சி.பி.ஐ. விசாரணையே தனி: ஜெகந்நாதன்

எஸ்.ஜெகந்நாதன்
               
                   ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்கவைத்தது வாச்சாத்தி வழக்கின் தீர்ப்பு! உள்ளூர்க் காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையே பதிவுசெய்யப்படாத விசித்திரமான இந்த வழக்கில், பழங்குடிகளுக்கு எதிராக அரச வன்முறையில் ஈடுபட்ட 269 அரசு அலுவலர்களும் குற்றவாளிகள் எனத் தீர்ப்பு வர மிக முக்கியக் காரணம் மத்தியப் புலனாய்வு அமைப்பின் விசாரணை. இதற்காக நீதிமன்றம் மத்தியப் புலனாய்வு அமைப்புக்கு ரூ. 1 லட்சம் சன்மானம் அளிக்க உத்தரவிட்டது. ஒரு வழக்கு விசாரணைக்காக இப்படி வெகுமதி அளிக்கப்படுவது மத்தியப் புலனாய்வு அமைப்பின் வரலாற்றில் அநேகமாக இதுவே முதல் முறை. ஆச்சர்யமான இன்னொரு செய்தி, 19 ஆண்டுகளுக்கு இழுத்த இந்த வழக்கில், மத்தியப் புலனாய்வு அமைப்பு தன்னுடைய விசாரணையை வெறும் 13 மாதங்களுக்குள் முடித்தது. அதுவும் இந்த வழக்கின் பெரும் பகுதி விசாரணையை மேற்கொண்டது ஒரே ஒருவர்தான். எஸ்.ஜெகந்நாதன். ஓய்வு பெற்றுவிட்ட இந்த அதிகாரிக்கு இப்போது வயது 68. ஆனால், நம்ப முடியாத உற்சாகத்துடன் பேசினார்.


‘‘வாச்சாத்தி வழக்குத் தீர்ப்பு சந்தோஷம் அளிக்கிறதா?’’

‘‘நிச்சயமாக! வாச்சாத்தி வழக்கு மத்தியப் புலனாய்வு அமைப்புக்கும்கூட சவாலானதுதான். பொதுவாக, ஒரு வழக்கில் அதிகம் எங்களுக்கு உதவி கிடைக்கும் இடம் அரசுத் துறை வட்டாரம். வாச்சாத்தியிலோ நேர் எதிர். உதவிக்கு ஆள் கிடையாது. இன்றைக்குபோல செல்பேசி மாதிரியான வசதிகளும் அப்போது கிடையாது. மலையிலும் காட்டிலுமாக அலைந்தேன். ‘வல்லவனையும் தட்டுமாம் வழுக்குப் பாறை’ என்பார்கள். இந்த வழக்குக்கு அது ரொம்பப் பொருந்தும்!’’

‘‘இப்படி ஒரு வன்முறைக்கு எது அடிப்படைக் காரணமாக இருந்தது?’’
‘‘முதலில் வனத் துறையைச் சேர்ந்த ஒருவர் வாச்சாத்திக்கு சந்தன மரக் கடத்தல் தொடர்பாக விசாரிக்கச் சென்று இருக்கிறார். அவரை ஊர்க்காரர்கள் கடுமையாகத் தாக்கி இருக்கிறார்கள். இதற்குப் பதிலடி... அதாவது, அரசு அதிகாரிகள் மீது கை வைத்தால் என்ன நடக்கும் என்று உணர்த்தவே, திட்டமிட்டு இந்த வன்முறை நடத்தப்பட்டது.’’

‘‘விசாரணையின்போது அரசு அலுவலர்கள் தரப்பில் ஒரு சிலராவது நேர்மையாக வாக்குமூலம் அளித்தார்களா?’’
‘‘நீங்கள் வேறு... நீதிபதியே ‘எனக்குப் பாதுகாப்பு வேண்டும்’ என்று கேட்கும் அளவுக்கு இருந்தது அவர்கள் நடவடிக்கைகள். ஓர் உதாரணம் சொல்கிறேன். குற்றவாளிகளைப் பாதிக்கப்பட்ட பெண்கள் அடையாளம் காட்ட அணிவகுப்பு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. மூன்று முறை அடையாள அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்தும் ரகளைசெய்து அணிவகுப்பை நடத்தவிடாமல் செய்துவிட்டார்கள் அரசு அதிகாரிகள். பாதிக்கப்பட்டவர்களை மிரட்டுவது, பணம் கொடுத்துப் பேரம் பேசுவது என ஏகப்பட்ட இடைஞ்சல்கள். பாதிக்கப்பட்ட பெண்களையே அடையாள அணிவகுப்புக்கு வேட்டி, சட்டை, முண்டாசோடு ஆண் வேஷத்தில்தான் அழைத்துச் சென்றேன். ‘விசாரணைக்கு ஒத்துழைக்க முடியாது, முடிந்ததைச் செய்துகொள்ளுங்கள்’ என்று சொன்ன அதிகாரிகள் ஏராளம்.’’

‘‘பொதுமக்கள் மத்தியில் மத்தியப் புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு என்றால் தனி மதிப்பு இருக்கிறது. அப்படி என்ன விசேஷம் உங்கள் விசாரணையில்?’’
‘‘மாற்றி யோசிக்கக் கொடுக்கப்படும் பயிற்சிதான். உங்களுக்குத் தெரியுமா? மத்தியப் புலனாய்வு அமைப்பில் உள்ள மொத்த போலீஸ் படையின் எண்ணிக்கையும்  4,024 பேர்தான். பெரும்பாலான வழக்குகளைத் தனி ஆளாகத்தான் விசாரிக்க வேண்டி இருக்கும். நான் விசாரித்த ஒரு வழக்கு இது.

 ஒரு வி.ஐ.பி. தம்பதி. வீட்டில் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். சின்னதாக ஒரு சத்தம். கணவன் தலையில் ரத்தம். அப்படியே சரிகிறார். யாரோ சுட்டு இருக்கிறார்கள். ஆனால், வேறு எந்தத் துப்பும் கிடையாது. என் விசாரணைக்கு வந்தது. வீட்டைச் சுற்றிப் பார்த்தபோது சுவரில் ஓட்டை தெரிந்தது. அதற்கு நேராக இருந்த மரத்தைப் பார்த்தபோது அதில் குண்டு பாய்ந்து இருந்தது. அது ஒரு பெல்லட். மும்பை தாதாக்களிடம் மாறுவேஷத்தில் சென்று விசாரித்தபோது, அந்த வகை பெல்லட் துபாயில்தான் கிடைக்கும் என்று தெரிந்தது. உள்ளூர் விமான நிலையத்தில் விசாரித்தபோது, கொலை நடந்த அன்று துபாயில் இருந்து இருவர் அந்த ஊருக்கு வந்து அடுத்த விமானத்திலேயே திரும்பி இருப்பது தெரியவந்தது.  வெளிநாட்டுக் கூலிப் படையை அமர்த்தி, வேலை முடிக்கப்பட்டு இருப்பதைக் கண்டுபிடித்தேன். எங்கள் விசாரணைக்கு என்று நாங்கள் எல்லை வைத்துக்கொள்வது இல்லை. இதுதான் எங்கள் தனித்துவம்.’’

‘‘அரசியல் பின்னணி உள்ள வழக்குகளில், குற்றவாளிகள் தப்பிக்கவும் ஆதாரங்களை அழிக்கவும் எல்லையில்லா அவகாசத்தைக் கொடுத்துவிட்டு சோதனை, விசாரணை என்று ஆரம்பிப்பதும்கூட உங்கள் தனித்துவம்தானா?’’
‘‘அப்படி நினைக்காதீர்கள். பத்திரிகைகளில் செய்தி வந்த பிறகுதான் நாங்கள் விசாரணையைத் தொடங்கி இருப்பதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால், எங்கள் விசாரணை கிட்டத்தட்ட அப்போது முடியும் கட்டத்துக்கு வந்து இருக்கும். ஒரு வழக்கு மத்தியப் புலனாய்வு அமைப்பின் விசாரணைக்கு வரலாம் என்று தெரிந்ததுமே, நாங்கள் விசாரணையைத் தொடங்கிவிடுவோம். இதை நாங்கள் ரகசிய விசாரணை என்று சொல்வோம்.

மத்தியப் புலனாய்வு அமைப்புக்கு என்று தனி அதிகாரம் இருக்கிறது. மத்தியப் புலனாய்வு அமைப்பு நினைத்தால், எந்த ஒரு துறையின் தலைமை அலுவலகத்தில் இருந்தும் எவரைப் பற்றிய தரவுகளையும் பெற முடியும். உதாரணமாக, நீங்கள் மத்தியப் புலனாய்வு அமைப்பின் பார்வைக்குள் வந்துவிட்டால், நீங்கள் யார், உங்கள் பின்னணி என்ன, அலுவலகம் முடிந்ததும் நீங்கள் எங்கே செல்கிறீர்கள், எங்கெல்லாம் உங்களுக்குச் சொத்துகள் இருக்கின்றன, எந்தெந்த வங்கிகளில் எவ்வளவு பணம் இருக்கிறது... இப்படி எல்லா விவரங்களையும் சேகரித்துவிட்டுத்தான் உங்களிடம் விசாரணைக்கே வருவோம். முக்கியமாக, உங்கள் எதிரிகள்தான் எங்கள் விசாரணைக்கு மிக முக்கியமான நண்பர்களாக இருப்பார்கள். உங்கள் கார் டிரைவரும் வீட்டு வேலைக்காரியும்கூட உங்களுக்கு முன்பாகவே எங்கள் புலனாய்வின் கீழ் வந்திருப்பார்கள். பிறகு, நீங்கள் குறிப்பிட்டதுபோல, ‘எல்லாம் முடிந்த பின்’ உங்களிடம் விசாரணைக்கு வரும்போது, நீங்கள் எங்கள் கேள்விகளுக்கு வரிசையாகப் பொய் சொல்லத் தொடங்குவீர்கள். நீங்கள் குற்றவாளியா, இல்லையா என்ற உண்மையை உங்கள் பொய்கள் எங்களுக்குச் சொல்லிவிடும். ஆகையால், மத்தியப் புலனாய்வு அமைப்பின் விசாரணை என்பது விளையாட்டு அல்ல. ஒரு வழக்கில் மத்தியப் புலனாய்வு அமைப்பு எப்போது விசாரணையைத் தொடங்கும் என்பது யாருக்குமே தெரியாதது.’’

‘‘அலைக்கற்றை ஊழல் உட்பட நாட்டின் முக்கியமான பல ஊழல்களின் எதிர்காலம் இப்போது மத்தியப் புலனாய்வு அமைப்பின் கையில் இருக்கிறது. முடிவு எப்படி இருக்கும்?
‘‘உலகிலேயே சிறந்த புலனாய்வு அமைப்புகளில் ஒன்று மத்தியப் புலனாய்வு அமைப்பு. நிச்சயமாக இந்த வழக்குகளிலும் நம்முடைய அதிகாரிகள் தங்கள் திறமையை வெளிக்காட்டுவார்கள் என்று நம்புகிறேன். அதேசமயம், மத்தியப் புலனாய்வு அமைப்பு மேலும் வலுப்பட இரு நடவடிக்கைகள் அவசியம். கூடுதல் ஊழியர்கள் நியமனம், அரசியல் குறுக்கீடுகளில் இருந்து விடுதலை. இவை இரண்டும் நடக்கும்பட்சத்தில், இதுபோன்ற கேள்விகளுக்கே தேவை இருக்காது.’’

ஆனந்த விகடன் அக்டோபர் 2011

3 கருத்துகள்:

  1. Yes, very fine article & proud for our CBI. But Central politician more powerful then our CBI. This one black mark.

    பதிலளிநீக்கு
  2. அதேசமயம், மத்தியப் புலனாய்வு அமைப்பு மேலும் வலுப்பட இரு நடவடிக்கைகள் அவசியம். கூடுதல் ஊழியர்கள் நியமனம், அரசியல் குறுக்கீடுகளில் இருந்து விடுதலை. இவை இரண்டும் நடக்கும்பட்சத்தில், இதுபோன்ற கேள்விகளுக்கே தேவை இருக்காது.’’
    this is the most impartant factor.

    பதிலளிநீக்கு