கரோனா: இந்திய நடவடிக்கைகள் போதுமா?



இத்தாலி முடக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக ‘கரோனா வைரஸ்’ பரவலைத் தடுக்க சீன நகரமான வூஹான் முற்றிலுமாக முடக்கப்பட்டபோது, அங்கு ஆரம்ப நாட்கள் எப்படியிருந்தன என்ற க்வோ ஜிங்கின் நாட்குறிப்புகளைப் படித்துக்கொண்டிருந்தேன். வூஹான்வாசியான ஜிங் ஓர் இளம்பெண்; சமூகச் செயல்பாட்டாளர். ஜனவரியில் வூஹான் முடக்கப்பட்ட முதல் வார அனுபவத்தை அவர் பகிர்ந்திருந்தார்.

முடக்கப்பட்ட அன்றாடம்

அன்று காலை ஜிங் எழுந்தபோது நகரம் முற்றாக முடக்கப்பட்ட செய்தி அவரை வந்தடைகிறது. இந்தச் செய்தியை எப்படிப் புரிந்துகொள்வது என்று அவருக்குத் தெரியவில்லை. ஏனென்றால், அப்படி ஒரு முன்னனுபவம் எல்லா வூஹான்வாசிகளையும்போல அவருக்கும் இல்லை. அதற்கு எப்படித் தயாராக வேண்டும், எவ்வளவு நாட்கள் நீடிக்கும்... எதுவும் தெரியவில்லை.

உடனடியாக வெளியே செல்கிறார். கடைகள் கூட்டத்தால் சூழப்பட்டிருக்கின்றன. அரிசி, நூடுல்ஸ், ரொட்டி, காய்கறிகள் என்று உணவுப் பொருட்கள் விற்றுத் தீர்ந்துகொண்டிருக்கின்றன. ஒரு மனிதர் ஏராளமான அளவில் உப்பு வாங்கிக்கொண்டிருக்கிறார். ‘ஏன் இவ்வளவு வாங்குகிறீர்கள்?’ என்று அவரிடம் இன்னொருவர் கேட்பதற்கு, ‘ஓராண்டுக்கு இதே நிலை நீடித்தால் என்ன செய்வது?’ என்கிறார். ஜிங் அதிர்ந்துபோகிறார்.

ஜிங்குக்கு எப்படியும் அவருக்குத் தேவையானவை கிடைத்துவிடுகின்றன. சீக்கிரமே நகரம் முடங்கிவிடுகிறது. குறிப்பிட்ட நேரங்களில் அத்தியாவசியத் தேவைகளுக்கான இடங்கள், கடைகள் மட்டுமே திறந்திருக்கின்றன. அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வெளியே வருகிறார்கள். பள்ளிக்கூடங்களும் கல்லூரிகளும் அலுவலகங்களும் மூடப்பட்டிருக்கின்றன; திரையரங்குகள், மைதானங்கள் பூட்டப்பட்டிருக்கின்றன. விழாக்கள், பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகள் எதுவும் இல்லை. மனிதர்களுக்குள்ளான எல்லா உரையாடல்களும் சுருங்கிவிடுகின்றன. சிந்தனை முழுமையையும் கிருமி  ஆக்கிரமித்திருக்கிறது. ஜிங் தனிமையில் உழல்கிறார். சமூகவலைதளங்களும் முடக்கப்பட்டிருக்கின்றன. இடையிலேயே சீனப் புத்தாண்டு வருகிறது. அதுவும் பெரும் அச்சத்தினூடாகவும் அமைதியினூடாகவுமே கரைகிறது. ‘இந்த அமைதி என்னை அச்சுறுத்துகிறது; அருகிலுள்ள வீடுகளிலிருந்து ஏதாவது சத்தம் வரும்போதுதான் எனது அருகில் மனிதர்கள் வசிக்கிறார்கள் என்பதையே உணர முடிகிறது’ என்று எழுதுகிறார் ஜிங்.

ஒரு நாள் காலாற வெளியே நடக்கும் எண்ணம் ஜிங்குக்கு வருகிறது. சாலையில் நடக்கிறார். பரபரப்பான அந்த நகரின் சாலைகள் இப்போது வெறிச்சோடி அங்கொருவர், இங்கொருவரோடு காட்சி அளிக்கிறது; பேருந்துகளில் ஆறேழு பேர் உட்கார்ந்து செல்கிறார்கள். ஜிங் கண்கள் கலங்குகின்றன. இன்னும் எத்தனை நாட்களுக்கு இது நீடிக்கும்?