புதிய கொள்ளைநோய்


                                          தஞ்சாவூரின் பிரபல தனியார் மருத்துவமனை அது. பரபரப்பான அந்த மருத்துவமனையின் தனி அறை ஒன்றில் அலறுகிறார்  ராஜப்பா. ஒரு மாதத்துக்கு முன், சாதாரண சளித் தொந்தரவு வந்தது ராஜப்பாவுக்கு. மருத்துவரைச் சென்று பார்த்தார். மருத்துவர் தந்த மருந்துகளை எடுத்துக்கொண்டார்.ஆனால், எப்போதும்போல சளி குணமாக வில்லை. வாரங்களைத் தாண்டி நீடித்தது. சில நாட்களுக்கு முன் அவருடைய வயிறு வீங்க ஆரம்பித்தது. சிறுநீர் பிரியவில்லை. மலம் கட்டிக்கொண்டது. தொடர்ந்து வாந்தியெடுக்க ஆரம்பித்தார். இப்போது அவருடைய சிறுநீரகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக முடங்கிக்கொண்டு இருக்கின்றன. மருத்துவர்கள் செய்வதறியாது நிற்கிறார்கள்.  ராஜப்பாவுக்கு அப்படி என்ன வியாதி? எது அவரை இந்த நிலைக்குத் தள்ளியது? இது ஒரு புது வகைக் கோளாறு. மருந்து எதிர்ப்புச் சக்திப் பிரச்னை (Drug resistant problem) என்று இதற்குப் பெயர். அதாவது, அதீதமான மருந்துப் பயன்பாட்டால், ஒரு கட்டத்தில் மருந்துகளையே ஏற்காத நிலையைக் கொஞ்சம் கொஞ்சமாக உடல் அடையும் நிலை. இது ஒரு பக்கம். இன்னொரு பக்கமும் உண்டு. மருந்துகளின் வீரியத்தால் உடல் உறுப்புகள் முடங்கிச் சிதைவது.

இதுவும் தேசிய அவமானம்தான்!

ரு வரலாற்றுச் சாதனை இது. நிகழ்த்தியவர்கள்... நம்  இந்திய விவசாயிகள். வரலாறு பார்த்திராத  அளவுக்குக் கடந்த நிதி ஆண்டில் நாட்டின் உணவு தானிய உற்பத்தி 25.26 கோடி டன்னாக உயர்ந்து இருக்கிறது. குறிப்பாக, அரிசி உற்பத்தி 10.34 கோடி டன்; கோதுமை உற்பத்தி 9.23 கோடி டன்.
விவசாயிகளுக்காகத் துரும்பையும் இழக்க விரும்பாத ஓர் அரசாங்கத்துக்கு இப்படிப்பட்ட ஒரு செய்தி எவ்வளவு மகிழ்ச்சியான செய்தியாக இருக்க வேண்டும்? ஆனால், டெல்லியில் நம் உணவுத் துறை கையைப் பிசைந்துகொண்டு இருக்கிறது. விஷயம் வேறு ஒன்றும் இல்லை... இந்தியத் தானியக் கிடங்குகளில் இடம் இல்லை. நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் 1.3 டன் தானியங்களைக் கூடுதல் ஒதுக்கீடு செய்தாலும், வெயிலிலும் மழையிலும் தானியங்கள் வீணாவதைத் தடுக்க முடியாது என்கிறார்கள். என்ன செய்வது? இருபது வருடங்களுக்கு முன் இதே நிலை ஏற்பட்டு இருந்தால், இராக்குக்கோ, இரானுக்கோ கூடுதல் சரக்கு ஏற்றுமதி ஆகி, கச்சா எண்ணெயாக இங்கே திரும்ப இறங்கி இருக்கும். இப்போது இந்தியாவின் வெளியுறவு விவகாரங்களை அமெரிக்கா கவனித்துக்கொள்வதால், விழி பிதுங்கி நிற்கிறது அரசு.

வறுமைதான் வாழ்க்கையைக் கத்துக்கொடுத்துச்சு: வாண்டுமாமா


                                      வாண்டுமாமா.
இந்தப் பெயரைப் படித்ததும் மூளையில் என்ன மின்னல் அடிக்கிறது உங்களுக்கு? ஏழு கடல் ஏழு மலை தாண்டியிருக்கும் மந்திரவாதியின் உயிரும்... பேசும் கிளியும்... பலே பாலுவும்... உங்கள் நினைவில் மின்னினால்... சபாஷ்... உங்கள் குழந்தைப் பருவம் அலாதியாக இருந்திருக்கும்!
கிட்டத்தட்ட மூன்று தலைமுறை தமிழ்க் குழந்தைகளின் உலகை கதைகளால் நிரப்பியவர் வாண்டுமாமா. கடந்த நூற்றாண்டில் குழந்தைகளால் அதிகம் நேசிக்கப்பட்ட ‘கோகுலம்’, ‘பூந்தளிர்’ புத்தகங்கள் அவற்றின் உச்சத்தில் இருந்தபோது வாண்டுமாமாதான் அதற்குப் பொறுப்பாசிரியர். கௌசிகன் என்ற பெயரில் பெரியவர்களுக்கும் வாண்டுமாமா என்ற பெயரில் குழந்தைகளுக்குமாக இதுவரை 218 புத்தகங்களை எழுதி இருக்கும் வி. கிருஷ்ணமூர்த்தி இப்போது எப்படி இருக்கிறார்?
சென்னை, தியாகராய நகரில் உள்ள அடுக்ககம் ஒன்றில் தன் மகன் வீட்டில் இருப்பவரைச் சந்தித்தோம். வாண்டுமாமா இப்போது வாண்டுதாத்தாவாக இருக்கிறார். 87 வயது. முதுமை உடலை ஒடுக்கி இருக்கிறது. காலம் எல்லாம் கதை சொன்னவருக்கு இப்போது பேச முடியவில்லை. வாயில் புற்றுநோய். காதும் கேட்கும் திறனை இழந்துவிட்டது. மனைவி சாந்தாவிடம் சொன்னால், அவர் சைகை மூலம் நாம் சொல்லும் செய்தியைத் தெரியப்படுத்துகிறார்; அதற்குத் தன்னுடைய பதிலை எழுதிக்காட்டுகிறார் வாண்டுதாத்தா. ஆனால், எழுத்துகளில் கொஞ்சமும் நடுக்கம் இல்லை. அட்சரச் சுத்தமாக இருக்கின்றன. சைகைகளும் எழுத்துகளுமாக நடந்த உரையாடல் இது...

ஒரே உண்மைதான்... பிரபாகரன் இல்லை: சரத் ஃபொன்சேகா

            உலகின் மிகக் குரூரமான போர்களை முன்னெடுத்த தளபதிகளில் ஒருவர்... சரத் ஃபொன்சேகா. ஈழத்தில் முப்படைகளையும் கொண்ட விடுதலைப் புலிகளை வீழ்த்தியபோது ராஜபக்ஷே - ஃபொன்சேகா கூட்டணி ஆசியக் கண்டத்தைத் தாண்டியும் கவனத்தை ஈர்த்தது. ஆனால், வெற்றியின் பலனை அறுவடை செய்வதில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட அரசியல் போட்டி ஃபொன்சேகாவைச் சிறைக்குள் தள்ளியது. அமெரிக்கா கொடுத்த அழுத்தத்தால் இரண்டு ஆண்டு சிறைவாசத்துக்குப் பின் வெளியே வந்திருக்கிறார் ஃபொன்சேகா. அவருடைய ஒவ்வோர் அசைவும் இன்று இலங்கை அரசால் கண்காணிக்கப்படுகிறது. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்கிறார்கள் இலங்கைப் பத்திரிகையாளர்கள். ஃபொன்சேகாவுக்கு ஏற்பட்டு இருக்கும் நிலை இலங்கையில் ஜனநாயகம் எப்படி இருக்கிறது என்பதற்கு அப்பட்டமான ஓர் உதாரணம். சிறையில் இருந்து வெளிவந்த ஃபொன்சேகாவை  ஏராளமான கேள்விகளுடன் எதிர்கொண்டேன். விடுதலைக்குப் பின் சர்வதேச அளவில் ஃபொன்சேகா அளித்த முதல் விரிவான - பிரத்யேகப் பேட்டி இது.

காவிரி... 10 உண்மைகள்!


உண்மை 1: இந்த ஆண்டும்   குறுவைச் சாகுபடிக்குத் திறக்க மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லை. இப்படி ஜூன் 12-ம் தேதி அணை திறப்பது தள்ளிப்போவது மேட்டூர் அணையின் வரலாற்றில் இது  53-வது ஆண்டு. தமிழகத்தின் நெல் உற்பத்தியில் மூன்றில் ஒரு பகுதியைத் தரவல்லது காவிரிப் படுகை. குறுவை, சம்பா, தாளடி என்று மூன்று பருவச் சாகுபடி. இதில் குறுவை 4 லட்சம் ஏக்கர்; சம்பா 8 லட்சம் ஏக்கர்; தாளடி 4 லட்சம் ஏக்கர் சாகுபடியாகும். இந்த மூன்று பருவங்களில் குறுவைப் பருவம்தான் நல்ல விளைச்சல் தரும். தவிர, குறுவைச் சாகுபடி இல்லாமல் போனால், 17.36 லட்சம் விவசாயத் தொழிலாளர்கள் வீட்டில் முடங்கிப்போவார்கள்.