தேவைதானா கருப்புச் சட்டம்?


‘‘இந்தியக் குடிமக்களின் சுதந்திர உணர்வைத் தடுக்கக் கூடிய சட்டங்களிலேயே முதன்மையானது இந்தச் சட்டம்தான். அரசாங்கம் ஒன்றைப்  புரிந்துகொள்ள வேண்டும். சட்டங்களாலோ, தண்டனைகளாலோ அரசாங்கத்தின் மீது நேசத்தை உருவாக்கிவிட முடியாது.’’
- 1922-ம் ஆண்டு ‘யங் இந்தியா’ பத்திரிகையில் எழுதிய ஒரு கட்டுரைக்காக, ராஜ துரோகக் குற்றம் சாட்டப்பட்ட காந்தி நீதிமன்றத்தில் வாதாடியபோது, இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு ‘124ஏ’ மீது முன்வைத்த விமர்சனம் இது!
இப்போது ஏறத்தாழ 89 வருஷங்களுக்குப் பின் அவருடைய வாதம் மீண்டும் உயிர் பெறுகிறது, டாக்டர் பினாயக் சென் வழக்கால்!
சுருக்கமாக அந்தச் சட்டம் என்ன சொல்கிறது?
அரசுக்கு எதிராகப் பேசினால், எழுதினால், சைகை செய்தால்கூட நீங்கள் தேசத் துரோகக் குற்றச்சாட்டுக்கு ஆளாகலாம் என்கிறது.
முதலாவது இந்தியச் சுதந்திரப் போரட்டத்துக்குப் பின், தேச பக்தர்களை அழித்தொழிக்க பிரிட்டீஷ் அரசாங்கம் கொண்டுவந்த சட்டம் இது. காந்தி, திலகர், பகத் சிங், வ.உ.சி. என்று பலரையும் ஒடுக்கப் பயன்படுத்தப்பட்ட கருப்புச் சட்டம்!
இந்தியா சுதந்திரம் அடைந்தபோதே இந்தச் சட்டம் மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். இந்தச் சட்டத்தின் மோசமான அம்சங்கள் நீக்கப்பட்டு, புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும். இல்லை!
ஏழை எளியோர், சிறைக் கைதிகள், ஆதிவாசிகள் எனச் சமூகத்தின் விளிம்பு நிலையில் இருப்பவர்களைத் தேடித் தேடிச் சென்று அவர்களுக்கு மருத்துவச் சேவை வழங்கியவர் டாக்டர் சென். ‘ஷங்கர் குஹா நியோகி’ அமைப்புடன் இணைந்து, அவருடைய குழுவினர் ஆதிவாசிகளுக்காகச் செயல்படுத்திய பணிகளே இந்திய அரசின் தேசியக் கிராமப்புற சுகாதார இயக்கத்துக்கான முன்னோடி. தவிர, ஜெயப்ரகாஷ் நாராயணன் உருவாக்கிய மக்கள் சிவில் உரிமைக் கழகம் (பி.யூ.சி.எல்.) மூலம் மனித உரிமை இயக்கச் செயல்பாடுகளிலும் தீவிரமாகப் பணியாற்றியவர். தன்னுடைய பணிகளுக்குகாக சர்வதேச அளவிலான கவனிப்பையும் பல்வேறு விருதுகளையும் வென்றவர்.
இப்படிப்பட்ட ஒருவரைத்தான் 2007-ல் தேசத் துரோகக் குற்றம் சாட்டி, சிறைக்கு அனுப்பியது சத்தீஸ்கர் அரசு. காரணம், நக்ஸல்களுக்கு எதிரான நடவடிக்கை என்று கூறி, வனங்களில் வாழும் மக்களுக்கு எதிராக அரசு அரங்கேற்றிய அவலங்களை சென் வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தார். முக்கியமாக, அரசால் மறைமுகமாக உருவாக்கப்பட்ட ‘சல்வாஜுடும் ஆயுதக் குழுவின் வன்முறைகளை அம்பலப்படுத்தினார்.
அவருக்கு நேர்மையாகப் பதில் அளிக்க முடியாத சத்தீஸ்கர் அரசு அவர் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, கைது செய்தது. தனிமைச் சிறையில் வைத்து சித்ரவதை செய்தது.
இந்தக் கைது தேசிய அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் மனித உரிமை ஆர்வலர்கள் போரட்டத்தில் ஈடுபட்டனர். சர்வதேச அளவில் இந்திய அரசுக்கு நெருக்கடிகள் ஏற்பட்டன. சமகால உலகின் மிகப் பெரிய அறிவுஜீவியாகப் பார்க்கப்படும் நாம் சோம்ஸ்கி இந்திய அரசுக்குக் கடிதம் எழுதினார். உலகெங்கும் உள்ள நோபல் பரிசு வெற்றியாளர்கள் 22 பேர் சென்னை விடுவிக்க இந்திய அரசுக்கும், சத்தீஸ்கர் அரசுக்கும் கடிதம் எழுதினர். இவ்வளவுக்குப் பிறகும் இந்திய அரசோ, சத்தீர் அரசோ அசைந்து கொடுக்கவில்லை. வழக்கு விசாரணை தொடர்ந்தது. கடந்த டிச. 24-ம் தேதி இந்த சென்னுக்கு, ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது நீதிமன்றம்!
இந்தத் தீர்ப்பு தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் அரசுக்குப் பெரும் அவப்பெயரை உருவாக்கிய பின்னணியில்தான், உச்ச நீதிமன்றம் இப்போது மேல்முறையீட்டில் சென் மீதான தேசத் துரோகக் குற்றச்சாட்டை ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறது. இந்தத் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்து ‘இ.த.ச.124ஏ’-வை மீண்டும் விவாதத்துக்கு உள்ளாக்கி இருக்கிறது.
‘‘தடை செய்யப்பட்ட இயக்கம் தொடர்பான புத்தகம் ஒன்றை வைத்து இருந்தார் என்ற ஆதாரத்தின் அடிப்படையிலேயே சென் குற்றவாளி ஆக்கப்பட்டு உள்ளார். அப்படி என்றால், காந்தி புத்தகம் வைத்து இருப்பதாலேயே ஒருவரை காந்தியவாதி என்று சொல்லிவிட முடியுமா?’’
உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ள இந்தக் கருத்து சென் மீது புனையப்பட்ட வழக்கு எத்தனை பலகீனமானது என்பதை அம்பலப்படுத்தும் அதேவேளையில், பல்வேறு கேள்விகளையும் எழுப்புகிறது.
இவ்வளவு பலகீனமான ஒரு வழக்கு ஏறத்தாழ 4 ஆண்டுகளாக ஒரு நல்ல மனிதரை அலைக்கழித்து இருக்கிறது. அதை உயர் நீதிமன்றம் வரை நீதித் துறையும் அங்கீகரித்து இருக்கிறது. இதற்கெல்லாம் என்ன பரிகாரம்? டாக்டர் சென் ஓர் உதாரணம்தான். நாடு முழுவதும் நூற்றுக் கணக்கானோர் இந்தக் கருப்புச் சட்டத்தின் பெயரில் வழக்குகளை எதிர்கொள்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் எப்போது தீர்வு? காலனிய ஆதிக்கக் கால இந்தக் கருப்புச் சட்டம் இனியும் தேவைதானா?
ஜுனியர் விகடன் 2010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக