எனக்குப் பிடித்த பத்திரிகை குமுதம்!- விகடன் பாலசுப்ரமணியன் கடைசிப் பேட்டி


மிழ் இதழியல் கண்ட அபூர்வ மனிதர்களில் ஒருவர் எஸ்.எஸ்.பாலன் என்கிற எஸ்.பாலசுப்ரமணியன். பலரையும்போல சினிமா கனவோடு, பத்திரிகைக்கு வந்தவர் அல்ல அவர். பத்திரிகைக்காக சினிமாவை விட்டவர். 1969-ல் அவருடைய தந்தை எஸ்.எஸ்.வாசன் மறைந்தபோது, ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையின் தலைமைப் பொறுப்பு மட்டும் அவரிடம் வரவில்லை; திரையுலகின் உச்சத்திலிருந்த ‘ஜெமினி ஸ்டுடியோ’வின் தலைமைப் பொறுப்பும் அவரிடம் வந்தது. வாசன் இறந்து ஒரு மாதம் ஆகியிருந்த நிலையில் வெளியான ஜெமினி ஸ்டுடியோவின் ‘மன்சுலு மராலி’ தெலுங்குப் படம் பெரும் வெற்றி பெற்றது. பாலசுப்ரமணியன் தொடர்ந்து படங்கள் எடுத்தார், இயக்கினார். ஆனால், அவருக்குள் இருந்த பத்திரிகையாளன் விகடனைத்தான் முழுமையாக நேசித்தான். ஜெமினி ஸ்டுடியோவில் தொடங்கி, அவருக்குள் இருந்த எழுத்தாளன் சேவற்கொடியோன் வரை சகலமும் அந்தப் பத்திரிகையாளனுக்காக அவர் கொடுத்த விலைகள்.

கொண்டாடப் பல விஷயங்கள் உண்டு, பாலசுப்ரமணியனிடம். தொழிலாளிகள் காலம் முழுவதும் வாழ்த்திய பத்திரிகை முதலாளி அவர். தமிழ் இதழியலில் எழுத்தாளர்களுக்கு என்று ஒரு தனி இடம் பத்திரிகையில் இருந்தது அவருடைய காலத்தில்தான். 1950-களில் ஒரு பவுன் தங்கம் ரூ. 80 விற்ற காலத்தில், ‘முத்திரைக் கதை’களுக்கு ஒரு கதைக்கு அவர் கொடுத்த ரூ. 500 சன்மானம் இன்றைக்கும் எந்த நிறுவனத்துடனும் ஒப்பிட முடியாதது. தொழில்முறைப் பயிற்சி என்பது இன்னமும் கனவாக இருக்கும் தமிழ் இதழியலில், பெரும் புரட்சியை உண்டாக்கியது அவர் கொண்டுவந்த ‘மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்’. சமூகநீதிக்கு முன்னுதாரணமாக, நாட்டிலேயே அதிகமாகப் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் - குறிப்பாகப் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் - தமிழ் ஊடகங்களில் இன்றைக்கு முக்கியப் பொறுப்புகளில் இருப்பதற்கு முக்கியமான காரணங்களில் ஒருவர் பாலசுப்ரமணியன்.

கிட்டத்தட்ட 50 வருஷங்கள் ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையின் ஆசிரியர் பொறுப்பில் அவர் இருந்தார். தமிழில் அதிகம் விற்பனையாகும் பத்திரிகையாக முதலிடத்தில் ‘ஆனந்த விகடன்’ பத்திரிகையை உட்காரவைத்துவிட்டு அவர் ஆசிரியர் பொறுப்பிலிருந்து விலகினார். அதோடு, முற்றிலுமாகப் பொது வாழ்விலிருந்தும் விலகிக்கொண்டார்.

அடுத்த ஞாயிறு டிச. 28 அன்று - அவருடைய 80-வது பிறந்த நாள் அன்று - வெளியிடுவதற்காக எடுக்கப்பட்ட பேட்டியின் ஒரு பகுதி இது. அவரது மறைவையொட்டி இந்த ஞாயிறு வெளியாகிறது.

எல்லாப் பார்ப்பனர்களையும் ஒழித்துவிடுவோம், சாதி அழிந்துவிடுமா?


நான் பிறந்த ஊரான மன்னார்குடியிலிருந்து அதிகபட்சம் இரண்டு மணி நேரப் பயணத் தூரத்துக்குள் இருக்கிறது கீழவெண்மணி. கூலி உயர்வாக ஒரு படி நெல்லை இரு படி நெல்லாக உயர்த்திக் கேட்டுப் போராடினார்கள் என்பதற்காக 20 பெண்கள், 19 குழந்தைகள் உட்பட 44 பேர் உயிரோடு கொளுத்தப்பட்ட ஊர் அது (1968, டிசம்பர் 25). அவமானகரமான விஷயம் என்னவென்றால்,கல்லூரிப் படிப்பை முடிக்கும்வரை கீழவெண்மணியைப் பற்றியோ, அங்கு நடந்த படுகொலையைப் பற்றியோ பெரிதாக அறியாதவன் நான். இத்தனைக்கும் திராவிட இயக்கப் பின்னணியைக் கொண்டது என்னுடைய குடும்பம். சாதி, மத, இனப் பாகுபாடுகளுக்கு எதிரான உணர்வுகளுடனேயே நான் வளர்ந்தேன். ஆனால், பலரையும்போல ‘சாதி இல்லை’ என்று சொல்வதாலும் எல்லோருடனும் பரஸ்பரம் சகஜமாகப் பழகுவதாலும் மட்டுமே சாதி ஒழிந்துவிடும் என்றும் நம்பிக்கொண்டிருந்தேன். ஒருமுறை கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனைச் சந்திக்கச் சென்றேன். சாதியின் முழுக் கொடூர முகத்தையும் எனக்கு அறிமுகப்படுத்தியது அவருடனான உரையாடல்தான்.