ஊரடங்கு: என்ன பேச வேண்டும் என் பிரதமர் ?



அன்புக்குரிய சகோதரர்களே, வணக்கம்!

உலகளாவிய சவாலாக உருவெடுத்திருக்கும் கரோனாவுக்கு எதிரான செயல்பாடுகளில் உலகத்தை ஒட்டி நாமும் வியூகங்களை வகுத்துக்கொண்டிருந்தோம். ஊரடங்குக்குப் பிந்தைய இந்த ஒரு மாதம் நமக்குப் பல படிப்பினைகளைத் தந்திருக்கிறது. கிருமி எப்படியெல்லாம் பரவுகிறது, அறிகுறிகள் என்னவாகவெல்லாம் விரிவடைகின்றன, தொற்று எத்தனை நாட்களுக்கு நீடிக்கிறது; இவை எல்லாமே ஒவ்வொரு நாளும் பரிணாம வளர்ச்சி அடைகின்றன அல்லது நாளாக நாளாகத்தான் நாம் இந்தக் கிருமியையும் அதன் மொத்த விளைவுகளையும் புரிந்துகொள்ள முடிகிறது.

சீனா இந்தக் கிருமியை முதலில் எதிர்கொண்டது; ஆகையால், அடுத்ததாக ஐரோப்பா, அமெரிக்கா, தொடர்ந்து ஆசியா, ஆப்பிரிக்காவின் ஏனைய நாடுகள் என்று எல்லோருமே  மூடுண்ட சீன அணுகுமுறையையே பின்பற்றலானோம்; முழு ஊரடங்குக்கு மாறினோம். சில வாரங்களில் அல்லது சில மாதங்களில் இதைக் கடந்துவிடலாம் என்று எண்ணினோம். வெளிநாடுகளிலிருந்து கிருமித் தொற்றோடு வந்திருப்பவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்துவதன் வாயிலாகவும், அவர்கள் வழி தொற்றுக்குள்ளாவோரைத் தடுப்பதன் வாயிலாகவும் கிருமியை முடிவுக்குக் கொண்டுவந்துவிடலாம் என்று நம்பினோம். இது நம் கணக்குகளில் அடங்கிவிடும் விவகாரம் அல்ல என்பதையே மாறிவரும் சூழல் உணர்த்துகிறது. சில மாதங்கள் அல்ல; இந்தக் கிருமியிடமிருந்து முழுமையாக விடுபட சில ஆண்டுகள்கூட ஆகலாம் என்கிறார்கள் நிபுணர்கள். அப்படியென்றால், என்ன செய்வது? ஆண்டுக்கணக்கில் வீட்டுக்குள்ளேயே இருப்பதா?

நாம் வியூகத்தை மாற்ற வேண்டும் என்று தோன்றுகிறது. அதாவது, கிருமியிடமிருந்து வெற்றிகரமாகத் தப்பித்துக்கொள்வது எப்படி என்கிற வியூகத்திலிருந்து கிருமியை வெற்றிகரமாக எதிர்கொள்வது எப்படி என்கிற வியூகத்துக்கு நாம் மாற வேண்டும். கிருமி நம்மைத் தொற்றினால், நம் குடும்பத்தினரைத் தொற்றினால் எப்படி அதை எதிர்கொண்டு கடந்து வருவது என்ற முன்னேற்பாட்டினூடாக புதியதோர் இயல்பு வாழ்க்கையை உருவாக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

பஞ்சம்தான் பெரிய கொள்ளைநோய்: கி.ரா. பேட்டி

படம்: புதுவை இளவேனில்

நாம் வாழும் காலத்தின் முதுபெரும் படைப்பாளியும் நூற்றாண்டை நெருங்குபவருமான கி.ராஜநாராயணன் இந்த ஊரடங்கு காலத்தில் எப்படி இருக்கிறார்? எத்தனையெத்தனை நோய்களையும் மக்களின் வருத்தப்பாடுகளையும் பார்த்தவர் அவர்! இந்த ஊரடங்கு காலத்தை அவர் எப்படிப் பார்க்கிறார்? நம்முடைய மூதாதையோரிடமிருந்து நாம் பெற்றுக்கொள்ள இன்றைக்கு ஏதேனும் செய்தி இருக்கிறதா? புதுச்சேரியில் வீட்டுக்குள்ளேயே முடங்கியிருப்பவருடன் பேசினேன்.

அடுத்த 3 மாதங்களுக்கு என்ன திட்டம்?


ஒரு சின்ன குடிசை. மூதாட்டியும் பெரியவரும் அதில் வசிக்கிறார்கள்.  பெரியவர் நல்ல நாட்களிலேயே வீட்டில் முடங்கிக் கிடப்பவர். மூதாட்டி வீடுகளுக்கு வேலைக்குச் செல்பவர். வெளிவேலை, உள்வேலை எல்லாமே அவர்தான். கரோனா செய்திகள் மெல்ல அந்த வீட்டின் அன்றாடங்களை மாற்றுகின்றன. வீட்டு வாசலில் சாணி தெளிப்பதற்கு மாறாக, தினமும் மஞ்சளும் உப்பும் கலந்த தண்ணீரை மூதாட்டி தெளிக்கிறார்; ஒருசில நாட்கள் வீட்டிலேயே வேப்பிலைக் கரைசலைத் தெளிக்கிறார். வீட்டு வாசலிலேயே ஒரு சோப்பு - ஒரு வாளித் தண்ணீர். வேலைக்குச் செல்வதை நிறுத்திவிட்டார். கை, கால் கழுவாமல் வீட்டினுள் நுழைவதில்லை.

பிரதமர் மோடி ஊரடங்கை அறிவித்தபோது, பக்கத்தில் கடன் வாங்கி மூன்று மாதத்துக்கான அரிசியையும், கொஞ்சம் மளிகைச் சாமான்கள் – காய்கறிகளையும் வாங்கி வந்தார். முதலில் வடகம் உருட்டினார். அடுத்தடுத்த நாட்களில் வடகத்தோடு கத்திரி, மா, சுண்டைக்காய் என்று பல காய்களும் வற்றல்களாகச் சின்னச் சின்னத் தட்டுகளில் வெயிலில் காய்ந்தன. அன்றைக்குக் காய்கள் வீட்டுக்கு வெளியிலேயே கழுவப்பட்டு, வெயிலில் ஒரு சூடு கண்ட பின் வீட்டுக்குள் கொண்டுசெல்லப்படுகின்றன. “நாம பழைய நெலமைக்குத் திரும்ப குறைச்சலா மூணு மாசமாகும்போல இருக்கே? வெளிநடமாட்டம் இல்லாதப்ப உடம்பைப் பெருக்கவுட்டு பிரச்சினையத் தேடிக்கக் கூடாதுன்னு அய்யாவும் நானும் சாப்பாட்டை ரெண்டு வேளையாக்கிட்டோம். வாரத்துக்கு ஒருக்க நான் சந்தைக்குப் போறதோட சரி. இனி அதுக்கும் கையில காசு இல்லை. கிடைக்கிற காய்ல கொஞ்சத்தைச் சமைச்சுட்டு, மிச்சத்தை வத்தலுக்குப் போடுறது. தண்ணிச் சோறு திங்கவும் தொட்டுக்கை வேணும்ல? பாவம் குடியான ஜனம். இப்பவும் நமக்காகக் காய்கறியத் தூக்கிக்கிட்டு ஓடி வருதுவோ. நாளைக்கு வியாதி மிகுந்தா பயம் யாரை வெளிய நடமாடவுடும்? சம்சாரிங்க யோசிச்சுதான் நடந்துக்கணும்! நீகூட ஒன்னைப் பத்தா வகுத்துச் செலவழிக்கப் பழகிக்கய்யா!”

இதை ஒரு மூதாட்டியின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று சொல்வதா அல்லது ஒரு சமூகத்தினுடைய வரலாற்றறிவின் காலத்திய வெளிப்பாடு என்று சொல்வதா? கடன் வாங்கி அரிசியை முன்கூட்டி வாங்குபவளும் அவள்தான்; அரிசியைச் சிக்கனமாகச் செலவழிப்பவளும் அவள்தான். நெருக்கடியான சூழல்களில் துரிதமாக முடிவெடுப்பது மட்டுமல்ல; காலத்தே செயல்படுவதும் முக்கியம். அப்படிச் செயல்பட எங்கோ உண்மைக்கு முகம் கொடுத்து, பொறுப்பெடுத்துக்கொள்வது முக்கியம். உங்கள் சிந்தனையை யாரும் ஆக்கிரமிக்காமல் இருப்பது முக்கியம். இந்தக் கொள்ளைநோய்க் காலகட்டத்தில் இந்திய அரசிடம் நான் காணும் பெரும் சிக்கல், அது ஒட்டுமொத்த நாட்டு மக்களின் சிந்தனையையும் ஆக்கிரமிக்க முற்படுகிறது; ஆனால், அதன் சிந்தனை என்ன, அதன் கையில் உள்ள முன்கூட்டிய திட்டங்கள் என்ன என்பது இன்றுவரை நம் யாருக்கும் தெரியவில்லை. ஊரடங்குக்கு முந்தின நாள் வரை நாடாளுமன்றக் கூட்டத்தை நடத்திக்கொண்டே ஒரு மாநிலத்தில் ஆட்சி மாற்றக் காட்சிகளையும் அரங்கேற்றிக்கொண்டிருந்ததுதான் அது!