விஞ்ஞானி மம்தாவும் கொல்கத்தா குண்டுதாரிகளும்!
வீதியில் விரும்புபவர்கள் எடுத்துச் செல்லவும் தேவைப்பட்ட விட்டுச்செல்லவும் பிரான்ஸ் சைக்கிள் நிறுத்தங்களை அமைக்கலாம்; மெக்கினாக் தீவில் சைக்கிளில் செல்வதற்கென்றே ‘எம்.185’ வீதியை அமெரிக்கா ஒதுக்கலாம்; நாம் இருப்பது இந்தியாவில் அல்லவா? இங்கு எல்லாமே தலைகீழாகத்தான் நடக்கும்.

கொல்கத்தா நகரின் 174 வீதிகளில் சைக்கிள்களை ஓட்டவே கூடாது என்று தடை விதித்திருக்கிறது மம்தாவின்  காவல் துறை.  இவற்றில்  38 வீதிகள் பெரியவை. முட்டுச்சந்துகளும் சந்துபொந்துகளும் நிரம்பிய கொல்கத்தாவில், இந்த வீதிகளைத் தொடாமல், நகரின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்குச் செல்ல முடியாது. ஆக, மறைமுகமாக ஒட்டுமொத்த சைக்கிளோட்டிகளின் காற்றையும் பிடுங்கிவிட்டிருக்கிறார் மம்தா.
ஏன் இந்தத் தடை?
மம்தா ஆட்சி கண்டறிந்திருக்கும் காரணம் இது:
“தேசிய அளவில் மாநகரங்களில் போக்குவரத்தின் சராசரி வேகம் 22 கி.மீ. கொல்கத்தாவிலோ சராசரி வேகம் 14 - 18 கி.மீ. இதற்கு முக்கியக் காரணம் மோட்டார் பொருத்தப்படாத வாகனங்கள் - அதாவது சைக்கிள்கள், தள்ளுவண்டிகள், சைக்கிள் ரிக்ஷாக்கள், கை ரிக்ஷாக்கள், பார வண்டிகள். ஆகையால், அவற்றை விலக்கிவைக்கவே இந்த நடவடிக்கை.”

மம்தாவின் காவல் துறை இன்னும் கொஞ்சம் எடுத்துத் தருகிறது:
“சைக்கிள்கள் மெதுவாகச் செல்வதால், ஏனைய வாகனப் போக்குவரத்தின் வேகமும் மந்தமாகிறது, சைக்கிளோட்டிகள் திடீர் திடீரென தங்களுடைய சைக்கிள்களைத் திருப்புவதால் மற்ற வாகனங்களும் விபத்தில் சிக்க நேர்கிறது. தவிர, இப்போதெல்லாம் பயங்கரவாதிகள் குண்டுவெடிப்புகளுக்கு சைக்கிள்களைத்தான் பயன்படுத்துகிறார்கள்.”

இந்த ‘அரிய கண்டுபிடிப்பு’களும் ‘நுண்ணுர்வுமிக்க தொலைநோக்குப் பார்வை’யும் பிடிபடாதாலோ, பழைய ஞாபகத்திலோ சைக்கிள் விடும் ஏழை பாழை பயங்கரவாதிகளை கொல்கத்தா போலீஸார் கோழி பிடிப்பதுபோல பிடித்துவிடுகின்றனர்.  உடனடி அபராதம் ரூ. 100 அல்லது சைக்கிளே பறிமுதல்.

இந்தியாவில் கார்களைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கையைக் காட்டிலும்  (8%)  சைக்கிள்களைப் பயன்படுத்துவோர் அதிகமுள்ள (11%) மாநகரம் கொல்கத்தா. தனியார் கார்கள் குறைவான மாநகரமும் கொல்கத்தாதான் (குவாலியர் போன்ற சிறுநகரங்களில்கூட கொல்கத்தாவைக் காட்டிலும் அதிகமான கார்கள் பதிவுசெய்யப்படுகின்றன). 2011 புள்ளிவிவரப்படி மேற்கு வங்கத்தில் சைக்கிளோட்டிகளால் ஏற்பட்ட விபத்துகள் 1.5%. ஏனைய மோட்டார் வாகன ஓட்டிகளால் ஏற்பட்ட விபத்துகள் 71%. 1.4 கோடி மக்கள்தொகையுடன் ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 7,750 பேர் அடர்த்தியோடு சுத்தமான சூழலுக்குத் திணறிக்கொண்டிருக்கும் கொல்கத்தா மேலும் திணற மம்தாவின் இந்த முடிவு வழிவகுக்கும்.

கொல்கத்தாவாசிகள் கடந்த வாரம் இந்தத் தடையைக் கண்டித்து ‘சக்கர சத்தியாகிரகம்’ போராட்டம் நடத்தினர். பால்காரர்கள், தபால்காரர்கள், செய்தித்தாள் விநியோகிப்பவர்கள், குடை பழுது பார்ப்பவர்கள், மீன் வியாபாரிகள், பூக்காரர்கள், சின்ன நிறுவனங்கள் - கடைகளில் வேலை செய்யும் கடைநிலை ஊழியர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் மம்தாவை நோக்கிக் குரல் எழுப்பினார்கள். முழக்கம் போட்டார்கள், கத்திப் பார்த்தார்கள், முனகித் தீர்த்தார்கள்...  மம்தாவுக்கு இப்போது இவர்கள் சத்தம் எல்லாம் காதில் கேட்குமா? அவர் மேலும் பல ‘புதிய கண்டுபிடிப்பு’களில் மும்முரமாக இருக்கிறார்.  கட்டிய தொண்டையுடன் அடைத்த குரலுடன் சைக்கிள்களைத் தள்ளிக்கொண்டு, வீடு திரும்பிய ஏழை பாழைகள் அடுத்து நடந்து செல்ல என்றைக்குத் தடை வருமோ என்ற அச்சத்தில் ஓடப்பழகிவருகிறார்கள்!

‘தி இந்து’ அக்.2013

7 கருத்துகள்:

 1. வெட்கப்படவேண்டியது, வேதனைப்படவேண்டியது. என்ன செய்வது? இங்கு எல்லாமே தலைகீழ்தான்.

  பதிலளிநீக்கு
 2. ஜார்ஜ் ஆர்வெல்லின் 'அனிமல் ஃபார்ம்' தான் ஞாபகம் வருகிறது. ஆனால் இதில் வேடிக்கை என்னவென்றால், அவர் எழுதியது கம்யூனிஸ்டுகளை வைத்து, ஆனால் ஒரு ஆன்டி-கம்யூனிஸ்ட் அந்தக் கதையை நிஜமாக்குகிறார்.

  அடித்தட்டு மக்களை நசுக்கி அவர்கள் தலைமீது நடனமாடும் காளி?

  தூக்கி வைத்துள்ள மக்கள், தூக்கி எறியவும் தயங்க மாட்டார்கள்.

  பதிலளிநீக்கு
 3. கொல்கத்தாவில் வசித்தவன் என்ற விதத்திலும், வருடத்திற்கு மூன்றிலிருந்து நான்கு முறை இப்போதும் பணி நிமித்தமாக அங்கே செல்பவன் என்கிற முறையிலும் இந்த செயல் முற்றிலும் சரியான ஒன்றாகவே எனக்கு படுகிறது.

  இந்தியாவிலேயே மிகவும் பழைய பேருந்துகள் ஓடிக்கொண்டு இருக்கும் நகரம் கொல்கத்தா தான். மிகவும் குறுகலான, திட்டமிடப்படாத வீதி அமைப்புகள் என்று பல சிக்கல்கள்.

  ஆகவே இந்த திட்டம் சரியான ஒன்றாகவே எனக்கு படுகிறது.

  மேலும் உங்கள் பதிவிலேயே நீங்கள் இந்த கருத்தை ஆமோதிக்க சில Stats கொடுத்து இருக்கிறீர்கள்.

  நம்மவர்களுக்கு புரிகிற மாதிரி சொல்வதெனின் நம்ம ஊர் செட்டுக்கள் வசிக்கும் பகுதி (பாரிஸ் கார்னரில் இருக்கிறது) போலவே இருக்கும் கொல்கத்தாவின் முட்டுச்சந்துகள்.

  Just Imagine, மழை பெய்யும் ஒரு பெருநாளிலோ அல்லது முழு சாலையையும் ஒரு சைக்கிள் ரிகஷா லோட் ஏற்ற அடைத்துக்கொள்ளும் வேளையில் மற்றவர்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களை?

  பதிலளிநீக்கு
 4. //“தேசிய அளவில் மாநகரங்களில் போக்குவரத்தின் சராசரி வேகம் 22 கி.மீ. கொல்கத்தாவிலோ சராசரி வேகம் 14 - 18 கி.மீ. இதற்கு முக்கியக் காரணம் மோட்டார் பொருத்தப்படாத வாகனங்கள் - அதாவது சைக்கிள்கள், தள்ளுவண்டிகள், சைக்கிள் ரிக்ஷாக்கள், கை ரிக்ஷாக்கள், பார வண்டிகள். ஆகையால், அவற்றை விலக்கிவைக்கவே இந்த நடவடிக்கை.”

  மம்தாவின் காவல் துறை இன்னும் கொஞ்சம் எடுத்துத் தருகிறது:
  “சைக்கிள்கள் மெதுவாகச் செல்வதால், ஏனைய வாகனப் போக்குவரத்தின் வேகமும் மந்தமாகிறது, சைக்கிளோட்டிகள் திடீர் திடீரென தங்களுடைய சைக்கிள்களைத் திருப்புவதால் மற்ற வாகனங்களும் விபத்தில் சிக்க நேர்கிறது. தவிர, இப்போதெல்லாம் பயங்கரவாதிகள் குண்டுவெடிப்புகளுக்கு சைக்கிள்களைத்தான் பயன்படுத்துகிறார்கள்.//

  பதிலளிநீக்கு
 5. இன்னும் சில காலம் சென்றால், சாலைகளில் பொதுமக்கள் நடக்கத் தடை விதிக்கப்படுகிறது
  என நடப்பதற்கே தடைவிதித்து விடுபார்கள் போலிருக்கிறது

  பதிலளிநீக்கு
 6. மமதா என்றால் மமதை என்பது பொருளோ? அருமையான கட்டுரை. தரவுகளும், தமிழ்நடையும் அருமை. கடைசி வரிகள் கவிதை. நல்ல தீர்வை நோக்கும் செயல்தூண்டுதல் மிக்க படைப்பு வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 7. ”வாழ்வதற்க்கு ஒரு நகரம்” என்று கோல்கத்தாவை சொன்னீர்கள்.. ஆனால் இந்த கட்டுரை அதற்கு முரண்பட்டுள்ளது....

  பதிலளிநீக்கு