சிம்மக்கல் கறி தோசையும் கோலா உருண்டையும்

      
                    ன்னதான் வாழ்க்கை வசதிக்காக நகரங்களை நோக்கி ஓடினாலும் ஒவ்வொருவருக்கும் கிராமத்தின் மீது ஒரு காதல் இருக்கத்தானே செய்கிறது. நகரத்தின் எல்லா வசதிகளோடும் ஒரு பெரிய கிராமம் கிடைத்தால் எப்படி இருக்கும்? மதுரைக்காரர்களுக்குக் கொஞ்சம் கொடுப்பினை இருக்கிறது!

                           மதுரையின் ஒவ்வோர் அம்சத்திலும் ஒட்டிக்கொண்டிருக்கும் அந்தக் கிராமத்து வாசனைதான் சிம்மக்கல் கறி தோசை, கோலா உருண்டையின் விசேஷம். ஊர் உலகம் எல்லாம் ரவா தோசை, வெங்காய தோசை, மசாலா தோசை என்று நூறு ரகமாய்ப் போட்டும் மாறாத தோசையின் சைவ முகத்தை ஆராவாரம் இல்லாமல் அசைவமாக மாற்றியிருக்கிறார்கள் மதுரைக்காரர்கள். மதுரை சிம்மக்கல்லில் இரவில் மட்டும் திறந்திருக்கிறது ‘கோனார் மெஸ்’. பெயர்ப் பலகையெல்லாம் கிடையாது; கேட்டால் "இது மக்கள் வைத்த பெயர்'' என்கிறார்கள். வழக்கமாக அசைவச் சாப்பாட்டுக் கடைகளில் கிடைக்கும் புரோட்டா, சால்னா, பிரியாணி கதையெல்லாம் இங்கு கிடையாது. சகலமும் கறி தோசைதான். வெள்ளாட்டுக் கறி தோசை, மூளை தோசை, ஈரல் தோசை, நாட்டுக்கோழிக் கறி தோசை என்று கறிப் பித்துதான் பிடிக்கவைக்கிறார்கள். தொட்டுக்கொள்ளவும் இதே வகைகளில் தினுசு தினுசாய்க் குழம்பு; எதைக் கேட்கிறீர்களோ அதைத் தருகிறார்கள்.

                           ஆமாம், அதென்ன கறி தோசை? வேகும் தோசை மேல், முட்டையை ஊற்றி, அது இறுகும் சமயத்தில், மதுரை மசாலா சேர்த்த கறி சுக்கா பரப்பி, மிளகுத் தூள் தூவினால், கறி தோசை தயார். படிக்க எளிதாக இருக்கலாம்; ருசிக்கச் செய்வது கடினம். சும்மா சொல்லக் கூடாது; பிரமாதப்படுத்துகிறார்கள். அது சரி, கறி தோசை உருவான கதை தெரியுமா? அது கறி தோசையைவிடவும் ருசிகரமானது.

                           மதுரையில் அந்தக் காலத்தில் ஆட்டுக்கால் ரசம் பிரபலம். பொழுது சாயும் வேளையில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சைக்கிள், தள்ளுவண்டி, ஒண்டுக்கடை என்று பல்வேறு அவதாரங்களில் ஆட்டுக்கால் ரசம் கிடைக்கும். மெல்லமெல்ல ரசத்துடன் குடல் பிரட்டல், மூளை வறுவல், ரத்தப் பொறியல் என்று மற்ற வகையறாக்களையும் விற்கத் தொடங்கினார்கள். இப்படி விற்கப்படும் ஐட்டங்களுக்கு ஒரு விசேஷம் என்னவென்றால், பெரும்பாலும் அவை வீட்டுச் சமையலாக இருக்கும். பெண்கள் சமைத்துக் கொடுப்பதை ஆண்கள் விற்பார்கள்.

                           இப்படிதான் 1940-களில் சிம்மக்கல்லில் ஒரு சின்னக் கடையைத் தொடங்கினார் எம். சுந்தரம் கோனார். வீட்டில் மனைவி கண்ணம்மாள் சமைத்துக் கொடுக்கும் கறி வகையறாக்களுடன் இட்லி, ஊத்தப்பமும் போட்டு விற்றார். அதிகம் காரமில்லாத கண்ணம்மாளின் சமையல் மதுரைக்காரர்களுக்கு ரொம்பவும் பிடித்துப்போனது; ‘கோனார் மெஸ்’ பிரபலமானது. கோனாருக்கு தோசையைச் சுக்காவுடன் சேர்த்துச் சாப்பிடுவதில் ஒரு பிரியம். அந்தப் பழக்கம் அப்படியே கடைக்கு வந்தவர்களையும் தொற்றிக்கொள்ள பின்னாளில், ‘கோனார் மெஸ்’ என்றாலே கறி தோசை என்றாகிவிட்டது.

                           இவர்கள் கடையின் மற்றொரு விசேஷ ஐட்டம் கோலா உருண்டை. கறி கைமாவும் தேங்காய் மசாலாவும் கலந்த இந்தக் கோலா உருண்டை, கறிப் பண்டங்களிலேயே ஒரு தனி ரகம். மெனக்கெடப் பயந்து வீடுகளிலேயே டாட்டா சொல்லிவிட்ட கோலா உருண்டையை அலுக்காமல் போட்டுத் தருகிறார்கள் சரியான பதத்தில். அப்புறம் என்ன? மதுரையிலேயே இப்போது மூன்று இடங்களில் இயங்குகிறது ‘கோனார் மெஸ்’.

                           சுந்தரம் கோனாருக்குப் பிறகு கடையை நிர்வகித்துவரும் அவருடைய மகன் மாணிக்கம் சொல்கிறார்: "குடும்பத்திலுள்ள அனைவரும் இத்தொழிலில் ஈடுபட்டிருக்கிறோம். எல்லாச் சமையலும் பெண்கள்தான். தோசையை மட்டும்தான் கடையில் போடுகிறோம்; அதுவும் வீட்டுப் பக்குவப்படி. மாறாத மதுரை கிராமத்துக் கைப்பக்குவம்தான் ருசிக்குக் காரணம். மற்றபடி, நல்ல கறி அமைந்துவிட்டாலே கறி சமையலில் பாதி ருசி கிடைத்ததுபோல்தான். எங்கள் உறவினர்கள் எல்லாருமே கறிக் கடைக்காரர்கள். கறியிலேயே ஊறி வளர்ந்துவிட்டதால் கறிப் பக்குவம் அத்துப்படியாயிற்று'' என்கிறார் மாணிக்கம்.

                           பேசிக்கொண்டிருந்தபோது கறி தோசையும் கோலா உருண்டையும் வந்தது. "தொட்டுக்கை என்ன வேண்டும்? தலைக்கறிக் குழம்பு, குடல் குழம்பு; மூளைக் குழம்பு; நெஞ்சுக் குழம்பு...'' அடுக்கிக்கொண்டே போனார்கள்... நமக்குதான் எதைச் சொல்வதென்று தெரியவில்லை!

‘சாப்பாட்டுப் புராணம்’ புத்தகத்திலிருந்து...
ினி 2008

11 கருத்துகள்:

 1. மதுரை ஒரு பெரிய கிராமம் என்பது உண்மையே . .

  பதிலளிநீக்கு
 2. If you would like to write about food in Madurai, you can write for atleast 20 such posts....

  பதிலளிநீக்கு
 3. படிக்கும் போதே சாப்பிட வேண்டும் எனும் எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை

  பதிலளிநீக்கு
 4. படிக்கும் போதே சாப்பிட வேண்டும் எனும் எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை

  பதிலளிநீக்கு
 5. ரொம்ப மாறிடுச்சு சமஸ். சின்ன கடையாய் இருந்தபோது நாவில் தவழ்ந்த சுவை இன்று காணாமலே போய் விட்டது. திண்டுக்கல் தலைப்பாகட்டி பிரியாணி எப்படி சென்னையில் மொக்கை பிரியாணி ஆச்சோ அதே கதைதான்.

  பதிலளிநீக்கு
 6. சாதரணமான கட்டுரை .கடைகளில் கறி போடுவதே தவறிப்போன காலங்களில் கறியை எழுத்தில் பார்க்கும்போதே எச்சில் ஊறுகிறது.சுவாரிசியமாக இருக்கிறது -பீட்டர் துரைரா ஜ் ,பல்லாவரம்

  பதிலளிநீக்கு
 7. madurakkaran சொல்வது சரி. ஒரு காலத்தில் ருசி இருந்தது. ருசி மாறி சில வருடங்கள் ஆகி விட்டது.. குழம்பெல்லாம் மசாலா வாடை அடிகிறது.

  பதிலளிநீக்கு
 8. கோனார் கடை கறி தோசை பிரபலமானது. நண்பர்கள் கல்யானம் நிச்சயதார்த்தம் என்றால் கோனார் கடையில் விருந்து நிச்சயம். ஆனால் அன்றய ருசி இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டூம் .---காஸ்யபன்.

  பதிலளிநீக்கு
 9. Wow!
  Many of my friends and relatives who read சாப்பாட்டு புராணம் recently were surprised to hear that the author of யாருடைய எலிகள் நாம், அரசியல் பழகு and other Hindu Tamil articles is the author of சாப்பாட்டு புராணம் too. Wow! What a versatility!
  Expecting books like சாப்பாட்டு புராணம் also from you. :-)
  All the best Samas!

  பதிலளிநீக்கு