தெற்கிலிருந்து ஒரு சூரியன்!



கருணாநிதி மூன்றாவது முறையாக 1989-ல் முதல்வர் பொறுப்பேற்றிருந்த சமயம். காலையிலேயே ஏதோ சிந்தனைவயப்பட்டவராக இருந்தவர், தன்னுடைய செயலர் ராஜமாணிக்கம் மூலமாகத் தனது மனதுக்கு நெருக்கமான சிற்பி கணபதி ஸ்தபதியைத் தொடர்புகொள்கிறார். ‘‘ஸ்தபதியாரே, கன்னியாகுமரி கடல்ல வள்ளுவருக்கு ஒரு சிலை வைக்கணும். நாடு இங்கே முடியுதுங்கிறாங்கள்ல! இல்லை; இங்கே நம்ம தமிழ்நாட்டுலேர்ந்துதான் தொடங்குதுங்கிறதைச் சொல்ற மாதிரி அமையணும்! குமரியிலேர்ந்து வள்ளுவர் நேரா இமயத்தைப் பார்க்கிறார்!’’

கன்னியாகுமரி வள்ளுவர் சிலையைப் பார்க்கையில் அந்த உணர்வைப் பெற்றிருக்கிறேன். அங்கு கடலில் விவேகானந்தர் அமர்ந்து தியானித்த பாறை உண்டு. ‘இந்து - இந்தி - இந்துஸ்தான்’ ஒற்றைக் கலாச்சாரத் தூதர்களில் ஒருவராகப் பின்னாளில் இந்துத்துவச் சக்திகளால் விவேகானந்தர் உருமாற்றப்பட்டபோது, இந்தப் பாறையில் அமைக்கப்பட்ட நினைவிடம் அதற்கான சின்னங்களில் ஒன்றானது. அவர்கள் அளவில் நாட்டின் கடைக்கோடி எல்லையிலும் காவிக் கொடி நிலைநிறுத்தப்பட்டிருக்கும் இடம் அது. அலைகள் மோதும் கடற்பாறையில் பறக்கும் காவிக் கொடி, சங்கொலி, எங்கும் ஆக்கிரமித்திருக்கும் இந்தி - வடக்கத்திய கலாச்சாரம் இவை யாவும் சேர்ந்து அழுத்தத் தொடங்கும்போது, சற்றே தொலைவில் நிற்கும் வள்ளுவர் சிலை ஈர்ப்பு விசையாக மாறத் தொடங்கும். விவேகானந்தர் நினைவிடத்திலிருந்து படகு புறப்பட்டு வள்ளுவர் சிலை நோக்கிச் செல்கையில் இரண்டும் இரு வேறு அரசியல் பாதைகளை உலகுக்குச் சொல்வதைப் புரிந்துணர முடியும்.

சாதிய இந்தியச் சமூகத்தில் பெரியார் பேசிய சமூக மாற்றங்களை அரசியல் தளத்தில் செயலாக்கிய தளகர்த்தர், இந்த இந்திய ஒன்றியத்துக்குள் தமிழர்கள் உள்ளிட்ட பல்வேறு தேசிய இனங்களும் தங்களுடைய உரிமைகளை இழந்துவிடாமல் இருப்பதற்கு அண்ணா தந்துவிட்டுப்போன ‘மாநில சுயாட்சி’ முழக்கத்தை முன்னெடுத்த முன்னோடி என்பதையெல்லாம் தாண்டி, கருணாநிதிக்குத் திராவிட இயக்க வரலாற்றில் மிக முக்கியமான ஓரிடம் இருக்கிறது. தமிழ் அரசியலுக்கான ஒரு உயர் விழுமியக் குறியீட்டை அவரே நிறுவுகிறார். ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று சொன்ன வள்ளுவரைத் தமிழ் அரசியலின், ஞானத்தின் குறியீடாக கருணாநிதி நிறுவியது மிகப் பெரிய அரசியல் கனவு!

வள்ளுவரின் திருக்குறளை ஒரு அரசியல் பிரதியாக வாசிக்கும் பழக்கம் நம்மிடம் இல்லை. கருணாநிதியே அதைத் தொடக்கிவைக்கிறார். போர், வன்முறை, ஆக்கிரமிப்பு, ஆதிக்கம், பிரிவினை, வெறுப்புக்கு எதிராகப் பேசும் ‘திருக்குறள்’, அரசியல், இல்வாழ்க்கை, துறவு மூன்று புள்ளிகளைத் தொடுவது. அரசாட்சியின் பெயரால், ‘எது தேவையோ அதுவே தர்மம்!’ என்று எல்லாவற்றையும் தர்மமாக்கும் சாணக்கியனின் ‘அர்த்தசாஸ்திர’த்தோடும், இந்தியா முழுமைக்கும் சாணக்கிய நியாயங்கள் இன்று அடைந்திருக்கும் செல்வாக்கோடும் ஒப்பிடுகையில்தான் அரசியலுக்கான அறமாகவும் அன்பை வரையறுக்கும் திருக்குறளின் உன்னதமும், அது முன்வைக்கும் மாற்று உரையாடலும், கருணாநிதி அதைத் தூக்கிச் சுமந்ததன் நுட்பமான அரசியலும் புரியவரும். திராவிட இயக்கத்தின் வழி தமிழ் நிலம் இந்த மாபெரும் இந்திய தேசத்துக்கு நிச்சயமாக ஒரு மாற்று அரசியல் பார்வையைத் தொடர்ந்து வழங்கிவருகிறது. திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு, திராவிடக் கட்சிகள் ஆட்சியின் ஐம்பதாண்டு, திராவிட இயக்கத் தளகர்த்தர்களில் ஒருவரான கருணாநிதி சட்ட மன்றத்தில் நுழைந்த அறுபதாண்டு நிறைவுத் தருணத்தில் இந்தியா முழுமைக்கும் இங்கிருந்து செல்ல வேண்டிய ஒரு செய்தி உண்டென்றால், அது இதுவே: தமிழ் நிலம் தரும் உண்மையான கூட்டாட்சிப் பார்வையைப் பெறும் தேசிய கண்களை டெல்லி எப்போது பெறும்?

சுதந்திர இந்தியாவின் அரசியல் அரங்கில் முன்வைக் கப்பட்ட மாற்றுச் செயல்திட்டங்களில் மிகுந்த முக்கியத் துவம் வாய்ந்தது திமுகவின் ‘மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி!’ முழக்கமே ஆகும். கூட்டாட்சித் தத்துவத்தின்படி உருவெடுத்திருக்கும் நாடு என்றாலும், இந்நாட்டின் அரசியலமைப்புச் சட்டம் மாநிலங்களுக்குரிய நியாயங்களை, உரிமைகளை, அதிகாரங்களை வழங்கவில்லை. மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்கும் உரிமையிலும் பெரும்பான்மை இடங்களில் மக்கள்தொகை அடிப்படையில் பெரும்பான்மைவாதத்துக்கேற்பவே நம்முடைய அரசியலமைப்பு வளைகிறது. மாநிலங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாநிலங்க அவையில்கூட மாநிலங்களுக்குச் சமமான இடம் இல்லை; உத்தர பிரதேசத்துக்கு 31. தமிழ்நாட்டுக்கு 18. காஷ்மீருக்கு 4. பெரும்பான்மையான வடகிழக்கு மாநிலங்களுக்குப் பெயருக்கு 1. பெரும்பான்மை வாதத்தின் வழியில் ஒற்றை ஆட்சிக்கும் ஒருமைக் கலாச்சாரத்துக்கும் அடிகோலுவ தாகவே இன்றைய அமைப்பு இருக்கிறது.

தத்துவங்கள், பாதைகள் வெவ்வேறு என்றாலும், இந்திய வரலாற்றை அணுகும் கதையாடலில் காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மூன்றுமே டெல்லியி லிருந்தே இந்தியாவைப் பார்க்க விரும்புகின்றன. மாநிலங்களைக் கிளைகளாக அல்லாமல், அவற்றை இந்த இந்தியப் பெருமரத்தின் ஆன்மாவாகப் பார்க்கும் பார்வை யைத் திமுகவே முன்வைக்கிறது. அண்ணா வழிவந்த கருணாநிதி 1971-ல் டெல்லியின் முன்வைத்த ‘ராஜமன்னார் குழு அறிக்கை’ ஒரு மாற்று அரசியல் சட்டத்துக்கான முன்மொழிவு. 1974-ல் தமிழ்நாடு சட்ட மன்றத்தில் திமுக நிறைவேற்றிய மாநில சுயாட்சித் தீர்மானம், ஒரு மாற்று அரசியல் பாதைக்கான தொடக்கப் பிரகடனம்! இந்தியா என்ற வரையறைக்கு உட்பட்டு மாநிலங்களுக்கான, இங்கு வாழும் பல்வேறு தேசிய இனங்களுக்கான உச்சபட்ச அதிகாரப் பகிர்வுச் சாத்தியங்களைத் தமிழகம் முன்வைக்கிறது. அரசியலமைப்பில் மட்டும் அல்லாமல், சமூகத்தைப் பார்க்கும் பார்வையிலேயே டெல்லியிடம் இருந்து திட்டவட்டமான மாற்றுப் பார்வை ஒன்று தனக்கு இருப்பதையும் திராவிட இயக்கம் வழி தமிழகம் வெளிப்படுத்தியிருக்கிறது.

சாதியப் பாகுபாடுகள்தான் இந்தியாவின் தலையாய பிரச்சினை என்ற உண்மைக்குத் தொடர்ந்து இந்த நூறாண்டுகளாக முகம் கொடுத்திருக்கிறது திராவிட இயக்கம். இந்தியாவின் வெகுஜன அரசியல் தளத்தில் சாதிய மேலாதிக்கத்துக்கு எதிரான வெற்றிகரமான ஒரே அரசியல் இயக்கம் அதுவே. பிராமணியத்துக்கு எதிரான பிரகடனத்தோடு, ஒற்றைத்துவ அலையில் சிக்கிவிடாமல் ஒரு மாற்று அரசியல் கலாச்சாரத்தை முன்னெடுத்து இந்திய அரசியலில் வெற்றி பெற்றிருக்கும் ஒரு இயக்கம் வேறு இங்கு ஏது!

 இந்திமயமாக்கப்பட்ட சுதந்திர இந்தியாவின் தேசியவாதம் இந்த எழுபதாண்டுகளில் நாடெங்கிலும் உண்டாக்கியிருக்கும் மோசமான விளைவுகளில் ஒன்று, உள்ளூர் அடையாள அழிவு! விளைவாக சாதிய, மத அடையாளங்கள் பெற்றிருக்கும் கூடுதல் பலம்! இன்று தமிழ்நாட்டில் சாதி – மத வரையறைகளைத் தமிழர் என்ற அடையாளத்தால் கடக்க வாய்ப்புள்ள சாத்தியங்கள் ஏனைய பல மாநிலங்களில் கிடையாது. காரணம், அடிப்படைக் கட்டுமானங்களிலேயே அங்கெல்லாம் அழிமானம் நடந்திருக்கிறது. நாட்டிலேயே செல்வந்த பெருநகரமான மும்பை, இந்தி சினிமாவின் கோட்டை. சொந்த மொழி மராத்தி சினிமா ஒண்ட இடமின்றி நலிந்து நிற்கிறது. கொல்கத்தாவில் பாரம்பரிய வங்கத்து உணவைத் தரும் உணவகங்களைத் தேட வேண்டியிருக்கிறது. கன்னடம் பேசாதவர்கள் பெரும்பான்மையினர் ஆகிவிட்ட பெங்களூரு தன் அடையாளங்களைக் காத்துக்கொள்ளப் போராடிக்கொண்டிருக்கிறது. வட கிழக்கு மாநில நகரங் கள் தங்கள் மொழியைப் பாதுகாக்க ‘தாய்மொழியில் பேசுவோம்’ இயக்கம் நடத்திக்கொண்டிருக்கின்றன. சென்னையோ தனக்கே உரிய தனித்துவத்துடன் தன் காஸ்மோபாலிடன் தன்மையைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டிருக்கிறது. குழந்தைக்குப் பெயர் சூட்டு தல் முதல் சுயமரியாதைத் திருமணங்கள் வரை வாழ் வியலில் தமிழ் அடையாள மாற்றுக் கலாச்சாரத்தைத் திராவிட இயக்கம் வளர்த்தெடுத்ததற்கு இதில் முக்கிய மான பங்குண்டு. இந்தி ஆதிக்கத்துக்கு எதிராக உறுதி யாக நின்ற திராவிட இயக்கம் ஆங்கிலத்தை ஒரு மாற்றாக முன்னிறுத்தியதன் விளைவுகளைப் பொருளாதாரத் தளத்தில் அறுவடை செய்துகொண்டது!

ஒட்டுமொத்த இந்தியாவின் வளர்ச்சிப் போக்குக்கும்கூட, திராவிட இயக்கத்தின் வழி தமிழ்நாடு ஒரு மாற்று உரையாடலை முன்வைக்கிறது. ஆரம்பத்திலிருந்தே சாதி, வர்க்கம் இரண்டுக்கும் பெரிய முக்கியத்துவம் அளிக்காத ஒரு வளர்ச்சிக் கோட்பாட்டையே டெல்லி முன் எடுத்தது. காங்கிரஸ், பாஜக இரண்டுக்கும் மாற்றாக யோசித்தவர்கள் என்று கம்யூனிஸ்ட்களைக் குறிப்பிடலாம். வங்கத்தில், 34 ஆண்டு காலம் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது கீழ்நிலை வர்க்கத்தின் மீதான அக்கறை யோடு பொருளாதாரத்தை அணுகினார்கள். ஆனால், சாதியப் பாகுபாட்டுக்கு உரிய கவனம் அளிக்காத வர்க்க அடிப்படையிலான அணுகுமுறை இந்தியாவில் தோல்வியையே தழுவியது. சாதியச் சமூகமான இந்தியாவுக்கேற்ற வெற்றி கரமான ஒரு மாற்றுப் பொருளாதாரப் பார்வையை, சமூக நீதிப் பாதையைத் திராவிட இயக்கமே முன்வைத்தது. தீர்க்கமான கோட்பாடுகள் ஏதுமின்றி நடைமுறை அரசியலின் வாயிலாகவே இதைச் சாதித்தார்கள். இடஒதுக்கீட்டின் வழி வாய்ப்புகளையும் அதிகாரத்தையும் பரவலாக்கியவர்கள் வறுமையை எதிர்கொள்ள சமூக நலத் திட்டங்களைக் கருவியாகக் கையாண்டார்கள்.

சுதந்திர இந்தியாவில், திராவிடக் கட்சிகள் ஆட்சிப் பொறுப்பில் அடியெடுத்து வைப்பதற்கு முந்தைய 1960-களின் தொடக்கத்தில், நாட்டின் 85% மக்கள்தொகையைக் கொண்ட 12 மாநிலங்களின் சராசரி நபர்வாரி வருமானம் இது: மகாராஷ்டிரம் ரூ.409; வங்கம் ரூ.390; பஞ்சாப் ரூ.380; குஜராத் ரூ.362; தமிழ்நாடு ரூ.334; கர்நாடகம் ரூ.296; கேரளம் ரூ.270; ராஜஸ்தான் ரூ.263; மத்திய பிரதேசம் ரூ.252; உத்தர பிரதேசம் ரூ.252; ஒடிஸா ரூ.220; பிஹார் ரூ.215. ஐம்பதாண்டுகளுக்குப் பிந்தைய நிலை: கேரளம் ரூ.1,15,000; மகாராஷ்டிரம் ரூ.1,13,000; குஜராத் ரூ.1,09,000; கர்நாடகம் ரூ.1,08,000; தமிழ்நாடு ரூ.1,06,000; பஞ்சாப் ரூ.96,000; ராஜஸ்தான் ரூ.64,002, ஒடிஸா ரூ.54,000; மத்திய பிரதேசம் ரூ.44,000; வங்கம் ரூ.38,000; உத்தர பிரதேசம் ரூ.35,000; பிஹார் ரூ.25,000.

இந்தியப் பொருளாதாரத்தில் நான்கில் மூன்று பங்கு குஜராத்தி பொருளாதாரம் என்று சொல்லப்படுவதுண்டு. குஜராத், மகாராஷ்டிரம் போன்ற பாரம்பரிய வணிகச் சமூகங்களின் முதலீட்டுப் பலம் தமிழ்நாட்டுக்குக் கிடையாது. வங்கம், பஞ்சாப், கர்நாடகம் போன்று நீர், நில வளமும் கிடையாது. நல்ல மழை பொழிந்து, காவிரியில் உரிய பங்கு வந்தாலும் ஐந்தில் ஒரு பங்கு நீர்ப் பற்றாக்குறை மாநிலம் இது. உத்தர பிரதேசத்தைப் போல நாட்டுக்கு 8 பிரதமர்களை அனுப்ப மக்கள்தொகை வழி பெரும்பான்மைப் பலம் கொண்ட மாநிலமும் கிடையாது; நேர் எதிராக, தேசியக் கட்சிகளுக்கு அரசியல் பலன் இல்லா மாநிலம். ஆனால், முன்வரிசையில் தொடர்ந்து தக்கவைத்ததோடு, முதலிடத்துக்கும் தமக்குமான வித்தியாசத்தை வெறும் 7.8% ஆகவும் குறைத்திருக்கிறார்கள். மனித வளக் குறியீடுகளில் தமிழ்நாட்டோடு இன்று ஒப்பிடத்தக்க ஒரே மாநிலம் கேரளம். இயற்கை அளித்திருக்கும் அபரிமிதமான நீர், வன வளம்; வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மூலம் வந்தடைந்திருக்கும் அந்நியச் செலாவணி; ஜனத்தொகை இவற்றோடெல்லாம் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் நிகழ்ந்திருப்பதே பெரிய சாதனை!

இந்திய நிலப்பரப்பில் வெறும் 3.95% (1.3 லட்சம் சதுர கி.மீ.) மட்டுமே கொண்டது தமிழ்நாடு. ஒன்றிணைந்த ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம் இந்த மாநிலங்களோடு ஒப்பிடுகையில் பாதிகூடக் கிடையாது. மக்கள்தொகையில் அதிகம் என்றாலும் நிலப் பரப்பளவில், குஜராத், ஆந்திரம், கர்நாடகத்தைவிடவும் சிறியது. தமிழ்நாட்டின் இன்றைய வளர்ச்சி எப்படிச் சாத்தியமானது? எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சிப் பார்வை! விவசாயத்தைப் புறக்கணித்துவிடாத வளர்ச்சியை முன்னெடுத்தது தமிழகம். 1970-களின் தொடக்கத்திலேயே நில உச்ச வரம்புச் சட்டத்தின் மூலம் நிலப் பகிர்வைக் கொண்டுவந்தார் கருணாநிதி. விளைவாக, தமிழகத்தின் விவசாயிகளில் 98% பேர் சிறு விவசாயிகள் ஆயினர். நேரடிக் கொள்முதல் நிலையங்கள், இலவச மின்சாரம், உழவர் சந்தைகள், குறைந்த வட்டியிலான வங்கிக் கடன், சுமை பெருகிய காலத்தில் கடன் தள்ளுபடி, சிக்கனப் பாசனத் திட்டங்களில் கவனம் என்று விவசாயிகளுக்கு உகந்த சூழலை உருவாக்குவதிலும் திமுக தொடர்ந்து கவனம் அளித்தது.

பொருளாதாரத்தில் டெல்லிக்கு ஒரு மாற்றை வெளிக்காட்டும் முயற்சிகளை நிறுவனமயமாகவும் சுட்டிக்காட்ட முடியும். சுருக்கமான உதாரணம்: தமிழ்நாடு திட்டக் குழு. நாட்டிலேயே ஒரு மாநிலத்தில் திட்டக் குழு முதன்முதலில் அமைக்கப்பட்டது தமிழ்நாட்டில்தான். தேசிய அளவிலான திட்டக் குழு பெரிய திட்டங்களில் கனவுகளைப் பதித்தபோது, தமிழ்நாடு திட்டக் குழு சின்ன திட்டங்களிலும் சிறு நகரங்களை நோக்கித் தொழில் வளர்ச்சியைக் கொண்டுசெல்வதிலும் நம்பிக்கை வைத்தது. உலகமயமாக்கல் சூழலில் முந்திக்கொள்வதிலும் தமிழகம் முன்னே நின்றது. தகவல் தொழில்நுட்பத் துறைக்கான கொள்கையை நாட்டுக்கே முன்னோடியாக
1997-ல் கருணாநிதி கொண்டுவந்ததை ஒரு உதாரணமாகச் சொல்லலாம்.

தமிழகத்தின் வளர்ச்சிக்கான விளக்கத்தை உத்தர பிரதேசப் பின்னணியிலிருந்து அணுகினால், நம் பார்வை மேலும் தெளிவாகும். மத்திய அரசுக்கு மாநிலங்கள் அளிக்கும் வருமானத்தில் அதன் பங்களிப்பு வெறும் 1.2% என்ற ஒரு வரித் தகவல் போதும், எல்லா வகைகளிலும் பின்தங்கிய நாட்டின் பெரிய மாநிலமான அதன் கதையைச் சொல்ல! ஏன் இந்நிலை? சாதியும் நிலப் பிரபுத்துவமும் உறைந்த சமூக அடுக்குமுறை. ஒவ்வொரு காலகட்டத்திலும் விடாது எரியும் சாதி, மதக் கலவரத் தீ வளர்ச்சியை விரட்டுகிறது. உலகமயமாக்கல் காலகட்டத்துக்குள் இந்தியா நுழைந்த 1990-களில் உத்தர பிரதேசம் பாபர் மசூதி இடிப்புக் கலவரங்களை நிகழ்த்தி அரசியல் நிச்சயமற்ற பத்தாண்டுகளுக்குள் புகுந்ததை ஒரு உதாரணமாகச் சொல்லலாம்.

நாட்டிலேயே பின்தங்கிய இன்னொரு மாநிலமான பிஹாரின் கதை இன்னும் நம் பார்வையைத் துலக்கமாக்கக் கூடியது. ஒருசமயம் பிஹார் நண்பர்களுடன் உரையாடுகையில், அவர்கள் சொன்னது நினைவுக்குவருகிறது. “பிரிட்டிஷ் காலத்திலிருந்தே பிஹார் சுரண்டப்படுகிறது. எங்கள் கனிம வளங்கள் லண்டனுக்காகச் சூறையாடப்பட்டன. வளர்ச்சித் திட்டங்களிலோ புறக்கணிக்கப்பட்டோம். உங்கள் சென்னை மாகாணத்தில் நீதிக் கட்சி ஆட்சியைப் பிடித்து கல்வி, சுகாதாரத்தில் கவனம் செலுத்த ஆரம்பித்திருந்த 1920-களின் இறுதியில் எல்லாம் நாங்கள் மோசமான நிலையில் இருந்தோம். அன்றைக்கெல்லாம் வங்கத்தின் ஒரு பகுதியாக இருந்த பிஹாருக் குச் செலவழிக்கப்பட்ட தொகையானது பம்பாய் மாகாணத்தில் செலவழிக்கப்பட்ட தொகையில் ஆறில் ஒரு பங்கு மட்டுமே. இன்று ஒரு டெல்லிக்காரரின் ஒரு வருட வருமானத்தை அடைய, ஒரு பிஹாரி 9 வருடங்கள் உழைக்க வேண்டும். ஆனால், எங்களுக்கு என்று ஒரு தனித்த அடையாளத்தை நாங்கள் உணராததால் சுரண்டலையும் எம் மக்கள் என்றுமே தனித்து உணரவில்லை. ஏனென்றால், ‘இந்தி பேசுவதாலேயே நாங்கள் டெல்லிக்காரர்களாகவோ உயர் சாதியினராகவோ ஆகிவிட முடியாது’ என்பதைச் சொல்ல ஒரு அண்ணா எங்களிடம் இல்லை!”

தெற்கிலிருந்து பரவும் ஒளி எங்கும் வியாபிக்க வல்லது. கருணாநிதி நினைத்த மாதிரி கன்னியாகுமரியில் நிற்கும் வள்ளுவர் இமயத்தையே பார்க்கிறார். வலிமையான மாநிலங்கள்தான் வளமான இந்தியாவுக்கு வழிகோலும். அண்ணாவைப் பிரிவினைவாதியாக அல்லாமல், இந்தியா வில் துணைத் தேசியத்தின் பிதாமகனாகவும் ‘மத்தியில் கூட்டாட்சி - மாநிலத்தில் சுயாட்சி’ எனும் முழக்கத்தைப் பிரிவினைவாதமாக அல்லாமல், கூட்டாட்சிக்கான அடிப்படைத் தத்துவமாகவும் பார்க்கும் பார்வையை எப்போது டெல்லி வரித்துக்கொள்கிறதோ அப்போது தெற்கிலிருந்து, தமிழகத்திலிருந்து பரவும் அந்தச் சூரிய ஒளியை இந்தியா முழுமைக்கும் அது கொண்டுசேர்க்க முடியும்!

அக்.2017, ‘தி இந்து’

11 கருத்துகள்:

  1. அற்புதம்! அற்புதம்!! அற்புதம்!!! தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் கட்டாயம் படித்தாக வேண்டிய கட்டுரை!

    பதிலளிநீக்கு
  2. நல்ல கட்டுரை. பல விபரங்களை தெளிவாக வழங்கியுள்ளீர்கள். 'குஜராத் மாதிரி' என்பது தமிழகத்துக்கு தேவையற்ற ஒன்று என தெளிவாக விளங்குகிறது.

    பதிலளிநீக்கு
  3. Dear Samas,thanks for the informative article. It's true that Kalaigar Karunanithi did some good things for Tamilnadu. I see him as the last Dravian leader who did think of people's welfare and development. Even in his time, we have seen the deterioration of Dravidian leadership in the party. Today hardly do we see any credible leaders worthy of leading us further in Tamilnadu specially in Dravidian parties. Should we look for an alternative? I see that Seeman appears to be sharing the real vision of the early Dravidian leaders. Do you think that he will do today to Tamilnadu what the early leaders of Dravidian movement did. Yes, some of his ideas don't seem to gel with the electoral politics. It is because of this reason, I think that he is the worthy candidate to lead us.today, we need politicians who think beyond polls. SEEMAN is the LEADER.

    பதிலளிநீக்கு
  4. அண்ணாவின் சுயாட்சி கொள்கையை திராவிட இயக்கங்களே மறந்த நிலையில் இன்னும் எடுத்து சொல்பவர் சமஸ் மட்டுமே. உரக்க சொல்லுங்கள்..... இளைஞர்கள் அறியவேண்டும்.

    பதிலளிநீக்கு
  5. திரு,சமஸ் அவர்களே அவர் எத்தனையோ நல்லது செய்திருந்தாலும் , அவர் முனெடுத்த ஊழல்தான் முதலில் மனதில் நிழலாடுகிறது அவர் செய்த நன்மைகளை விட தீமைகளே அதிகம்

    பதிலளிநீக்கு