ஒரே உண்மைதான்... பிரபாகரன் இல்லை: சரத் ஃபொன்சேகா

            உலகின் மிகக் குரூரமான போர்களை முன்னெடுத்த தளபதிகளில் ஒருவர்... சரத் ஃபொன்சேகா. ஈழத்தில் முப்படைகளையும் கொண்ட விடுதலைப் புலிகளை வீழ்த்தியபோது ராஜபக்ஷே - ஃபொன்சேகா கூட்டணி ஆசியக் கண்டத்தைத் தாண்டியும் கவனத்தை ஈர்த்தது. ஆனால், வெற்றியின் பலனை அறுவடை செய்வதில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட அரசியல் போட்டி ஃபொன்சேகாவைச் சிறைக்குள் தள்ளியது. அமெரிக்கா கொடுத்த அழுத்தத்தால் இரண்டு ஆண்டு சிறைவாசத்துக்குப் பின் வெளியே வந்திருக்கிறார் ஃபொன்சேகா. அவருடைய ஒவ்வோர் அசைவும் இன்று இலங்கை அரசால் கண்காணிக்கப்படுகிறது. எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்கிறார்கள் இலங்கைப் பத்திரிகையாளர்கள். ஃபொன்சேகாவுக்கு ஏற்பட்டு இருக்கும் நிலை இலங்கையில் ஜனநாயகம் எப்படி இருக்கிறது என்பதற்கு அப்பட்டமான ஓர் உதாரணம். சிறையில் இருந்து வெளிவந்த ஃபொன்சேகாவை  ஏராளமான கேள்விகளுடன் எதிர்கொண்டேன். விடுதலைக்குப் பின் சர்வதேச அளவில் ஃபொன்சேகா அளித்த முதல் விரிவான - பிரத்யேகப் பேட்டி இது.

            ''ராஜபக்ஷே 'நினைத்ததை முடிப்பவன்’ ஆக அவரின் தளபதியாக இருந்த நீங்களே, அவருக்கு எதிரியாகிப்போனதன் பின்னணி என்ன?''
            ''இலங்கை மக்களிடையே எனக்கு ஒரு கதாநாயகன் அந்தஸ்து கிடைத்ததுதான் காரணம். எங்கள் மக்கள் இந்தப் போர் வெற்றியை இன்னொரு விடுதலையாகக் கருதினார்கள். இந்த வெற்றிக்குப் பின் ராணுவம் எவ்வளவு பெரிய விலை கொடுத்திருந்தது என்பது மக்களுக்குத் தெரியும். அதனால், என்னைக் கொண்டாடினார்கள். என்னைப் பொறுத்த அளவில், இந்தப் போர் பயங்கரவாதத்தில் இருந்து மக்களை விடுவிக்க நாங்கள் நடத்திய போர். ஒரு ராணுவத் தளபதியாக அதை மீறிய எதிர்பார்ப்பு எதுவும் எனக்கு இல்லை. ஆனால், ராஜபக்ஷேவுக்கு நிறைய உள்நோக்கங்கள் இருந்தன. போர் வெற்றியைத் தன்னுடைய அரசியல் வாழ்க்கைக்குப் பயன்படுத்திக்கொள்வது அதில் முக்கியமானது. போர் வெற்றிக்குப் பின் மக்கள் என்னைக் கொண்டாடியது, அவருக்குப் பெரிய பொறாமையை உருவாக்கியது. அவருடைய அரசியல் கணக்குகள் காலியாகிவிடுமோ என்று பயப்பட் டார். அதனால், அவரே என்னை அவருக்கு எதிரிஆக்கினார்.''
            ''உங்கள் அரசியல் அபிலாஷையும் அதற்கு ஒரு காரணம் அல்லவா?''
            ''இல்லை. போருக்குப் பின் பல்வேறு தரப்பினரும் என்னைச் சந்தித்தபோது, ஊழலும் அடக்குமுறையும் கொண்ட ராஜபக்ஷே குடும்பத்தின் காட்டாட்சிக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற விஷயத்தைத் திரும்பத் திரும்ப வலியுறுத்தினார்கள். ஆனாலும், நான் அமைதியாகத்தான் இருந்தேன். ஒரு கட்டத்தில் ராஜபக்ஷேவே என்னை அரசியலை நோக்கித் தள்ளினார்.''

            ''சரி, போர் காலகட்டத்துக்குப் போவோம். விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கு எது காரணம் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? புலிகளின் பலம் என்ன... பலவீனம் என்ன?''
            ''இலங்கை ராணுவத்தின் பலவீனம்தான் புலிகளின் பலமாக இருந்தது. நான் பொறுப் பேற்பதற்கு முன்பு இலங்கை ராணுவம் எல்லா வகைகளிலும் பின்தங்கி இருந்தது. குறிப்பாக, தொழில்நுட்பத்தில். அதே போல, எங்கள் கடற்படை பலவீனமாக இருந்தது. அரசியல் சூழலும் புலிகளுக்குச் சாதகமாக இருந்தது. இவைதான் புலிகளின் முக்கியப் பலமாக இருந்தது. நான் பொறுப்பேற்றதும் இவை எல்லாவற்றையுமே மாற்றினேன். இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம், புலிகள் நவீனப் போர் உத்திகள், தொழில்நுட்பங்களில் மிகவும் பின்தங்கி இருந்தார்கள். அமெரிக்க இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகான சர்வதேசச் சூழலை அவர்கள் உணராததும் முக்கியக் காரணம்.''

''உண்மையைச் சொல்லுங்கள்... பிரபாகரனின் முடிவு என்னவானது?''
            ''ஒரே உண்மைதான். பிரபாகரன் இப்போது உயிரோடு இல்லை. போரில் அவர் இறந்துவிட்டார்!''

            ''போரில் சண்டையின்போதுதான் பிரபாகரன் இறந்தாரா? அவர் சரணடையவில்லை என்றும் சித்ரவதை செய்யப்பட்டுக் கொல்லப்படவில்லை என்றும் உங்களால் உறுதி அளிக்க முடியுமா?''
            ''கண்டிப்பாக. அந்த இரவு எனக்கு எப்போதுமே மறக்க முடியாதது. ஒரு சின்ன பகுதிக்குள் பிரபாகரனைச் சுற்றி வளைத்தோம். மூன்று அணிகளைக்கொண்டு மூன்று வளையங்களை புலிகள் அமைத்திருந்தார்கள். அதிகபட்சம் அவர்கள் 400 பேர் இருந்திருக்கலாம். முதல் அணியில் 100 பேர். நடேசன், பூலித்தேவன் தலைமையிலானது. அழித்தோம். அடுத்த அணியில் 200 பேர். பிரபாகரனின் மூத்த மகன் சார்லஸ் தலைமையிலானது. அழித்தோம். கடைசிக் கட்டத் தாக்குதல் நள்ளிரவில் நடந்தது. 100 பேர்கொண்ட அணி அது. பிரபாகரன் தலைமையிலானது. அழித்தோம். சண்டையில் குண்டடிபட்டுத்தான் பிரபாகரன் இறந்தார்.''

            ''உங்கள் கூற்றுப்படி, நீங்கள் கொன்றது உண்மையான பிரபாகரனைத்தான் என்றால், ஊடகங்களைக் கூட்டிக் காட்டுவதில் உங்களுக்கு என்ன பிரச்னை?''
            ''உங்கள் கேள்வியில் ஒரு திருத்தம். நாங்கள் பிரபாகரனைக் கொல்லவில்லை. அவர் போரில் இறந்தார் என்பதே சரி. யுத்த களத்துக்குச் செல்லும்போது அங்கு என்ன நடக்கும் என்பதை யாராலும் அனுமானிக்க முடியாது. பத்திரிகையாளர்களை உடன் அழைத்துக்கொண்டு போருக்குப் போக முடியாது. அங்குள்ள சூழலே வேறு. பிரபாகரன் சடலம் கிடைத்தவுடன் அவருடைய மரணத்தை அறிவிப்பதற்கு முன் நாங்கள் அதைத் துளியும் சந்தேகம் இன்றி உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டி இருந்தது. பிரபாகரனைத் தெரிந்தவர்களை அழைத்துவந்தோம். பிறகு, மரபணுப் பரிசோதனை மேற்கொண்டோம். முற்றுமுதலாக இறந்தது பிரபாகரன் என்று தெரிந்துகொண்ட பின்னரே அறிவித்தோம். உங்களுக்கு எந்தச் சந்தேகமும் வேண்டாம்... நம்புங்கள். ஊடகங்களில் நீங்கள் பார்த்த சடலம் பிரபாகரனுடையதுதான்.''

            ''எந்தத் தருணத்திலாவது பிரபாகரனுடன் பேசி இருக்கிறீர்களா?''
            ''ஒருபோதும் இல்லை!''

            ''சரண் அடையும் முடிவை விடுதலைப் புலிகள் எடுத்த பின்னணி என்ன?''
            ''அவர்கள் அந்த முடிவை எடுக்கவில்லை; அந்த முடிவை நோக்கித் தள்ளப்பட்டார்கள். நாலாபுறமும் நாங்கள் சுற்றி வளைத்துஇருந்தோம். அவர்கள் வசம் இருந்த பகுதி கொஞ்சம் கொஞ்சமாகச் சுருங்கிக்கொண்டே வந்தது. தப்பிக்க வழியே இல்லாத நிலையில்தான் அவர்கள் ஆயுதங்களை மௌனிக்கச் செய்தார்கள்.''

            ''ஆனால், சரண் அடைவது தொடர்பாக ராணுவத்துடன் புலிகள் பேசினார்கள் இல்லையா?''
            ''இல்லை. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் எதிலும் ராணுவம் புலிகளுடன் ஈடுபடவில்லை.''

            ''அப்படி என்றால், சரண் அடைவது தொடர்பாக யார் யாருக்கிடையே பேச்சுவார்த்தை நடந்தது? தமிழகத் தலைவர்கள் யாரெல்லாம் தொடர்பில் இருந்தார்கள்? அப்போது ராணுவத்தின் நிலைப்பாடு என்னவாக இருந்தது?''  
            ''அரசுடன் பேச்சுவார்த்தைகள் நடந்தன. தமிழகத் தலைவர்கள் யாரெல்லாம் பேசி னார்கள் என்று தெரியவில்லை. அரசு சாரா அமைப்புகள் பேசியது தெரியும். எங்களிடம் கேட்டபோது, 'யார் சரண் அடைந்தாலும் நாங்கள் வரவேற்கிறோம். சர்வதேசப் போர் விதிமுறைகளின்படி சரண் அடைபவர்கள் கண்ணியமாக நடத்தப்படுவார்கள்’ என்று சொன்னோம். எங்களை நம்பி வந்த பொதுமக்களையும் சரி, புலிகளையும் சரி, அப்படித்தான் நடத்தினோம்.''

            ''வெள்ளைக் கொடி ஏந்தி சரண் அடைய வருபவர்கள் கொல்லப்பட்டதுகூட போர் விதிமுறைகள்படிதானா?''
            ''சரண் அடைய வருபவர்கள் தொடர்பாக என் வீரர்களுக்கு நான் தெளிவான உத்தரவுகளைப் பிறப்பித்து இருந்தேன். அதனால்தான் இன்றைக்கு உயிரோடு விடுதலையாகும் புலிகளை நீங்கள் பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள். நீங்கள் சொல்வதுபோல வெள்ளைக் கொடியை ஏந்திக்கொண்டெல்லாம் எவருமே சரண் அடைய வரவில்லை. நாங்கள் போர் அற நெறிகளை எந்த வகையிலும் மீறவில்லை என்பதுதான் உண்மை.''

            ''எண்ணற்ற குழந்தைகள் போரில் கொல்லப்பட்டார்கள். உதாரணமாக, பிரபாகரனின் இளைய மகன். அவர் மீது இருந்த காயங்கள் மிகக் குறைந்த தூரத்தில் இருந்து அவர் கொல்லப்பட்டதை உறுதி செய்கின்றன. அதாவது, பிடித்துவைத்துக் கொன்று இருக்கிறீர்கள். உங்கள் போர் அறம் இதுதானா?''   
            ''நீங்கள் தொடர்ந்து யூகத்தின் அடிப்படையிலான விஷயங்களை முன்வைத்தே கேள்விகளைக் கேட்கிறீர்கள். நீங்கள் குறிப்பிடுவதுபோல பிரபாகரனின் இளைய மகன் கொல்லப்பட்டுவிட்டதாக நான் நம்பவில்லை. கடைசி நாள் தாக்குதல் நடந்த இடங்களில் சில பெண்கள், நான்கைந்து சிறுவர்களின் சடலங்களைக் கைப்பற்றினோம். அதில் பெரும்பாலானவர்கள் சயனைடு உட்கொண்டு இறந்தவர்கள். பிரபாகரனுக்கு நெருக்கமானவர்கள்- கருணா அம்மான் போன்றவர்களை அழைத்துவந்து காட்டினோம். பிரபாகரன் மனைவியோ, இளைய மகனோ, மகளோ அதில் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். எங்களைப் பொறுத்த அளவில் பிரபாகரன் குடும்பத்தில் கொல்லப்பட்டது பிரபாகரனும் அவருடைய மூத்த மகனும் மட்டும்தான். மற்ற மூவரின் நிலைபற்றி எங்களுக்கே இதுவரை எந்தத் தகவலும் தெரியாது.''

            ''ஒரு போர் அறநெறியும் பின்பற்றப்படாத இறுதிக் கட்டப் போரில் பல்லாயிரக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டபோது, இந்தப் போரை முன்னெடுத்த மனிதனாக உங்கள் மனநிலை எப்படி இருந்தது?''
            ''இந்தப் போரைத் தொடங்கியபோதே என் வீரர்களுக்கு நான் பிறப்பித்த முக்கியமான உத்தரவு, பொதுமக்கள் உயிர் முக்கியம். கடைசிவரை அந்த உத்தரவை என் வீரர்கள் காப்பாற்றினார்கள். நீங்கள் சொல்வதுபோன்றெல்லாம் நடக்கவே இல்லை. ஒரு போரை முன்னெடுத்தவனாக நான் முழுத் திருப்தியான மனநிலையிலேயே இருக்கிறேன்.''

            ''இந்தப் போரில் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளின் பங்களிப்பு என்ன? விடுதலைப் புலிகள் அழிக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை அவர் கள் எடுக்கக் காரணம் என்ன?''
            ''அது அமெரிக்காவோ, ஐரோப்பிய நாடுகளோ... பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும் என்று எல்லா நாடுகளுமே நினைக்கின்றன. புலிகள் விஷயத்தைப் பொறுத்த அளவில் மாற்றுப் பாதை அல்லது வேறு விதமான தீர்வுகளுக்கு அவர்கள் தயாராக இல்லை என்பதை இந்த நாடுகள் தெளிவாகப் புரிந்துகொண்டன. அதற்குப் பிறகுதான் எங்கள் நிலைப்பாட்டை ஆதரித்தன. சீனாவைப் பொறுத்த அளவில் அது எப்போதுமே எங்கள் நண்பன். எங்களுக்கு முக்கியமான ஆயுத இறக்குமதியாளர் சீனா என்பதும் முக்கியமானது.''

            ''விடுதலைப் புலிகள் மீண்டும் தலையெடுக்கும் வாய்ப்புகள் இருக்கின்றனவா?''
            ''இலங்கை இன்றைக்கு அழிந்துகொண்டு இருக்கும் தேசமாகிவிட்டது. பொருளா தாரம் மிக மோசமான நிலையில் இருக் கிறது. விலைவாசி உயர்வோ மக்களைக் கொல்கிறது. அடித்தட்டு மக்கள் செய்வது அறியாது நிற்கிறார்கள். அரசிடமோ சுருட்டுவதைத் தவிர வேறு எந்தத் திட்டங்களும் இல்லை. இங்கு சுதந்திரம் இல்லை. ஜனநாயகம் இல்லை. யாருக்கும் எந்தப் பாதுகாப்பும் இல்லை. உங்களைச் சர்வ நேரமும் யாரோ கண்காணித்துக்கொண்டும் வேவு பார்த்துக்கொண்டும் உங்கள் உரையாடல்களை ஒட்டுக் கேட்டுக்கொண்டும் இருந்தால் நீங்கள் எப்படி உணர்வீர்கள்? நாங்கள் அப்படித்தான் இருக்கிறோம். ஊடகங்கள் முழுமையாக முடக்கிவைக்கப் பட்டு இருக்கின்றன. அரசுஊடகங்கள் சொல்வதுதான் செய்தி. அரசுக்கு எதிராக யோசிப்பதுகூடக் குற்றம் என்று நினைக் கிறது அரசு. தான் ஆட்சியில் இருப்பதற்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறார் ராஜபக்ஷே. எங்கள் நாட்டில் இப்போது சர்வ சுதந்திரத்துடனும் சகல வசதிகளுடனும் இருப்பது ஒரே ஒரு குடும்பம்தான். அது... ராஜபக்ஷேவின் குடும்பம். நாட்டைச் சூறையாடிக்கொண்டு இருக்கிறார்கள் அவர்கள். எங்கு பார்த்தாலும் ஊழல், ஊழல், ஊழல்... மக்கள் வெறுத்துப் போய் இருக்கின்றனர். குறிப்பாக, இளை ஞர்கள் கொந்தளிப்பில் இருக்கின்றனர். ராஜபக்ஷேவின் அடக்குமுறையும் ஊழலும் மிக்க இந்தக் காட்டாட்சி தொடர்ந்தால், விடுதலைப் புலிகள் மட்டுமா? இன்னும் ஆயிரமாயிரம் பேர் வருவார்கள். வடக்கில் இல்லை; தெற்கிலேயே அரசுக்கு எதிரான இளைஞர்களின் புரட்சி வெடித்தாலும்... ஆச்சர்யப்பட ஒன்றும் இல்லை.''

            ''முன்பு ஒரு முறை 'சிங்களர்களிடம் தமிழர்கள் அடங்கித்தான் போக வேண்டும்’ என்று பேசி இருந்தீர்கள். இப்போதும் 'தமிழர்கள் தங்கள் உரிமைகளுக்காகக் காத்திருக்கத்தான் வேண்டும்’ என்று பேசி இருக்கிறீர்கள். தமிழர்கள் மீதான உங்கள் வெறுப்புக்குக் காரணம் என்ன? சிங்களர்களுக்குக் கீழேதான் தமிழர்கள் இருக்க வேண்டுமா?''
            ''என்னுடைய பேச்சுகள் திரிக்கப்படுகின்றன என்று நினைக்கிறேன். நான் அப்படிப் பேசுபவன் இல்லை. தமிழர்கள் மீது எனக்கு வெறுப்பு எதுவும் இல்லை. இலங்கை இன்றைக்கு ஒரே நாடு. அதில் எல்லோருக்கும் சம உரிமை உண்டு. எல்லோரும் கூடி வாழ வேண்டும் என்றே நான் விரும்புகிறேன். அமெரிக்காவில் எப்படி ஒபாமா அதிபர் ஆனாரோ... அதேபோல, இலங்கையில் ஒரு தமிழர் அதிபராகும் நாள் வர வேண்டும் என்றே விரும்புகிறேன்.''

            ''போருக்குப் பின் தமிழர் பகுதிகள் ராணுவமயமாக்கப்பட்டு இருக்கின்றன. இன்னமும் அங்கு இவ்வளவு ராணுவத்தினர் குவிக்கப்பட்டு இருக்க என்ன தேவை இருக்கிறது?''
            ''நான் இப்போது ராணுவத் தளபதி இல்லை என்பதை முதலில் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால், 2010-க்குள் அங்கு எல்லா புனரமைப்புப் பணிகளையும் முடித்து, படையினரை வெளியேற்றிவிட வேண்டும் என்று அப்போது அரசிடம் சொல்லி இருந்தேன். அரசு இன்னமும் புனரமைப்புப் பணிகளை முடிக்கவில்லை. பணிகள் முடியாத நிலையில், படையினரை முழுமையாக வெளியேற்றுவது தொடர்பாகவும் முடிவெடுக்க முடியாது.''

            ''இந்தியா - சீனா... இலங்கையின் இணக்கமான கூட்டாளி யார்?''
            ''இந்தியா எங்களுக்கு மிக அருகில் இருக்கும் நாடு. வரலாற்றுரீதியாக, கலாசார ரீதியாக நம் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவு முக்கியமானது. எந்த ஒரு கட்டத்திலும் நாங்கள் இந்தியாவுக்கு எதிராகச் செயல்பட மாட்டோம். அதே சமயம், சீனா எங்களுக்கு மிக முக்கியமான நண்பன். இரு நாடுகளுமே இலங்கையால் தவிர்க்க முடியாதவர்கள்.''

            ''உங்களுடைய அடுத்தகட்ட அரசியல் திட்டங்கள் என்ன?''
            ''இலங்கையில் மீண்டும் ஜனநாயகத்தை மலரச் செய்வது... எல்லோருக்கும் பேச்சு உரிமை, எழுத்துரிமை, வாழ்வுரிமை கிடைக்கவும் ஊழலற்ற நிர்வாகத்தைக் கொண்டுவரவும் உழைப்பது!''

            ''ஒருவேளை அதிபர் தேர்தலில் வென்றால், தமிழர்கள் பிரச்னைக்கு என்ன தீர்வை முன்வைப்பீர்கள்?''
            ''ஓட்டுக்காகப் பொய் பேசும் அரசியல்வாதி இல்லை நான். இந்தப் பிரச்னைக்கான தீர்வு காகிதங்களிலோ, வார்த்தைகளிலோ இல்லை. மனித மனங்களில் இருக்கிறது. அதை நான் சொல்ல விரும்பவில்லை. செய்துகாட்டுவேன்.''

            ''சர்வதேச நீதிமன்றம் போர்க் குற்றங்களுக்காக சார்லஸ் டெய்லருக்கு 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்திருக்கிறது. இதுபற்றி உங்கள் கருத்து என்ன?''
            ''வரவேற்கிறேன். போர்க் குற்றங்களில் யார் ஈடுபட்டாலும் அதற்காகத் தண்டிக்கப்பட வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.'' 

            ''எதிர்கால வரலாறு உங்கள் பெயரை ஹிட்லர், முசோலினி, போல்பாட் வரிசையில் வைக்கும். இதை உணர்கிறீர்களா?''
            ''ராணுவத்தைக் கையாண்டவர்கள் என்பதாலேயே அவர்களோடு என் பெயரை வரலாறு சேர்த்துவிடாது. நீங்கள் குறிப்பிடு பவர்கள் எல்லோருமே சர்வாதிகாரிகள். நானோ ஜனநாயகத்துக்காக உழைத்துக்கொண்டு இருக்கிறேன்!''
ஆனந்த விகடன் ஜூன் 2012

4 கருத்துகள்:

 1. பொன்சேகா வேறு எப்படி பேசுவார்? யோக்கியவான் வேடம் தரிக்கத் தொடங்கி இருப்பது தமிழர்களின் வாக்குகளைத் தேர்தலில் பெறவே. இவர்கள் அனைவருமே கொடுமையின் சின்னங்கள் தாம். அறம் இவர்களை வீழ்த்தும் என்பது உறுதி.

  பதிலளிநீக்கு
 2. Behun choot chootiya fonseka and rajapaksa.what u both sow will reap for sure.ooparwala dek raha ha

  பதிலளிநீக்கு
 3. Hamara paswan ji ,advani ji,farooq abdhullah ji ,manmohan ji is watching u.U both killed innocent tamilians other than prabhakaran.fuck off.

  பதிலளிநீக்கு
 4. இப்படி ஒரு பேட்டி எடுக்க சமஸால் மட்டுமே முடியும்!

  பதிலளிநீக்கு