புதுமைப்பித்தன் நிகழ்ச்சியில் ஜெயலலிதா ஏன் பங்கேற்கவில்லை?


கேரளம் என்று மட்டும் இல்லை; படைப்பாளிகளைக் கொண்டாடும் விஷயத்தில், இந்தியாவிலேயே பல சமூகங்கள் நம்மைக்காட்டிலும் மேம்பட்ட நிலையில் இருக்கின்றன!

திருநெல்வேலி, வண்ணாரப்பேட்டையில் புதுமைப்பித்தன் வாழ்ந்த சாலைத் தெருவுக்குப் ‘புதுமைப்பித்தன் வீதி’ என்று பெயர் சூட்டியிருக்கிறது மாநகராட்சி நிர்வாகம். எழுத்தாளரும் நண்பருமான நாறும்பூநாதன், “இந்தப் பெயர்சூட்டலுக்குப் பின் 26 வருடப் போராட்டம் இருக்கிறது” என்று சொன்னார். “1990-ல் நெல்லையில் நடந்த தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்க மாநில மாநாட்டில், இதுபற்றி முதன்முதலில் தீர்மானம் நிறைவேற்றினோம். 2006-ல் அவரது நூற்றாண்டு கொண்டாடப்பட்டபோது ரூ.2-க்கு அவருடைய வரலாற்றைக் குறுவெளியீடாக அச்சிட்டு விநியோகித்து, இதுபற்றிய பிரச்சாரத்தை நடத்தினோம். அடுத்தடுத்து வந்த மாநகராட்சி நிர்வாகங்களிடம் வலியுறுத்திவந்த நிலையில், இப்போது மேயர் புவனேஸ்வரி காலத்தில் இது சாத்தியமாகி இருக்கிறது” என்றார். “இப்போதும் புதுமைப்பித்தன் வாழ்ந்த வீடு அங்கிருக்கிறதா?” என்று கேட்டேன். “அது இப்போது உருமாறிவிட்டது” என்றார் நாறும்பூநாதன்.

அண்ணா ஒருநாள் இந்தியாவுக்குத் தேவைப்படுவார்!


அன்றைக்கு கொல்கத்தாவிலுள்ள வங்க அகாடமியில் இருந்தேன். “தமிழக அரசுப் பெண் ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு இனி ஒன்பது மாதமாக உயர்த்தப்படும்” என்று அப்போதுதான் அறிவித்திருந்தார் முதல்வர் ஜெயலலிதா. நான் சந்தித்த நண்பர்கள் இதுபற்றிப்பேசலானார்கள். “இது முற்போக்கான முடிவு; இது மட்டும் அல்ல, நிறைய. விலையில்லாஅரிசி, பள்ளி மாணவர்களுக்கான சைக்கிள், மடிக்கணினி, ஒரு ரூபாய் இட்லி… தமிழ்நாடு தொடர்பாக மம்தா நிறையக் கேட்டுத் தெரிந்துகொள்கிறார். அவருக்குத் தமிழ்நாடு ஒரு முன்மாதிரி” என்றார்கள்.

கால் நூற்றாண்டு கம்யூனிஸ்ட்டுகள் ஆண்ட மாநிலம் சமூக நலத்திட்டங்களின் தாக்கங்களைப் பற்றி இப்போது நிறைய யோசிக்கிறது. இந்த ஆண்டு ஜெயலலிதாவின் சுதந்திர தின உரையும் அவர்களைக் கவனிக்க வைத்திருந்தது. “உண்மையான விடுதலை, பொருளாதாரச் சுதந்திரத்தில் இருக்கிறது” என்று தன்னுடைய உரையில் குறிப்பிட்டிருந்த ஜெயலலிதா, ‘பொதுச் சரக்கு, சேவை வரிகள் (ஜிஎஸ்டி)மசோதா’ விவகாரத்தில் நாட்டிலேயே தனித்து நிற்கும் முடிவை எடுத்ததையும் ஆச்சரியமாகப் பேசினார்கள். தொடர்ந்து நாடு முழுக்க அரசியலில் என்னென்னவோ மாற்றங்கள் நடந்தாலும் தமிழகம் மட்டும் எப்படி விடாமல் திராவிடக் கட்சிகளுடனேயே பயணிக்கிறது என்று கேட்டார்கள். அவர்களுடைய பெரிய சந்தேகம், “திராவிடக் கட்சிகள் சிந்தாந்த வலுவற்றவை. அவற்றுக்குத் திட்டவட்டமான கொள்கை ஏதும் இருக்கிறதா என்றுகூடத் தெரியவில்லை. எனினும், ஆச்சரியமான காரியங்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடக்கின்றனவே எப்படி?’”

தமிழகத்துக்கு வெளியே நம்மூர் பேச்சு அடிபடும்போது இப்படி திராவிட இயக்கத்தினரின் ‘சித்தாந்த வறட்சி’யைப் போய் விவாதம் தொடுவது இயல்பானது. நான் அவர்களிடம் சொன்னது: ‘‘சாமானிய மக்கள் ஒரு அரசியல் இயக்கத்திடம் அதிகாரத்தை ஒப்படைக்கையில், அதன் எதிர்காலச் சித்தாந்தங்களைப் பற்றி அல்ல; சமகாலத் தேவைகளுக்கு அது என்ன தீர்வுகளை முன்வைக்கிறது என்பதற்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஒவ்வொரு சமூகமும் அதன் தேவைக்கேற்ற ஆட்களை ஒவ்வொரு காலகட்டத்திலும் உருவாக்கிக்கொள்கிறது. திராவிட இயக்கம் தமிழ்ச் சமூகம் தன்னுடைய தேவையின் நிமித்தம் உருவாக்கிக்கொண்டது. சித்தாந்தங்கள் அல்ல; தமிழ்ச் சமூகத்தின் சமகால அபிலாஷைகளும் கலாச்சாரமுமே திராவிட இயக்கங்களின் போக்கைத் தீர்மானிக்கிறது. மக்கள் அமைதியாக இருந்தால், அவர்களே மது ஆலைகளை நடத்துவார்கள்; மக்கள் போராட்டம் நடத்தினால், அவர்களே மதுவிலக்கையும் கொண்டுவருவார்கள்.

அரசு உணவகத்தில் ஒரு ரூபாய்க்கு இட்லி கொடுக்கிறார்கள், ரேஷன் கடைகளில் விலையில்லாமல் அரிசி கொடுக்கிறார்கள், பள்ளி மாணவ - மாணவியருக்கு சைக்கிள்களும் மடிக்கணினிகளும் கொடுக்கிறார்கள், நாட்டிலேயே தமிழகத்தில் மட்டும் 69% இடஒதுக்கீடு நடைமுறையில் இருக்கிறது, ‘ஒரே நாடு - ஒரே வரி’ என்ற முழக்கத்தோடு நாடு முழுக்க ஒரே மாதிரியான வரிவிதிப்பு முறையை இந்திய அரசு கொண்டுவரும்போது தமிழகம் மட்டும் அதை எதிர்க்கிறது… இப்படி இன்றைக்குத் தமிழகம் சார்ந்து பெருமிதத்தோடு பேசப்படும் விஷயங்கள் ஒவ்வொன்றுக்கும் பின்னால் வரலாறு இருக்கிறது. திராவிட அரசியலின் முதல் ஆட்சிப் பிரதிநிதி அண்ணாவினுடைய அரசியல் தொடர்ச்சி இவை. அன்றாட அரசியலில் எவ்வளவு கீழே விழுந்தாலும், சில தருணங்களில் அவர்கள் தீர்மானிக்கும் அண்ணா பாணி முடிவுகள்  அவர்களை உயிர்ப்போடு அடுத்த கட்டத்துக்குக் கொண்டு சேர்த்துவிடுகிறது. தமிழ் மக்களின் அடியாதார இயல்பிலிருந்து பெரிய அளவில் விலகிவிடாமல், காலத்தோடு ஒன்றிப் பயணிக்கும் வரையில் திராவிட இயக்கத்தினரை எவரும் அசைக்க முடியாது!”

தமிழக அரசியலில் அண்ணாவுக்கு இன்றைக்கும் மதிப்பு இருக்கிறதா என்று அவர்கள் கேட்டார்கள். அண்ணாவின் மூன்று அரசியல் முழக்கங்களுக்கு இந்திய அரசியலில் என்றைக்கும் மதிப்பிருக்கும் என்று நான் சொன்னேன். 1. தேசியம் எனும் பெயரில் இன்றளவும் ஒட்டுமொத்த இந்தியாவையும் ‘இந்தி, இந்து, இந்தியா’ எனும் ஒற்றைக் கலாச்சாரத்தின் கீழ் வளைக்க நடக்கும் அரசியலைத் துல்லியமாக அம்பலப்படுத்தி, இந்திய ஒன்றியத்தின் உண்மையான நீட்சிக்காக அவர் இறுதிவரை குரல் கொடுத்த மாநிலங்கள் சுயாட்சி. 2.இருமொழிக் கொள்கை என்ற பெயரில், தாய்மொழியோடு அவர் துணை மொழியாக அவர் கொடுத்துச்சென்ற ஆங்கிலம். 3. வெகுஜன மயக்குத் திட்டங்கள் என்ற பெயரில் டெல்லியின் மேட்டுக்குடி வர்க்கம் திட்டமிட்டு கொச்சைப்படுத்திவரும் அவர் வழிகாட்டிய சமூகநலத் திட்டங்கள்.

அன்புதான் என்னிடமுள்ள ஒரே செய்தி - இரோம் ஷர்மிளா


உலகின் நீண்ட, 16 வருட உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து, மருத்துவமனையிலிருந்து இரோம் ஷர்மிளா திரும்பிய மறுநாள் அவரைச் சந்திக்கப் போயிருந்தேன். மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள ஜவாஹர்லால் நேரு மருத்துவமனையின் முன் நிறுத்தப்பட்டிருந்த காவல் படையினரின் எண்ணிக்கையில் பெரிய மாறுதல் ஏதும் ஏற்பட்டிருந்ததாகத் தெரியவில்லை. இங்குதான் ஷர்மிளா வைக்கப்பட்டிருந்தார். இதுவே நீண்ட காலம் அவரது சிறைக் கூடமாகவும் இருந்தது.

ஊரின் முக்கிய இடங்கள், கடை வீதிகள், சாலை முக்குகள் எங்கிலும் இந்தியப் படையினர் நிறைந்திருந்தார்கள். சாலையில் ரோந்து வாகனங்கள் வந்து சென்ற வண்ணம் இருந்தன. மாலை ஆறு மணிக்கெல்லாம் ஊரடங்கு சூழல் ஊரின் மேல் ஒரு கம்பளிப் போர்வைபோல மூடிவிடுகிறது. நிறுவனங்கள், கடைகள் அடைக்கப்பட்டு, ஆளரவமற்ற சாலைகளில் ரோந்து வாகனங்களும் படையினரும் மட்டுமே தென்படுகின்றனர். அங்கொன்றும் இங்கொன்றுமாக சின்ன பெட்டிக் கடைகள், உணவு விடுதிகள் மட்டும் திறந்திருக்கின்றன. கடைவீதிகளில் அரிதாக ஆட்கள் அவசர அவசரமாகக் கடந்து செல்கிறார்கள்.


அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஆயுதப் படையினருக்கான சிறப்பு அதிகாரச் சட்டம் அமலில் உள்ள மாநிலம் இது. சுதந்திர மணிப்பூர் போராட்டம், அது போக மாநிலத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட இனக் குழுக்கள் தமக்குள் நிகழ்த்திக்கொண்டிருக்கும் குழு மோதல்கள் என மணிப்பூர் கொந்தளிப்பில் இருந்த 1958-ல், இங்கு மத்திய அரசால் ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டம் அமலாக்கப்பட்டது. இந்தியாவில் மிச்சமிருக்கும் காலனியாதிக்கக் கால ஜனநாயக விரோத கருப்புச் சட்டங்களில் ஒன்று இது. ராணுவப் படையினர் எவர் வீட்டிலும் புகுந்து யாரையும் விசாரிக்கவும், கைதுசெய்யவும், சுட்டுக் கொல்லவும், எந்த விசாரணையும் இன்றி வருடக்கணக்கில் சிறையில் அடைத்து வைக்கவும் உதவும் சட்டம். பிரிவினைவாதிகளையும் எல்லைக்கு வெளியிலிருந்து ஊக்கம் பெறும் தீவிரவாதக் குழுக்களையும் ஒடுக்க இந்தச் சட்டம் தேவை என்கிறது இந்திய ராணுவம். மணிப்பூரிகள் இந்தச் சட்டத்துக்கு நிறைய பலி கொடுத்துவிட்டார்கள். ஆரம்ப நாளிலிருந்து, இச்சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்திப் போராடிவருகிறார்கள்.