இந்தியர்கள் பேச மறந்த கதை

ம் காலத்தின் மிகப் பெரிய ஆராய்ச்சி என்று அதைச் சொல்லலாம். இந்தப் பேரண்டத்தின் ஆதியையும் அது உருவான அடிப்படையையும் கண்டறியும் ஆராய்ச்சி. நாம் வாழும் இந்த பூமியையே ஒரு சின்ன புள்ளியாகத் தன்னில் சுமந்துகொண்டிருக்கும் இந்தப் பேரண்டம் எப்படி உருவாகி இருக்கும்?
    சுமார் 1,370 கோடி ஆண்டுகளுக்கு முன் ஒரு பெருவெடிப்பு நிகழ்ந்தது. அப்போது வெடித்துச் சிதறிய கோடானுகோடி நுண்துகள்கள் இணைந்தே அணுக்களும் மூலக் கூறுகளும் கோள்களும் இந்தப் பேரண்டமும் உருவாயின என்பது விஞ்ஞானிகளின் நிலைப்பாடு. பெருவெடிப்பு நடந்தபோது, ஒளியைவிட அதிவேகத்தில் எல்லாத் திசைகளிலும் நுண் துகள்கள் சிதறின. அப்படிச் சிதறிய கணத்தில் அந்த நுண்துகள்களுக்கு நிறை இல்லை (நிறை என்பது புவியீர்ப்பு விசையைக் கழித்தது போகக் கிடைக்கும் எடை). அவற்றுக்கு நிறையைக் கொடுத்தது எது?, எப்படி அவை இணைந்து மூலக்கூறுகளாக, அணுக்களாக, கோள்களாக, நட்சத்திரங்களாக, பேரண்டமாக மாறின என்று விஞ்ஞானிகள் ஆராயத் தொடங்கியபோது, ‘துகள் அறிவியல்’ வளர ஆரம்பித்தது.
     இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அணு முதல் அண்டம் வரை சகலத்துக்கும் அவற்றின் இயக்கத்துக்கும் 16 துகள்களே அடிப்படை என்பது கண்டறியப்பட்டது. இங்கிலாந்து விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் குழுவினர் 1964-ல் இந்த 16 அடிப்படைத் துகள்களுக்கும் நிறை இருப்பதற்கு இதுவரை கண்டறியப்படாத ஒரு நுண்துகள்தான் காரணம் என்று கண்டறிந்தார்கள். ‘‘இந்த 16 துகள்களும் புலப்படாத ஆற்றலுடன் சேர்ந்து நிறையைப் பெறுகின்றன. அந்த ஆற்றல் களத்தையும் அதில் இருக்கும் கண்ணுக்குப் புலப்படாத நுண்துகளையும் கண்டறிந்தால், அதுவே பிரபஞ்ச ரகசியம்’’ என்றார் ஹிக்ஸ். ‘ஹிக்ஸ் போஸான்’ கோட்பாடு உருவானது. அதைக் கண்டறிந்தால்தான் பிரபஞ்சம் உருவான கதையான ‘பிரபஞ்ச இயக்கக் கோட்பாடு’ முழுமை பெறும் என்று விஞ்ஞானிகள் ஆராயத் தொடங்கினர். கண்டறியப்படாத அந்தத் துகளுக்கு ‘ஹிக்ஸ் போஸான்’ என்று பெயரிட்டனர்.
சரியாக, 125 கிகா எலெக்ட்ரோ வோல்ட்ஸ் உடைய துகளே ‘ஹிக்ஸ் போஸான்’ ஆக இருக்கக் கூடும் என்று விஞ்ஞானிகள் தீர்மானித்து இருந்தனர். கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு ஆய்வுக்குப் பின், கடந்த வாரம் சின்ன அளவில் ஒரு பெருவெடிப்பை - அதாவது ஆய்வுக்கூடத்தில் ஒரு செயற்கைப் பிரளயத்தை - நிகழ்த்தி 125.3 கிகா எலெக்ட்-ரோ வோல்ட்ஸ் உடைய துகளை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். அதாவது, 99.999 சதவிகித ‘ஹிக்ஸ் போஸான்’ அவர்களுக்கு அகப்பட்டுவிட்டது. முழு ‘ஹிக்ஸ் போஸான்’ துகளைக் கண்டறியும் ஆய்வு தொடர்கிறது.
     சரி, ‘ஹிக்ஸ் போஸான்’ என்ற பெயரில் ‘ஹிக்ஸ்’ என்பது பீட்டர் ஹிக்ஸைக் குறிக்கிறது; ‘போஸான்’ யாருடைய பெயரைக் குறிக்கிறது? ‘போஸான்’ என்பது இருவரின் பெயர்களைக் குறிக்கும். ஒருவர் ஐன்ஸ்டீன். இன்னொருவர் போஸ்... சத்யேந்திர நாத் போஸ்!
     இந்தியா கண்ட மகத்தான விஞ்ஞானிகளில் ஒருவர் சத்யேந்திர நாத் போஸ். இன்றைய மேற்கு வங்கத்தில், நாடியா மாவட்டம், பாரா ஜுகுலியா கிராமத்தில் 1894-ல் போஸ் பிறந்தார். சின்ன வயதில் இருந்தே படிப்பில் கெட்டிக்காரரான போஸ், கல்லூரியில் தேர்ந்தெடுத்த படிப்பு கணிதம். கல்கத்தா மாநிலக் கல்லூரியின் பொற்காலம் அது. கணிதம், இயற்பியல், உயிரியல், தாவரவியல், தொல்லியல் எனப் பல துறைகளில் வல்லுநரான ஜெகதீஷ் சந்திர போஸ், பிற்காலத்தில் இந்தியாவின் முதல் மருந்து நிறுவனமான ‘பெங்கால் கெமிக்கல்ஸ் அண்ட் பார்மாசூட்டிக்கல்’ஸை உருவாக்கியவருமான பிரபுல்ல சந்திர ராய் போன்றவர்கள் கல்கத்தா மாநிலக் கல்லூரியில் பேராசிரியர்களாகப் பணியாற்றிய காலம். போஸ் வாழ்வை வடிவமைத்ததில் அவர்களுடைய பங்கு முக்கியமானது. போஸ் முதுநிலைக் கல்வி படிக்கும்போது மேகநாத் சாஹா அங்கு வந்து சேர்ந்தார். 1915-ல் முதுநிலைக் கல்வித் தேர்வில் போஸ் பெற்ற மதிப்பெண்கள் கல்கத்தா பல்கலைக்கழக வரலாற்றில் இன்றளவும் யாராலும் முறியடிக்கப்படாத சாதனை. மேகநாத் சாஹா இரண்டாவது இடம் பிடித்தார்!
     கல்லூரிப் படிப்பு முடிந்த பின் கல்கத்தா பல்கலைக்-கழகத்தில் விரிவுரையாளரான போஸ், சாஹாவுடன் சேர்ந்து இயற்பியல் ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டார். ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கையை முதன்முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது போஸும் சாஹாவும்தான். 1924-ல் தாக்கா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும்போது, பிளான்க்கின் குவான்டம் கதிரியக்க விதி யைப் பற்றி அவர் உருவாக்கிய கட்டுரை குவான்டம் புள்ளியியல் தொகுப்பில் மிக முக்கியமானது. அந்தக் கட்டுரையை இங்கிலாந்து அறிவியல் சஞ்சிகைகளுக்கு அனுப்பியபோது அது திருப்பி அனுப்பப்பட்டது. போஸ் அதை ஐன்ஸ்டீனுக்கு அனுப்பினார். அந்தக் கட்டுரையின் முக்கியத்துவத்தை உணர்ந்த ஐன்ஸ்டீன், அதை தானே ஜெர்மன் மொழியில் மொழிபெயர்த்து ஐரோப்பிய இயற்பியல் சஞ்சிகையில் வெளியிடச் செய்தார்.
     இந்த அங்கீகாரத்துக்குப் பின் இரு ஆண்டுகள் ஐரோப்பிய ஆய்வகங்களில் போஸ் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, ஐன்ஸ்டீனும் போஸும் இணைந்து ஆய்வுகளை மேற்கொண்டனர். ‘போஸ் - ஐன்ஸ்டீன் புள்ளியியல் தொகுப்பு’ உருவானது. பின்னாளில், போஸின் கண்டு-பிடிப்புகள் ஐன்ஸ்டீன் அணுக்களில் பயன்படுத்தியபோது, ‘போஸ் - ஐன்ஸ்டீன் காண்டென்சேட்’ உருவானது. இது ‘ஹிக்ஸ் போஸான்’ ஆய்வுக்கு முக்கியமான உதவியாக அமைந்தது.
     கடந்த வாரம் செயற்கைப் பெருவெடிப்புச் சோதனை நடந்தபோது, பீட்டர் ஹிக்ஸ் எடின்பரோவில் இருந்து ஜெனிவாவுக்கு அழைக்கப்பட்டு இருந்தார். இப்போது அவருக்கு 83 வயதாகிறது. ‘ஹிக்ஸ் போஸான்’ துகள் கண்டறியப்பட்டது, இந்த ஆண்டு அவருக்கு நோபல் பரிசைப் பெற்றுத் தரக் கூடும். ‘‘வியத்தகு விஷயம் இது. என் வாழ்நாளிலேயே நடந்து இருக்கிறது. வீட்டில் கொஞ்சம் ஷாம்பைன் எடுத்துவைக்கச் சொல்ல வேண்டும்’’ என்று சொன்னார் ஹிக்ஸ்.
     போஸுக்கும் அவர் வாழ்நாளிலேயே நோபல் பரிசு அளிக்கப்பட்டு இருக்க வேண்டும். அவர் புறக்கணிக்கப்பட்டார். இந்த ஆய்வின் தொடர்ச்சியாக, ‘‘இருபதாம் நூற்றாண்டின் 10 தலையாய இந்திய அறிவியல் பங்களிப்புகளில் இடம்பெறத்தக்கவை போஸின் ஆய்வுகள். சர்வதேசம் அவருக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கவில்லை’’ என்று பேச ஆரம்பித்து இருக்கிறார்கள் வங்காளிகள். சரி, நோபல் பரிசு வழங்கவில்லை என்று நாம் அவர்களைக் குறை சொல்கிறோம். போஸ் உட்பட எத்தனை விஞ்ஞானிகளுக்கு நாம் இதுவரை பாரத ரத்னா வழங்கி இருக்கிறோம்?
ஆனந்த விகடன் ஜூலை 2012

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக