நெருக்கடி காலத்தில் அரசியல் பேசக் கூடாதா?



இந்தியாவுக்கு வெளியே இப்போது அதிகம் அமெரிக்காவைக் கவனிக்கிறேன். குவிமையம் நியூயார்க். கரோனாவால் உலகிலேயே அதிகம் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் நாடு அமெரிக்கா என்றால், அமெரிக்காவிலேயே அதிகம் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் மாநிலம் நியூயார்க்; அதிகம் பாதிப்புக்குள்ளான நகரம் நியூயார்க் நகரம். கரோனா பாதிப்பில் அமெரிக்காவுக்கு அடுத்த நிலையிலுள்ள நாடான ரஷ்யாவைக் காட்டிலும் நியூயார்க்கின் எண்ணிக்கை அதிகம்.

நியூயார்க் என்ற சொல்லே வானளாவிய கனவுகளோடு பொருந்தியது. எத்தனை நள்ளிரவுக்குப் பின் ஒருவர் தூங்கச் செல்லும்போதும், அந்த வீட்டின் ஜன்னல் திரைச்சீலைக்கு வெளியே பிரகாச ஒளியில் நியூயார்க் நகரம் மிதந்துகொண்டிருக்கிறது. நியூயார்க் தூங்குவதே இல்லை. மேகத்தைக் கிழித்துக்கொண்டு வானத்தை முட்டிப்பார்க்க உயர்ந்துகொண்டேயிருக்கும் நியூயார்க்கின் கட்டிடங்கள் மனித குலத்தின் இடையறாத சாத்தியங்களைப் பிரகடனப்படுத்தியபடியே வளர்கின்றன. அமெரிக்காவின் முதல் தலைநகரமாக இருந்தது அதுதான்; வாஷிங்டன் பின்னாளில் அந்த இடத்தைப் பறித்துக்கொண்டாலும் இன்றைக்கும் நியூயார்க்கின் முக்கியத்துவம் குறைந்துவிடவில்லை.

அமெரிக்காவின் நிதித் தலைநகரம் நியூயார்க். இன்றைக்கு உலகின் பெரும் பணக்காரர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பதினைந்து நகரங்களில் வசிக்கின்றனர். அவர்களில் அதிகம் பேர் நியூயார்க்கிலேயே வசிக்கிறார்கள். உலகிலேயே அதிகமான தங்கத்தை இருப்பில்  வைத்திருக்கும் நகரம் அது. உலகின் புகழ்பெற்ற நகர அடையாளச் சின்னமான லண்டன் டவர் பாலத்தைவிட நியூயார்க்கின் புரூக்ளின் பாலம் பழமையானது என்று தன் நகரத்தை ஒரு நியூயார்க்கியர் அறிமுகப்படுத்தும்போது, அதில் வேறொரு சூசகச் செய்தி உள்ளடங்கியிருக்கிறது. இந்தப் பூமியிலேயே மேம்பட்ட வசதிகளையும், பாதுகாப்பான சூழலையும் தங்கள் நகரில் உருவாக்கியிருப்பதாகவும் அது ஒரு ஒரு நவீன தொன்மம் என்றும் நியூயார்க்கியர்கள் நீண்ட காலமாக நம்பிவருகிறார்கள். அந்த நியூயார்க் கரோனாவின் முன் உறைந்திருக்கிறது. நிரம்பி வழியும் நியூயார்க்கின் மருத்துவமனைகள் புதிய நோயாளிகள் எனும் செய்தி கேட்டாலே மலைக்கின்றன. பெரிய பெரிய சவக்குழிகளுக்குள் உயிரிழப்போர் சடலங்களின் சவப்பெட்டிகள் அப்படியே தொகுப்பாக மண்ணுக்குள் இறங்குகின்றன.

நான் கரோனாவை அறிவியல்ரீதியாகப் புரிந்துகொள்வதற்கு இணையாக மானுடரீதியாக உணர்ந்துகொள்வதற்கும் முயற்சிக்கிறேன். அமெரிக்கா மீதான, நியூயார்க் மீதான கரோனாவின் அடி ஒட்டுமொத்த மனிதகுலத்தின் அகங்காரம் மற்றும் பேராசை மீதான அடியாகவும் எனக்குத் தோன்றுகிறது. தேச எல்லைகளுக்கு அப்பாற்பட்டு, அமெரிக்கா இன்று பல நாடுகளின் கனவு; நியூயார்க் பல நகரங்களின் கனவு. நாமும் அப்படியாகத்தான் ஆசைப்படுகிறோம். கடவுள் எச்சரிப்பதுபோலத் தோன்றுகிறது. கரோனாவைக் கிருமியாகப் புரிந்துகொள்வதோடு மனிதகுலம் அதை இப்படியும் அர்த்தப்படுத்திக்கொள்ள முற்பட்டால், எதிர்காலத்தில் நமக்குக் கூடுதலான பலன்கள் கிட்டும் என்று தோன்றுகிறது.

எனக்கு நியூயார்க்கை வேறு சில விஷயங்களுக்காகப் பிடிக்கும். பன்மைத்துவம் - ஜனநாயகம். உலகிலேயே அதிகமான மொழிகளைப் பேசுவோரைக் கொண்ட நகரம் அது; கிட்டத்தட்ட சரிபாதி வீடுகளில் ஆங்கிலம் அல்லாத மொழியே தாய்மொழி. தனிநபர் சுதந்திரத்தை அது தூக்கிப் பிடிக்கிறது. பெண்கள் எந்த இடத்துக்கும் எந்த உடையிலும் செல்லும் உரிமையைச் சட்டபூர்வமாகவே பாதுகாக்கும் நகரம் அது; மேலாடை இல்லாமலும்கூட நியூயார்க்கில் ஒருவர் பொது இடத்துக்கு வர முடியும். உலகிலேயே அதிகாரம் மிக்க அதிபரைக் கொண்ட நாடு என்றாலும், கூட்டாட்சிக்கு அமெரிக்கா கொடுக்கும் முக்கியத்துவத்தை எப்போதுமே நியூயார்க் உயிர்த்துடிப்போடு பாதுகாத்திருக்கிறது; இந்த கரோனா காலத்தில் ஜனநாயகத்தின் இயக்கமும் கூட்டாட்சியின் உத்வேக ஆற்றலும் அங்கு மேலும் கூடியிருக்கின்றன.

இந்தியாவைப் போலவே அமெரிக்காவிலும் கரோனா நெருக்கடி மாநில அரசுகள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்கள் மீது பல புதிய பொறுப்புகளையும் பெரும் நிதிச் சுமையையும் கவிழ்த்திருக்கிறது. இந்தியாவில் பிரதமர் அலுவலகம் சக்தி மிக்கதாகவும், மாநிலங்கள் பலவீனமானவையாகவும் இந்த ஊரடங்கு காலத்தில் காட்சியளிக்கின்றன. பிரதமர் தொலைக்காட்சியில் உரையாற்றுகிறார்; எவரும் அவரைக் கேள்வி கேட்கும் வழியே இல்லை. ஊடகங்களின் குரல் அதிகார அழுத்தத்தில் புதைகிறது. அமெரிக்காவில் நேர் எதிராக மாநிலங்கள் மற்றும் உள்ளாட்சிகளின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. அன்றாடம் ஊடகச் சந்திப்புகளை எதிர்கொள்ளும் அதிபர், சில நேரங்களில் பத்திரிகையாளர்களின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் பாதியில் ஊடகர்கள் சந்திப்பை முடித்துக்கொண்டு வெளியேறுகிறார். ஒரு குடிமைச் சமூகமாக இந்தியா இன்னும் முதிரவில்லை; ஜனநாயகம் இன்னும் இந்தியக் கலாச்சாரத்தின் இயல்பான ஒரு பகுதியாக வளரவில்லை என்ற எண்ணம் நாளுக்கு நாள் வலுவடைகிறது. இந்த கரோனா நாட்களில் நியூயார்க் மாநில ஆளுநர் ஆண்ட்ரூ குவாமோ - நியூயார்க் நகர மேயர் பில் டி பிளேசியோ - அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மூவர் இடையே நடக்கும்... தொடர்ந்து நடந்துவரும் விவாதங்களை இந்தியா கவனிக்க வேண்டும்.

தொடக்கம் முதலாகவே அதிபர் ட்ரம்ப் கரோனா தாக்குதலை எதிர்கொள்ளத்தக்க உரிய உத்திகளை வகுக்கவில்லை; மாநிலங்களுக்குத் தேவையான உதவிகளை அளிக்கவில்லை என்பதை வெளிப்படையாகப் பேசிவருகிறார் குவாமோ. ‘நியூயார்க் மாநிலத்தில் கரோனா பரவும் வேகத்துக்கு அது தயாராக வேண்டும் என்றால், சுமார் ஒன்றரை லட்சம் படுக்கைகள் நமக்கு வேண்டும்; ஆனால், அதில் மூன்றில் ஒரு பங்குதான் இப்போது இருக்கிறது; நாங்கள் நாற்பதாயிரம் வென்டிலேட்டர்கள் கேட்டால் கூட்டாட்சி அரசு வெறும் நானூறு வென்டிலேட்டர்களை அனுப்புகிறது; இதெல்லாம் போதாது’ என்றார் குவாமோ. அவருடைய வலியுறுத்தலின் விளைவாக, இரண்டாயிரம் படுக்கைகளைக் கொண்ட கடற்படைக் கப்பலை அனுப்பிவைத்தார் ட்ரம்ப். கூடவே இரண்டு லட்சம் கோடி டாலர்களையும் ஒதுக்கினார். ‘நன்றி; ஆனால், இதெல்லாம் காணவே காணாது’ என்றார் குவாமோ. ராணுவ உற்பத்திச் சட்டத்தை அமல்படுத்தி, கிருமியை எதிர்கொள்வதற்கான மருத்துவச் சாதனங்களை ஆயிரக்கணக்கில் உடனடியாகத் தயாரிக்க வேண்டும் என்றார் அவர்.

கரோனாவை எதிர்கொள்வதற்கான மருத்துவச் சாதனங்களை மாநிலங்கள் நேரடியாகக் கொள்முதல்செய்வதை அதிபர் ட்ரம்ப் விரும்பவில்லை. மாநிலங்களைக் குற்றஞ்சாட்டும் வகையிலும் அவர் பேசினார். குவாமோ வெடித்துவிட்டார். “அமெரிக்காவில் நடப்பது முடியாட்சி அல்ல; குடியாட்சி. ட்ரம்ப் தன்னைப் பேரரசராகக் கருதிக்கொண்டு எங்களுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டாம். அமெரிக்கா என்பது மாநிலங்கள் இணைந்து ஏற்படுத்திய கூட்டமைப்பு. இங்கே மத்திய அரசுக்கு ராணுவம், வெளியுறவு, வெளிவர்த்தகம் ஆகிய துறைகளில் சில தனி அதிகாரங்களை அரசமைப்புச் சட்டம் அளித்துள்ளது, அவ்வளவுதான். அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெறாத, புதிதாகத் தோன்றக்கூடிய பிரச்சினைகளுக்கு சூழல்களுக்கு ஏற்ப முடிவெடுக்கும் அதிகாரம் மாநிலங்களுக்குத்தான் தரப்பட்டிருக்கிறது. இதைப் புரிந்துகொள்ளாமல் ட்ரம்ப் அரசு செயல்படக் கூடாது” என்றார் குவாமோ.

நிதி நெருக்கடியை எதிர்கொள்ள மாநிலங்கள் சிறப்பு நிதி கேட்பதைக் குடியரசுக் கட்சி - ஜனநாயகக் கட்சி இடையிலான வேறுபாடாகச் சித்திரித்தார் ட்ரம்ப். நிதியுதவிகளில் அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு ஆர்வம் இல்லை என்று சொன்ன ட்ரம்ப், ‘நிதியுதவி கோரும் மாநிலங்களாக நீல மாகாண அரசுகள்தான் (ஜனநாயகக் கட்சியினர் ஆள்பவை) இருக்கின்றன; சிவப்பு மாகாண அரசுகள் அப்படிக் கேட்கவில்லை; இது அவர்களுடைய அதிர்ஷ்டமா அல்லது திறமையா என்று எனக்குத் தெரியவில்லை; ஆனால், அவை வலுவாக இருக்கின்றன’ என்று கூறினார். அமெரிக்காவின் ஐம்பது மாநிலங்களுக்கும் மொத்தமாக ஒரு ட்ரில்லியன் டாலர் ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் பொருட்படுத்தவில்லை. குவாமோ பொறுப்புணர்வோடு இதற்குப் பதிலடி கொடுத்தார். “இது சிவப்பா, நீலமா பிரச்சினை இல்லை. ஜனநாயகக் கட்சியினரையோ அல்லது குடியரசுக் கட்சியினரையோ மட்டும் கரோனா வைரஸ் தேர்ந்தெடுப்பதில்லை; எப்படியாயினும் அது கொல்வது அமெரிக்கர்களை!’’ என்ற குவாமோ, நியூயார்க் மாநிலம் பெறுவதைக் காட்டிலும் கூடுதலாக 29 பில்லியன் டாலர் வரியைக் கூட்டாட்சி அரசுக்குத் தருவதைச் சுட்டிக்காட்டவும் தவறவில்லை. “கூட்டாட்சி அரசிடமிருந்து வரும் நிதியுதவியை ‘பெய்ல்அவுட்’ என்று நான் கூற மாட்டேன். அது மிகைப்படுத்தல். கரோனாவால் பாதிப்புக்குள்ளானதால் மாநிலங்கள் நிதி கேட்கின்றன. ஏனெனில், மாநிலங்கள்தான் இந்த நாட்டை உருவாக்கியிருக்கின்றன!” அமெரிக்காவில் ‘குவாமோ அதிபராக வேண்டும்’ எனும் வாசகங்களைத் தாங்கிய சட்டைகள் இப்போது சகஜமாகின்றன.

குவாமோ இப்படிப் பேசினால், நியூயார்க் நகர மேயர் பிளேசியோ அவர் பங்குக்கு ட்ரம்பைக் காய்ச்சினார். “நியூயார்க்கைக் காக்கப்போகிறீர்களா, அழியட்டும் என்று கைவிடப்போகிறீர்களா?” என்று கேட்டார் பிளேசியோ. முன்னதாக கரோனா எதிர்கொள்ளல் நிதியாக ட்ரம்ப் விடுவித்த இரண்டு லட்சம் கோடி டாலர்களில் நியூயார்க் நகர நிர்வாகத்துக்கு 140 கோடி டாலர்கள் மட்டுமே கிடைத்தது. கூட்டாட்சி தரும் நிதி போதாது; உள்ளாட்சிக்குக் கூடுதல் நிதி வேண்டும் என்ற மேயர்களின் கோரிக்கைக்கு ட்ரம்ப் செவிசாய்க்கவில்லை. “என்னானது ட்ரம்ப்? எப்போதும் பேசிக்கொண்டேயிருப்பீர்களே, உங்களுடைய நாக்கை யாராவது கட்டிப்போட்டுவிட்டார்களா, பதிலே இல்லை!” என்று கேட்டார் பிளேசியோ.

நியூயார்க்கின் நகர்வுகள் ஏனைய மாநிலங்களுக்கும் உத்வேகம் அளிக்கின்றன. நாட்டிலேயே பெரியதான கலிபோர்னியா மாநிலத்தின் ஆளுநர் கரோனா களேபரங்கள் இடையே கலிபோர்னியாவை ‘தேசிய அரசு’ என்றே அறிவித்தார். ட்ரம்ப் அரசு மாநிலங்களுக்கு மருத்துவச் சாதனங்களை அனுப்புவதில் காட்டிய மெத்தனத்தைச் சாடியவர், நேரடியாகவே வெளிநாடுகளிலிருந்து அவற்றைத் தருவிக்க ஒப்பந்தங்களுக்கு உத்தரவிட்டார். அதற்கான முன்னோட்டமாக இந்த அறிவிப்பை வெளியிட்டார். பொதுவாக, ஒரு மாநிலம் தன்னைத் தேசிய அரசாக அறிவித்துக்கொண்டால், அதை உள்நாட்டுப் போருக்கான அறிவிப்பாகத்தான் கருத வேண்டும். ஆனால், இந்த அறிவிப்பு அப்படிப் பார்க்கப்படவில்லை; மாநில மக்களின் நலன் கருதி எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைச் சுதந்திரமாக, விரைவாக எடுக்க வேண்டிய அவசியத்தைச் சுட்டும் பிரகடனமாகச் சரியாகவே புரிந்துகொள்ளப்பட்டது.

அரசுகளும் ஆட்சியாளர்களும் மட்டும் அல்ல; எல்லோரையும் எல்லோருமே கேள்வி கேட்கிறார்கள். ட்ரம்புக்கு எதிராக இவ்வளவு பெரிய பிரகடனத்தை வெளியிட்ட கலிபோர்னிய அரசை ஒரு தொழில்முனைவோரால் மிரட்ட முடிகிறது. தொழில்நுட்ப நிபுணரும் உலகின் முன்னணி மின்சார கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க் கலிபோர்னியாவில் ஊரடங்கு நீடிப்பதன் விளைவாக, ஆலைகள் இயங்க முடியாத சூழலுக்காக கலிபோர்னியா அரசைக் கடுமையாகச் சாடினார். ‘இதனாலேயே கலிபோர்னியாவை விட்டு நிறுவனம் வெளியேற வேண்டியிருக்கும்’ என்று அரசை மிரட்டியவர், “ஊரடங்குக்கான அரசின் முடிவு ஒரு பாசிஸ நடவடிக்கை” என்றார். ஆலைகளை இயக்குவதற்காக நீதிமன்றத்தில் அரசுக்கு எதிராக வழக்குகளையும் தொடுத்திருக்கிறார்.

இந்தியாவில் நடப்பது என்ன? கரோனா காலத்தில் அரசை யாரும் கேள்விக்குள்ளாக்கக் கூடாது; ஒரு நெருக்கடியான தருணத்தில் அரசை விமர்சிப்பது - அரசியல் செய்வது முறையற்றது என்கிறார்கள். இது அரசியலற்றதன்மையைத் தூக்கிப் பிடிக்கும் வழமையான பாட்டுதான். ஒரு அரசியல் கட்சியையோ, அரசியலரையோ பார்த்து, ‘இந்தச் சமயத்திலும் அரசியல் செய்கிறார்கள்’ என்று பேசுவதைக் காட்டிலும் அபத்தம் இல்லை; அவர்களுடைய அடிப்படையான பணியே அதுதான்; அரசியல்செய்வதற்காகத்தான் அவர்கள் இருக்கிறார்கள்.

நெருக்கடியான தருணங்களில் அரசியலின் தேவை மேலும் கூடுதலாகிறது. ஏனென்றால், ஆட்சியாளர்களின் சிறு தவறும் பெரும் விளைவுகளை அப்போது உருவாக்கிவிடும். ஊரடங்கால் நாடே முடங்கிக்கொண்டிருந்த நாட்களில் ஒட்டுமொத்த மாநிலங்களுக்கும் சேர்த்து துரித பரிசோதனைக் கருவிகளை வெளிநாட்டிலிருந்து வாங்குவதாக அறிவித்தது ஒன்றிய அரசு. கருவிகள் நாடு வந்து சேர்ந்தபோது அத்தனையும் பயனற்றவை; அவற்றால் சரியான பரிசோதனை முடிவுகளைத் தர முடியவில்லை என்பது தெரியவந்தது. ஒரே தேசம், ஒரே முடிவு, சர்வநாசம். எதிர்க்கட்சிகளோ, ஊடகங்களோ முன்கூட்டி இது தொடர்பில் விவாதிப்பது எப்படித் தவறாகும்? சர்வதேசப் புகழ்பெற்ற ‘புல்காரி பிராண்ட்’ மூக்குக் கண்ணாடிகள், ‘மொவாடோ’ கைக் கடிகாரங்கள், ‘மாண்ட்பிளாங்க்’ பேனாக்களோடு தன்  அடையாளத்தைச் செதுக்கிக்கொண்ட பிரதமர், இன்று சுயசார்பை வலியுறுத்துகிறார். உடனே, நாடு முழுக்கவுள்ள ஆயுதப் படையினருக்கான கடைகளில் இனி வெளிநாட்டுப் பொருட்கள் விற்கப்படாது என்கிறார் அமைச்சர். உலகிலேயே அதிகமான ஆயுதங்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதிசெய்யும் நாடு இந்தியா எனும் செய்தி மண்ணுக்குக் கீழ் புதைக்கப்பட்டாலும் துடிக்கிறது. ஊழியர்களின் சம்பளத்தில் கை வைக்கும் அளவுக்குக் கடுமையான நிதி நெருக்கடி அரசுக்கு  உருவாகியிருக்கும் இந்தச் சூழலிலும் அரசின் ஆயுதக் குவிப்புப் பார்வையில் சிறு மாற்றம்   உருவாகவில்லை. நாடாளுமன்றத்தில் விவாதித்து எடுக்கப்பட வேண்டிய பல முடிவுகளை இந்த நெருக்கடியான காலகட்டத்தைப் பயன்படுத்தி தன்னிச்சையாக வேக வேகமாக எடுத்துவருகிறது ஒன்றிய அரசு.  இதுவரையிலான நம்முடைய பல பார்வைகளில் உள்ள ஓட்டைகளை அம்பலமாக்குகிறது கரோனா. இப்போது அரசியல் பேசாமல் எப்போது பேசுவது?

அரசியலற்ற நிலைப்பாடு என்பதும் மறைமுகமாக ஒரு அரசியல் நிலைப்பாடுதான். ‘இப்போதைய நிலைமைகள் அப்படியே நீடிக்கட்டுமே!’ என்பதுதான் அது வலியுறுத்தும் மௌனம் உள்ளடக்கியிருக்கும் செய்தி. அனுகூலத்தை உள்ளடக்கிய அச்சம்தான் அதன் மூலசக்தி. சமூகத் தீமைகளைக் கண்டுகொள்ளாமல் இருக்கப் பழகும் இந்த மௌனம் ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு அப்பாற்பட்டதல்ல. இன்றைய அரசியல் சூழல் அப்படியே நீடிப்பதன் வழி ஒருவருக்குக் கிடைக்கும் சௌகரியங்களை, லாபங்களை இழக்க அவர் விரும்பவில்லை என்பதே ஒருவர் ‘ஸ்டேட்டஸ்கோயிஸ்ட்’ ஆக இருக்க முடிவெடுப்பதன் பின்னுள்ள சூட்சமம்.

சமூக, பொருளாதார, அரசியல் தளங்களில் நடக்கும் சகல அநீதிகள், அடக்குமுறைகள், ஏற்றத்தாழ்வுகள், பாரபட்சங்கள் இவ்வளவையும் மறைமுகமாக அங்கீகரிப்பதன் வழி பயனடையும் ஒருவரே ‘அரசியலற்றவர்’ என்று தன்னைச் சொல்லிக்கொள்ள முடியும். நிச்சயமாக இப்படிச் சொல்லிக்கொள்ள ஒருவருக்கு முன்னுரிமை - சலுகை தேவைப்படுகிறது. பல நாடுகளில் அது வர்க்கச் சலுகை; இந்தியாவில் அது சாதிச் சலுகையும்கூட. ஜனநாயகத்தை ஜனநாயகத்தின் பெயராலேயே கொச்சைப்படுத்தி அழிப்பதுதான் இது.

நெருக்கடியான காலங்கள் நல்ல தலைவர்களையும் மோசமான தலைவர்களையும் மட்டும் அல்ல; சமூகங்களாக நாம் எப்படியானவர்களாகக் கடந்த காலத்தில் உருவாகிவந்திருக்கிறோம், நம்முடைய உள்ளடக்கம் என்னவென்பதையும் சேர்த்தே அடையாளம் காட்டுகின்றன. ஜனநாயகரீதியாக நம்முடைய உள்ளடக்கம் என்ன? கரோனா மிக ஆழமான உளப்பகுப்பாய்வை இந்தியச் சமூகத்திடம் கோருகிறது.

-  மே, 2020, ‘இந்து தமிழ்’

3 கருத்துகள்:

  1. ஜனநாயகத்தினாலும், மொத்த நாட்டை ஆளும் ஒரே அரசாக இல்லாமல் சந்தை பொருளாதாரமாக மாநிலங்களை அதிகார மையங்களாக வளர்த்ததனால் அமெரிக்கா கொடுக்கும் விலையை நீங்கள் கணக்கில் கொள்ளவில்லை. தடி எடுத்தவனெல்லாம் தண்டல் என்று இருப்பதால், கரோனா இவ்வளவு பரவியும் மூன்று மாநிலங்களில் எந்த கட்டுப்பாடும் இதுவரை இல்லை. டைசன் மீட் ப்ராசஸிங் பிளான்டில் 58% பணியாளர்களுக்கு கரோனா இருந்தும் இன்னும் வேலை செய்கிறார்கள். சந்தை பொருளாதாரம் படுத்தும் பாடு இது. சீனாவிலிருந்து மாஸ்க் வாங்க போட்டி போடுகிறது மாநிலங்கள். எந்த மாநிலம் அதிக விலை கொடுக்க தயாராக இருக்கிறதோ அதற்க்கே மாஸ்க். ட்ரம்ப் அடிக்கடி டிவியில் வருகிறார். ஒரேடியாக புளுகுகிறார்.

    அமெரிக்கா அவ்வளவு ஒன்றும் சிறந்த நாடல்ல என்று உலகத்துக்கு காட்டியது கரோனா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மருத்துவ சாதனங்களை federal government வாங்கி மாநிலங்களுக்கு அளிக்க வேண்டும். தற்போதய நடைமுறையில் மாநிலங்களுக்கிடேயே கொள்முதல் செய்வதில் போட்டி இருப்பதால் அனாவசிய விலை உயர்வு ஏற்படுவதாக குவமோ உள்பட அனைத்து மாநில ஆளுநர்களும் குற்றம் சாட்டினார். தகவல் பிழையா என சரி பார்க்கவும்

      நீக்கு