விஜய் அரசியல் பேசினால் என்ன தவறு?



தன்னைக் கடந்து சென்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பைக் கோபம் கொப்பளிக்க சிறுமி கிரியத்டா துன்பர்ரி முறைக்கும் காணொலியைப் பார்த்தபோது, ட்ரம்ப் இதே காணொலியைப் பார்த்தபோது எப்படி உணர்வார் என்று தோன்றியது. உலகின் கவனம் ஈர்க்கும் சூழல் செயல்பாட்டாளராக உருவெடுத்திருக்கும் பதினாறு வயது மாணவிகிரியத்தா துன்பர்ரிக்காக அவருடைய சொந்த நாட்டினரான ஸ்வீடன்காரர்கள் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். உலகின் மிக சக்தி வாய்ந்த நபருக்கு எதிரான கிரியத்தா துன்பர்ரியின் சீற்றம் அவருடைய தார்மிகத்தோடு, ஸ்வீடன் தன் குடிமக்களிடம் வளர்த்தெடுத்திருக்கும் துணிச்சலான ஜனநாயக மாண்பையும், தாராளச் சிந்தனையையும் சேர்த்தே வெளிப்படுத்தியிருக்கிறது. சமீபத்தில் பத்தாவது பேரக் குழந்தைக்குத் தாத்தாவான ட்ரம்பின் மூத்த பேத்தியான கய் ட்ரம்பைவிடவும் நான்கே வயது மூத்தவர் கிரியத்தா துன்பர்ரி; அபூர்வமாகவேனும் ட்ரம்ப் கனிவாக அவரை எதிர்கொள்வார் என்று எதிர்பார்த்தேன். தன் வயதுக்கு இணையான எதிரியை எதிர்கொள்வதுபோலவே கிரியத்தா துன்பர்ரியையும் கிண்டலடித்திருக்கிறார் ட்ரம்ப்.

நியூ யார்க்கில் உலகத் தலைவர்கள் பங்கேற்ற ஐ.நா. சபையின் பருவநிலை உச்சி மாநாட்டில் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்திக்கொண்டார் கிரியத்தா துன்பர்ரி.  “உங்கள் வெற்று வார்த்தைகளால் எனது கனவுகளையும் என் குழந்தைப் பருவத்தையும் நீங்கள் திருடிவிட்டீர்கள். மக்கள் துயருறுகிறார்கள். மக்கள் செத்து மடிகிறார்கள். ஒட்டுமொத்த உயிர்ச்சூழலும் சிதைந்தழிகிறது. பேரழிவின் தொடக்கத்தில் இருக்கிறோம். ஆயினும் நீங்கள் பேசுவதெல்லாம் பணத்தைப் பற்றியும் நீடித்த பொருளாதார வளர்ச்சியைக் குறித்த கதைகளைப் பற்றியும்தான். எவ்வளவு துணிச்சல் உங்களுக்கு!” என்று பருவநிலை மாற்றத்தை அலட்சியமாகக் கையாளும் உலகத் தலைவர்களை நோக்கி அவர் கேட்டதைப் புதிய தலைமுறையின் அறைகூவல் என்றே சொல்ல வேண்டும்.