எங்களுக்கு என்ன தண்டனை குன்ஹா?


ந்தியா முழுவதும் எல்லாத் தொலைக்காட்சிகளும் வெவ்வேறு மொழிகளில், தங்களுக்கு வசதியான தொனியில் ஒரே விஷயத்தைத்தான் சொல்லிக்கொண்டிருந்தன. “இந்திய வரலாற்றில் முதல்முறையாக முதல்வர் பதவியில் இருக்கும்போதே நீதிமன்றத்தால் ஊழல் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு, பதவியைப் பறிகொடுத்தார் ஜெயலலிதா. நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை. தவிர, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப்படி, தண்டனையைத் தொடர்ந்து அடுத்த ஆறு ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை தொடரும் என்பதால், 10 ஆண்டுகள் அவர் அரசியலிலிருந்து ஓரங்கட்டப்படுவார்.”

சிரிப்புதான் வருகிறது. போன வருஷம் கிட்டத்தட்ட இதே காலகட்டத்தில், பிஹாரின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் ஊழல் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு, 5 ஆண்டுகள் தண்டனையோடு சிறைக்குச் சென்றார். ஞாபகம் இருக்கிறதா? 17 ஆண்டுகள் எப்படியெல்லாம் இழுக்க முடியுமோ அப்படியெல்லாம் வழக்கை இழுத்தடித்தார். இடையிலேயே மனைவி ராப்ரி தேவியை முதல்வர் ஆக்கினார். நாடாளுமன்ற உறுப்பினர் ஆனார். ரயில்வே அமைச்சர் ஆனார். சிறைக்குப் போனார். இப்போது என்ன செய்கிறார்? வழக்கு மேல் விசாரணையில் இருக்கிறது. பிணையில் வெளியே வந்த லாலு, பாட்னாவில் தன் வீட்டுக் கொல்லையில், ரம்மியமான சூழலில், எதிரே கிடக்கும் மேஜையில் கால் மேல் கால் போட்டுக்கொண்டு, அப்போதைக்கு அப்போது கறந்த எருமைப் பாலில் மலாய் தூத் குடித்துக்கொண்டு பிஹார் அரசியலைத் தீர்மானிக்கிறார். சமீபத்திய தேர்தலில் மக்கள் லாலுவின் கரத்தை மேலும் வலுப்படுத்தியிருக்கிறார்கள்.

பிஹார் கதை போகட்டும், நம்மூருக்கு வருவோம். ஜெயலலிதா ஊழல் குற்றவாளி என்று அறிவித்ததன் மூலம், 1991-1996 அதிமுக ஆட்சியில் ஊழல் நடந்தது என்று நீதிமன்றம் சொல்லிவிட்டது, சரி. 1996 - 2001 திமுக ஆட்சியின் கதை என்ன? 2001-2006 அதிமுக ஆட்சியின் கதை என்ன? 2006-2011 திமுக ஆட்சியின் கதை என்ன? இப்போது 2011-2014 ஆட்சியின் கதை என்ன? நம் எல்லோருக்கும் தெரியும்!

நீரிலிருந்து நிலத்துக்கு...


நீர்ப் பயணம் நிறைகிறது. பயணத்தை எங்கே முடிப்பது? கொற்கை அழைக்கிறது. “கொற்கை பண்டைய தமிழரோட பெருந்துறைமுக நகரம். பாண்டியர்களோட கடல் தலைநகரம். முத்துக்குளிப்புக்குப் பேர் போன எடம். ரெண்டாயிரம் வருஷங்களுக்கு முன்னாடியே தமிழ்க் கடலோடிங்க வெறும் மீன்பிடியில மட்டும் இல்ல; கடல் வாணிபத்துலயும் எவ்வளவு வல்லமையோட இருந்தாங்கங்கிறதுக்கான சாட்சியங்கள்ல ஒண்ணு” என்கிற நண்பர்களின் வார்த்தைகள் கொற்கையை நோக்கி மேலும் நகர்த்தின. கொற்கைக்குப் பயணமானேன்.

ஆழ்கடல் சூரர்களும் ஊர் காதலர்களும்

சுறா வேட்டைக்குத் தயார்!

நீர்ப் பயணத்தில் பார்த்த இரு ஆச்சரிய ஊர்கள் இவை. ஒன்று, சர்வதேச அளவில் ஆழ்கடல் மீன்பிடியில் சவால் விடும் சூரர்களைக் கொண்ட ஊர். சுறா வேட்டையில் எவ்வளவு ஈடுபாடோ, அதே அளவுக்குக் கால்பந்தாட்டத்திலும் வேட்கை கொண்டவர்கள். ஊரில் சந்தோஷ் டிராபி வீரர்களின் எண்ணிக்கை மட்டும் 19. இன்னொன்று, தனக்கெனத் தனிக் கலாச்சாரத்தையும் கட்டுப்பாடுகளையும் கடைப்பிடிக்கும் ஊர். பெண்களுக்குத் திருமணச் சீராகத் தனி வீடு கட்டிக்கொடுக்கும் ஊர். இங்கே காவல் நிலையமும் கிடையாது, மதுக்கடைகளும் கிடையாது. முக்கியமாக, இந்து - முஸ்லிம் - கிறிஸ்தவ மத நல்லிணக்கத்துக்கு வழிகாட்டி.

இரு ஆச்சரிய மனிதர்கள்!


நீர்ப் பயணத்தில் சந்தித்த இரு ஆச்சரிய மனிதர்கள் இவர்கள். ஒருவர் தன்னுடைய இளவயதில் வெடி விபத்தில் - பார்வையை அல்ல; இரு கண்களையுமே - இழந்தவர். ஆனால், அவருடைய நம்பிக்கை அகக்கண்ணாக மாறி அவரை இயக்குகிறது. நம்மைப் போல நடக்கிறார், பஸ் ஏறுகிறார், கடல் தொழிலுக்குச் செல்கிறார், மீன் பிடிக்கிறார். இன்னொருவர் ஆக்ரோஷ அலைகளும் வாரிச் சுருட்டும் சுழல்களும் மிக்க குமரிக் கடலில் சிக்கிய 18 உயிர்களைத் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றியவர். யார் உதவிக்கு அழைத்தாலும் உடனே கடலில் குதிப்பவர். அவருடைய தர்மம் அவரை வழிநடத்துகிறது.

மொதல்ல இங்க ஒத்துமை வேணும்ய்யா... - ஜோ டி குரூஸ்


சென்னை, ராயபுரத்தில் நெரிசலான வீடுகளில் ஒன்றின் சின்ன அறை. சரக்கு மற்றும் கப்பல் போக்குவரத்தில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் ஒன்றின் தலைவரின் அறை அது என்றால், யாரும் நம்ப மாட்டார்கள். “இதுதாம் நம்ம எழுத்துலகம், வர்றீயளா கடக்கரைக்குப் போய்ப் பேசலாம்?” - சிரிக்கிறார் ஜோ டி குரூஸ். ‘ஆழி சூழ் உலகு’, ‘கொற்கை’ நாவல்களின் மூலம் தமிழ்க் கடலோடிகளின் பல்லாயிரமாண்டு வரலாற்றையும் வாழ்க்கையையும் ரத்தமும் சதையுமாகத் தந்தவர். கடலோடி, படைப்பாளி என்பதைத் தாண்டி, உலகெங்கும் தான் சார்ந்த தொழில் நிமித்தம் சுற்றியவர். கடலோடிகளின் நேற்று, இன்று, நாளைபற்றிப் பேசச் சரியான ஆள்.

எண்ணூர் கடற்கரை. “வசதி வரும் போவும்... மனுசம் பழச மறக்கக் கூடாது. அதாம் ராயபுரத்துல இருக்கம். இங்க வீட்டப் பூட்டற பழக்கமில்லய்யா. சுத்தி நம்ம சனம். எதுக்குப் பயம்? உவரியில எங்காத்தா கடல் பக்கம் புள்ளயள வுட மாட்டா. ஆனா, எத அவ செய்யக் கூடாதுன்னு சொன்னாளோ, அதத்தாம் செஞ்சம். விடியப் பொறுக்காம ஓடிப் போயி கடக்கரயில நிப்பம். வலயோட கட்டிக்கிட்டுக் கட்டுமரத்தக் கர வுடுவாறு தாத்தா தொம்மந்திரை. கோவண ஈரம் சொட்டச் சொட்ட நிக்கிற அவுரு காலக் கட்டிக்கிட்டு நிப்பம். காத்துக் காலமா இருந்தா, ஆழிமேல உருண்டு அடிபட்டு வருவாங்க. பருமல் முறிஞ்சி, பாய் கிழிஞ்சி, நெஞ்சில அடிபட்டு, பேச்சிமூச்சி இல்லாம, கை கால் ஒடிஞ்சி, பாக்க பரிதாவமா இருக்கும். காலம் எவ்வளவோ ஓடிட்டு. எஞ் சனத்தோட நெலம மாறலீயே?” - கடற்கரையில் கிடக்கும் கட்டுமரம் ஒன்றில் உட்காருகிறார்.

திடீரென்று எழுத்துலகில் நுழைந்தீர்கள். எடுத்த எடுப்பில் எழுதிய நாவலே தமிழின் முக்கியமான நாவல்களில் ஒன்றானது. அடுத்த நாவல் சாகித்ய அகாதெமி விருது பெற்றுத்தந்தது. பெரிய வாசிப்புப் பின்னணியும் உங்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. எது இதைச் சாத்தியமாக்கியது?


மொதல்ல, ஒரு கவிதைத் தொகுப்பக் கொண்டுவர்றதுக்காகத்தாம் ‘தமிழினி பதிப்பகம்’ போறம். அங்க ஒரு மேல்தட்டுக் கும்பல் கேலி பண்ணிச் சிரிக்கிது. அவமானம் தாங்க முடியல. அடிக்கணும்போல இருக்கு. தமிழினி வசந்தகுமார் அண்ணன் சொல்றார், ‘கன்னத்துல கையால அடிக்காத, அடிக்கிறத உன்னட எழுத்தால நெஞ்சுல அடி’ன்னு. பா. சிங்காரத்தோட ‘புயலிலே ஒரு தோணி’ நாவலைக் கொடுக்குறார். ரெண்டே நாள்ல படிச்சி முடிச்சிட்டு எழுதறம், எங்காத்தா குமரியே எனக்குள்ள வந்து புகுந்திற்றமாரி இருந்திச்சி. நிக்க, நடக்க, சாப்புட, தூங்க நேரமில்ல. எங்கெல்லாம் உக்கார்ந்து எழுதினம் தெரியுமா? வீடு, ரயிலடி, தொறைமுகம், கடக்கர... ஒலகம் முழுக்க எங்கெல்லாம் சுத்துறேனோ, அங்கெல்லாம். கங்காரு குட்டியத் தூக்கிக்கிட்டே திரியுமாமே அப்பிடி, எழுதுனத எந்நேரமும் சட்டைக்குள்ளயே வெச்சிக்கிட்டு அலைஞ்சம். என்னமோ ஒரு நெனப்பு, இது உன்னிது இல்லடா, பல்லாயிரம் வருஷமா பேசாத ஒரு சமூகத்தோடதுன்னு. இப்பவும் அதே நெனப்பாத்தாம் ஓடுறம்.

கடலோடிகள்கிட்ட கடலை ஒப்படைங்க! - வறீதையா கான்ஸ்தந்தின்

முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின், கடலோடிகள் சமூகத்தைச் சேர்ந்தவர். கடல் வளம் கற்பிக்கும் பேராசிரியர். சமூக ஆய்வாளர். தமிழகக் கடலோடிகளின் வாழ்க்கைப்பாட்டையும் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் உரக்கப் பேசும் ‘அணியம்’, ‘கரைக்கு வராத மீனவத் துயரம்’ உள்ளிட்ட பல நூல்களின் ஆசிரியர். வறீதையா தான் எழுதுவதைத் தாண்டி இன்னொரு முக்கியமான காரியத்தைச் செய்கிறார். கடற்கரைச் சமூகத்தின் குரல்களைப் பேசும் 30-க்கும் மேற்பட்ட நூல்களைத் தன்னுடைய ‘நெய்தல் வெளி’ பதிப்பகம் மூலம் கொண்டுவந்திருக்கிறார். கடல், கடலோடிகளின் பிரச்சினைகளை வரலாற்றுப் பின்புலத்திலும் விஞ்ஞான அடிப்படையிலும் நேர்மையாக அணுகுகிறார் வறீதையா.

ஒரு சாதாரணப் பேராசிரியர் என்ற நிலையிலிருந்து உங்கள் சமூகத்துக்காகச் செயல்படுபவராக உங்களை மாற்றிய தருணம் எது?


ஊருல நல்ல சேலாளின்னு பேர் வாங்கினவரு எங்கப்பா. கடல் வாங்கலா, கொந்தளிப்பா இருக்குறப்போகூட பள்ளத்துலேர்ந்து ரெண்டு மரம் கடலுக்குப் போகுதுன்னா ஒண்ணு கான்ஸ்தந்தினோடதா இருக்கும்பாங்க. அப்பிடிப்பட்ட மனுஷனா இருந்தாலும், என்னோட சின்ன வயசுல பல நாள் பசியைப் பார்த்திருக்கேன். பஞ்ச காலம் கடல்புறத்தோட கூடப் பொறந்ததா இருந்துச்சு. பஞ்ச காலத்துல ஒரு நாளைக்கு ஒரு வேளை சமைக்கிறதே வீட்டுல பெரிய விஷயமா இருக்கும். எத்தனையோ அப்பாமார்கள் ஆழ்கடலுக்குத் தங்கலுக்குப் போய் மீன் கெடைக்காம, அவங்க சாப்பிடக் கொண்டுபோன கட்டுச்சோத்தைச் சாப்பிடாமத் திரும்பக் கொண்டுவந்து பிள்ளைங்களுக்குச் சாப்பிடக் கொடுக்குறதைப் பார்த்திருக்கேன்.

இந்த வறுமையெல்லாம் சின்ன வயசுல, ஏதோ நம்ம குடும்பச் சூழல்னு நெனைச்சுக்கிட்டிருந்தேன். பின்னாடி கொஞ்சம் கொஞ்சமாத்தான் புரிஞ்சுது நம்மளோட சகல கஷ்ட நஷ்டங்களும் நாம சார்ந்திருக்குற சமூகத்தோட, அரசியலோட, அரசாங்கத்தோட பின்னிப் பிணைஞ்சதுன்னு. கல்லூரி நாட்கள்ல என்னோட பேராசிரியர் சோபணராஜ் சொல்வார், ‘மனுஷன்னா சமூகத்துக்காக எதாவது செய்யுணும்டா’னு. சுனாமி என்னைத் தள்ளுற அந்தத் தருணமா அமைஞ்சுது.

கடல்புறத்தில் ஒரு ஷூட்டிங்!



பிலோமினாக்கா கேரளப் புகழ் பழரோஸை ஒரு கையிலும் (பழரோஸ் அறியாதவர்கள் கேரளத்து வாழைப்பழ பஜ்ஜி என்று அறிக!) இஞ்சி டீயை ஒரு கையிலும் திணித்தபோது, செல்பேசியில் மணி இரவு மணி 12-ஐ நெருங்கிக்கொண்டிருந்தது. கூடவே சுடச்சுட இஞ்சி டீ. இடம்: கன்னியாகுமரி, சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகம்.

“யக்கா, எத்தனை மணிக்குக்கா இங்கெ வருவீங்க?”

“சாயங்காலம் நாலஞ்சு மணி வாக்குல வருவன் தம்பி. ராத்திரி ரெண்டு மணி வரைக்கும் வியாவாரம். ஆனா, பலகாரம் போட்டு எடுத்தாற நேரத்தையும் சேர்த்துக்கணுமில்ல? பக சாப்பாடு முஞ்சதுமே வேலையைத் தொடங்கணும். எப்படியும் பன்னெண்டு மணி நேர வேலையின்னு வெச்சிக்கயேன்...”

“எவ்ளோவுக்குக்கா ஓடும்?”

“அது ஓடும், நாளைப் பார்த்தாப்புல... அஞ்சாயிரம் வரைக்கும் ஓடும் தம்பி. ஆயரூபா மிஞ்சும்னு வெச்சிக்கோயேன்...”

பிலோமினாக்காவை அடுத்து வரிசையாக உட்கார்ந்திருப்பவர்களில் பாப்பாக்கா வெற்றிலை, பாக்கு விற்கிறார். செஸ்மியக்கா பீடி, சுருட்டு விற்கிறார். ஒரு நாளைக்கு ஆயிரத்திலிருந்து இரண்டாயிரம் ரூபாய் வரைக்கும் விற்பனையாகும் என்கிறார்கள். கிட்டத்தட்ட நூறு பேர் இப்படிச் சில்லறை வியாபாரிகள் மட்டும் இருக்கிறார்கள்.

குடி சுனாமி!


பூம்புகார். பண்டைக்காலச் சோழப் பேரரசின் பொலிவான காவிரிப்பூம்பட்டினம். கடல் கொண்ட புகார் நகரம். நிச்சலனமாக இருக்கிறது. கடல், அலைகள், இரைச்சல் எல்லாமே அந்த இரவில் கண் முன்னே நிலைத்து நிற்கும் ஒரு ஓவியம்போல இருக்கின்றன. மனம் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னோடி எங்கோ ஒரு இடுக்கில் சிக்கிக்கொண்டிருக்கிறது. கடல் மிகப் பெரிய வரலாற்றுக் கிடங்கு. ஏதோ ஒரு தருணத்தில் அது வரலாற்றினூடே நம்மை இழுத்துக்கொள்கிறது. அந்தக் கணங்களில் பேச முடிவதில்லை. யோசிக்க முடிவ தில்லை. மனம் நிச்சலனமாக இருக்கிறது. திடீரெனக் கடலில் கண்ணகியும் கோவலனும் கடந்து போகிறார்கள். திடீரெனக் கடலில் சுனாமி கொண்டுசென்ற உயிர்கள் படபடவென்று மீன் கூட்டம்போலத் தவ்வி எழுகின்றன. திடீரென எதுவும் அசைவற்று சூனியமாய் மாறுகிறது.

பூம்புகார் வருவதற்குச் சில நாட்கள் முன்பு நாகப்பட்டினம் சென்றிருந்தேன். அங்கு மனம் நிலைகொள்ளாமல் அடித்துக் கொண்டிருந்தது. திடீரென சுனாமி நினைவுகள் பேரலை எடுத்து அடித்துத் துவைக்க ஆரம்பித்தன. நாகப்பட்டினம் கடற்கரை ஒருபோதும் மறக்க முடியாத 2004 டிசம்பர் 26 காட்சிகள் கண் முன்னே ஓடுகின்றன. 6,065 உயிர்கள். யார் அழுவதென்றும் தெரியவில்லை. யார் தேற்றுவதென்றும் புரியவில்லை. கடற்கரை முழுவதும் சிதறிக் கிடந்தன பிணங்கள். பெருங்குழிகள் தோண்டி கொத்துக்கொத்தாகப் போட்டுப் புதைத்தார்கள். குழந்தை, பெண், ஆண், ஏழை, பணக்காரர், சாதி, மதம், மொழி, இனம் என்று நாம் பிரித்துவைத்திருக்கும் எல்லாப் பாகுபாடுகளையும் அருகருகே கோத்து, மண்ணோடு மண்ணாக்கி மூடியது மண். அப்போதும் சரி, அதற்குப் பின் ஒவ்வொரு டிசம்பர் 26 அஞ்சலி நிகழ்ச்சியிலும் கடற்கரையில் நின்று கண்ணீர் பொங்க கடலில் பால் குடத்தைக் கவிழ்க்கும் பெண்களைப் பார்க்கும்போதும் சரி, கடல் மரணத்தின் மாபெரும் குறியீடாக மாறி மறையும். எவ்வளவு அற்பமானது இந்த வாழ்க்கை?

இருட்டைக் கிழித்த நான்குருக்கள்
எங்கெங்கோ ஓடும் எண்ணங்களை ஒரு குரல் அறுத்து வீசுகிறது. பெண் குரல். திரும்பிப் பார்க்கும் முன் இரு உருவங்கள் கடக்கின்றன. ஓட்டமும் நடையுமாக. பின்னாடியே இரண்டு சின்ன உருவங்கள். அழுகையும் விசும்பலுமாகத் தடதடவென்று ஓடுகின்றன. என்னவென்று ஊகிக்கும் முன்னே இருட்டில் அந்த முதல் உருவம் கீழே விழுகிறது. அனேகமாக ஆண். தட்டுத் தடுமாறி எழுகிறது. பின்னால், துரத்திச் சென்று தூக்கும் பெண் உருவத்தைத் தள்ளிவிடுகிறது. மிதிக்கிறது. மறுபடியும் கீழே விழுந்து எழுந்து மீண்டும் ஓங்கி ஓங்கி உதைக்கிறது. அலறல். இனம் காண முடியாத அலறல். இதற்குள் பின்தொடர்ந்து ஓடிய இரு சின்ன உருவங்கள் உதைக்கும் கால்களைக் கட்டிக்கொள்கின்றன. அவையும் சேர்ந்து ஓலமிட்டு அழுகின்றன. ஆண் உருவம் அவற்றைப் பிய்த்தெறிய முற்படுகிறது. ஒரு சின்ன உருவத்தைப் பிடித்துத் தூக்கி மணலில் வீசி எறிகிறது. திடுக்கிடும் ஏனைய இரண்டு உருவங்களும், வீசியெறியப்பட்ட சின்ன உருவத்தை நோக்கி ஓட, ஆண் உருவம் தான் ஏற்கெனவே ஓடிய திசையில் மறுபடியும் ஓட ஆரம்பிக்கிறது. ஓடி... ஓடி இருட்டில் கரைகிறது. ஓடிப்போய் அருகில் நெருங்கினால், அடிபட்ட குழந்தையை மடியில் போட்டுக்கொண்டு, மண்ணை உதறிவிட்டு அழுதுகொண்டிருக்கிறார் ஒரு பெண். மூவரும் அழுதுகொண்டிருக்கிறார்கள். அடித்து உதைத்துவிட்டு ஓடியது சாந்தியின் கணவர். சாந்தியின் பிரச்சினை தமிழகக் கடற்கரைப் பெண்கள் பெரும்பாலானோரைக் கதறவைக்கும் அதே பிரச்சினை. குடி!

அரசியல் விழுங்கிய உரிமைக் கடல்



நாம் அறிந்திருக்கும் இலங்கையைவிட, தமிழகக் கடலோடிகள் அறிந்திருக்கும் இலங்கை நெருக்கமானது. பல்லாண்டு காலமாக அவர்கள் இலங்கையோடு நெருக்கமாக இருந்திருக்கிறார்கள். பன்னெடுங்காலமாக, இரு பக்கக் கடலோடிகளுக்குமே பக்கத்து நாடு ஒரு நாடாக இல்லை; பக்கத்து ஊராக இருந்திருக்கிறது, தொலைவில் மட்டும் அல்ல; கலாச்சார உறவிலும்.

“எங்க முன்னோருங்க சொல்லுறது இது. பல ஆயிர வருஷங் களுக்கு முன்ன இந்த நெலப்பரப்பு முழுக்க ஒண்ணாதாம் இருந்திருக்கு. அப்புறம் கடக்கோளுல ஒடைஞ்சு இலங்கை தனியாவும் இந்தியா தனியாவும் ஆயிருக்கு. எடயில உள்ள சனம் முழுக்க கடல்ல போயிருக்கு. என்னைக்கா இருந்தாலும், தாயா புள்ளையா இருந்தவங்க நம்மல்லாம்பாங்க.”
- இது நாகப்பட்டினத்தில் கேட்டது.


“இங்கெ உள்ள தெதல், ஓட்டுமா, வட்டளாப்பம், பனை ஒடியக்கூழ் இப்பிடிப் பல சாப்பாட்டு அயிட்டங்கள் இலங்கையிலேர்ந்து இங்கெ வந்து ஒட்டிக்கிட்டதுதாம். அந்தக் காலத்துல ரெண்டு பேருல யார் பெரிய ஆளுன்னு நிரூபிக்க வுட்ற சவால்ல ஒண்ணு, மன்னார் ஓட்டம். தனுஷ்கோடிலேந்து தலைமன்னார் வரைக்கும் நீந்திப் போய்ட்டு வரணும். அந்தத் தலமுறையில கடைசி மனுஷன் நீச்சல் காளி. சில வருஷங்களுக்கு முன்னாடிதான் காலமானாரு. இங்கெ உள்ளவங்களுக்கு அங்கெ ஒரு வூடு இருக்கும், அங்கெ உள்ளவங்களுக்கு இங்கெ ஒரு வூடு இருக்கும். சும்மா வந்து ஒரு வாரம் தங்கி சினிமா பாத்துட்டுப் போற வழக்கமெல்லாம் இருந்துச்சு.”
- இது ராமேசுவரத்தில் கேட்டது.

“கடல் வியாபாரத்துல எப்பவுமே நமக்குத் தனி மரியாத அங்கெ இருக்கும். நம்மூர்லேந்து போற எதுவும் தரமா இருக்கும்ண்டு நம்புவாங்க. அவங்க ஊரு சாமானையேகூடக் கேலி பேசுவாங்க. கொழும்பு மக்களோட உபசரிப்ப வேற எந்த ஊரோடயும் ஒப்பிட முடியாது.”
- இது காயல்பட்டினத்தில் கேட்டது.

“அந்தக் காலத்துல கொழும்புன்னாலே நம்ம கடக்கரயில தனி மவுசு. அது எப்படின்னா, கொஞ்சம் வசதி ஏறிப்போச்சுன்னா, ‘என் பரம்பரயெல்லாம் குடிக்கிற தண்ணியக்கூட வள்ளத்துல கொழும்புலேந்து எடுத்தாந்து குடிச்ச பரம்பரயிடா’ன்னு பேசுவாங்க பாத்தீயளா, அப்பிடி.”
- இது குமரியில் கேட்டது.

இவையெல்லாம் அந்தக் காலத்தைப் பற்றிய குரல்கள். இன்றைய நிலவரம் என்ன?

“படகுல ஏறும்போது ஆழிய நெனச்சுக் கடலம்மாவ வணங்குற நாளெல்லாம் போச்சுங்க. ‘அம்மா... தாயீ... சிலோன் நேவிக்காரன் கண்ணுல படாமக் காப்பாத்து தாயி’ன்னு வேண்டிக்கிட்டுதாம் ஏறுறோம்.”
- இது வேதாரண்யத்தில் கேட்டது.

“கண்ணுல பட்ட வாக்குல தொரத்திச் சுத்தி வளைப்பாங்க. கையத் தூக்கச் சொல்லுவாங்க. அந்தப் படகுலேந்து ஒருத்தம் இந்தப் படகுக்கு வருவாம். தேவைப்பட்ட மீனுங்களை எடுத்துப்பாம். மிச்ச சொச்ச மீனுங்கள அப்பிடியே கடல்ல வாரி வீசி எறிவான். வலய அறுத்துடுவாம். கண்ணுல பட்டது எல்லாத்துக்கும் இதுதாம் கதி. எல்லாத்தயும் தூக்கி எறிஞ்சதுக்கு அப்புறம் எங்கள அப்படியே முட்டிப்போடச் சொல்லுவாம். பொரடியிலயே கையில கெடக்கிறத வெச்சு இருக்குவாம். தலையில, பொரடியில, முதுவுல. நாங்க தலய தொங்கப்போட்டுக்கிட்டே இருக்கணும். தல நிமிந்தா மூஞ்சிலயே அடிப்பாம். கீழ தடுமாறி வுழுந்தா, மூஞ்சிலயே பூட்சு காலால மிதிப்பாம். மூஞ்சிலயே துப்புவாம். இஸ்டத்துக்கு அடிச்சுட்டு, படகையும் நாசம் பண்ணிட்டு, அவம் பாட்டுக்குப் போய்க்கிட்டே இருப்பாம்.”
- இது கோட்டைப்பட்டினத்தில் கேட்டது.

“கண்ட வாக்குல சுடுவாங்க. படகைச் சுத்திச் சுடுவாங்க. ஈரக்கொலையெல்லாம் நடுங்கும். ஒரேயொருத்தம் உள்ள வருவான். ‘ஏய், நீ அந்தக் கம்பியக் கையில எடு... நீ, இந்தக் கட்டயக் கையில எடு... ஒருத்தனுக்கொருத்தன் மாத்தி மாத்தி அடிச்சுக்குங்கடா’ம்பாம். ‘மூஞ்சில மாறி மாறித் துப்பிக்கிங்க’ம்பாம். ஏய்க்க முடியாது. ‘உனக்கு அடிக்கத் தெரியாதாடா? அடின்னா இப்பிடி அடிக்கணும்’னு ஓங்கி ஓங்கி அறைவான். இதுக்குப் பயந்துக்கிட்டே இப்பம்லாம் அவங்க வர்றது கண்ணுல பட்டாலே படகுல இருக்குற எல்லாத்தையும் நாங்களே கடல்ல வீசியெறிஞ்சுர்றது. அப்பம்லாம் எங்க வேண்டுதல ஒண்ணே ஒண்ணுதாம். ‘ஆத்தா... எங்களை அடிச்சித் துவைக்கட்டும், அப்பிடியே புடிச்சிக்கிட்டுப் போயி ஜெயிலுக்குள்ள அடைக்கட்டும், என்னா சித்திரவதை வேணும்னா செய்யட்டும், சுட்டுடணும்கிற எண்ணம் மட்டும் அவனுக்கு வந்துராமப் பாத்துக்கம்மா’ன்னு வேண்டிக்குவோம்.”
- இது ராமேசுவரத்தில் கேட்ட குரல்.

“இப்பிடித்தாம் சுடுவான்லாம் இல்லீங்க. பதினெட்டு வருசத்துக்கு முன்னாடி இங்கேருந்து போன சூசைராஜோட படகை எப்படி அடிச்சாங்க தெரியுமா? ஹெலிகாப்டர்ல பறந்து சுட்டான். ஆறு உசுரு. போச்சு. நாலு வாரம் தேடித் திரிஞ்சோம் பொணம்கூடக் கிடைக்காம. பொஞ்சாதி புள்ளைங்க பரிதவிச்சு நிக்குது. பார்க்கச் சகிக்க முடியாமத் திரும்பத் திரும்ப ஓடுறோம். கொடும. கேவலம் பொழப்புக்கு மீன் புடிக்கப்போயி, அந்நிய நாட்டுப் படைக்காரனால சாவுறதைவிட இந்த நாட்டுல கொடும, அந்தப் பொணத்தைக் கொண்டாந்து அடையாளம் காட்டுனாத்தான் அரசாங்க இழப்பீடு கெடைக்கும். இல்லாட்டி ஏழு வருசம் வரைக்கும் இழப்பீடு வாங்கக் காத்துக் கெடக்கணும். பொணத்தை மீட்டோம். அழிஞ்சு செதைஞ்ச அந்தப் பிண்டங்களப் பாத்து வூட்டுல உள்ளவங்க கதறுனது இருக்கே... நாங்க கட்டையில போறவரைக்கும் மறக்காதுங்க...”
- இது பாம்பனில் கேட்டது.

இரு நாட்டு மக்களிடையே இருந்த அழகான ஓர் உறவு எப்படி நாசமானது? 1984-ல் முனியசாமியில் தொடங்கி இலங்கை ராணுவத்தால், இதுவரை சுடப்பட்டிருக்கும் கடலோடிகள் எத்தனை பேர்? அவர்களுடைய விதவைகள் எப்படி உயிர் பிழைக்கிறார்கள்? அவர்களுடைய குழந்தைகளெல்லாம் எப்படி இருக்கின்றனர்? உலகின் மிகப் பெரிய நாடுகளில் ஒன்றின் கடலோடிகளை, ஆசியாவின் மிகப் பெரிய சக்திகளில் ஒன்றின் குடிமக்கள் இப்படிக் கொல்லப்பட்டக் காரணம் என்ன? இதன் பின்னணியில் இருக்கும் ராஜாங்க சங்கதிகள் என்னென்ன?

இது ஆசிரியர்களின் பிரச்சினை மட்டும் அல்ல!


“ஏம்பா, உலகத்துலேயே உங்களுக்கு ரொம்பப் பிடிச்சுது யாரை? என்கிட்ட எதையும் மறைக்க வேண்டியதில்லை. வெளிப்படையா உண்மையப் பேசலாம்...”
புது வகுப்புக்குப் போன முதல் நாளில், வகுப்பாசிரியர் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டால், மாணவர்கள் சொல்லும் பதில்களுக்கு எல்லையும் இருக்குமா என்ன? அம்மா, அப்பாவில் தொடங்கி முறைப்பெண், கடவுள் வரை பதில்கள் கொட்டுகின்றன. எல்லோருடைய பதில்களையும் அமைதியாகக் கேட்டுவிட்டு, பின் நிதானமாக ஆசிரியர் கேட்கிறார்: “அப்போ உங்கள்ல ஒருத்தருக்கும் உங்களை ரொம்பப் பிடிக்காதா? உங்களை உங்களுக்கே பிடிக்கலைன்னா, வேற யாருக்குப்பா ரொம்பப் பிடிக்கும்?”

மாணவர்களின் கண்கள் விரிகின்றன. வகுப்பறையில் துணியால் மூடப்பட்ட கரும்பலகையின் ஒரு பகுதியை அவர் திறக்கிறார். “பள்ளிக்கூடத்தைத் தாண்டாத காமராஜர் தமிழ்நாட்டின் கல்விக் கண்ணைத் திறந்தவர், படிப்பைப் பாதியில் விட்ட கருணாநிதி தமிழ்நாட்டின் சாதுர்யமான முதல்வர். மழைக்கு மட்டுமே பள்ளிக்கூடத்துக்கு ஒதுங்கிய கி.ராஜநாரா யணன் பின்னாளில், பல்கலைக்கழகக் கவுரவப் பேராசிரியர். எதற்கும் கலங்காதே... உலகிலேயே முக்கிய மானவன் நீ... உன்னால் முடியும்!”

அடுத்த சில நிமிடங்களில் மாணவர்கள் தங்களை மீறி கைதட்டு கிறார்கள். ஆசிரியரும் கைதட்டிக்கொள்கிறார். பல ஆண்டுகளுக்கு முன் நடந்த கதை இது. இடம்: தமிழ்நாட்டின் பழமையான பள்ளிக் கூடங்களில் ஒன்றான மன்னார்குடி பின்லே பள்ளி (வயது 169). ஆசிரியர்: வீ. ஜெகதீசன்.

பாக் நீரிணைக்கும் மன்னார் வளைகுடாவுக்கும் நடுவே...


ந்த நிலாவத்தான்... நான் கையில புடிச்சேன்...  என் ராசாவுக்காக...
டொடொடொட்டன் டொடொடொட்டன் டொடொடொட்டன் டொடொடொட்டய்ங்...
டொடொடொட்டன் டொடொடொட்டன் டோ டொடொட்டடொட்டடொட்டடொய்ங்...
- அப்படியே கிறக்கிப்போடுகிறார் இளையராஜா. இந்தக் கடலோரப் பயணத்தில், பெரும்பாலும் எல்லா இடங்களுக்கும் உடன் வந்த கூட்டாளி. நான் கூட்டிக்கொண்டு போகவில்லை. போகும் இடமெல்லாம் அவர் இருந்தார். ரயில்களில் செல்பேசியில், படகுகளில் டேப் ரெக்கார்டரில், கார்களில் ரேடியோவில்... இந்தக் கடலோரப் பயணத்தில், பெரும்பாலும் எல்லா இடங்களுக்கும் உடன் வந்த கூட்டாளி. நான் கூட்டிக்கொண்டு போகவில்லை. போகும் இடமெல்லாம் அவர் இருந்தார். ரயில்களில் செல்பேசியில், படகுகளில் டேப் ரெக்கார்டரில், கார்களில் ரேடியோவில்!

மக்களின் ராஜா

நம்மிடத்தில் வீடுகளில் ஒலிக்கும் இளையராஜா வேறு. உழைக்கும் மக்களிடத்தில், அவர்கள் புழங்குமிடத்தில் ஒலிக்கும் இளையராஜா வேறு. கடலில் பல மைல் தொலைவு வந்துவிட்டு, வலையை இறக்கிவிட்டுக் காத்திருக்கும் நேரத்தில், ஒரு பாட்டை ஒலிக்கவிட்டு, அப்படியே வள்ளத்தின் ஓரத்தில் கை மீது தலை சாய்ந்து உட்கார்ந்துகொள்கிறார் சேசண்ணா. அதிகாலையில் எழுந்து மீன் கூடை சுமந்து, கிராமம் கிராமமாக, தெருத் தெருவாக அலைந்து மீன் விற்றுவிட்டு, வீடு திரும்பும்போது, இரு பக்கமும் பனை மரங்கள் மட்டுமே துணையாக இருக்கும் பாதையில், கூடையில் பாலிதீன் பையில் பத்திரமாகச் சுற்றிவைத்திருக்கும் ரேடியோவில் ஒரு பாட்டை ஒலிக்கவிட்டு நடக்கிறார் ரோஸக்கா. படகுத் துறையிலிருந்து நடு ராத்திரியில் குட்டி லாரியில் கூட்டம் கூட்டமாக ஆட்களை ஏற்றிக்கொண்டு போகும்போது தனக்கு மட்டுமல்லாமல், பின்புறம் உட்கார்ந்திருப்பவர் களுக்கும் சேர்த்து ஒரு பாட்டை ஒலிக்கவிட்டு, வண்டியை விரட்டுகிறார் ராமலிங்கம். அந்தத் தருணங்களில், அந்தச் சூழல்களில், இளையராஜாவின் பாடல்கள் கொண்டுசெல்லும் உலகமே வேறு. அமைதியான தனி அறையில், நுண்ணிய அதிநவீன சாதனங்களின் துணையோடு கண்களை மூடிக்கொண்டு கேட்கும்போதுகூட இளையராஜா இத்தனை நெருக்கமாகவில்லை. இந்தப் பயணங்களின்போது, மக்களோடு மக்களாகச் செல்லும்போது அப்படி ஒன்றிவிட்டார். அதுவும் கடலோரக் கிராமங்களுக்குச் செல்லும் பஸ்ஸில், ஜன்னலோர இருக்கையில், வெயில் தணிந்த சாயங்கால வேளையில்... வாய்ப்பே இல்லை. அன்றைக்கு இறைவனின் பரிபூரண ஆசி வாய்த்திருந்தது என்று சொல்ல வேண்டும். சரியாக, பாம்பன் சாலைப் பாலத்தில் பஸ் ஏற ஆரம்பிக்கிறது. காற்றில் கரைந்து வருகிறார் மனிதர். ‘அந்த நிலாவத்தான்... நான் கையில புடிச்சேன்... என் ராசாவுக்காக...’

ஜன்னலோரத்தில் கீழே வானமும், மேலே கடலும்போல நீலம். மேலே சர்ரெனப் போகிறது ஒரு விமானம். கீழே வரிசையாகச் சென்றுகொண் டிருக்கின்றன படகுகள். பாம்பன் ரயில்வே பாலத்தில் ஊர்ந்துகொண்டிருக்கிறது ரயில். பாம்பன் சாலைப் பாலத்தில், பஸ்ஸில் காதுக்குள் நிலா பிடித்துக் கொண்டிருக்கிறார் இளையராஜா. அடடா, அடடா... சாலைகள், பாலங்கள், தண்டவாளங்களுக்கெல்லாம் உயிர் இல்லை என்று யார் சொன்னது? பாம்பனில் வந்து பாருங்கள். எல்லாவற்றுக்கும் உயிர் இருக்கிறது. பாம்பன் அழகு, பேரழகு. அந்த அழகு அங்குள்ள எல்லோரையும் எல்லாவற்றையும் அழகாக்கிவிடுகிறது. இந்தியாவின் மிக ரம்மியமான இடங்களில் ஒன்றான பாம்பனைக் கடந்து பஸ் ராமேசுவரம் நோக்கிச் செல்கிறது.

தமிழகத்தைச் சுற்றி ஓர் அபாய வளையம்!

ரசாயனக் கழிவுகள் கலந்து செங்கடலாகக் காட்சியளிக்கும் நீலக்கடல்.

சென்னை, தமிழகக் கடற்கரையின் மாணிக்கம். இந்தியாவின் பழமையான மாநகராட்சி என்பதோடு, உலகின் இரண்டாவது மூத்த மாநகராட்சி. தென்னிந்தியாவின் நுழைவாயில்; மாபெரும் கல்வி, தொழில், கலாச்சார மையம். 1688-ல் மாநகராட்சியான சென்னை, இன்றைக்கு 200 வட்டங்கள், 426 சதுர கி.மீ. பரப்புக்கு விரிந்திருக்கிறது. 86 லட்சம் மக்களுக்கு அது உறைவிடம். புதிய புறநகர்ப் பகுதிவாசிகளையும் சேர்த்தால், இந்த எண்ணிக்கை 89 லட்சம் ஆகும். மிக விரைவில் ஒரு கோடியை எட்டிவிடும்.

அஸ்ஸாம் சென்றிருந்தபோது, அங்கிருந்து வந்து இங்கு வேலை செய்யும் இளைஞர்களுடன் ரயிலில் பேசிக்கொண்டுவந்தேன். டெல்லி, மும்பை, கொல்கத்தாவை விடவும் பாதுகாப்பான நகரம், இன துவேஷம் காட்டாத நகரம், வருபவர்களுக்கெல்லாம் வாழ்வளிக்கும் நகரம் என்று சென்னையைக் கொண்டாடினார்கள் அந்த இளைஞர்கள். உண்மை. நாட்டின் கடைக்கோடி கிராமத்து இளைஞர்களின் நம்பிக்கைக்கும் கை கொடுக்கும் நகரம் இது. தவிர, நாட்டிலேயே மும்பை, டெல்லிக்குப் பிறகு வெளிநாட்டவர்கள் அதிகம் வேலை செய்யும் நகரமும் இதுதான். கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் வேலை செய்கிறார்கள். இன்னும் சென்னையின் பெருமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். ஆனால், இந்த மண்ணின் பூர்வகுடிகள் இன்றைக்கு எப்படி இருக்கிறார்கள்? அவர்களை இந்த ஊர் எங்கே வைத்திருக்கிறது?