கருணாநிதி செய்ய வேண்டிய கடைசி அறுவை சிகிச்சை!


தோல்விகளால் வீழாத அறிவாலயம், இன்று துவண்டு கிடக்கிறது. இது திமுகவின் தலைமை அதிகாரத்துக்கான யுத்தம் ஏற்படுத்தியிருக்கும் கலக்கம். கட்சித் தலைவர் கருணாநிதியைச் சந்தித்த பலரும் உடைந்து அவரிடம் அழுததாகவும் அவர் தேற்றியதாகவும் சொல்கிறார்கள். இந்தியாவில் 13 முறை தோல்வியையே சந்திக்காமல் ஒருவர் சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவது வரலாறு. தன்னுடைய 33-வது வயதில் சட்டசபைக்குள் நுழைந்தவர் கருணாநிதி; இன்றைக்கு 92-வது வயதிலும் சட்டசபை உறுப்பினர். இம்முறை மாநிலத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றவர் என்ற பெருமையோடு சேர்த்து இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறார். தமிழகத்தில் ஒரு அரசியல்வாதியாக, ஐந்து முறை முதல்வராக எல்லா உச்சங்களையும் அவர் தொட்டுவிட்டார்.

திமுகவில் அதிகார மாற்றமானது புத்தாயிரமாண்டின் தொடக்கத்திலேயே நடந்திருக்க வேண்டியது. கருணாநிதியின் ஆட்சிக் காலத்தில் முழுமையானதாகவும் ஒப்பீட்டளவில் சிறந்ததாகவும் மதிப்பிடப்படும் 1996-2001 ஆட்சிக் காலகட்டத்திலேயே கருணாநிதி அடுத்த தலைமுறைக்கு அதிகாரத்தைக் கைமாற்றியிருக்க வேண்டும். அப்போதே அவர் 75 வயதைக் கடந்திருந்தார். அன்றைக்கு அந்த முடிவை அவர் எடுத்திருந்தால், இன்றைக்கு அரை நூற்றாண்டு, கால் நூற்றாண்டு காலமாக அடுத்தடுத்த பொறுப்புகளில் ஒட்டிக்கொண்டிருப்பவர்களும் கூடவே ஒதுங்கியிருப்பார்கள். பிற்காலத்து அவப்பெயர்களையும் கருணாநிதி பெரிய அளவில் தவிர்த்திருக்கலாம். ஸ்டாலின் தலைமையையும் பரிசோதித்திருக்கலாம். பந்தயத்தில் தொடர்ந்து நேரடியாகத் தானே நிற்க வேண்டும் என்ற கருணாநிதியின் முடிவின் விளைவாகவே திமுக இன்று கெட்டிதட்டி நிற்கிறது.

வெற்றிக்குப் பணம்தான் காரணமா?


திமுக ஆட்சி அரியணையைக் கைப்பற்றிய 1967 தேர்தலில், விருதுநகர் தொகுதியில் காமராஜர் தோற்றார். காமராஜர் தோல்வியைத் தாங்க இயலாத தொண்டர் ஒருவர், “அய்யா! நீங்க தோத்துப்போனதக்கூடத் தாங்கிக்கிடலாம்யா. நம்ம ஜனம் யாரைத் தேர்ந்தெடுத்திருக்கு பாத்திங்களா? சாதாரண சீனிவாசன் எங்கே, நீங்க எங்கே?” என்று கையைப் பிடித்துக் கதறியழுதபோது, காமராஜர் சொன்னாராம், “ஏ.. சாதாரண ஆளு இப்படி மேல வந்து உட்காரணும்னுதான் இவ்வளவு நாளா ஓடிக்கிட்டிருக்கோம். தோத்ததுல எதாவது சந்தோஷம் உண்டுன்னா அது இதுதாம்னேன்!”

காந்தியின் காங்கிரஸ் இந்நாட்டின் ஏழை எளிய மக்களை அரசியல்மயப்படுத்தியது என்றால், தமிழகத்தில் விளிம்புநிலை மக்களை ஆட்சியதிகாரத்தை நோக்கி நகர்த்தியதில் திராவிட இயக்கங்களுக்கு முக்கியமான பங்கு உண்டு. காமராஜரின் காங்கிரஸுக்கு எதிராகத் திராவிட அரசியல் தலைவர்கள் அன்றைக்கு முன்வைத்த முக்கியமான குற்றச்சாட்டுகளில் ஒன்று, காங்கிரஸ் பண்ணையார் கட்சியாகிவிட்டது என்பது. இம்முறை தமிழகத்தில் பிடிபட்ட பணம் தேர்தல் நடந்த ஏனைய எல்லா மாநிலங்களிலும் பிடிபட்ட மொத்த தொகையைக் காட்டிலும் அதிகம். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சட்டப்பேரவையில் 76% உறுப்பினர்கள் அதிகாரபூர்வமாகவே கோடீஸ்வரர்கள். ஜெயலலிதா, கருணாநிதி போட்டியிட்ட தொகுதிகளிலும்கூடப் பணப்பட்டுவாடா நடந்திருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன என்றால், எங்கே ஆட்டத்தை ஆரம்பித்த திராவிடக் கட்சிகள், எங்கே வந்து நிற்கின்றன என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

ஒரு ஓட்டு எல்லாவற்றையும் மாற்றிவிடுமா: அரசியல் பழகு


வீட்டிலிருந்து புறப்பட்டபோது, மேலே மோதுவதுபோலக் கடந்தது தண்ணீர் லாரி. அடையாறு கரையிலிருந்து கூப்பிடு தொலைவில் உள்ள தெரு. ஆறு மாதத்துக்கு முன், இதே ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டபோது, சென்னையின் பெரும் பகுதி மிதந்தது. தெரு அப்போது மூழ்கியது. ஆறு எது, தெரு எது என்று பிரிக்க முடியாதபடி ஓடிய வெள்ளத்தில், தரைத்தளத்திலிருந்த வீடுகள் யாவும் மூழ்கின. அரசாங்கம் அந்த மழையை நூறாண்டு காணாத வெள்ளம் என்று குறிப்பிட்டது. அடுத்த வாரமே வெள்ளம் வடிய அடையாறு வறண்டு மீண்டும் சாக்கடைப் பாதையானது. தண்ணீரை எப்போது திறக்க வேண்டுமோ, அப்போது திறக்கவில்லை; தண்ணீரை எப்போது தேக்க வேண்டுமோ அப்போது தேக்கவுமில்லை. இன்னும் கோடை உச்சம் தொடவில்லை. அதற்குள் மீண்டும் காசு கொடுத்துத் தண்ணீர் வாங்க வேண்டிய நிலை.

தமிழகத்தில் 39,202 ஏரிகள் இருப்பதாக அரசின் பழைய புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. இவற்றில் எத்தனை இன்றைக்கும் ஏரிகளாக இருக்கின்றன என்பது யாரும் அறியாதது. பெரும்பாலான ஏரிகள் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன அல்லது தூர்ந்து சுருங்கியிருக்கின்றன. 25 ஆண்டுகளுக்கு முன் நீரியல் நிபுணர் பழ.கோமதிநாயகம் ஓர் ஆய்வு மேற்கொண்டார். சென்னைக்குத் தண்ணீர் கொடுக்கும் வீராணம் ஏரியின் கொள்ளளவு 1923-ல் 41 மில்லியன் கன மீட்டராக இருந்தது, 1991-ல் 28 மில்லியன் கன மீட்டராகக் குறைந்துவிட்டதை அந்த ஆய்வின்போது அவர் கண்டறிந்தார். சென்னைக்குத் தண்ணீர் கொடுக்கும் இன்னொரு நீர்நிலையான பூண்டி ஏரியை ஒட்டியுள்ள குள்ளம்பாக்கம் ஏரி இன்றைக்கு ஆக்கிரமிப்பில் சிக்கி விளைநிலமாகக் காட்சியளிக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு மேட்டூர் அணைக்குச் சென்றிருந்தபோது அங்கு உருப்படியாகத் தூர்வாரி கால் நூற்றாண்டுக்கும் மேலாகிறது என்று அங்கிருப்பவர்கள் சொன்னார்கள். தமிழ்நாட்டுக்குச் சோறிடும் காவிரியின் பிரதான அணைகளில் ஒன்று அது.

சென்னையின் சராசரி மழையளவு ஆண்டுக்கு 1300 மி.மீ. அடையாற்றில் மழைக்காலத்தில் செல்வது கிட்டத்தட்ட 100 ஏரிகளின் உபரிநீர். சென்னைக்குள்ளேயே 142 குளங்கள் இருந்தன. சென்னை நீர்நிலைகளின் மொத்தக் கொள்ளளவு 2.45 டிஎம்சி என்று குறிப்பிடுவார் பேராசிரியர் ஜனகராஜன். தண்ணீருக்கு அலைய வேண்டிய நகரம் அல்ல இது. பெரும்பாலான சென்னைவாசிகள் எல்லாப் பருவத்திலும் குடிநீரை 25 லிட்டர் கேன் ரூ.30 எனும் விலையில் காசு கொடுத்து வாங்கியே குடிக்கின்றனர். கோடையிலோ பயன்பாட்டிற்கான தண்ணீரையும் விலைக்கு வாங்குகிறார்கள். ஒரு லாரி தண்ணீர் விலை சுமார் ரூ.3,000. செல்பேசி, மடிக்கணினி, ஸ்கூட்டர் வாங்க பாதிக் காசு என்றெல்லாம் கவர்ச்சிகர அறிவிப்புகளை வாரி வீசும் கட்சிகள் எதுவும் தண்ணீர் பிரச்சினையை விவாதிக்கவில்லை. இந்தத் தேர்தல் காலத்திலும்கூட தமிழகத்தில் இது மக்கள் பிரச்சினையாகவில்லை. நேற்றிரவு மின்சாரம் நின்றபோது பக்கத்து வீட்டுக்காரர், “சார், நம்ம தெருவுலேயும் பணப்பட்டுவாடா ஆரம்பிச்சுடுச்சு” என்றார் குஷியாக.

இந்த ஊரில் ரத்தக்கொதிப்பு வராமலிருக்க தினமும் தியானம் செய்ய வேண்டும். தண்ணீரை ரூ.3 ஆயிரம் விலை கொடுத்து வாங்கும் ஒரு சமூகத்துக்கு அரசியல்வாதிகளிடம் அதுபற்றிக் கேட்க ஏதும் இல்லை; ஓட்டுப் போட ஐநூறு கிடைக்குமா, ஆயிரம் கிடைக்குமா என்று அலைகிறது என்றால், இந்த அற்பத்தனத்தை வேறு எப்படிச் சகித்துக்கொள்வது?

நீங்கள் எந்த சாரி: அரசியல் பழகு!


ஆனைக்கட்டி பகுதியில் இருளர்கள் மேம்பாட்டுக்காக உழைத்துவரும் தாசனூர் நாராயணன், நண்பர் கா.சு.வேலாயுதன் மூலம் அறிமுகமானவர். நாராயணன் ஒரு மொழியை உருவாக்கியிருக்கிறார். ஆதீன் என்று அதற்குப் பெயர். இங்கே பொதிகை மலையில் தொடங்கி இமயமலை வரை இந்தியா முழுவதிலும் மலைகளில் வாழும் பழங்குடியின மக்கள் பேசும் பல்வேறு மொழிக் கலப்பின் தொகுப்பு இது. அந்தந்தப் பிராந்தியங்களின் மொழியையும் பெருமளவில் உள்வாங்கியிருக்கிறது. இதற்கென எழுத்து வடிவத்தையும் நாராயணன் உருவாக்கியிருக்கிறார். அதில் ஒரு நாவலையும் எழுதிவிட்டார். இதுவரை 25 பேர் இம்மொழியில் எழுத, படிக்கக் கற்றிருக்கின்றனர். வெறும் 25 பேர் மட்டுமே இன்றளவில் படிக்கத் தெரிந்த அந்த மொழியில், தொடர்ந்து பல சிறுகதைகளையும் நாராயணன் எழுதிக்கொண்டிருக்கிறார். “இந்திய அரசு மும்மொழிக் கொள்கைக்கு இடமளிப்பதையே பெரிய சாதனையாக இங்கு பேசுகிறார்கள். தமிழ்நாட்டில் இருப்பதாலேயே ஒரு இருளரின் தாய்மொழி தமிழ் ஆகிவிடுமா? பல்லாயிரம் ஆண்டுகளாக நாங்கள் பேசும் மொழியை இந்த அரசாங்கங்கள் பொருட்படுத்தாமல் பெருமொழிகளை முன்னிறுத்தும்போது, எங்கள் மொழியோடு எங்கள் சுயசிந்தனையை, பண்பாட்டு அறிவை எல்லாவற்றையும் நாங்கள் பறிகொடுக்கிறோம். மொழியைப் பாதுகாத்துக்கொள்ளாமல் எங்கள் இனத்தின் சுயத்தை நாங்கள் பாதுகாத்துக்கொள்ள முடியாது. என்னாலான முயற்சி இது” என்கிறார் நாராயணன்.

எது ஜனநாயகக் கட்சி; யார் ஜனநாயகத் தலைவர்? - அரசியல் பழகு


சமூக வலைதளங்களில் எங்கும் தம்பிதுரையின் படம் சுற்றிக்கொண்டிருக்கிறது. தேர்தல் பிரச்சாரத்துக்கு வரும் ஜெயலலிதாவின் வண்டி, சாலையில் எந்த இடத்தில் நிற்க வேண்டும் என்பதை அடையாளம் காட்டுவதற்காக, கையில் ஒரு ஜெயலலிதா - இரட்டை இலைச் சின்னம் பொறித்த தட்டியுடன் தம்பிதுரை பரிதாபமாக நிற்கும் படம் அது. அதிமுகவில் இதெல்லாம் புதிதல்ல. ஜெயலலிதா சிறையில் இருந்தபோது, முதல்வராக இருந்த பன்னீர்செல்வம், ஜெயலலிதா உட்கார்ந்த நாற்காலி என்பதாலேயே அந்த நாற்காலியில் அமராமலேயே முதல்வர் பதவிக் காலத்தை முடித்தவர். தம்பிதுரை இன்று இந்நாட்டின் மக்களவைத் துணை சபாநாயகர். ‘நீ ஊருக்கே ராஜாவாக இருந்தாலும், கட்சித் தலைமைக்கு அடிமையாகவே இருக்க வேண்டும்’ என்பதைச் சொல்லாமல் சொல்கிறது அந்தப் படம். ஜனநாயகம் இந்நாட்டில் இன்றைக்கு எவ்வளவு இழிந்த நிலையை அடைந்திருக்கிறது என்பதற்குமான குறியீடு இது. விஷயம் தெரிந்தவர்கள் என்று நாம் கருதுவோர்கூட “நாட்டிலேயே கட்டுக்கோப்பான கட்சி அதிமுக, கட்சியை விரலசைவில் வைத்திருப்பவர் ஜெயலலிதா” என்று இதையெல்லாம் விதந்தோதும்போது அச்சம் எழுகிறது. இன்னும் ஆண்டான் அடிமை மனோபாவத்திலிருந்து நம்மவர்கள் வெளியே வர எவ்வளவு காலம் ஆகும் என்ற கேள்வி எழுகிறது.

தேனெடுப்பவருக்கு வாய் இல்லையா : அரசியல் பழகு!


நம்மூரில் அரசியல்வாதிகள் மீதான வெறுப்பு மேலோங்கும்போது வெளிப்படும் பேச்சுகளில் ஒன்று, “பேசாம ராணுவத்துக்கிட்டயோ, அதிகாரிங்ககிட்டயோ ஆட்சியை ஒப்படைச்சிறலாம். இவய்ங்க தேவையே இல்ல.” அதிகாரிகளே இதைக் கேட்டால், நகைப்பார்கள். நாளைக்குப் புதிதாக ஆட்சி அதிகாரத்துக்குள் நுழையும் ஒரு அரசியல்வாதிக்கு, அந்தக் கோட்டைக்குள் இருக்கும் சர்வ ஓட்டைகளையும் சொல்லிக்கொடுப்பதே அவர்கள்தானே!

நேற்று காலை ஒப்பந்ததாரர் ஒருவருடன் ‘நடப்பு நிலவரம்’ பேசிக்கொண்டிருந்தேன். “அண்ணே, நம்ம வார்டுல ஒரு கக்கூஸ் கட்டுறோம்னு வெச்சிக்கிங்க. அதுக்கான தோராயமான கமிஷன் இப்படிப் போகும். கவுன்சிலருக்கு 2%, இளநிலைப் பொறியாளருக்கு 2%, உதவிப் பொறியாளருக்கு 2%, செயற்பொறியாளருக்கு 2%, கோட்டப் பொறியாளருக்கு 2%, அலுவலகத்துல வேலை பார்க்குறவங்களுக்குச் செய்ய வேண்டிய நடைமுறைகள் 3%. இதுல அதிகாரிங்க தரப்புலேர்ந்து ஒரு கணிசமான பங்கு மேலிடத்துக்கு மொத்தமா போயிடும். எப்படிப் பார்த்தாலும், மூணுல ரெண்டு பங்கு அதிகாரிங்க கணக்காயிடும்.”

உறங்காப்புலி சொன்ன கதை: அரசியல் பழகு


பொங்கல் சமயத்தில் - சட்டப்பேரவை கூடாத சமயங்களில்கூட - ஊரைவிட்டு விலகி, சென்னையில் டேரா போடும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் கதையை நண்பர் உறங்காப்புலி எனக்குச் சொன்னார். சுவாரசியமான, பொதுவெளியில் அதிகம் பேசப்படாத கதை அது. “ஊருல இருந்தா நன்கொடை கேட்டு வார கூட்டத்துக்கு அஞ்சியே இங்கெ ஓடியாந்துருவாங்க.”

“அரசியல்வாதிகளுக்கு நன்கொடை என்ன அவ்வளவு பெரிய பிரச்சினையா?”

உறங்காப்புலி சொன்ன கணக்கு மலைக்க வைக்கக் கூடியது. “ரொம்ப யோக்கியமான ஆளு ஒருத்தன் தேர்தல்ல போட்டி போட்டு, நேர்மையா தேர்தல் செலவு செஞ்சாலே குறைஞ்சது ஒரு கோடி ரூவா அழிக்கணும் தம்பி. ஒரு தொகுதிக்கு 250 பூத்து. ஒரு பூத்துக்குக் குறைஞ்சது 10 பேராவது ஒரு மாசம் வேலை பாத்தாத்தாம் அவென் நிக்குறதே மக்களுக்குத் தெரியும். இந்த 2,500 பேருக்கும் மூணு வேளை சோறு, டீக்காபி, பொட்டணமாவது வாங்கிக் குடுக்கணுமில்லா? இவங்க பூராப் பக்கமும் சுத்துறதுக்கு வண்டி வாடகை கொடுக்கணுமில்லா? சின்னதா நோட்டீஸ், சுவர் விளம்பரமாச்சும் செய்யணுமில்லா? இதுக்கே கோடி ஆயிருமே! இது நீங்க கனவு கண்டுக்கிட்டுருக்குற பரிசுத்தமான வேட்பாளரோட கணக்கு.

தம்பி, பூராம் கட்சியிலேயும் வட்டம், கிளை, நகரம், ஒன்றியம்னு ஆயிரத்தெட்டு பொறுப்புல நாளெல்லாம் பொது வேலையில திரியுதாம்மே, இவங்களுக்கெல்லாம் எந்த அரசாங்கம் சம்பளம் கொடுக்குது? இவய்ங்க இப்பம்தானே நாலு காசு பார்க்க முடியும்? நெலவரம் என்னா தெரியுமா? தொகுதிக்கு அஞ்சு கோடிலேர்ந்து பத்து கோடி வரைக்கும் ஓடுது. ஓட்டுக்குக் கொடுக்குற காசு இதுல சேத்தி இல்லை.

ஜெயிச்ச பெறவு வர்ற கணக்கைச் சொல்லட்டுமா? தொகுதிக்குக் கொறைச்சலா 250 கிராமங்க வரும். நம்மூர்ல தெருவுக்கு ஒரு கோயில். அட, ஊருக்கு ஒரு கோயில்னே வைங்க. அஞ்சி வருஷத்துக்குள்ள பாதி கோயில் கும்பாபிஷேகம் வந்துரும். கோயிலுக்குக் கொறைச்சலா பத்தாயிரம். அடுத்து, அத்தனை கிராமத்துலேயும் வருஷா வருஷம் கோயில் கொடை வரும். பொங்கல் கலை விழா, கபடிப் போட்டி, கிரிக்கெட் போட்டின்னு ஊருக்கு மூணு குரூப்பு பயல்வ வருவானுவ. ஆளுக்கு அஞ்சாயிரம். ஊருல சடங்கு, கல்யாணம், காதுகுத்து, கருமாதி எல்லாத்துக்கும் பத்திரிகை வெப்பாங்க. வெறுங்கைய வீசிட்டுப் போவ முடியுமா? இல்ல நூறு ரூவா மொய் எழுதிட்டு வந்துற முடியுமா? ஆளுக்குக் கொறைச்சலா ஆயிரம்.. மொத்தமா, அஞ்சு வருஷத்துக்கு என்னாச்சு? குறைச்சலா அஞ்சு கோடி. இதெல்லாம் ஊழல்ல பங்கில்லையா? அடுத்து, இன்னொரு கணக்குப் போடுங்க. ஒரு எம்எல்ஏ சைக்கிள்லயா சுத்த முடியும்? நம்ம வீட்டுக் கல்யாணத்துக்கே நாலு பேரோடு கார்ல வந்தாத்தானே மதிக்கோம்! காருக்கும் கூட வர்ற நாலு பேருக்கும் யாரு ‘பெட்ரோல்’ போடுறது?”

ஓட்டதிகாரம் - அரசியல் பழகு!


இந்த முறை நாகப்பட்டினம் போயிருந்தபோது கொடியம்பாளையம் போயிருந்தேன். கொள்ளிடம் ஆற்றின் நடுவேயுள்ள தீவுக் கிராமம் இது. என்ன பிரச்சினை என்றாலும், அதிகாரிகளைப் பார்க்க ஒரு மணி நேரம் படகில் பயணித்து, கரையிலிருந்து பஸ்ஸில் பயணித்துதான் மக்கள் நாகப்பட்டினத்தை அடைய வேண்டும். இந்தத் தேர்தலிலும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் படகில் செல்லப்போகும் ஊர் இது.

ரத்தப் பிளவினூடே ஒரு புரட்சி: அரசியல் பழகு


பாகிஸ்தானின் ஜனநாயகக் குரல்களில் ஒன்று ஃபரானாஸ் இஸ்பஹானி. எழுத்தாளர். சமீபத்தில் இந்தியாவுடன் பாகிஸ்தானை ஒப்பிட்டிருந்தார். “அடுத்தடுத்த நாட்களில் சுதந்திரம் அடைந்த நாடுகள். இந்தியாவில் ஜனநாயகபூர்வமான முதல் தேர்தல் 1952-ல் நடந்தது. பாகிஸ்தானில் 1970-ல் நடந்தது. 2008 முதல் 2012 வரை ஆண்ட அரசே பாகிஸ்தானில் தனது பதவிக்காலத்தை முழுமையாக நிறைவுசெய்த முதல் அரசு. இந்தியா இதற்குள் 9 முழுமையான அரசுகளைப் பார்த்துவிட்டது. சிறுபான்மையினருக்கு பாகிஸ்தான் உகந்த நாடு அல்ல என்பது முதல் பிரதமர் லியாகத் அலிகானின் ‘புதிய நாட்டின் லட்சியங்கள்’ உரையிலேயே தெரிந்தது. பாகிஸ்தான் இஸ்லாமிய நாடாக இருக்கும் என்று அவர் அறிவித்தார். எங்கள் அரசியல் சட்டத்திலும் ‘இது மதச்சார்பற்ற நாடு’ எனும் வாசகம் இல்லை. 1947-ல் பாகிஸ்தானில் முஸ்லிம் அல்லாதவரின் எண்ணிக்கை 23%. இப்போது அது 4%. மக்களிடையேயான பாரபட்சத்தை அரசே அதிகாரபூர்வமாகச் செய்கிறது.”

நண்பர் மு.ராமநாதன் சீனப் புத்தாண்டு தினத்தையொட்டி ஒரு கட்டுரைக்கான குறிப்பை அனுப்பியிருந்தார். சீன அரசின் ‘ஹுக்கு முறை’யை அப்போதுதான் முழுமையாக அறிந்தேன். “சீனர்களின் மிக முக்கியமான பண்டிகை சீனப் புத்தாண்டு. நகரங்களில் பணியாற்றும் சுமார் 25 கோடித் தொழிலாளர்கள் தொலைதூரங்களில் உள்ள கிராமங்களை அடைவார்கள். இந்தப் பண்டிகைக் காலமே ஒரு வருஷத்தில் அவர்கள் குடும்பத்துடன் சேர்ந்து வாழும் ஒரே சந்தர்ப்பம்” என்று எழுதியிருந்தார் ராமநாதன். “ஏன் நகரங்களுக்கு அவர்கள் குடும்பத்தோடு குடி மாற முடியாதா?” என்று கேட்டேன். அதற்கு அவர் எழுதிய பதில் இது: “முடியாது. சீனாவில் ‘ஹுக்கு’ என்று சொல்வார்கள். நம்மூரில் ரேஷன் அட்டைபோல; உள்நாட்டுக் கடவுச்சீட்டு என்றும் இதைச் சொல்வார்கள். முக்கியமான ஆவணம் இது. கிராமத்து ஹுக்குவை நகரத்து ஹுக்குவாக மாற்றுவது சுலபம் இல்லை. நகரத்து ஹுக்கு இல்லை என்றால், கல்வி, மருத்துவம், வீட்டு வசதி, ஓய்வூதியம் என அரசு வழங்கும் சலுகைகள் எதையும் நகரத்தில் பெற முடியாது. ஆகவே, கிராமங்களிலிருந்து வரும் தொழிலாளர்கள் தொழிற்சாலைகள் கட்டியிருக்கும் கூடங்களிலேயே இருப்பார்கள். அவர்களது மனைவி, பிள்ளைகள், பெற்றோர்கள் கிராமங்களில் வசிப்பார்கள். இன்றைய சீனக் குழந்தைகளில் நான்கில் ஒன்று, இப்படி அப்பாவைப் பிரிந்து வளர்பவை.”

வெறும் சொல் அல்ல ஜனநாயகம்: அரசியல் பழகு!


திருச்சியில் செய்தியாளராக இருந்தபோது, குல்சும் பீபியைச் சந்தித்தேன். 116 வயது மூதாட்டி. நாட்டிலேயே அதிக வயதானவராக இருந்த அவருக்கான வாக்காளர் அட்டையை அன்றைய ஆட்சியர் நந்தகிஷோர் நேரில் சென்று வழங்கினார். நான் கேள்விப்பட்டு சென்றபோது நத்தர்ஷா பள்ளிவாசலில் குல்சும் பீபி இருப்பதாகச் சொன்னார்கள். பழமையான அந்தப் பள்ளிவாசலின் வாயிலில் யாசகம் பெறுபவராக அந்த மூதாட்டி அமர்ந்திருந்தார். நான் அவரை ஒரு பேட்டி எடுத்தேன். ஒரு ஆச்சரியமான விஷயம், எல்லாத் தேர்தல்களிலும் அவர் தவறாமல் வாக்களித்திருந்தார். குல்சும் பீபி ஆங்கிலேயரின் ஆட்சியைப் பற்றி விவரிக்கையில் சொன்னார், “வெள்ளைக்காரங்க ஆட்சியை, முழுக்கவுமே குறையாச் சொல்லிற முடியாது. என்ன மாதிரி ஒரு ஏழைப்பட்ட முஸ்லிம் பெண் அந்தக் காலத்திலேயே பள்ளிக்கூடம் போய்ப் படிக்க முடிஞ்சுதுன்னா, அது வெள்ளைக்காரங்க வராட்டினா இங்க நடந்திருக்குமா?”

திமுக, அதிமுக ஒழிந்தால்தான் தமிழ்நாடு உருப்படும் - அன்புமணி


இந்தத் தேர்தலில் வெல்பவர் யாராகவேனும் இருக்கலாம்; போக்குகளை உருவாக்குவதில் முன்னிலையில் இருந்தவர் அன்புமணி. தமிழக அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் விவசாயத்துக்கு இந்த முறை அளித்திருக்கும் முக்கியத்துவத்திலும், அவை பெருமளவில் வெற்றுக் கவர்ச்சி இலவச அறிவிப்புகளைத் தவிர்த்ததிலும் இந்த விஷயங்களைத் தொடர்ந்து பேசிவரும் பாமகவுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. திமுக, அதிமுகவுக்கு மாற்றாக இத்தனை அணிகள் இம்முறை துணிச்சலாகக் களம் இறங்குவதற்கு முன்னோடியாக, முதலில் தனியாகத் தேர்தல் களத்திலும் அன்புமணியே இறங்கினார். தமிழகத்தின் எல்லாப் பிரச்சினைகளையும் நிர்வாகரீதியில் அணுகும் திறன் அன்புமணியின் பேச்சில் வெளிப்பட்டது. எதிர்காலத் தமிழக அரசியலில் எல்லோருக்குமே அவர் ஒரு சவாலாக இருப்பார் என்பதையும் அவருடைய வியூகங்கள் உணர்த்துகின்றன.

தண்ணீர் விட்டா வளர்த்தார்கள் : அரசியல் பழகு!


டெல்லியிலுள்ள லால் பகதூர் சாஸ்திரியின் நினைவில்லத்தில், ஒரு கண்ணாடிப் பேழைக்குள் விரலளவு கொண்ட சின்ன டம்ளர் ஒன்றை வைத்திருந்தார்கள். உடன் வந்த நினைவில்லக் காப்பாளர் அதன் வரலாற்றைச் சொன்னார். “இது சாஸ்திரியிடம் கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்ற அவருடைய மனைவி லலிதா வாங்கிய டம்ளர். சுதந்திரப் போராட்டக் காலத்தில் சாஸ்திரி சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கெனவே ஏழ்மையான பின்னணியைக் கொண்ட அவருடைய குடும்பத்தை சாஸ்திரியின் சிறைவாசம் மேலும் வறுமையில் தள்ளியது. சிறையிலிருந்த சாஸ்திரியைப் பார்க்க லலிதா சென்றபோது அவர் கடுமையாக மெலிந்திருந்தார். சாஸ்திரி சிறையிலிருந்தபோது குடும்பச் சுமையை ஏற்றிருந்ததோடு போராட்டங்களிலும் ஈடுபட்டுவந்தார் லலிதா. தன் உடல்நலத்தை அவர் எப்போதுமே பொருட்படுத்த மாட்டார் என்பதால், ‘எனக்காக தினமும் ஒரு டம்ளர் பால் மட்டுமாவது நீ சேர்த்துக்கொள்ள வேண்டும்’ என்று லலிதாவிடம் உறுதிகேட்டார் சாஸ்திரி. லலிதா உறுதிகொடுத்தார். தினமும் அப்படிப் பால் குடிக்கும் அளவுக்கு வீட்டின் நிதி நிலைமை இல்லை. அதேசமயம், கணவருக்குக் கொடுத்த உறுதியையும் மீறக் கூடாது என்று நினைத்தவர் குழந்தைகள் விளையாட்டுக்குப் பயன்படுத்தும் விரலளவு டம்ளரை வாங்கினார். வீட்டுக்குப் பிள்ளைகளுக்கு டீ போட வாங்கும் கொஞ்சம் பாலில், தன் பங்கை இதில் நிரப்பிக் குடித்தார். அந்த டம்ளரே இது!”

இதை அவர் சொல்லிக்கொண்டிருந்தபோதே, என் கூட நின்று இதைக் கவனித்துக்கொண்டிருந்த ஒரு பெண் அப்படியே அந்த இடத்தில் மண்டியிட்டு வணங்கினார். அந்தக் கண்ணாடிப் பேழையைத் தொட்டு வணங்கியபோது, அவர் கண்களிலிருந்து பொலபொலவென்று கண்ணீர் கொட்டியது.

எது நவயுக புரட்சி - அரசியல் பழகு!



வெயில் கொளுத்தும் நண்பகல் வேளை. ஒரு இளைஞர் சந்திக்க வந்திருக்கிறார் என்று தகவல் வருகிறது. அலுவலக வரவேற்பறையில் அமரவைக்கச் சொல்லிவிட்டு, கீழே சென்று பார்க்கிறேன். ஒடிந்துவிடக் கூடிய தேகம், கருத்துப்போன முகம், குடம் நீரைக் கவிழ்த்ததுபோல வடியும் வியர்வை.. கையில் நான்கு புத்தகங்களுடன் உட்கார்ந்திருந்தார் அந்த இளைஞர். எல்லாம் ஒரு இயக்கத்தால் பதிப்பிக்கப்பட்டவை. “நீங்கள் இந்தப் புத்தகங்களைப் படித்துவிட்டு இதுபற்றி எழுத வேண்டும்” என்கிறார். புத்தகங்களைப் புரட்டினால், ஒரே புரட்சி புரட்சியாக உதிர்ந்து கொட்டுகின்றன.

பெரம்பலூர் மாவட்டத்தின் பின்தங்கிய கிராமம் ஒன்று அந்த இளைஞரின் சொந்த ஊர். சென்னைக்குப் படிக்க வந்தவரை, புரட்சிகர இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரின் பேச்சு ஈர்த்திருக்கிறது. முதலில் விடுமுறை நாட்களில் கூட்டங்களுக்குச் செல்ல ஆரம்பித்திருக்கிறார். இப்போது இயக்கத்தின் பகுதிநேர ஊழியர். அன்றைக்குக் கல்லூரி வேளை நாள். “இந்த நேரத்தில் வந்திருக்கிறீர்களே, கல்லூரிக்கு இன்று போகவில்லையா?” என்று கேட்டேன். பல நாட்கள் இயக்கச் செயல்பாடுகள் அவருடைய கல்லூரி நாட்களை எடுத்துக்கொண்டிருப்பதை அவருடைய பதில்கள் உணர்த்தின. கல்லூரி மாணவர் எனும் அடையாளத்தோடு வெவ்வேறு கல்லூரிகளில் ஆள் சேர்க்கும் வேலைக்கு இயக்கம் அவரை இப்போது பயன்படுத்திக்கொண்டிருப்பதையும் உணர்ந்துகொள்ள முடிந்தது.

நிறையக் கோபம் அவரிடமிருந்து வெளிப்பட்டது. “இந்த நாடு பெருமுதலாளிகளின் நாடு. இந்து பெரும்பான்மைவாதத்தின் நாடு. ஆதிக்கச் சாதிகளின் நாடு. எந்தக் கட்சி இங்கே ஆட்சிக்கு வந்தாலும் அவை பார்ப்பனிய - பனியா, ஏகாதிபத்திய, தரகு முதலாளிய அரசாங்கங்களையே அமைக்கின்றன” என்று வரிசையாகக் குற்றஞ்சாட்டினார். “இந்த ஜனநாயகம் போலி ஜனநாயகம். புரட்சிதான் ஒரே தீர்வு” என்றார். புரட்சி என்று அவர் குறிப்பிட்டது, ஆயுதக் கிளர்ச்சியை. அப்புறம் நாங்கள் டீ சாப்பிடச் சென்றோம். அவர் கொடுத்த புத்தகங்களை வாங்கிக்கொண்டு, “தயவுசெய்து இந்தப் புரட்சியில் ஈடுபடும் முன், படிப்பை நீங்கள் முழுமையாக முடிக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டேன்.

சென்னை வந்ததிலிருந்து இப்படியான இளைஞர்களை அனேகமாக மாதத்துக்கு ஒருவரையாவது சந்திக்கிறேன். பெரும்பாலும் சமூகரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும் அழுத்தப்பட்ட, கிராமப்புறப் பின்னணியிலிருந்து வரும் மாணவர்கள். இளைஞர்களுடனான கலந்துரையாடல் கூட்டங்களிலும் இப்படியான மாணவர்களைச் சந்திக்க முடிந்தது. ஒருபுறம் அரசியல் உணர்வே இல்லாத உள்ளீடற்ற மாணவர்களை நம் கல்வி நிலையங்கள் உருவாக்குகின்றன என்றால், மறுபுறம் ஆழமான ஆர்வம் கொண்ட இப்படியான மாணவர்களுக்கு ஆக்கபூர்வமான இடமளிக்காமல் கல்வி நிலையங்கள் வெளியே தள்ளுகின்றன. இதற்கெனவே காத்திருக்கும் கசப்பு சக்திகள் அவர்களை வாரிச் சுருட்டிக்கொள்கின்றன.

நம் சமூகத்தில் கடந்த ஒரு நூற்றாண்டில் அதிகம் பேசப்பட்டு, உலுத்துப்போன வார்த்தை புரட்சியாகத்தான் இருக்கும். ஒரு ஜனநாயக யுகத்தில், ஆயுதவழிக் கிளர்ச்சியை அடிமனதில் வைத்துக்கொண்டு, புரட்சி எனும் வார்த்தையைப் பயன் படுத்துபவர்களை எப்படிக் குறிப்பது? இன்னும் பழமைவாத மனநிலையிலிருந்து விடுபடாதவர்களாலேயே இப்படிப் பேச முடியும் என்று நினைக்கிறேன். இன்றைய காலகட்டத்தில் ஆயுதக் கிளர்ச்சியைத் தன் அந்தரங்கக் கனவாகக் கொண்டிருக்கும் ஒரு இயக்கம், தன்னையும் ஏமாற்றிக்கொண்டு தனக்குக் கீழே இருப்பவர்களையும் ஏமாற்றிக்கொள்ளப் பழக்குவதாகவே இருக்க முடியும்.

தார்மிகம் எனும் அறம் - அரசியல் பழகு!


பெரும்பாலான மாணவர்கள் “இன்றைய அரசியல்வாதிகள் சுயநலவாதிகள்” என்று குற்றம்சாட்டுகின்றனர். முக்கியமான பிரச்சினைகளில் அரசியல்வாதிகளின் செயல்படாத்தன்மையையும் சாடுகின்றனர். மாணவர்களுடனான கலந்துரையாடல் கூட்டங்களில் இப்படியான பேச்சுகள் வந்தபோதெல்லாம் அரங்கம் அதிர்ந்தது.

நான் அவர்களிடம் இரு கேள்விகளை முன்வைத்தேன்.


“தங்கைகளே, இன்றைய தலைவர்கள் எல்லோரையுமே சுயநலவாதிகள், செயல்படாதவர்கள் என்று நீங்கள் பொதுமைப்படுத்துகிறீர்கள். நானும் உங்கள் கட்சியில் சேர்ந்துவிடுகிறேன். இப்போது நம் கருத்துப்படி, மாற்றம் வேண்டும் என்றால், இவர்கள் களத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும். இளைஞர்கள் அந்த இடத்தைக் கைப்பற்ற வேண்டும். சரி, நாம் சுயநலவாதிகள் என்று குறிப்பிடுபவர்கள் ஒரு நாளைக்குக் குறைந்தது 12 மணி நேரம் வரை உழைக்கிறார்கள், நூறு வயதை நெருங்கும் சூழலிலும் காலையில் ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து உழைக்கத் தொடங்கிவிடுகிறார்கள். அப்படியென்றால், மாற்று அரசியல் பேசும் பொதுநலவாதிகள் இளைஞர்கள் நாம் எவ்வளவு நேரம் உழைக்க வேண்டும்? உண்மையில் எவ்வளவு நேரத்தைப் பொது வேலைக்குக் கொடுக்கிறோம்?”
 

“தம்பிகளே, நாம் இன்றைய அரசியல்வாதிகளின் செயல்படாத்தன்மையைப் பற்றி பெரிதாகப் பேசுகிறோம். கடந்த மூன்று வருடங்களில் மூன்று இளைஞர்களின் மரணம் தமிழகத்தை அதிரவைத்தது. இளவரசன், கோகுல்ராஜ்,  சங்கர் மூவரும் செய்த ஒரே குற்றம் காதலித்தது. நிகழ்தகவு மாற்றி அமைந்தால், அந்த மூவரில் ஒருவர் நீங்களாக இருந்திருக்கலாம் அல்லது அந்த மூவரால் காதலிக்கப்பட்ட பெண்கள் உங்கள் தோழியராக இருந்திருக்கலாம். நாளை இதே சாதி உங்கள் கழுத்திலும் உங்கள் தோழியர் கழுத்திலும் அரிவாளை வைக்கலாம். ஒரு சக மாணவராக, இதற்கு எதிராக நீங்கள் வெளிப்படுத்திய எதிர்வினை என்ன? சாலை மறியலில் போய் உட்கார வேண்டாம்; குறைந்தபட்சம் ஒரு கருப்புப் பட்டையை அணிந்துகொண்டு அன்றைக்குக் கல்லூரிக்குச் செல்லும் அளவுக்குக்கூடவா நம் கல்வி நிறுவனங்களில் ஜனநாயகம் இல்லை?”
 

அரங்கம் நிசப்தமானது.
 

ஒரு சமூகம் கீழே எந்த அளவுக்குத் தார்மிகத் துடிப்போடு ஜனநாயகச் செயல்பாடுகளில் பங்கெடுக்கிறதோ, அந்த அளவுக்கே மேலே அதன் பிரதிநிதிகளிடத்தில் ஆக்கபூர்வமான செயல்பாடுகளைப் பார்க்க முடியும். ஒரு சமூகத்தை ஆளும் வர்க்கமானது அந்தச் சமூகத்தின் கடைந்தெடுத்த பிழிவு. மேலே திரளும் வெண்ணெய் ஊளை நாற்றமெடுக்கிறது என்றால், கீழே பாலும் ஊளை அடிக்கிறது என்றே பொருள்.

அரசியல் பழகு!

மிக அரிதான ஒரு வாய்ப்பு சமீபத்தில் கிடைத்தது. தேர்தல் சமயத்தில் ஊர் ஊராகச் சென்று மாணவர்களோடு கலந்துரையாடும் வாய்ப்பு. முதலில், தமிழகத்தின் நான்கு முக்கிய நகரங்களில் ‘தி இந்து’வே நேரடியாக நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தது; அடுத்த, எட்டு நிகழ்ச்சிகள் இந்தியத் தேர்தல் ஆணையத்துடன் இணைந்து நடத்தப்பட்டது. ஒவ்வொரு இடங்களிலும் குறைந்தது அந்நகரைச் சுற்றியுள்ள ஐந்தாறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த மாணவர்களைச் சந்திக்க முடிந்தது. நகரங்கள், கிராமங்கள் என்ற வேறுபாடு இல்லாமல், மருத்துவ மாணவர்கள், பொறியியல் மாணவர்கள், வேளாண் மாணவர்கள், வரலாற்று மாணவர்கள், கலை இலக்கிய மாணவர்கள், நுண்கலை மாணவர்கள், அறிவியல் மாணவர்கள் என்று எல்லாத் தரப்புகளையும் சேர்ந்த கிட்டத்தட்ட 25,000 மாணவர்களுடன் இணைந்து நடத்திய கலந்துரையாடல் இது.