சசிகலாவை நீக்கிவிட்டால் அதிமுக பரிசுத்தமாகிவிடுமா?


நேரலைச் செய்தியில் பார்த்தேன், 'ஜெயா பிளஸ்' தொலைக்காட்சியில், எவ்வளவு சுமுகமாகவும் இயல்பாகவும் அதிகார மாற்றம் நடக்கிறது அதிமுகவில்! காலைச் செய்தியில், 'வி.கே.சசிகலா' ஆக இருந்தவர், மாலைச் செய்திக்குள் 'சின்னம்மா' ஆகிவிட்டார்! ஜெயலலிதா மறைவுக்குப் பின்னரும் அதிமுகவினரிடம் தொடரும் கச்சிதமான ரகசியத்தன்மை உள்ளபடியே வியக்க வைக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை தேர்ந்தெடுக்கப்பட்ட விதமாகட்டும், அடுத்தடுத்த நாட்களில், கட்சியின் மூத்த தலைவர்கள் போயஸ் தோட்ட இல்லத்தில் வரிசையாக அணிவகுத்து நின்றதாகட்டும், சசிகலாவிடம் தலைமைப் பதவியை ஏற்கச் சொல்லி அவர்கள் மன்றாடியதாகட்டும், ஒரு துறவியைப் போல அவர்களுக்கு சசிகலா முகங்கொடுத்ததாகட்டும்; ஜெயலலிதா சமாதியில் மலர் தூவிவிட்டு வரிசையாக அதிமுக தலைவர்கள் சசிகலா காலில் விழுந்து எழுந்து தங்கள் புதிய தலைமையை உலகுக்கு உணர்த்தியதாகட்டும்; இன்றைய அதிமுகவுக்கு சசிகலாவே பொருத்தமான தலைவராகத் தோன்றுகிறார்.

அதிமுக நிர்வாகிகள் பலரிடமும் பேசினேன். சசிகலா தலைமையேற்பதில், அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனென்றால், அதிமுகவுக்கு வெளியிலிருந்து, சாமானியப் பார்வைக்குத் தோற்றமளிக்கும்படி சசிகலா இதுவரை வெறுமனே ஜெயலலிதாவுக்குத் தனிப்பட்ட தோழியாக மட்டும் இருந்திருக்கவில்லை. ஜெயலலிதா அதிமுகவின் பொதுச்செயலாளராகப் பதவியேற்றது முதலாக அவருடைய மறைவு வரைக்கும் கட்சியில் நிர்வாகிகள் நியமனம், வேட்பாளர்கள் தேர்வு, அமைச்சரவை நியமனம் எல்லாவற்றிலும் சசிகலாவின் பங்களிப்பு இருந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், தமிழக முதல்வர் முதல் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் வரை இன்றைய அதிமுக நிர்வாகிகளில் பலர், சசிகலாவாலும் அவருடைய சுற்றத்தாராலும் இந்த இடத்துக்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள் அல்லது இந்த இடத்தில் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் எப்படி சசிகலாவையும் அவருடைய சுற்றத்தாரையும் எதிர்ப்பார்கள்?

தொண்டர்கள் கொந்தளிக்கிறார்கள். ஒரு கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்களைக் கொண்ட, ஏழு கோடி மக்களை வழிநடத்தும் நிலையிலுள்ள ஒரு பேரியக்கம் இப்படி ஒரு முடிவைத் தேடிச் செல்வது அக்கட்சிக்கு அப்பாற்பட்டும் பலரைப் பாதித்திருப்பதை உணர முடிகிறது. ஆனால், தலைமை வகுப்பதே விதி என்று பாரம் சுமந்த ஒரு இயக்கம் எப்படியும் ஒருநாள் இப்படி ஒரு அமிலச் சோதனைக்கு முகங்கொடுத்துதானே ஆக வேண்டும்? ஒருவகையில், பொதுமக்களுக்கும் அதன் எளிய தொண்டர்களுக்கும் வெளிக்காட்டிவந்த அதிமுகவின் பல வேஷங்கள் சசிகலா மூலம் இன்று கலைகின்றன.

ஜெயலலிதாவின் அரசியலுக்கு, அவருடைய புனித பிம்பத்தைத் தூக்கிப்பிடிக்க கூடவே எதிர்மறைப் பிம்பங்கள் எப்போதும் அவருக்குத் தேவைப்பட்டன. கட்சிக்கு வெளியே கருணாநிதியை எப்படி எதிர்மறைப் பிம்பமாக அவர் கட்டமைத்தாரோ, அதேபோல் கட்சிக்கு உள்ளேயும் ஒரு எதிர்மறைப் பிம்பமாக சசிகலாவின் அனுமதியுடனே அவரைப் பயன்படுத்திக்கொண்டார் என்று கருத இடமுண்டு. காலம் முழுவதும் தனக்கு எதிராக சதி நடக்கிறது என்று எவர் பெயரையாவது உச்சரித்துவந்தவர் ஜெயலலிதா. தன்னுடைய வளர்ச்சியைத் தடுக்கிறார் என்று எம்ஜிஆரைப் பற்றியே ராஜீவ் காந்திக்குக் கடிதம் எழுதியவர். எப்போதெல்லாம் தன்னைச் சுத்திகரித்துக்கொண்டவராகக் காட்டிக்கொள்ள முயன்றாரோ, அப்போதெல்லாம் சசிகலா மீது நடவடிக்கைகள் எடுப்பதைப் போல அவர் காட்டிக்கொண்டார்.

உச்சபட்சமாக 1996, 2011 இரு தருணங்களிலும் சசிகலா கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அவர் என்ன காரணங்களின் அடிப்படையில் நீக்கப்பட்டார், என்ன நியாயங்களின் அடிப்படையில் மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டார்? நமக்குத் தெரியாது. பெரும்பாலும் ஒரு நிர்வாகியாக ஜெயலலிதா நெருக்கடிக்குள்ளாகும் தருணங்களிலேயே சசிகலா குடும்பத்தார் மீதான நடவடிக்கைச் செய்திகள் வெளியாயின. இந்த நடவடிக்கைகள் எந்த அளவுக்கு உண்மையானவை? நமக்குத் தெரியாது. இந்த நடவடிக்கைகள் உண்மையென்றால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆட்கள் அடுத்தடுத்து தவறிழைத்து இப்படி நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டபோதும், எப்படி அதே குடும்பத்து ஆட்களுக்கு ஜெயலலிதா தொடர்ந்தும் அடுத்தடுத்துப் பெரும் பொறுப்புகளை அளித்தார்? நமக்குத் தெரியாது!

நமக்கு ஒருபோதும் புரிபடாத அதிமுகவின் மர்ம நாடகத்தில், எந்த ஒரு காட்சிக்கும் பிரதான பொறுப்பாளி ஜெயலலிதா. சசிகலாவை மையப்படுத்திக் குற்றங்களைப் பேசுவதன் வாயிலாக ஜெயலலிதாவை அவருடைய தவறுகளிலிருந்து விடுவிக்கும் உத்தியை இதுவரை அவரை ஆதரித்தவர்கள் மேற்கொண்டுவந்தனர். இனியும் அதைத் தொடர முடியாது. ஜெயலலிதாவுக்கு மட்டும் அல்ல; ஜெயலலிதாவைத் தூக்கிப் பிடித்தவர்களுக்கும் ஜெயலலிதாவின் தவறுகளையும் அவர் எதிர்கொண்ட ஊழல் குற்றச்சாட்டுகளையும் நியாயப்படுத்த பலிகடா தேவைப்பட்டது. சரியாகச் சொல்வதானால், ஜெயலலிதாவைக் கடவுளாகக் கட்டமைத்த மூளைகளே சசிகலாவைச் சாத்தானாகவும் கட்டமைத்தன. இப்போது ஜெயலலிதா மறைந்துவிட்ட நிலையில், அந்த இடத்தில் சசிகலா அமர்வதை அவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. முக்கியமான பிரச்சினை பிம்பத்தின் புனிதம் சம்பந்தப்பட்டது. இந்தியச் சமூகம் கொண்டாடும் எல்லாத் 'தகுதி'களும் ஜெயலலிதாவிடத்தில் இயல்பாக இருந்தன. ஜெயலலிதா பிராமணர். சிகப்பு. அழகு. படித்தவர். நல்ல வாசகர். நயத்தகு ஆங்கிலம் பேசுபவர். பன்மொழிப் புலமை கொண்டவர். முக்கியமாக அதிகாரங்களுடன் உரையாடும் மொழியை அறிந்தவர். சசிகலா?

அதிமுகவை எதிர்ப்பவர்கள் அதன் கொள்கைகள், செயல்பாடுகள் சார்ந்து எதிர்ப்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. நேற்றுவரை அதைக் கண்மூடித்தனமாக ஆதரித்தவர்கள் சசிகலா நிமித்தம் இன்று எதிர்க்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் அதன் கொள்கைகளோ, செயல்பாடுகளோ அல்ல; மாறாக இதுவரை அவர்கள் நம்பிவந்த பிம்பம் நொறுங்குவதால் ஏற்படும் ஏமாற்றம். இவர்களால் எந்தெந்தச் செயல்பாடுகளுக்காக சசிகலா இன்று வெறுக்கப்படுகிறாரோ அந்தச் செயல்பாடுகள் அத்தனைக்கும் சசிகலாவின் முன்னோடி ஜெயலலிதா என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

அதிமுகவிலிருந்து சசிகலா நீக்கப்பட வேண்டும்; பொதுச்செயலாளர் பதவிக்கு வேறொருவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும், சசிகலா இல்லாத அதிமுக ஒரு பரிசுத்தமான ஜனநாயக இயக்கமாகிவிடும் என்றும் நம்புபவர்கள் அரசியல் அறியாமையில் இருப்பதாகவே கருதுகிறேன். அதிமுகவின் கோடிக்கும் மேற்பட்ட தொண்டர்கள் மீது சசிகலா எப்படி மேலிருந்து திணிக்கப்படுவது இத்தனை இயல்பாக அங்கு நடக்கிறது என்பதற்கான காரணம் ஒரு சசிகலா அல்ல; அது அதிமுகவின் அடித்தளத்தில் இருக்கிறது. இது நாள் வரையிலான அதன் வரலாற்றில் இருக்கிறது. 'அஜனநாயக'த்தைப் படிப்படியாகப் பொதித்துக் கட்டமைக்கப்பட்ட இயக்கம் அது. முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அறிக்கையை வாசித்துப்பாருங்கள். “அதிமுகவை ஜெயலலிதா வைத்திருந்த அதே கட்டுக்கோப்புடன் ராணுவம் போல், தொடர்ந்து கொண்டுசெல்ல வேண்டும் என்றால், அதற்கு ஒரே வழி அதிமுகவின் பொதுச்செயலாளராகி சசிகலா வழிநடத்துவது ஒன்றேயாகும். இந்தக் கருத்துக்கு மாற்றுக்கருத்து இந்த இயக்கத்தில் இல்லை. அப்படியொரு மாற்றுக்கருத்து கொண்டிருப்பவர் எவரேனும் இருந்தால், அவர் இக்கட்சியின் தொண்டரே இல்லை!”

ஏதோ விசுவாசத்தின் உச்சத்தில் பன்னீர்செல்வம் அதீதமாக அள்ளித்தெளித்த வார்த்தைகள் அல்ல இவை. இதுவே அதிமுகவின் ஆன்மா. அதிமுகவின் சட்ட விதிகளைப் படித்துப்பாருங்கள். கட்சியின் அடிப்படை உறுப்பினர்களிலிருந்து தனக்கு அடுத்த நிலையிலான துணைப் பொதுச்செயலாளர்கள், பொருளாளர், செயற்குழு, பொதுக்குழு, கட்சியின் துணை அமைப்புகள் வரை நிர்வாகிகளை நியமிக்க அதிகாரம் படைத்தவர் அதன் பொதுச்செயலாளர். கட்சியின் கொள்கைகள், செயல்திட்டங்கள், முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள், உள்கட்சித் தேர்தலைத் தாண்டி, சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களைத் தீர்மானிக்கும் அதிகாரம் படைத்தவர் அதன் பொதுச்செயலாளர். கட்சியின் வரவு செலவுகளிலிருந்து சொத்துகள் வாங்குவது விற்பது வரை கட்சியின் ஒட்டுமொத்த நிர்வாகத்துக்கும் அதிகாரம் படைத்தவர் அதன் பொதுச்செயலாளர். ஒருவேளை, பொதுச்செயலாளரை எதிர்த்து எவரேனும் நீதிமன்றம் செல்ல நேர்ந்தால், அந்தக் கணத்திலேயே உடனடியாக அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியையே இழந்துவிடுவார். இதுதான் அதிமுக.

ஒரு ஜனநாயக நாட்டில் இந்த அளவுக்கு ஒரு தனிநபரிடம் சகல அதிகாரங்களையும் சட்டபூர்வமாகத் தாரை வார்க்கும் ஒரு இயக்கம் உண்டா? எப்படி ஓரிடத்தில் இவ்வளவு அதிகாரங்களையும் குவிக்கிறார்கள்? பிம்பத்தை வழிபாட்டுநிலைக்குக் கொண்டுசெல்ல அதிகாரக்குவிப்பு வாகனமாகிறது. வழிபாட்டுநிலை ஒரு பிம்பத்தைப் புனிதநிலைக்கு இட்டுச் செல்கிறது. புனித பிம்பங்கள் மக்களுக்கு எவ்வளவு அப்பாற்பட்டிருந்தும் அவர்களை ஆளலாம். கதையாடல்கள் வழியாகவே புனித பிம்பங்களை மேலும் புனிதமாக்கி அதன் செல்வாக்கில் கீழிருப்பவர்கள் அதிகாரங்களைக் குவிக்கலாம்.

இன்றைய அரசியல் கோடி கோடியாக முதலீடுகள் நடக்கும், பணம் புரளும், வருமானம் பங்கிடப்படும் ஒரு தொழில். ஒவ்வொரு பதவிக்குப் பின்னாலும் ஒரு முதலீடு இருக்கிறது. கட்சிக்கு வெளியிலும் கட்சியை நம்பி பணம் போட்டவர்கள் இருக்கிறார்கள். செல்வத்துக்கும் அதிகாரத்துக்கும் இ டையில் வலுவான வலைப்பின்னல் இருக்கிறது. ஒரு சீட்டு நிறுவனத்தின் பங்குதாரர்களில் எவரும் - முதல் சீட்டு மட்டும் எடுக்கப்பட்டிருக்கும் நிலையில் - சீட்டு நிறுவனம் தடுமாற்றத்துக்குள்ளாவதை விரும்புவதில்லை. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வகையில் ஒரு கணக்கு இருக்கிறது. எவரும் சசிகலாவின் கால்களில் விட்டேத்தியாக விழவில்லை. அதிமுக நிர்வாகிகளிடமிருந்து வெளிப்படும் அசாதாரண ஒற்றுமையையும் அவர்களுடைய தேர்வையும் இந்தப் பின்னணியிலேயே நாம் பார்க்க வேண்டும். பிம்பத்தை நம்பி ஏமாந்து, இன்னமும் ஏமாற்றத்திலிருந்து வெளிப்பட இயலாத மனமே இன்னும் எதிர்ப் பிம்பங்களையும் புது நியாயங்களையும் தேடிக்கொண்டிருக்கிறது.

இன்றைய அதிமுகவுக்கு சசிகலாதான் தலைமையேற்க முடியும்; அங்கு ஃபிடல் காஸ்ட்ரோவைத் தேடுவது அபத்தம்! கத்தரிச் செடியில் வெண்டைக்காய் காய்க்காது. காட்டுப்பறவைகள் எப்படிக் குளத்தின் அடியில் புதைந்து வாழ்ந்திருக்க முடியும்?

காலத்தின் முன் அதிமுக நீடிக்க வேண்டும் என்றால், அது சுயசுத்திக்குள்ளாகியே தீர வேண்டும். இதுநாள் வரையிலான அதிமுகவின் எல்லாப் பிம்பங்களும் உடைந்து நொறுங்கும் காலமிது. ஜனநாயகத்துக்கு இது நல்லது.  நேற்று வரை கோயிலென வழிபட்ட ஜெயலலிதாவின் வீட்டின் முன் எந்த அதிகாரத்தையும் பொருட்படுத்தாமல் ஒன்று திரண்டு சசிகலாவுக்கு எதிராக முழக்கமிட்டார்களே எளிய தொண்டர்கள், அங்கிருந்தே ஒரு இயக்கத்தின் ஜனநாயகம் துளிர்க்கிறது. சசிகலாவின் காலகட்டம் அதிமுகவில் ஜனநாயகம் துளிர்ப்பதற்கான தருணங்களை நிறையவே உருவாக்கிக்கொடுக்கும் என்று நம்புகிறேன்!

டிசம்பர் 2016, ‘தி இந்து’

7 கருத்துகள்:

 1. // அதிமுகவின் எல்லாப் பிம்பங்களும் உடைந்து நொறுங்கும் காலமிது... //

  விரைவில்...

  பதிலளிநீக்கு
 2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 3. From the public(ADMK Members) get survey it's very useful getting growth forADMK in future

  பதிலளிநீக்கு
 4. இத்தகைய காலக்கட்டத்தில் அ.தி.மு.க என்ற இயக்கத்தின் திரையை விலக்கி மக்களை ஓரு நல்ல சமுக மனப்பான்மையுடன் வழிநடத்தக் கூடிய கட்டுரைகளை வெளியிடும் தி இந்து வுக்கு சபாஷ் கட்டுரையை எழுதிய ஆசிரியரின் சமூகப் பொறுப்புணர்வைக் கண்டு மெய் சிலிக்கிறோம்.தமிழ்ச்சமூகம் எப்பொழுது நல்ல உயரிய அரசியல் பாதையில் செல்லும் என்ற ஏக்கத்தில் உள்ளவர்களுக்கும் மாய அரசியலுக்கும் கவர்ச்சி அரசியலுக்கும் அடிமைப்பட்டுக்கிடக்கும் நம் சமூகம் எப்பொழுது விழிப்படையும் என்ற ஆதங்கத்துடன்
  பூங்கோதை,
  புதுச்சேரி.

  பதிலளிநீக்கு