நோஞ்சான் இந்தியா!


       இந்தியா தன்னுடைய 65-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடிக்கொண்டிருந்தபோது வெளியான மோசமான செய்தி இது. நாட்டின் சுகாதாரத் துறையில், கிட்டத்தட்ட 75 சதவிகிதம் அளவுக்கு ஆட்கள் பற்றாக்குறை நிலவுகிறது. அதுவும் அரசு மருத்துவத் துறையில் பெரும் வெற்றிடம் ஏற்பட்டு இருக்கிறது. மத்திய அரசு வெளியிட்டு இருக்கும் 2011-ம் ஆண்டுக்கான கிராமப்புறச் சுகாதாரப் புள்ளிவிவரத்தின்படி, மருத்துவர்கள் பற்றாக்குறை 76 சதவிகிதம். 1,09,484 பேர் தேவைப்படும் இடத்தில், 26,329 பேர்தான் இருக்கிறார்கள். சிறப்பு நிபுணர்கள் பற்றாக்குறை 88 சதவிகிதம். 58,352 சிறப்பு பேர் தேவைப்படும் இடத்தில், 6,935 பேர்தான் இருக்கிறார்கள். செவிலியர்கள் பற்றாக்குறை 53 சதவிகிதம். 1,38,623 பேர் தேவைப்படும் இடத்தில் வெறும் 65,344 பேர்தான் இருக்கின்றனர். பரிசோதனைக்கூடத் தொழில்நுட்ப வல்லுநர்கள் நிலையோ படுமோசம். தேவை 94,896. இருப்பது 18,429 பேர்தான். 81 சதவிகிதம் பற்றாக்குறை. ஏழைகளின் ஆபத்பாந்தவனான ஆரம்ப சுகாதார நிலையங்கள் பற்றாக்குறை 18 சதவிகிதம்; அரசு மருத்துவமனைகள் பற்றாக்குறை 34 சதவிகிதம்!

இந்தியாவுக்கு புல்லட் ரயில் தேவையா?


           பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்தவர்களுக்கு கடந்த வாரம் கவின்மிகு காட்சி ஒன்று காணக் கிடைத்தது. அரிதினும் அரிதுதான். பிரதமர் மன்மோகன் சிங் வாய்விட்டு சிரித்தார். பிரதமர் முகத்தில் அப்படி ஒரு பெருமிதம். இருக்காதா பின்னே? இந்திய ரயில்வே துறையின் பெருமையை ஒரே கையெழுத்தில் சீன ரயில்வே துறைக்கு இணையாக உயர்த்தி இருக்கிறார் அல்லவா? இது என்ன புதுக் கூத்து என்கிறீர்களா? ஆமாம், நாம் புல்லட் ரயில் விடப்போகிறோமே?!

நாம் எல்லோருமே அந்நியர்கள்தான்: ஆங் லீ

tamil journalist samas with director aang lee
இயக்குநர் ஆங் லீயுடன் சமஸ்
                   
            கடலில் ஒரு படகு; அதில் ஒரு பையன்; கூடவே ஒரு புலி. இதுதான் 'லைஃப் ஆஃப் பை’ படத்தின் கதை. ஆனால், இதை வெற்றிகரமான ஒரு புத்தகமாக்குவதையோ, சினிமாவாக்குவதையோ யோசித்துப்பாருங்கள். பெரிய சவால்! பாண்டிச்சேரியைச் சேர்ந்தவன் பை. மிருகக்காட்சி சாலை நடத்தும் அவனுடைய தந்தை, அரசியல் சூழல் காரணமாக, விலங்குகளை விற்றுவிட்டு வெளிநாட்டில் குடியேற நினைக்கிறார். பையின் குடும்பம் விலங்குகளுடன் ஒரு சரக்குக் கப்பலில் பயணப்படுகிறது. வழியில் பெரும் புயல். இறுதியில், உயிர் தப்பும் படகில் ஐந்து பேர். ஒரு கழுதைப்புலி, ஒராங்குட்டான், வரிக்குதிரை, புலி, பை. முதலில் வரிக்குதிரையையும் ஒராங்குட்டானையும் கழுதைப்புலி கொல்கிறது. அடுத்து கழுதைப்புலியைப் புலி கொல்கிறது. இப்போது மிச்சம் இருப்பது இரண்டே பேர். புலியும் பையும். ஒரு பக்கம் ஆள் அரவமற்ற நடுக்கடல். இன்னொரு பக்கம் இரையாக்கிக்கொள்ளத் துடிக்கும் புலி. 227 நாட்கள். பை எப்படி எதிர்கொள்கிறான்?
    
                    இதை எழுத்தாளர் யான் மார்டெல் நாவலாக்கிப் பதிப்பிக்க அணுகியபோது, லண்டனின் முக்கியமான பதிப்பகங்கள் பல நிராகரித்தன 'பெங்குவின் பதிப்பகம்’ உட்பட. ஆனால், 2001-ல் அது புத்தகமாக வந்தபோது விற்பனையின் உச்சத்துக்குச் சென்றது. 2002-ம் ஆண்டுக்கான 'மேன் புக்கர்’ பரிசை வென்றது. உலகெங்கும் 70 லட்சம் பிரதிகள் விற்றன. இப்போது 11 ஆண்டுகள் கழித்து சினிமாவாகி, திரையரங்குகளை அதிரடிக்கிறது. '3டி’ - 'சிஜிஐ’ தொழில்நுட்பத்தில், 'லைஃப் ஆஃப் பை’ படத்தைப் பார்த்தவர்கள் ஆர்ப்பரிக்கிறார்கள். அது விவாதிக்கும் தத்துவ விசாரங்களால், 'இந்தப் படம் ஒரு மறக்க முடியாத அனுபவம்’ என்கிறார்கள். ஆனால், படத்தின் இயக்குநர் ஆங் லீயோ இவை எல்லாமே எதிர்பார்த்ததுதான் என்பதுபோல இருக்கிறார். சர்வதேச அளவில், சம கால இயக்குநர்களில் முக்கியமான ஒருவர் ஆங் லீ. ஆசியப் பின்னணியில் ஆஸ்கர் விருது பெற்ற முதல் இயக்கு நர். கடந்த 10 வருடங்களில் 13 படங் களை இயக்கியிருக்கிறார் ஆங் லீ; எல்லாமே வெவ்வேறு களங்களை அடிப்படையாகக் கொண்டவை. வசூலில் பட்டையைக் கிளப்பியதோடு 'ஆஸ்கர்’, 'பாஃப்டா’, 'கோல்டன் க்ளோப்’ என மதிப்புமிகு விருதுகளையும் அள்ளியவை. ஆங் லீயைச் சந்தித்தபோது அவரிடம் துளி பகட்டு இல்லை. வெளிப்படையாகப் பேசினார். விகடனுக்கு அவர் அளித்த பிரத்யேக நேர்காணல் இது.

கொள்ளைநோய் டெங்கு; மறைக்கிறது அரசு!

       
                   இந்திய அரசும் இந்த நாட்டின் மாநில அரசுகளும் மிக அலட்சியமாகக் கையாளும் ஒரு பிரச்னை, இப்போது சர்வதேச மருத்துவச் சமூகமும் உலக சுகாதார நிறுவனமும் மிகத் தீவிரமாக விவாதிக்கும் பொருளாகி இருக்கிறது. சர்வதேச ஆராய்ச்சியாளர்களின் அனுமானமும் கணிப்புகளும் உறுதியானால், இந்தியா அதற்குப் பெரிய விலை கொடுக்க வேண்டி இருக்கும். இந்தக் கணிப்புகள் சொல்லும் அதிரவைக்கும் செய்தி... டெங்கு ஒரு கொள்ளைநோயாக உருவெடுக்கிறது!

தாக்கரேக்களின் இந்தியா!

      பால் தாக்கரே முதன்முதலில் எனக்கு அறிமுகமானது கையில் நுரை ததும்பும் பீர் கோப்பையுடன் குளிர் கண்ணாடி அணிந்த ஒரு புகைப்படத்தில். லட்சக்கணக்கான மக்கள் கூடியிருக்கும் ஒரு பொதுக்கூட்டத்தில், மேடையில் அனாயசமாக பைப்பில் புகைபிடிப்பார். இந்தியாவின் நவீனக் கலாசார நுழைவாயிலான மும்பையில் இருப்பவர்களை பால் தாக்கரேவின் இந்தத் தோற்றம் ஈர்த்தது இயல்பானது.

"ரிலையன்ஸின் வளர்ச்சி... இந்தியாவின் வளர்ச்சி இல்லை!"

journalist samas with mani shankar ayyar
மணி சங்கர் அய்யருடன் சமஸ்
                         
                     இந்திய அமைச்சரவையில் யார் இருக்கலாம்; இருக்கக் கூடாது என்பதையே அம்பானிகள்தான் தீர்மானிக்கிறார்கள் என்று அரவிந்த் கெஜ்ரிவால் அம்பலப்படுத்தியபோது, அனைத்து ஊடகங்களின் பார்வையும் திரும்பிய இடம்... மணி சங்கர் அய்யர் எம்.பி. காரணம், இப்போது ஜெய்பால் ரெட்டியிடம் இருந்து பெட்ரோலியத் துறை பறிக்கப்படக் காரணமாகச் சொல்லப்படும் 'ரிலையன்ஸ் லாபி’தான் மணி சங்கர் அய்யர் பதவி பறிப்புக்கும் முன்பு சொல்லப்பட்டது. டெல்லி ஊடகங்கள் துரத்திக்கொண்டு இருந்தவரை மயிலாடுதுறையில் சந்தித்தேன்.

ஒற்றைக்கொம்பன்களுக்கு எமன்கள் யார்?

                             ந்திய ஒற்றைக்கொம்பன்களுக்கு இது போதாத காலம். நாட்டிலேயே அதிகமான எண்ணிக்கையில், காண்டாமிருகங்கள் வாழும் காஸிரங்கா தேசிய உயிரியல் பூங்காவில் மட்டும் கடந்த ஜனவரியில் இருந்து அக்டோபர் வரை 101 காண்டாமிருகங்கள் இறந்திருக்கின்றன. ஒரு பக்கம் வெள்ளம், இன்னொரு பக்கம் வேட்டையாடிகள்... சராசரியாக மூன்று நாட்களுக்கு ஒரு காண்டாமிருகம் இறந்திருக்கிறது.

வாராக் கடன்களின் கதை!

                                    
                                     ரூ. 1,23,462,00,00,000.  -இந்தியப் பொதுத்துறை வங்கிகள் கொடுத்துத் திரும்பாத வாராக் கடன்களின் மொத்த மதிப்பு இது. உண்மையான அதிர்ச்சி, இந்தத் தொகை அல்ல. இந்தியாவில் இன்றைக்கு யா​ருடைய கவனத்தையும் இந்தத் தொகை ஈர்க்கவில்லை என்பது​தான்!

திமிர் என்றால், கொஞ்சூண்டு துணிச்சல்: தபு

journalist samas with tabu
தபுவுடன் சமஸ்
                             பொதுவாக தபுவைப் பிடிப்பது சிரமம். பிடித்துவிட்டால், அவருக்கும் நம்மைப் பிடித்துவிட்டால்... மெதுவாகக் கிளம்ப முடியாதே!
  
                           ''ஹைதராபாத்தில் இருந்து 32 வருஷங்களுக்கு முன் 11 வயது சிறுமியாக நடிக்கச் சென்ற தபஸம் ஆஸ்மியின் கனவுகள் இன்றைக்குக் கொஞ்சமேனும் நிறைவேறி இருக்கின்றனவா?''
''தபஸம் ஆஸ்மி... ரொம்ப நாளைக்கு அப்புறம் வெளியில் என்னுடைய பழைய பெயரைக் கேள்விப்படுகிறேன். தபஸம் ஆஸ்மி... அவளுடைய கனவுகளை இன்றைக்கு உள்ள தபுவின் வாழ்வோடு சம்பந்தப்படுத்திப் பார்க்க முடியுமா? தெரியவில்லை. நிச்சயமாக அவளுடைய சாக்லேட் - ஐஸ்க்ரீம் கனவுகளில்... இரண்டு தேசிய விருதுகள், பத்மஸ்ரீ இவற்றுக்கு எல்லாம் கொஞ்சம்கூட இடம் இருந்திருக்காது. நிறையவே நல்லது நடந்திருக்கிறது. பிரச்னை என்னவென்றால், நம்மை மாதிரியே நம்முடைய கனவுகளும் வளர்ந்துகொண்டே இருக்கின்றன!''

காந்தி செத்ததுகூட நல்லதுதான்: கி.ராஜநாராயணன்

              ல்ல வசதியான குடும்பத்தில் பிறந்தவர் கி.ராஜநாராயணன். பாண்டிச்சேரி அரசாங்கம், வீட்டு வசதி வாரியக் குடியிருப்பில் ஒதுக்கி இருக்கும் சின்ன வீட்டில் அவரைப் பார்த்தபோது, அவர் ஒன்றும் அத்தனை வசதியோடு இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், வழக்கமாக எழுபதைத் தொட்டாலே நடுங்க ஆரம்பிக்கும் நம் சமூகச் சூழலில், 90 வயதிலும் நிறைந்த சந்தோஷத்தோடு இருக்கிறார்.
          
                ''ரத்தமும் சதையுமாக ஊரோடு உறைந்துபோன உங்களை மாதிரி ஓர் எழுத்தாளர் 66 வருடங்கள் இருந்த ஊரைவிட்டு, இன்னோர் ஊருக்கு இடம்பெயர்வது என்பது அவ்வளவு சுலபம் அல்ல. இடைசெவலைவிட்டு எப்படிப் பிரிந்து புதுவைக்கு வந்தீர்கள்?''
''ஒரு சூறாவளி உண்டு. பேரு மறந்துபோச்சு. அந்தக் காத்து என்ன பண்ணும் தெரியுமா? சமுத்திரத்துலேர்ந்து சர்ர்ர்ர்ருன்னு புறப்படும். அது மேலே எழும்புறதும் யாருக்கும் தெரியாது. கீழே இறங்குறதும் யாருக்கும் தெரியாது. சர்ர்ர்ர்ருனு நெலத்தைத் தொட்டுட்டு திரும்பவும் மேலே கிளம்பும். அந்தச் சமயம் ரெண்டு நண்பர்கள் பேசிக்கிட்டுப் போறாங்கனு வெச்சுக்குங்க. ஒரு ஆளைத் தூக்கிட்டுப் போயிடும். தூக்குனதே தெரியாது. தடம் தெரியாம அப்படியே இன்னொரு எடத்துல இறக்கிவெச்சுட்டுப் போயிடும். சில சமயம் நல்ல காத்தோட மழை பெய்யும். சமுத்திரமே இல்லாத ஊரா இருக்கும். மழைக்கு அப்புறம் பார்த்தா, கடல் மீன் கொத்து கொத்தாக் கெடக்கும். ஊருல மீன் மழைன்னு சொல்வாங்க. அது மழையோட வேலை இல்லை; காத்தோட வேலை. அப்படி ஒரு காத்து!
                       இப்படித்தான் பள்ளிக்கூடம் பக்கமே போகாத என்னை மத்தியப் பல்கலைக்கழகம்கிற காத்து வந்து இடைசெவல்லேர்ந்து தூக்கி பாண்டிச்சேரியில் விட்டுட்டுப் போயிட்டு. அப்புறம், மத்தியில ஒரு தடவை என் ஊருக்குப் போனேன். ஊரு அடையாளமே மாறிக்கிடந்துச்சு. அங்கே இசையைப் பத்தியும் பேச ஆள் இல்லை; இலக்கியத்தைப் பத்தியும் பேச ஆள் இல்லை. எனக்குப் பிடிச்ச பிரெஞ்சுப் பேராசிரியர்கள், ஆங்கிலப் பேராசிரியர்கள், இலக்கியவாதிகள்னு சுத்தி இருந்த இந்த ஊர்ச் சூழலை நெனைச்சுப் பார்த்தேன். இங்கேயே வந்துட்டேன்.''

                           ''ஆரம்பக் காலத்தில் இடைசெவலில் என்ன செய்துகொண்டு இருந்தீர்கள்?''
''சும்மாதான் இருந்தேன். சின்ன வயசுலேர்ந்தே நான் பெரிய நோயாளி. ஐயோ, எனக்கு வந்த வியாதி எல்லாம் இருக்கே... அதுல ஒரே ஒரு வியாதியைக் கண்டாலே, அவனவன் செத்துருவான். நான் சாகலை. ஆனா, எல்லோருக்குமே பயம்தான். எப்ப போவேனோன்னு. ஊருல நம்ம குடும்பம் நல்ல செல்வாக்கான குடும்பம். 80 ஏக்கரா நெலம் இருந்துச்சு. மூணு அண்ணன் தம்பிங்க. உடல் உழைப்பே இல்லாம வாழ்ந்துட்டேன். தம்பிகளுக்கு எல்லாம் கல்யாணம் பண்ணி வெச்சேன். நான் பண்ணிக்கலை. நோயாளி இல்லையா? அப்புறம், எங்க பாட்டிதான் சொன்னா, 'சும்மா தைரியமாக் கல்யாணம் பண்ணிக்கோடா’னு. முப்பது வயசுல கல்யாணம் பண்ணிக்கிட்டேன். உள்ளூர்ப் பொண்ணுதான். நான் நோயாளினு தெரிஞ்சே பண்ணிக்கிட்டா. அப்போது அவளுக்கு இருபது வயசு. நல்ல நிர்வாகி அவ. வீட்டு வேலை, வயல் வேலைனு எல்லாத்தையும் கட்டிச் சுமந்தா. ஒருகட்டத்துல சொத்து பாகம் பிரிச்சு, விவசாயம் உட்கார்ந்த பின்னாடிதான் நான் பிழைக்க வேண்டிய சூழல் உருவாச்சு. சரியா அப்போதான் எழுத ஆரம்பிச்சேன். எழுத்தே பிழைப்பாப் போச்சு.''

                           ''பள்ளிக்கூடம் ஏன் உங்களுக்குப் பிடிக்காமல் போனது?''
''பலருக்கும் படிப்பு புடிக்காமப்போறதுக்கு வாத்தியாருங்களோட கண்டிப்புதான் காரணமா இருக்கும். ஆனா, என் கதையே வேற. வாத்தியாருங்களோட நெருக்கமான சிநேகம் எனக்கு இருந்துச்சு. அது எப்படின்னா, இந்தக் காலம் மாதிரி வாத்தியாருங்க வசதி வாய்ப்போட இருந்த காலம் இல்லை அது. ரொம்ப ஏழ்மைப்பட்ட சூழல்ல இருப்பாங்க. ஊருல கொஞ்சம் வசதியான விவசாயிங்க பார்த்து ஒதுக்கிவிடுற குடிசைங்கதான் வாத்தியாருங்களுக்கு வீடா இருக்கும். பெரும்பாலான வாத்தியாருங்க தொழுவுலதான் தங்கி இருப்பாங்க. அதனால, வசதியான வீட்டுப் பிள்ளைகளுக்குத் தனி மரியாதை. எங்க ஊர் வாத்தியாருங்களுக்கு விறகுல தொடங்கி பால், மோர் வரைக்கும் எங்க வீட்டுலேர்ந்துதான் போகும். எதுக்கும் துட்டு வாங்கக் கூடாதுனு சொல்லிடுவார் எங்க நைனா. அதனால, பள்ளிக்கூடத்துல மட்டும் இல்லை; அவங்க வீட்டுலேயேகூட சொல்லிக்கொடுக்கத் தயாரா இருந்தாங்க வாத்தியாருங்க. ஆக, அக்கறை எல்லாம் இருந்துச்சு. ஆனா, படிப்பு ஏறலை. படிப்பை வாங்கிக்குற சக்தி எனக்கு இல்லைனு சொல்ல முடியாது. எனக்குப் படிப்பைக் கொடுக்குற சக்தி வாத்தியார்களுக்கு இல்லைங்கிறதுதான் உண்மை. ஆனா, எந்த வாத்தியாரும் இதை ஏத்துக்க மாட்டாங்க.''

                           ''கல்வி ஒரு பெரும் வியாபாரமாகிவிட்ட இன்றைய சூழலில், பள்ளிக்கூடங்களின் நிலை மாறி இருக்கிறதா?''
''கல்வியைப் பத்தி நிறையப் பேசுறோம். ஆனா, ஒண்ணும் நடக்கலை. என்னையக் கேட்டா, புத்திசாலியை மேலும் புத்திசாலிஆக்குறது இல்லை; மக்குப் பிள்ளையைப் புத்திசாலி ஆக்குறதுதான் ஒரு நல்ல வாத்தியாருக்கு அடையாளம். பள்ளிக்கூடம்னு சொன்னாலே, பிள்ளை சந்தோஷமாக் கிளம்பி ஓடணும். அதுதான் ஒரு நல்ல பள்ளிக்கூடத்துக்கு அடையாளம். அப்படிப்பட்ட சூழல் இன்னைக்கு வந்திருக்குதானு கேட்டா, இல்லை. மேலும் மோசமாகிட்டு இருக்குன்னுதான் சொல்லணும். இந்தச் சூழல் மாறணும்னா, பெத்தவங்களோட மனநிலை முதல்ல மாறணும். பள்ளிக்கூடத்துக்கு உள்ளே மட்டும் இல்லை; பள்ளிக்கூடத்துக்கு வெளியிலேயும் படிப்பு இருக்குங்கிறதைப் புரிஞ்சுக்கணும்.''

                           ''கட்டுக்கோப்பான கலாசாரத்துக்குப் பேர் போன இடைசெவல் மாதிரி ஒரு இந்தியக் கிராமம்; உலகிலேயே முற்போக்கானதாகச் சொல்லப்படும் பிரெஞ்சு கலாசாரச் சூழல் நிலவும் பாண்டிச்சேரி மாதிரி ஒரு நகரம்... இரண்டிலுமே நீங்கள் வாழ்ந்திருக்கிறீர்கள். எந்தக் கலாசாரம் உண்மையில் உன்னதமானதாக உங்களுக்குத் தெரிகிறது?''
''பிரெஞ்சுக் கலாசாரம்தான் உன்னதமாத் தெரியுது. இந்தப் பொறப்பு எடுத்த நோக்கம் என்ன? சந்தோஷமா வாழணும். அதுதான் நோக்கம். சந்தோஷமா எப்படி வாழறது? பறவைகளை மாதிரி மனுஷன் வாழணும். எந்தக் கட்டுப்பாடும் இல்லாம, அவனவன் நினைச்ச மாதிரி சுதந்திரமா, சந்தோஷமா வாழணும். அதுக்கு எந்தக் கலாசாரம் எடம் கொடுக்குது? இந்தியக் கலாசாரம் எடம் கொடுக்கலை. அட, விருப்பப்பட்ட ஒரு மனுஷாளோட சேர்ந்து வாழ்ற சுதந்திரம்கூட இங்கே இல்லையே? ஒரு காலத்துல கிராமங்கள்ல அந்தக் கலாசாரம் இருந்துச்சு. விருப்பம்போல வாழலாம். புடிச்சவங்களோட சேர்ந்து வாழலாம்; புடிக்கலைன்னா அத்துக்கிட்டுப் போய்டலாம். இன்னொண்ணு சேர்த்துக்கிடலாம். புள்ளைங்களுக்கும் தெரியும். அம்மாதான் நம்மளோட அம்மா, நம்ம அப்பா இவரு இல்லைங்கிறது. ஊருக்கும் தெரியும். யாரும் எதையும் தப்பா நெனைக்கிறது இல்லை. சந்தோஷமா இருந்தாங்க. ஆனா, அந்த மாதிரி கிராமம் எல்லாம் இப்ப குறைஞ்சுக்கிட்டு வருது. நகரத்துக்காரன் எல்லாம் சேர்ந்து கிராமத்தைப் புனிதமாக்கிட்டான். கட்டுப்பாடு கட்டுப்பாடுனு பேசி வாழ்க்கையையே பொழைப்பா மாத்திக்கிட்டு ஆளாளுக்குப் பைத்தியம் பிடிச்சு அலையுறோம்.''

                           ''அப்படி என்றால், ஒரு கலாசா ரத்தை மதிப்பிட பாலியல் சுதந்திரம்தான் அளவுகோலா?''
''ஆமா, கலாசாரம்னு பேசுனா, மொதல்ல அங்கே இருந்துதானே தொடங்கணும்? ஒழுக்கம், ஒழுக்கம்னு எங்கே கூச்சல் கேட்குதோ, அங்கேதான் நிறைய ஒழுக்கக்கேடு இருக்கும். ஒவ்வொருத்தனும் மனசுக்குள்ள ஆயிரம் தடவை சோரம் போறான். வெளியே பேசுறது பதிவிரதத்தனம். சென்னையிலேயே, ரெண்டு மூணு வருஷத்துக்கு முன்னாடி நடந்துச்சா இல்லையா? கம்ப்யூட்டர் கம்பெனியில கக்கூஸு அடைச்சு, குழாயை உடைச்சப்ப வண்டி வண்டியா ஆணுறைகளை எடுத்த கதை நாடு முழுக்க நாறுச்சா இல்லையா? அப்ப வெளியே மூடிக்கிட்டு உள்ள வெறியோட அலையுறதுல என்ன இருக்கு? அட, பச்சப்புள்ளைங்க மேல எவ்வளவு வன்முறை நடக்குது? என்னடா, இந்தக் கி.ரா. இந்த வயசுல இப்படிப் பேசுறானேனு நெனைக்கக் கூடாது. இந்த வயசுல நான் பொய் பேசக் கூடாது, இல்லையா? மொதல்ல இங்கே குடும்பம்கிற அமைப்பு உடையணும்னு நெனைக்கிறேன்.''

                           ''இந்தியாவுக்குப் பாலியல் கல்வி வேண்டும் என்று நினைக்கிறீர்களா?''
''கண்டிப்பா வேணும்னு சொல்றேன். இல்லைன்னா, குட்டிச்சுவராப் போயிடும். எப்படி வாழணும்னு மொதல்ல நாம கத்துக்கணும். பிள்ளைகளுக்குச் சொல்லிக்கொடுக்கணும். மறைச்சு மறைச்சு வெச்சுதான் பெரிய விஷயமாக்கிட்டோம். பிள்ளைங்க இது ஒரு பெரிய விஷயம்னு நெனைச்சு, அந்த ஞாபகமாகவே அலையுது. நான் கேட்குறேன்... ஒரு நாள்ல முக்கா நாளு ஒருத்தன் இந்த நெனைப்பாவே திரியுறான்னா, அது சிக்கலா, இல்லையா? அது அவனோட சிக்கல் மட்டும்தானா... சமுதாயத்தோட சிக்கலுமா? கம்ப்யூட்டர் மூலமா மணிக்கணக்கா உறவாடுறானே, அவனோட ஆழ்மனசுத் தேவை என்ன? கிராமப்புறங்கள்ல மேல் வயித்துப் பசி, கீழ் வயித்துப் பசினு சொல்வாங்க. ரெண்டு பசியுமே மோசமானது. ஆனா, இங்கே எல்லாருமே மேல் வயித்தைப் பசியைத் தீர்க்குறதைப் பத்தி மட்டும்தான் பேசுறோம். கீழ் வயித்துப் பசியை மறந்துடுறோம்.''

                          ''சமூக வலைதளங்களை எல்லாம் கவனிக்கிறீர்களா?''
''சங்கதி என்ன நடக்குதுனு மட்டும் தெரியும். என்ன, முன்னே மறைச்சுவெச்சுப் படிச்சோம்... இப்பம் மறைச்சுவெச்சுப் பார்த்துக்குறீங்க, உறவாடிக்கிறீங்க.''

                         ''இந்த வயதில் காதலைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? உங்கள் முதல் காதலை இப்போது நினைவுகூர முடியுமா?''
''முதல் காதல்... ஹா... ஹா... பசிக்குது. அந்தச் சமயத்துல பக்கத்துல நல்ல சாப்பாடு. உடனே கிடைச்சுட்டா, அதை ஒரு விஷயமா நெனைப்போமா? அப்படித்தான் இந்தக் காதலும். கிடைச்சுட்டா, அந்த நேரச் சாப்பாடு. கிடைக்காட்டி, அதுக்குப் பேர் காதல். கிடைக்கவே கிடைக்காட்டி, அது அமரக் காதல், காவியக் காதல். ஒரு விஷயம் சொல்லலாம். காதல் ஒரு தடவை மட்டும் வர்றது இல்லை. வந்துக்கிட்டே இருக்குறது.''

                           ''நம் சமூகத்தில், பெரும்பாலானபடைப் பாளிகள் தனிப்பட்ட வாழ்க்கையில் தோல்வி அடைந்து இருக்கிறார்கள்.வெற்றிகரமான உதாரணங்களில் ஒருவர் என்ற முறையில் இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம் என்று சொல்லுங்களேன்..?''
''ரெண்டு காரணங்கள். ஒண்ணு, ஒரு படைப்பாளியோட நேரத்தை அவன் வீட்டுல அனுமதிக்கணும். எனக்கு ராத்திரியில எழுத வருது; அது சம்பந்தமா, முக்கியமா நான் ஒரு புத்தகத்தைப் படிக்கணும்னு வெச்சுக்குங்க. அப்போ நான் படிச்சாகணும். அப்போ பார்த்து என் பொண்டாட்டி, 'தூக்கத்தைக் கெடுக்காமப் படுங்க’னு சொன்னா வேலைக்கு ஆகாது. ஏன்னா, எழுத்து நம்ம இஷ்டப்பட்ட நேரத்துக்கு வராது. அதேபோல, அவளோட கஷ்டத்தையும் நான் புரிஞ்சுக்கணும். என்னோட அனுசரணையை அவ எதிர்பார்க்குறானு வெச்சுக்குங்க. பொய்யா யாவது சில வார்த்தைகள் ஆறுதலாப் பேசணும். நடிக்கணும். தப்பு இல்லே. மனசைக் காயப்படுத் துற மாதிரி உண்மையைப் பேசுறதைவிட இது மேல். இன்னொரு விஷயம் இருக்கு. படைப்பு சார்ந்து வர்ற உறவுகளை, குடும்பத்துக்கு உள்ளே நுழையவிடாம வெச்சுக்குறது. உங்க எழுத்தைப் படிச்சுட்டு ஒரு பொண்ணு, 'நான் உங்க அடிமை’னு சொல்லிக்கிட்டு வர்றானு வெச்சுக்குங்க. அவளை எங்கே நிப்பாட்டணும்னு உங்களுக்குத் தெரியணும். இது ரெண்டும் தெரியாததுதான் நிறையப் பேருக்குப் பிரச்னை ஆயிடுது.''

                           ''ஒரு கதைசொல்லியாகச் சொல்லுங்கள்... குடும்பத்துக்குள், உறவுகளுக்குள் கதையாடலும் உரையாடலும் ரொம்பவும் சுருங்கிவிட்டது இல்லையா?''
''கதைங்கிறதுக்கு ஏராளமான அர்த்தம் உண்டு. அதுக்கு ஏகப்பட்ட வடிவமும் உண்டு. நேரடியான வாய் மூலமான உரையாடல் குறைஞ்சு இருக்கலாம். ஆனா, வெவ்வெறு வடிவத்துல உரையாடல் நடந்துக்கிட்டுதான் இருக்கு. கதை இல்லாம இங்கே எதுவும் நடக்காது. ஆக, கதை நடக்குது. ஆனா, குடும்பத் துக்கு உள்ளே அந்தக் கதையாடல் குறைஞ்சுருக்குங்கிறது கஷ்டமான விஷயம்.''

                           ''நீங்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் படிப்பீர்கள்; எழுதுவீர்கள்?''
''புதுமைப்பித்தன் உட்கார்ந்தார்னா, ஒரே நேரத்துல கதையை எழுதி முடிச்சுடுவார்னு சொல்வாங்க. எனக்கு அப்படி வழக்கம் இல்லை. அடிச்சு அடிச்சு, திருத்தித் திருத்தி எழுதுற ஆள் நான். அதனால, எழுத்தும் வாசிப்பும் மாத்தி மாத்தி நடந்துக்கிட்டே இருக்கும். முடியுற நேரம் எல்லாம் படிப்பேன்; எழுதுவேன்.''

                           ''வீட்டு வேலைகள் செய்வீர்களா?''
''இல்லை. என் மனைவி கடுமையான உழைப்பாளி. அதேபோல, நல்ல நிர்வாகி. அதனாலேயே வீட்டு வேலையில என்னை உள்ளே விடுறது இல்லை.''

                          ''வட்டார மொழி இலக்கியத்தின் முன்னத்தி ஏர் என்று உங்களைச் சொல்வார்கள். பின்னத்தி ஏராக யாரைச் சொல்வீர்கள்?''
''வட்டார மொழியில எழுதுற எல்லோருமே பின்னத்தி ஏர்க்காரங்கதான்.''

                           ''தலித் மக்கள் வாழ்வை நீங்கள் எழுதாமல் இருட்டடிப்பு செய்தீர்கள் என்பது உங்கள் மீதான பெரிய விமர்சனம்...''
''எழுதலைதான். ஏன்னா, அவங்க வாழ்க்கை எனக்குத் தெரியாது. அவங்களோட மொழி, சம்பிரதாயங்கள், அதற் கான காரண காரியங்கள் எதுவும் எனக்குத் தெரியாது. எனக்குத் தெரியாத விஷயத்தை எழுதுறது தப்புனு நெனைச்சேன்... நெனைக்கிறேன்.''

                          ''நல்ல சங்கீத ஞானம் உள்ளவர் நீங்கள். படைப்புகளில் அதை ஏன் கொண்டுவரவில்லை?''
''முந்தைய கேள்விக்கான பதிலைத்தான் இதுக்கும் சொல்லணும். எனக்கு நல்ல சங்கீத ஞானம் உண்டு. ஆனா, என் படைப்புகள் எல்லாம் என் ஊரைச் சுத்தி இயங்குறது. என்னோட கதை மாந்தர்கள் என் ஊர்க்காரங்க. அவங்களுக்குச் சங்கீதம் தெரியாது. பின்னே எப்படி எழுதறது?''

                          ''ஒருகட்டத்தில், வெறும் தகவல் சார்ந்ததாகிவிட்டன உங்கள் படைப்புகள் என்ற விமர்சனம் உண்டு...''
''இதுக்குக் காலம்தான் பதில் சொல்லணும்.''

                           ''எழுத்தில் போதுமான திருப்தி இருக்கிறதா? எழுத நினைத்தவை எல்லாவற்றையும் எழுதிவிட்டீர்களா?''
''எழுதாத எழுத்தை நெனைச்சுப் பார்க்குறது, வாழாத காலத்துல வாழ்ந்து வீணடிக்கிறதுக்குச் சமம். யாராலுமே நெனைச்ச எல்லாத்தையும் எழுதிட முடியாது. முடிஞ்சது வரைக்கும் திருப்தி இருக்கு.''

                         ''சரி, ஒரு மூத்த குடிமகனாகச் சொல்லுங்கள்... இப்போது திரும்பிப் பார்க்கும்போது சுதந்திரத்துக்கு முந்தைய கனவுகளில் கொஞ்சத்தையேனும் சுதந்திரம் நிறைவேற்றி இருக்கிறதா?''
''நிறைய ஏமாந்தோம்னுதான் சொல்லணும். அப்ப நாங்க ரெண்டு கட்சியா இருந்தோம். காந்தி கட்சி... நேரு கட்சி. வயசாளிங்க காந்தியை நம்பினாங்க. எளந்தாரிங்க நேருவை நம்பினோம். ரெண்டு பேர் பாதையும் வெவ்வேறு. குறிப்பா, நேரு ரொம்ப யதார்த்தமாவும் நவீனமாவும் இருப்பாருனு எல்லாம் நெனைச்சோம். ஆனா, காந்தி, நேரு ரெண்டு பேருமே கனவைத்தான் விதைச்சாங்க. யதார்த்தத்துக்கும் அவங்களுக்கும் ரொம்ப தூரம் இருந்துச்சு. சரியா சொல்லணும்னா, காந்திக்கு, தான் ஆளத் தகுதியான ஆள் இல்லைங்கிறது தெரிஞ்சுருந்துச்சு. நேருவுக்கு அது தெரியலை. அவ்வளவுதான் வித்தியாசம்.''

                         ''காந்தி ஒருவேளை உயிரோடு இருந்திருந்தால், இந்திய வரலாறு வேறு மாதிரி இருந்திருக்குமோ?''
''இன்னும் மோசமாத்தான் இருந்துருக்கும்னு நெனைக்கிறேன். வரலாற்றைப் பொறுத்தவரைக்கும் காந்தி செத்ததுகூட நல்லதுதான்.''

                          ''நீங்கள் பார்த்தவரை 'இது நடக்காமல் இருந்திருந்தால், இந்திய வரலாறே வேறு மாதிரி இருந்திருக்கும்’ என்று எந்தச் சம்பவத்தைச் சொல்வீர்கள்?''
''நேதாஜியோட மறைவு. அது நடக்காம இருந்திருந்தா, அவர் பிரதமரா ஆகி இருந்தா, நிச்சயம் இந்தியாவோட வரலாறு வேறு மாதிரி இருந்திருக்கும்.''

                          ''இதுவரை இந்தியாவை ஆட்சி செய்த பிர‌தமர்களிலேயே யார் சிறந்தவர்? யார் மோசமானவர்? ஏன்?''
''மக்கள் மேல உண்மையான அக்கறை ஒரு அரசாங்கத்துக்கிட்டே இருந்து வெளிப்பட்டதை ரெண்டு காலகட்டத்துல உணர்ந்திருக்கேன். ஒண்ணு, சாஸ்திரியோட காலகட்டம். இன்னொண்ணு,  வி.பி.சிங் காலகட்டம். ஆனா, அரசியல்ரீதியா நிறையத் தப்பான, பொறுப்பு கெட்ட முடிவுகளை எடுத்தார் சாஸ்திரி. குறிப்பா சொல்லணும்னா, மலையகத் தமிழர்கள் உரிமைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளிவெச்சு சிரிமாவோ பண்டாரநாயகாகூட அவர் போட்டுக்கிட்ட ஒப்பந்தம். அதனாலேயே, நான் அவரை வெறுத்தேன். வி.பி.சிங் கிட்டே ஒரு தொலைநோக்குப் பார்வை இருந்துச்சு. அவருக்கு அரசியல் பெரும்பான்மைப் பலம் இருந்திருந்தா, பெரிய மாற்றங்களை அவர் கொண்டுவந்திருப்பார். அதனால, வி.பி.சிங் நீங்கலா மத்தவங்க அத்தனை பேருமே மோசம்தான்.''

                          ''தமிழகத்தின் சிறந்த முதல்வர் என்று யாரை மதிப்பிடுவீர்கள்? மோசமானவர் யார்? ஏன்?''
''ஓமந்தூராரும் காமராஜரும் சிறந்த முதலமைச்சர்கள்னு சொல்வேன். ஏன்னு கேட்டா, அவங்க கை சுத்தம், வாய் சுத்தம். நாடு முதல் நோக்கமாவும் கட்சி ரெண்டாம்பட்சமாகவும் அவங்க காலத்துல இருந்துச்சு. அதேபோல, அண்ணாதுரையோட தொடக்கம் நல்லா இருந்துச்சு. ஆனா, குறுகின காலத்துக்குள்ள அவர் போய்ட்டார். அப்புறம் நடக்குற கதை எல்லாம்தான் ஊருக்கே தெரியுமே!''

                          ''இந்தியாவில் நாளுக்கு நாள் மாநில உணர்வுகள் வலுப்பெறுகின்றன. தேசியத்தின் மீதான கனவுகள் நொறுங்குகின்றன. எதிர்காலம் என்னவாகும்?''
''நாசமாத்தான் போகும். மாநில உணர்வு மிகுந்துபோகுதுன்னா என்ன காரணம்? ஒரு மாநிலத்துக்கு உரிய தண்ணியை முறையாக் கொடுக்க முடியலைன்னா, அப்புறம் அந்த மத்திய அரசாங்கத்து மேல மக்களுக்கு எப்படி மரியாதை நீடிக்கும்?''

                          ''சின்ன வயதில் ஆயுதக் குழுக்களில் இருந்தவர் என்ற முறையில் சொல்லுங்கள்... இந்தியாவில் ஆயுத வழியிலான புரட்சி சரிப்படுமா?''
''சரிப்படாது. அந்தக் காலம் எல்லாம் மலை ஏறிப்போச்சு.''

                         ''இந்தியாவில் சாதியை ஒழிக்க முடியுமா?''
 ''ஒழிக்கணும்னு ஆசைப்படுவோம்.''

                          ''இந்திய ஜனநாயகம் எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால்கள் என எவற்றைச் சொல்வீர்கள்?''
''ஏழ்மை... ஏழ்மை... ஏழ்மை!''

ஆனந்த விகடன் நவ. 2012

ஒரு காமெடியனா நான் விஜயகாந்த்கிட்ட தோத்துட்டேன்: வடிவேலு


பத்திரிகையாளர் சமஸ் வடிவேலுவுடன்
வடிவேலுவுடன் சமஸ்

                       திடீர் என்று நிகழும் சில அற்புதமான சந்திப்புகள். வடிவேலுவை நீண்ட காலத்துக்குப் பின் சந்தித்தது அந்த ரகம்! 

                       ‘‘நலமா?’’
‘‘நல்லா இருக்கேண்ணே... நல்லா இருக்கேன். நல்லா ஆரோக்கியமா இருக்கேன். பார்த்தீங்களா... ஒடம்பைக் கட்டுக்குள்ள கொண்டுவந்திருக்கேன் (புஜத்தைக் காட்டுகிறார்).’’
                       
                       ‘‘ரஜினியே படம் செய்தால்கூட, ‘வடிவேலுவிடம் முதலில் தேதி வாங்குங்கள்’ என்று சொல்லும் நிலை இருந்தது. ஆனால், இப்போது நீங்கள் படம் நடித்து ஒன்றரை வருடங்கள் ஆகின்றன. என்ன நடக்கிறது?’’

அந்த விருதுக்குத் தகுதியானவர் கமல்: ஸ்ரீதேவி

ட்டகாசமான மறுவருகையை நிகழ்த்தி இருக்கிறார் ஸ்ரீதேவி. பத்ம விருதுக்கானத் தேர்வுப் பட்டியலில் அவர் பெயரைக் கொண்டுசேர்த்து இருக்கிறது ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’. வெற்றி சந்தோஷத்தில் இருந்தவருடன் பேசினேன்... எல்லாவற்றையும்பற்றி.

நம்புங்கள் இவர்கள் உங்களைக் காப்பற்றுவார்கள்!

னி இருளில் உறைந்து இருந்தது ஊர். தூக்கத்தில் இருந்த மக்களை முதலில் எழுப்பியது நாய்களின் ஊளை. தொடர்ந்து பறவைகளின் கூக்குரல். வீட்டுக்கு வெளியே வந்தார்கள். கண்கள் எரிந்தன. காற்றே எரிவதுபோல் இருந்தது. மூச்சுத் திணறியது. குழப்பமும் பதற்றமும் சூழ ஆரம்பித்த நேரத்தில், தூரத்துத் தொழிற்சாலையில் இருந்து ஒலித்தது அபாயச் சங்கு. ஓட ஆரம்பித்தார்கள். வீட்டில் உள்ளவர்களை எழுப்பிக்கொண்டு, குழந்தைகளை வாரிச் சுருட்டிக்கொண்டு தலைதெறிக்க ஓடினார்கள். ஓட ஓட விழுந்தார்கள். மூச்சடைத்து, கை - கால்கள் வெட்டி வெட்டி இழுக்க விழுந்து செத்தார்கள். காலையில் பார்த்தபோது கொத்துக் கொத்தாகப் பிணங்கள். பல நூற்றுக்கணக்கான பறவைகள், கால்நடைகள், மனிதர்கள்... அரசாங்கத்தின் துரோகத்தாலும் முதலாளிகளின் லாப வெறியாலும் ஒரு நகரம் உருக்குலையத் தொடங்கியது. போபால்... உலகின் மோசமான தொழில் வேட்டைக் கொலைக் களம்!

உருவாகிறார் இன்னொரு பிரதமர்!

ராபர்ட் வதேரா செம மச்சக்காரர் என்பதை எல்லோருமே ஏற்றுக்கொள்வர்கள். ஆனாலும், சிறப்புப் பாதுகாப்புப் படை சூழ அவர் பவனி வருவது டெல்லியில் ரொம்பக் காலம் பலருடைய கண்களையும் உறுத்திக்கொண்டு இருந்தது. சிறப்புப் பாதுகாப்புப் படையின் பாதுகாப்பு என்பது வெறுமனே துப்பாக்கி வீரர்களின் பாதுகாப்பு மட்டும் இல்லை; இந்திய விமான நிலையங்களில் எந்தச் சோதனையும் இல்லாமல் புகுந்து வரும் விதிவிலக்கு உட்பட பல சலுகைகளையும் கொண்டது. மன்மோகன் சிங்குக்கோ, அப்துல் கலாமுக்கோ அந்தப் பாதுகாப்பு வழங்கப்படுகிறது என்றால், வெறுமனே அவர்கள் மன்மோகன் சிங், அப்துல் கலாம் என்பதால் இல்லை. பிரதமர், முன்னாள் குடியரசுத் தலைவர் என்ற தகுதிகள் அவர்களின் பாதுகாப்புக்கான தகுதிக் குறிப்புகளில் இடம்பெற்று இருக்கின்றன. வதேராவுக்கு? வதேரா என்பதே தகுதிக் குறிப்பு. ''ஒரு சிறப்பு நேர்வாக வதேராவுக்குச் சிறப்புப் பாதுகாப்புப் படைப் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது'' என்று விளக்கம் சொன்னது மத்திய அரசு. காந்திக்கே கிடைக்காத வாய்ப்பு இது. ஆக, வதேராவுக்குச் சிறப்புப் பாதுகாப்புப் படைப் பாதுகாப்பு அளிக்கப்பட்ட நியாயத்தை மக்கள் இப்படிப் புரிந்துகொண்டார் கள்: இந்தியாவில் வதேராவாக இருப்பதே சிறப்புதான்.

நடிகர்கள்தான் எங்களுக்குப் பணம் கொடுக்கணும்: ஜே.வி.ருக்மாங்கதன்

பிள்ளையார், பெருமாள், துர்கையில் தொடங்கி ஷீர்டி சாய் பாபா வரை எல்லாக் கடவுளர் படங்களும் அணிவகுத்து இருக்கின்றன ஜே.வி.ருக்மாங்கதனைச் சுற்றிலும். பக்திப் பழமாகக் காட்சி அளிக் கிறார். எதிரில் சுவரிலோ, படு ஆபாசமான அவருடைய பட ஸ்டில்கள். பலான பட இயக்குநர்களில் ஒருவரான ருக்மாங்கதனுக்குப் பல முகங்கள் உண்டு. விநியோகஸ்தர், தயாரிப்பாளர், தென்னிந்திய திரைப்பட, தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பாளர்கள் சங்க முன்னாள் தலைவர், 'ஃபிலிம் சேம்பர்’ முன்னாள் துணைத் தலைவர் என்பதை எல்லாம் தாண்டி, தணிக்கைக் குழு உறுப்பினர். திரை உலகின் கறுப்புப் பக்கங்களைப் பற்றிப் பேச சரியான ஆள்!

நாடு ஏன் இருண்டுக் கிடக்கிறது?

  
                                  து 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த கதை. மகாராஷ்டிரத்தில் மின் உற்பத்தி நிலையம் அமைக்க அமெரிக்காவின் 'என்ரான்’ நிறுவனத்தைக் கொண்டுவந்தார் அன்றைய காங்கிரஸ் முதல்வர் சரத் பவார். மகாராஷ்டிரத்தின் மொத்தத் தேவையில் 18 சதவிகித மின்சாரத்தை 'என்ரான்’ கொடுத்தது. அதற்கு மகாராஷ்டிர மின் வாரியம் கொடுத்த விலை என்ன தெரியுமா? முழு திவால்.  தேசிய அனல் மின்சாரக் கழகம் ரூ.1.80-க்கு ஒரு  யூனிட் மின்சாரத்தை விற்ற காலத்தில், 'என்ரான்’ நிறுவனத்திடம் ரூ.6.80 கொடுத்து வாங்கியது அரசு. தவிர, மகாராஷ்டிர மின் வாரியம் மின்சாரத்தை வாங்குகிறதோ, இல்லையோ... மின் கட்டணம் போக மாதம் ரூ.95 கோடியை நிலைக்கட்டணம் என்ற பெயரில் 'என்ரான்’ நிறுவனத்துக்குக் கொடுத்துவிட வேண்டும். அப்படி ஓர் ஒப்பந்தம். இந்திய மின் துறை வரலாற்றில் மறக்கவே முடியாத கொள்ளை அது.  இப்படி எல்லாம் நடக்குமாஎன்றுதானே கேட்க வருகிறீர்கள்? தமிழக அரசு 2005-06-ல் 'அப்போலோ குழும’த்திடம் இருந்து வாங்கிய மின்சாரத்தின் விலை என்ன தெரியுமா? ஒரு யூனிட் ரூ. 17.78.  ஒருகட்டத்தில் கட்டுப்படி ஆகாமல், மின்சாரம் வாங்குவதை நிறுத்தியதற்காக அதே ஆண்டில் 'அப்போலோ குழும’த்துக்குத் தமிழக அரசு கொடுத்த நிலைக்கட்டணம் ரூ.330 கோடி. இப்போதும்கூட தமிழகத்தில் உள்ள தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் வெளி மாநில நிறுவனங்களைவிடக் கூடுதலான விலையையே கேட்கின்றன.

ஆம்... பிரதமரே பணம் மரத்தில் காய்க்கவில்லை!

              
                 செலவுகளைக் குறைக்க ஓர் அதிரடி வழியாக, மரணத்தை யோசியுங்கள். - அமெரிக்கத் திரைப்பட இயக்குநர் உடி ஆலன் கிண்டலாகச் சொன்னது இது. இந்திய அரசோ அதை மறைமுகமாகச் சொல்கிறது.

தமிழ்நாட்டின் ராஜ் தாக்ரேவா நான்? - சீமான்

                 
பத்திரிகையாளர் சமஸ் சீமானுடன்
சீமானுடன் சமஸ்
        

                    தமிழக அரசியலில் இனரீதியிலான தாக்குதல் கலாசாரத்தைத் தொடக்கிவைத்திருக்கிறார் சீமான். விளையாட்டுப் பயிற்சி, சுற்றுலா என்று தமிழகம் வந்த சிங்களர்கள் மீது அவருடைய ‘நாம் தமிழர்’ இயக்கத்தினர் முன்னின்று நடத்திய தாக்குதல்கள், இலங்கை அரசு தன்னுடைய பிரஜைகளை தமிழ்நாட்டுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தும் அளவுக்குச் சென்றது. தேசிய ஊடகங்கள் தமிழ் அமைப்புகளை வெறி பிடித்தவையாகச் சித்திரிக்கின்றன. ஆனால், சீமானோ கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் பேசுகிறார்.

கோமாளியைக் கேலி செய்வது ரொம்ப சிரமம்!

து ஒரு புத்தக வெளியீட்டு விழா. சிறப்பு விருந்தினர்கள் ஜவஹர்லால் நேருவும் சர்தார் வல்லபாய் படேலும். புத்தகத்தை வெளியிடுவதற்காக அதன் மீதுள்ள உறையைக் கிழிக்கிறார் நேரு. அதில் உள்ள கேலிச்சித்திரத்தைப் பார்த்து ஒரு கணம் அதிர்ந்துபோகிறார். நேருவின் முகத்தில் அதிர்ச்சியை உணர்ந்த படேல் புத்தகத்தை வாங்கிப் பார்க்கிறார். அவரும் அதிர்ந்துபோகிறார். அடுத்த நிமிஷம் இருவரும் சிரிக்கிறார்கள். கார்ட்டூனிஸ்ட்டைக் கட்டி அணைத்துக்கொண்டு புத்தகத்தை வெளி-யிடு-கிறார்கள். நேருவும் படேலும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி நிற்கும் நிலையில், அவர்கள் இருவரின் கைகளிலும் உள்ள கத்திகள் பரஸ்பரம் அடுத்தவர் முதுகைப் பதம் பார்க்கக் காத்திருப்பதாக வரையப்பட்டிருந்த கேலிச்சித்திரத்தைத் தாங்கி வந்த புத்தகம் அது!

வலியின்றி சாகவிடு அரசே!

       
                                    வாழ்வின் மோசமான நாட்களில் ஒன்று அது. மரண ஓலத்தை நேரில் கேட்ட நாள். வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண் அவர். தொண்டையில் ஆரம்பித்து ஒரு பக்கக் கன்னம் முழுவதையும் நோய் சிதைத்து இருந்தது. மூக்கின் ஒரு பகுதிக்கும் நோய் பரவி, அங்கு சீழ் கோத்திருந்தது. கை, கால்களை எல்லாம் ஒடுக்கிக்கொண்டு அந்தப் பெண் படுத்திருந்தாள். ‘‘ம்ம்ம்...’’ என்று அரற்றல் மட்டும் அவளிடம் இருந்து வெளிப்பட்டுக்கொண்டே இருந்தது. 100 மூட்டைகளுக்கு நடுவே அகப்பட்டுக்கொண்டவனிடம் இருந்து வெளிப்படுமே... அப்படி ஓர் அழுத்தம் அந்தக் குரலில். திடீரென்று அவளுடைய உடல் தூக்கிப்போடுகிறது. அந்தக் கட்டடமே நொறுங்கி விழுவதுபோல் அவளுடைய அலறல் வெளிப்படுகிறது... ‘‘அம்மா...’’

கொல்வது தீ அல்ல!


சென்னை பிரிட்டிஷ் கவுன்சில் அலுவலகம். ஆங்கிலப் பயிலரங்கு. முதல் நாள் வகுப்பு. பாடம் என்ன தெரியுமா? திடீரென ஓர் அசம்பாவிதம் நடந்தால் அந்த இடத்தில் இருந்து எப்படிப் பாதுகாப்பாக வெளியேறுவது என்ற விளக்கம். கட்டடத்தின் முழு அமைப்பு; அவசர வழிகள் எங்கெல்லாம் இருக்கின்றன; எப்படி எல்லாம் பாதுகாப்பாக வெளியேறலாம் என்று திரையில் ஓடுகிறது. இதுதான் முதல் பாடம்.

அது ஒரு பெரிய கட்டடம். பயிலரங்குக்கு வருபவர்களில் பெரும்பாலானோர் பெரியவர்கள். பயிற்சியோ சில நாட்கள். ஓர் ஆபத்தையும் எதிர்கொண்டிராத குழந்தைகளை நெருக்கடி மிக்க நம்முடைய பள்ளிக்கூடங்களுக்கு நாம் எப்படி அனுப்புகிறோம் என்பதுடன் இந்தச் சூழலை ஒப்பிட்டுப்பாருங்கள். நாம் எவ்வளவு பின்தங்கி இருக்கிறோம்?

கசாப்பைத் தூக்கிலிடக் கூடாது... ஏன்?

        மும்பை தாக்குதலில் ஈடுபட்ட கசாப்புக்கு மரண தண்டனை விதித்திருப்பதன் மூலம் உலகத்துக்கு இந்தியா ஒரு தகவலைச் சொல்லியிருப்பதாகக் கூறுகிறார்கள் நம்முடைய ஆட்சியாளர்கள். குறிப்பாக, பாகிஸ்தானுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இது ஓர் எச்சரிக்கை என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆமாம். இது பாகிஸ்தானுக்கு ஓர் எச்சரிக்கை; இனி, அந்நாடு திருந்திவிடும். அங்குள்ள பயங்கரவாதிகளுக்கு ஓர் எச்சரிக்கை; இனி அவர்களும் திருந்திவிடுவார்கள். உள்நாட்டுப் பயங்கரவாதிகளுக்கு? ஆம். அவர்களுக்கும் ஓர் எச்சரிக்கை; அவர்களும் திருந்திவிடுவார்கள். இனி, இந்தியாவில் தவறே நடக்காது. நம்புங்கள். நாம் இப்படி நம்புவதைத்தான் நம்முடைய அரசாங்கம் விரும்புகிறது.

சச்சின் கொஞ்சம் காத்திருக்கலாம்!

        
ச்சின் ரமேஷ் டெண்டுல்கர். மங்களம் பள்ளி பாலமுரளிகிருஷ்ணா.
டெல்லியில் பாரத ரத்னா விருதுப் பந்தயத்தின் இறுதி ஆட்டத்தில் இப்போது இந்த இரு பெயர்கள்தான் அடிபடுகின்றன.

பஞ்சக் கால நினைவுகள்

                                           
                                      ருவ மழை பொய்ப்பதும் காலம் தாண்டிக் கொட்டித் தீர்ப்பதும் பருவநிலை மாற்றங்களில் சகஜம்தான். அமெரிக்காவில் இந்த ஆண்டு கடுமையான வறட்சி நிலவுகிறது. சீனாவிலோ, பெய்ஜிங்கில் அரை நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்தது. கடந்த 33 ஆண்டுகளில் அதிகபட்ச வெப்பத்தை டெல்லி எதிர்கொண்டதையும், சரிபாதி இந்தியா தென்மேற்குப் பருவ மழை பற்றாக்குறையால் வறட்சியில் சிக்கி இருப்பதையும்கூட இப்படிச் சாதாரணமான ஒரு செய்தியாகக் கடந்துவிடலாம்... அது வேறு ஒரு நாடாக இருந்தால்!

வாழ்க்கை மேல் புகார்கள் கிடையாது: அசோகமித்திரன்


                                      சின்ன அறை. சுவரில் பெருமாள், சமயபுரம் மாரியம்மன், ராமர், சீதை என்று ஏகப்பட்ட கடவுளர் படங்கள். சின்ன கட்டில். அதையொட்டி மேஜை. சுற்றிலும் புத்தகங்கள். தமிழின் மகத்தான படைப்பாளி அசோகமித்திரனின் உலகம் இப்போது இவ்வளவுதான். ‘‘சமீபத்தில் ஓர் இலக்கிய விழாவுக்குச் சென்றிருந்தேன். பேசி முடிக்கும்போது, ‘இத்துடன் விடைபெறுகிறேன்...’ என்று சொன்னேன். விழாவில் இருந்த ஒரு கவிஞர் உடனே பதறிப்போய், ‘நீங்கள் நூறாண்டு வாழ வேண்டும்’ என்று சொன்னார். இப்போது எனக்கு 81 வயது ஆகிறது. நூறாண்டு வாழ்வதைவிடக் கொடுமையான தண்டனை இருக்க முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை...’’ - கண்களை இடுக்கிச் சிரிக்கிறார்.

பராக் ஒபாமா சிங்


 தேர்தல் காலத்தில் அரசியல்வாதிகளுக்குக் கிடைக்கும் அனுகூலம்... அரசியல் எதிரிகள் திடீர் நண்பர்கள் ஆவது. மக்களுக்குக் கிடைக்கும் அனுகூலம்... அரசியல் நண்பர் கள் திடீர் எதிரிகள் ஆவது. திடீர் எதிரிகள் புதிய சூழலில் உளறத் தொடங்கும்போது நிறைய ரகசியங்கள் சந்திக்கு வரும். ஜனநாயகத்தில் உண்மைகள் இப்படித்தான் வெளியே வர வேண்டும்!

இந்தியா உடையும் - அருந்ததி ராய்

                                   
samas with roy
அருந்ததி ராயுடன் சமஸ்
 

                                            அருந்ததி ராயுடன் பேசுவது மனசாட்சியுடன் உரையாடுவதுபோல. உரையாடல் மிக நெருக்கமானதாக இருக்கும். ஆனால், உண்மையை எதிர்கொள்ளும் திராணி உங்களுக்கு வேண்டும். பொதுவாக தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைபற்றிப் பேசுவதைத் தவிர்க்கும் அருந்ததி அன்றைக்கு எந்தக் கேள்வியையும் ஒதுக்காமல் பதில் அளித்தார்.

                               ‘‘இன்றைய அருந்ததி ராய் உருவாக, சின்ன வயது வாழ்க்கை எந்த அளவுக்கு அடிப்படையாக இருந்தது என்று சொல்ல முடியுமா?’’
‘‘எனக்கு ஒரு வயதானபோது என் பெற்றோருக்கு விவாகரத்து ஆனது. கலப்புத் திருமணம் செய்துகொண்டு, கணவனைப் பிரிந்த ஒரு பெண் ஊர் திரும்பும்போது நம் சமூகம் எப்படி வரவேற்கும் என்று நான் சொல்ல வேண்டியது இல்லை. எல்லோராலும் நிராகரிக்கப்பட்ட நிலையில் நானும் என் அம்மாவும் இருந்தோம். அப்படிப்பட்ட ஓர் இடத்தில் இருந்துதான் உறவுகளும் சமூகமும் எனக்கு அறிமுகம் ஆனார்கள்.’’

                               ‘‘உங்கள் வாழ்க்கையை வடிவமைத்ததில் உங்கள் அம்மாவுக்கு முக்கியப் பங்கு உண்டு என்று சொல்லி இருக்கிறீர்கள்...’’
‘‘நான் பார்த்த உன்னதமான பெண்களில் ஒருவர் என் அம்மா. ஒரு சாதாரன குடும்பத்தில் பிறந்த, சிந்திக்கத் தெரிந்த பெண் என்று அவரைச் சொல்லலாம். ஒரு குடும்ப நிகழ்ச்சிக்காக வெளியூர் போய் இருந்தபோது, வந்த இடத்தில் தன்னிடம் கல்யாணம் செய்துகொள்வோமா என்று கேட்ட மனிதனைத் திருமணம் செய்துகொண்டு அங்கேயே தங்கியவர் அவர். பெரிய காதல் எல்லாம் இல்லை. வாழ்க்கையை ஏதோ ஒரு வகையில் பிடித்துக்கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தம். ஆனால், அந்தக் குடிகாரக் கணவன் தன்னுடைய பிழைப்புக்காக எந்த எல்லைக்கும் போகலாம் என்று முடிவெடுத்தபோது உதறிவிட்டு வந்துவிட்டார்.  அப்பாவைவிட்டு பிரிந்து வந்த பிறகு, ஊட்டியில் சின்ன இடத்தில் நாங்கள் இருந்தோம். சாப்பாட்டுக்கே வழி இல்லை. அப்புறம் கேரளத்துக்குப் போனோம். வாழ்க்கையில் பெரிய போராட்டங்களை அம்மா நடத்தினார். வாழ்க்கையின் சங்கடங்களை அந்த வயதிலேயே நேரடியாகப் பார்த்ததால், ‘உன்னைப் பாதுகாக்க யாரும் இருக்க மாட்டார்கள்... நீதான் மற்றவர்களைப் பாதுகாக்க வேண்டும்’ என்கிற பாடம் கிடைத்துவிட்டது. முழுமையான சுதந்திரத்தின் பரவசம், பயங்கரம் இரண்டையும் அந்தச் சூழல்தான் எனக்குக் கற்றுக்கொடுத்தது.’’

தமிழின் பொக்கிஷம் சங்க இலக்கியம்:டேவிட் ஷுல்மன்

     
பத்திரிகையாளர் சமஸ் டேவிட் ஷுல்மனுடன்
சமஸ் டேவிட் ஷுல்மனுடன்
  

                                        டேவிட் ஷுல்மன் உலகின் மிக முக்கியமான இந்தியவியலாளர்களில் ஒருவர். அமெரிக்காவில் பிறந்த யூதரான டேவிட், ஹீப்ரு பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறையில் பணியாற்றுகிறார். ஹீப்ரு, சம்ஸ்கிருதம், தமிழ், அரபி, பாரசீகம், கிரேக்கம் என உலகின் புராதன மொழிகள் பலவற்றில் புலமை மிக்கவர். இந்தியக் கலை மற்றும் கலாசாரம் குறித்து நிறைய புத்தகங்கள் எழுதி இருக்கிறார். ஒருபுறம் இப்படிப் பல்வேறு மொழிகள், கலாசாரம் தொடர்பான ஆய்வுகளில் தன் வாழ்வைக் கழிக்கும் ஷுல்மன் மறுபுறம், இஸ்ரேல் & பாலஸ்தீனம் பிரச்னையில், அமைதியை உருவாக்கும் பணியில் ‘தாயுஷ்’ அமைப்பின் மூலமாகத் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு இருக்கிறார். முக்கியமாக, பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலியர்களின் அநீதியான நடவடிக்கைகளுக்கு எதிராக தீவிரமாகச் செயல்பட்டுவரும் இஸ்ரேலிய அறிஞர் இவர். ஷுல்மன் இப்போது தமிழுக்கு முக்கியமான ஒரு பங்களிப்பைச் செய்கிறார். உலகுக்கு பைபிளைத் தந்த ஹீப்ரு மொழியில், நம்முடைய சங்கக் கவிதைகளைப் புத்தகமாகக் கொண்டுவருகிறார். சமீபத்தில் சென்னை வந்திருந்த ஷுல்மனைச் சந்தித்தேன்.

சி.பி.ஐ. விசாரணையே தனி: ஜெகந்நாதன்

எஸ்.ஜெகந்நாதன்
               
                   ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்கவைத்தது வாச்சாத்தி வழக்கின் தீர்ப்பு! உள்ளூர்க் காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையே பதிவுசெய்யப்படாத விசித்திரமான இந்த வழக்கில், பழங்குடிகளுக்கு எதிராக அரச வன்முறையில் ஈடுபட்ட 269 அரசு அலுவலர்களும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு வர மிக முக்கியக் காரணம் மத்தியப் புலனாய்வு அமைப்பின் விசாரணை. இதற்காக நீதிமன்றம் மத்தியப் புலனாய்வு அமைப்புக்கு ரூ. 1 லட்சம் சன்மானம் அளிக்க உத்தரவிட்டது. ஒரு வழக்கு விசாரணைக்காக இப்படி வெகுமதி அளிக்கப்படுவது மத்தியப் புலனாய்வு அமைப்பின் வரலாற்றில் அநேகமாக இதுவே முதல் முறை. ஆச்சர்யமான இன்னொரு செய்தி, 19 ஆண்டுகளுக்கு இழுத்த இந்த வழக்கில், மத்தியப் புலனாய்வு அமைப்பு தன்னுடைய விசாரணையை வெறும் 13 மாதங்களுக்குள் முடித்தது. அதுவும் இந்த வழக்கின் பெரும் பகுதி விசாரணையை மேற்கொண்டது ஒரே ஒருவர்தான். எஸ்.ஜெகந்நாதன். ஓய்வு பெற்றுவிட்ட இந்த அதிகாரிக்கு இப்போது வயது 68. ஆனால், நம்ப முடியாத உற்சாகத்துடன் பேசினார்.

ஆணைக் கொல்லுங்கள்!

           
           அடிக்கடி கை நீட்டும் கணவனுக்கு வாழ்க்கைப்பட்ட தோழி அவள். ஒருகட்டத்தில் சின்னச் சின்ன விஷயங்களுக்கு எல்லாம் அவன் எல்லோர் முன்பும் கை நீட்ட, தோழி நொறுங்கிப்போனாள். கடுமையான மன அழுத்தத்தில் உறைந்திருந்த அவளும் அவனும் மனநல மருத்துவரிடம் கலந்தாய்வுக்காகச் சென்றார்கள். அவன் எதற்கெடுத்தாலும்அடிக்கிறான் என்று அவள் உடைந்து அழுதபோது மருத்துவர் சொன்னது இது... ‘‘உன்னுடைய தவறு இது. முதன் முதலாக அவர் அடித்தபோதே, பதிலுக்கு நீ ஓங்கி அறைந்திருக்க வேண்டும் அல்லது கையில் துடைப்பத்தை எடுத்திருக்க வேண்டும்.’’ அதிர்ச்சியோடு இருவரும் பார்க்க, அவர் தொடர்ந்திருக்கிறார்... ‘‘ஆமாம். ஓர் ஆணுக்கு எதிராகக் கை நீட்ட வேண்டும் என்று சொன்னால், இவ்வளவு அதிர்ச்சி அடைகிறீர்களே... ஒரு பெண் தாக்கப்படுவது ஏன் கொஞ்சமும்  அதிர்ச்சி தரக் கூடியதாக இல்லை? ஏனென்றால், இந்த அசிங்கத்தை வரலாற்றுக் காலம் தொட்டு நாம் பழகி இருக்கிறோம். நம்முடைய மரபணுக் களிலேயே பெண்கள் கையாளப் பிறந்தவர்கள் என்ற எண்ணம் புதைந்திருக்கிறது. வேட்கை யோடு அது காத்திருக்கிறது. சந்தர்ப்பம் கிடைக்கும்போது எல்லாம் அது பாய்கிறது!’’

என் வலியை அழுது காட்டி வெளிப்படுத்த விரும்பவில்லை - பாலு மகேந்திரா

    
                          சென்னை, சாலிகிராமத்தில் உள்ள நெரிசல் மிக்க காமராஜர் தெருவில், வரிசையாக விரிக்கப்பட்டு இருக்கும் மீன் கடைகளை ஒட்டி இருக்கிறது, ‘பாலுமகேந்திரா சினிமா பட்டறை.’ ஒளிப்பதிவாளர், இயக்குநர் என்பதைத் தாண்டி, தமிழ் சினிமாவுக்கு பாலு மகேந்திராவின் முக்கியமான பங்களிப்பு இது. ‘‘ஒரு வருஷத்துக்கு 12 மாணவர்கள். இது மூன்றாவது அணி. தமிழ்தான் பயிற்றுமொழி. வெளி மாநில மாணவர்களும் புரிந்துகொள்கிறார்கள்’’ என்கிறார். வீட்டுக் கூடம்போல் இருக்கிறது வகுப்பறை. கீழே அமர்ந்துதான் படிக்கிறார்கள். மாணவர்களோடு மாணவராக சிறுகதைகள், கவிதைகள் படிக்கிறார், படங்கள் பார்க்கிறார், விவாதிக்கிறார். வாத்தியார் வேலையின் சந்தோஷம் முகத்தில் தெறிக்கிறது!

சி.மு.-சி.பி.

சுதந்திர இந்தியாவின் ஆட்சியாளர்களிலேயே பிரதமர் மன்மோகன் சிங்தான் அதிகம் செயல்பட்டவர் என்றும் அவருடைய ஆட்சிக் காலம்தான் இந்தியாவின் முழு முகத்தையும் மாற்றி இருக்கிறது என்றும் சொன்னால், நீங்கள் நம்புவீர்களா? உண்மை!
சிங் செயல்பாடற்ற ஒரு பிரதமர் என்பது உண்மையில் அறியாமை. கல்வி, சுகாதாரம், தொழில், கனிம வளங்கள், பொருளாதாரம், பாதுகாப்பு, சுற்றுச்சூழல், அணுசக்தி, வெளியுறவு என எல்லாத் துறைகளிலும் கால் பதித்து இருக்கிறார் சிங். சுதந்திர இந்தியாவின் வரலாற்றை சிங்குக்கு முன்... சிங்குக்குப் பின் என்றுகூடப் பிரிக்கலாம். ஆனால், அவருடைய எல்லா முயற்சிகளும் இந்த நாட்டின் சாமானிய மக்களின் வாழ்க்கையை அடித்து நொறுக்கி இருப்பதுதான் வரலாற்றுத் துயரம்.
சிங்கின் ஆட்சி முதலில் இந்த நாட்டைப் பணக்காரர்களுக்கான இந்தியா, ஏழைகளுக்கான இந்தியா என்று இரண்டு தேசமாகப் பிளந்தது. பிறகு, அது மெள்ள மெள்ள சரியத் தொடங்கியது. இந்தியா இப்போது சரிந்துகொண்டு இருக்கும் தேசம்... ஒரு சீட்டுக்கட்டு மாளிகையைப் போல அது சரிகிறது... அதன் பொருளாதாரம், கூட்டாட்சித் தத்துவம், சர்வதேச உறவுகள், பாதுகாப்பு எனச் சகல கட்டுமானங்களும் சிதறுகின்றன!
 

இந்தியர்கள் பேச மறந்த கதை

ம் காலத்தின் மிகப் பெரிய ஆராய்ச்சி என்று அதைச் சொல்லலாம். இந்தப் பேரண்டத்தின் ஆதியையும் அது உருவான அடிப்படையையும் கண்டறியும் ஆராய்ச்சி. நாம் வாழும் இந்த பூமியையே ஒரு சின்ன புள்ளியாகத் தன்னில் சுமந்துகொண்டிருக்கும் இந்தப் பேரண்டம் எப்படி உருவாகி இருக்கும்?

புதிய கொள்ளைநோய்


                                          தஞ்சாவூரின் பிரபல தனியார் மருத்துவமனை அது. பரபரப்பான அந்த மருத்துவமனையின் தனி அறை ஒன்றில் அலறுகிறார்  ராஜப்பா. ஒரு மாதத்துக்கு முன், சாதாரண சளித் தொந்தரவு வந்தது ராஜப்பாவுக்கு. மருத்துவரைச் சென்று பார்த்தார். மருத்துவர் தந்த மருந்துகளை எடுத்துக்கொண்டார்.ஆனால், எப்போதும்போல சளி குணமாக வில்லை. வாரங்களைத் தாண்டி நீடித்தது. சில நாட்களுக்கு முன் அவருடைய வயிறு வீங்க ஆரம்பித்தது. சிறுநீர் பிரியவில்லை. மலம் கட்டிக்கொண்டது. தொடர்ந்து வாந்தியெடுக்க ஆரம்பித்தார். இப்போது அவருடைய சிறுநீரகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக முடங்கிக்கொண்டு இருக்கின்றன. மருத்துவர்கள் செய்வதறியாது நிற்கிறார்கள்.  ராஜப்பாவுக்கு அப்படி என்ன வியாதி? எது அவரை இந்த நிலைக்குத் தள்ளியது? இது ஒரு புது வகைக் கோளாறு. மருந்து எதிர்ப்புச் சக்திப் பிரச்னை (Drug resistant problem) என்று இதற்குப் பெயர். அதாவது, அதீதமான மருந்துப் பயன்பாட்டால், ஒரு கட்டத்தில் மருந்துகளையே ஏற்காத நிலையைக் கொஞ்சம் கொஞ்சமாக உடல் அடையும் நிலை. இது ஒரு பக்கம். இன்னொரு பக்கமும் உண்டு. மருந்துகளின் வீரியத்தால் உடல் உறுப்புகள் முடங்கிச் சிதைவது.

இதுவும் தேசிய அவமானம்தான்!

ரு வரலாற்றுச் சாதனை இது. நிகழ்த்தியவர்கள்... நம்  இந்திய விவசாயிகள். வரலாறு பார்த்திராத  அளவுக்குக் கடந்த நிதி ஆண்டில் நாட்டின் உணவு தானிய உற்பத்தி 25.26 கோடி டன்னாக உயர்ந்து இருக்கிறது. குறிப்பாக, அரிசி உற்பத்தி 10.34 கோடி டன்; கோதுமை உற்பத்தி 9.23 கோடி டன்.
விவசாயிகளுக்காகத் துரும்பையும் இழக்க விரும்பாத ஓர் அரசாங்கத்துக்கு இப்படிப்பட்ட ஒரு செய்தி எவ்வளவு மகிழ்ச்சியான செய்தியாக இருக்க வேண்டும்? ஆனால், டெல்லியில் நம் உணவுத் துறை கையைப் பிசைந்துகொண்டு இருக்கிறது. விஷயம் வேறு ஒன்றும் இல்லை... இந்தியத் தானியக் கிடங்குகளில் இடம் இல்லை. நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் 1.3 டன் தானியங்களைக் கூடுதல் ஒதுக்கீடு செய்தாலும், வெயிலிலும் மழையிலும் தானியங்கள் வீணாவதைத் தடுக்க முடியாது என்கிறார்கள். என்ன செய்வது? இருபது வருடங்களுக்கு முன் இதே நிலை ஏற்பட்டு இருந்தால், இராக்குக்கோ, இரானுக்கோ கூடுதல் சரக்கு ஏற்றுமதி ஆகி, கச்சா எண்ணெயாக இங்கே திரும்ப இறங்கி இருக்கும். இப்போது இந்தியாவின் வெளியுறவு விவகாரங்களை அமெரிக்கா கவனித்துக்கொள்வதால், விழி பிதுங்கி நிற்கிறது அரசு.

வறுமைதான் வாழ்க்கையைக் கத்துக்கொடுத்துச்சு: வாண்டுமாமா


                                      வாண்டுமாமா.
இந்தப் பெயரைப் படித்ததும் மூளையில் என்ன மின்னல் அடிக்கிறது உங்களுக்கு? ஏழு கடல் ஏழு மலை தாண்டியிருக்கும் மந்திரவாதியின் உயிரும்... பேசும் கிளியும்... பலே பாலுவும்... உங்கள் நினைவில் மின்னினால்... சபாஷ்... உங்கள் குழந்தைப் பருவம் அலாதியாக இருந்திருக்கும்!
கிட்டத்தட்ட மூன்று தலைமுறை தமிழ்க் குழந்தைகளின் உலகை கதைகளால் நிரப்பியவர் வாண்டுமாமா. கடந்த நூற்றாண்டில் குழந்தைகளால் அதிகம் நேசிக்கப்பட்ட ‘கோகுலம்’, ‘பூந்தளிர்’ புத்தகங்கள் அவற்றின் உச்சத்தில் இருந்தபோது வாண்டுமாமாதான் அதற்குப் பொறுப்பாசிரியர். கௌசிகன் என்ற பெயரில் பெரியவர்களுக்கும் வாண்டுமாமா என்ற பெயரில் குழந்தைகளுக்குமாக இதுவரை 218 புத்தகங்களை எழுதி இருக்கும் வி. கிருஷ்ணமூர்த்தி இப்போது எப்படி இருக்கிறார்?
சென்னை, தியாகராய நகரில் உள்ள அடுக்ககம் ஒன்றில் தன் மகன் வீட்டில் இருப்பவரைச் சந்தித்தோம். வாண்டுமாமா இப்போது வாண்டுதாத்தாவாக இருக்கிறார். 87 வயது. முதுமை உடலை ஒடுக்கி இருக்கிறது. காலம் எல்லாம் கதை சொன்னவருக்கு இப்போது பேச முடியவில்லை. வாயில் புற்றுநோய். காதும் கேட்கும் திறனை இழந்துவிட்டது. மனைவி சாந்தாவிடம் சொன்னால், அவர் சைகை மூலம் நாம் சொல்லும் செய்தியைத் தெரியப்படுத்துகிறார்; அதற்குத் தன்னுடைய பதிலை எழுதிக்காட்டுகிறார் வாண்டுதாத்தா. ஆனால், எழுத்துகளில் கொஞ்சமும் நடுக்கம் இல்லை. அட்சரச் சுத்தமாக இருக்கின்றன. சைகைகளும் எழுத்துகளுமாக நடந்த உரையாடல் இது...

ஒரே உண்மைதான்... பிரபாகரன் இல்லை: சரத் ஃபொன்சேகா

            உலகின் மிகக் குரூரமான போர்களை முன்னெடுத்த தளபதிகளில் ஒருவர்... சரத் ஃபொன்சேகா. ஈழத்தில் முப்படைகளையும் கொண்ட விடுதலைப் புலிகளை வீழ்த்தியபோது ராஜபக்ஷே - ஃபொன்சேகா கூட்டணி ஆசியக் கண்டத்தைத் தாண்டியும் கவனத்தை ஈர்த்தது. ஆனால், வெற்றியின் பலனை அறுவடை செய்வதில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட அரசியல் போட்டி ஃபொன்சேகாவைச் சிறைக்குள் தள்ளியது. அமெரிக்கா கொடுத்த அழுத்தத்தால் இரண்டு ஆண்டு சிறைவாசத்துக்குப் பின் வெளியே வந்திருக்கிறார் ஃபொன்சேகா. அவருடைய ஒவ்வோர் அசைவும் இன்று இலங்கை அரசால் கண்காணிக்கப்படுகிறது. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்கிறார்கள் இலங்கைப் பத்திரிகையாளர்கள். ஃபொன்சேகாவுக்கு ஏற்பட்டு இருக்கும் நிலை இலங்கையில் ஜனநாயகம் எப்படி இருக்கிறது என்பதற்கு அப்பட்டமான ஓர் உதாரணம். சிறையில் இருந்து வெளிவந்த ஃபொன்சேகாவை  ஏராளமான கேள்விகளுடன் எதிர்கொண்டேன். விடுதலைக்குப் பின் சர்வதேச அளவில் ஃபொன்சேகா அளித்த முதல் விரிவான - பிரத்யேகப் பேட்டி இது.

காவிரி... 10 உண்மைகள்!


உண்மை 1: இந்த ஆண்டும்   குறுவைச் சாகுபடிக்குத் திறக்க மேட்டூர் அணையில் தண்ணீர் இல்லை. இப்படி ஜூன் 12-ம் தேதி அணை திறப்பது தள்ளிப்போவது மேட்டூர் அணையின் வரலாற்றில் இது  53-வது ஆண்டு. தமிழகத்தின் நெல் உற்பத்தியில் மூன்றில் ஒரு பகுதியைத் தரவல்லது காவிரிப் படுகை. குறுவை, சம்பா, தாளடி என்று மூன்று பருவச் சாகுபடி. இதில் குறுவை 4 லட்சம் ஏக்கர்; சம்பா 8 லட்சம் ஏக்கர்; தாளடி 4 லட்சம் ஏக்கர் சாகுபடியாகும். இந்த மூன்று பருவங்களில் குறுவைப் பருவம்தான் நல்ல விளைச்சல் தரும். தவிர, குறுவைச் சாகுபடி இல்லாமல் போனால், 17.36 லட்சம் விவசாயத் தொழிலாளர்கள் வீட்டில் முடங்கிப்போவார்கள்.

ஜனநாயக ஓட்டைகள்

                                        ந்தியாவின் அடுத்த குடியரசுத் தலைவர் யார்?
அதை எல்லோரும் பேசட்டும். நாம் உருப்படியான ஒரு விஷயம் பேசுவோம். இந்தியாவில் குடியரசுத் தலைவர் தேர்வு எப்படி நடக்கிறது தெரியுமா?

நீரும் விஷம்!



                    கை கொடுங்கள்... கடைசியாக நாம் குடிக்கும் தண்ணீரையும் விஷமாக்கிவிட்டோம்!

                    நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் நிலத்தடி நீர் விஷமாகிவருவதை நாடாளுமன்றத்திலேயே ஒப்புக்கொண்டு இருக்கிறது இந்திய அரசு. மத்திய நீர்வளத் துறை அமைச்சகத்தின் அறிக்கையின்படி, நாட்டின் 385 மாவட்டங்களில் நிலத்தடி நீரில் நைட்ரேட் மிகுந்து காணப்படுகிறது; 267 மாவட்டங்களில் ஃபுளோரைடு மிகுந்து காணப்படுகிறது; 158 மாவட்டங்களில் தண்ணீர் உப்பாக மாறிவருகிறது; 63 மாவட்டங்களில் துத்தநாகம், குரோமியம், காட்மியம் போன்ற உலோகங்கள் மிகுந்து காணப்படுகிறது.

கோமாளிகளின் கூடாரம்!

ஸ்ரீலஸ்ரீ அருணகிரி ஸ்ரீ ஞானசம்பந்த தேசிகப் பரமாச்சார்ய சுவாமிகள் தன்னுடைய மதுரை ஆதீனத்தின் 293-வது ஆதீனகர்த்தராக ஸ்ரீலஸ்ரீ ஸ்ரீ பரமஹம்ச நித்தியானந்த ஸ்ரீ ஞானசம்பந்த தேசிகப் பரமாச்சாரிய ஸ்வாமிகளைச் சட்டபூர்வமாக நியமித்தது ஒருநாள் நகைச்சுவையாக மாறிப்போனதை நம் சமூகத்தின் அவலம் என்றுதான் சொல்ல வேண்டும். சர்வ வல்லமை மிக்க முதல்வரையோ, பிரதமரையோகூட உங்களால் கேள்வி கேட்க முடியும். ஆனால், ஆதீனகர்த்தாக்களையோ, மடாதிபதிகளையோ ஒன்றுமே செய்ய முடியாது. இதற்கு எப்படிச் சிரிப்பது?

நான் லாபி செய்கிறேனா?: ஸ்ரீனிவாசன்


                                   இது ஸ்ரீனிவாசனின் பொற்காலம்! ஒருபக்கம், தென்னகத்தின் பெரும் சிமென்ட் நிறுவனமான அவருடைய 'இந்தியா சிமென்ட்ஸ்’ வடக்கிலும் கிளை பரப்பிக்கொண்டு இருக்க, இன்னொரு பக்கம், அவருடைய 'சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணி ஐ.பி.எல். போட்டிகளில் கோடிகளை வாரிக் குவிக்கிறது. இந்தியாவைத் தாண்டியும் கோலோச்சுகிறார் ஸ்ரீனிவாசன். சர்வதேச கிரிக்கெட் ஆணையமே அவர் சொல்படி ஆடுகிறது. புகழுக்கு இணையாக சர்ச்சைகளிலும் மிதக்கும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரை அவருடைய 'இந்தியா சிமெண்ட்ஸ்' அலுவலகத்தில் சந்தித்தேன்.

ஓர் இந்திய நூற்றாண்டின் சாட்சியம்



திருச்சியின் பழைமையான நத்ஹர்சா பள்ளிவாசலின் ஒரு மூலையில் முடங்கிக் கிடக்கிறார் குல்சும் பீபி. வயது 116. நாட்டிலேயே அதிக வயதுடைய பெண்ணாகக் கருதப்படும் இவர், சுதந்திரப் போராட்டக் களத்தின் எந்தப் போராட்டத்திலும் பங்கேற்றவர் அல்லர். காந்தி, நேரு, சுபாஷ் என தேசத்தின் எந்த முன்னோடிகளையும் பார்த்தவரும் அல்லர். ஆனால், இந்திய வரலாற்றின் முக்கியமான ஒரு நூற்றாண்டின் அத்தனை மாற்றங்களிலும் மௌன சாட்சியாக - சக பயணியாக பங்கேற்ற அனுபவம் அவருக்குள் உறைந்துக் கிடக்கிறது. விளிம்பு நிலை மக்களின் வாழ்வில் சுதந்திரம் என்ற சொல் ஏற்படுத்திய கனவுகள், தலைவர்கள் உருவாக்கிய பிரமாண்ட உருவகங்கள், பின்னர் நிகழ்ந்த தடுமாற்றங்கள் மற்றும் ஏமாற்றங்களை அப்படியே பிரதிபலிப்பதால் குல்சும் பீபியுடனான இந்த நேர்காணல் முக்கியமானதாகிறது.
 
கூன் விழுந்த சரீரம், பார்வையிலும் தடுமாற்றம், மிகவும் சிரமப்பட்டே பேசுகிறார்; வார்த்தைகளால் தன் கடந்த காலத்துக்குள் நுழையும் அவர், பல தருணங்களில் தாங்க முடியாதத் துயரத்தில் அழுதுவிடுகிறார். அவருடனான உரையாடலிலிருந்து...

மாயாஜால வித்தை அப்போது தீயசக்திகளிடம் இருந்தது: லால்

  மேடை தவிர்த்து எல்லா இடங்களையும் சூழ்ந்திருக்கிறது இருள். ஆனால், அந்த அடர்த்தியான கருமையிலும் பார்வையாளர்களின் முகத்தில் புதைந்திருக்கும் பதற்றம் எதிரொளிக்கிறது. மேடையின் நடுவே ஒரு மேஜையில் தன் மகன் கிடத்தப்பட்டிருக்க அந்தக் கிழட்டு மனிதர் பேசுகிறார்.
"எனக்குத் தெரியும். எத்தனையோ மாயாஜாலக்காரர்கள் அபாயகரமான தங்கள் வித்தையின் பாதியிலேயே மேடையில் தங்கள் உயிரை இழந்திருக்கிறார்கள். ஆம். மாயாஜாலம் என்பது அதுதான். இங்கு எதுவுமே சாதாரணம் அல்ல. இதோ அந்தக் கலைக்காகதான் நான் என் மகனையே பணயம் வைக்கிறேன்.''

பூமி சற்று அதிர்ந்த ஒரு நாளில்...

ச்சேவில் தேர்தல் களேபரங்கள் மாறாத இரண்டாவது நாள் அது. பூமி அதிர்ந்தது. கிட்டத்தட்ட 495 கி.மீ. தொலைவில், கடலில் 33 கி.மீ. அடி ஆழத்தில் 8.6 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் சுனாமி தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்றும் இந்தோனேஷிய அரசு அறிவித்தது. உலகிலேயே அதிகமாக, கடந்த 2004-ல் ஏற்பட்ட சுனாமியின்போது 1.7 லட்சம் பேரைப் பறிகொடுத்த மாகாணம் அச்சே. இப்படி ஒரு சூழலில் அச்சேவில் நீங்கள் இருந்திருந்தால் என்ன செய்வீர்கள்?

அறியாமைதான் இந்திய விவசாயிகளின் மிகப் பெரிய எதிரி: பத்மஸ்ரீ வெங்கடபதி ரெட்டியார்


                                      பாண்டிச்சேரியில் இருந்து 15 கி.மீ. தொலைவில் இருக்கும் கூடப்பாக்கம் கிராமம் கொண்டாட்டத்தில் இருக்கிறது. ‘‘பத்ம விருது வாங்கின முதல் விவசாயியின் ஊர்ங்கிறதைத் தாண்டி எங்களுக்கு இதில் இன்னொரு சந்தோஷமும் உண்டு; எங்க மாநிலத்துக்குக் கிடைச்சிருக்கும் முதல் பத்ம விருது இது’’ என்கிறார்கள் ஊர்க்காரர்கள். ‘பத்மஸ்ரீ’ வெங்கடபதி ரெட்டியார் பூரிப்பில் இருக்கிறார்.  ‘‘தோட்டத்துக்குப் போலாமா?’’ என்று ‘ஹுண்டாய் வெர்னா’ காரில் என்னை அழைத்துச் செல்கிறார். ‘‘அம்பாஸிடரும் கிடக்கு. ஆனா, இந்தக் காலத்துக்கு இதுதான் சொகம். என்ன சொல்றீங்க?’’ என்கிறார். அருகில் அமர்ந்திருக்கும் மகள் ஸ்ரீலஷ்மியைப் பார்த்து ‘‘ஏம்மா, படம் எல்லாம் மெயில் அனுப்பச் சொன்னேனே, அனுப்பிச்சிட்டியா?’’ என்கிறார். வெங்கடபதி தோட்டத்தில் அவர் உருவாக்கிய புதிய ரகக்   கனகாம்பரச் செடிகள் வேறு எங்கும் காணக் கிடைக்காத நிறப் பூக்களால் நிரம்பி வழிகின்றன. சவுக்கு மரங்கள் இயல்பான வடிவத்தைக் காட்டிலும் பல மடங்கு பெருத்து நிற்கின்றன. கொய்யாப் பழங்கள் ஒவ்வொன்றும் ஒரு கிலோ எடைக்கு காய்த்து தொங்குகின்றன. வெங்கடபதி நான்காவது வரைக்கும்தான் படித்திருக்கிறார். ஆனால், வாயைத் திறந்தால் தாவரங்களின் தகவமைப்பு, குரோமோசாம்கள், மரபிணி மாற்றம், அணுக்களின் ஆற்றல் என்று பின்னி எடுக்கிறார்.

மருந்தியல் யுத்தம்

   
                நீங்கள் இருப்பது தெரிய வேண்டும் என்றால், நீங்கள் செயல்பட வேண்டும். இந்தியக் காப்புரிமைக் கட்டுப்பாட்டாளர் பி.ஹெச்.குரியனும் அவருடைய அலுவலகமும் இப்போது இந்தியாவைத் தாண்டியும் தெரிய ஆரம்பித்திருப்பது அப்படித்தான். ஜெர்மனியைச் சேர்ந்த ‘பேயர்’ மருந்து நிறுவனத்துக்கு குரியன் கொடுத்த அடி, உலகம் முழுவதும் பொது சுகாதாரத்துக்காகக் குரல் கொடுப்பவர்களைக் கொண்டாட வைத்திருக்கிறது!

வறுமை ஒழிப்பா, ஏழைகள் ஒழிப்பா?

ழைகளின் வாழ்க்கை நிலையை மாற்ற ஒன்றுக்கும் உதவ முடியாத ஓர் அரசால் வறுமையை ஒழிக்க என்ன செய்ய முடியும்? எண்களை வைத்து விளையாட்டுக் காட்டி ஊரை ஏமாற்ற முடியும். ஒரே நாளில் 5.26 கோடி ஏழை இந்தியர்களை அப்படித்தான் ‘பணக்காரர்கள்’ ஆக்கி ‘வரலாற்றுச் சாதனை’ படைத்து இருக்கிறது மன்மோகன் சிங் அரசு!

உண்மையைப் பேசுவோம்!


         போர் வெற்றியின் உற்சாகத்தில் இருந்த ராஜபக்ஷ இந்தியப் பத்திரிகையாளர் ஒருவருக்குப் பேட்டி அளித்தபோது சொன்னார்: ‘‘நாங்கள் இந்தியாவுக்காகவும் போரிட்டிருக்கிறோம்!’’
        
         ஆமாம். ராஜபக்ஷ  பொய் சொல்லவில்லை. இந்தப் போரில்  இந்தியா  பின்னின்று பங்கேற்றது. போருக்கு முன் ‘எம்.ஐ. 17’ ரக ஹெலிகாப்டர்களில் தொடங்கி போருக்குப் பின் ‘விக்ரஹா’ ரோந்துக் கப்பல் வரை சகல படைக்கலன்களையும் இலங்கைக்கு வழங்கியது; ஆட்களை அனுப்பியது; சிங்களப் படைக்கு இங்கு பயிற்சி அளித்தது. கோடியக்கரையில் இருந்தும் உச்சிபுளியில் இருந்தும் கடல் பகுதியைக் கண்காணித்து உளவு சொன்னது; ராஜ தந்திர ரீதியாக போருக்கு எந்தத் தடையும் வராமல் பார்த்துக்கொண்டது. யோசித்துப் பாருங்கள்... இலங்கையின் போர்க் குற்றங்களுக்கு எதிராக இந்தியா குரல் கொடுக்க வேண்டும் என்று கோருவது எவ்வளவு அபத்தம்?
உங்களுக்கு நினைவிருக்கிறதா?

            2009-ம் ஆண்டு மே 15-ம் தேதி அமெரிக்க பசிபிக் பிராந்திய கட்டளைத் தளபதி திமேத்தி ஜே கீட்டிங் அன்றைய இந்திய தேசியப் பாதுகாப்புச் செயலர் எம்.கே.நாராயணனையும் வெளியுறவுத் துறைச் செயலர் சிவசங்கர் மேனனையும் சந்தித்தார். பின்னர், ‘‘இலங்கையில் போர்ப் பகுதியில் ‘பாதிக்கப்பட்ட மக்களுக்கு’ உதவ அமெரிக்கக் கப்பல் படைக் கப்பல்கள் தயார் நிலையில் இருக்கின்றன’’ என்று அறிவித்தார். விடுதலைப் புலிகள் தலைமை அமெரிக்காவிடமிருந்தும் இங்கிலாந்திடமிருந்தும் பொது மன்னிப்பு உறுதிமொழியை எதிர்பார்த்து சரணடைய காத்திருந்த நாள் அது. ‘ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரண் அடைந்தால் பொது மன்னிப்பு’ என்ற பொய்யான வாக்குறுதி சர்வதேசத்தால் வழங்கப்பட்டதற்கான மறைமுக சாட்சி அது. ஆமாம். அமெரிக்காவுக்கும் இதில் பங்கு உண்டு. கொத்துகொத்தாக குண்டுகள் விழுந்தபோதும்  தமிழ் உயிர்கள் வீழ்ந்தபோதும் எல்லோரும்தானே வேடிக்கை பார்த்தார்கள்? எல்லாருடைய விருப்பத்தின்பேரில்தான் அது நடந்தது!

தமிழ்நாட்டின் தாலிபன்களா நாங்கள்?: அன்புமணி ராமதாஸ்


                    பா.ம.க இப்போது  வேறு அரசியலுக்குள் நுழைகிறது. ‘புதிய அரசியல்... புதிய நம்பிக்கை’ என்னும் முழக்கத்துடன் கட்சியை முன்னெடுக்கும்  அன்புமணி  ராமதாஸின் சமீபத்திய பேச்சுகள் அவர்கள் செல்லவிருக்கும் திசையைத் தெளிவாக்குகிறது.  எடுத்த எடுப்பிலேயே, ‘‘திராவிட இயக்கங்களால் தமிழ்நாட்டுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை. கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜானகி, ஜெயலலிதா, வைகோ... இவர்கள் எவரும் தமிழரே இல்லை. தமிழர்த் தலைவர் ராமதாஸ் மட்டும்தான்’’ என்று ஆரம்பித்த அன்புமணியை சென்னையிலுள்ள அவருடைய ஆடம்பரமான இல்லத்தில் சந்தித்தேன். கார்பரேட் கலாசார  உபசரிப்போடு தொடங்கியது உரையாடல்.

                             ‘‘தமிழர் என்ற சொல்லுக்குப் பா.ம.க. புதிய வரையறை வகுக்கிறதா?’’
‘‘ஆமாம். தமிழ்ப் பேசுவதாலேயே வந்தேறிகளை எப்படித் தமிழர்கள் என்று ஏற்றுக்கொள்ள முடியும்? திராவிடர்கள் என்றால் யார்? திராவிடக் கட்சிகள் மலையாளிகள், கன்னடர்கள், தெலுங்கள், தமிழர்கள் எல்லோரும் திராவிடர்கள் என்று சொல்கின்றன. அப்படி என்றால், ஆந்திரத்திலோ, கர்நாடகத்திலோ, கேரளத்திலோ திராவிட என்ற பெயரில் ஒரு கட்சியாவது இருக்க வேண்டுமே... இருக்கிறதா? ஆந்திரத்தில் ரெட்டி, நாயுடு தவிர வேறு இனத்தவர்கள் முதல்வர் நாற்காலியில் அமர முடியவில்லை. கேரளத்தில் நாயர், ... தவிர  வேறு இனத்தவர்கள் முதல்வர் நாற்காலியில் அமர முடியவில்லை. கர்நாடகத்தில் லிங்காயத்துகள், ஒகேலிக்கர்கள் தவிர வேறு இனத்தவர்கள் முதல்வர் நாற்காலியில் அமர முடியவில்லை. தமிழகத்தில் மட்டும்தான் இந்த அக்கிரமம். காரணம்... இங்கு திராவிடர்கள் என்ற பெயரில் ஆட்சியில் ஒட்டிக்கொள்பவர்கள் எவரும் தமிழர்கள் இல்லை என்பதுதான்.’’