வங்கிகளைத் தனியார்மயமாக்கப் பேசுவது கொள்ளைக்கான அறைகூவல்!



நீரவ் மோடியின் ரூ.12,686 கோடி மோசடிக்குப் பிறகு, பொதுத்துறை வங்கிகளின் நிலவரம் எப்படி இருக்கிறது? சில வங்கிகளுக்குச் சென்றிருந்தேன். மேலாளராக நண்பர் இருக்கும் வங்கியில், “ஒரு மணி நேரம் இங்கு உட்கார்ந்திருந்தால், சூழலை நீங்களே புரிந்துகொள்ளலாம்” என்றார். கொஞ்சம் அந்தக் காலத்து மனிதர் என்பதோடு, பெரிய கூட்டம் நெருக்கியடிக்கும் வங்கிக் கிளையும் அல்ல அதுவென்பதால் பெரும்பாலான வாடிக்கையாளர்களுடன் அவருக்குத் தனிப்பட்ட உறவு உண்டு. அந்த ஓரிரு மணி நேரத்தில், கிட்டத்தட்ட பத்து பதினைந்து பேர் அவரிடம் வந்து பேசிவிட்டு போனார்கள். பெரும்பாலானோர் கேட்டது, “ஏன் சார், நம்ம பேங்காவது பாதுகாப்பா இருக்கா? பேசாம பணத்தையெல்லாம் எடுத்து வேற எதுலேயாவது முதலீடு பண்ணிறலாமான்னு தோணுது!”

அமெரிக்காவிலிருந்து திரும்பியிருந்த ஒரு பெண், தன்னுடைய வைப்புத்தொகையைத் திரும்பப் பெறும் முடிவோடு வந்திருந்தார். அவரைச் சமாளித்து, திருப்பியனுப்ப மட்டும் நண்பருக்கு அரை மணி நேரம் ஆனது. நண்பர் அசந்துபோனார். “இதுரைக்கும் இல்லாத அச்சம், என் வாழ்நாள்ல பார்க்காதது மக்கள்கிடட்ட இப்போ உருவாகியிருக்கு!”

அங்கிருந்து திரும்பிய பின் நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள நண்பர்களிடம் பேசினேன். பொதுத்துறை வங்கிகள் இந்த நிதியாண்டில் வைப்புத்தொகையில் பெருத்த சேதாரத்தைச் சந்திக்கும் என்று தோன்றுகிறது. குறிப்பாக பஞ்சாப் நேஷனல் வங்கி கடுமையான பாதிப்புக்கு உள்ளாகிவருவதாகவும், வடகிழக்கு மாநிலங்களில் வாடிக்கையாளர்கள் பலர் வைப்புத்தொகையைத் திரும்பப் பெற்றுவருவதாகவும் அங்குள்ள நண்பர்கள் சொல்கிறார்கள்.

சுதந்திர இந்தியாவில் நடந்திருக்கும் மிகப் பெரிய வங்கி ஊழல் இது. ஊழல் என்பதைக் காட்டிலும் சட்டப்பூர்வக் கொள்ளை என்றே சொல்ல வேண்டும். நாட்டின் பெரும்பான்மை ஊடகங்களும் எழுதிக்கொண்டிருக்கிறபடி இது வெறும் ரூ.12,600 கோடி இழப்புடன் முடியப்போவதில்லை. வங்கிகளை இந்திரா காந்தி நாட்டுடமையாக்கிய பின்னரான, இந்த அரை நூற்றாண்டில் பொதுத்துறை வங்கிகள் சேர்த்திருக்கும் பெரும் சொத்தான நம்பகத்தன்மையை இந்த ஊழல் சூறையாடிக்கொண்டிருக்கிறது. கொடுமை, எந்த அரசாங்கம் இந்த நம்பகத்தன்மையைக் கட்டிக்காக்க வேண்டுமோ, அதுவே பொதுத்துறை வங்கிகளை மானபங்கப்படுத்திவருகிறது. அரசின் முதன்மைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், நிதி ஆயோக் தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் முதலியோரெல்லாம், “பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயமாக்கிவிடலாம்” என்று பேசிவருவது பொறுப்பின்மையின் உச்சம்.