சமஸ்

விவசாயம் தொடர்பான பார்வையிலேயே மாற்றம் வேண்டும்!


இன்னும் உக்கிரமான கோடையைத் தொடவில்லை. அதற்குள் வறட்சியின் கொடூரங்களைத் தமிழகம் எதிர்கொள்ளத் தொடங்கிவிட்டது. மாநிலத்தின் அரிசிக் கிண்ணமான காவிரிப் படுகை விவசாயிகளை, இந்த வெஞ்சூழல் சாவை நோக்கித் தள்ளிக்கொண்டிருக்கிறது. இருநூற்றுக்கும் மேற்பட்ட பிணங்கள் விழுந்திருக்கின்றன. சென்னையில் எப்போதும் இம்மாதத்தில் மூன்று மாதங்களுக்கான தண்ணீர் கையிருப்பில் இருக்கக் கூடிய நீர்த்தேக்கங்களில், ஒரு மாதத்துக்கான தண்ணீர்கூட இல்லை. குவாரி பள்ளங்களில் தேங்கிக்கிடக்கும் தண்ணீரைச் சுத்திகரித்து, மக்களுக்குக் குடிக்க அனுப்பிக்கொண்டிருக்கிறது அரசு. 2015-ல் நூற்றாண்டு காணாத மழைப்பொழிவு, வெள்ளம். 2016-ல் வரலாறு காணாத மழைப்பொய்ப்பு, வறட்சி. 2015 டிசம்பர் 1 அன்று சென்னையில் ஒரே நாளில் 49 செ.மீ. மழை கொட்டியது. செய்வதறியாது நின்றோம். 2016-ல் தமிழகத்தில் பருவ மழை இயல்பைக் காட்டிலும் 62% அளவுக்குக் குறைந்தது. செய்வதறியாது நிற்கிறோம்.

நூற்றாண்டு வெள்ளம், நூற்றாண்டு வறட்சி என்ற சொல்லாடல்களின் வழி தப்பித்துக்கொள்ளுதல் எளிது. நூறு வருடங்களுக்கு முன்பிருந்த அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் என்ன, இன்றைக்கு உருவாகியிருக்கும் சாத்தியங்கள் என்ன? இன்னும் நூறு ஆண்டுகளுக்கு முந்தைய அதே துயரத்தை மக்கள் அனுபவிக்க வேண்டியிருப்பது யாருடைய தவறு என்று யோசித்தால், துயரங்கள் இயற்கையின் விளைவு அல்ல; ஆட்சியாளர்களின் நிர்வாகக் கோளாறின் விளைவு என்பது புரியவரும்.

தமிழகத்தின் நீராதாரக் கட்டமைப்பில் கடந்த நூற்றாண்டுகளில் பெரும் சேதம் உண்டாகியிருக்கிறது. காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு என்று மாநிலத்தின் பிரதான நீராதார நதிகளில், நீர்ப் பகிர்வில் அண்டை மாநிலங்களுடன் தீவிரமான பிரச்சினைகளை எதிர்கொள்கிறோம். நம்முடைய முழு ஆளுகைக்குட்பட்ட நீர் சேகரக் கட்டமைப்பிலும் பெரும் நாசத்தை நாமே உண்டாக்கிவிட்டோம். சென்னைக்குக் குடிநீர் தரும் வீராணம் ஏரி ஒரு உதாரணம். 1923-ல் 41 மில்லியன் கன மீட்டராக இருந்த இந்த ஏரியின் கொள்ளளவு 1991-ல் 28 மில்லியன் கன மீட்டராகக் குறைந்துவிட்டது. அதாவது, மூன்றில் ஒரு பகுதி காணாமல்போய்விட்டது. சென்னையின் மிகப் பெரிய ஏரியான போரூர் ஏரியின் பரப்பளவு 800 ஏக்கர். இப்போது அதில் 470 ஏக்கர் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டது. தலைநகர நிர்வாகத்தோடு சம்பந்தப்பட்ட நீர்நிலைகளின் கதியே இதுவென்றால், மாநிலத்தின் ஏனைய நீர்நிலைகளின் நிலையை விவரிக்க வேண்டியதில்லை. தமிழகத்தில் 39,202 ஏரிகள் இருப்பதாக அரசின் பழைய புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. இவற்றில் எத்தனை இன்றைக்கும் ஏரிகளாக இருக்கின்றன; அவற்றில் எத்தனை அதே பழைய கொள்ளளவுடன் இருக்கின்றன என்பது யாருக்கும் தெரியாது. கண்மாய்கள், குளங்களின் நிலை இன்னும் பரிதாபம். மிச்சமுள்ள ஒரே ஆதாரம் நிலத்தடி நீர். அதீதப் பயன்பாட்டால், அங்கும் பலத்த சேதத்தை உண்டாக்கியிருக்கிறோம். ஒவ்வொரு நாளும் புதிதாக முளைக்கும் ஆழ்துளைக் கிணறுகள் நாட்டிலேயே நிலத்தடி நீர்மட்டம் வேகமாகக் கீழே இறங்கிக்கொண்டிருக்கும் பிராந்தியங்களில் ஒன்றாக தமிழகத்தை மாற்றிவருகின்றன.

இந்தி தேசியம் ஆள்கிறது... நாம்?


சுதந்திரத்துக்கு முன் நம்மிடம் இருந்த இலக்குகளின் உயரத்தையும் அமைப்பில் நமக்கிருந்த செல்வாக்கையும் காட்டிலும் நாம் இன்று பெருமளவில் சரிந்திருக்கிறோம்.

தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளின் அரை நூற்றாண்டுத் தொடர் ஆட்சிக்கு வித்திட்ட அண்ணாவின் முக்கியமான முழக்கங்களில் ஒன்று, ‘வடக்கு வாழ்கிறது; தெற்கு தேய்கிறது!’ இன்றைக்கு யாரேனும் இப்படி ஒரு முழக்கத்தைக் கூறினால், பொதுவெளியில் இருப்பவர்கள் கொஞ்சம் வித்தியாசமாகப் பார்ப்பார்கள். ஏனென்றால், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட சமூக நலக் குறியீடுகளில் நாட்டிலேயே காத்திரமான இடத்தில் நிற்கும் மாநிலங்களில் ஒன்று தமிழகம். உலகமயமாக்கல் சூழலில், தாராளமயமாக்கலை வேகமாகச் சுவீகரித்துக்கொண்ட மாநிலங்களில் ஒன்று என்பதால், பொருளாதார வளர்ச்சியிலும் தனி நபர் வருவாய் விகிதத்திலும் நாட்டில் முன்னணியில் நிற்கும் மாநிலம். மேலும், மத்தியில் இடையில் உருவான கூட்டணி யுக அரசியல் சூழலையும் இரு திராவிடக் கட்சிகளும் பயன்படுத்திக்கொண்டன. மத்திய அமைச்சரவையில் முக்கியமான இடத்தில் அவை இருந்தன. ஆக, இன்றைக்கு நாம் பெரிய இடத்தில் இருப்பதாகப் பொதுவில் நாம் நம்புகிறோம். இந்த நம்பிக்கை எந்த அளவுக்கு உண்மையானது?

நாங்கள் - சில நண்பர்கள் இதுகுறித்து கடந்த வாரம் விவாதித்தோம். முதலில், சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டம், சுதந்திரத்துக்குப் பிந்தைய காலகட்டம் என வகுத்துக்கொண்டோம். அடுத்து, சுதந்திரத்துக்குப் பிந்தைய காலகட்டத்தில், திராவிடக் கட்சிகளின் ஆட்சிக்கு முந்தைய காலகட்டம், பிந்தைய காலகட்டம் என வகுத்துக்கொண்டோம். தமிழ்நாடு கூடவே இந்தி பேசாத மாநிலங்கள் பலவற்றின் சூழலையும் எடுத்துக்கொண்டு விவாதித்தோம். முதலில் அரசியலமைப்புச் சட்டரீதியாகவே, மாநிலங்களின் உரிமை சார்ந்து நிறைய இழந்துவிட்டோம்; தவிர, சுதந்திரத்துக்கு முன் நம்மிடம் இருந்த இலக்குகளின் உயரத்தையும் அமைப்பில் நமக்கிருந்த செல்வாக்கையும் காட்டிலும் நாம் பெருமளவில் சரிந்திருக்கிறோம் எனும் முடிவுக்கே நாங்கள் வந்துசேர வேண்டியிருந்தது. பலருக்கும் இது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும்கூட இருக்கலாம். உண்மை இதுவே.

வாழ்வதும் ஆள்வதும் ஒன்றா?
கல்வி, சுகாதாரம் போன்ற சமூகநலக் காரணிகளையும் பொதுவான பொருளாதார வளர்ச்சியையும் அடிப்படையாக முன்வைத்து ஏனைய மாநிலங்களைக் காட்டிலும் நாம் சிறப்பாக இருக்கிறோம் என்று நம்மை நாமே தட்டிக்கொடுத்துக்கொள்வது வேறு. ஒரு நாட்டை ஆள்வது வேறு. இன்றைய இந்திய ஒன்றியத்தின் முடிவுகளைத் தீர்மானிக்கும் இடத்தில், நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் இடத்தில் உள்ளபடி நம்முடைய பங்கு என்ன?

இந்தக் கேள்விதான் எங்களுடைய விவாதத்தின் மையப் புள்ளி. நாட்டின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் ஐந்து முக்கியமான துறைகளை நாங்கள் கணக்கில் எடுத்துக்கொண்டாம். 1. நாட்டின் எல்லா முடிவுகளையும் முன்னின்று தீர்மானிக்கும் அரசியல், 2. அரசியல்வாதிகளின் கொள்கை முடிவுகளுக்கு வழிகாட்டும் அதிகாரவர்க்கம், 3. அரசியல் முடிவுகளைப் பின்னின்று இயக்கும் தொழில் துறை, 4. நாட்டின் பார்வையைக் கட்டமைக்கும் ஊடகங்கள், 5. நாட்டின் சட்டங்களின் பரப்பைத் தங்கள் வாதங்களால் தீர்மானிக்கும் சட்ட வல்லுநர்கள்.

மாபெரும் கனவின் பெரும் பகுதி இன்னும் மிச்சமிருக்கிறது!


திராவிட இயக்கத்தின் எதிர்காலம் என்னவாக இருக்கும்? - ஒரு இயக்கம் நூற்றாண்டைக் கடந்திருக்கும் சமயத்தில், அதன் தளகர்த்தர் ஆட்சிப் பொறுப்பேற்று அரை நூற்றாண்டு நிறையும் தருணத்தில் (மார்ச் 6, 1967 -2017), இப்படி ஒரு கேள்வி எழும் சூழலும் திராவிடக் கட்சிகள் இரண்டும் இன்று வந்தடைந்திருக்கும் நிலையும் வரலாற்று முரண் என்றே சொல்ல வேண்டும். ஒருபுறம் அரை நூற்றாண்டாக மாநிலத்தில் ஏனைய கட்சிகளுக்கான பிரதிநிதித்துவத்தைப் பெருமளவில் தகர்த்து, இன்றும் சட்டசபையில் 95% உறுப்பினர்களுடன் ஆளுங்கட்சி, பிரதான எதிர்க்கட்சி எனும் இரு நிலைகளிலும் அவை அமர்ந்திருக்கின்றன. மறுபுறம், சித்தாந்தரீதியாக நடந்திருக்கும் பெரும் சரிவோடு, சமகாலத்தின் இரு பெரும் தலைவர்களான கருணாநிதி, ஜெயலலிதா இருவரும் அரசியல் களத்தில் இல்லாத நிலையில், வலுவான அடுத்த தலைவர் வரிசையும் இன்றி எதிர்கால நெருக்கடியில் சிக்கியிருக்கின்றன. திராவிடக் கட்சிகளின் வீழ்ச்சிக்காக நெடுங்காலமாகக் காத்திருக்கும் தேசியக் கட்சிகள் இந்தச் சூழலை உவகையோடு பார்க்கின்றன. “திராவிட அரசியலுக்கான தேவை என்ன?” என்ற கேள்வி வெளியிலிருந்து மட்டும் அல்ல; யாரெல்லாம் அதன் பொருட்டு பயன் அடைந்தார்களோ அவர்களிடமிருந்தே ஒலிக்கிறது. உள்ளபடியே, மாபெரும் இந்திய அரசியல் களத்தில் திராவிட அரசியலுக்கான தேவையும் பெறுமதியும் என்ன?

திணிப்புத் திட்டங்களை எதிர்க்கும் உரிமை மாநிலங்களுக்கு இருக்கிறதா?


நெடுவாசலில் விவசாயிகள் கொந்தளிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். பிப்ரவரி 15 அன்று இங்கு ஹைட்ரோ கார்பன் வாயுவை எடுப்பதற்கு மத்திய அரசு வழங்கிய அனுமதியின் தொடர்ச்சியாகப் போராட்டத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள். தமிழகத்தின் வறண்ட மாவட்டங்களில் ஒன்று புதுக்கோட்டை. வானம் பார்த்த நிலம். சில மாதங்களுக்கு முன் உள்ளூர் செய்தியாளர் சுரேஷுடன் புதுக்கோட்டை கிராமங்களைச் சுற்றி வந்தேன். நிலத்தடி நீர்மட்டம் வேகமாகச் சரிந்துகொண்டிருக்கிறது. “கிணத்துல அஞ்சடி ஆறடி ஆழத்துல கெடந்த தண்ணியை ஏத்தம் கட்டி எறைச்ச காலம் போய், இன்னிக்கு ஆயிரம் அடி நோக்கி தண்ணி கீழே போய்க்கிட்டுருக்கு” என்றார்கள்.

நெடுவாசல் கிராமத்தில் நிலத்தடி நீர்மட்டம் அவ்வளவு மோசம் இல்லை என்றாலும், பத்தாயிரம் அடி பதினைந்தாயிரம் அடிக்கு ஆழ்துளைக் கிணறு போட்டு எரிபொருள் எடுக்கும் திட்டத்தைச் செயல்படுத்தும்போது, சுற்றுப்புறக் கிராமங்கள் முழுக்க நீர்மட்டம் விழுந்துபோகும்; விவசாயத்தையும் சுற்றுச்சூழலையும் இது நிலைகுலைத்துவிடும் என்று அஞ்சுகிறார்கள் விவசாயிகள். இந்தத் திட்டம் அழிவுத் திட்டமா? தெரியவில்லை. வளர்ச்சித் திட்டமாகவேகூட அமையலாம். ஆனால், எந்த நிலத்தில் ஒரு திட்டம் செயல்படுத்தப்படுகிறதோ அந்த நிலம்சார் மக்களுக்கு இதுகுறித்து முழுமையான விளக்கம் அளிக்கப்பட வேண்டுமா, இல்லையா?

தமிழகத்தைப் பீடித்திருக்கும் 24x7 பரபரப்பு நோய் எப்போது நீங்கும்?


பொதுவாக, ஊடகவியல் வகுப்பு எடுக்கும் பேராசிரியர்கள் மாணவர்களுக்குச் சொல்லும் முதல் பாடமாக இது அமையும். “மனிதனை நாய் கடித்தால் அது செய்தி அல்ல; மாறாக நாயை மனிதன் கடித்தால் அதுவே செய்தி!” ஆனால், ஒரு நல்ல ஊடகர், வணிக ஊடகவியல் புத்தி கட்டமைத்த இந்த மலிவான பரபரப்புச் செய்தி இலக்கணத்தை உடைத்தெறிவார். ஏனென்றால், ஆண்டுக்கு 20,000 பேர் வெறிவிலங்குக்கடியால் உயிரிழக்கும் ஒரு நாட்டில், மனிதனை நாய் கடிப்பதும் ஒரு முக்கியமான செய்தி. ஆகையால், “கார்களில் பயணிப்பவர்களுக்குத் தெரு நாய்களின் ஆபத்து புரியாது ஐயா; ஆனால், இதுவும் ஒரு முக்கியமான செய்தி!” என்று அவர் ஊடக நிறுவனத்திடம் வாதிடுவார்.

எப்போது இப்படி ஒரு ஊடகரால் வாதிட முடியும் என்றால், அவர் சிந்திக்கும்போது. சிந்திப்பதற்கான நிதானத்தில் அவர் இருக்கும்போது. அதற்கான அவகாசம் அவருக்கு வாய்க்கும்போது. சதா ஓடிக்கொண்டிருப்பவர்களால் எப்படி சிந்திக்க முடியும்? தான் சிந்திப்பதற்கே நேரம் எடுத்துக்கொள்ளாதவர்களால், சமூகத்தை எப்படிச் சிந்திக்கச் செய்ய முடியும்?

ஜெயலலிதா விடுதலையாகிவிட்டார்… மக்கள் தண்டனையைச் சுமக்கிறார்கள்!


சொத்துக்குவிப்பு வழக்கில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் குற்றம் நிரூபிக்கப்பட்டிருக்கிறது; மரணம் அவரை விடுவித்துவிட்டாலும், அவருடைய தோழி சசிகலா, அவருடைய உறவினர்கள் சுதாகரன், இளவரசிஆகியோர் நான்காண்டுகள் சிறைத் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். இந்தத் தீர்ப்பு அரசியல்வாதிகளுக்கு ஒரு எச்சரிக்கை என்று பலரும் கூறுகிறார்கள். இருக்கலாம். கூடவே இந்திய நீதித் துறையில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தங்களையும் இத்தீர்ப்பு நமக்கு உணர்த்துவதாகவே நான் கருதுகிறேன்.

லட்சம் கோடிகளை ஊழல்கள் எட்டிவிட்ட காலகட்டத்தில், வெறும் ரூ.66.6 கோடி சொத்துக்குவிப்பு வழக்கில் அளிக்கப்பட்டிருக்கும் தண்டனை இன்றைய தலைமுறையினர் பலருக்கு ஆச்சரியமாகவும், சிலருக்கு அதீதமாகவும்கூடத் தோன்றலாம். 1991-96 காலகட்டத்தை நினைவில் வைத்திருப்பவர்களுக்கு இந்த வழக்கின் முக்கியத்துவம் புரியும்.

தமிழகத்தின் இருண்ட காலகட்டங்களில் ஒன்று அது. வீதிக்கு வீதி சுவர்களில் ‘அன்னையே’, ‘மேரி மாதாவே’, ‘துர்க்கையே’ என்ற பட்டங்களோடும் அந்தந்தக் கடவுளர் தோற்றங்களோடும் ஜெயலலிதா சிரித்த காலகட்டம். ஊர்கள்தோறும் ஐம்பதடி, நூறடி கட் அவுட்களில் ஜெயலலிதா நின்ற காலகட்டம். ஜெயலலிதா சாலையைக்  கடக்கிறார் என்றால், சிக்னலில் பிரதமர் நரசிம்ம ராவ்  சிக்னலில் காத்திருக்கவைக்கப்பட்ட காலகட்டம்.  துறைகள்தோறும் ஜெயலலிதா-சசிகலாவின் பெயரால் லஞ்சமும் ஊழலும் மலிந்திருந்த காலகட்டம். கொஞ்சம் பெரிதாக வீடு கட்டுபவர்கள் “ஜெயலலிதா - சசிகலா கும்பல் கண்ணுல இது பட்டுடாம இருக்கணும்” என்று கிண்டலாகக் கூறிக்கொண்ட அளவுக்கு தோழியர் பெயரால் சொத்துக்குவிப்புகள் நடந்த காலகட்டம். சட்டப்பேரவையில் சபாநாயகரின் நாற்காலியில் எந்தப் பதவியிலும் இல்லாத  சசிகலாவை உட்காரவைத்து எல்லா மாண்புகளையும் ஜெயலலிதா உருக்குலைத்த காலகட்டம். எதிர்த்த அரசியல் செயல்பாட்டாளர்கள், விமர்சித்த பத்திரிகையாளர்கள், அடக்குமுறைக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த வழக்குரைஞர்கள் கொடூரத் தாக்குதலுக்குள்ளான காலகட்டம். அடுத்த தேர்தலில் ஜெயலலிதாவே பர்கூர் தொகுதியில் தோற்கும் அளவுக்கு மக்களிடத்தில் அதிருப்தியும் கோபமும் கொந்தளித்திருந்த காலகட்டம். சசிகலா குடும்பத்தின் மீதான தமிழக மக்களின் வெறுப்பு அந்தக் காலகட்டத்தில் வேரூன்றிய விருட்சம்.

என் ஆட்சி, என் முடிவு!

சென்னை பசுமைவழிச் சாலையிலுள்ள முதல்வர் பன்னீர்செல்வத்தின் வீடு ஜேஜேவென்று இருக்கிறது. அதிமுக தலைகளைத் தாண்டிப் பொதுமக்கள் தலைகள். நேராக உள்ளே போகிறார்கள். திண்ணை வாசலில் நின்று முழக்கமிடுகிறார்கள். பன்னீர்செல்வம் வெளியே வருகிறார். ஆதரவைத் தெரிவிக்கிறார்கள். கும்பிடு போட்டு, நாலொரு வார்த்தைகள் பேசி நன்றி தெரிவிக்கிறார். எல்லோருக்கும் கைகுலுக்குகிறார். பின் அவர் வீட்டுக்குள் நுழைந்ததும் இவர்களும் கலைந்துவிடுகிறார்கள். அப்புறம் மாட்டுத்தொழுவம் வரை சென்று பார்க்கிறார்கள். செல்பேசியில் சில சுயபடங்கள். பந்தலில் பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக நடக்கும் பிரச்சாரத்தைக் கொஞ்ச நேரம் பார்த்து ஆர்ப்பரிக்கிறார்கள். அடுத்து, திண்ணையில் அமர்ந்திருக்கும் தொழில்நுட்பக் குழுவிடம் சென்று தங்கள் சுயவிவரங்களை அளிக்கிறார்கள். பன்னீர்செல்வம் முதல்வராகத் தொடர, நடத்தப்படும் இணைய கையெழுத்து இயக்கத்தில் தங்களையும் இணைத்துக்கொள்கிறார்கள். புறப்படுகிறார்கள். அடுத்தடுத்து கூட்டம் வருவதும் போவதுமாக இருக்கிறது.

புதிய யுகத்துக்கான இரு சகுனங்கள்


தமிழகத்தின் சிறுவர்களும் அரசியல் பேசுகிறார்கள். அடுத்த முதல்வராகப் பதவியேற்கவுள்ள சசிகலா நாட்டையே பேசவைத்திருக்கிறார். தன் காலத்தில் தமிழக அரசியல் களத்தின் ஒவ்வொரு வரலாற்று நிகழ்விலும் தன்னுடைய பேச்சுகளால் தன்னையும் உள்ளடக்கிக்கொண்ட ஒருவர், இதுபற்றி இன்றைக்கு என்ன நினைக்கிறார் என்று தெரிந்துகொள்ள முடியவில்லை. கருணாநிதி அமைதியானதற்கு முதுமை, தள்ளாமை, நினைவிழப்பு என்று மருத்துவரீதியாக எவ்வளவோ காரணங்களை அடுக்கலாம். நான் இந்தச் சூழலைத் தர்க்கரீதியாக அணுக முயலவில்லை. ஜெயலலிதாவின் மறைவு வரை அரசியலில் வெளிப்படையாக எந்தப் பெரிய பொறுப்பிலும் இல்லாதிருந்த சசிகலா, அடுத்த இரண்டு மாதங்களில் படிப்படியாக விஸ்வரூபம் எடுப்பதையும், அதே காலகட்டத்தில் கருணாநிதி படிப்படியாக முடங்கிப்போவதையும் உருவாகிவரும் ஒரு புதிய யுகத்துக்கான இரு சகுனங்களாகவே பார்க்கிறேன்.


இரு வருத்தங்கள்


என்னுடைய ‘யாருடைய எலிகள் நாம்?’ புத்தகத்தைத் திரும்பப் படிக்க நேர்ந்தபோது இரு விஷயங்களில் நான் தவறிழைத்திருப்பதாகத் தோன்றியது. 

எதிர்பாராத ஒரு வரலாற்று எழுச்சிப் போராட்டம் தீர்மானிக்கப்பட்ட முடிவோடு முடிந்தது எப்படி?


தமிழகம் எங்கும் ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்துகொண்டிருந்த நாட்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நண்பர்கள் அழைத்த வண்ணம் இருந்தார்கள். தமிழர் அல்லாத நண்பர்களுக்கு அது ஆச்சர்யம். தமிழ் நண்பர்களுக்கோ அது பெரிய குஷி. “நம்ம பசங்க எல்லோரையும் திரும்பிப் பார்க்க வெச்சிட்டாங்க. இங்கெல்லாம் ரொம்ப மரியாதையோடு பார்க்குறாங்க.”

இங்கே தமிழ்நாட்டில் எப்போதுமே நாம் நெஞ்சை நிமிர்த்தி விரைத்துக்கொண்டு நடக்கிறோம் என்றாலும், தமிழகத்துக்கு வெளியே செல்பவர்களுக்குத்தான் சாதாரண நாட்களில் ‘மதராஸி’ ஆக இருப்பதன் துயரம் புரியும். தமிழ்நாட்டின் சமகால அரசியல்வாதிகள் நமக்குச் சேர்த்து வைத்திருக்கும் ‘அடிமைப் பெருமை’ அப்படி!

ஜல்லிக்கட்டுப் போராட்டம் இந்தப் பிம்பத்தைக் கணிசமான அளவுக்கு மாற்ற முனைந்தது. போராட்டத்தின் உள்ளடக்கம் ஜல்லிக்கட்டாக இருந்தாலும், அதன் வெளிப்பாடு ஆட்சியாளர் களுக்கும் அதிகாரத்துக்கும் எதிரான துணிச்சலான அறைகூவல் என்பதை நாடு சரியாகவே உணர்ந்தது. தமிழகத்தைத் தாண்டி பல்வேறு மாநிலங்களிலும் டெல்லியிலும் ஆட்சியாளர்களை இந்தப் போராட்டம் பதைப்பதைப்பில் தள்ளியதற்கான நியாயம் உண்டு. இத்தகைய போராட்டங்கள் நாடு முழுக்கப் பரவக் கூடியவை.

பெரும் திரளான மக்கள் கூட்டத்தை அதிகாரம் கண்டுகொள்ளாமல் விட்டதன் பின்னணியில் ஆரம்பத்தில் ஒரு காரணம் சொல்லப்பட்டது. ஆளும் அதிமுகவின் புதிய தலைமைக்கு எதிரான அதிருப்தி குரல்களிலிருந்து மக்களின் கவனம் திசை திரும்ப அனுமதிப்பதே அது. அடுத்தடுத்த நாட்களில், போராட்டம் தமிழகம் எங்கும் விசுவரூபம் எடுத்ததும் மாணவர்கள் ஜல்லிக்கட்டைத் தாண்டி மத்திய, மாநில ஆட்சியாளர்கள் இரு தரப்பையுமே கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியதும் தமிழக அரசு எதிர்பாராதது. ஆட்சியாளர்களுக்கு எதிரான இந்தச் சூழலை எதிர்க்கட்சிகள் பயன்படுத்திக்கொள்ள முனைந்தன. அதற்கும் மாணவர்கள் அனுமதிக்கவில்லை. ஆக, பாரம்பரிய அரசியல் கட்சிகள் பெரும்பாலானோருக்கு எரிச்சலூட்டியபடி போராட்டம் தொடர்ந்தது. ஜனவரி 26 நெருங்கிய சூழலில், மத்திய, மாநில அரசுகளுக்கு மாணவர்களின் கோரிக்கைக்கு உடனடியாகப் பணிவதைத் தவிர வேறு வழியில்லாமல் போனது.

ஜல்லிக்கட்டு தொடர்வதற்கேற்ப சட்டப்பேரவையில் அவசரச் சட்டத்தைக் கொண்டுவருவதோடு கூட்டத்தைக் கலைக்க இரு அரசுகளும் முடிவெடுத்தன. தொடக்கத்தில் கூறியபடி, இந்தப் போராட்டத்துக்கான உள்ளடக்கம் ஜல்லிக்கட்டு என்றாலும், அதன் உண்மையான இலக்கும் மக்கள் வெளிப்படுத்திய கோபமும் ஜல்லிக்கட்டைத் தாண்டியவை. போராட்டக்காரர்களும் இதை உணர்ந்திருந்தனர். அரசும் உணர்ந்திருந்தது. பொதுச்சமூகமும் உணர்ந்திருந்தது. ஊடகங்களும் இதை அறிந்திருந்தன. என்றாலும் எல்லோருக்குமே ஜல்லிக்கட்டு முகமூடியே பாதுகாப்பானதாகத் தோன்றியது. கூடவே ஜல்லிக்கட்டைத் தாண்டிய அரசியல் கிளர்ச்சியாக இது உருமாறுமா என்ற அந்தரங்க எதிர்பார்ப்பும் பலரிடமும் தெரிந்தது.

பத்ம விருதுகளை எவ்வளவு காலத்திற்குப் புனிதப் போர்வைக்குள் பூட்டிவைத்திருப்பீர்கள்?பத்ம விருதுகளில் இந்த ஆண்டு பாலிவுட் நட்சத்திரங்களுக்கு இடமில்லாமல் போனதை, மும்பையில் விவாதம் ஆக்கியிருக்கிறார்கள். இதற்குப் பின் இரண்டு கூற்றுகள் உண்டு. நாட்டில் தலைநகர் டெல்லிக்கு அடுத்து அதிகமான பத்ம விருதுகளைக் குவித்திருப்பது மகாராஷ்டிரம். 2017 வரை அறிவிக்கப்பட்டிருக்கும் 4373 பத்ம விருதுகளில் 764 விருதுகளை அது பெற்றிருக்கிறது. 397 விருதுகளுடன் அதற்கு அடுத்த நிலையில் உள்ள தமிழ்நாட்டுடன் ஒப்பிடுகையில், மகாராஷ்டிர லாபிக்கு டெல்லியில் உள்ள செல்வாக்கை உணர முடியும். பத்ம விருதுப் பட்டியலில் எப்போதும் மத்திய ஆட்சியாளர்களின் செல்லக்குட்டிகள் சினிமாக்காரர்கள். ஏன் அப்படி?

தமிழக அரசியல்வாதிகளே... போராட்டத்தைப் படியுங்கள்!

படம்: ஷிவ கிருஷ்ணா

தேசத்தையே திரும்பிப் பார்க்கவைத்த ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில், மிகுந்த விவாதத்துக்குரிய அம்சங்களில் ஒன்று, தமிழக அரசியல் கட்சிகளுக்கு இதில் செய்வதற்கு ஒன்றுமே இல்லாமல் போனது. நம்பகத்தன்மையிழப்பு. கண் முன்னே அரசியலில் ஒரு வரலாறு நிகழும்போது, சமகாலத்தில் களத்திலிருக்கும் ஒரு அரசியல்வாதிக்கும் அதில் எந்தப் பங்கேற்புக்கும் இடமில்லாமல் போவது எவ்வளவு பெரிய வீழ்ச்சி!

டெல்லிக்கட்டு!


அலுவலகக் கண்ணாடிச் சுவர்களைத் துளைத்துக்கொண்டு நாளெல்லாம் கேட்கும் முழக்கச் சத்தத்தினூடே இந்தக் கட்டுரையை எழுதத் தொடங்குகிறேன். என்ன ஆனது தமிழ் இளைஞர்களுக்கு? எல்லோரையும் கும்பல் மனோபாவம் ஆவேசத்தில் தள்ளியிருக்கிறதா? ஒரு வட்டார விளையாட்டாக மட்டுமே இதுவரை அறியப்பட்டுவந்த ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடை எப்படி இவ்வளவு பெரிய களேபரமானது? ஒரு சின்ன கிராமமான அலங்காநல்லூரை மையமாகக் கொண்டு தொடங்கிய போராட்டம் எப்படி சென்னை, மதுரை, கோவை, சேலம், வேலூர், திருச்சி, நெல்லை என்று தமிழகம் எங்கும் பரவியது?

ஒட்டுமொத்த இந்தியாவும் திகைப்பில் ஆழ்ந்திருக்கிறது. மெரினா கடற்கரையை நோக்கிச் செல்லும் சென்னையின் ஒவ்வொரு சாலையும் மனிதத் தலைகளால் நிரம்பி வழிகிறது. இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் மெரினாவில் உட்கார்ந்திருப்போர் எண்ணிக்கை இன்றைக்குப் பத்து லட்சத்தைத் தாண்டிவிட்டது. இது தவிர, பல்லாயிரக்கணக்கானோர் நாளெல்லாம் வருவதும் போவதுமாக இருக்கிறார்கள். பேரணியாக வர முடியாதவர்கள் ஆங்காங்கே தெருமுக்குகளில் கையில் கருப்புக் கொடியுடன், மத்திய அரசுக்கு எதிரான பதாகைகளுடன் கூடி நிற்கிறார்கள். சைதாப்பேட்டையில் பணி முடித்து சீருடையைக்கூடக் கலைக்காமல் பெண் துப்புரவுத் தொழிலாளர்கள் ‘தமிழர் என்றோர் இனமுண்டு; தனியே அவர்க்கோர் குணமுண்டு’ என்று கோஷமிட்டபடி ஊர்வலமாகச் சென்றதைப் பார்த்தேன்.  எங்கு பார்த்தாலும் கருப்புச் சட்டையர்கள். எங்கும் பறை, மேளதாள முழக்கங்கள். ஜல்லிக்கட்டு என்றால் என்னவென்றே அறிந்திராத எதிர்வீட்டு ஐந்து வயது சிறுமி கையில் பென்சிலால் எழுதப்பட்டு, மாடு வரையப்பட்ட காகிதத்துடன் தெருவுக்கு ஓடுகிறாள். ஒவ்வொரு ஜல்லிக்கட்டும் பலரை முடக்கும் காயங்களைத் தந்துச் செல்லக் கூடியது; சிலரது உயிரையும் உடன் எடுத்துச் செல்லக் கூடியது. ஜல்லிக்கட்டை அறிந்த பெண்கள் அதை உவகையோடு அணுகிப் பார்த்ததில்லை. இன்று மாநிலத்தின் எல்லாப் பகுதிகளிலும் தன்னெழுச்சியாகக் குடும்பம் குடும்பமாக மக்கள் வீதிக்கு வந்து நிற்கிறார்கள். குறிப்பாகப் பெண்கள்! திருச்சியில் முக்காடிட்ட முஸ்லிம் சிறுமிகள் சிலம்பம் சுற்றியபடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றிருக்கிறார்கள். அத்தனையையும் ஜல்லிக்கட்டுத் தடைக்கான எதிர்வினையாக மட்டுமே பார்க்க முடியுமா?


தமிழர்கள் ஜல்லிக்கட்டு நடத்த சரியான இடம் எது?


முதன்முதலில் ஜல்லிக்கட்டை நேரில் காணச் சென்றபோது, எனக்கு ஏமாற்றமாக இருந்தது. கிட்டத்தட்ட நீதிமன்றத்துக்குப் போன முதல் அனுபவத்துக்கு இணையானது அது. ஊரே கூடி நிற்க, யாரையும் நெருங்க விடாத ஒரு காளையையும், அதன் முன் குதித்து, தன் பார்வையாலேயே அதை மிரட்டி, தனியொருவனாக அடக்கி, மண்டியிடவைக்கும் இளைஞரையும் எதிர்பார்த்துச் சென்றிருந்தேன். ஒரு ஊர் கூட்டம் அல்ல; பத்து ஊர்க் கூட்டம் கூடி நின்றது. வெவ்வேறு சீருடைகளில் அணிஅணியாக வீரர்கள் நின்றனர். எல்லோர் கவனமும் வாடிவாசல் நோக்கி இருந்தது. ஏகப்பட்ட முஸ்தீபுகளுக்குப் பின், வாடிவாசல் திறக்கப்பட்டபோது காளை சீறி வந்தது. வீரர்கள் கூட்டம் கூட்டமாகத் துரத்திக்கொண்டு ஓடினார்கள். பலர் காளை திரும்பிப் பார்த்த மாத்திரத்திலேயே ஓடி ஒதுங்கினார்கள். சிலர் பதுங்கினார்கள். சிலர் மட்டும் விடாது துரத்தினார்கள். காளையின் திமிலைப் பிடித்தவாறே இறுதி வரை ஓடியவர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். “சரிண்ணே.. ஜல்லிக்கட்டு எப்போ ஆரம்பிக்கும்?” என்று அழைத்துச் சென்ற பக்கத்து வீட்டு அண்ணனிடம் கேட்டபோது அவர் என் தலையில் தட்டினார். “சினிமா பார்த்து எல்லாமே நிஜம்னு நம்புறவனாடா நீ!”

தேசியத்தின் பெயரால் எல்லாவற்றையும் நாம் பொதுமைப்படுத்துகிறோமா?


வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒரு தீர்ப்பை மேலோட்டமான ஒரு தேசபக்தக் கொண்டாட்ட மனோநிலையில் இந்தியா வேகமாகக் கடந்துவிட்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. ‘‘தேர்தல்களில் சாதி, மதம், இனம், மொழி ஆகியவற்றின் அடிப்படையில் வாக்குகளைக் கோருவது சட்ட விரோதம்’’ என்று உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பானது, நிதர்சனத்துக்கு அப்பாற்பட்ட லட்சியவாதம் நம் எல்லோர் மனதையும் ஆக்கிரமிப்பது இக்காலத்தின் பிரச்சினையாகவே உருவெடுக்கிறதோ எனும் கேள்வியையும் எழுப்புகிறது.

பதில் சொல்லுங்கள் பன்னீர்செல்வம்!


இந்தியர்களை இந்தியர்களே ஆண்டுகொள்ளும் ஜனநாயக முறைக்கான ஆரம்பக் கட்டுமானங்களில் ஒன்று இன்றைய தமிழகச் சட்டப்பேரவையும் தலைமைச் செயலகமும். தமிழ் மக்களின் தலைவிதியைத் தீர்மானிக்கும் வளாகத்திலுள்ள தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் அறையில், அவர் முறைகேட்டில் ஈடுபட்டிருக்கும் சந்தேகத்தில் வருமான வரித்துறையினர் சோதனையிட்ட நாள் தமிழ்நாட்டின் அரசியல் - அரசு நிர்வாக வரலாற்றின் கறுப்பு நாட்களில் ஒன்று. இப்படியொரு நாளும் வரும் என்று நம் முன்னோர் எண்ணியிருப்பார்களா?

தமிழ்நாட்டின் எதிர்க்கட்சிகள் என்ன செய்கின்றன?


ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிந்தைய, கருணாநிதியின் தள்ளாமைக்குப் பிந்தைய இந்த இரு வாரக் காட்சிகள் மீண்டும் ஒரு கேள்வியைத் திட்டவட்டமாக எழுப்புகின்றன. தமிழ்நாட்டின் எதிர்க்கட்சிகள் என்ன செய்கின்றன? மாநில நலன்களை விடுத்து, ஒரு சீட்டு நிறுவனம்போல அவரவர் நலன், பாதுகாப்பு சார்ந்து காய் நகர்த்தும் இந்த அரசாங்கத்தை எதிர்கொள்ளத் தொலைநோக்கும் துடிப்பும் செயலூக்கமும் ஒருங்கமைந்த, மக்களிடம் இடைவிடாது சுழலும் ஒரு தலைவர் இன்று இருக்கிறாரா?

சசிகலாவை நீக்கிவிட்டால் அதிமுக பரிசுத்தமாகிவிடுமா?


நேரலைச் செய்தியில் பார்த்தேன், 'ஜெயா பிளஸ்' தொலைக்காட்சியில், எவ்வளவு சுமுகமாகவும் இயல்பாகவும் அதிகார மாற்றம் நடக்கிறது அதிமுகவில்! காலைச் செய்தியில், 'வி.கே.சசிகலா' ஆக இருந்தவர், மாலைச் செய்திக்குள் 'சின்னம்மா' ஆகிவிட்டார்! ஜெயலலிதா மறைவுக்குப் பின்னரும் அதிமுகவினரிடம் தொடரும் கச்சிதமான ரகசியத்தன்மை உள்ளபடியே வியக்க வைக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை தேர்ந்தெடுக்கப்பட்ட விதமாகட்டும், அடுத்தடுத்த நாட்களில், கட்சியின் மூத்த தலைவர்கள் போயஸ் தோட்ட இல்லத்தில் வரிசையாக அணிவகுத்து நின்றதாகட்டும், சசிகலாவிடம் தலைமைப் பதவியை ஏற்கச் சொல்லி அவர்கள் மன்றாடியதாகட்டும், ஒரு துறவியைப் போல அவர்களுக்கு சசிகலா முகங்கொடுத்ததாகட்டும்; ஜெயலலிதா சமாதியில் மலர் தூவிவிட்டு வரிசையாக அதிமுக தலைவர்கள் சசிகலா காலில் விழுந்து எழுந்து தங்கள் புதிய தலைமையை உலகுக்கு உணர்த்தியதாகட்டும்; இன்றைய அதிமுகவுக்கு சசிகலாவே பொருத்தமான தலைவராகத் தோன்றுகிறார்.

அதிமுக நிர்வாகிகள் பலரிடமும் பேசினேன். சசிகலா தலைமையேற்பதில், அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனென்றால், அதிமுகவுக்கு வெளியிலிருந்து, சாமானியப் பார்வைக்குத் தோற்றமளிக்கும்படி சசிகலா இதுவரை வெறுமனே ஜெயலலிதாவுக்குத் தனிப்பட்ட தோழியாக மட்டும் இருந்திருக்கவில்லை. ஜெயலலிதா அதிமுகவின் பொதுச்செயலாளராகப் பதவியேற்றது முதலாக அவருடைய மறைவு வரைக்கும் கட்சியில் நிர்வாகிகள் நியமனம், வேட்பாளர்கள் தேர்வு, அமைச்சரவை நியமனம் எல்லாவற்றிலும் சசிகலாவின் பங்களிப்பு இருந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், தமிழக முதல்வர் முதல் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் வரை இன்றைய அதிமுக நிர்வாகிகளில் பலர், சசிகலாவாலும் அவருடைய சுற்றத்தாராலும் இந்த இடத்துக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள் அல்லது இந்த இடத்தில் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் எப்படி சசிகலாவையும் அவருடைய சுற்றத்தாரையும் எதிர்ப்பார்கள்?

தமிழ்நாட்டுக்கு ஜெயலலிதா விட்டுச்சென்றது என்ன?


சிதம்பரம் பக்கத்திலுள்ள கொடியம்பாளையம் ஒரு தீவு கிராமம். அரசுசார் எந்தத் தேவைக்கும் கொள்ளிடம் ஆற்றைக் கடக்க வேண்டும். தேர்தல் சமயத்தில் நானும் நண்பர் முருகேசனும் அங்கு சென்றிருந்தோம். நல்ல பசி. “டீ குடிக்கலாமா?” என்றார் முருகேசன். போனோம். ஒரு மூதாட்டி நடத்தும் டீக்கடை அது. அவருடைய தோழிகள்போல மேலும் ஐந்தாறு மூதாட்டிகள் அங்கு உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தனர். வயது எண்பது, தொண்ணூறு இருக்கும். அரசாங்கத்தின் செயல்பாடு, அதிமுக ஆட்சியைப் பற்றி முருகேசன் மெல்ல அவர்கள் வாயைக் கிளறினார். கடும் அதிருப்தியான வார்த்தைகள் வெளிவந்தன. “சரி, இந்த முறை யாருக்கு ஓட்டுப் போடப்போகிறீர்கள்?” என்றார். “ரெட்டலைக்குத்தான்” என்றார்கள். முருகேசன் திகைத்துவிட்டார். “ஏம்மா, இந்நேரமும் அரசாங்கத்தை அவ்ளோ திட்டினீங்க; இப்போ திரும்பவும் அந்தம்மாவுக்கே ஓட்டுப்போடுறேன்றீங்க?” என்றவரிடம், “ஆயிரம் இருந்தாலும் அம்மா கட்சியில்ல?” என்றார்கள். வாக்கியத்துக்கு வாக்கியம் அம்மா, அம்மா, அம்மா. “ஏம்மா, உங்களுக்கெல்லாம் அந்தம்மாவோட அம்மா வயசு இருக்கும்போல இருக்கே, எப்படி அவங்களை நீங்க அம்மான்னு சொல்றீங்க?” என்றார் முருகேசன். ஒரு ஆயா சொன்னார், “நாங்கல்லாம் அம்மா அப்பா இல்லாத பிள்ளைகளா, அவோ அம்மான்னு இருக்காவோளா, ஏத்துக்கிட்டோம். தாய், தகப்பனில்லா எங்களுக்கு அவக அம்மாவா இருக்காங்க!”

ஜெயலலிதா இறந்த செய்தி அதிகாரபூர்வமாக வந்த இரவில் வீட்டில் எல்லோரும் தூங்கிக்கொண்டிருந்தார்கள். அந்நேரத்திற்குக் கணினியை இயக்க ஆரம்பித்த வெளிச்சத்தில் விழித்த என் மகள், “என்னப்பா?” என்றாள். செய்தியைச் சொன்னேன். அடுத்த கணம் ஓவென்று அழ ஆரம்பித்தாள். பள்ளிச் சிறுமி. இதுவரை ஜெயலலிதாவைப் பற்றி அவள் ஒரு வார்த்தை பேசி நான் பார்த்ததில்லை.

காலையில் ராஜாஜி மண்டபத்தில் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்த நின்ற நீண்ட வரிசையைக் கவனித்தேன். கணிசமாகக் கல்லூரி மாணவிகள் காத்திருந்தார்கள்.

மக்கள் எதன் பொருட்டெல்லாம் ஒரு தலைவரைத் தம்முடையவராக வரித்துக்கொள்கிறார்கள், எப்படியெல்லாம் ஒருவரைத் தமக்குள் உருவகித்துக் கொள்கிறார்கள் என்பதைப் பொதுவான ஒரு வரையறைக்குள் கொண்டுவந்துவிட முடிவதில்லை. ஜெயலலிதாவோடு சேர்ந்து அவர் இறந்த செய்தி கேட்ட அதிர்ச்சியில் 203 பேர் இறந்திருக்கிறார்கள். ஜெயலலிதா இறந்த அடுத்தடுத்த நாட்களில் அவருடைய சமாதிக்கு முன் எவ்வித எதிர்பார்ப்புமின்றி வந்து மொட்டையடித்துக்கொண்டு அழுது, தங்கள் துயரம் தீர்த்துக்கொண்ட நூற்றுக்கணக்கானோரின் கதைகளையும் கேட்டுப் பாருங்கள், இறந்தது ஒரு ஜெயலலிதா அல்ல!

தனிப்பட்ட வகையில், ஒரு காவியத்தன்மை வாய்ந்த சர்வதேச சினிமாவுக்கான திரைக்கதைக்குத் தகுதியானது ஜெயலலிதாவின் வாழ்க்கை. செல்வாக்கான குடும்பம். அது நொடித்துப்போகும்போது பிறக்கும் குழந்தை. வெகு சீக்கிரம் தன் தந்தையையும் இழக்கும் அக்குழந்தையை வளர்ப்பதற்காக சினிமாவைத் தேர்ந்தெடுக்கும் தாய். சிறு வயதிலேயே தாயின் பிரிவும் தனிமையும். ஒருவித லட்சிய வேட்கையோடு வளரும் அந்தக் குழந்தையின் கனவு ஒரு சராசரி நடுத்தர வர்க்கப் பெண்ணின் கனவுகளிலிருந்து பெரிதும் மேம்பட்டதல்ல. படிப்பு, வேலை, காதல், கணவர், குழந்தைகள், குடும்பம். எதுவும் எண்ணியபடி நிறைவேறவில்லை. மாறாக, அது சினிமாவில் கால் பதிக்கிறது. உச்சம் தொடுகிறது. அரசியலில் நுழைகிறது. தன்னைச் சுற்றி ஒரு பிம்பத்தை எழுப்புகிறது. பின், அந்தப் பிம்பமே அது என ஏனையோரையும் நம்பவைத்துத் தானும் நம்பலாகிறது. அதற்குள் அடைப்பட்டுக்கொள்கிறது. வழிபடலாகிறது. அந்தப் பிம்பத்துக்குள் சிறைப்பட்டிருந்த உயிர் என்ன நினைத்தது, எப்படி வாழ்ந்தது? தெரியாது. ஒருநாள் உயிர் பிரிகிறது. அப்போதும் சடலம் எனப் பிம்பமே மக்கள் முன் பார்வைக்கு வருகிறது, புதைகுழிக்குள் செல்கிறது. வாழ்வும் மர்மம், சாவும் மர்மம்!

மண்டையில் இருக்கும் போலீஸைக் கீழே இறக்குவது எப்படி?


நண்பர் ஷங்கர் நேற்று ஒரு போலீஸ்காரரைச் சந்தித்திருக்கிறார். அவர் ரகசியப் பிரிவில் பணியாற்றுகிறவர். பிரதமர் மோடி அறிவித்த ரூ.1,000, ரூ.500 பணமதிப்பு நீக்க நடவடிக்கை தொடர்பாகப் பேச்சு போயிருக்கிறது. “நடவடிக்கை சரி. கூடவே, உரிய முன்னேற்பாடுகளைச் செய்திருந்தால், மக்கள் இவ்வளவு அல்லல்பட வேண்டியதில்லை” என்று ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் இதுவரை இறந்துபோன கதையையும், நாட்டில் ஆகப் பெரும்பாலான மக்களுக்கு வேலை அளிக்கும் அமைப்புசாரா துறை முடங்கிக் கிடக்கும் கதையையும் பேசியிருக்கிறார் ஷங்கர். போலீஸ்காரர், “நாட்டுக்காக இவையெல்லாம் தாங்கிக்கொள்ளப்பட வேண்டிய கஷ்டங்கள்தான்” என்றிருக்கிறார். இப்படிச் சொன்னவர், ‘‘உங்களுக்குத் தெரியுமா? இந்த 15 நாட்களில், காவல் துறைக்கு ஒரு ஆள் கடத்தல் புகார்கூட வரவில்லை’’ என்றும் சொல்லியிருக்கிறார். பின்னர், ஷங்கர் கையில் ஒரு புத்தகத்தைக் கொடுத்திருக்கிறார். தொடர்ந்து வள்ளலாரைப் பற்றிப் பேசியவர், தான் ஒரு சன்மார்க்கர் என்று சொல்லி, சன்மார்க்க நெறிகள் தொடர்பிலும் பேசியிருக்கிறார். இந்த முரணைப் பற்றி வெகுநேரம் ஷங்கர் பேசிக்கொண்டிருந்தார்.

வள்ளலார் “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்று பாடியவர். அவரைச் சரணடைய முற்படும் ஒரு மனம் எப்படி அரசின் முன்னேற்பாடின்மையால், கோடிக்கணக்கான மக்கள் வருமானம் முடங்கிக் கிடக்கும் துயரங்களையும் சிகிச்சைக்குப் பணம் இல்லாமல் இறக்கும் குழந்தைகளின் மரணங்களையும்கூடப் போகிறபோக்கில் நியாயப்படுத்துகிறது! ஒருபுறம், அமைப்புக்காக சமூகத்தைக் கண்காணிக்கும் ரகசிய போலீஸ்காரர்; மறுபுறம் ஒவ்வொரு உயிரிலும் தன்னைக் காணும் சன்மார்க்கர். இருவரில் எவர் உண்மையானவர்?

ஒரு அமைப்புக்குள் இருக்கும் நம் ஒவ்வொருவரின் மண்டைக்குள்ளுமே இப்படி அமைப்பின் தவறுகளை நியாயப்படுத்தும் ஒரு ரகசிய போலீஸ்காரர் எப்போதும் உட்கார்ந்திருக்கிறார். நெஞ்சில் இருக்கும் சன்மார்க்கரை உயிரோட்டமாக வைத்துக்கொள்ள மண்டையிலிருக்கும் போலீஸ்காரருடன் சதா போராட வேண்டியிருக்கிறது.

இந்திரா காந்தி பிறந்த நூற்றாண்டு நாளன்று ஒரு விவாதம். பெரியவர் பாலசுப்பிரமணியம் “இன்றைக்கு நெருக்கடிநிலை அமலாக்கப்பட்டால், இந்தியா அதை எப்படி எதிர்கொள்ளும்?” என்று கேட்டார். “ஆச்சரியப்பட ஏதுமிருக்காது. பெரும்பான்மை இந்தியா அதை வரவேற்கும். ஏனென்றால், அன்றைக் காட்டிலும் நாட்டில் இன்று போலீஸ்காரர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது” என்றேன் நான்.

இன்னொரு நெருக்கடிநிலை ஏற்பட்டால் முன்பைக் காட்டிலும் அது மோசமாகக்கூட இருக்கலாம். ஐந்து காரணங்களைச் சொல்லலாம்.

இருளும் நாட்கள்


கோவை செட்டிபாளையம் அருகேயுள்ள பெரியகுயிலி பகுதியைச் சேர்ந்த தம்பதி சிவக்குமார் - ரஞ்சிதம். இவர்களுடைய மூன்று வயதுக் குழந்தை தீபஸ்ரீ நேற்று முன்தினம் இறந்துவிட்டாள். குழந்தைக்கு சளி, காய்ச்சல் என்று மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். சிவக்குமார் கையிலிருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் இன்று செல்லாதவை. மருத்துவமனையில் வாங்க மறுத்திருக்கிறார்கள். மனிதர் பணத்துக்காக அலைக்கழிந்திருக்கிறார். கையில் பணம் இல்லாத உயிருக்கு இந்நாட்டில் மதிப்பேது? பிள்ளை போய்ச் சேர்ந்துவிட்டது.

இரு நாட்களுக்கு முன்பு ஒடிசாவைச் சேர்ந்த சுதர்சன் சுரின் தன் பிள்ளையைப் பறிகொடுத்தார். உடல்நலம் குன்றிய குழந்தையைத் தூக்கிக் கொண்டு பக்கத்து ஊரான மெகபாலில் உள்ள மருத்துவமனைக்கு ஓடியிருக்கிறார். அவர்கள் அங்கே பார்க்க முடியாது என்று சொல்லி சம்பல்பூர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லச் சொல்லியிருக்கிறார்கள். சுதர்சனிடம் இருந்த பழைய நோட்டுகளை ஆட்டோ ஓட்டுநர்கள் வாங்க மறுத்துவிட்டனர். இரண்டரை வயது ஆண் குழந்தை இறந்துவிட்டது.

மும்பை, கோவந்தி பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெகதீஷ் - கிரண் தம்பதி. பிரசவ வலியெடுத்த கிரணுக்கு மருத்துவமனைக்குச் செல்லும் முன்னரே குறைப் பிரசவம் ஆகிவிட்டது. மனைவியையும் சிசுவையும் தூக்கிக்கொண்டு ஓடினார் ஜெகதீஷ். தனியார் மருத்துவமனையில் ரூ.6,000 முன்பணம் கேட்டிருக்கின்றனர். அவர்கள் முன்பணமாகக் கேட்ட முழுத் தொகையும் புதிய நோட்டுகளாக ஜெகதீஷிடம் இல்லை. மருத்துவமனையில் சேர்க்க முடியாது என்று கைவிரித்திருக்கிறார்கள். பணத்தை ஏற்பாடு செய்வதற்குள் அந்த சிசு மூச்சை நிறுத்திவிட்டது.

கள்ளப் பொருளாதாரத்தை மோடியால் கட்டுப்படுத்த முடியுமா?


பிரதமர் மோடியிடமிருந்து முக்கியமான அறிவிப்பு வெளியாகவிருக்கிறது என்ற தகவல் வந்தவுடனேயே “நெருக்கடி நிலை அறிவிப்பாக இருக்குமோ?” என்றார் ராம்பிரசாத். இந்த நாட்களில் எதையும் சொல்வதற்கு இல்லை. உத்தரப் பிரதேசத் தேர்தல் முடிவதற்குள் இந்தியா எதையும் சந்திக்கலாம்.


இஸ்ரேலிடமிருந்து இந்தியா கற்றுக்கொள்ள வேறொரு விஷயம் இருக்கிறது மோடி!


செய்தி அறையிலிருந்து நண்பர் பாஸ்கரன் ஒரு செய்தி அறிக்கையை நீட்டினார். “இமாச்சலப் பிரதேசத்தின் அழகிய பகுதிகளில் ஒன்றான மண்டிக்குப் பிரதமர் மோடி போயிருக்கிறார். இரு நீர்மின் திட்டங்களைத் தொடங்கிவைத்திருக்கிறார். விழாவில் அவர் இஸ்ரேலைப் பற்றி பேசியிருக்கிறார்” என்று சொன்னார் பாஸ்கரன். ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. ஒருவழியாகத் தண்ணீர் பிரச்சினை மோடியின் கண்களில் பட்டுவிட்டதோ என்று நினைத்தேன்.  செய்தி அறிக்கையை வாங்கிப் படித்தபோது, ஏமாற்றமே மிஞ்சியது. மோடி ஒருநாளும், தேர்தல் காய்ச்சலிலிருந்து விடுபடப்போவதில்லை என்பதையே அவருடைய மண்டி பேச்சும் சொன்னது. பாகிஸ்தான் மீது சமீபத்தில் இந்திய ராணுவம் நடத்திய துல்லியத் தாக்குதலைக் குறிப்பிட்ட மோடி, அது சார்ந்தே இந்தியாவை இஸ்ரேலுடன் ஒப்பிட்டுப் பேசியிருந்தார்.

காவிரியில் நமக்கு உரிமை இருக்கிறது, உரிமைகளைப் பேசும் தகுதி இருக்கிறதா?


இந்த வருஷம் காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்ட நாளில் மேட்டூரில் இருந்தேன். அங்கிருந்து கரையோரமாக பூம்புகார் வரை போய் வரலாமா என்று தோன்றியது. ஆற்றுக்குப் புது வெள்ளம் வரும்போது அதை வரவேற்பதற்கு என்று ஒரு மரபு உண்டு. பேராசிரியர் தங்க.ஜெயராமன் அடிக்கடி அதை நினைவுகூர்வார். “அந்நாட்களில் ஆற்றில் இப்படித் தண்ணீர் வருவதற்கு வெகு நாட்கள் முன்னதாகவே காவிரிப் படுகையில், குடிமராமத்து நடக்கும். ஊர் கூடி ஆற்றைத் தூர்வாரி, இரு கரைகளையும் மேம்படுத்தி, கால்வாய்களையும் வாய்க்கால்களையும் சீரமைப்பார்கள். ஆற்றில் தண்ணீர் வரும் நாளில், காவிரிப் பெண்ணை ஆரத்தித் தட்டுடன் வரவேற்பார்கள். சூடம் கொளுத்திச் சுற்றுவார்கள். அப்படியே விழுந்து வணங்குவார்கள். புது வெள்ளம் நெருங்கியதும் அதன் மீது பூக்களைச் சொரிவார்கள். அவள் நம் வீட்டுப் பெண். அவள் வந்தால்தான் வயல் நிறையும். வீட்டில் அன்னம் நிறையும். செல்வம் பெருகும். ஆறா, அம்மா அவள். மகளாகப் பிறக்கும் தாய்.  அள்ளிக்கொடுக்கும் தாய். தெய்வம். வீட்டு தெய்வம்.” இதை ஜெயராமன் சொல்லி முடிக்கும்போதெல்லாம் அவருடைய கண்களில் நீர் கோத்திருக்கும்.

காவிரிக் கரையையொட்டிப் பயணிப்பது ஒரு பேரனுபவம். எழுத்தாளர்கள் தி.ஜானகிராமனும் சிட்டியும் குடகில் தொடங்கி  பூம்புகார் வரை பயணித்து எழுதிய ‘நடந்தாய் வாழி காவிரி..’ புத்தகம் ஒரு தனித்துவமான பதிவு. நான் கல்லணையையொட்டி மழை நாட்களில், தண்ணீர் பொங்கும் நாட்களில் கொஞ்சம் பயணித்ததுண்டு. காவிரியில் தண்ணீர் இல்லா நாட்களில், தண்ணீர் வரும் நாட்களில் பயணித்ததில்லை. அப்படிச் செல்ல நினைத்ததையும் அங்கு பார்க்க நேர்ந்ததையும் என்னவென்று சொல்வது? தீவினை. சபிக்கப்பட்ட ஒரு நாள் அது.

ஆறா? எங்குமே அது ஆறாக இல்லை. கரைகள் தளர்ந்திருந்தன. வழிநெடுகிலும் புதர் மண்டிக் கிடந்தது. இடையிடையே மணல் கொள்ளையர்களின் சூறையாடலைச் சொல்லும் பெரும் பள்ளங்கள். காய்ந்து கிடந்த ஆற்றில் தண்ணீர் தென்பட்ட இடங்கள் அத்தனையும் கழிவுகள் கலக்கும் முகவாய்கள். ஆலைக் கழிவுகள், ரசாயனக் கழிவுகள், ஊர்க் கழிவுகள். இவை அத்தனையோடும் புது வெள்ளம் ஒன்றிக் கலக்கிறது. ஆற்றுக்கு ஏற்பட்டிருக்கும் மோசமான சேதத்தை மூடி நிறைக்கிறது. அடுத்தடுத்த வாரங்களில் வெவ்வேறு காரணங்களுக்காகக் காவிரிப் படுகைக்குச் செல்ல நேர்ந்தது. கல்லணையிலிருந்து இந்த முறை தண்ணீர் திறக்கப்பட்ட நாளில் தஞ்சாவூரில் இருந்தேன். அதே நாளில் கும்பகோணம் சென்றேன். மன்னார்குடி சென்றேன். திருவாரூர் சென்றேன். ஒரு இடத்திலும் தூர்வாரப்பட்டிருக்கவில்லை. எங்கும் புதர்கள், மணற்சூறை, கழிவுகள்... இரு மாநிலங்கள் தீப்பிடித்து எரிகின்றன; ஒவ்வொரு நாளும் இங்கு வந்தடையும் ஒவ்வொரு சொட்டுத் தண்ணீரையும் உச்ச நீதிமன்றத்தில் வழக்காடியே பெறுகிறோம். இந்தச் சூழலிலும் ஒரு நதியை இப்படித்தான் சீரழிப்போம் என்றால், எவ்வளவு கேவலமானவர்கள் நாம்!

தனிநபர் அந்தரங்கத்துக்கும் அரசின் வெளிப்படைத்தன்மைக்குமான எல்லை எது?


என்னுடைய செல்பேசியிலிருந்து தனிப்பட்ட வகையில் என் மனைவியிடம் எதையும் நான் பேச முடிவதில்லை. ஒவ்வொரு வார்த்தையும் ஒட்டுக்கேட்கப்படுவதாகச் சந்தேகிக்கிறேன். ஒரு ஊடகவியலாளனாக இந்தச் சமூகத்தில் நான் இழக்கும் அந்தரங்க உரிமை இது. சமூகத்தை நொந்துகொள்ள ஏதும் இல்லை. இந்த வாழ்க்கை நான் தேர்ந்தெடுத்தது. நாம் இரண்டு வாழ்க்கை வாழ்கிறோம். பொது வாழ்க்கையில் நாம் எவ்வளவுக்கு எவ்வளவு சமூகத்தின் உள்ளே நுழைகிறோமோ, அவ்வளவுக்கு அவ்வளவு நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையில் சமூகம் உள்ளே நுழைகிறது. பொது வாழ்வின் பங்கேற்பால், தனிப்பட்ட வாழ்வில் எவ்வளவு அந்தரங்க உரிமைகளை இழக்கிறோம் என்று ஆதங்கப்படுபவர்கள், மறுபுறம் சமூகத்தில் எவ்வளவு உரிமைகளை எடுத்துக்கொள்கிறோம் என்பதையும் யோசிக்க வேண்டும்.

சீன் போதும்... பேரம் பேசுங்கள்!


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் கெடு விதித்து உத்தரவிட்டது, மத்திய அரசுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு. பிரதமர் மோடி இதைப் பயன்படுத்திக்கொள்வார் என்றே தோன்றியது. அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி, “காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது நாடாளுமன்றத்தின் அதிகார வரம்புக்கு உட்பட்டது. இந்த விஷயத்தில் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது” என்று அரசின் நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் சொன்னபோது, ஏமாற்றமாக இருந்தது. இந்த வாதம் சட்டப்படி சரியாக இருக்கலாம்; அறம் சார்ந்தோ, தேச நலன் சார்ந்தோ நிற்காது. நெருக்கடிகள் துணிச்சலாகச் செயல்படுவதற்கான தருணங்களை நமக்கு உருவாக்கி வழங்குகின்றன. மாறாக, பொறுப்புகளைத் தள்ளிப்போட்டு, தப்பித்தோடும் உத்தியையே நாம் பெரிதும் தேர்ந்தெடுக்கிறோம்.

அரசு சொல்வதுபோல, நாடாளுமன்றம் கூடி எடுக்க வேண்டிய முடிவாகவே இருக்கட்டும்; யார் முன்னின்று நாடாளுமன்றத்தைக் கூட்டுவது? அந்த முடிவை எடுப்பதற்கான செயல்திட்டம் என்ன? அதற்கான காலக்கெடு என்ன? இதுபற்றி எப்போது மோடி அரசு பேசும்? காவிரியில் நீதி கேட்டு தமிழகம் நீதிமன்றப் படியேறி அரை நூற்றாண்டு ஆகப்போகிறது. இறுதித் தீர்ப்பு வெளியாகி 10 ஆண்டுகள் ஆகின்றன. இன்னும் எவ்வளவு காலம் தமிழகம் காத்திருக்க வேண்டும்?

ஜெயலலிதாவுக்கு என்ன ஆயிற்று?


யாரைச் சந்தித்தாலும், “ஜெயலலிதாவுக்கு என்ன ஆயிற்று?” என்று கேட்கிறார்கள். அவர்களின் கேள்விக்குப் பின் இருப்பது வெறும் பரபரப்பை நாடும் ஆர்வம் மட்டுமே இல்லை. நாம் உதட்டைப் பிதுக்குகையில், அவர்கள் தமக்குத் தெரிந்தவற்றை நீளமாகச் சொல்கிறார்கள். துண்டு துண்டான தகவல்கள். பல்வேறு வகையிலான யூகங்கள். முன்னுக்குப் பின் முரணான நம்பிக்கைகள். கவலைகள். அக்கறைகள். ஆற்றாமைகள். தம்மைக் காட்டிலும் ஊடகவியலாளர்களுக்குக் கூடுதலான தகவல்கள் தெரிந்திருக்கும் என்று பொதுஜனம் நம்புவதில் பிழையில்லை. இது பிறழ்காலம். ஊடகவியலாளர்களிடமிருந்து பொதுஜனம் செய்தி தெரிந்துகொண்ட காலம் போய், சமூக வலைதளங்களிலிருந்து ஊடகவியலாளர்கள் செய்தி தெரிந்துகொள்ள நேரும் காலம். குழப்பங்களுக்கான மையம் தமிழக அரசின் செயல்பாடு.

புதுமைப்பித்தன் நிகழ்ச்சியில் ஜெயலலிதா ஏன் பங்கேற்கவில்லை?


கேரளம் என்று மட்டும் இல்லை; படைப்பாளிகளைக் கொண்டாடும் விஷயத்தில், இந்தியாவிலேயே பல சமூகங்கள் நம்மைக்காட்டிலும் மேம்பட்ட நிலையில் இருக்கின்றன!

திருநெல்வேலி, வண்ணாரப்பேட்டையில் புதுமைப்பித்தன் வாழ்ந்த சாலைத் தெருவுக்குப் ‘புதுமைப்பித்தன் வீதி’ என்று பெயர் சூட்டியிருக்கிறது மாநகராட்சி நிர்வாகம். எழுத்தாளரும் நண்பருமான நாறும்பூநாதன், “இந்தப் பெயர்சூட்டலுக்குப் பின் 26 வருடப் போராட்டம் இருக்கிறது” என்று சொன்னார். “1990-ல் நெல்லையில் நடந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்க மாநில மாநாட்டில், இதுபற்றி முதன்முதலில் தீர்மானம் நிறைவேற்றினோம். 2006-ல் அவரது நூற்றாண்டு கொண்டாடப்பட்டபோது ரூ.2-க்கு அவருடைய வரலாற்றைக் குறுவெளியீடாக அச்சிட்டு விநியோகித்து, இதுபற்றிய பிரச்சாரத்தை நடத்தினோம். அடுத்தடுத்து வந்த மாநகராட்சி நிர்வாகங்களிடம் வலியுறுத்திவந்த நிலையில், இப்போது மேயர் புவனேஸ்வரி காலத்தில் இது சாத்தியமாகி இருக்கிறது” என்றார். “இப்போதும் புதுமைப்பித்தன் வாழ்ந்த வீடு அங்கிருக்கிறதா?” என்று கேட்டேன். “அது இப்போது உருமாறிவிட்டது” என்றார் நாறும்பூநாதன்.

அண்ணா ஒருநாள் இந்தியாவுக்குத் தேவைப்படுவார்!


அன்றைக்கு கொல்கத்தாவிலுள்ள வங்க அகாடமியில் இருந்தேன். “தமிழக அரசுப் பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு இனி ஒன்பது மாதமாக உயர்த்தப்படும்” என்று அப்போதுதான் அறிவித்திருந்தார் முதல்வர் ஜெயலலிதா. நான் சந்தித்த நண்பர்கள் இதுபற்றிப்பேசலானார்கள். “இது முற்போக்கான முடிவு; இது மட்டும் அல்ல, நிறைய. விலையில்லாஅரிசி, பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள், மடிக்கணினி, ஒரு ரூபாய் இட்லி… தமிழ்நாடு தொடர்பாக மம்தா நிறையக் கேட்டுத் தெரிந்துகொள்கிறார். அவருக்குத் தமிழ்நாடு ஒரு முன்மாதிரி” என்றார்கள்.

கால் நூற்றாண்டு கம்யூனிஸ்ட்டுகள் ஆண்ட மாநிலம் சமூக நலத்திட்டங்களின் தாக்கங்களைப் பற்றி இப்போது நிறைய யோசிக்கிறது. இந்த ஆண்டு ஜெயலலிதாவின் சுதந்திர தின உரையும் அவர்களைக் கவனிக்க வைத்திருந்தது. “உண்மையான விடுதலை, பொருளாதாரச் சுதந்திரத்தில் இருக்கிறது” என்று தன்னுடைய உரையில் குறிப்பிட்டிருந்த ஜெயலலிதா, ‘பொதுச் சரக்கு, சேவை வரிகள் (ஜிஎஸ்டி)மசோதா’ விவகாரத்தில் நாட்டிலேயே தனித்து நிற்கும் முடிவை எடுத்ததையும் ஆச்சரியமாகப் பேசினார்கள். தொடர்ந்து நாடு முழுக்க அரசியலில் என்னென்னவோ மாற்றங்கள் நடந்தாலும் தமிழகம் மட்டும் எப்படி விடாமல் திராவிடக் கட்சிகளுடனேயே பயணிக்கிறது என்று கேட்டார்கள். அவர்களுடைய பெரிய சந்தேகம், “திராவிடக் கட்சிகள் சிந்தாந்த வலுவற்றவை. அவற்றுக்குத் திட்டவட்டமான கொள்கை ஏதும் இருக்கிறதா என்றுகூடத் தெரியவில்லை. எனினும், ஆச்சரியமான காரியங்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடக்கின்றனவே எப்படி?’”

தமிழகத்துக்கு வெளியே நம்மூர் பேச்சு அடிபடும்போது இப்படி திராவிட இயக்கத்தினரின் ‘சித்தாந்த வறட்சி’யைப் போய் விவாதம் தொடுவது இயல்பானது. நான் அவர்களிடம் சொன்னது: ‘‘சாமானிய மக்கள் ஒரு அரசியல் இயக்கத்திடம் அதிகாரத்தை ஒப்படைக்கையில், அதன் எதிர்காலச் சித்தாந்தங்களைப் பற்றி அல்ல; சமகாலத் தேவைகளுக்கு அது என்ன தீர்வுகளை முன்வைக்கிறது என்பதற்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஒவ்வொரு சமூகமும் அதன் தேவைக்கேற்ற ஆட்களை ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவாக்கிக்கொள்கிறது. திராவிட இயக்கம் தமிழ்ச் சமூகம் தன்னுடைய தேவையின் நிமித்தம் உருவாக்கிக்கொண்டது. சித்தாந்தங்கள் அல்ல; தமிழ்ச் சமூகத்தின் சமகால அபிலாஷைகளும் கலாச்சாரமுமே திராவிட இயக்கங்களின் போக்கைத் தீர்மானிக்கிறது. மக்கள் அமைதியாக இருந்தால், அவர்களே மது ஆலைகளை நடத்துவார்கள்; மக்கள் போராட்டம் நடத்தினால், அவர்களே மதுவிலக்கையும் கொண்டுவருவார்கள்.

அரசு உணவகத்தில் ஒரு ரூபாய்க்கு இட்லி கொடுக்கிறார்கள், ரேஷன் கடைகளில் விலையில்லாமல் அரிசி கொடுக்கிறார்கள், பள்ளி மாணவ - மாணவியருக்கு சைக்கிள்களும் மடிக்கணினிகளும் கொடுக்கிறார்கள், நாட்டிலேயே தமிழகத்தில் மட்டும் 69% இடஒதுக்கீடு நடைமுறையில் இருக்கிறது, ‘ஒரே நாடு - ஒரே வரி’ என்ற முழக்கத்தோடு நாடு முழுக்க ஒரே மாதிரியான வரிவிதிப்பு முறையை இந்திய அரசு கொண்டுவரும்போது தமிழகம் மட்டும் அதை எதிர்க்கிறது… இப்படி இன்றைக்குத் தமிழகம் சார்ந்து பெருமிதத்தோடு பேசப்படும் விஷயங்கள் ஒவ்வொன்றுக்கும் பின்னால் வரலாறு இருக்கிறது. திராவிட அரசியலின் முதல் ஆட்சிப் பிரதிநிதி அண்ணாவினுடைய அரசியல் தொடர்ச்சி இவை. அன்றாட அரசியலில் எவ்வளவு கீழே விழுந்தாலும், சில தருணங்களில் அவர்கள் தீர்மானிக்கும் அண்ணா பாணி முடிவுகள்  அவர்களை உயிர்ப்போடு அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சேர்த்துவிடுகிறது. தமிழ் மக்களின் அடியாதார இயல்பிலிருந்து பெரிய அளவில் விலகிவிடாமல், காலத்தோடு ஒன்றிப் பயணிக்கும் வரையில் திராவிட இயக்கத்தினரை எவரும் அசைக்க முடியாது!”

தமிழக அரசியலில் அண்ணாவுக்கு இன்றைக்கும் மதிப்பு இருக்கிறதா என்று அவர்கள் கேட்டார்கள். அண்ணாவின் மூன்று அரசியல் முழக்கங்களுக்கு இந்திய அரசியலில் என்றைக்கும் மதிப்பிருக்கும் என்று நான் சொன்னேன். 1. தேசியம் எனும் பெயரில் இன்றளவும் ஒட்டுமொத்த இந்தியாவையும் ‘இந்தி, இந்து, இந்தியா’ எனும் ஒற்றைக் கலாச்சாரத்தின் கீழ் வளைக்க நடக்கும் அரசியலைத் துல்லியமாக அம்பலப்படுத்தி, இந்திய ஒன்றியத்தின் உண்மையான நீட்சிக்காக அவர் இறுதிவரை குரல் கொடுத்த மாநிலங்கள் சுயாட்சி. 2.இருமொழிக் கொள்கை என்ற பெயரில், தாய்மொழியோடு அவர் துணை மொழியாக அவர் கொடுத்துச்சென்ற ஆங்கிலம். 3. வெகுஜன மயக்குத் திட்டங்கள் என்ற பெயரில் டெல்லியின் மேட்டுக்குடி வர்க்கம் திட்டமிட்டு கொச்சைப்படுத்திவரும் அவர் வழிகாட்டிய சமூகநலத் திட்டங்கள்.

அன்புதான் என்னிடமுள்ள ஒரே செய்தி - இரோம் ஷர்மிளா


உலகின் நீண்ட, 16 வருட உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து, மருத்துவமனையிலிருந்து இரோம் ஷர்மிளா திரும்பிய மறுநாள் அவரைச் சந்திக்கப் போயிருந்தேன். மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள ஜவாஹர்லால் நேரு மருத்துவமனையின் முன் நிறுத்தப்பட்டிருந்த காவல் படையினரின் எண்ணிக்கையில் பெரிய மாறுதல் ஏதும் ஏற்பட்டிருந்ததாகத் தெரியவில்லை. இங்குதான் ஷர்மிளா வைக்கப்பட்டிருந்தார். இதுவே நீண்ட காலம் அவரது சிறைக் கூடமாகவும் இருந்தது.

ஊரின் முக்கிய இடங்கள், கடை வீதிகள், சாலை முக்குகள் எங்கிலும் இந்தியப் படையினர் நிறைந்திருந்தார்கள். சாலையில் ரோந்து வாகனங்கள் வந்து சென்ற வண்ணம் இருந்தன. மாலை ஆறு மணிக்கெல்லாம் ஊரடங்கு சூழல் ஊரின் மேல் ஒரு கம்பளிப் போர்வைபோல மூடிவிடுகிறது. நிறுவனங்கள், கடைகள் அடைக்கப்பட்டு, ஆளரவமற்ற சாலைகளில் ரோந்து வாகனங்களும் படையினரும் மட்டுமே தென்படுகின்றனர். அங்கொன்றும் இங்கொன்றுமாக சின்ன பெட்டிக் கடைகள், உணவு விடுதிகள் மட்டும் திறந்திருக்கின்றன. கடைவீதிகளில் அரிதாக ஆட்கள் அவசர அவசரமாகக் கடந்து செல்கிறார்கள்.


அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஆயுதப் படையினருக்கான சிறப்பு அதிகாரச் சட்டம் அமலில் உள்ள மாநிலம் இது. சுதந்திர மணிப்பூர் போராட்டம், அது போக மாநிலத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட இனக் குழுக்கள் தமக்குள் நிகழ்த்திக்கொண்டிருக்கும் குழு மோதல்கள் என மணிப்பூர் கொந்தளிப்பில் இருந்த 1958-ல், இங்கு மத்திய அரசால் ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டம் அமலாக்கப்பட்டது. இந்தியாவில் மிச்சமிருக்கும் காலனியாதிக்கக் கால ஜனநாயக விரோத கருப்புச் சட்டங்களில் ஒன்று இது. ராணுவப் படையினர் எவர் வீட்டிலும் புகுந்து யாரையும் விசாரிக்கவும், கைதுசெய்யவும், சுட்டுக் கொல்லவும், எந்த விசாரணையும் இன்றி வருடக்கணக்கில் சிறையில் அடைத்து வைக்கவும் உதவும் சட்டம். பிரிவினைவாதிகளையும் எல்லைக்கு வெளியிலிருந்து ஊக்கம் பெறும் தீவிரவாதக் குழுக்களையும் ஒடுக்க இந்தச் சட்டம் தேவை என்கிறது இந்திய ராணுவம். மணிப்பூரிகள் இந்தச் சட்டத்துக்கு நிறைய பலி கொடுத்துவிட்டார்கள். ஆரம்ப நாளிலிருந்து, இச்சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்திப் போராடிவருகிறார்கள்.

சமூக மாற்றம்தான் கல்வி மாற்றத்தை உண்டாக்கும் - எஸ்.எஸ்.ஆர். பேட்டி


சென்னை, சாலிகிராமத்தில் இயக்குநர் பாலுமகேந்திரா இருந்த வீட்டிலிருந்து பத்து வீடுகள் தள்ளியிருக்கிறது அறிஞர் எஸ்.எஸ்.இராஜகோபாலனின் வீடு. “பாலு மகேந்திரா உயிரோடு இருந்த வரைக்கும் வாரத்தில் ஒரு முறையாவது சந்திச்சுருவோம். நல்ல பேச்சுத் துணைகள்ல ஒருத்தரை இழந்துட்டேன்” என்கிறார். வீடு பரம சுத்தமாக இருக்கிறது. மிக மிக அத்தியாவசியப் பொருட்களைத் தவிர ஏதும் இல்லை. “பொருட்களைச் சேர்க்குறது எங்க ரெண்டு பேருக்குமே பிடிக்கிறது இல்லை. இந்த ரெண்டு நாற்காலியும் அறுவது வருஷத்துக்கு முன்னாடி வாங்கினது. மூணாவதா ஒரு ஆள் வந்தா, பாயை விரிச்சி உட்கார்ந்துருவோம்” என்றவாறே பழைய இரும்பு மடக்கு நாற்காலி ஒன்றை நான் உட்கார விரித்துப்போடுகிறார். அவர் உட்கார்ந்திருக்கும் சாய்வு நாற்காலியைச் சுற்றி அன்றைய தினம் வந்திருந்த பத்திரிகைகள் கிடக்கின்றன. எண்ணுகிறேன். ஐந்து தினசரிகள். கூடவே சில சஞ்சிகைகள். “ஒரு நாளைக்கு ஏழு தினசரி படிக்கிறேன். நான் வாங்குறது நாலு. பக்கத்து வீடுகள்லேர்ந்து அவங்க படிச்சு முடிச்சதும் மூணு வந்துரும். தினசரிகள் நீங்கலா முப்பது இதழ்கள் வருது. இது தவிர ‘பிபிசி’, ‘தி கார்டியன்’, ‘தி நியூயார்க் டைம்ஸ்’லாம் இணையத்துல படிச்சுருவேன். அப்புறம், ஒரு ஆசிரியரா ஆங்கிலமும் கணிதமும் என்னோட ஏரியா. தினம் அதுல என்ன மாற்றம் வந்துருக்கோ அது சம்பந்தமா ஒரு கட்டுரையாச்சும் படிச்சுருவேன். இது போக புத்தகங்கள் இருக்கு. இப்ப ‘ஜீன்’ படிச்சுக்கிட்டிருக்கேன்” என்பவர், புத்தகத்தை எடுத்துக் காட்டுகிறார்.

ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் படிக்கிறீர்கள்? இந்த 86 வயதில் வாசிப்பு, புத்தகங்கள் மீதான மதிப்பீடுகள் ஏதேனும் மாறியிருக்கின்றனவா?
காலைல 4.30 மணிக்கு எழுந்துருவேன். காலைக் கடன்களை முடிச்சுட்டு வந்து உட்கார்ந்த உடனேயே வாசிப்பு தொடங்கிடும். சின்ன வயசுல அப்பா ஊட்டின ஆர்வம் இது. ஆசிரியர் உத்தியோகத்துக்கு வந்த பின்னால, உங்களுக்குப் பிடிச்சது, பிடிக்காதது போக மாணவர்கள் கேட்குற எல்லாத்தையும் பத்தித் தெரிஞ்சுக்க வேண்டியாயிடுது இல்லையா? அதனால, வாசிப்பு இன்னும் அதிகமாயிடுச்சு. எங்க வீட்டுக்காரம்மாவும் நல்ல வாசகர். படிச்சு முடிச்சதும் மனசுக்குப் பட்டதை ஆசிரியர் கடிதமா எழுதி அனுப்பிடுறது என்னோட வழக்கம். கணினி நம்ம வேலையை இன்னும் சௌகரியம் ஆக்கிடுச்சு. எதுவா இருந்தாலும், மின்னஞ்சலைத் தட்டிவிட்டுர்றது. வாசிப்பு நம்மளை ஒவ்வொரு நாளும் புதுசாக்கிடுது. பாருங்க, எனக்கு 86; வீட்டுக்காரம்மாவுக்கு 83. இந்த வயசெல்லாம் எங்க உடம்புக்குத்தான். மனசு எப்பவும் புதுசு!

வாசிப்பு நீங்கலாக ஆரோக்கியத்துக்கு வேறு என்னென்ன காரணங்களைச் சொல்வீர்கள்?
நம்ம வீடு, நம்ம வாசல்னு குறுக்கிக்காம சமூகத்தோட நம்மளைப் பிணைச்சுக்குறது. இந்தப் பார்வை வந்துடுச்சுன்னாலே காசு இருந்தாக்கூட, உங்க தேவைக்கு அதீதமா ஒண்ணைக்கூட வாங்க மாட்டீங்க. போதும்கிற நிறைவு வந்துரும். சந்தை இழுக்குற வேகத்துக்கு ஓட மாட்டீங்க. இன்னைக்கும் ராத்திரி எட்டு மணிக்கெல்லாம் படுத்துருவோம். சின்ன வயசுல வீட்டுல விளக்கு எரியுறப்ப தேவையில்லாம விளக்கு எரிஞ்சா எண்ணெய் விரயமாகும்னு அம்மா ஞாபகப்படுத்திக்கிட்டே இருப்பாங்க. இன்னைக்கு மின்சாரத்துல விளக்கு எரிஞ்சாலும் அது தொந்தரவு செய்யுது. அப்புறம் ராத்திரி சீக்கிரம் படுத்து, காலைல சீக்கிரம் எழுந்துக்குறது உடம்போட இயல்பா பொருந்துறதா எனக்குப் படுது.

மொய்யில் என்ன இழிவு?


ஆடி மாதம் மொய் விருந்து மாதம். சின்ன வயதில் மொய் விருந்துக்குச் சென்றது உண்டு. எனினும், அதன் சமகாலப் பொருத்தப்பாடு என்னவென்பதை அங்கு தங்கிப் பார்த்து எழுத வேண்டும் என்று ஓர் எண்ணம் உண்டு. ஒருவித கேலி தொனிக்க வெளிவரும் இது தொடர்பிலான ஊடகச் செய்திகள், இந்த எண்ணத்தைச் சமீபகாலமாகவே அதிகரித்துவந்தன. முன்திட்டம் ஏதும் இல்லாமல் ஆலங்குடி புறப்பட்டேன்.

புதுக்கோட்டை - பட்டுக்கோட்டை இடையேயுள்ள சின்ன ஊர் ஆலங்குடி. வண்டி புதுக்கோட்டையைத் தாண்டியதுமே சாலையோரங்களில் மொய் விருந்துப் பதாகைகள் வரிசை கட்ட ஆரம்பித்துவிட்டன. எல்லாம் பத்துப் பதினைந்து அடி நீளப் பதாகைகள். கருணாநிதி கும்பிடு போட்டு அழைக்கிறார். ஜெயலலிதா இரு விரல் காட்டிச் சிரிக்கிறார். ராகுல், பிரியங்கா சூழ சோனியா குடும்பத்தோடு வரவேற்கிறார். ரஜினி, கமல், விஜய், அஜித், தனுஷ், நயன்தாரா, அனுஷ்கா, த்ரிஷா கூடவே மொய் விருந்து நடத்துபவர்களும் சிரிக்கிறார்கள். திருவிழாவுக்குக் கட்டுவதுபோல வழிநெடுக மின் கம்பங்களில் ஒலிபெருக்கிகள் கட்டப்பட்டு ராமராஜன் பாடிக்கொண்டிருந்தார்.

ஆலங்குடியைச் சென்றடைந்தபோது காலை 10 மணி இருக்கலாம். அங்கிருந்து பயணத்தில் நண்பர் சுரேஷ் சேர்ந்துகொண்டார். அந்த நேரத்திலேயே கூட்டம் கூட்டமாக மக்கள் வெள்ளையும் சொள்ளையுமாகப் போய்க்கொண்டிருந்தார்கள். மொய் விருந்துச் சடங்கில் விருந்து என்பது ஆட்டுக்கறிச் சாப்பாட்டைக் குறிப்பது. “விருந்துன்னா முன்னாடியெல்லாம் மதியம்தானே நடக்கும்?’’ என்றேன். ‘‘காலைல ஒம்போது  மணிக்கெல்லாம் ஆரம்பிச்சுருவாக. ஒரே நாள்ல நாலஞ்சு விருந்துக நடக்குது. காலையிலயே ஆரம்பிச்சாதானே, நாலு எடத்துக்கும் போவணும்னு நெனக்கிறவகளால போய்ச் சேர முடியும்?’’ என்றார். ‘‘ஒரு நாளைக்கு நாலு விருந்தா? அப்படின்னா, ஒரு வீட்டுக்கு இந்த மாசத்துல எத்தனை பத்திரிகை வரும்?’’ என்றேன். அவர் வீட்டுக் கூரையில் செருகியிருந்த அழைப்பிதழ்களை உருவிப் போட்டார். மலைப்பு ஏற்பட்டது. கிட்டத்தட்ட இருநூறு, முந்நூறு அழைப்பிதழ்கள்!

‘‘ஊரைச் சுத்தி இருக்க பத்து ஊர்லேருந்தும் பத்திரிகை வரும். விருந்து வைக்கிறவுகளுக்குத் தெரிஞ்சவக, தெரியாதவக பேதம் கெடையாது. பள்ளிக்கூடப் பசங்ககிட்ட பத்திரிகையக் கொடுத்து நூறு, இருநூறு காசைக் கொடுத்துட்டா பேப்பர் போடுற மாதிரி எல்லா வீட்டுலயும் அவக போட்டுட்டுப் போயிடுவாக. நீங்க விருப்பப்படுற விருந்துக்குப் போய் மொய் வைக்கலாம். இப்படி வருஷத்துக்கு நூறு பேருக்கு நீங்க மொய் வெச்சீகன்னா, அஞ்சு வருஷம் கழிச்சு, நீங்க இப்படி ஒரு விருந்து வைக்கும்போது, அதுவரைக்கும் நீங்க மொய் வெச்ச ஐந்நூறு பேரும் உங்களுக்கு மொய் வைப்பாக. கூடவே, புதுசா உங்களை விரும்பி வர்றவங்களும் மொய் வைப்பாக. பத்திரிகை வர்ற விருந்துக்கெல்லாம் போகணும்னு இல்ல. ஆனா, உங்களுக்கு மொய் செஞ்சவகளுக்கு அவசியம் போய்த் திரும்பச் செய்யணும். இங்கெ நீங்க புரிஞ்சுக்க வேண்டிய முக்கியமான அம்சம், பொதுவா நாடு முழுக்க வீட்டு விசேஷங்களுக்குப் போய் சாப்பிட்டுட்டு நூறு, இருநூறுன்னு மொய் எழுதிட்டு வர்ற மாதிரி இல்ல இந்த மொய் விருந்து. இங்கே விசேஷமே மொய்க்குத்தான். மொய்ங்கிறது ஒரு வகைக் கடன், ஒரு வகை கொடுக்கல் வாங்கல்!’’ என்றார்.

ஊரைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பினோம். பொதுவாக, எல்லோர் வீட்டிலும் மொய் விருந்து நோட்டு என்றே வருஷ வாரியாக நோட்டுகள் இருந்தன. நீங்கள் எனக்கு ஆயிரம் ரூபாய் மொய் செய்திருந்தால், நான் திரும்பச் செய்யும்போது குறைந்தது ஆயிரத்து நூறு செய்ய வேண்டுமாம். வருஷக் கணக்கில் உங்கள் பணத்தை நான் வைத்திருப்பதற்கும், அதைப் பயன்படுத்திச் சம்பாதிப்பதற்கும் உங்களுக்குக் கொடுக்கும் சிறிய லாபப் பங்காக இதைக் கருதலாம். இந்தப் பழைய மொய் ஆயிரத்து நூறு தவிர, புதுக் கணக்கு என்ற பெயரில் ஐந்நூறோ ஆயிரமோ செய்கிறார்கள். பொருளாதார உறவு தொடர வேண்டும் என்று இதற்கு அர்த்தமாம். இனி மொய் வேண்டாம் என்று முடிவெடுத்தால், அவர்கள் முன்னதாக வைத்த மொய்ப் பணத்தை மட்டும் திருப்பிச் செய்தால் போதுமானது.

ஐந்தாறு இடங்களில் மறுநாள் மொய் விருந்துகள் நடந்தன. நாங்கள் வடகாட்டில் நடந்த ஒரு விருந்திலிருந்து தொடங்கினோம். பொதுவாக, இந்த விருந்துகளைக் கிராமச் சமூகக் கூடத்திலோ, கோயில் இடத்திலோ நடத்துகிறார்கள். இதற்கு வாடகை உண்டு. அது கிராமப் பொதுக் காரியங்களுக்குப் பயன்படுத்தப்படும். நாங்கள் பங்கேற்ற விருந்து, முத்துமாரியம்மன் கோயிலை ஒட்டியுள்ள இடத்தில் நடந்தது. திருவிழாபோலக் கூட்டம். குளிர்பான வண்டிக்காரர்கள், ஐஸ்கிரீம் வண்டிக்காரர்கள் எல்லாம் நின்றார்கள்.

அந்த விருந்தை 10 பேர் சேர்ந்து நடத்தினார்கள். அதாவது, 10 பேருக்கும் சேர்த்து ஒரே அழைப்பிதழ்; ஒரே பந்தல்; ஒரே இடத்தில் சாப்பாடு. வாசலில் 10 பேரும் வரிசையாக நின்று வரவேற்கிறார்கள். உள்ளே சாப்பிடப் போகச் சொல்கிறார்கள். பந்தலுக்குள் ஒருபுறம் விருந்து நடக்க, மறுபுறம் 10 பேருக்கும் தனித்தனியாக ஒதுக்கப்பட்டிருக்கும் மேஜைகளில் மொய் வசூல் ஜரூராக நடக்கிறது. நீங்கள் யாருக்காகச் சென்றீர்களோ அவருக்கான மேஜையில் உங்கள் மொய்யைச் செலுத்திவிட்டு வர வேண்டியதுதான்.

தனித் தனியே விருந்து வைத்தால் செலவு அதிகம் என்பதால், பெரும்பாலும் இப்படிக் கூட்டு விருந்துகளாகவே நடத்திவிடுவதாகத் தெரிவித்தார்கள். கறி விருந்து என்றாலும், பெரிய தடபுடல் இல்லை. இலை நிறையச் சோறு போடுகிறார்கள். முதலில் கறிக்குழம்பு. அளவாக அதில் ஒரு கரண்டி மட்டும் கறி. அதிகபட்சம் 25-50 கிராம் இருக்கலாம். அடுத்து, ரசம், மோர். தொட்டுக்கை, அப்பளம், ஊறுகாய். சைவர்களுக்குத் தனியாக விருந்து நடக்கிறது. அங்கே கறிக் குழம்புக்குப் பதில் சாம்பார். ஒரு கரண்டி கறிக்குப் பதில் ஒரு கரண்டிக் கூட்டு!

இந்த விருந்தை நடத்தித் தர பொதுவில் ஒரு பொறுப்பாளரைப் போடுகிறார்கள். இதேபோல, ஒவ்வொருவர் சார்பிலும் மொய் எழுத மூன்று பேரைப் போடுகிறார்கள். இவர்களுக்கெல்லாம் சம்பளம் உண்டு. உதாரணமாக, அன்றைய விருந்தில் மொய் எழுதியவர்களுக்குத் தலா ரூ.800 கொடுக்கப்பட்டிருந்தது. விருந்துக்குப் பின் பொறுப்பாளர் கணக்கை ஒப்படைக்கிறார். செலவுத் தொகையை 10 பேரும் பகிர்ந்துகொள்கிறார்கள். 100 ரூபாய் செலவு என்றால், 10 பேரும் ஆளுக்கு 10 ரூபாய் தர வேண்டும் என்றில்லாமல், அவரவருக்கு விழுந்த மொய்த் தொகை விகிதாச்சாரப்படி இந்தத் தொகை வசூலிக்கப்படுகிறது. அதிகம் மொய் பெற்றவர் கூடுதலாகவும் குறைவாக மொய் பெற்றவர் குறைவாகவும் பங்கு கொடுக்கிறார்கள்.

அன்றைய விருந்தில் மொத்தம் 25 ஆடுகள் அடிக்கப்பட்டதாகவும் 5,000 இலைகள் விழுந்ததாகவும் சொன்னார், விருந்துப் பொறுப்பாளர் விஜயராஜ். அன்றைய தினம் ரூ.1.5 கோடி வசூலானதாகவும் ரூ.4.25 லட்சம் செலவானதாகவும் சொன்னார். இதில் கோயிலுக்கான கட்டணம் ரூ.16 ஆயிரம். அடுத்தடுத்து, நாங்கள் விருந்துக்குச் சென்ற அத்தனை இடங்களிலும் ஒரு விஷயத்தைக் கவனிக்க முடிந்தது. அழைப்பிதழ், மொய்க்கு அப்பாற்பட்டு, எவர் வேண்டுமாலும் இந்த விருந்துகளில் சாப்பிட அனுமதிக்கப்பட்டார்கள். பக்கத்தில் பள்ளிக்கூடங்கள் இருந்த இடங்களில் பிள்ளைகளை அழைத்துச் சாப்பிடவைத்து அனுப்பினார்கள்.

ஊர் மக்களிடம் பேசும்போது, மொய் விருந்து வைத்துதான் அவர் வியாபாரத்தில் இப்படி உயர்ந்தார், இவர் இவ்வளவு பெரிய தோட்டம் வாங்கினார் என்று நிறைய வெற்றிக் கதைகள் சொன்னார்கள். துயரக் கதைகளுக்கும் பஞ்சம் இல்லை.

கீரமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி கே.செல்வம். ‘’நமக்குச் சொந்த நிலம்கூடக் கெடையாதுங்க. நமக்கெல்லாம் எந்த பேங்கு கடன் கொடுக்கும்? கடுமையா உழைப்பேன். நாணயமா இருப்பேன். ஊருல நம்மளப் பத்தித் தெரியும். மொய் விருந்து வெச்சப்ப 10 லட்ச ரூபாய் வந்துச்சு. இன்னைக்கு ஒரு சொந்த வீட்டுல உட்கார்ந்திருக்கேன்; பொண்ணை நல்ல எடத்துல கல்யாணம் முடிச்சுருக்கேன்னா அதுக்கு மொய் விருந்து முக்கியமான காரணம்’’ என்றார்.

பனசக்காட்டைச் சேர்ந்த விவசாயி அ.ஜெயபாலன் இது வரை மூன்று முறை மொய் விருந்து வைத்திருப்பதாகச் சொன்னார். ‘‘வானம் பாத்த பூமி இது. எங்களுக்கு நெலம் இருந்துச்சு. தண்ணி வசதி இல்ல. மொய் விருந்து வெச்சு கிடைச்ச பணத்துல நாலு லட்ச ரூபாய் செலவழிச்சு மோட்டார் போட்டோம். விவசாயத்துல வந்த பணத்தை வெச்சு, முதல் விருந்துல பட்ட கடனை அடைச்சோம். அடுத்தடுத்து விருந்து நடத்தினப்போ கெடைச்ச பணத்துல ஆட்டோ வாங்கி விட்டிருக்கோம். இப்ப நல்லா இருக்கோம்’’ என்கிறார்.

குளமங்கலத்தைச் சேர்ந்த விவசாயி கே.பிரபாகரனின் கதை மாறுபட்டது. ‘‘மொய் விருந்து வெச்சப்போ அஞ்சு லட்ச ரூவா மொய் வந்துச்சு. ஏற்கெனவே எனக்கு இருந்த ஒரு லட்சம் கடனை அதுல அடைச்சேன். அப்புறம் வீடு கட்டினேன். போதுமான வருமானம் இல்லாத சூழல்ல, இப்ப நான் வெச்ச மொய் விருந்தே எனக்கு எதிரியாயிடுச்சு. வாங்கின மொய்யைத் திருப்பி வைக்க முடியல. பலர் வீடு தேடி வந்து பணம் கேட்க ஆரம்பிச்சாங்க. ஊருல ஏச ஆரம்பிச்சாக. அவமானத்தைத் தவிர்க்க வழி தெரியல. நிலத்தை வித்து மொய் செஞ்சேன். இன்னும் ரெண்டு லட்சம் கடன் இருக்கு. தொழில்ல முதலீடு பண்ணத் திராணி இருந்தா மொய் விருந்து வைக்கணும். அப்படி இல்லன்னா, எல்லாருக்கும் சிறுகச் சிறுக மொய் செஞ்சிட்டு, ஒரே ஒரு விருந்து நடத்தி அத வசூலிச்சிக்கிட்டு அதோட விட்டுறணும். நானும் விருந்து வைக்கிறேன்னு சொல்லி வெச்சி, பணத்தை வசூலிச்சிட்டு வீடு வாங்குறேன், காரு வாங்குறேன்னு செலவழிச்சோம், நாசமாப்போயிடுவோம்’’ என்றார் பிரபாகரன்.

மொய்ப் பணத்தைத் திருப்பிக் கொடுக்க முடியாதவர்களை அவமானப்படுத்தி, விலக்கிவைக்கும் கொடுமைகள் தொடர்பாகக் கேட்டபோது, பூசி மெழுகினார்கள். “காலம் மாறுறதுக்கு ஏத்த மாதிரி சூழலும் மாறுதுங்க. இப்ப அந்த மாதிரி கொடுமையெல்லாம் குறைஞ்சுட்டுவருது. ஆனா, கடனைத் திருப்பித் தராட்டி அரசாங்கத்து பேங்குகாரனே ஆளை விட்டு ஆளைத் தூக்கச் சொல்ற காலத்துல, கடனைத் திருப்பிக் கொடுக்கலைன்னு பேசுறது பெரிய குத்தமான்னு யோசிங்க. இது எப்படியெல்லாம் எத்தனை பேருக்கு உதவுதுன்னு பாருங்க. எந்த பேங்கும் கடன் கொடுக்க முன்வராத மக்களுக்கு இது உதவுது. விவசாயமும் வியாபாரமும் படுத்துக்குற ஆடி மாசத்துல, உள்ளூர்ல பணப் பரிவர்த்தனைக்கும் வியாபாரத்துக்கும் உதவுது. இந்த மாசத்துல இந்தச் சுத்துப்பட்டு கிராமத்துல மட்டும் ரெண்டாயிரம், மூவாயிரம் ஆட்டை அடிக்கிறோம். விவசாயிக்குக் காசு போவுது. மளிகைக் கடைக்காருக்குக் காசு போவுது. காய்கறிக் கடைக்காருக்குக் காசு போவுது. சமையல்காருக்குக் காசு போவுது. அச்சகத்துக்குக் காசு போவுது. கோயிலுக்குக் காசு போவுது’’ என்று அடுக்கினார்கள்.

இந்தியக் கிராமங்களின் எல்லா அம்சங்களிலும் பிணைந்திருக்கும் சாதி, இந்த மொய் விருந்தில் எப்படியான செல்வாக்கு செலுத்துகிறது? அடிப்படையில், இந்த மொய் விருந்தின் மையம் சாதியிலிருந்தே தொடங்குகிறது. அவரவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களே விருந்தில் பங்கேற்பதிலும் மொய் வைப்பதிலும் பெரும்பான்மை வகிக்கிறார்கள். எனினும், பிற சாதி சார்ந்த விலக்குகள் ஏதும் இல்லை.

சமீப காலமாக சாதிக்கு அப்பாற்பட்டு நண்பர்கள் சேர்ந்து விருந்து நடத்தும் வழக்கம் உருவாகிவருவதாகச் சொன்னார் சுரேஷ். குறைகள், விமர்சனங்களைத் தாண்டி, மொய் விருந்துகள் உள்ளூர் பொருளாதாரத்தை முடுக்கிவிடுவதில் ஒரு முக்கியப் பங்கு வகிப்பதையும் எல்லாச் சமூகங்களுமே இதை அவரவர் வசதிக்கேற்ப புதிய விதிகளோடு வடிவமைத்துக்கொள்வதையும் உணர முடிந்தது.

முன்பு அதிகம் மொய் விருந்துகளுக்குப் பேர் போன பேராவூரணி பகுதியில் இப்போது விருந்துகள் குறைந்துவருவதையும் முன்பு வழக்கத்தில் குறைவாக இருந்த ஆலங்குடி பகுதியில் அதிகரித்துவருவதையும் சுட்டிக்காட்டினார் சுரேஷ். அடுத்த சில நாட்களில் கரூர், செட்டிப்பாளையம் செல்ல வேண்டியிருந்தது. அங்கே பொருளியல் அறிஞர் எஸ்.நீலகண்டனைச் சந்தித்தேன். அவரிடம் இதுகுறித்துப் பேசும்போது, கொங்குப் பகுதியில் முன்பு அதிகம் மொய் விருந்துகள் நடந்துவந்ததையும் இப்போது குறைந்துவிட்டதையும் அவர் சொன்னார். ‘‘ஒரு குறிப்பிட்ட பகுதியில் பொருளாதார வளர்ச்சி தேவைப்படும் சூழலில், உள்ளூர் சமூகங்கள் இப்படியான நிதித் திரட்டலில் இறங்குகின்றன. ஒரு அளவிலான வளர்ச்சியை எட்டியதும் அதை நிறுத்திவிடுகின்றன. எப்படியும் இதுபோன்ற விஷயங்களைத் தேவைகளே தீர்மானிக்கின்றன’’ என்றார் நீலகண்டன்.

ஊர் திரும்பும்போது இது தொடர்பாக யோசித்துக் கொண்டிருந்த நிலையில், நம்முடைய விசேஷ வீடுகளில் இப்போது மாறிவரும் சூழல் ஞாபகத்துக்கு வந்தது.

சென்னையில் இப்போதெல்லாம் பெரும்பாலான திருமணங்களில் மொய் வாங்குவதில்லை. பத்தாண்டுகளுக்கு முன் திருச்சியில் இருந்த காலத்தில் நிறைய அழைப்பிதழ்களில் ‘மொய் தவிர்க்கவும்’ எனும் குறிப்பு இடம்பெற்றிருக்கும். இப்போது அதுவேகூட காலாவதி ஆகிவிட்டது. புதிய தலைமுறையினர் மொய்யை ஒரு இழிவாகக் கருதுவதைப் பார்க்க முடிகிறது. விசேஷங்களில் உறையில் வைத்து பணத்தைக் கொடுக்கும்போதும்கூட சங்கடத்தில் அவர்கள் நெளிகின்றனர். அதேசமயம், அன்பளிப்புப் பொருட்கள் அவர்களுக்கு உவகை அளிக்கின்றன. மேற்கத்திய, காலனிய, நுகர்வியத் தாக்கத்துக்கு இதில் முக்கியமான பங்கு இருக்கிறது.

ஒரு திருமணத்தின்போது, பால் காய்ச்சும் பாத்திரத்தில் தொடங்கி, படுக்கும் பாய் வரை எல்லாப் பொருட்களையும் சீர் பொருட்களாக மணமக்களுக்கு வழங்கும் வழக்கத்தைக் கொண்ட நம் சமூகத்தில், ஒரு புது மணத் தம்பதிக்குப் பெரும்பாலும் இந்த அன்பளிப்புப் பொருட்கள் தருவதெல்லாம் சுமையைத் தவிர, வேறு இல்லை. சரியாகச் சொல்வதானால், குப்பை. என்னுடைய உறவினர்கள், நண்பர்கள் திருமணங்கள் ஒவ்வொன்றிலும் குறைந்தது சுவர்க் கடிகாரங்கள் மட்டும் ஐந்துக்குக் குறையாமல் அன்பளிப்பாக வந்துசேர்வதைக் கவனித்திருக்கிறேன்.

மொய் விருந்துகளில் விழும் மொய்யும் நம்முடைய விசேஷ வீடுகளில் விழும் மொய்யும் அடிப்படையில் ஒன்று இல்லை. அங்கே விழும் மொய் கடன். இங்கே விழும் மொய் அன்பளிப்பு. இந்தியாவில் வருசத்துக்கு 1 லட்சம் கோடி ரூபாய் திருமணங்களுக்காக செலவிடப் படுகிறது. இதில், பத்தில் ஒரு பங்குக்கு இணையான தொகை ‘அன்பளிப்பு’க்காகச் செலவிடப்படுகிறது. அன்பளிப்பைப் பணமாகவே கொடுப்பதில் / ஏற்பதில் என்ன இழிவு இருக்கிறது?

ஆகஸ்ட், 2016, ‘தி இந்து’

மேற்கை வெட்டுதல்!


வங்கத்தோடு ஒட்டிக்கொண்டிருக்கும் ‘மேற்கு’ வேண்டாம் என்று முடிவெடுத்திருக்கிறார் மம்தா பானர்ஜி. மாநிலத்தின் புதிய பெயராக வங்க மொழியில் ‘பங்கா’ என்றும், ஆங்கிலத்தில் ‘பெங்கால்’ என்றும் அம்மாநிலம் அழைக்கப்பட வேண்டும் என்று முன்மொழிந்திருக்கிறது, மம்தா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸின் அமைச்சரவை.

முன்பு 1999-ல், வாஜ்பாய் தலைமையிலான அரசு ஆட்சியில் இருந்தபோது அன்றைய முதல்வர் ஜோதி பாசு, இதே போன்ற கோரிக்கையை முன்வைத்தது ஞாபகத்துக்கு வருகிறது. அகண்ட பாரதக் கனவைக் கைவிட முடியாத சங்கப் பரிவாரங்கள், அப்போது அதைக் கடுமையாக எதிர்த்தன. அடுத்து, 2011-ல் முதல் முறையாக முதல்வராகப் பதவியேற்றதும், மம்தா இதுபற்றிப் பேசினார். மன்மோகன் சிங் அரசோடு உறவுச் சூழல் சரியில்லாத நிலையில், அந்தக் கோரிக்கை காற்றோடு காற்றாகக் கலந்தது. சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற முதல்வர்கள் மாநாட்டில், ஆங்கில அகரவரிசைப்படி மேற்கு வங்கம் கடைசியாக அழைக்கப்பட்டது. இதனாலேயே தன் பேச்சுக்கும் மாநிலத்துக்கும் உரிய கவனம் கிடைக்கவில்லை என்று கருதிய மம்தா, மீண்டும் பெயர் மாற்ற விவகாரத்தைக் கையில் எடுத்திருக்கிறார்.

பிரிட்டிஷ் ஆட்சியில், 1905-ல் கிழக்கு, மேற்கு என்று வங்கம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. தேசியவாதிகளின் கடும் எதிர்ப்பால் அடுத்த ஆறு ஆண்டுகளில் ஒன்றிணைக்கப்பட்ட வங்கம், மீண்டும் 1946-ல் பிரிக்கப்பட்டது. இந்துக்கள் பெரும்பான்மைப் பகுதி கொல்கத்தாவைத் தலைநகரமாகக் கொண்ட மேற்கு வங்கமாகவும் முஸ்லிம்கள் பெரும்பான்மைப் பகுதி டாக்காவைத் தலைநகரமாகக் கொண்ட கிழக்கு வங்கமாகவும் பிரிக்கப்பட்டன. இந்தியப் பிரிவினையின்போது கிழக்கு வங்கம் பாகிஸ்தான் பக்கமும் மேற்கு வங்கம் இந்தியா பக்கமுமாக ஒதுக்கப்பட்டன. 1971-ல் கிழக்கு வங்கம் பாகிஸ்தானிடமிருந்து பிரிந்து வங்கதேசம் என்ற சுதந்திர நாடான பிறகு, கிழக்கு வங்கம் என்ற சொல் செத்துப்போனது. கிழக்கு வங்கம் என்று ஒன்று இல்லாமல் போய்விட்ட இன்றைய சூழலில், மேற்கு வங்கம் என்று வங்கம் அழைக்கப்படுவதற்கான நியாயம் என்ன என்று கேட்கிறார் மம்தா. மேலும், அகர வரிசைப்படி மேற்கு வங்கமானது இந்திய மாநிலங்களின் பட்டியலில் கடைசி வரிசையில் இடம்பெற்றிருப்பதால், மாநிலத்துக்கு உரிய கவனம் கிடைப்பதில்லை என்றும் கூறியிருக்கிறார்.

மம்தாவின் விமர்சகர்கள் இதை வரலாற்றுடனான விளையாட்டு என்கிறார்கள். “வங்கத்தின் பெயரோடு ஒட்டிக்கொண்டிருக்கும் ‘மேற்கு’ வெட்டப்பட்டால், எதிர்காலத் தலைமுறையினர் ஒன்றுபட்ட வங்கத்தின் வரலாற்றையும் துண்டாடப்பட்ட வரலாற்றையும் பிரிவினைக் கொடூரங்களையும் தெரிந்துகொள்வதற்கான ஒரு கேள்வியை இழப்பார்கள்” என்பது அவர்களுடைய வாதம்.

மம்தாவின் ‘அகர வரிசை வாதம்’ அர்த்தமற்றது. அப்படிப் பார்த்தால், இந்தியாவில் அகர வரிசையில் முன்னணியில் இருக்கும் அருணாசலப் பிரதேசம், அசாம், பிஹார், சத்தீஸ்கர் எல்லாம் இன்றைக்கு எங்கேயோ போயிருக்க வேண்டுமே! அகர வரிசைப் பட்டியலில் கடைசி வரிசையில் வரும் தமிழகம், வளர்ச்சிப் பட்டியலில் எப்போதும் முன்வரிசையில் இருக்கும் மாநிலங்களில் ஒன்று. ஒரு மாநிலத்தின் வளர்ச்சியைத் தீர்மானிப்பது செம்மையான ஆட்சி நிர்வாகமேயன்றி முன்வரிசைப் பெயர் அல்ல. அதேசமயம், மம்தா முன்வைக்கும் இன்னொரு வாதமும் மாநிலத்தின் பெயரை மாற்ற வேண்டும் என்ற வங்காளிகளின் உணர்வுகளின் பின்னிருக்கும் நியாயமும் மதிக்கப்பட வேண்டியவை.

வரலாறு நெடுகிலும் ஒவ்வொரு நிகழ்வும் கல்லும் மண்ணும் ரத்தமும் கறையுமாகப் படிந்திருக்கின்றன. அவற்றில் எவை பெருமிதங்கள், எவை இழிவுகள், எவை தக்கவைக்கப்பட வேண்டியவை; எவை கழுவிவிடப்பட வேண்டியவை என்பதைத் தீர்மானிக்க வேண்டியவர்கள் அந்தந்தச் சமூகங்களே அன்றி, வெளியில் இருப்பவர்கள் அல்ல.

கபாலியும் காலி வத்திப்பெட்டியும்


ரஜினி படம் ஒரு தேர்த் திருவிழா. தேர் பார்க்கப்போவது என்று முடிவெடுத்துவிட்டால், கூட்டத்தோடு பார்ப்பது கூடுதல் கொண்டாட்டம். திருவிழா என்பது சுவாமி பார்ப்பது மட்டும் இல்லை. ஆனால், ஊர் முழுக்க உள்ள அத்தனை திரையரங்குகளிலும் படத்தை எடுத்து, அதிகாலை 4 மணிக்கே சிறப்புக் காட்சிகளைத் தொடங்கிவிட்டாலும் சமீப காலமாக முதல் நாள் அன்று ரஜினி படம் பார்ப்பது சாத்தியப்படுவதில்லை. கொள்ளைக் கட்டணம் கொடுத்துப் படம் பார்க்க மனம் ஒப்புவதில்லை.

திரையரங்கம் சென்று சினிமா பார்ப்பது அரிதாகி நீண்ட நாட்கள் ஆகின்றன. சென்னையில், சாதாரண நாட்களில், ஒரு குடும்பம் திரையரங்கம் போய் படம் பார்த்து வருவதற்கே எழுநூறு, எண்ணூறு ரூபாய் வேண்டும். சராசரியாக ஒரு டிக்கெட் விலை ரூ.120. வாகனம் நிறுத்த ரூ.50. பத்து ரூபாய் பப்ஸின் விலை அரங்கினுள்ளே ரூ.50. சம்பாத்தியத்துக்கும் செலவழிப்பதற்கும் சம்பந்தம் இல்லை. சோளப் பொரியை நூறு ரூபாய் கொடுத்து வாங்கித் தின்ன தனித்த ஒரு பராக்கிரம மனம் வேண்டி இருக்கிறது.

திரையரங்குகள் இன்றைக்கு எல்லோருக்குமான இடங்களாக இல்லை. ஒருகாலத்தில் சாதியை உடைத்து நொறுக்கிப் போட்டவை. இன்றைக்கு வர்க்கம் பார்த்து மேலே இருப்பவர்கள் மட்டும் வந்தால் போதும் என்று நினைக்கின்றன. இல்லாவிட்டால், சாமானிய நிலையிலுள்ள குடும்பங்கள் நொறுக்குத்தீனி எடுத்து வருவதைக்கூடத் தடுக்கும் முடிவை அவை எப்படி எடுக்கும்? ஆக, இப்போதெல்லாம் சிடியில்தான் படம் பார்க்கிறேன். இதில் தவறு ஏதும் இருப்பதாகக் கூறும் புண்ணியவான்கள் சாமானிய குடும்பங்கள் ஐம்பது, நூறு ரூபாயில் படம் பார்க்க வேறு ஏதேனும் வசதி இருக்கிறதா என்று கூற வேண்டும்.

திரையரங்கில் பைசா செலவழிப்பதில்லை என்கிற வைராக்கியத்துடன் படம் வெளியான ஐந்தாம் நாள் ‘கபாலி’க்குப் போனோம். முதல் நாள் ரூ.2,000-க்கு விற்ற டிக்கெட் அன்றைக்குத்தான் ரூ.120-க்குக் கிடைத்தது. படம் பிடித்திருந்தது. குறிப்பாக ஏதேனும் சொல்ல வேண்டும் என்றால், வயதுக்கேற்ப ரஜினியின் சினிமா பயணத்தை சரியான தடம் நோக்கி நகர்த்தியிருக்கிறார் இயக்குநர் இரஞ்சித். “பழைய ரஜினி படங்களின் ‘மாஸ்’ இல்லை” என்று பலரும் பேசக் கேட்க முடிந்தது. அதற்கான காரணத்தை இரஞ்சித்திடம் தேடுவதைக் காட்டிலும் ரஜினியிடம் தேடுவது உசிதமாக இருக்கும் என்று தோன்றியது. இந்தப் படத்திலும் சரி; இதற்கு முந்தைய சமீபத்திய படங்களிலும் சரி; எங்கெல்லாம் முன்புபோல் ரஜினி துள்ள வேண்டும் என்று நினைக்கிறாரோ அங்கெல்லாம் அவருடைய வயது அவரைக் கைவிடுவதைக் கவனிக்க முடிந்தது. ஒரு ரசிகனாக படத்தில் வயதான ரஜினியையும் வயதுக்கேற்ற ஆர்ப்பாட்டமான அவருடைய நடிப்பையும் ரொம்பவே பிடித்திருக்கிறது. சமீப ஆண்டுகளில் ‘படையப்பா’வுக்குப் பின் அதிகம் ஒன்றவைத்த ரஜினி படம் இது.

நீதி.. அதுவே தீர்வும்கூட.. காஷ்மீரிகளுக்குச் சுதந்திரம்!

என்னுடைய கல்லூரி நாட்களில் ஒரு பேராசிரியர் சொன்னார், “இந்திய அரசாங்கம் காஷ்மீரிகள் தங்கள் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்கான பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டும். என்ன ஆகிவிடும், அதிகபட்சம் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருப்பவர்கள் இந்தியாவிடமிருந்து விலகும் முடிவை எடுக்கலாம். போகட்டும். ஜம்முவாசிகள், லடாக்வாசிகள் இந்தியாவில் நீடிக்கும் முடிவையே தேர்ந்தெடுப்பார்கள். ஒவ்வொரு வருஷமும் ஆயிரக்கணக்கான கோடிகளைப் படைகளுக்கு வாரி இறைக்கிறோம். அவர்களுக்கும் அமைதி இல்லை. நமக்கும் நிம்மதி இல்லை. எப்படியும் இந்தப் பிரச்சினையை இந்தியா தீர்த்தே ஆக வேண்டும்!”

முதல் முறையாக இப்படிக் கேட்டபோது அதிர்ச்சியாக இருந்தது. ஒரு சராசரி இந்திய மனம் அப்படியே பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறது. அவர் என்னிடம் இந்தியச் சுதந்திரப் போரட்ட வரலாற்றுடன் இணையாகவே பயணித்த காஷ்மீர் சுதந்திரப் போராட்ட வரலாற்றைப் படிக்கச் சொன்னார். இன்றைக்கு நாம் ‘காஷ்மீர்’ என்றழைக்கும் காஷ்மீருக்குள் உள்ளடங்கியிருக்கும் காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஜம்மு, லடாக் ஆகிய மூன்று பிரதேசங்களுக்கும் இடையேயுள்ள நுட்பமான கலாச்சார வேறுபாடுகளையும் புவியியல் சூழலையும் படிக்கச் சொன்னார். இந்திய வரைபடம் காட்டும் காஷ்மீரில் உள்ளபடி சரிபாதிகூட நம் வசம் இன்றைக்கு இல்லை. நம் வசம் உள்ள 1.01 லட்சம் சொச்ச சதுர கி.மீ. காஷ்மீரின் பரப்பில், 58.33% பரப்பு லடாக் பிராந்தியத்தில் இருப்பது; 25.93% பரப்பு ஜம்மு பிராந்தியத்தில் இருப்பது; 15.73% பரப்பு காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருக்கிறது. இந்தியாவின் மாணிக்கம் என்று சொல்வதற்கும், இந்தியா இழுத்துப் பிடித்து வைத்திருப்பதற்குமான பெரிய, அரிய வளங்கள் ஏதும் பள்ளத்தாக்கில் கிடையாது. அதேசமயம், இந்தியா தலைகுனிய வேண்டிய எல்லா அவலங்களும் பள்ளத்தாக்கில் நடக்கின்றன.

வலதுசாரிகள் எப்படிச் சிரிக்கிறார்கள்?


சோவியத் ஒன்றியம் ஒருநாள் உடைந்து சிதறியது. ரஷ்யாவின் வீதிகளில் கிளர்ச்சியாளர்களை ஒடுக்க வந்த, பீரங்கிகளின் வாயில் பூங்கொத்துகளைச் செருகினார்கள் மக்கள். ராணுவத்தினர் சிரித்தவாறே கையசைத்துக் கடந்தார்கள். ஒரு மர்மக் கணத்தில் தகர்ந்து நொறுங்கியது பெர்லின் சுவர். ஆளுக்கு ஒரு கோடரியுடன் வந்து ஒரு கல்லையாவது பெயர்த்தெடுத்துச் செல்ல முயன்றார்கள். காரணங்கள் நீண்ட காலமாகக் கனல்கின்றன. வரலாறு நம்ப முடியாத தருணத்தில் நிகழ்ந்துவிடுகிறது. கூடவே, ஒருபோதும் எதிர்பாராத தொடர் விளைவுகளையும் காலத்தின் கையில் திணித்துச் செல்கிறது.

உலகின் ஐந்து பெரும் வல்லரசுகளில் ஒன்றும் முதலாளித்துவத்தின் இதயமுமான பிரிட்டன், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று அந்நாட்டின் பெரும்பான்மை மக்கள் பொது வாக்கெடுப்பில் வாக்களித்திருப்பது, உலகமயமாக்கல் மீது விழுந்திருக்கும் ஒரு அடியாகவே தோன்றுகிறது. இது உருவாக்கும் அதிர்வலைகளின் தாக்கம், உலகம் எளிதில் கடக்கக் கூடியதாக இருக்கும் என்று தோன்றவில்லை.


சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின் கிளர்ந்தெழுந்த உலகமயமாக்கல் காலகட்டம் பெரும் சந்தேக நிழல்கள், எதிர்க் கூச்சல்கள், பய இருளின் இடையே வளர்ந்தெழுந்தது என்றாலும், அதை நம்பிக்கையின் ஊடே பார்த்த கண்களும் உண்டு. உலகின் அழுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பலர், ஒரு புதிய வாய்ப்புலகம் உருவாகிவருகிறது என்றும் அது சுத்திகரிக்கப்பட்ட முதலாளித்துவம் என்றும் நம்பினார்கள். இந்தியாவிலேயே தலித் அறிவுஜீவிகள், தொழில்முனைவோர் சிலர், இந்தியத் தொழில்துறையைச் சாதியப் பிடியிலிருந்து உலகமயமாக்கல் விடுவிக்கும் என்று நம்பினர். அந்நாட்களில் இடதுசாரித் தொழிற்சங்கங்கள் உலகமயமாக்கலுக்கு எதிரான போராட்டங்களைத் தீவிரப்படுத்தியபோது, அம்பேத்கரியர்கள் பலர் அதிலிருந்து விலகி நின்றது ஞாபகத்துக்கு வருகிறது.


இந்த நம்பிக்கைகளுக்கு உலகமயமாக்கம் செய்த நியாயம் என்ன? ஒரு இந்திய உதாரணம் இது. கால் நூற்றாண்டுக்கு முன்பு, காக்கி அரைக்கால்சட்டையில் ரயில் நிலையத்தைச் சுத்தப்படுத்திக்கொண்டிருந்தவர் அரசு ஊழியர். இன்று நீலநிற முழுக்கால்சட்டையுடன் தொப்பி அணிந்து, அதே ரயில் நிலையத்தைச் சுத்தப்படுத்திக்கொண்டிருப்பவர் அவரது மகன். அவரிடம் இயந்திரங்கள் இருக்கின்றன. காலில் பூட்ஸ், கையில் கையுறை. இன்றைக்கு அவர் தனியார் நிறுவனம் ஒன்றின் ஒப்பந்தக் கூலி. அரசு நிறுவனத்துக்கும் தொழிலாளிக்கும் இடையில் அயல் பணி ஒப்படைப்பு நிறுவனம் என்ற பெயரில் ஒரு தரகுக் கும்பலும் உண்டு கொழிக்கிறது.


சொத்துகளை விற்று உருவாகும் வசதியும் சௌகரியங்களும் வெகுநாள் நீடிப்பதில்லை. 2008-ல் உலகளாவியப் பொருளாதார மந்தநிலை ஏற்பட்ட போதே, ஒரு விஷயம் வெளிப்பட்டது: உலகமயமாக்கலுடனான மக்களின் தேனிலவுக் காலம் முடிவுக்கு வந்துகொண்டிருக்கிறது; மோசமான காலம் சமீபிக்கிறது!

புத்தகம் என்ன சக்களத்தரா?


சென்னைப் புத்தகக் காட்சியில் வழக்கமான ஜனவரி பனிச் சூழல் கோலாகலத்தை இந்தாண்டு ஜூன் வெம்மைச் சூழலில் பார்க்க முடியவில்லை. வெள்ளத்தின் தொடர்ச்சியாக தள்ளிவைக்கப்பட்டு நடத்தப்படும் இந்தப் புத்தகக்காட்சியில் சனி, ஞாயிறு இரண்டு நாட்களைத் தவிர்த்து வாரத்தின் ஏனைய நாட்களில் கூட்டம் இல்லை. ஊருக்கு மூட்டை கட்டிக்கொண்டிருந்த ஒரு பதிப்பாளர், “டீ செலவை ஈடுகட்டுற விற்பனைகூட இல்லை” என்றார். ஒரு கவிதைப் புத்தகத்தைக் கையில் கொடுத்தார். அட்டையே சாதாரண காகிதத்தில் அச்சடிக்கப்பட்டிருந்தது. “கவிதைப் புஸ்தகம் வாங்க ஆளே இல்லை. இந்தப் புத்தகம் இருபது ரூபாய். ரெண்டு டீ காசு. எறநூத்தம்பது அடிச்சோம். ஒண்ணு விக்கலை” என்றார்.

பிரபலமான பெரிய, ஏற்கெனவே பலமான வாசகர் வட்டத்தைப் பெற்றிருக்கிற பதிப்பகங்கள், ஊடக நிறுவனங்கள் நீங்கலாக பெரும்பாலான பதிப்பகங்கள் இம்முறை பாதிக்கப்பட்டிருக்கின்றன. “சென்னையில் ஜனவரியில் புத்தகக்காட்சி நடக்கும்போது மார்கழி இசை விழா, நாட்டிய விழா, புத்தாண்டு பொங்கல் கொண்டாட்டங்களோடு அதுவும் கூட்டு சேர்ந்துகொள்கிறது. புத்தகக்காட்சிக்குக் குடும்பத்தோடு செல்வதும் ஆளுக்கொரு புத்தகமேனும் வாங்குவதும் அப்போது ஒரு பொழுதுபோக்கு சம்பிரதாயம் ஆகிவிடுகிறது. இந்தக் கோடையில் அப்படி யாரும் வருவதில்லை. தீவிர வாசகர்களின் வருகை மட்டுமே விற்பனைக்குப் போதுமானதாக இல்லை” என்று சொன்னார்கள்.

இந்த முறை புத்தகக் காட்சி நடக்கும் இடமான தீவுத்திடலுக்கு ஒரு வரலாறு உண்டு. சென்னையில் வருஷத்தின் எல்லாப் பருவங்களிலும் ஏதாவது ஒரு பொருள்காட்சி நடக்கும் இடம் இது. எந்தப் பொருள்காட்சியும் கூட்டம் இல்லை என்று சொல்லி முடங்கியதாகத் தெரியவில்லை. வெயில் புழுக்கம் பெரும் சங்கடம் என்றாலும், அதை மட்டுமே காரணமாகச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.

கருணாநிதி செய்ய வேண்டிய கடைசி அறுவை சிகிச்சை!


தோல்விகளால் வீழாத அறிவாலயம், இன்று துவண்டு கிடக்கிறது. இது திமுகவின் தலைமை அதிகாரத்துக்கான யுத்தம் ஏற்படுத்தியிருக்கும் கலக்கம். கட்சித் தலைவர் கருணாநிதியைச் சந்தித்த பலரும் உடைந்து அவரிடம் அழுததாகவும் அவர் தேற்றியதாகவும் சொல்கிறார்கள். இந்தியாவில் 13 முறை தோல்வியையே சந்திக்காமல் ஒருவர் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவது வரலாறு. தன்னுடைய 33-வது வயதில் சட்டசபைக்குள் நுழைந்தவர் கருணாநிதி; இன்றைக்கு 92-வது வயதிலும் சட்டசபை உறுப்பினர். இம்முறை மாநிலத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர் என்ற பெருமையோடு சேர்த்து இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். தமிழகத்தில் ஒரு அரசியல்வாதியாக, ஐந்து முறை முதல்வராக எல்லா உச்சங்களையும் அவர் தொட்டுவிட்டார்.

திமுகவில் அதிகார மாற்றமானது புத்தாயிரமாண்டின் தொடக்கத்திலேயே நடந்திருக்க வேண்டியது. கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் முழுமையானதாகவும் ஒப்பீட்டளவில் சிறந்ததாகவும் மதிப்பிடப்படும் 1996-2001 ஆட்சிக் காலகட்டத்திலேயே கருணாநிதி அடுத்த தலைமுறைக்கு அதிகாரத்தைக் கைமாற்றியிருக்க வேண்டும். அப்போதே அவர் 75 வயதைக் கடந்திருந்தார். அன்றைக்கு அந்த முடிவை அவர் எடுத்திருந்தால், இன்றைக்கு அரை நூற்றாண்டு, கால் நூற்றாண்டு காலமாக அடுத்தடுத்த பொறுப்புகளில் ஒட்டிக்கொண்டிருப்பவர்களும் கூடவே ஒதுங்கியிருப்பார்கள். பிற்காலத்து அவப்பெயர்களையும் கருணாநிதி பெரிய அளவில் தவிர்த்திருக்கலாம். ஸ்டாலின் தலைமையையும் பரிசோதித்திருக்கலாம். பந்தயத்தில் தொடர்ந்து நேரடியாகத் தானே நிற்க வேண்டும் என்ற கருணாநிதியின் முடிவின் விளைவாகவே திமுக இன்று கெட்டிதட்டி நிற்கிறது.

வெற்றிக்குப் பணம்தான் காரணமா?


திமுக ஆட்சி அரியணையைக் கைப்பற்றிய 1967 தேர்தலில், விருதுநகர் தொகுதியில் காமராஜர் தோற்றார். காமராஜர் தோல்வியைத் தாங்க இயலாத தொண்டர் ஒருவர், “அய்யா! நீங்க தோத்துப்போனதக்கூடத் தாங்கிக்கிடலாம்யா. நம்ம ஜனம் யாரைத் தேர்ந்தெடுத்திருக்கு பாத்திங்களா? சாதாரண சீனிவாசன் எங்கே, நீங்க எங்கே?” என்று கையைப் பிடித்துக் கதறியழுதபோது, காமராஜர் சொன்னாராம், “ஏ.. சாதாரண ஆளு இப்படி மேல வந்து உட்காரணும்னுதான் இவ்வளவு நாளா ஓடிக்கிட்டிருக்கோம். தோத்ததுல எதாவது சந்தோஷம் உண்டுன்னா அது இதுதாம்னேன்!”

காந்தியின் காங்கிரஸ் இந்நாட்டின் ஏழை எளிய மக்களை அரசியல்மயப்படுத்தியது என்றால், தமிழகத்தில் விளிம்புநிலை மக்களை ஆட்சியதிகாரத்தை நோக்கி நகர்த்தியதில் திராவிட இயக்கங்களுக்கு முக்கியமான பங்கு உண்டு. காமராஜரின் காங்கிரஸுக்கு எதிராகத் திராவிட அரசியல் தலைவர்கள் அன்றைக்கு முன்வைத்த முக்கியமான குற்றச்சாட்டுகளில் ஒன்று, காங்கிரஸ் பண்ணையார் கட்சியாகிவிட்டது என்பது. இம்முறை தமிழகத்தில் பிடிபட்ட பணம் தேர்தல் நடந்த ஏனைய எல்லா மாநிலங்களிலும் பிடிபட்ட மொத்த தொகையைக் காட்டிலும் அதிகம். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சட்டப்பேரவையில் 76% உறுப்பினர்கள் அதிகாரபூர்வமாகவே கோடீஸ்வரர்கள். ஜெயலலிதா, கருணாநிதி போட்டியிட்ட தொகுதிகளிலும்கூடப் பணப்பட்டுவாடா நடந்திருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன என்றால், எங்கே ஆட்டத்தை ஆரம்பித்த திராவிடக் கட்சிகள், எங்கே வந்து நிற்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

ஒரு ஓட்டு எல்லாவற்றையும் மாற்றிவிடுமா: அரசியல் பழகு


வீட்டிலிருந்து புறப்பட்டபோது, மேலே மோதுவதுபோலக் கடந்தது தண்ணீர் லாரி. அடையாறு கரையிலிருந்து கூப்பிடு தொலைவில் உள்ள தெரு. ஆறு மாதத்துக்கு முன், இதே ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டபோது, சென்னையின் பெரும் பகுதி மிதந்தது. தெரு அப்போது மூழ்கியது. ஆறு எது, தெரு எது என்று பிரிக்க முடியாதபடி ஓடிய வெள்ளத்தில், தரைத்தளத்திலிருந்த வீடுகள் யாவும் மூழ்கின. அரசாங்கம் அந்த மழையை நூறாண்டு காணாத வெள்ளம் என்று குறிப்பிட்டது. அடுத்த வாரமே வெள்ளம் வடிய அடையாறு வறண்டு மீண்டும் சாக்கடைப் பாதையானது. தண்ணீரை எப்போது திறக்க வேண்டுமோ, அப்போது திறக்கவில்லை; தண்ணீரை எப்போது தேக்க வேண்டுமோ அப்போது தேக்கவுமில்லை. இன்னும் கோடை உச்சம் தொடவில்லை. அதற்குள் மீண்டும் காசு கொடுத்துத் தண்ணீர் வாங்க வேண்டிய நிலை.

தமிழகத்தில் 39,202 ஏரிகள் இருப்பதாக அரசின் பழைய புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. இவற்றில் எத்தனை இன்றைக்கும் ஏரிகளாக இருக்கின்றன என்பது யாரும் அறியாதது. பெரும்பாலான ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன அல்லது தூர்ந்து சுருங்கியிருக்கின்றன. 25 ஆண்டுகளுக்கு முன் நீரியல் நிபுணர் பழ.கோமதிநாயகம் ஓர் ஆய்வு மேற்கொண்டார். சென்னைக்குத் தண்ணீர் கொடுக்கும் வீராணம் ஏரியின் கொள்ளளவு 1923-ல் 41 மில்லியன் கன மீட்டராக இருந்தது, 1991-ல் 28 மில்லியன் கன மீட்டராகக் குறைந்துவிட்டதை அந்த ஆய்வின்போது அவர் கண்டறிந்தார். சென்னைக்குத் தண்ணீர் கொடுக்கும் இன்னொரு நீர்நிலையான பூண்டி ஏரியை ஒட்டியுள்ள குள்ளம்பாக்கம் ஏரி இன்றைக்கு ஆக்கிரமிப்பில் சிக்கி விளைநிலமாகக் காட்சியளிக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு மேட்டூர் அணைக்குச் சென்றிருந்தபோது அங்கு உருப்படியாகத் தூர்வாரி கால் நூற்றாண்டுக்கும் மேலாகிறது என்று அங்கிருப்பவர்கள் சொன்னார்கள். தமிழ்நாட்டுக்குச் சோறிடும் காவிரியின் பிரதான அணைகளில் ஒன்று அது.

சென்னையின் சராசரி மழையளவு ஆண்டுக்கு 1300 மி.மீ. அடையாற்றில் மழைக்காலத்தில் செல்வது கிட்டத்தட்ட 100 ஏரிகளின் உபரிநீர். சென்னைக்குள்ளேயே 142 குளங்கள் இருந்தன. சென்னை நீர்நிலைகளின் மொத்தக் கொள்ளளவு 2.45 டிஎம்சி என்று குறிப்பிடுவார் பேராசிரியர் ஜனகராஜன். தண்ணீருக்கு அலைய வேண்டிய நகரம் அல்ல இது. பெரும்பாலான சென்னைவாசிகள் எல்லாப் பருவத்திலும் குடிநீரை 25 லிட்டர் கேன் ரூ.30 எனும் விலையில் காசு கொடுத்து வாங்கியே குடிக்கின்றனர். கோடையிலோ பயன்பாட்டிற்கான தண்ணீரையும் விலைக்கு வாங்குகிறார்கள். ஒரு லாரி தண்ணீர் விலை சுமார் ரூ.3,000. செல்பேசி, மடிக்கணினி, ஸ்கூட்டர் வாங்க பாதிக் காசு என்றெல்லாம் கவர்ச்சிகர அறிவிப்புகளை வாரி வீசும் கட்சிகள் எதுவும் தண்ணீர் பிரச்சினையை விவாதிக்கவில்லை. இந்தத் தேர்தல் காலத்திலும்கூட தமிழகத்தில் இது மக்கள் பிரச்சினையாகவில்லை. நேற்றிரவு மின்சாரம் நின்றபோது பக்கத்து வீட்டுக்காரர், “சார், நம்ம தெருவுலேயும் பணப்பட்டுவாடா ஆரம்பிச்சுடுச்சு” என்றார் குஷியாக.

இந்த ஊரில் ரத்தக்கொதிப்பு வராமலிருக்க தினமும் தியானம் செய்ய வேண்டும். தண்ணீரை ரூ.3 ஆயிரம் விலை கொடுத்து வாங்கும் ஒரு சமூகத்துக்கு அரசியல்வாதிகளிடம் அதுபற்றிக் கேட்க ஏதும் இல்லை; ஓட்டுப் போட ஐநூறு கிடைக்குமா, ஆயிரம் கிடைக்குமா என்று அலைகிறது என்றால், இந்த அற்பத்தனத்தை வேறு எப்படிச் சகித்துக்கொள்வது?

நீங்கள் எந்த சாரி: அரசியல் பழகு!


ஆனைக்கட்டி பகுதியில் இருளர்கள் மேம்பாட்டுக்காக உழைத்துவரும் தாசனூர் நாராயணன், நண்பர் கா.சு.வேலாயுதன் மூலம் அறிமுகமானவர். நாராயணன் ஒரு மொழியை உருவாக்கியிருக்கிறார். ஆதீன் என்று அதற்குப் பெயர். இங்கே பொதிகை மலையில் தொடங்கி இமயமலை வரை இந்தியா முழுவதிலும் மலைகளில் வாழும் பழங்குடியின மக்கள் பேசும் பல்வேறு மொழிக் கலப்பின் தொகுப்பு இது. அந்தந்தப் பிராந்தியங்களின் மொழியையும் பெருமளவில் உள்வாங்கியிருக்கிறது. இதற்கென எழுத்து வடிவத்தையும் நாராயணன் உருவாக்கியிருக்கிறார். அதில் ஒரு நாவலையும் எழுதிவிட்டார். இதுவரை 25 பேர் இம்மொழியில் எழுத, படிக்கக் கற்றிருக்கின்றனர். வெறும் 25 பேர் மட்டுமே இன்றளவில் படிக்கத் தெரிந்த அந்த மொழியில், தொடர்ந்து பல சிறுகதைகளையும் நாராயணன் எழுதிக்கொண்டிருக்கிறார். “இந்திய அரசு மும்மொழிக் கொள்கைக்கு இடமளிப்பதையே பெரிய சாதனையாக இங்கு பேசுகிறார்கள். தமிழ்நாட்டில் இருப்பதாலேயே ஒரு இருளரின் தாய்மொழி தமிழ் ஆகிவிடுமா? பல்லாயிரம் ஆண்டுகளாக நாங்கள் பேசும் மொழியை இந்த அரசாங்கங்கள் பொருட்படுத்தாமல் பெருமொழிகளை முன்னிறுத்தும்போது, எங்கள் மொழியோடு எங்கள் சுயசிந்தனையை, பண்பாட்டு அறிவை எல்லாவற்றையும் நாங்கள் பறிகொடுக்கிறோம். மொழியைப் பாதுகாத்துக்கொள்ளாமல் எங்கள் இனத்தின் சுயத்தை நாங்கள் பாதுகாத்துக்கொள்ள முடியாது. என்னாலான முயற்சி இது” என்கிறார் நாராயணன்.

எது ஜனநாயகக் கட்சி; யார் ஜனநாயகத் தலைவர்? - அரசியல் பழகு


சமூக வலைதளங்களில் எங்கும் தம்பிதுரையின் படம் சுற்றிக்கொண்டிருக்கிறது. தேர்தல் பிரச்சாரத்துக்கு வரும் ஜெயலலிதாவின் வண்டி, சாலையில் எந்த இடத்தில் நிற்க வேண்டும் என்பதை அடையாளம் காட்டுவதற்காக, கையில் ஒரு ஜெயலலிதா - இரட்டை இலைச் சின்னம் பொறித்த தட்டியுடன் தம்பிதுரை பரிதாபமாக நிற்கும் படம் அது. அதிமுகவில் இதெல்லாம் புதிதல்ல. ஜெயலலிதா சிறையில் இருந்தபோது, முதல்வராக இருந்த பன்னீர்செல்வம், ஜெயலலிதா உட்கார்ந்த நாற்காலி என்பதாலேயே அந்த நாற்காலியில் அமராமலேயே முதல்வர் பதவிக் காலத்தை முடித்தவர். தம்பிதுரை இன்று இந்நாட்டின் மக்களவைத் துணை சபாநாயகர். ‘நீ ஊருக்கே ராஜாவாக இருந்தாலும், கட்சித் தலைமைக்கு அடிமையாகவே இருக்க வேண்டும்’ என்பதைச் சொல்லாமல் சொல்கிறது அந்தப் படம். ஜனநாயகம் இந்நாட்டில் இன்றைக்கு எவ்வளவு இழிந்த நிலையை அடைந்திருக்கிறது என்பதற்குமான குறியீடு இது. விஷயம் தெரிந்தவர்கள் என்று நாம் கருதுவோர்கூட “நாட்டிலேயே கட்டுக்கோப்பான கட்சி அதிமுக, கட்சியை விரலசைவில் வைத்திருப்பவர் ஜெயலலிதா” என்று இதையெல்லாம் விதந்தோதும்போது அச்சம் எழுகிறது. இன்னும் ஆண்டான் அடிமை மனோபாவத்திலிருந்து நம்மவர்கள் வெளியே வர எவ்வளவு காலம் ஆகும் என்ற கேள்வி எழுகிறது.

தேனெடுப்பவருக்கு வாய் இல்லையா : அரசியல் பழகு!


நம்மூரில் அரசியல்வாதிகள் மீதான வெறுப்பு மேலோங்கும்போது வெளிப்படும் பேச்சுகளில் ஒன்று, “பேசாம ராணுவத்துக்கிட்டயோ, அதிகாரிங்ககிட்டயோ ஆட்சியை ஒப்படைச்சிறலாம். இவய்ங்க தேவையே இல்ல.” அதிகாரிகளே இதைக் கேட்டால், நகைப்பார்கள். நாளைக்குப் புதிதாக ஆட்சி அதிகாரத்துக்குள் நுழையும் ஒரு அரசியல்வாதிக்கு, அந்தக் கோட்டைக்குள் இருக்கும் சர்வ ஓட்டைகளையும் சொல்லிக்கொடுப்பதே அவர்கள்தானே!

நேற்று காலை ஒப்பந்ததாரர் ஒருவருடன் ‘நடப்பு நிலவரம்’ பேசிக்கொண்டிருந்தேன். “அண்ணே, நம்ம வார்டுல ஒரு கக்கூஸ் கட்டுறோம்னு வெச்சிக்கிங்க. அதுக்கான தோராயமான கமிஷன் இப்படிப் போகும். கவுன்சிலருக்கு 2%, இளநிலைப் பொறியாளருக்கு 2%, உதவிப் பொறியாளருக்கு 2%, செயற்பொறியாளருக்கு 2%, கோட்டப் பொறியாளருக்கு 2%, அலுவலகத்துல வேலை பார்க்குறவங்களுக்குச் செய்ய வேண்டிய நடைமுறைகள் 3%. இதுல அதிகாரிங்க தரப்புலேர்ந்து ஒரு கணிசமான பங்கு மேலிடத்துக்கு மொத்தமா போயிடும். எப்படிப் பார்த்தாலும், மூணுல ரெண்டு பங்கு அதிகாரிங்க கணக்காயிடும்.”

உறங்காப்புலி சொன்ன கதை: அரசியல் பழகு


பொங்கல் சமயத்தில் - சட்டப்பேரவை கூடாத சமயங்களில்கூட - ஊரைவிட்டு விலகி, சென்னையில் டேரா போடும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கதையை நண்பர் உறங்காப்புலி எனக்குச் சொன்னார். சுவாரசியமான, பொதுவெளியில் அதிகம் பேசப்படாத கதை அது. “ஊருல இருந்தா நன்கொடை கேட்டு வார கூட்டத்துக்கு அஞ்சியே இங்கெ ஓடியாந்துருவாங்க.”

“அரசியல்வாதிகளுக்கு நன்கொடை என்ன அவ்வளவு பெரிய பிரச்சினையா?”

உறங்காப்புலி சொன்ன கணக்கு மலைக்க வைக்கக் கூடியது. “ரொம்ப யோக்கியமான ஆளு ஒருத்தன் தேர்தல்ல போட்டி போட்டு, நேர்மையா தேர்தல் செலவு செஞ்சாலே குறைஞ்சது ஒரு கோடி ரூவா அழிக்கணும் தம்பி. ஒரு தொகுதிக்கு 250 பூத்து. ஒரு பூத்துக்குக் குறைஞ்சது 10 பேராவது ஒரு மாசம் வேலை பாத்தாத்தாம் அவென் நிக்குறதே மக்களுக்குத் தெரியும். இந்த 2,500 பேருக்கும் மூணு வேளை சோறு, டீக்காபி, பொட்டணமாவது வாங்கிக் குடுக்கணுமில்லா? இவங்க பூராப் பக்கமும் சுத்துறதுக்கு வண்டி வாடகை கொடுக்கணுமில்லா? சின்னதா நோட்டீஸ், சுவர் விளம்பரமாச்சும் செய்யணுமில்லா? இதுக்கே கோடி ஆயிருமே! இது நீங்க கனவு கண்டுக்கிட்டுருக்குற பரிசுத்தமான வேட்பாளரோட கணக்கு.

தம்பி, பூராம் கட்சியிலேயும் வட்டம், கிளை, நகரம், ஒன்றியம்னு ஆயிரத்தெட்டு பொறுப்புல நாளெல்லாம் பொது வேலையில திரியுதாம்மே, இவங்களுக்கெல்லாம் எந்த அரசாங்கம் சம்பளம் கொடுக்குது? இவய்ங்க இப்பம்தானே நாலு காசு பார்க்க முடியும்? நெலவரம் என்னா தெரியுமா? தொகுதிக்கு அஞ்சு கோடிலேர்ந்து பத்து கோடி வரைக்கும் ஓடுது. ஓட்டுக்குக் கொடுக்குற காசு இதுல சேத்தி இல்லை.

ஜெயிச்ச பெறவு வர்ற கணக்கைச் சொல்லட்டுமா? தொகுதிக்குக் கொறைச்சலா 250 கிராமங்க வரும். நம்மூர்ல தெருவுக்கு ஒரு கோயில். அட, ஊருக்கு ஒரு கோயில்னே வைங்க. அஞ்சி வருஷத்துக்குள்ள பாதி கோயில் கும்பாபிஷேகம் வந்துரும். கோயிலுக்குக் கொறைச்சலா பத்தாயிரம். அடுத்து, அத்தனை கிராமத்துலேயும் வருஷா வருஷம் கோயில் கொடை வரும். பொங்கல் கலை விழா, கபடிப் போட்டி, கிரிக்கெட் போட்டின்னு ஊருக்கு மூணு குரூப்பு பயல்வ வருவானுவ. ஆளுக்கு அஞ்சாயிரம். ஊருல சடங்கு, கல்யாணம், காதுகுத்து, கருமாதி எல்லாத்துக்கும் பத்திரிகை வெப்பாங்க. வெறுங்கைய வீசிட்டுப் போவ முடியுமா? இல்ல நூறு ரூவா மொய் எழுதிட்டு வந்துற முடியுமா? ஆளுக்குக் கொறைச்சலா ஆயிரம்.. மொத்தமா, அஞ்சு வருஷத்துக்கு என்னாச்சு? குறைச்சலா அஞ்சு கோடி. இதெல்லாம் ஊழல்ல பங்கில்லையா? அடுத்து, இன்னொரு கணக்குப் போடுங்க. ஒரு எம்எல்ஏ சைக்கிள்லயா சுத்த முடியும்? நம்ம வீட்டுக் கல்யாணத்துக்கே நாலு பேரோடு கார்ல வந்தாத்தானே மதிக்கோம்! காருக்கும் கூட வர்ற நாலு பேருக்கும் யாரு ‘பெட்ரோல்’ போடுறது?”