நாங்கள் எங்கே போவது நியாயமாரே?


ட்சியும் ஆதிக்கமும் பெரிதும் மேல் சாதிக்குச் சொந்தம். அவர்களிடம் அல்லலும் அவதியும் படுவது கீழ் சாதிக்குச் சொந்தம். இது சட்டப்படி, சாஸ்திரப்படி, கடவுள் சிருஷ்டியின்படி இந்த மடநாட்டில் இருந்துவருகிறது. இதை மாற்றுவதுதான் எங்கள் முயற்சி. இதற்கு நாங்கள் தக்க விலை கொடுத்தாக வேண்டும். ஆகையால், கனம் கோர்ட்டார் இஷ்டப்பட்ட விலை போடுங்கள்! - 1957-ல் வரலாற்றுப் புகழ்பெற்ற திருச்சி வழக்கில், நீதிமன்றத்தில் எதிரொலித்த பெரியாரின் வார்த்தைகள் இவை.

இந்தியாவில் சாதியம் உறைந்திருக்கும் பீடங்கள் என்று பெரியார் வீசிய அம்புகளும் ஈட்டிகளும் நம்முடைய நீதி அமைப்புகளையும் சேர்த்தே குறிபார்த்தன. நீதி அமைப்புகளைச் சாதிய அளவுகோல் முன் நிறுத்துவது எந்த அளவுக்குச் சரியானது என்று சிலர் கேள்வி எழுப்பக்கூடும். பெரியார் காலத்துக்கு 42 ஆண்டுகளுக்குப் பின் இதற்கான பதில் நீதி அமைப்புகளிடமிருந்தே வந்திருக்கிறது.

டெல்லியின் தேசிய சட்டப் பல்கலைக்கழக மாணவர்கள் சமீபத்தில் ஓர் ஆய்வை மேற்கொண்டிருக்கின்றனர். இந்தியாவில் மரண தண்டனையை ஒழிப்பது தொடர்பாகப் பல்வேறு தரப்பினருடனும் கலந்தாய்வில் ஈடுபட்டிருக்கும் தேசியச் சட்ட ஆணையத்தின் உதவியுடன், அந்தக் கலந்தாய்வின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டிருக்கும் ஆய்வு இது. நாடு முழுவதும் கடந்த 15 ஆண்டுகளில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 373 கைதிகள், அவர்களுடைய வழக்குகள், அவர்களுடைய சமூகப் பொருளாதாரப் பின்னணி ஆகியவற்றைத் தொகுத்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் சேகரிக்கப்பட்ட தகவல்கள் சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டிருக்கின்றன. கூடவே, கடந்த 2014 நவம்பரில், தேசியக் குற்ற ஆவணக் காப்பகத்தால் வெளியிடப்பட்ட இந்தியச் சிறைவாசிகள் தரவுகளையும் 2011 மக்கள்தொகை கணக்கெடுப்புத் தரவுகளையும் பொருத்திப்பார்த்தால், இந்நாட்டில் நீதி படும் பாடும் நம் சமூகத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் உறைந்திருக்கும் பாரபட்சமும் நமக்குள் ஒளிந்திருக்கும் கள்ளத்தனமும் ஒருசேர அம்பலமாகின்றன.

1. நாடு முழுவதும் சிறைகளில் உள்ள 4.2 லட்சம் சிறைவாசிகளில் 53% பேர் தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் முஸ்லிம்கள் என்கிறது தேசியக் குற்ற ஆவணக் காப்பகம். நாட்டிலேயே அதிகபட்சமாக ராஜஸ்தான் சிறைவாசிகளில் 45.8% பேர் தலித்துகள்/ஆதிவாசிகள். குஜராத் சிறைவாசிகளில் 43.6% பேர் தலித்துகள்/ஆதிவாசிகள்.

2. மரண தண்டனைக் கைதிகள் 373 பேரில் நால்வரில் மூவர் பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர். பயங்கரவாதக் குற்றங்களுக்காகத் தண்டனைக்குள்ளாக்கப்பட்டவர்களில் 93.5% பேர் தலித்துகள் /சிறுபான்மையினர். மரண தண்டனைக் கைதிகளில் 75% பேர் பொருளாதாரரீதியாக மிக மோசமான நிலையில் இருப்பவர்கள் என்கிறது டெல்லி தேசியச் சட்டப் பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்வறிக்கை.

இந்தத் தரவுகள் சொல்லும் மறைமுகப் பொருள் என்ன? “ஆம், நம்முடைய நீதித் துறையில் பாகுபாடு இருக்கத்தான் செய்கிறது” என்கிறார் நாட்டின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவரான பிரஷாந்த் பூஷண். “குற்றஞ்சாட்டப்படுவர்களில் ஒரு சதவிகிதத்தினரால்தான் நல்ல வழக்கறிஞர்களை நியமித்துக்கொள்ள முடிகிறது” என்கிறார் பூஷண். இது முதலாவது பாகுபாடு. பொருளாதாரரீதியிலான பாகுபாடு. பலரும் ஒப்புக்கொள்ளக்கூடியது. இரண்டாவது பாகுபாடு ஒன்றும் உண்டு. இன அடிப்படையிலான பாகுபாடு. பலர் பேசத் தயங்கக்கூடியது. “பொருளாதாரப் பாகுபாடும் நிறப் பாகுபாடும் அமெரிக்க நீதித் துறையைச் சீரழிப்பதாகச் சொல்வார்கள். இந்தியாவுக்கும் அது பொருந்தும். ஒரே வேறுபாடு, அமெரிக்க நீதித் துறையில் நிறப் பாகுபாடு உட்கார்ந்திருக்கும் இடத்தில் இங்கு சாதியப் பாகுபாடு உட்கார்ந்திருக்கிறது” என்கிறார் முன்னாள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு.

 
திக்க வலுவும் பொருளாதார பலமும் இந்த நீதி அமைப்பின் முன் தங்களை எப்படி வெற்றிகரமாக முன்னிறுத்திக் கொள்கின்றன என்பதை மட்டும் அல்ல; ஒடுக்கப்பட்டவர்கள் இந்த நீதி அமைப்புடன் உரையாட முடியாமல் செய்து அவர்களை மேலும் விளிம்புநிலையை நோக்கி எப்படித் தள்ளுகின்றன என்பதையும் புரிந்துகொள்ள இந்தத் தரவுகள் உதவுகின்றன.

இன்றைய இந்தியப் பொதுச் சமூகத்தின் முன் தலித்துகள், ஆதிவாசிகள், முஸ்லிம்கள் மூவரும் கிட்டத்தட்ட ஒரே மாதிரிதான் பார்க்கப்படுகிறார்கள். ஒரு வீட்டை வாடகைக்கு எடுப்பதில் இருக்கும் சவாலில் தொடங்கி, சகல இடங்களிலும் அவர்கள் எதிர்கொள்ளும் சந்தேக, அவமானப் பார்வைகள் வரை எதிலும் பெரிய வேறுபாடு ஏதும் இல்லை. மூவரையும் ஒரே தளத்தில் அடைக்க பொருளாதாரம் கருவியாகிறது என்றால், அந்தப் பொருளாதார நிலையை நோக்கி அவர்களைத் தள்ள அவர்களுடைய பிறப்பும் நம்முடைய சமூக அமைப்பும் போதுமானவையாக இருக்கின்றன.

டெல்லி தேசியச் சட்டப் பல்கலைக்கழக மாணவர்களிடம் பேசிய பல மரண தண்டனைக் கைதிகள் பெரும்பாலான விசாரணைகளில் பங்கேற்கத் தாங்கள் அனுமதிக்கப்படுவதே இல்லை என்று தெரிவித்திருக்கின்றனர். அப்படியே விசாரணைகளில் பங்கெடுத்தாலும், அங்கு நடக்கும் விசாரணைகள் புரிவதில்லை என்று தெரிவித்திருக்கின்றனர். ஒரு புரியாத அமைப்புக்குள் சிக்கி, சிறைக்குள் சிதைந்து, மரண தண்டனைக் கைதியாக்கப்பட்டு, எப்போது சாவு சூழுமோ என்ற உயிர் வதைக்குள் சிக்கி ஒவ்வொரு நாளும் மருகுவதைவிடவும் எவ்வளவு சீக்கிரம் எங்களைத் தூக்கில் போட முடியுமோ அவ்வளவு சீக்கிரம் போட்டுவிடுங்கள் என்று மன்றாடியிருக்கின்றனர்.

எல்லா அநீதிகளையும் அழித்தொழிக்கும் இடமாகவே நீதி அமைப்புகளைப் பார்க்கிறோம். அங்கும் இதே கதைதான் தொடரும் என்றால், இந்த ஜனநாயகத்தை மெச்சிக்கொள்வதில் என்ன அர்த்தம் இருக்கிறது?

அன்றைக்கு பெரியார் கேட்டார்: “உண்மையில் விவாதத்துக்கு இடமில்லாமல், ஒரு நீதிபதி என்பவர் தவறானது என்று சொல்லும்படியான தன்மையில் நடந்துகொண்டால், தீர்ப்பு அளித்தால் அதற்குப் பரிகாரம் தேட வேண்டுமானால், பொதுமக்களுக்கு வழி என்ன இருக்கிறது? அப்பீலுக்கே போய்த் தீர வேண்டுமானால், அது எல்லோருக்கும் சாத்தியப்படும் காரியமாகுமா? எல்லோருக்கும் எல்லாக் காரியங்களிலும் அப்பீலில் இடமிருக்குமா? அரசாங்கத்தில் அரசர் ராஷ்டிரபதி பிரதமர் முதலமைச்சர் முதலியவர்களுடைய போக்குகளைப் பற்றியும் உத்தரவுகளைப் பற்றியும் பொதுக் கண்டனங்களும் கிளர்ச்சிகளும் செய்ய தாராளமாக இடமும் சட்ட அனுமதியும் இருக்கும்போது, இந்த ஜட்ஜுகளைப் பொறுத்து மாத்திரம் அம்மாதிரியான இடமும் அனுமதியும் கிடையாது என்றால், மக்களுக்குச் சுதந்திரம் எங்கே இருக்கிறது? பரிகாரம் எப்படித் தேடுவது? பொதுஜனங்களின் உணர்ச்சிகளை எப்படிக் காட்டுவது?”

கேள்வி கேட்ட பெரியார் இப்போது இல்லை. ஆனால், கேள்வி இன்னமும் அப்படியே நிற்கிறது. இந்திய நீதித் துறை மாற்றத்துக்குத் தயாராக்கிக்கொள்ள வேண்டும்!

ஜுலை 2015, ‘தி இந்து’

4 கருத்துகள்:

 1. பெரியாரின் கருத்துக்களை இந்தத் தலைமுறைக்கு கொண்டு செல்வதால் , உங்களுக்கு இந்த தலைமுறையில் ஒருவனாக நன்றி!

  பதிலளிநீக்கு
 2. உங்கள் கருத்து உண்மை

  பதிலளிநீக்கு
 3. தொடர்ந்து உங்கள் எழுத்தைப் படித்து வருகிறேன். உங்கள் எழுத்தைப் படிப்பதற்காகவே தொடர்ந்து இந்து நாளிதழ் தமிழ்ப் பதிப்பை வாங்குகிறேன். நீங்கள் உண்மையின் மிக அருகில் இருக்கிறீர்கள் என்பததே தொடர்ந்து உங்களைப் படிக்கக் காரணம் என எண்ணுகிறேன். அதிலிருந்து ஒருபோதும் விலகாதீர்கள் என வேண்டுகிறேன். நன்றி

  பதிலளிநீக்கு
 4. //கேள்வி கேட்ட பெரியார் இப்போது இல்லை. ஆனால், கேள்வி இன்னமும் அப்படியே நிற்கிறது. இந்திய நீதித் துறை மாற்றத்துக்குத் தயாராக்கிக்கொள்ள வேண்டும்!// நிச்சயமாக தங்களுக்குத் தெரியாததாக இருக்க முடியாது. ஆனால் இக்கட்டுரையில் அது குறித்த எந்த குறிப்பும் இல்லாததால் குறிப்பிட விரும்புகிறேன். இப்பிர்ச்சினை கண்டிப்பாக நம் நீதித்துறை மற்றும் சார்ந்ததல்ல. நீதித்துறையில் வெளிப்படும் இந்த அறிகுறிகள் ஒட்டுமொத்த நம் சமூகத்தின் அடிப்படை கட்டமைப்பில் உள்ள சிக்கல்களின் வெளிப்பாடுதானே. நீதித்துறையை ஒட்டுமொத்த சமூகத்திலிருந்து பிரித்து பார்க்கவோ, அது மட்டும் வேறுமாதிரியாக இருக்கவோ விரும்புவது ஒரு சரியான சமூகவியல் பார்வையாக இருக்க முடியாதுதானே. இந்த அறிகுறிகளுக்கான சமூக அடிப்படைகளை வேர்பிடித்து காட்டுவதும் தானே அடிப்படை அம்சம்

  பதிலளிநீக்கு