரணம் குறித்தும் மரணத்துக்குப் பிந்தைய தன்னுடைய கட்சியின் எதிர்காலம் குறித்தும் ஏதேனும் யோசித்திருந்தாரா என்று நமக்குத் தெரியாது. பதவி அதிகார வெறியில் அவருடைய வாரிசுரிமைக்குப் போட்டா போட்டி நடத்திக்கொண்டிருப்பவர்கள் எவரும் நாளது தேதி வரை ஜெயலலிதாவின் உயில் என்று எதையும் நம்மிடம் காட்டவில்லை. அதேசமயம், கடைசிக் காலத்தில் நல்ல உடல்நிலையுடனும் தீர்க்கமான மனநிலையுடனும் அவர் எழுதிய / ஆற்றிய உரைகளை ஜெயலலிதாவின் அரசியல் மரண சாசனமாகக் கருத முடியும்.
இரு நிகழ்ச்சிகளை இங்கு குறிப்பிடலாம்.

அரசுத்துவம் எனும் கொடிய மதம்!


நெடுநாட்களுக்கு முன்பு கேட்ட ஒரு கதை இது. ஒரு மானுடவியலாளர். பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சட்டம், நீதியெல்லாம் எப்படி இருந்தது என்று தெரிந்துகொள்ள கள ஆய்வுக்காகக் கடந்த காலத்துக்குள் பயணமாகிறார். பெரிய அலைச்சலுக்குப் பின் ஒரு ராஜாவைச் சந்திக்கிறார். நீதி, நியாயம், அவர்களுடைய சட்டதிட்டங்கள் தொடர்பாகக் கேட்கிறார். “எங்கள் வழக்கப்படி எதிரிகள் என்று முடிவெடுத்துவிட்டால், எதிரிகளைத் துவம்சப்படுத்திவிடுவோம் -குடியிருப்புகளைச் சூறையாடுவோம். ஆண்கள் மீது தாக்குதல் நடத்துவோம். பெண்களைத் தூக்கிவிடுவோம். எதிர்ப்பவர்களைச் சிறை பிடிப்போம்; அச்சமூட்ட முடியாதவர்களைக் கொன்றுவிடுவோம்’’ என்கிறார் ராஜா. மானுடவியலாளர் கேட்கிறார். “இதெல்லாம் தவறு என்று நீங்கள் நினைக்கவில்லையா?” ராஜா சொல்கிறார். “எப்படி தவறாகும்? இதுதான் எங்கள் சட்டம். சட்டம் சொல்வது எதுவோ அதுதானே நீதி!” மானுடவியலாளர் கேட்கிறார், “அப்படியென்றால், உங்கள் பார்வையில் எதெல்லாம் அநீதி?” ராஜா சொல்கிறார். “இதையே எங்கள் எதிரிகள் எங்களுக்குச் செய்தால், அதெல்லாம் அநீதி!” மானுடவியலாளர் சந்தேகப்பட்டு ராஜா மீது பாய்ந்து அவர் அலங்காரத்தைக் கலைக்கிறார் - ராஜாவின் இடத்தில் இப்போது, மானுடவியலாளர் நாட்டின் அப்போதைய அதிபர் உட்கார்ந்திருக்கிறார்.

அரசு எனும் அமைப்பை எப்படிப் புரிந்துகொள்வது, அது பேசும் சட்டங்களையும் நீதி, அநீதி, வரலாற்று நியாயங்களையும் உண்மையான நியாய தர்மத்தையும் வரலாற்றையும் மக்களுடைய பார்வையிலிருந்து எப்படிப் பிரித்துப் பார்ப்பது என்பதற்கு அடிக்கடி நான் நினைவுபடுத்திக்கொள்ளும் கதை இது. நவீன உலகின் மிக ஆபத்தான, அபாயகரமான மதம் எதுவென்றால், அரசுத்துவம்தான்.
மக்கள்தான் நாடு; அரசு அல்ல!

மக்களால், மக்களுக்காக, மக்களைக் கொண்டு உருவாக்கப்படும் ஒரு அமைப்பு அரசு. அரசுக்கென்று ஒரு ஆன்மா இருக்கிறது. எனினும், அது மக்களுக்கு அப்பாற்பட்ட ஒரு தனித்த உயிரினத்துடையது அல்ல. அந்த ஆன்மாவைத் தனித்த உயிரினமாக்கி, அதன் பெயரால் தங்கள் நலனைப் பாதுகாத்துக்கொண்டு மக்களை ஒடுக்க ஆட்சியாளர்கள் முற்படும்போது அரசுத்துவம் பிறக்கிறது. தாங்களும் மனிதர்கள், எல்லா மனிதர்களுக்கும் உரிய சகல பலங்கள், பலவீனங்களைக் கொண்டவர்கள், தவறிழைக்கும் வாய்ப்புள்ளவர்கள், மக்களுக்குக் கடமைப்பட்டவர்கள், தங்களுக்குத் திசை காட்டும் அதிகாரம் மக்கள் கையில் இருக்கிறது என்பதை மறந்து, ஆட்சியாளர்களும் அதிகார வர்க்கமும் தங்களையே அரசாகவும் நாடாகவும் கற்பித்துக்கொள்ளும் அபத்தம் அரங்கேறத் தொடங்கும்போது அரசுத்துவம் ஒரு மதம் ஆகிறது.

நவீன உலகில் அரசுத்துவம் எப்படி அரசை ஒரு மதம்போலக் கட்டியமைக்கிறது என்பதை அரசுக் கட்டமைப்புகளோடும் மதக் கட்டமைப்புகளோடும் ஒப்பிடுபவர்கள் உண்டு. “மதம் நமக்கு எதைக் கற்பிக்கிறது? கடவுளையும் மதகுருமார்களையும் எந்தக் கேள்வியும் கேட்காமல் வழிபடக் கற்றுக்கொடுக்கிறது. அரசுத்துவமும் அரசைக் கேள்வி கேட்காமல் வழிபடக் கற்றுக்கொடுக்கிறது. இரண்டுமே அதிகாரங்களை மையமாகக் குவிக்கின்றன; அந்த மையத்தைச் சுற்றியிருப்பவர்களின் நலன்களைப் போற்றிப் பராமரிக்கின்றன. மனிதர்கள் எதிர்க் கேள்வி கேட்பதைப் புனித நூல்கள் மூலம் கட்டுப்படுத்துகிறது மதம். சட்ட நூல்களைப் புனித நூலாக்கிவிடுகிறது அரசு. இரண்டுமே எதிர்ப்பற்ற விசுவாசிகளை உருவாக்கவும் விமர்சகர்களை அச்சுறுத்தவும் ஏராளமான புனைகதைகளை உருவாக்கிக்கொண்டே இருக்கின்றன. இரண்டுக்குமே மேல்தட்டு வர்க்கத்தினர் பிரச்சாரகர்களாக இருக்கிறார்கள். விமர்சகர்களைக் கடவுள் விரோதியாக்கிவிடுகிறது மதம்; தேச விரோதியாக்கிவிடுகிறது அரசு” என்று சொல்லப்படுவதுண்டு.

ஒரு மனிதன் குடியரசு ஆகும் காலம்!


செய்தித்தாள்களில் முதல் பக்கம் - ஒரு முழுப் பக்கம் அந்த விளம்பரம். தொலைக்காட்சிகளில் அந்த விளம்பரம். சமூகவலைதளங்களில் அந்த விளம்பரம். சாலைகளில் பெரிய பெரிய பதாகைகளில் அந்த விளம்பரம். எல்லா விளம்பரங்களிலும் ஒரு ஊடகவியலாளரின் முகம் ஆக்கிரமித்திருக்கிறது. முகம் என்றால், முகம் மட்டும் – சில விளம்பரங்களில் அது அரை முகம். அந்த முகம் மக்களை உற்றுப்பார்க்கிறது. அகங்காரத்துடன், இறுமாப்புடன். பக்கத்தில் ஒரு வாசகம் - ‘தேசம் இன்னும் தெரிந்துகொள்ள விரும்புகிறது!’  கீழே கையெழுத்துபோல கொட்டை எழுத்தில் அந்தப் புதிய தொலைக்காட்சியின் பெயர் - ‘ரிபப்ளிக்’ (குடியரசு).

நொடிக்குக் கோடி விளம்பரங்கள் கொட்டும் யுகத்தில், மாதம் கடந்து அந்த விளம்பரம் திரும்பத் திரும்ப மண்டையைக் குடைவதற்கான நியாயம் இருக்கிறது. எழுபதாண்டு சுதந்திர இந்தியா இன்று வந்தடைந்திருக்கும் ஒரு புள்ளியைத் தீர்க்கமாகச் சுட்டுகிறது அந்த விளம்பரம். ஒரு மனிதன் தேசமாகும் காலத்தில் நாம் இருப்பதை அது பகிரங்கமாக நமக்குச் சொல்கிறது. மேலும் அந்தப் பெயர் – ‘குடியரசு’ - எவ்வளவு சூட்சமமானது! ஒரு மனிதன் தன்னையே தேசமாகக் கட்டமைக்கும் காலத்தில் ஒரு மனிதனின் எண்ணமே ஒரு குடியரசின் எண்ணமாகவும் பிரகடனப்படுத்தப்பட்டுவிடுகிறது.

அரை நூற்றாண்டுக்கு முன் தங்களுடைய சர்வாதிகார ஆட்சியை அலங்கரமான வார்த்தைகளால் அழைத்த ராணுவ அதிபர்கள் – தன்னுடைய அரசை ‘அடிப்படை ஜனநாயகம்’ என்றழைத்த அயூப்கான், ‘நெறிப்படுத்தப்பட்ட ஜனநாயகம்’ என்றழைத்த சுகர்னோ, ‘புதிய ஜனநாயகம்’ என்றழைத்த ட்ரூயிலோ - ஞாபகத்துக்கு வருகிறார்கள். நாம் ஒன்றை நினைவூட்டிக்கொள்ள வேண்டும், மோடியின் காலத்தில் அர்ணப் கோஸ்வாமிகள் உருவாகவில்லை; மாறாக அர்ணப் கோஸ்வாமிகளே மோடியின் காலத்தை உருவாக்குக்கியிருக்கிறார்கள். துல்லியமாகச் சொல்வது என்றால், நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் காலத்தின் வெளிப்பாடு அல்லது விளைவுகளில் ஒன்றே மோடி.

இப்படி, ஒரு மனிதன் குடியரசாகும் காலத்தில்தான் நாம் இந்த தேசத்தின், மக்களின் உண்மையான குடியரசுக் கனவைப் பற்றியும் அதன் இன்றைய நிலையையும் பேச வேண்டிய அவசியம் உண்டாகிறது. நாம் மாபெரும் இந்த இந்திய நாட்டை ஆளும் அமைப்பை ஜனநாயகம் என்று மட்டும் குறிப்பிடவில்லை; குடியரசு என்றும் குறிப்பிடுகிறோம். அதாவது ஜனநாயகக் குடியரசு. ஆனால், நம்முடைய அரசு எப்படியான ஆட்சியை நமக்குத் தருகிறது? ஜனநாயக ஆட்சியையா, குடியரசு ஆட்சியையா? நாம் எதை விரும்புகிறோம்? ஜனநாயக பாணி ஆட்சியையா, குடியரசு பாணி ஆட்சியையா? கல்லூரிகளில் பேசச் செல்லும்போது மாணவர்கள் மத்தியில் இந்தக் கேள்விகளைக் கேட்பது உண்டு. அப்போதெல்லாம் மாணவர்களிடமிருந்து வரும் பதில் கேள்வி: ‘ஜனநாயகத்துக்கும் குடியரசுக்கும் என்ன வித்தியாசம்?’

என் அனுபவத்தில் இதுவரை இந்தக் கேள்விக்கான பதில் அளித்த ஒரு மாணவரைச் சந்தித்ததில்லை. அதிர்ச்சி அடைய ஏதும் இல்லை. ஏனென்றால், அது தனியார் கல்வி நிறுவனமோ, அரசுக் கல்வி நிறுவனமோ; கல்வியின் உள்ளடக்கமான பாடத்திட்டத்தை அரசு தன் கைகளில் வைத்திருக்கிறது. இப்படியான விஷயங்கள் மாணவர்களுக்குத் தெரிந்துவிடக் கூடாது என்று அரசே எண்ணும்போது, பாடத்திட்டம் அரசியல் நீக்கப்பட்டதாகத் தயாரிக்கப்படும்போது மாணவர்களை எப்படி நாம் நொந்துகொள்ள முடியும்?

ஆனால், ஜனநாயகத்தைப் பற்றியும் குடியரசைப் பற்றியும் ஆசிரியர்கள் பேச முடியும். “இந்தியா என்பது வெறும் ஜனநாயகம் மட்டும் அல்ல; அது ஒரு குடியரசும் ஆகும். ஜனநாயகமும் குடியரசும் ஒன்றல்ல. தனி நபருக்கும் அரசுக்குமான தொடர்பில், இவை இரண்டுக்கும் வெவ்வேறு பங்குகள் இருக்கின்றன. ஜனநாயகம் என்பது அடிப்படையில் பெரும்பான்மையின் கைகளில் ஆட்சியை ஒப்படைத்துவிடுகிறது. ‘தலைக்கு ஒரு ஓட்டு’ என்பது ஒரு உயரிய நியாயமாக மேலோட்டத்தில் இருந்தாலும், ‘சிறுத்தைகள், ஓநாய்களுக்கும் ஒரு ஓட்டு; ஆடுகள், மாடுகளுக்கும் ஒரு ஓட்டு’ என்பது அடிப்படையிலேயே வலியவர்கள் கை ஓங்கும் அபாயத்தையும் இயல்பாகவே கொண்டிருக்கிறது. புலிகள் ஒன்றுசேர்ந்து அவற்றின் பெரும்பான்மையில் ஒரு ஆட்சி அமையும்போது மான்களின் கதி என்னவாகும்? இந்த இடம்தான் ஜனநாயகத்தின் மிகவும் சிக்கலான, பலவீனமான பகுதி. இந்தப் பிரச்சினையைக் கையாளும் தீர்வாகவே குடியரசு உருவெடுக்கிறது. அது புலியோ, ஓநாயோ எந்தத் தரப்பு ஆட்சியிலும் வந்தாலும் மான்கள், மாடுகளின் சுதந்திரமும் உரிமைகளும் பாதிக்கப்படாமல் இருப்பதைச் சட்டபூர்வமாக உறுதிசெய்கிறது. அதாவது, குடியரசின் உச்சபட்ச பண்பு அது சட்டபூர்வமாக உறுதிசெய்யும் குடிமக்களின் தனிநபர் சுதந்திரத்தில் நிலைகொண்டிருக்கிறது” என்று மாணவர்களிடத்தில் ஆசிரியர்கள் விளக்க முடியும்.

ஆசிரியர்கள் இப்படி வளர்த்தெடுத்தால் நிச்சயம் அந்த மாணவர்கள் இப்படி ஒரு கேள்விகளை எழுப்புவார்கள்: “அப்படி என்றால், ஒரு ஜனநாயகக் குடியரசான இந்திய அரசு ஏன் தன் குடிமக்களை வெறும் ஜனநாயக அரசுபோலவே நடத்துகிறது? அதாவது, சிறுபான்மையின மக்களின், ஒடுக்கப்பட்ட மக்களின், விளிம்புநிலை மக்களின், எளிய மக்களின், தனிமனிதர்களின் மிக அடிப்படையான உரிமைகளைக்கூட இந்திய அரசால் ஏன் உறுதிப்படுத்த முடியவில்லை? ஒரு தனி மனிதர் இதைச் சாப்பிடக் கூடாது என்று எப்படி இன்னொருவரால் சொல்ல முடிகிறது? ஒரு தனி மனுஷி இப்படியான உடையை உடுத்தக் கூடாது என்றோ இன்னாரைத் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்றோ எப்படி இன்னொருவரால் வலியுறுத்த முடிகிறது? எல்லோர்க்கும் நியாயமான ஒரு குடியரசு எப்படி இதையெல்லாம் வேடிக்கை பார்க்க முடியும்?”

நமக்குள்ளிருக்கும் கோட்ஸேவுக்கு முகம் கொடுக்கலாமா?



என்னை அதிகம் வசீகரித்த தொன்மக் கதைகளில் ஒன்று, வங்கத்தின் சுந்தர வனத்தைக் காக்கும் வன தேவதையான பொன்பீபியின் கதை. சதுப்புநிலக் காடான சுந்தர வனப் பிராந்தியத்தை ஆண்ட தக்ஷிண் ராய் ஒரு துஷ்ட சக்தி. புலி வடிவில் மக்களை வேட்டையாடும் துர்குணம் அவனுக்கு உண்டு. பிறந்த கையோடு வனத்தில் கைவிடப்பட்டு, ஒரு மானால் வளர்த்தெடுக்கப்படும் பொன்பீபி வனத்தின் மகளாகிறாள். தனக்கான ஆபத்தாக பொன்பீபி உருவெடுப்பாள் என்பதை உள்ளுணர்வால் உணரும் தக்ஷிண் ராய் அவளைக் கொல்லத் திட்டமிடுகிறான். பொன்பீபியுடன் போரிடச் செல்லும் தக்ஷிண் ராயுடன் அவனுடைய தாய் நாராயணியும் சேர்ந்துகொள்கிறாள். “ஒரு பெண்ணுடன் போரிட நான் போதுமானவள்” என்கிறாள் நாராயணி. பொன்பீபியுடனான போரில் நாராயணியும் தொடர்ந்து தக்ஷிண் ராயும் தோற்கின்றனர். தோற்று கீழே விழும்போது மனம் திருந்துகிறாள் நாராயணி. அவளைக் கருணையோடு மன்னிக்கும் பொன்பீபி நாராயணியை அணைத்துக்கொள்கிறாள். தன்னை வணங்குவோர் அவளையும் வணங்க வரம் கொடுக்கிறாள். தக்ஷிண் ராயும் மன்னிப்பு கோருகிறான்; பொன்பீபி அவனையும் மன்னிக்கிறாள்; ஆனால், அவன் திருந்தவில்லை. வனத்துக்குள் ஓடி மறைந்துகொள்ளும் தக்ஷிண் ராய் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் ஏதேனும் ஒரு புலிக்குள் புகுந்து அதன் வழியாக மனிதர்களை வேட்டையாடியபடி இருக்கிறான். மக்கள் பொன்பீபியை தக்ஷிண் ராயிடமிருந்து காக்கும் தெய்வமாகக் கருதுகின்றனர். ஆனால், பொன்பீபி மக்களுக்கு மட்டும் அல்ல; சுந்தர வனத்தில் வாழும் ஒவ்வொரு உயிரையும் காக்கும் தேவதையாக இருக்கிறாள். சுந்தர வனத்தின் பூர்வக் குடிகளான மக்களுக்கும் புலிகளுக்கும் சரி பாதியாக அந்த வனத்தை அவள் பிரித்துக்கொடுத்திருக்கிறாள். தன் எதிரிக்கான ஊடகமாகின்றன என்று புலிகளைக்கூட அவள் கைவிட்டுவிடவில்லை; எதிரி என்பதால், தக்ஷிண் ராயையும் அவள் கொன்றுவிடவில்லை; அவனும் திருந்தட்டும் என்று அவள் காத்திருக்கிறாள்; அவனிடமிருந்து மக்களைப் பாதுகாத்தவாறே அவனையும் அவள் பாதுகாக்கிறாள் என்பதே அந்தக் கதை.

காவி எப்படி அதிகாரத்தின் நிறமானது?


டெல்லி கரோல்பாக் ரயில் நிலையத்தைவிட்டு கொஞ்ச தூரம் வெளியே வந்தால், பாலிகா பஜாரை ஒட்டி ஒரு நல்ல பஞ்சாபி உணவகம் உண்டு. பெயர் மறந்துவிட்டதா அல்லது பெயர்ப் பலகை இல்லாத உணவகமா என்று இப்போது ஞாபகம் இல்லை. ஒரு சர்தார்ஜி தாத்தாவின் கடை. சாலையை ஒட்டினார்போல முகப்பிலேயே சமையல் கட்டு. பிரமாதமான பனீர் டிக்கா போட்டுக்கொடுத்தார். மேலே கொஞ்சம் தீய்ந்ததுபோல முறுகி, உள்ளே கொஞ்சம் வேகாமல் சதக் சதக் என்று, இடையிலேயே உடன் சேர்ந்துகொண்ட மிளகாய் துண்டின் மெல்லிய காரமும், புதினாவின் மெல்லிய வாசனை கலந்த கொஞ்சம் புளிப்பும் சேர்த்து, ஆகக் கூடிவந்த ஒரு பனீர் டிக்கா அது! அப்படி ஒரு அற்புதத்தை அனாயசமாக அவர் போட்டுத்தள்ளிக்கொண்டே இருந்தது பனீர் டிக்காவைக் காட்டிலும் பெரும் அற்புதமாகத் தெரிந்தது. “சாதா பனீர் டிக்கா இல்லை; பஞ்சாபி பனீர் டிக்கா” என்றார். அவருக்கு ஒரு கும்பிடு போட்டேன். பதிலுக்கு அவர் ஒரு சலாம் போட்டார். “இன்னொன்று இதேபோலக் கிடைக்குமா?” என்றேன். காதருகே குனிந்தவர், “இன்று வேண்டாம். இந்த நினைவு இப்படியே இருக்கட்டும்!” என்றார்.

ஆண்டுகள் ஓடுகின்றன; நினைவுகள் விடாமல் துரத்துகின்றன. ‘அமுல்’ விளம்பரத்தைகூட அந்த சர்தார்ஜி பெரியவர் நினைவு வராமல் தனித்துப் பார்க்க முடிந்ததில்லை. எவ்வளவு சூட்சமமான மனிதர் என்றுகூட சில சமயங்களில் தோன்றும். இன்னொரு பன்னீர் டிக்கா கொடுத்திருந்தால், மேலும் ஒரு நூறு ரூபாயை அவர் சம்பாதித்திருக்கக் கூடும்; மாறாக, அந்த மனிதர் நினைவைச் சம்பாதித்துவிட்டார். அவர் கையில் ஒரு முத்தமிட்டு இருக்கலாம் என்றுகூட இன்று தோன்றுகிறது. கரோல்பாக், பாலிகா பஜார், இடையில் குறுக்கிட்டுப்போன ஒரு சந்து, பெயரற்ற அல்லது பெயர் மறந்துவிட்ட அந்தக் கடை, சர்தார்ஜி பெரியவரின் முகம்... ஒரு பனீர் டிக்கா எவ்வளவு நினைவுகளை அள்ளி வருகிறது!

ஒரு அற்புதமான மனிதரை, ஆதாய அரசியல்வாதி களோடு ஒப்பிடுவதற்காக வாசகர்கள் என்னை மன்னிக்க வேண்டும். யோசித்துப்பார்த்தால், நம் நினைவுகள்தான் நாம்; நினைவுகள் போனால் எல்லாம் காலி என்று தோன்றுகிறது! அதனால்தான் அதிகாரத்தைக் கட்டியாள நினைப்பவர்கள் முதலில் சகஜீவிகளின் நினைவுகளைக் கையாளத் தொடங்குகிறார்கள் என்றும் தோன்றுகிறது. நினைவுகளைக் கட்டியாள வரலாற்றைக் கையில் எடுக்கிறார்கள். வரலாற்றைத் தமதாக்கிக்கொள்வதன் மூலம் மக்களின் கற்பனைகளையும் அவர்கள் அபகரித்துவிடுகிறார்கள்.

மோடியின் பொருளாதாரத் தோல்விகளை ஏன் எதிர்க்கட்சிகள், ஊடகங்கள் பேசுவதில்லை?


சத்தியமங்கலம் வனத்தில் பிரபுவைச் சந்தித்தேன். பள்ளி செல்லும் சிறுவன். ஒடிசலான உருவம். கருத்த தேகம். துடியாகப் பேசுபவன். பள்ளிக்கூடப் பாடங்களோ, வெளி விவகாரங்களோ அவனிடத்தில் பெரிய ஆர்வத்தை உண்டு பண்ணியிருக்கவில்லை. ஆனால், வனம் அவன் உடம்புக்குள் இறங்கியிருந்தது. புலிகளைப் பற்றி நிறைய சுவாரஸ்யமாகப் பேசினான். அவன் படிக்கும் அரசாங்கப் பள்ளிக்கூடம் அவனுடைய வீட்டிலிருந்து சுமார் பத்து கி.மீ. தொலைவில் இருக்கிறது. மலைப் பாதை. புலி நடமாட்டம் மிகுந்த பகுதி. புலி தண்ணீர் குடிக்க வந்து செல்லும் ஓடையைத் தாண்டிதான் அன்றாடம் அவன் பள்ளிக்கூடம் போக வேண்டும். “காட்டில் நடக்கும்போது புலி பயம் இருக்காதா?” என்று கேட்டேன். “காட்டில் எப்பவும் புலி உலாத்துதோ, உலாத்தலையோ; நெனப்பில் எப்பவும் புலி உலாத்தும்” என்றான். “பயந்து ஆவப்போவது என்ன? காட்டிலே புலி மட்டும் இல்ல. காட்டு நாய் இருக்கு. காட்டெருமை இருக்கு. கருநாகம் இருக்கு. புலி மட்டும் இல்ல; இதுகளும் மேல பாய்ஞ்சா ஆளைத் தூக்கிரும். புலி கண்ணுல நாம சிக்காம இருக்கணும்னா, புலியைத் தவிர காட்டுல தட்டுபடறதையெல்லாம் புலியாப் பார்த்துக் குழப்பிக்காம இருக்கணும்; புலியை மட்டும் நெனைச்சுக் கெடந்தா கண்ணு மறைச்சுடும். எதுவும் கண்ணில் படாது. மரம் செடி கொடியெல்லாம் புலியா தெரிஞ்சா பாம்பும் ஓநாயும் காட்டெருமையும் கண்ணுல படாது; கடைசில புலியே கண்ணு முன்ன வந்து நின்னாலும் அது புலியா தெரியாது!” என்றான். பிரமிக்க வைத்த விழிப்புநிலை அது. கண் மட்டும் கண் அல்ல என்பதை உணர்த்தியவன் அவன்!

சின்ன வெங்காயம் விலை கிலோ ரூ.120 விற்கிறது. அதன் வழக்கமான விலையைப் போல இது மூன்று மடங்கு. ஏன் இதுகுறித்து எந்த அரசியல் கட்சியும் பேசவில்லை; ஊடகங்கள் எழுதவில்லை? மன்மோகன் சிங் ஆட்சிக் காலம் நெடுகிலும் விலைவாசி உயர்வில் தொடங்கி, பொருளாதார நெருக்கடிகள் வரை இடைவிடாது பேசிக்கொண்டிருந்த ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் இப்போது அதுபற்றியெல்லாம் ஏன் வலுக்கப் பேசுவதில்லை அல்லது அவர்கள் பேசுவது ஏன் நம் காதுகளுக்கு வந்து விழுவதில்லை? மோடி அரசையும் பாஜகவையும் யாரும் விமர்சிக்காமல் இல்லை; ஆனால், எது தொடர்பில் அவர்கள் பெருமளவில் விமர்சிக்கப்படுகிறார்கள் - மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடர்பிலா; அடையாள அரசியல் பிரச்சினைகள் தொடர்பிலா? இந்த நுட்பமான வேறுபாட்டை நாம் விவாதிக்க வேண்டும்!

ராமனும் பசுவும்!


இந்தியாவில் ஏனைய கட்சிகளுக்கும் பாஜகவுக்கும் உள்ள மிக முக்கியமான வேறுபாடு, ஏனைய கட்சிகள் அதிகாரத்தை நோக்கி நகர அணித்திரட்டலில் (mobilization) நம்பிக்கை வைத்திருக்கின்றன; பாஜகவோ எதிர்அணிதிரட்டலில் நம்பிக்கை வைத்திருக்கிறது (counter mobilization). பாஜக முன்வைக்கும் இந்துத்துவ அரசியலை எதிர்கொள்ள மிக மிக முக்கியமானது இந்தப் புள்ளி - இந்தப் புரிதல்.

ஏனைய கட்சிகளை எதிர்கொள்ளும், ஏனைய அரசியலை எதிர்கொள்ளும் அதே வழிமுறை பாஜகவின் இந்துத்துவ அரசியலை எதிர்கொள்ளப் பயன்படாது. ஏனென்றால், அது தன்னுடைய அணித்திரட்டலின் பிரதான இலக்காகக் கொண்டிருக்கும் இந்நாட்டின் பெரும்பான்மைச் சமூகமான இந்துச் சமூகம் ஏனைய சமூகங்களைப் போல ஒரு மதமாகச் சிந்திக்கவில்லை; மாறாக, சாதியச் சமூகமாக அவர்கள் சிந்தித்துப் பழகியிருக்கின்றனர்! இந்துக்கள் ஏனைய தளங்களில் முழுக்க சாதியமயப்பட்டிருந்தாலும், அரசியல் தளத்தில் சாதியிலிருந்தும் விடுபட்டு பொது அடையாளம் நோக்கிச் செல்லவே பெருமளவில் விரும்புகிறார்கள் சாதியைத் தாண்டிய பிரச்சினைகளுக்கே அவர்கள் பிரதான கவனம் அளிக்கவும் முற்படுகிறார்கள். மாறாக, பாஜக அவர்களை மதமயமாகச் சிந்திக்க வைப்பதைச் செயல்திட்டமாகக் கொண்டிருக்கிறது!

இந்துச் சமூகம் எப்போது மதமாகச் சிந்திக்கிறது? அதன் உணர்வுகள் தூண்டிவிடப்படும் போதும் சீண்டிவிடப்படும்போதும்! இதில் தூண்டி விடப்படுவதனால் ஏற்படும் விளைவைக் காட்டிலும் சீண்டிவிடப்படும்போது கிடைக்கும் அனுகூலம் பாஜகவுக்கு அதிகம். அணித்திரட்டலைக் காட்டிலும் எதிர் அணித்திரட்டல் விரைவான கூடுதல் பலன்களைத் தருவதாலேயே இந்துக்களைத் திரட்ட பெரும்பாலும் இரண்டாவது வழியையே அது தேர்ந்தெடுக்கிறது. இந்த இடத்திலேயே ராமரோ, பசுவோ அதற்குத் தோதான வாகனங்கள் ஆகிவிடுகின்றனர்; எதிர்க்கட்சிகள் வழுக்கி விழுகின்றனர்.

ஏன் மாட்டைக் கையில் எடுக்கிறார்கள்?


மாட்டைப் புரிந்துகொள்ள முற்படுவதன் மூலமாக ஒரு நாட்டின் அரசியலையோ, அந்நாட்டை ஆள்கின்ற அரசையோ புரிந்துகொள்ள முற்படுவது என்பது வேடிக்கையான ஒரு அரசியல் ஆய்வுதான். நாட்டின் 50% மக்கள் இன்னமும் விவசாயத்தைச் சார்ந்திருக்கும் ஒரு நாட்டில், அதுவும் 29.9 கோடி மாடுகள் வளர்க்கப்படும் ஒரு நாட்டில் மாடு வளர்ப்பைப் பாதிப்படையச் செய்யும் செயல்திட்டங்களை ஒரு அரசாங்கமோ, அரசியல் கட்சியோ பகிரங்கமாக முன்னெடுக்க முடியுமா?

முடியவே முடியாது என்றே நான் நினைக்கிறேன்!

மாநிலங்கள் மீதான அறிவிக்கப்படாத போர்!

கிராஃபிக்ஸ்: ரெமோ

மோடி அரசின் மாநிலங்கள் உரிமைப் பறிப்பை இந்த அரசின் பத்தோடு ஒன்று பதினொன்று பிரச்சினையாக அணுக முடியுமா? முடியாது. கூடாது. துரதிர்ஷ்டவசமாக அப்படி அணுகும் போக்கே இந்திய அறிவுத் துறையினர் மத்தியிலும் ஊடகங்கள் மத்தியிலும் இன்றைக்குப் பெருமளவில் இருக்கிறது.

இந்தியாவில் மாநிலங்கள் அமைப்பு என்பது, பல்வேறு நாடுகளையும்போல நிர்வாக வசதிக்கான வெறும் பிராந்தியரீதியாலான பகுப்பு அல்ல. மாறாக, அது பல்வேறு இனங்களின் மொழி, கலாச்சாரம், வரலாற்று உரிமைகளோடு பிணைக்கப்பட்டது. மேலும், உண்மையான அதிகாரப் பரவாக்கலும் பல இன மக்களுக்கான பிரதிநிதித்துவமும் மாநில உரிமையிலிருந்தே தொடங்குகின்றன. ஆக, இன்று நடைமுறையிலிருக்கும் மொழி அடிப்படையிலான மாநிலங்கள் எனும் அமைப்பே சங்கப்பரிவாரங்களுக்கும் அவற்றின் ‘ஒரே மதம் - ஒரே மொழி - ஒரே தேசியம்’ எனும் ஒற்றைக் கலாச்சாரக் கனவுக்கும் நேர் எதிரானது. ஏனென்றால், இந்த மொழிவாரி அமைப்பு ஒருவகையில் இந்தியாவின் பல்வேறு இன மக்களையும் மொழி அடிப்படையில் ஒன்றிணைக்கிறது - மறுவகையில் மத அடிப்படையில் அவர்களைப் பிளக்கவிடாமல் தவிர்க்கிறது. ஆக, மொழிவாரி மாநிலங்கள் எனும் அமைப்பு ஒரு உறங்கும் புலி. சீண்டினால் அது எப்படிக் கிளர்ந்தெழும் என்பதற்கான சமீபத்திய உதாரணத்தையே ‘2017 ஜல்லிக்கட்டுப் போராட்டம்’ வாயிலாக டெல்லி பார்த்தது. ஆக, இந்த நாட்டை எப்படியானதாக மாற்ற வேண்டும் என்று சங்கப்பரிவாரங்கள் வைத்திருக்கும் வரைபடத்தின்படி, அழிக்கப்பட வேண்டிய அடிப்படையான கூறுகளில் ஒன்றாகிறது இன்றைய மாநிலங்கள் அமைப்பு. அதன் ஆரம்ப கட்டப் பணியே மாநிலங்கள் உரிமைப் பறிப்பு.

ஆர்எஸ்எஸ்ஸைப் பற்றிப் பேசுகையில், ‘ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம்’ எனும் அது வெளியே அதிகம் வெளிக்காட்டும் ஒரு முகத்தைப் பற்றிதான் அதன் எதிரிகளும் விமர்சகர்களும் அதிகம் பேசுகிறார்கள். ‘ஒரே கொடி, ஒரே தலைவர், ஒரே சித்தாந்தம்’ எனும் கனவையும் நெடுங்காலமாகக் கொண்ட இயக்கம் அது என்பதை நாம் உணர வேண்டும். ஆர்எஸ்எஸ்ஸின் சிந்தாந்தத்தை வடிவமைத்தவர்களில் ஒருவரான எம்.எஸ்.கோல்வல்கர், 1961-ல் தேசிய ஒருமைப்பாட்டு ஆணையத்துக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிடுகிறார்: “இன்றைய கூட்டாட்சி வடிவம், பிரிவினைவாத உணர்வுகளுக்கு வித்திடுவதுடன் அதற்கு ஊட்டம் அளிக்கவும் செய்கிறது. ஒரே தேசம் எனும் கருத்தாக்கத்தை அங்கீகரிக்க மறுப்பதுடன் அதைச் சிதைக்கவும் செய்கிறது. அது முற்றிலுமாக வேரறுக்கப்பட வேண்டும். அரசியலமைப்புச் சட்டம் சீரமைக்கப்பட்டு, ஒற்றை ஆட்சி நிறுவப்பட வேண்டும்.”

இதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பே ஆர்எஸ்எஸ் எப்படியான மாநிலங்களைக் கட்டமைக்க விரும்புகிறது என்பதையும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்: “மையப்படுத்தப்பட்டதாக அரசு இருக்க வேண்டும். மாநிலங்கள் என்பவை நிர்வாகரீதியான பிரதேசங்களாக இருக்க வேண்டும்… நமது ஒருங்கிணைந்த ஒற்றுமைக்கு ஊறு விளைவிக்கக் கூடிய, துண்டாடக் கூடிய, பிராந்தியம் சார்ந்த, குறுங்குழுவாத, மொழி அடிப்படையிலான அல்லது வேறு எவ்விதமான பெருமித உணர்வும் சுவடே இல்லாமல் அழிக்கப்பட்டு, ‘ஒரே நிலம், ஒரே தேசம், ஒரே நாடாளுமன்றம், ஒரே நிர்வாகி’ என்பது பறைசாற்றப்பட வேண்டும்.”

இந்தியாவுக்கு மையப்படுத்தப்பட்ட அரசு நிர்வாகமே தேவை; நாட்டை இதற்காக 50 நிர்வாகப் பிரிவுகளாகக்கூடப் பிரித்து நிர்வகிக்கலாம் என்பதே ஆர்எஸ்எஸ் கனவில் உள்ள மாநிலங்களுக்கான வரைபடம். கோல்வல்கரின் வார்த்தைகளிலிருந்து பார்த்தால், மோடி இன்றைக்குச் சொல்லும் ‘கூட்டுறவுக் கூட்டாட்சி’ எனும் சொல்லாடல் பின்னாளில் இந்திய மாநிலங்களை எப்படியானதாகப் பிரிக்க வழிவகுக்கும் என்பது புரியவரும்.

வாட்ஸப் சர்க்கார்!


வாரணாசிக்கு நான் போயிருந்த சில நாட்களுக்கு முன்புதான் மனோஜ் சின்ஹா அங்கு வந்து சென்றிருந்தார். உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர். “முதல்வராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு வழிபாடு நடத்த வேண்டும் என்று எண்ணியே வாரணாசிக்கு அவர் வந்திருந்தார். என்ன ஆயிற்றோ தெரியவில்லை; கடைசியில் ஆளை மாற்றிவிட்டார்கள்” என்று பேசிக்கொண்டார்கள். முன்னதாக, வாய்மொழி உத்தரவின்பேரில் புதிய முதல்வருக்கான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் எல்லாம்கூட நடந்திருக்கின்றன என்பதை உள்ளூர் பத்திரிகைகளைப் படித்தபோது தெரிந்துகொள்ள முடிந்தது. பின்னர், எப்படி, ஏன் யோகி ஆதித்யநாத் முதல்வராக்கப்பட்டார்?

அணையா நெருப்பின் நூற்றியைம்பது ஆண்டுகள்!


வடலூரைச் சென்றடைந்தபோது, உச்சி வெயில் தகித்துக்கொண்டிருந்தது. நீண்ட பிராயணத்தின் வழிச் சென்றடைந்ததாலோ என்னவோ, வடலூரே அன்றைக்கு ஒரு அடுப்பு மாதிரி கனன்றுகொண்டிருந்தது. நெய்வேலி சுரங்கம் விரிவாக்கம் நடக்க நடக்க சுற்று வட்டாரம் முழுக்க தகிப்பதாக மாறிக்கொண்டிருக்கிறது என்று சொன்னார் உடன் வந்த உள்ளூர் செய்தியாளரும் நண்பருமான முருகவேல். உஷ்ணம் இடத்துக்குள் இருக்கிறதா, காலத்துக்குள் இருக்கிறதா என்ற கேள்வி எழுந்தது. பசி வயிற்றை எரித்துக்கொண்டிருந்தது.

மே 22, 2017. வள்ளலார் சத்திய தருமச்சாலையில் அணையா அடுப்பை மூட்டி ஆங்கில நாட்காட்டி கணக்குப்படி, 150 வருஷங்கள் நிறைந்த நாள் அது. 1867 மே 23 (வைகாசி 11) அன்று சத்திய தருமச்சாலையில் அணையா அடுப்பை ஏற்றி வைத்தார் வள்ளலார். சத்திய தருமச்சாலைக்குச் செல்வதற்கு முன்னதாக, உள்ளூரிலேயே வசித்துவரும் வள்ளலார் வாழ்க்கை வரலாற்று நூல் தொகுப்பாசிரியரும் சத்திய ஞான சபையின் நெடுநாள் அறங்காவலரும் சன்மார்க்க அறிஞருமான ஊரன் அடிகளாரையும் உடன் அழைத்துக்கொண்டு செல்வதாகத் திட்டம். அடிகளாருக்கு அன்றைய நாள் 85-வது பிறந்த நாள். தவிர, அவர் துறவறம் மேற்கொண்டு 50 வருஷ நிறைவு நாள். “பசியோடு வடலூர் வருவதும் பசியோடு சத்திய தருமச்சாலைக்குள் நுழைவதும் சன்மார்க்கத்தை அறிந்துகொள்ள வருபவர்களுக்கு ஒரு சரியான மார்க்கம்தான். ஜீவகாருணியத்தை ஏன் பசியாற்றுதலோடு வள்ளலார் பொருத்தினார் என்பது இங்கு பசியோடு வந்து பசியாறும்போது புரியும்” என்றார் ஊரன் அடிகளார். “150 வருஷங்கள்… எத்தனை லட்சம் வயிறுகள் பசியாறியிருக்கும், எத்தனை லட்சம் பேர் பசித்தீயை இந்த அடுப்பு அணைத்திருக்கும்!” என்றார்.

தீயைத் தீயால் அணைக்க முடியுமா? தீயை எப்படி தீயால் அணைக்க முனைந்தார் வள்ளலார்? பசி, வெப்பம், அடுப்பு, தீ… மாறி மாறி இந்த வார்த்தைகள் மோதிக்கொண்டே இருக்கவும் நாங்கள் சத்திய தருமச்சாலையில் நுழையவும் சரியாக இருந்தது. “அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி, தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி!” - உள்ளே சாப்பாட்டுக் கூடத்திலிருந்து ஒலித்த குரல்கள் நூறும் ஒன்றாய் சுவர்களில் மோதி எதிரொலித்து, ஒன்றுக்கு நூறாய் சிதறி வாசல் வழி வந்து வெளியே காற்றில் விழுந்தன.

தமிழிசையிடமே பேச முடியாவிட்டால் மோடியுடன் எப்படி பேசப்போகிறோம்?


கன்னியாகுமரி போயிருந்தேன். பெரியவர் கொடிக்கால் ஷேக் அப்துல்லா ஒரு உரையாடலுக்கு ஏற்பாடு செய்திருந்தார். நாட்டின் பன்மைத்துவம் செதில் செதிலாகப் பெயர்க்கப்படுவது, வெறுப்பரசியலின் செல்வாக்கு, சகிப்பின்மை தொடர்பில் பேச்சு போனபோது, “மோடி நம் பிரதமர் எனும் உண்மையை அங்கீகரிக்க வேண்டும்; அவருடன் பேசுவதற்கான உரையாடல் புள்ளியை எதிர்க்கட்சிகள் முதலில் கண்டறிய வேண்டும்” என்று சொன்னேன்.

“முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு எதிர்க்கட்சிகளிடம் பேசுவதையே முற்றிலுமாகத் தவிர்க்கும் ஒரு பிரதமரை நாம் பெற்றிருக்கிறோம். எந்தப் பிரச்சினை குறித்தும் நாடாளுமன்றத்திலோ, பிரதமர் அலுவலகத்திலோ எதிர்க்கட்சிகளோடு சந்தித்துப் பேசும், விவாதிக்கும் ஆர்வம் மோடிக்கு இருப்பதாகத் தெரியவில்லை. என்ன விவகாரம் என்றாலும், அவர் நேரே பொதுமக்கள் மேடையை நோக்கிச் சென்றுவிடுகிறார்.

கேட்பதற்கான காதுகள் அவரிடத்தில் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், பிரதமர் என்பவர் ஒரு கட்சிக்கு மட்டும் சொந்தமானவர் அல்ல; இதை மறுதலித்து, ‘தன் ஆட்சி, தன் போக்கு’ என்று செல்லும் ஒருவரை அதே பாதையில் தொடர அனுமதிப்பது மறைமுகமாக எதிர்க்கட்சிகளும் அதே பாதையில் செல்வதற்கு ஒப்பானதுதான். நுட்பமாகக் கவனித்தால் தெரியும், மோடி பிரதமரான பின் அவருடனான உரையாடல் என்று மட்டும் இல்லாமல், ஆளுங்கட்சியினருடனான உரையாடல் என்பதே நாடு முழுக்க எல்லா மட்டங்களிலும் குறைந்துவருகிறது. இந்தக் கலாச்சாரம் நாட்டுக்கு நல்லதல்ல!”

கூட்டத்தில் இது சிறு சலசலப்பை உண்டாக்கியது.

இப்போதுகூட இல்லையென்றால், கம்யூனிஸ்ட்டுகள் எப்போது இணையப்போகிறார்கள்?


இந்திய கம்யூனிஸ்ட்டுகள் இன்று முட்டுச்சந்தில் நிற்கிறார்கள் என்று குறிப்பிடலாமா? ஆம், சரியாகக் குறிப்பிட வேண்டும் என்றால், அப்படித்தான் குறிப்பிட வேண்டும். இந்த நிலை முட்டுச்சந்துதான். இனி முன்னகர வேண்டும் என்றால், எதிரில் உள்ள சுவரை உடைத்துத்தான் முன்னேற வேண்டும். வேறு வழியில்லை. உடைக்க வேண்டும் என்றால், இந்தப் பலம் போதாது. கம்யூனிஸ்ட்டுகள் முதலில் ஒன்றிணைய வேண்டும். வேறு வழியில்லை!

ஓராண்டுக்கு முன்பு மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரியைச் சந்தித்தபோது கேட்டேன். “இந்தியாவில் இடதுசாரிகள் எழுச்சிக்கு கம்யூனிஸ்ட் கட்சிகளின் இணைப்பு முக்கியமானது. இதை நீங்களும் உணர்ந்திருப்பதாகவே தோன்றுகிறது. போராட்டக் களங்களிலும் தேர்தல் களங்களிலும் ஒருங்கிணைந்திருக்கிறீர்கள். அப்படியே கட்சிகளை இணைத்து ஒன்றிணைந்த பெரும் சக்தியாக எழுந்து நிற்பதில் என்ன சிக்கல்?”

வெறுப்பரசியலில் நக்ஸல்களின் பங்கு என்ன?


நக்ஸல் இயக்கத்தின் அரை நூற்றாண்டு நிறைந்திருக்கிறது. 1967-ல் வங்கத்தின் நக்ஸல்பாரி கிராமத்தில், நிலவுடைமையாளர்களுக்கு எதிராகக் கிளர்ந்த விவசாயிகளின் போராட்டம், இந்திய கம்யூனிஸ்ட்டுகளில் ஒரு பகுதியினரை ஆயுதப் புரட்சி நோக்கித் திருப்பி அரை நூற்றாண்டு ஆகிறது. இந்திய கம்யூனிஸத்தில் மார்க்ஸிய - லெனினிஸம், மாவோயிஸம் என்று பல போக்குகளுக்கு வழிவகுத்த நக்ஸல் இயக்கம், அடிப்படையில் இன்று நடைமுறையிலுள்ள நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் புறக்கணித்து, ‘ஆயுதப் பாதை ஒன்றே புரட்சிப் பாதை’ என்று நம்பித் தொடங்கப்பட்டது. ஆயுதப் புரட்சி என்பது வெளிப்பூச்சுக்கான ஒரு கவர்ச்சிகரமான சொல்; எதிர்த் தரப்பை அழித்தொழிப்பதே அவர்களுடைய வழிமுறை.

இந்தியாவின் ஒவ்வொரு அங்குல நிலமும் தீப்பற்றத் தயாராக இருக்கிறது என்று சொன்ன நக்ஸல் இயக்கத்தின் பிதாமகனான சாரு மஜும்தார், “1971-ல் ஆயுதப் போராட்டம் ஒருங்கிணைந்து, 1975-ல் புரட்சி நடந்துவிடும்” என்று முழங்கியவர். ஆனால், இயக்கம் தொடங்கப்பட்டு சில ஆண்டுகளிலேயே அது கடும் பின்னடைவுகளைச் சந்தித்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நக்ஸல்கள் கைதுசெய்யப்பட்டார்கள். சிறைபிடிக்கப்பட்ட சாரு மஜும்தார் இறந்தார். இயக்கம் பலவாக உடைந்தது. சிதறிய அமைப்புகளில் பல அழித்தொழிப்புப் பாதையைக் கைவிட்டுவிட்டதாக அறிவித்தன. சில தேர்தல் பாதைக்குத் திரும்பின. சில பழைய பாதையையே வெவ்வேறு பெயர்களில் தொடர்ந்தன. ‘நாட்டின் மிகப் பெரிய அச்சுறுத்தல்’ என்று பிரதமர் மன்மோகன் சிங்கால் வர்ணிக்கப்பட்ட ‘மாவோயிஸ்ட் இயக்கம்’ நக்ஸல் இயக்கத்தின் நீட்சி. நேரடியாக ஆயுத வழியில் அல்லாமல், ஜனநாயக அமைப்புகளின் பெயரால் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இயங்கும் நக்ஸல் ஆதரவு மனநிலை கொண்ட இயக்கங்கள் ஏராளம் உண்டு. உதாரணமாக, தமிழகத்தில் ‘மகஇக’, ‘மக்கள் அதிகாரம்’ போன்ற பெயர்களில் செயல்படும் அமைப்புகளை நக்ஸல் இயக்க வழிமுறையில் நம்பிக்கை கொண்ட அமைப்புகள் என்று சொல்லலாம்.

பொதுவாக, மிகத் தீவிரமாக இயங்கக் கூடியவர்கள் என்றாலும், எண்ணிக்கை அளவில் நாடு முழுவதிலுமே லட்சங்களில் அடக்கிவிடக் கூடிய மிகச் சிறுபான்மை அரசியல் தரப்பு இவர்கள். ஐம்பதாண்டுகளுக்குப் பின் இன்று நக்ஸல் இயக்கத்தையும் நக்ஸல் ஆதரவு இயக்கங்களையும் இந்தப் போக்குகளையும் மதிப்பிடுகையில், அது பெரிய தோல்வி அடைந்திருப்பதாகப் பலரும் எழுதுகிறார்கள். தோல்வி அடைந்திருக்கிறார்கள் என்பது உண்மை. கூடவே தங்களுக்கு வெளியே இருக்கும், இடதுசாரிசார் ஜனநாயகக் குரல்களை வீழ்ச்சியை நோக்கித் தள்ளியதிலும் அவர்கள் முக்கியப் பங்காற்றியிருக்கிறார்கள்; மறைமுகமாக வலதுசாரிகளுக்கு உதவியிருக்கிறார்கள் என்பது என்னுடைய துணிபு.

இந்தியாவில் வலதுசாரிகளின் எழுச்சிக்கும் இடதுசாரிகளின் வீழ்ச்சிக்குமான காரணங்கள் குறித்து ஆய்வுசெய்பவர்கள் இதுகுறித்தும் ஆய்வுசெய்தால் நன்றாக இருக்கும்: ‘இந்திய கம்யூனிஸ்ட்டுகளின் வீழ்ச்சியில் நக்ஸல்களின் பங்கு!’

மோடிக்கு தேசியவாதக் களம் அமைத்துக் கொடுத்தது யார்?


கொல்கத்தா சென்றிருந்த சமயத்தில்தான் ஆர்.எஸ்.எஸ். நடத்திய ‘ஞான சங்க’ மாநாடு அங்கு நடந்திருந்தது. நாட்டின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள், அவர்களில் 51 பேர் பல்கலைக்கழகத் துணைவேந்தர்கள் பங்கேற்ற நிகழ்வு இது. இந்தியாவின் கல்வி, கலாச்சாரத் துறையை, முக்கியமாக வரலாற்றை மாற்றியமைப்பது இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம். ‘’இதுவரை வேட்டைக்காரர்கள் பார்வையிலிருந்து கூறுவதாக இந்திய வரலாறு இருந்தது; இனி அது சிங்கம் சொல்லும் வரலாறாக மாற்றப்படும்’’ என்று பேட்டி அளித்திருந்தார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத். இனி யாரெல்லாம் தேசத்தின் நாயகர்களாகவும் வில்லன்களாகவும் மாற்றப்படுவார்கள் என்றும் இந்தியாவின் தேசியவாதம் எப்படிப்பட்டதாக வடிவமைக்கப்படும் என்றும் மனதில் ஓட ஆரம்பித்தபோது எதிர்காலம் அச்சமூட்டுவதாக மாறத் தொடங்கியது.

தேசியவாதத்தை ஒரு கூர் ஈட்டியாக சர்வாதிகாரிகள் பயன்படுத்துவது உலகெங்கிலும் இயல்பு. இங்கே சங்கப் பரிவாரமும் மோடியும் அதைக் கையில் எடுத்திருப்பதில் ஆச்சரியமில்லை. வளர்ச்சியையும் மதத்தையும் ஒரு பிரகடனம்போலப் பயன்படுத்தினாலும் மோடி தன் கூர் ஈட்டியாக தேசியவாதத்தையே பயன்படுத்துகிறார். தன்னை நோக்கி வரும் எல்லாப் பெரிய விமர்சனங்களையும் அவர் தேசியவாதத்தின் மூலமே எதிர்கொள்கிறார். வரலாற்று நடவடிக்கையான பணமதிப்பு நீக்கம் மக்களைக் கடுமையான வதைக்குள் தள்ளியது. இரண்டு மாதங்களுக்கும் மேல் அன்றாடம் ரூ.2,000 தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து எடுப்பதற்காக வங்கி ஏடிஎம்களின் முன் கால் கடுக்க நின்றார்கள் மக்கள். இந்நடவடிக்கையின் மூலம் அரசு சாதித்தது என்னவென்று இன்று வரை நாட்டுக்குத் தெரியாது. ஆனால், தன்னுடைய நடவடிக்கை நாட்டுக்கு நல்லது என்று மக்களை மோடியால் நம்ப வைக்க முடிகிறது.

ஒற்றை அடையாளத்தை முன்னிறுத்தும், ‘ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம்’ கனவைக் கொண்ட மோடி அரசு தன்னுடைய செயல்திட்டத்துக்கு முன்னோட்டம்போல, ‘ஒரே நாடு.. ஒரே வரி’, ‘ஒரே நாடு.. ஒரே சந்தை’, ‘ஒரே நாடு.. ஒரே தேர்வு’, ‘ஒரே நாடு.. ஒரே தேர்தல்’ என்று இந்த அரசு அடுத்தடுத்து அடியெடுத்துவைக்கும் செயல்திட்டங்கள் ஜனநாயகத்தை நேசிப்பவர்கள் எவரையும் நடுங்கவைக்கின்றன. ஏனென்றால், கூட்டாட்சித் தத்துவப்படி அமைக்கப்பட்ட இந்த நாடு அடிப்படையிலேயே அதன் பல்வேறு வண்ணங்கள், அடையாளங்களாலேயே தனித்துவம் பெறுகிறது. ஆனால், பொதுத் தளத்திலோ பெரிய தாக்கங்களை இவை ஏற்படுத்தவில்லை. எதிர்க்கட்சிகள் கவலையோடு பேசினாலும்கூட சமூகம் அப்படியே கடக்கிறது. எதிர்க்கட்சிகள் இன்னும் கொஞ்சம் அழுத்திப் பேசினால், விமர்சிப்பவர்களை ‘தேச விரோதிகள்’ ஆக்கிவிடுகிறார்கள். ஆனால், இன்று மோடி ஆடுவதற்கேற்ப இந்தியாவின் தேசியவாதக் களத்தை அமைத்துக் கொடுத்ததற்காக, காங்கிரஸும் இடதுசாரிகளுமே முக்கியமான பொறுப்பேற்க வேண்டும் என்று கருதுகிறேன்.

கோயில்களில் என்ன நடக்கிறது?


திரிபுரா சென்றிருந்தபோது, அகர்தலாவிலுள்ள ‘சதுர்தசா தேவதா - 14 தேவதைகள் - கோயிலுக்குச் சென்றிருந்தேன். மன்னர் கிருஷ்ண மாணிக்க தேவ வர்மா காலத்தில் கட்டப்பட்ட கோயிலான இது, திரிபுராவின் புகழ்பெற்ற கோயில்களில் ஒன்று. நண்பர் வீ.பா.கணேசனுடன் உள்ளூர் நண்பர் அதுல் பானிக் உடன் வந்திருந்தார்.

நாங்கள் சென்றிருந்த நாள் அந்த நேரம் ஆச்சரியமாகக் கூட்டம் குறைவு என்று சொல்லிக்கொண்டே கோயிலினுள் அழைத்துச் சென்றார் பானிக். எனக்கு அதைக் காட்டிலும் பெரிய ஆச்சரியம் வேறொன்று அங்கு காத்திருந்தது. கடவுளின் சந்நிதிக்கு முன்னே உட்கார்ந்து சாவகாசமாக சிகரெட் குடித்துக்கொண்டிருந்தார் புரோகிதர். எங்களைப் பார்த்ததும் “இன்னும் நாலு இழுப்புதான்; முடித்துவிட்டு வந்துவிடலாமா?’’ என்று பானிக்கிடம் கேட்டார்.  “ஒன்றும் அவசரம் இல்லை, நாங்கள் காத்திருக்கிறோம்’’ என்றார் பானிக். அப்புறம் என்ன நினைத்தாரோ தெரியவில்லை, புரோகிதர் சிகரெட்டைப் புகையவிட்டபடியே பூஜைக்கு வந்தார். பூஜையை முடித்தார். பிரசாதம் கொடுத்தார். நானும் கணேசனும் எங்கிருந்து வருகிறோம் என்று விசாரித்துவிட்டு, கை குலுக்கினார். நான் அவரிடம் சிகரெட்டைக் காட்டிச் சொன்னேன், “இது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.” அவர் விசேஷமாக எதையும் விளக்க முற்படவில்லை, “இதிலென்ன ஆச்சரியம்! கடவுள் வேறு, நாம் வேறா?” - இப்படிச் சொல்லிவிட்டு அவர் பாட்டுக்கு அடுத்த வேலையைப் பார்க்கப் புறப்பட்டார்.


நான் இந்துவாக வாழ்வதாலேயே மதவாதி ஆகிவிடுவேனா?


ஈசோபநிஷத்தின் முதல் சூத்திரம் காந்திக்குப் பிடித்தமானது.
“ஈசாவாஸ்யமிதம் ஸர்வம் யத்கிஞ்ச ஜகத்யாம் ஜகத்தேன த்யக்தேன புஞ்சீதா மாக்ருத: கஸ்யஸ்வித் தனம்!”
இதற்கான பொருள், “பிரபஞ்சம் எங்கும் காணப்படும் யாவற்றிலும் ஆண்டவன் ஊடுருவி நிற்கிறான். அனைத்தையும் துறந்துவிடு. அதன் பின் அவற்றை அளவோடு துய்த்து மகிழ். பிறர் பொருளுக்கு ஆசைப்படலாகாது!”

ஆன்மரீதியில் பொதுவுடைமைத் தத்துவத்தின் மைய நோக்கத்தோடு எவ்வளவு நெருக்கமாகப் பொருந்தக்கூடிய இரு வரிகள்! ஆனால், இப்போது நான் என்ன செய்ய வேண்டும்? அரசியல்ரீதியில் ஒரு தாராளனாக, மதச்சார்பற்றவனாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றால், ஓர் இந்துவாக இந்த உபநிஷத்தை மறந்துவிட வேண்டுமா அல்லது புறக்கணிக்க வேண்டுமா? ஏனென்றால், இங்குள்ள தாராளர்களின் இன்றைய அளவுகோல்படி நான் ஒரு தாராளனாக, நவீனத்துவனாக, மதச்சார்பின்மையாளனாக இருக்க வேண்டும் என்றால், மதத்தை நான் நிராகரிக்க வேண்டும்!

எத்தனையோ சமயங்களில் பலர் வெளிப்படையாகவே கேட்டிருக்கிறார்கள், “மதச்சார்பின்மை பேசும் நீங்கள் நெற்றியில் விபூதிப் பட்டை போட்டிருப்பது அந்நியமாகக் காட்டுகிறது தோழர்.” நான் சிரித்துக்கொண்டே சொல்வேன், “இந்த நாட்டின் கோடிக்கணக்கான சாமானிய மக்களையே நான் பிரதிபலிக்கிறேன். மத அடையாளத்தைச் சூடியிருப்பதாலேயே அவர்கள் அத்தனை பேரையும் மதவாதிகளாக்கிவிட முடியுமா!”

சர்வாதிகார ஆட்சிக்கு முகங்கொடுக்க எத்தனை கட்சிகள் தயார்?


டெல்லியிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா நேற்று பேசினார். “முன்பு தாராளர்கள், இடதுசாரிகள் தரப்பிலுள்ள குறைகளை ஹசன் சரூர் அக்கறையோடும் உரிமையோடும் ‘தி இந்து’ ஆங்கில நாளிதழில் விமர்சித்து எழுதுவார். இப்போது ‘தி இந்து’ தமிழில் நீங்கள் அப்படி எழுதுகிறீர்கள். ஆக்கபூர்வ விமர்சனங்கள்தான் அடுத்த தளத்துக்குக் கொண்டுசெல்லும். வாழ்த்துகள்!”

தமிழகத்தின் முன்னணித் தலைவர்கள் பலரும் தொடர்புகொண்டு பேசினார்கள். அதேசமயம்,  ‘சங்கப் பரிவாரங்களின் பலத்தை எழுதுவதன் மூலம், அதன் எதிரேயுள்ள இயக்கங்களை நம்பிக்கை இழக்கச் செய்கிறீர்கள்’ என்ற தொனியிலான மின்னஞ்சல்களும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் தொண்டர்கள் பலரிடமிருந்தும் வந்திருந்தன.

ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திவிட நினைக்கிறேன். நாடு மிக நெருக்கடியான ஒரு காலகட்டத்துக்குள் நுழைந்துகொண்டிருக்கிறது. பன்மைத்துவம் நொறுங்குகிறது. பாஜகவின் அசாதாரண வெற்றிகளுக்கான ஒரே காரணம் மோடி என்று நம்ப விரும்புவது ஒருவகையில் பாஜகவின் பிரச்சார வலையில் சிக்கிக்கொள்வதுதான். மோடி வெற்றியின் குறியீடு அல்ல; மாறாக, தாராளர்களின் பல்லாண்டு காலத் தோல்விகளின் திரட்சியின் குறியீடு. சங்கப் பரிவாரங்களின் உழைப்பு, மோடியின் ஆளுமை இவை எல்லாவற்றையும் தாண்டி, மோடியின் வெற்றியில் காங்கிரஸின் குடும்ப அரசியலுக்கும் மக்களால் சகித்துக்கொள்ளவே முடியாத அதன் ஊழல்களுக்கும் பங்கிருக்கிறது. ஒரு மாற்றுத் தலைமையையும் மாற்றுப் பொருளாதாரக் கொள்கையையும் மக்களிடம் கொண்டுசெல்லத் தவறிய கம்யூனிஸ்ட்டுகளுக்குப் பங்கிருக்கிறது. தம்முடைய பதவி, அதிகாரத்துக்காக எல்லாவற்றையும் பறிகொடுத்து நிற்கும் மாநிலக் கட்சிகளுக்குப் பங்கிருக்கிறது. முக்கியமாக வெகுமக்களிடம் பேசும் மொழியை இன்று தாராளர்கள் இழந்து நிற்கிறார்கள். மோடி அலை என்று சொல்லப்படும் வெகுமக்கள் திரளை உண்மையில் இன்று எதிர்த் தரப்பில் இருப்பவர்களே திரட்டித் தருகிறார்கள். மோடியைத் திட்டித் தீர்ப்பதன் வாயிலாக மட்டுமே தாராளர்கள் தம் பொறுப்புகளிலிருந்தும் தவறுகளிலிருந்தும் தப்பித்துக்கொள்ள முடியாது.

தமிழகப் பள்ளிக்கல்வித் துறை உடனடியாக செய்ய வேண்டிய 5 மாற்றங்கள் என்ன?


தமிழகக் கல்வித் துறையை மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு (நீட்) விவகாரம் நடுத்தெருவில் நிறுத்திவிட்டிருக்கிறது. அறிக்கைகள், பிரதமருக்கு அனுப்பும் கடிதங்களைத் தாண்டி இந்த விவகாரத்தில் ஆர்வம் காட்ட முதல்வர் பழனிசாமியோ, அவர் சார்ந்திருக்கும் அதிமுகவோ தயாராக இல்லை. 98% மாணவர்கள் மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் படித்துவரும் ஒரு மாநிலத்தில், மத்தியப் பாடத்திட்டத்தின் அடிப்படையிலான இத்தேர்வு எவ்வளவு அப்பட்டமான திணிப்பு என்பதை எதிர்த்து எதிர்க்கட்சிகளாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை. கல்வி பகிரங்கமாக மாநிலங்களின் அதிகாரத்திலிருந்து மத்திய அரசால் பறிக்கப்படுகிறது. மறுபக்கம், மாநிலத்தின் அதிகாரவசம் இருக்கும்  கல்வியின் தரம் நாளுக்கு நாள் எவ்வளவு மோசமடைந்துவருகிறது என்பதற்கு, நம்முடைய அரசுப் பள்ளி மாணவர்களின் தரம் ஒரு சாட்சியமாக நிற்கிறது. கடந்த இரு ஆண்டுகளில் மருத்துவப் படிப்புகளில் சேர்ந்திருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களின் விவரம் இது: 2014-15-ல் 37 பேர். 2015-16-ல் 24 பேர். மருத்துவக் கல்விக்குத் தேர்வாகும் 95% மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்கள்.

ஆட்சியாளர்களே கல்வி வியாபாரிகளாகவும் தரகர்களாகவும் மாறியிருக்கும் நாட்டில், மத்திய அரசு, மாநில அரசு இரண்டோடும் போராட வேண்டிய நிலையில் இருக்கிறோம். கல்வித் துறையில் ஒரு பெரிய அறுவைச் சிகிச்சைக்குத் தயாரானால் மட்டுமே அதிகாரப் பறிப்பில் ஈடுபட்டிருக்கும் மத்திய அரசை இனி தமிழக அரசு தார்மிகரீதியாக எதிர்கொள்ள முடியும். ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஆளும் அதிமுகவுக்குள் நடக்கும் அதிகாரச் சண்டை அரசின் பெரும்பாலான துறைகளை முடக்கியிருக்கும் நிலையில், விதிவிலக்காகப் பள்ளிக்கல்வித் துறையில் சலனங்கள் தெரிகின்றன. ஒரு பெரிய மாற்றத்துக்கான நீண்ட காலச் செயல்திட்டத்துடன் களமிறங்க வேண்டிய தமிழகப் பள்ளிக்கல்வித் துறை உடனடியாக மேற்கொள்ள வேண்டிய ஐந்து சீர்திருத்தங்கள் என்னென்ன?

மோடி உலகமயமாக்கலின் ஏக பிரதிநிதியானதில் கம்யூனிஸ்ட்டுகளின் பங்கு என்ன?


சென்னையிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைமையகத்தைக் கடக்கும்போதெல்லாம் நினைத்துக்கொள்வேன். எவ்வளவு பேருடைய உழைப்பும், தியாகமும் இன்று அர்த்தமற்ற ஒரு வெளிக்கூடாக உருமாறிவிட்டன! நடிகர் சிவாஜி கணேசன் வீட்டிற்குப் போகும் வழியில் உள்ள அந்தக் கட்டிடத்துக்கு, “கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம்” என்று வழி கேட்டு எங்கிருந்தேனும் ஒரு கிராமத்து விவசாயி வந்தால், அந்தக் கட்டிடத்தைப் பார்த்த மாத்திரத்தில் குழம்பிப்போவார். முழுக்க கார்ப்பரேட் அலுவலகப் பாணியில் கட்டப்பட்ட கட்டிடம். வெளியே கட்சியின் பெயர்ப் பலகைகூடக் கிடையாது. மாறாக, சர்வதேச சுற்றுலாக்களை ஏற்பாடு செய்யும் கார்ப்பரேட் நிறுவனமான ‘தாமஸ் குக்’ நிறுவனத்தின் பெயர்ப் பலகை இருக்கும். அந்த ஏழு மாடிக் கட்டிடத்தில் வாடகைக்கு இயங்கும் நிறுவனங்களில் அதுவும் ஒன்று. காந்திய அறிஞரும் நண்பருமான அண்ணாமலையிடம் இந்தியாவில் கம்யூனிஸ்ட்டுகளின் வீழ்ச்சி தொடர்பில் ஒருநாள் பேசிக்கொண்டிருக்கையில், அவர் கேட்டார், “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டிடத்திற்கும் ரிலையன்ஸ் அலுவலகத்தின் கட்டிடத்திற்கும் என்ன வேறுபாட்டை வெளியே மக்கள் உணருவார்கள்?”

ஆர்எஸ்எஸ்ஸின் ஆயிரம் முகங்கள்!


நண்பரின் வீட்டுக்குப் பக்கத்தில் சில மாதங்களுக்கு முன் ஒரு பூங்கா திறந்திருக்கிறார்கள். திறந்த மறுநாளே ஆச்சரியம், பல நூறு பேர் காலையில் உடற்பயிற்சிக்கு வர ஆரம்பித்திருக்கிறார்கள்! அடுத்த சில நாட்களிலேயே இரு இளைஞர்கள் யோகா பயிற்சி அளிக்க வந்திருக்கிறார்கள். நண்பரின் பிள்ளைகள் அவரிடம் வந்து கேட்டபோது, “சரி, நீங்களும் யோகா வகுப்பில் சேர்ந்துகொள்ளுங்கள்!” என்று சொல்லியிருக்கிறார். சில வாரங்கள் கழித்து அந்த இளைஞர்கள் சொன்ன கருத்துகளைக் குழந்தைகள் சொன்னபோது, வந்திருப்பவர்கள் யார் என்பதை நண்பர் புரிந்துகொண்டார்.

என்ன சொல்வது! ஜனநாயகக் களம் என்பது எண்ணிக்கைப் பெரும்பான்மையால் தீர்மானிக்கப்படுவது. காலத்துக்கேற்ப மக்களின் தேவைகளையும் மனப்போக்கையும் சமூகத்தின் கலாச்சார மாறுபாடுகளையும் உள்வாங்கிக்கொள்ளும் அரசியல் அமைப்புகளே அதிகாரத்தை வசப்படுத்த முடியும். மக்கள் மத்தியில் பணியாற்றுவோருக்கு, முக்கியமாக, தன்னார்வப் பணியில் ஈடுபடுத்திக்கொள்வோருக்கு இந்திய அரசியல் அரங்கில் எப்போதுமே ஒரு செல்வாக்கு இருக்கிறது. பெரும்பான்மை மக்கள் இங்கே சித்தாந்தங்கள், நோக்கங்கள் வாயிலாக அரசியல் இயக்கங்களை அணுகுவதில்லை. மனிதர்களின் வெளிப்புறத் தோற்றங்கள், காரியங்கள் வாயிலாகவே இயக்கங்களைப் புரிந்துகொள்கிறார்கள். காந்தி ஆக்கபூர்வமான அரசியல் உத்தியாக அறப்பணிகளைக் கையாண்டார். ஆர்எஸ்எஸ் அபாயகரமான அரசியல் கணக்குகளோடுஅதே காய்களை நகர்த்துகிறது. ஏனைய இயக்கங்கள் எல்லாம் எந்த அளவுக்கு இதன் முக்கியத்துவத்தைக் கவனத்தில் எடுத்துக்கொண்டிருக்கின்றன என்றே தெரியவில்லை.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் மிகப் பெரிய பலம், அது நாடு முழுக்க நடத்திக்கொண்டிருக்கும் 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட செயல்திட்டங்கள். அதன் அதிகாரபூர்வமற்ற ஷாகாக்கள் இவை. வெளியில் ஒன்றோடு ஒன்று தொடர்புபடுத்த முடியாத அவற்றின் முகங்கள். அது பள்ளிக்கூடமாக இருக்கலாம், முதியோர் இல்லமாக இருக்கலாம், மடமாக இருக்கலாம், கோயில் வழிபாட்டு மன்றமாக இருக்கலாம், யோகா பயிற்சிக் கூடமாக இருக்கலாம், தொழிலாளர் சங்கமாக இருக்கலாம், மாணவர் பேரவையாக இருக்கலாம்… எல்லாமே நேரடி அரசியல் தொடர்புடையவையாக இருக்க வேண்டியதில்லை. ஆனால், அவை உருவாக்கும் கலாச்சாரம் ஒரே தன்மையிலானது. அடிப்படையில் ஏதேனும் ஒரு புள்ளியிலேனும் இணைந்து பெரும்பான்மை மக்களை ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒரே குடைக்குள் கொண்டுவருவது.

உத்தர பிரதேச முதல்வராக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்ற நாட்களில், என்னுடைய வாராணசி பயணம் அமைந்தது இன்றைய போக்கைப் புரிந்துகொள்ள ஒருவகையில் கூடுதல் உதவியாக அமைந்தது என்று சொல்லலாம். யோகி ஆதித்யநாத் இன்று அடைந்திருக்கும் இடமும் அவருடைய கடந்த கால வரலாறும் எனக்குள் நிறையக் கேள்விகளை எழுப்பியிருந்தன. கோரக்நாத் மடாதிபதியாக ஆதித்யநாத் 22 வயதில் பொறுப்பேற்கிறார். 1998-ல் முதல் முறையாக மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்படும்போது அவருடைய வயது 26. இப்போது 44 வயதில் நாட்டிலேயே பெரிய மாநிலத்தின் முதல்வர். இடைப்பட்ட 18 ஆண்டுகளில் தொடர்ந்து வெற்றிகள். 5 முறை மக்களவை உறுப்பினர். எல்லாமே பெருவாரி வாக்குகள் வித்தியாசத்தில். அப்பட்டமான ஒரு வெறுப்பரசியல்வாதி எப்படி திரும்பத் திரும்ப ஜெயிக்கிறார்?

மேலே நிற்கும் மோடியை அல்ல; கீழே பரவும் ஷாகாக்களைக் கவனியுங்கள்!


கொல்கத்தாவில் ஏதோ ஒன்று இருக்கிறது. உண்மையில் அது ஏதோ ஒன்று அல்ல. அங்கிருக்கும் எல்லாமும் கூடிக் கொடுக்கும் உணர்வு! அது சாலை நடைபாதையில் தொழிலாளர்கள் சர்வ சாதாரணமாகக் கூடி உட்கார்ந்து கேரம் விளையாடிக்கொண்டிருப்பதாக இருக்கலாம், வீதிகளில் வீடுகளுக்கு முன் ஆங்காங்கே மரத்தடிகளில் உட்கார்ந்து ஆண்-பெண் வேறுபாடின்றி பேசிக்கொண்டிருப்பதாக இருக்கலாம், பத்து ரூபாய்க்கு பூரி - சப்ஜி கிடைப்பதாக இருக்கலாம், பூங்காக்களில் ஒருவர் மடியில் ஒருவர் சாய்ந்தபடி குவிந்து கிடக்கும் காதல் ஜோடிகளை யாரும் வேடிக்கை பார்க்காமல், அவரவர் வேலையைப் பார்த்தபடி மக்கள் கடப்பதாக இருக்கலாம், நடைபாதை டீக்கடைகளில் தென்படும் இளைஞர் கூட்டத்தில் எந்த மாச்சரியமும் இல்லாமல் பசங்களுக்கு இணையாகப் பெண் பிள்ளைகளும் ஒரு கையில் சிகரெட், ஒரு கையில் டீ கிளாஸ் சகிதம் உட்கார்ந்து விவாதித்துக்கொண்டிருப்பதாக இருக்கலாம், ஓடும்போதே ஏறி இறங்கும் வேகத்தில் இயங்கும் டிராம் வண்டிகளாக இருக்கலாம், இவற்றையெல்லாம் பார்க்கும்போது எழும் சுதந்திர உணர்வு அது உண்டாக்கும் மனஎழுச்சி இருக்கிறதே… இந்தியா கிழக்கிலிருந்துதான் அதிகம் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது! இந்தச் சுதந்திர உணர்வை அனுபவிப்பதற்காகவே வருடத்துக்கு இரு முறையேனும் கொல்கத்தா ஓடிவிட வேண்டும் என்று நினைப்பதுண்டு. இந்தப் பயணத்தின்போதும் கொல்கத்தா சென்றிருந்தேன். ஆறு மாதங்களுக்குள் எவ்வளவு மாற்றங்கள்! இந்தியா வேகவேகமாக மாறிக்கொண்டிருப்பதை கொல்கத்தாவில்தான் முதல் முறை உணர்ந்தேன்!

மோடியின் காலத்தை உணர்தல்


வாராணசியிலிருந்து புறப்பட்ட பாடலிபுத்திரா எக்ஸ்பிரஸ் சென்னையை நெருங்க இன்னும் கொஞ்ச தூரம் இருந்தது. குளிர்சாதன வசதியையும் தாண்டி வெயிலின் சூடு ரயிலுக்குள் தகித்தது. பெட்டிபடுக்கையைச் சரிசெய்தபடி தயாரானேன். இந்திய மக்களின் மனதை அறிய, பயணங்கள், குறிப்பாக ரயில் பயணங்களைப் போல ஒரு வழி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. முந்தைய பயணங்களைப் போல இது நெடுநாளைய பயணம் இல்லை என்றாலும், இன்றைய இந்திய அரசியலின் போக்குகளைத் தீர்மானிக்கும் திசைகளைத் தொட முடிந்த வகையில் என்னளவில் இதுவும் ஒரு முக்கியமான பயணம். எதிரே உட்கார்ந்திருந்த கன்னடக் குடும்பத்துக்கு நன்றி சொல்லிவிட்டுப் புறப்பட்டேன். அவர்கள் பெங்களூரு செல்கிறார்கள். “கர்நாடகம் இன்னும் எவ்வளவு காலத்துக்குக் கன்னடியர்களின் நிலமாக இருக்கும் என்று தெரியவில்லை; ரொம்ப சீக்கிரம் சிதறடித்துவிடுவார்கள் என்று அஞ்சுகிறேன்” என்று முன்னதாகப் பேசிக்கொண்டிருந்தபோது குறிப்பிட்டார் அந்தக் குடும்பத்தின் பெரியவர். ஒவ்வொரு மாநிலத்திலும் இன்று ஒவ்வொரு விதமான பிரச்சினைகள். யாரும் உள்ளுக்குள் பேசிக்கொள்ள முற்படுவது இல்லை. நான் புறப்பட்டபோது அந்தப் பெரியவர் கையைப் பிடித்து அணைத்துக்கொண்டார்.

பாய்ந்து வரும் காற்றுக்கு முகங்கொடுத்தபடி கதவோரத்தில் நின்றிருந்தேன். ரயில் வேகமாகச் சென்னையின் எல்லைக்குள் நுழைந்துகொண்டிருந்தது. இந்தியாவில் 30 மாநிலங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு ஆண்டும் இவற்றில் ஏதோ சில மாநிலங்களில் தேர்தல்கள் நடந்தபடிதான் இருக்கின்றன. என்றாலும், நாட்டிலேயே அதிகமான மக்கள்தொகையைக் கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் 325/403 என்ற பிரம்மாண்டமான பெரும்பான்மையுடன் பாஜக கூட்டணி அடைந்திருக்கும் சமீபத்திய வெற்றியை அப்படிப் பத்தோடு ஒன்றாகக் கடந்து செல்ல முடியுமா?

ஆங்கிலத்துக்காகத் தமிழகம் இன்னொரு மொழிப் போர் நடத்த வேண்டுமா?


கல்லூரி மாணவர்களுடனான உரையாடல்களின்போதெல்லாம், நான் சில கேள்விகளைக் கேட்பது வழக்கம். அவற்றில் கட்டாயம் இடம்பெறும் ஒரு கேள்வி: “மொழிப் போர் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” மாணவர்களின் பதில் பெரும்பாலும் இப்படியிருக்கும். “தமிழகத்தின் நலனுக்காக, இந்திக்கு எதிராக நாம் நடத்தியது!”

நான் சொல்வேன், “தம்பி, தங்கைகளே... அது இந்திக்கு எதிராக நடத்தியது அல்ல, இந்தி ஆதிக்கத்துக்கு எதிராக நடத்திய போராட்டம். தமிழ்நாட்டின் நலனுக்காக மட்டும் நடத்தப்பட்டது அல்ல, உண்மையில் இந்தி பேசாத ஒவ்வொரு மாநிலத்துக்காகவும் நடத்தப்பட்டது, ஆங்கிலத்திற்காக நடத்தப்பட்டது! இந்நாட்டில் இன்றைக்கு ஆங்கிலம் நீடிக்கிறது என்றால் அது தமிழகம் நடத்திய போராட்டத்தினால்தான். அரசியலமைப்புச் சட்டம் 1950-ல் தீர்மானிக்கப்பட்டபோது, நாட்டினுடைய ஒரே அலுவல் மொழி இந்தி என்று முடிவெடுத்துவிட்டார்கள். அப்படியென்றால் என்ன அர்த்தம்? ரயில் நிலையத்திற்குப் போகிறோம். அங்கே பெயர்ப்பலகையில் இந்தி மட்டுமே இருக்கும். வங்கிகளுக்குப் போகிறோம். படிவங்களில் இந்தி மட்டுமே இருக்கும். நாடாளுமன்றத்தில் இந்தியில்தான் பேச முடியும். அப்படியென்றால், நாட்டின் 60% மக்கள், இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்தவர்களின் நிலை என்ன? ஒரே நாளில் அவ்வளவு பேரையும் இரண்டாந்தரக் குடிமக்களாக்கும் ஏற்பாடு இல்லையா இது? இதை எதிர்த்து நம் முன்னோர் போராடினார்கள். இந்தி பேசாத மக்களின் நலனுக்காக, கூடுதல் அலுவல் மொழியாக ஆங்கிலத்தையும் பயன்படுத்த வேண்டும் என்று கோரினார்கள். போராட்டத்தின் விளைவாக, எண்ணற்றோரின் உயிர்த் தியாகத்தின் விளைவாக ஆங்கிலமும் அலுவல் மொழியானது. ஆனால், இன்றைக்கும் அந்த ஏற்பாடு ஊசலாடும் நிலையில்தான் இருக்கிறது!”

சம்பாரண் சத்தியாகிரகம்: இந்தியப் புரட்சியின் நூற்றாண்டுகள்!


பிஹாரைக் கடக்கும்போதெல்லாம் ஒருமுறையேனும் சம்பாரண் போய்வர வேண்டும் என்று நினைத்துக்கொள்வேன். சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. “மத்த ஊர் மாதிரி இல்ல. எல்லாத்துக்கும் தயாரா வரணும். தங்கணும். அப்படி வந்தா, எருமை வண்டிக்குச் சொல்லிடலாம்” என்று சிரிப்பார்கள் நண்பர்கள். நாட்டின் பின்தங்கிய பிராந்தியங்களில் ஒன்று சம்பாரண். நேபாள எல்லையையொட்டி இருக்கிறது. மேற்கு சம்பாரண், கிழக்கு சம்பாரண் என்று இரு மாவட்டங்களாகப் பிரித்திருக்கிறார்கள். அப்படிப் பிரித்தும் பிஹாரில் பாட்னாவுக்கு அடுத்து ஜனத்தொகை மிகுந்த மாவட்டங்கள் அவைதான். ஒவ்வொரு மாவட்டத்திலும் 39 லட்சம் பேர் இருக்கிறார்கள். 90% கிராமவாசிகள். எழுத்தறிவு விகிதம் இன்னும் 60%-ஐத் தொடவில்லை. பெரும்பான்மையோர் பேசும் மொழி போஜ்புரி. மோசமான அடிப்படைக் கட்டமைப்புகள். ரசாயனம் மிகுந்த நிலத்தடிநீர். தூசு. குப்பை. சாக்கடை. வறுமை.வேலைவாய்ப்பின்மை. எல்லாம் சேர்ந்து இயல்பாக ஆயுததாரிகளை உருவாக்கியிருக்கிறது. இன்றைக்கு மாவோயிஸ்ட்டுகள் ஆதிக்கம் செலுத்தும் சிவப்புப் பிராந்தியத்தில் சம்பாரணும் ஒன்று. “எருமை வண்டிகளே போக லாயக்கில்லாத சாலைகளில் பயணிக்கும் திராணி இருந்தால்தான் நீங்கள் சம்பாரண் வர முடியும்” என்பார்கள் நண்பர்கள்.

இப்படிப்பட்ட பகுதியில் இன்றைக்கு நூறு வருடங்களுக்கு முன் எப்படி காந்தி பயணித்தார்? இங்குள்ள விவசாயிகளை எப்படி ஒருங்கிணைத்தார்? இந்தியாவின் முதல் சத்தியாகிரகப் போராட்டத்தை இங்கே எப்படி வெற்றிகரமாக நடத்தினார்? சம்பாரணை நினைக்கும்போதெல்லாம் இந்தக் கேள்விகள் வந்து போகும். தென்னாப்பிரிக்காவிலிருந்து 1915-ல் இந்தியா திரும்பிய காந்தி, இங்கு நடத்திய முதல் பெரும் சத்தியாகிரகப் போராட்டம் மட்டும் அல்ல அது; ஒரு அசலான அறப்போராட்டத்துக்கான என்றென்றைக்குமான முன்னுதாரணம்.

அரசியல் பணமயமாதல் ஒரு தேசிய பிரச்சினை... ஆர்கே நகர் அதன் எல்லை அல்ல!


தேர்தல் ஆணையம் ‘ஆர்.கே. நகர் தொகுதி தேர்தல் ரத்து’ என்று அறிவித்தபோது, உடைந்து உட்கார்ந்தவர்களில் எங்களுடைய புகைப்படக்காரரும் ஒருவர். ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி. அவருடைய மரணத்துக்குப் பின் ஆளும் அதிமுக இரண்டாகிவிட்ட நிலையில், அடுத்து கட்சியின் லகான் யார் கையில் என்பதையும் தீர்மானிக்கும் காரணிகளால் ஒன்றாக இந்த இடைத்தேர்தல் மாற்றப்பட்டிருந்தது. விளைவாக, தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே ஊடகர்கள் பெரும் அலைச்சலில் இருந்தார்கள். இனி ஒரு இடைவெளி விட்டு, தேர்தல் அறிவிக்கப்பட்டதும் திரும்பவும் அலைய வேண்டும். தேர்தல் ஏற்பாட்டில் ஈடுபட்டிருந்த அரசு அலுவலர்கள், களத்தில் நிற்கும் 62 வேட்பாளர்களில் பெரும்பாலான சிறிய கட்சிகள் / சுயேச்சை வேட்பாளர்களின் நிலையும் இதுதான். திரும்பவும் செலவழிக்க வேண்டும், திரும்பவும் அலைய வேண்டும். மாறாக, யாரை முன்வைத்துத் தேர்தலை ரத்துசெய்திருக்கிறார்களோ அவர்களுக்கு இதனால் பெரிய பாதிப்புகள் ஏதும் கிடையாது; இன்னும் சொல்லப்போனால், கூடுதல் அனுகூலம். இப்படியான அமைப்பை எப்போது மாற்றப்போகிறோம்?

தொகுதிக்குள் நான் ஒரு சுற்று சுற்றி வந்தேன். ஒரு ஓட்டுக்கு ரூ.7,000 கிடைப்பதாகச் சொன்னார்கள். ஆளுங்கட்சியின் ஒரு பிரிவின் சார்பில் ரூ.4,000; இன்னொரு பிரிவின் சார்பில் ரூ.3,000. பல இடங்களில் பிரதான எதிர்க்கட்சியின் சார்பிலும் ரூ.2,000 போயிருக்கிறது. “ஜெயலலிதாம்மா தேர்தல்ல நின்னப்பவே ரெண்டு முறையும் பணம் கொடுத்தாங்களே, இப்பம் என்ன எல்லாம் ஏதோ புதுசா நடக்குற மாதிரி பேசுறாங்க?” என்று ஒருவர் என்னிடம் கேட்டார்.

ஓட்டுக்குப் பணம் கொடுப்பதைப் பற்றி அதிமுகவினரிடம் கேட்டால், அவர்கள் ‘திருமங்கலம் ஃபார்முலா’ என்று சொல்லி திமுகவை நோக்கிக் கை காட்டுவார்கள். திமுகவினரைக் கேட்டால், “காமராஜர் ஆட்சிக் காலத்திலேயே ஓட்டுக்கு அரையணா காசு கொடுக்கும் கலாச்சாரம் இருந்ததே!” என்பார்கள். எல்லாவற்றுக்குமே ஒரு வரலாற்றுத் தொடர்ச்சி இருக்கிறது. அதனாலேயே அசிங்கங்களைத் தொடர்ந்து நியாயப்படுத்திக்கொண்டிருக்கவும் முடியாது. உண்மையில், இந்திய ஜனநாயகம் எதிர்கொள்ளும் நாள்பட்ட ஒரு புற்றுக்கட்டியின் சீழையே ஆர்.கே.நகர் தொகுதி வெளிப்படுத்துகிறது. ஆனால், அதை வெறும் கண் துடைப்பு நடவடிக்கைகளால் மறைத்து, புனுகுத் தைலம் பூசி இதுகுறித்த விவாதத்தைத் தமிழக எல்லையோடு, சுருக்கிவிட முற்படுகிறது இந்திய அரசு.


அய்யாக்கண்ணு ஆடி கார் வைத்திருந்தால்தான் என்ன பிரச்சினை?


தமிழ்நாடு சம்பந்தமான கோரிக்கைகளோடு, டெல்லியிலுள்ள அரசப் பிரதிநிதிகளை இங்குள்ளோர் சந்திக்கச் செல்கையில், எங்கள் டெல்லி செய்திப் பிரிவைத் தொடர்புகொண்டு “கொஞ்சம் விசேஷ கவனம் கொடுங்கள்” என்று கேட்டுக்கொள்வது வழக்கம். டெல்லி செய்தியாளர் ஷஃபி முன்னா, விவசாயிகளைப் பொறுத்தமட்டில் கூடுதலான அக்கறை எடுத்துக்கொண்டு உதவக் கூடியவர். அவர்களுடனான அனுபவங்களை அவர் சொல்லும்போது மிகுந்த வலி உண்டாகும்.  “டெல்லி நிலவரம் அரசியல் கட்சிக்காரர்களுக்கு நன்றாகத் தெரியும். அதற்கேற்ப சூதானமாக நடந்துகொள்வார்கள். விவசாயிகளின் நிலைமை அப்படி அல்ல. இவ்வளவு பெரிய நகரத்தில், பல்லாயிரக்கணக்கில் கூடாமல், தேசியக் கட்சிகள், ஊடகங்களின் கவனத்தை ஈர்ப்பது சுலபமல்ல. நாடாளுமன்ற வளாகம், பிரதமர் – அமைச்சர்கள் வீடுகள், காங்கிரஸ், பாஜக அலுவலகங்கள் அமைந்திருக்கும் ‘லூட்டியன்ஸ் டெல்லி’ பகுதியில் பலத்த பாதுகாப்பு இருக்கும். கையில் கொடியுடனோ, பதாகைகளுடனோ போராட்டக்காரர் தோரணையில் யாராவது தென்பட்டாலே, சாலையில் வரிசையாக நிற்கும் பாதுகாப்புப் படையினர் அவர்களைப் பிடித்து ஜந்தர் மந்தருக்கு அனுப்பிவிடுவார்கள். ஜந்தர் மந்தர் சூழல்தான் உங்களுக்குத் தெரியுமே, அங்கே போனால், அங்குள்ள சூழலைப் பார்த்து வெறுத்துப் போய் ஊருக்குத் திரும்பும் மனநிலை தானாக வந்துவிடும். பாவம் எவ்வளவோ சிரமங்களுக்கு இடையில்தான் இங்கே வந்து போராடுகிறார்கள்” என்பார் ஷஃபி முன்னா.

அடுத்த நூற்றாண்டுக்கான திராவிட இயக்கம் எப்படி இருக்க வேண்டும்?


ஒரு புதிய யுகத்துக்குள் நுழைந்துகொண்டிருக்கிறது இந்தியா. இந்தப் புதிய யுகத்தின் பெரும்பான்மை தேசிய அரசியல் அலையை எதிர்கொள்ள மாநிலக் கட்சிகள் ஒவ்வொன்றின் எதிர்கால உத்தியிலும் மாற்றம் தேவைப்படுகிறது. குறிப்பாக, சமூகங்களை ஒருங்கிணைப்பதில்.

தமிழகத்தில் திராவிட இயக்கம், குறிப்பாக இரு திராவிடக் கட்சிகளும் தொடர்ந்து செல்வாக்கோடு நிற்க அவை இதுநாள் வரை மேற்கொண்டுவந்திருக்கும் மாற்றங்களுக்கு முக்கியமான பங்கு உண்டு. கடவுள் மறுப்பை முன்வைத்து வளர்ந்த மரபில் வந்த அண்ணா ‘‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’’ என்றதும் ‘‘நாங்கள் மதச்சார்பற்றவர்கள்; அதேசமயம் மதத்துக்கு எதிரிகள் அல்ல’’ என்றதும் அதன் போக்கில் நடந்த பெரும் மாற்றம். அங்கு தொடங்கி உலகமயமாக்கலை எல்லோருக்கும் முந்தி வரித்துக்கொண்டது வரை எவ்வளவோ மாற்றங்களைத் திராவிடக் கட்சிகள் தொடர்ந்து சுவீகரித்துவந்திருக்கின்றன.

திராவிட இயக்கம் நூற்றாண்டைக் கடந்து, திராவிடக் கட்சிகளின் ஆட்சி தமிழகத்தில் அரை நூற்றாண்டைக் கடந்திருக்கும் நிலையில், அடுத்த நூற்றாண்டுக்கேற்ப அவை எப்படித் தம்மைத் தகவமைத்துக்கொள்வது? சமூகங்களை அணுகுவதில் மூன்று முக்கியமான மாற்றங்களுக்கு அவை முகம் கொடுக்க வேண்டும் என்று தோன்றுகிறது!

ஆமாம், குற்றவுணர்விலிருந்து மக்களை விடுவிக்கிறேன் - ஜக்கி வாசுதேவ்


கோவை, வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்திருக்கும் ‘ஈஷா ஆஷ்ரம்’ பிரம்மாண்டமான ஒரு தனி உலகமெனக் காட்சியளிக்கிறது. ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கானோர் குவிகின்றனர். “இரண்டு லட்சம் பேருக்குச் சமைக்கும் வசதி இங்குண்டு” என்கிறார் ஆசிரமச் சமையலறையின் பொறுப்பாளர். மகா சிவராத்திரி அன்று பத்து லட்சம் பேர் கூடுகிறார்கள். நாட்டின் பிரதமரில் தொடங்கி பல மாநிலங்களின் முதல்வர்கள், அமைச்சர்கள், முன்னணித் தொழிலதிபர்கள் எனப் பல்வேறு உயர் தரப்புகளையும் தன் தொடர்பு வட்டத்தில் வைத்திருக்கும் அதன் குரு ஜக்கி வாசுதேவ் பறந்துகொண்டிருக்கிறார். நான் சந்திப்பதற்கு முதல் நாள் சென்னையில், அன்றைய தினம் கோவையில், மறுநாள் ஆமதபாத்தில், அடுத்த நாள் மும்பையில், அடுத்தடுத்த நாட்கள் துபையில் என்று விரிகிறது அவருடைய பயணத் திட்டம். ஒரு முழு நாள் தங்கி இரு அமர்வுகளில் அவருடன் நடத்தப்பட்ட உரையாடல் இது.