மாமா என் நண்பன்!
ட்பு, காதல். பெயர்  வெவ்வேறாக இருந்தலும் உறவுக்கான அடிப்படை ஒன்றுதான்… பிடித்துப்போவது. உலகத்தில் ஒருவரை வெறுக்க எப்படிக் காரணம் தேவை இல்லையோ அதேபோல, பிடிக்கவும் காரணங்கள் தேவை இல்லை. இப்படித்தான்  என்னுடைய பெரிய மாமா திரு. ராஜப்பா எனக்குப் பிடித்துப்போனார்.

எனக்கு 6 வயது இருக்கும்போது தனிப்பட்ட சில காரணங்களால் அம்மாவைப் பிரிந்திருக்க வேண்டிய சூழல். என்னுடைய தாத்தா ராஜகோபாலன் என்னைக் கூப்பிட்டு, “யார் வீட்டில் இருக்க விருப்பப்படுகிறாய்?” என்று கேட்டபோது நான் சொன்ன இடம் - பெரிய மாமா வீடு. ஒரு வேடிக்கை என்னவென்றால், குழந்தைகள் பிரியப்பட்டுச் செல்லும்படியான எந்த விசேஷங்களும் என்னுடைய பெரிய மாமாவிடம் கிடையாது. இன்னும் சொல்லப்போனால், குழந்தைகளை மிரட்டும் குணம் அவருடையது. இன்னொரு விஷயம், உறவினர்களிலேயே அவர்தான் தொலைவில் – கீழக்கரையில் இருந்தார் (நான் மன்னார்குடியில் இருந்தேன்). பின்னர் ஏன் பெரிய மாமா வீட்டுக்குப் போக வேண்டும் என்று சொன்னேன்? தெரியவில்லை.

மாமாவால் என்னை வைத்துக்கொள்ள முடியவில்லை. மீண்டும் மன்னார்குடி வந்தேன். வருஷத்துக்கு நாலைந்து முறை தாத்தாவைப் பார்க்க மாமா வருவார்; அல்லது விசேஷ காரியங்களின்போது மாமா வருவார். அப்படி வரும் மாமாவை ஊருக்கு வழியனுப்புவது என்னுடைய வழக்கம் ஆயிற்று. எங்கள் வீட்டுக்கும் பஸ் நிலையத்துக்கும் ஒரு கி.மீ. தொலைவு இருக்கும். ஆரம்ப நாட்களில் நடைத்துணையாக, அப்புறம் சைக்கிள் ஓட்டியாக… இப்படித் துணைக்குப் போகும் நாட்களில்தான் மாமாவுக்கும் எனக்குமான நட்பு துளிர்விட ஆரம்பித்தது.

பொதுவாக, எங்கள் வீட்டில் மாமாவிடம் பேச எல்லோரும் பயப்படுவார்கள். எனக்கோ வாய் ஜாஸ்தி. எல்லோரையும்போல, மாமாவிடம் பேச ஆரம்பித்தேன். நிறையத் திட்டுவார். ஆனால், நிறைய ரசிப்பார். மாமா வசப்பட ஆரம்பித்தது இப்படித்தான் என்று நினைக்கிறேன்.
மாமா என்னிடம் என்னவெல்லாம் பேசுவார், நான் மாமாவிடம் என்னவெல்லாம் பேசுவேன்? மிக நெருக்கமான அந்தரங்க சினேகிதர்கள் இருவரின் உரையாடலில் என்னவெல்லாம் இருக்குமோ, அவ்வளவும் எங்கள் உரையாடலில் இருக்கும். அவருடைய தாய் – தந்தையர் மீது அவர் வைத்திருந்த பிரியம் – பின்னாட்களில் பெற்றோரைப் பக்கத்தில் இருந்து பார்க்க முடியாததால் அவருக்கு ஏற்பட்ட துயரம், சகோதர – சகோதரிகள் குடும்பங்கள் மீதான அவருடைய அக்கறைகள் - ஆற்றாமைகள், பிள்ளைகள் மீதான நம்பிக்கைகள்
  - வருத்தங்கள்… இப்படி ஆவில் தொடங்கி ஃ-ல் முடியும் அவருடைய பால்ய காலக் காதல் கதைகள், அடல்ஸ் ஒன்லி ஜோக்ுகள் வரை எல்லாவற்றையும் பேசுவோம்.
 
என் அப்பாவின் மீது அளவு கடந்த பாசம் என் மாமாவுக்கு உண்டு. அப்பாவின் ஞாபகமாக அவர் அளித்த சில பொருட்கள் இன்னமும் மாமாவின் பீரோவில் உண்டு.  மிகக் குறுகிய காலம் என்றாலும், ஒரு நெருக்கமான சிநேகிதனாக இருந்திருக்கிறார் என் அப்பா. அவருடைய பிரதியாகவே என்னை மாமா பார்த்தார் என்பதைப் பின்னாளில் உணர்ந்தேன்.

என் தாத்தா
  அடிக்கடிச் சொல்வார்: பிரச்னையே தராத பிள்ளை அவன் என்று. தாத்தாவுக்கு மொத்தம் 8 பிள்ளைகள். இரண்டு ஆண் பிள்ளைகள்; ஆறு பெண் பிள்ளைகள். மாமாதான் மூத்தவர்.  சின்ன வயதில் மாமா கையில் சில்லறைக் காசுகளைக் கொடுத்துவிட்டால் போதுமாம். அவர் பாட்டுக்கு விளையாடிக்கொண்டிருப்பாராம். தாத்தா ஹோட்டல் நடத்திய காலகட்டத்தில் என் மூத்த பெரியம்மா மீனாவின் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு ஆளுக்கு ஒரு கையில் வீட்டில் செய்த பட்சணங்களைக் கடைக்கு எடுத்துச் செல்வார்களாம். மற்ற பிள்ளைகள் தாத்தா வசதியான பின் பிறந்தவர்கள். கஷ்டப்பட்டு முன்னேறிய காலத்தில் பிறந்த குழந்தைகள் என்பதாலேயே தாத்தாவுக்கு மாமா மீதும் பெரியம்மா மீதும் தனிப் பிரியம் உண்டு.

மாமாபோல ஒரு பவ்யமான பிள்ளையைப் பார்க்க
  முடியுமா? இன்றைக்கெல்லாம் முடியாது என்று தோன்றுகிறது. தாத்தா சாகும் வரை  அவர் முன் உட்கார மாட்டார்  மாமா. கடைசிக் கால கட்டத்தில் கால் உடைந்து  கட்டுப் போட்ட நிலையில் அவர் நின்றுகொண்டே பேசிச் சென்றது ஞாபகத்தில் இருக்கிறது. ஒரு முறையேனும்  தாத்தாவின் வார்த்தைகளுக்கு மறு வார்த்தை பேசி நான் பார்த்தது இல்லை. ஒரு சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், தாத்தாவும் மகனிடம் உள்ள பிரியத்தை வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார்; மாமாவும் தன் தந்தையிடம் உள்ள பிரியத்தை வெளிக்காட்டிக்கொள்ள மாட்டார். தாத்தா இறந்தபோது மாமா அழவே இல்லை. நள்ளிரவு நேரம். எல்லோரும் அழுதுத் தீர்த்து அடைத்து உட்கார்ந்திருந்த நேரம். எதிர் வீட்டில் நின்று தாத்தாவின் சடலத்தையே பார்த்துக்கொண்டிருந்தார் மாமா. அறைக்குள் சென்றார். பின்னாடியே போனேன். அரை மணி நேரம் என் கைகளைப் பிடித்துக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதார்.  மாமா அழுதுப் பார்த்தது அதுவே முதல் முறை.

ஒரு மனிதன் தன் தந்தையிடம், தாயிடம், மனைவியிடம், பிள்ளைகளிடம் நெருக்கமாக இருப்பது ஆச்சரியம் அல்ல. மாமாவின் விசேஷமே அவர் பழகிய ஒவ்வொருவரிடமும் இப்படி நெருக்கமாக இருப்பார் என்பதுதான். இந்த நெருக்கத்தை ஒருபோதும் அவர் வெளிப்படுத்த மாட்டார். கூடாது என்றில்லை; அவருக்குத் தெரியாது. என் விஷயத்திலுமேகூட அப்படிதான் நடந்தது நீண்ட காலம்.  பள்ளிக்கூடங்களில் படிக்கும் காலம் தொடங்கி  பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி என்று பரிசு வாங்கி வந்து மாமாவிடம் காட்டினால், “போய் படிக்கும் வழியைப் பார் ” என்பார். ரொம்ப ஏமாற்றமாக இருக்கும். கல்லூரிப் படிப்பை முடிக்கும் காலம். ‘இந்தியன் இனி’ பத்திரிகையைத் தொடங்கி தொடக்க விழாவுக்கு மாமாவை அழைத்திருந்தேன். அன்றைக்கு விழாவில் பேசினார்.  “ரொம்ப நாள் அவனை ஏமாற்றிவிட்டேன். ஒவ்வொரு முறை அவன் பரிசு வாங்கி வரும்போதும் அவ்வளவு சந்தோஷமாக இருக்கும், பெருமையாக இருக்கும். ஆனால், வெளியே சொன்னால், படிப்பு ஆர்வம் போய்விடுமோ என்று பயந்தே நான் சொன்னதில்லை. இனியும் நான் மறைக்க முடியாது. முடவன் கொம்புத்தேனுக்கு ஆசைப்படலாமா என்பார்கள். யார் துணையுமற்ற முடவனான என் மாப்பிள்ளை கொம்புத்தேனை நிச்சயம் ஒருநாள் எடுப்பான்” என்றார்.

அவ்வளவு பாசம் வைத்திருந்தாலும், என் காதல் திருமணத்துக்கு வரவில்லை. “நான் உன்னைத்
  தடுக்கவில்லை; அதேசமயம், ஆதரிக்கவும் மாட்டேன். இன்றைக்கு உன் திருமணத்துக்கு வந்தால், நாளைக்கு அதுவே குடும்பத்தில் எல்லாப் பிள்ளைகளுக்கும் முன்னுதாரணம்  ஆகும். நீ சரியான முடிவை எடுப்பாய்; ஆனால், மற்றவர்களுக்கு அந்தப் பக்குவம் இருக்கும் என்று நினைக்க முடியாது. நாளைக்கு உன்னைக் காரணம் காட்டியே அத்தனை பேரும் அத்துமீறுவார்கள். திருமணத்தை முடி. எல்லோர் ஆசிர்வாதத்தையும் பெறு. என் ஆசியும் உண்டு. ஆனால், முதல் ஆசியாகக் கிடைக்காது; கடைசி ஆசியாகத்தான் கிடைக்கும்” என்றார்.  எல்லாக் காலகட்டங்களிலும் குடும்பத்தின் மூத்தவர் என்ற கடமை உணர்ந்தே செயல்பட்டார்.

தனக்கு என்று எதையும் செய்துகொள்ள மாமாவுக்குத் தெரியாது. இப்போதும் ஞாபகம் இருக்கிறது. அவருடைய பெரும்பாலான பனியன்களில் ஓட்டை இருக்கும். அத்தையோ, அத்தானோ பார்த்து வேறு வாங்கி வந்தால்தான் அவை மாறும். வங்கியில் கடைசி ஆளாகப் பணி முடித்து வெளியேறுபவராக மாமாதான் இருப்பார். எல்லோர் வேலைகளையும் இழுத்துப்போட்டுக்கொண்டு செய்வார்.
  விவரம் தெரியாத நாட்களில் இதை எல்லாம் நான் கிண்டல் அடித்தது உண்டு. ஆனால், இன்றைக்கு  மாமா பனியன்போலவே என்னுடைய பனியன்களும் ஓட்டையாகவே இருக்கின்றன. அலுவலகத்தில் கடைசி ஆளாக வெளியேறுகிறேன்.  என்னிடம் நிறைய பேர் கேட்பார்கள்: “உன்னிடம் உள்ள நேர்மையும் கறார்தன்மையும் எங்கிருந்து வந்தன?” என்று. நிச்சயம் அவை என் தாய் – தந்தையிடமிருந்து வந்திருக்க வாய்ப்பில்லை; என்  தாத்தாவிடமிருந்தும்  மாமாவிடமிருந்துமே வந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

ஒருமுறை மாமா அலுவலகத்துக்குச் சென்றபோது நடந்த சம்பவம் இது. மாமாவுக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாது. மாமா
  தன் மேஜையில் பெரியார் படத்தை வைத்திருந்தார். மாமாவைப் பிடிக்காத ஒருவர்  - இதுபற்றி உயர் அதிகாரியிடம், “அரசியல்வாதி படத்தை எப்படி அலுவலகத்தில் வைக்கலாம்?”  என்று புகார் சொல்ல, மாமா அந்த அதிகாரியை அழைத்துக்கொண்டு வங்கியில் ஒவ்வொரு மேஜையாகச் சென்று காட்டினார்.  எல்லோர் மேஜைகளிலும் கடவுள் படம் அல்லது சங்கராச்சாரியார் படம். மாமா அதிகாரியிடம் கேட்டார்: “இதை எப்படி அனுமதிக்கிறீர்கள்?” அதிகாரி சொன்னார்: “அவை சுவாமி படங்கள்.” மாமா பதிலுக்குப் பெரியார்  படத்தைக் காட்டிச்  சொன்னார்: “அப்படியா? இதுவும் சுவாமி படம்தான். இவர்தான் என் சுவாமி. என் இனத்துக்கு சுவாமி.” – சிறுநீரகம் செயலிழந்த நிலையில், உடல் முழுவதும் பொத்தல் துளைக்கப்பட்டு, துடிதுடித்த நிலையிலும், தன் கொள்கையில் உறுதியாக இருந்தார்.

மாமா இறந்த அன்று அவர் நெற்றியில் விபூதி பூச நான் அனுமதிக்கவில்லை. ஆனால், என் நெற்றியிலோ எப்போதும்போல, விபூதிப் பட்டை. என் பின்னால் ஒருவர் பேசிக்கொண்டிருந்தார்: “என்ன விசித்திரமான குடும்பமாக இருக்கிறது? இவன் நெற்றி முழுவதும் பட்டை போட்டுக்கொண்டு பிணத்தின் நெற்றியில் விபூதி பூசக் கூடாது என்கிறான்?” நான் சொன்னேன்: “
  ஒருவேளை நான் இறந்து என் பிணத்தை அனுப்பும் வேலையில் மாமா ஈடுபட்டிருந்தால் என்ன செய்திருப்பார் தெரியுமா? என் நெற்றி முழுவதும் விபூதி பூசச் சொல்லி இருப்பார்.”

ஒரு வீட்டில் முதியவர் ஒருவர் இறப்பது பெரிய இழப்பு அல்ல. எங்கள் தாத்தாவின் இழப்பை நாங்கள் அப்படித்தான் ஏற்றுக்கொண்டோம். காரணம், அப்போது தாத்தாவை ஈடுசெய்ய மாமா இருந்தார்.
  ஆனால், மாமாவின் இழப்பை அப்படி ஈடுசெய்ய முடியவில்லை. காரணம், அவர் இடத்தில் வேறு யாரையும் வைத்துப் பார்க்க முடியவில்லை. இவ்வளவு எழுகிறேன்… அப்படி என்ன எனக்கு மாமா செய்துவிட்டார்? பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. ஆனால், மிகப் பெரிய ஆன்ம பலத்தைத் தந்திருந்தார். வாழ்வில் எப்போதாவது தோற்றால், வழுக்கி விழுந்தால், வாழ்க்கை தூக்கி அடித்தால்… இப்படியான பயம் வரும்போதெல்லாம் என் மனதுக்குள் சொல்லிக்கொள்வேன்: “கவலைப்படாதே… தூக்கிவிட மாமா இருக்கிறார்.” எனக்கு மட்டும் அல்ல. என் குடும்பத்தின் ஒவ்வொரு அங்கத்தினருக்கும் இந்த ஆன்ம பலத்தை மாமா தந்திருந்தார். இனி ஒவ்வொரு அடியையும் பத்ினுடேயே எடத்ுவைக்கேண்டும், ஒவ்வொரு அடியும் சொல்லும்... மாமா இப்ு இல்லை!

6 கருத்துகள்:

 1. மனசு வலிக்கிறது... தாய் மாமன் என்ற பந்தம் கிடைப்பதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். என்னுடைய மாமாவையும் நினைவுபடுத்துகிறது இப்பதிவு. நீங்கள் இழந்து வாடுகிறீர்கள்...

  கவலைப்படாதீர்கள்... நீங்களும் உங்களுடைய சகோதரிகளின் பிள்ளைகளுக்கு அந்த "ஆன்ம பலத்தை" தரலாம்...இல்லையா..? அவ்வாறு செய்து இந்த இழப்பை ஈடுகட்ட முயற்சியுங்கள்...
  இன்றும் எனக்கு அந்த பந்தமும், பாசமும் கிடைத்துக்கொண்டிருக்கிறது.. கடவுளுக்கு நன்றி சொல்கிறேன்...
  பகிர்ந்த உங்களுக்கும் நன்றி....!!!

  பதிலளிநீக்கு
 2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 3. ராஜப்பா -என் நண்பன் ராஜாவின் அப்பாவாக எனக்கு அறிமுகமானவர். பின் என் நண்பனைவிட எனக்கு பிடித்த நண்பனாக ஆனவர்.பட்டுக்கோட்டைக்கு மாற்றலாகி வந்தபோதுதான் எங்கள் பரிச்சயம், அது அவர் உலகைவிட்டு போகும்வரை தொடர்ந்தது என் பாக்கியம். இதுவரையிலான் என் வாழ்வில் என்னைவிட வயதில் மூத்தவர்களிடம் நான் இவ்வளவு சகஜமாக பழகியதில்லை. என் தந்தையின் வயது, ஆனால் என் நண்பனைப்போல் மனது. பட்டுகோட்டை ஸ்டேட் வங்கியில் பணிபுரியும்பொது நானும் நண்பன் ராஜராஜனும் அவரை அழைக்க அலுவலகம் செல்வோம். அங்கு அவரும் வாட்ச்மேனும் மட்டுமே இருப்பார்கள். அலுவலகத்துக்கு முதல் ஆளாக சென்று கடைசி ஆளாக திரும்புபவர் அவராகத்தான் இருப்பார். கேள்வியால் துளைத் தெடுப்பவர் அனால் ஒவ்வொரு கேள்வியிலும் உண்மையும் நியாயமும் இருக்கும். அவர் மனது சந்தோஷமாக இருந்தால் வீட்டிலிருந்து விசில் சத்தம் வரும். படிப்பு ஒன்றுதான் வாழ்வின் சொத்து என நம்புபவர் நன்றாக படிக்கும் ஒருவனைகண்டால் மனம் திறந்து பாராட்டுபவர். சில உறவுகளும் நட்புகளும் சக பயணியைப் போல் வருவார்கள் போவ்ரர்கள் அனால் இவர் வந்தார் என்னை விட்டு போகவில்லை.அவரது எக்கலக்ஸ் ஷுட்கேஸ் என்னிடம்தான் உள்ளது அவர் நினவு வரும்போதெல்லாம் அதை நான் தொட்டுபார்கிறேன்,அதை பார்க்கும்போதெல்லாம் அவர் நினைவு வருகிறது.

  பதிலளிநீக்கு
 4. அருமையான நினைவுக்கட்டுரை சம்ஸ். உங்கள் மாமாவின் இழப்பு ஈடு செய்ய முடியாத ஒன்று.

  பதிலளிநீக்கு
 5. உங்களைச்சுற்றி உள்ளவர்கள் மூலமாக உங்கள் மாமா உங்களுக்குத் துணையிருப்பார்.

  அவரது ஆசைப்படி கொம்புத்தேனை எடுத்துவிட்ட மருமகனுக்கு வாழ்த்துகள் :-)

  பதிலளிநீக்கு