மோடிகள், பாகவத்துகள், கார்த்திகள் யுகத்தில் சாஸ்திரிகள்!


வாராணசியில், “இந்தியப் பிரதமர்களில் அரிதானவர்” என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தால் புகழப்பட்ட நாளில், மேடை பின்னணியில் படமாக இருந்த லால் பகதூர் சாஸ்திரியின் ஆன்மா என்னவெல்லாம் நினைத்திருக்கும் என்று தெரியவில்லை. காங்கிரஸ் தலைவர்களைச் சுவீகரித்துக்கொண்டு புதிய வரலாற்றை உருவாக்கும் ஆர்எஸ்எஸ்/ பாஜக அரசின் செயல்திட்டத்தின் சமீபத்திய இலக்கு சாஸ்திரி. மோடி அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கையில் இப்படி 72 பெயர்களைக் கொண்ட பட்டியல் இருக்கிறது. இந்தப் பட்டியலில் ஆர்எஸ்எஸ்/ பாஜகவின் முன்னோடிகளான வீர சாவர்க்கர், தீன் தயாள் உபாத்யாய, ஷியாமா பிரசாத் முகர்ஜி போன்றவர்களைக் காட்டிலும் இந்துத்துவப் பரிவாரங்களோடு சம்பந்தமில்லாதவர்கள்/ காங்கிரஸ் தலைவர்களின் எண்ணிக்கை அதிகம். காங்கிரஸ் - பாஜக இரு முகாம்களுக்கும் அப்பாற்பட்ட அரவிந்தர், விவேகானந்தர், பாரதியார், தாகூர், அம்பேத்கர், பகத் சிங், தெரசா ஆகியோரின் பெயர்களும்கூடப் பட்டியலில் உண்டு. பிரதான நோக்கம், இந்திய மக்களிடம் காங்கிரஸுக்கு இன்றைக்கும் இருக்கும் அதன் ஆதார பலம் எதுவோ- அந்தச் சுதந்திரப் போராட்ட வரலாற்றை- நொறுக்கித்தள்ளுவது. நுட்பமான அரசியலின்படி, இனி தேசப்பிதா காந்தியும் இந்துத்துவ சித்தாந்தங்களின்  பிதாமகனான வீர சாவர்க்கரும் சரிசமமான இருக்கைகளில் உட்கார்ந்திருப்பார்கள். இந்தியாவின் பன்மைத்துவத்துக்கு ஆதரவாகவும், இந்துத்துவ ஆதிக்கத்துக்கு எதிராகவும் போராடிய அபுல் கலாம் ஆசாத் இனி நினைவுகூரப்படுவார், அவருடைய கல்விச் சேவைக்காக மட்டும். நேரடியான உதாரணம், வழக்கமாக இந்தியப் பிரதமர்கள் எப்போதும் அக்டோபர் 30 அன்று இந்திரா காந்தியை நினைவுகூர்வார்கள். இந்த முறை மோடி, அன்றைய தினத்தன்று படேலின் பிறந்த நாளை நினைவுகூர்ந்தார். காங்கிரஸின் கை விரலையே எடுத்து, அதன் கண்ணையே குத்திக் குருடாக்கும் உத்தி இது.

லால் பகதூர் சாஸ்திரி ஆட்சியின் பொன் விழா ஆண்டான இந்த ஆண்டில், வாராணசியில் அவரைப் பற்றிய புத்தகம் ஒன்றை வெளியிட்டார் மோகன் பாகவத். “எங்களுடைய தந்தையும் இந்த நாட்டுக்கு அளப்பரிய காரியங்களைச் செய்திருக்கிறார். ஆனால், இன்றைக்கு அவரை நினைவுகூர காங்கிரஸில் ஆளில்லை. பாஜக / ஆர்எஸ்எஸ் எங்களுக்கான ஒரே வாய்ப்பாக அமைந்தது” என்று சொல்லியிருக்கிறார் சாஸ்திரியின் மகன். “எங்களுடைய தலைவர்களை அபகரிப்பதன் மூலம் ஒரு போலி வரலாற்றை உருவாக்க நினைக்கிறது பாஜக” என்று ஈனஸ்வரத்தில் முனகியிருக்கிறது காங்கிரஸ்.

பொதுவாக, எழுதப்படும் வரலாறு என்பது ஒருவர் வாழும் காலத்தில் அவர் செய்த காரியங்களை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்வது. ஆனால், உண்மையான வரலாறு என்பது ஒருவர் இல்லாமல் போன பிறகு ஏற்படும் மாற்றங்களாலும் உருவாவது. அப்படிப் பார்த்தால், மிகக் குறுகிய காலத்தில், இருந்தும் இல்லாமலும் சுதந்திர இந்தியாவின் பல மாற்றங்களுக்கு வித்திட்ட வரலாறு லால் பகதூர் சாஸ்திரியினுடையது.

1904-ல் முகல்சராயில் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்த லால் பகதூர் வாழ்க்கையின் பெரும் பகுதி துயரங்களால் நிரம்பியது. அவர் பிறந்து இரு வருடங்களிலேயே தந்தை சாரதா பிரசாத் வர்மா, பிளேக் நோயில் இறந்துவிட்டார். கையில் இரு குழந்தைகள், வயிற்றில் ஒரு சிசுவைச் சுமந்து தன் தந்தை வீட்டுக்குச் சென்ற லால் பகதூரின் தாய்க்கு அங்கும் அமைதி கிடைக்கவில்லை. அடுத்த இரு வருடங்களில் அவருடைய தந்தையும் இறந்தார். குடும்பம் அடுத்த வீடு நோக்கி நகர்ந்தது. தன்னுடைய பெரியப்பா வீட்டில் ரொம்பவும் சிரமப்பட்டுதான் படித்தார் லால் பகதூர். ஆசிரியர்களுள் ஒருவர் பணம் கட்ட, ஒருவர் புத்தகம் வாங்கித்தர என்று பலரின் உதவி அவருக்குத் தேவைப்பட்டது. குடும்பச் சூழல், படிப்பின் முக்கியத்துவம் எல்லாவற்றையும் நன்கு உணர்ந்திருந் தாலும், எல்லாவற்றையும் தாண்டி காந்தியின் அழைப்பும் சுதந்திரப் போராட்டமும் அவரை இழுத்தன. நன்றாகப் படித்துக்கொண்டிருந்தவர் 10-ம் வகுப்புத் தேர்வுக்கு 3 மாதங்கள் இருந்த நிலையில், ஒத்துழையாமை இயக்கத்துக்கு காந்தி விடுத்த அழைப்பை ஏற்று, படிப்பை நிறுத்திவிட்டுப் போராட்டத்தில் இறங்கினார். காங்கிரஸில் சேர்ந்து மறியல்கள், போராட்டங்கள் என்று ஓட ஆரம்பித் தவர், இடையில், இப்படிச் சுதந்திர வேட்கையோடு பள்ளிப் படிப்பைக் கைவிட்டவர்களுக்காகவே நடத்தப்பட்ட காசி வித்யா பீடத்தில் சேர்ந்து, தத்துவம், அறவியலில் ‘சாஸ்திரி’பட்டம் பெற்றார். லால் பகதூர் வர்மா, லால் பகதூர் சாஸ்திரி ஆனது இப்படித்தான்.

தன்னுடைய வாழ்நாளில் மொத்தம் 9 ஆண்டுகளைச் சிறையில் கழித்தவர் சாஸ்திரி. மவுனமாகக் காரிய மாற்றும் சாஸ்திரியின் ஆளுமை 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத் தின்போது, நேருவின் அலாகாபாத் இல்லமான ‘ஆனந்த பவன’த்தில் இருந்தபடி அவர் மேற்கொண்ட ஒருங்கிணைப்பு நடவடிக்கைகள் மூலம் வெளியே வந்தது. நேரு உன்னிப்பாக அவரைக் கவனித்தார்.

தோற்றத்தில் அலட்சியப்படுத்தக் கூடியவராகவும் சிறியவராகவும் ஆர்ப்பாட்டமற்றவராகவும் இருந்த சாஸ்திரி, சுதந்திரத்துக்குப் பிந்தைய ஆட்சியிலும் சரி, கட்சியிலும் சரி, அபாரமான பணிகளை ஆற்றியவர். 1951-ல் நேரு பிரதமராக இருந்தபோது காங்கிரஸ் பொதுச் செயலாளரானார் சாஸ்திரி. 1952, 1957, 1962 பொதுத் தேர்தல்களில் காங்கிரஸுக்குக் கிடைத்த வெற்றியில் சாஸ்திரிக்கும் பங்கு உண்டு. வேட்பாளர்கள் தேர்வில் தொடங்கி தேர்தல் பிரச்சாரம், சுவரொட்டிகள் தயாரிப்பு வரை மேற்பார்வையிட்டவர் அவர். அரசில் அவருடைய பங்களிப்புகள் 1947 மதக் கலவரங்களைக் கட்டுப்படுத்தும், அகதிகளை மறுகுடியமர்த்தும் முயற்சிகளிலேயே தொடங்கிவிட்டன. நாட்டிலேயே முதல்முறையாக பேருந்து நடத்துநர் பணியிடங்களில் பெண்களை நியமிக்கும் முடிவெடுக்கப் பட்டது சாஸ்திரி போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில் என்பது பலருக்கு ஆச்சரியம் தரக்கூடும். சாஸ்திரி ரயில்வே அமைச்சராக இருந்தபோதுதான், 144 உயிர்களைப் பறித்த அரியலூர் ரயில் விபத்து நடந்தது. தானாகப் பொறுப்பேற்றுப் பதவியை ராஜிநாமா செய்தார். தொடக்கத்தில் சாஸ்திரியின் ராஜிநாமாவை ஏற்க மறுத்த நேரு, பின்பு ஏற்றுக்கொண்டார். “இந்த விபத்துக்கு சாஸ்திரி காரணம் என்று அல்ல; ஒருவர் தார்மிகப் பொறுப்பேற்று பதவி விலகுவதற்கு தேசத்துக்கு இது ஒரு முன்னுதாரணமாக இருக்கக் கூடும் என்பதால், சாஸ்திரியின் ராஜி நாமாவை ஏற்கிறேன்” என்றார் நேரு.

நேருவின் மறைவுக்குப் பின் சாஸ்திரி பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது ஆச்சரிய நிகழ்வு அல்ல. நேருவின் கடைசி சில மாதங்களில், இலாகா இல்லாத அமைச்சராக இருந்த சாஸ்திரி, நேருவின் பெரும்பாலான அலுவல்களைத் தோளில் சுமந்தார். பிரதமராகப் பொறுப்பேற்ற பின் தன்னுடைய அரசு காந்தி - நேரு பாதையிலேயே செல்லும் என்று அறிவித்த சாஸ்திரி, ஆட்சியில் இருந்தது வெறும் 18 மாதங்கள். இந்தக் குறுகிய காலகட்டத்தில்தான் தேசத்தின் உணவுத் தன்னிறைவுக்கான பச்சை, நீல, வெள்ளைப் புரட்சிகளுக்கான (உணவு தானியம், கடலுணவு, பால்) பாய்ச்சல் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. முக்கியமாக, விவசாயத்துக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரித்து, வேளாண் தொழிலைத் தூக்கி நிறுத்த பெரும் முயற்சிகள் எடுக்கப்பட்டன. சீனப் போருக்குப் பின் நிலைகுலைந்து போயிருந்த இந்தியா மீது பாகிஸ்தான் தொடுத்த போரை தேசம் நிதானமாகவும் நேர்த்தியாகவும் கையாண்டு வென்றதும் இந்தக் காலகட்டத்திலேயே நடந்தது. அப்போது சாஸ்திரி உருவாக்கிய புகழ்பெற்ற கோஷம்தான் ‘ஜெய் ஜவான், ஜெய் கிசான்!’

இங்கே குறிப்பிட வேண்டிய மிக முக்கியமான விஷயம், காந்தி - நேரு கொள்கைகளில் எப்போதும் உறுதியாக இருந்தவர் சாஸ்திரி என்பதும் இந்துத்வ அமைப்புகளுக்கு எதிரான பன்மைத்துவப் பாதையில் தேசத்தை வழிநடத்திய ஆட்சி அவருடையது என்பதும். 1964-ல் சீனா நிகழ்த்திய அணுகுண்டு சோதனைக்குப் பின் இந்தியாவும் அணுகுண்டு தயாரிக்க வேண்டும் என்று இந்துத்துவ அமைப்புகளும் ஜனசங்கமும் பெருங்குரல் எழுப்பின. நாடாளுமன்றத்தில் விவாதம் பெரிதானபோது, “இத்தகைய ஆபத்தான ஆயுதங்களைத் தயாரிப்பது காந்தி, நேருவின் மரபுகளிலிருந்து நாம் விலகிச் செல்வதாக அமையும்” என்றவர் சாஸ்திரி.

பாகிஸ்தான் போரின்போது, இந்தியப் படைகளுக்குக் கிடைத்த முன்னேற்றத்தின் தொடர்ச்சியாக, லாகூரை நாம் கைப்பற்ற வேண்டும் எனும் முழக்கங்களை அவர்கள் உருவாக்கியபோது, ‘நாம் ஆக்கிரமிப்பாளர்கள் அல்ல’ என்று உணர்த்தியவர் சாஸ்திரி. இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் உச்சத்தில், தமிழகப் போராட்டங்களுக்குச் செவிசாய்த்தவர், இந்துத்துவ அமைப்புகளின் ‘இந்து - இந்தி - இந்தியா’ செயல்திட்டத்துக்கு எதிராகவே இருந்தார். நேருவிய பன்மைக் கலாச்சாரத்திலிருந்து தன் அரசு துளியும் விலகிவிடக் கூடாது என்பதில் இறுதி வரை உறுதியை வெளிக்காட்டினார்.

பொதுவாழ்வில் எவ்வளவு செல்வாக்கோடு இருந்தாலும், குடும்பத்துக்கு அவர் வறுமையையே பரிசளித்தார். மருத்துவர்கள் எழுதிய மருந்துகளை வாங்கக் காசில்லாமல் தன்னுடைய ஒரு மகளைப் பறிகொடுத்த கதை சாஸ்திரியுடையது. தாஷ்கண்ட் பயணத்தின்போது அவருக்கு ஏற்பட்ட திடீர் (மர்ம) மரணம் சாஸ்திரியின் குடும்பத்தைத் தாண்டி இந்திய அரசியலுக்கும் ஒரு பெரும் விபத்து என்றுதான் சொல்ல வேண்டும். சாஸ்திரியின் மரணம்தான் இந்திராவைப் பிரதமர் பதவியை நோக்கி காமராஜர் அழைத்துவரக் காரணமாக அமைந்தது.

இந்திராவின் காலத்துக்குப் பின், நேரு - இந்திரா - ராஜீவ் எனும் புதிய வரலாற்றை வரித்துக்கொண்ட காங்கிரஸ் கட்சி, சாஸ்திரியின் வரலாற்றை இருட்டடிப்பு செய்ததில் இரு பெரும் உள்நோக்கங்கள் உண்டு. நேருவுக்குப் பிந்தைய ஆற்றல் மிக்க ஒரு பிரதமரின் வரலாற்றைத் துடைத்துவிட்டு, அந்த இடத்தில் இந்திராவின் பெயரைப் பதிப்பது முதலாவது. நேரு குடும்பத்தைத் தாண்டிப் பிரதமராகச் சிறப்பாகச் செயல்பட காங்கிரஸில் ஆள் கிடையாது எனும் மாயையைக் கட்டியமைத்து, இந்திரா குடும்பத்தின் பிடியில் கட்சியையும் ஆட்சியையும் வைத்திருப்பது இரண்டாவது. சாஸ்திரியின் வரலாறு குழி தோண்டிப் புதைக்கப்பட்ட இடத்தில் இந்தச் செயல்திட்டங்கள் ஊன்றப்பட்டன (இந்திரா காந்தி அரசியலில் நீடிக்க சாஸ்திரியும் முக்கியமான காரணம் என்பதும், இந்திரா பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது “காந்தி, நேரு, சாஸ்திரியின் வழியிலேயே செயல்படுவேன்” என்று அறிவித்தார் என்பதும் இன்றைக்கு எத்தனை காங்கிரஸாருக்குத் தெரியும்?)

மோகன் பாகவத்தும் ஆர்எஸ்எஸ்ஸும் அடுத்து, கோகலேவுக்கும் காந்திக்கும்கூட விழா எடுத்து அவர்கள் வண்ணங்களையும் மாற்றலாம். சுய பிரக்ஞையின்றித் தன் முன்னோடிகளையும் அவர்கள் தியாகங்களையும் வரலாற்றையும் தானே அழித்து, ஒரு பேரியக்க வரலாற்றை ஒரு குடும்பத்தின் வரலாறாக்கிவிட்ட காங்கிரஸுக்கு இதெல்லாம் ஒரு பொருட்டா என்ன? ஒருவேளை, நாளை ராபர்ட் வதேராவின் ‘வரலாற்றுக்கு’ ஒரு ஊறு என்றால் அவர்கள் துடிக்கக் கூடும். என்ன செய்வது? ‘வரலாற்றைப் பேசியெல்லாம் ஓட்டு வாங்க முடியாது. காமராஜர் காலத்தைப் பற்றியெல்லாம் இன்றைக்கு யாருக்குத் தெரியும், எனக்கே தெரியாது’ என்று பேசுபவர்களை முக்கிய இடத்தில் கட்சி வைத்திருக்கும் காலம் இது. மோடிகள், மோகன் பாகவத்துகள், கார்த்தி சிதம்பரங்கள் யுகத்தில் ஆர்எஸ்எஸ் மேடைகளில் அடக்கமாக வேண்டியதே சாஸ்திரிகளின் விதி!

பிப்ரவரி, 2014, ‘தி இந்து’

1 கருத்து: