காண்டாமிருகங்கள் ஆகிறோம்!


றேழு ஆண்டுகள் இருக்கும், திருச்சியில் இருந்தபோது நடந்தது. வெளியூரிலிருந்து நண்பர் வந்திருந்தார். அதிகாலை நான்கு மணிக்கு அவருக்கு வண்டி. வீட்டிலிருந்து ரயில் நிலையம் செல்ல குறைந்தது ஒரு மணி நேரம் ஆகும். முன்கூட்டியே இரண்டரை மணிக்கெல்லாம் வீட்டிலிருந்து புறப்பட்டோம். வீதி இருண்டு கிடந்தது. செல்பேசி விளக்கின் துணையோடு நடக்க ஆரம்பித்தோம். நூறடி நகர்ந்திருக்காது. இருளையும் காற்றையும் கிழித்துக்கொண்டு வந்தது அலறல். சட்டென இன்னதென்று யூகிக்க முடியவில்லை. அமைதி. திரும்பவும் அலறல். கூடவே நாய்களின் உறுமல். திடுக்கிட்டு சுற்றுமுற்றும் பார்த்தபோது, கொஞ்ச தூரத்தில் ஒரு சின்ன கொட்டைகையின் முன்நடுக்கத்தோடு ஒடுங்கி நின்றுகொண்டிருந்தார் ஒரு பெரியவர். மூன்று நாய்கள் அவர் அருகே. உறுமிக்கொண்டு பாய்ந்துவிடத் தயாராக நின்றன. கையில் வைத்திருக்கும் காலி துணிப்பைகளை வைத்துக்கொண்டு “ச்சூ… ச்சூ…போ” என்றார் பெரியவர். நண்பர் கற்களை அள்ளி வீசினார். நாய்கள் சிதறி ஓடின. அடுத்து ஐந்து நிமிடங்கள் ஆகியும் பெரியவருக்குப் பதற்றமும் பதைபதைப்பும் நீங்கவில்லை. பேச முடியவில்லை. நாங்கள் புறப்பட்டோம். நண்பரை ரயில் ஏற்றிவிட்டுவிட்டுத் திரும்பும்போது, மணி ஏழரை இருக்கும். அப்போதுதான் கவனித்தேன். ஒரு ரேஷன் கடையின் முன்பகுதி அந்தக் கொட்டகை. அந்தப் பெரியவர் கீழே குத்துக்காலிட்டு உட்கார்ந்திருந்தார். தலை தொங்கிக்கொண்டிருந்தது. அவருக்குப் பின் இருபது முப்பது பேர். கிட்ட நெருங்கிப் பார்த்தால், பெரியவரின் கண்கள் மூடியிருந்தன. தூக்கத்தில் இருப்பதுபோல இருந்தது. முன்னும் பின்னும் வரிசையில் மனிதர்களோடு பைகள், கற்களும் கலந்திருந்தன. “எல்லாம் பருப்புக்காக” என்றார்கள் நின்றவர்கள்.


இந்தியாவில் முதல் முறையாக அப்போதுதான் பருப்பு விலை ரூ. 100-ஐத் தொட்டிருந்தது. பருப்பு விலை உயர்வை எதிர்கொள்ள தமிழக அரசு ரேஷன் கடைகளில் மலிவு விலையில் பருப்பு விற்பனையைத் தொடக்கிவைத்திருந்தது. ஆனால், ஒரு ரேஷன் கடைக்கு ஆயிரம் அட்டைதாரர்கள் இருக்கிறார்கள் என்றால், 50%-75% பேருக்குதான் பருப்பு ஒதுக்கீடு ஆகியிருக்கும். முந்திக்கொண்டால் கிடைக்கும்; இல்லாவிட்டால் வெளிச்சந்தையில் நான்கு மடங்கு வரை விலை கொடுத்து வாங்க வேண்டும். முந்திக்கொள்வது என்றால், எத்தனை மணிக்கு எழுந்திருப்பது? அதிகாலை இரண்டரை மணி, மூன்று மணிக்கெல்லாம் ரேஷன் கடை முன் போய் உட்கார்ந்துவிடுவது. காலையில் 10 மணிக்குக் கடை திறக்கும். கிட்டத்தட்ட ஏழெட்டு மணி நேரம். யாரை அனுப்புவது? பெரியவர்கள்தான் முதல் தேர்வு. எப்படி இயற்கை உபாதைகளை எதிர்கொள்வது? அப்படி இடையில் போய்வரும் நேரத்திலும் முன்னுரிமையை உறுதிப்படுத்திக்கொள்ளவே வரிசையில் பைகளும் கற்களும்!

பெரியவர் கண்கள் சிவந்திருந்தன. உடைந்து விழுந்துவிடுபவர்போல் உட்கார்ந்திருந்தவர் கூர்ந்து பார்த்தார். “நல்ல நேரம் வந்து காத்தீங்க, முந்தாநாள் இப்படி நின்ன ஒருத்தரை நாய் கடிச்சே வெச்சிடுச்சாம்” என்றார். கைகளைப் பிடித்துக்கொண்டார். பேசவில்லை. எல்லா விஷயங்களையும் அவருடைய நிலையே சொல்லிவிடுவதுபோல இருந்தது.
நேற்றைய தினம் திருச்சியிலிருந்து நண்பர் சேகர் பேசினார். “அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி நாலு ரூபாய்க்கு வித்த டீ இன்னைக்கு எட்டு ரூபாய் ஆயிடுச்சு. அரிசி, பருப்பு விலையெல்லாம் இரண்டு மடங்காயிடிச்சு. மக்களோட வருமானம் அப்படி ஏறலையே? அப்போவிட இப்போ சூழல் இன்னும் மோசம். முன்னாடி மூணு நாலு மணிக்குப் போய் உட்கார்ந்த கூட்டம் இன்னைக்கு ஒரு மணிக்கெல்லாம் உட்கார்ந்துடுது.”

ஒரு கிலோ பருப்புக்கு மட்டும் அல்ல; அரிசிக்கு, சீனிக்கு, எண்ணெய்க்கு என்று இந்நாட்டின் அடித்தட்டு மக்கள் படும் பாடு சொல்லி மாளாது. சென்னையில் சமீப காலமாக ஒரு வியாபாரம் தொடங்கியிருக்கிறது. முன்பெல்லாம் மிக்ஸி, குக்கர், நான்ஸ்டிக் தவா, ஃபேன் இப்படிப் பல பொருட்கள் சேர்த்து ரூ. 2,000-க்கு விற்பார்கள் அல்லவா? அப்படி ஒரு சிப்பம் அரிசி, கோதுமை மாவு, எண்ணெய், உப்பு என்று மளிகைப் பொருட்களை விற்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஒரு இடத்தில் செல்பேசி வாங்கினால், அரிசி, கோதுமை, இன்னபிற மளிகைச் சாமான்கள் இலவசம் என்ற விளம்பரத்தைப் பார்த்தேன். இவையெல்லாம் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு சாமானிய மக்களை எப்படி வதைக்கிறது என்பதற்கான அப்பட்டமான அறிகுறிகள். ஆனால், பொதுத் தளத்தில் இவையெல்லாம் எதிரொலிக்கவே இல்லை. ஏன்? அரசியல்வாதிகளையோ, அதிகாரிகளையோ குற்றஞ்சாட்டுவதில் பயனில்லை; ஏனென்றால், இன்றைய அரசியல்-அதிகார வர்க்கத்தினர் யாரும் நேரடியாக மளிகை / ரேஷன் கடைகளுக்குச் செல்பவர்கள் இல்லை. அடித்தட்டு மக்களுடன் அவர்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. ஊடகங்கள் என்ன செய்கின்றன? இதற்கான பதில் நடிகர் சங்கத் தேர்தலுக்கு நாம் கொடுத்த ‘அதிமுக்கிய கவன’த்தில் இருப்பதாகத் தோன்றுகிறது. கிட்டத்தட்ட ஒரு மாதமாகவே இந்த அலப்பறைகள் தொடர்ந்தன என்றாலும் வாக்குப்பதிவு நாள் உச்சகட்டம். அன்றைக்குக் காலையிலிருந்து கிட்டத்தட்ட 20 மணி நேரத் தொடர் பணியில் ஈடுப ட வேண்டியிருந்ததாகச் சொன்னார்கள் காட்சி ஊடக நண்பர்கள். 300 செய்தியாளர்கள் களத்தில் காத்திருந்திருக்கிறார்கள். தொலைக்காட்சி நிறுவனங்களிடம் ஏற்பட்ட போட்டியின் உச்சம் - ஒரு தொலைக்காட்சி நிறுவனம் மட்டும் தன்னுடைய 6 நேரலை ஒளிபரப்பு வாகனங்களைக் கொண்டுவந்திருந்ததாம். வெட்கக்கேட்டை நொந்துகொள்ளாதவர்கள் இல்லை!


னநாயகச் செயல்பாடுகளில் சங்கங்களின் செயல்பாடு முக்கியமானது. இந்த ஆண்டின் நோபல் சமாதானப் பரிசைப் பகிர்ந்துகொண்டிருக்கும் துனீஷிய தொழிற்சங்கக் கூட்டமைப்பு ஓர் உதாரணம். ‘மல்லிகைப் புரட்சி’யின் மூலம் சர்வாதிகார ஆட்சியைத் தூக்கியெறிந்த துனீஷியா, ஏனைய ‘அரபு வசந்த’ நாடுகளைப் போலச் சீரழியாமல் ஜனநாயகத்தை நோக்கி நகர ஏனைய இயக்கங்களோடு சேர்ந்து முக்கியப் பங்காற்றியிருக்கிறது துனீஷிய தொழிற்சங்கம். இப்படிப்பட்ட சங்கங்களையும் அவற்றின் நிர்வாகிகளைத் தீர்மானிக்கும் தேர்தல்களையும் ஊடகங்கள் புறக்கணிக்க முடியாது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் பத்து லட்சம் சொச்ச உறுப்பினர்களைக் கொண்டது. தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்கக் கூட்டுக்குழுவில் கிட்டத்தட்ட மூன்று லட்சம் பேர் உறுப்பினர்கள். மருத்துவர்கள் சங்கத்தில் 30,000 பேர் இருக்கிறார்கள். பெரிய சங்கங்கள் என்பதைத் தாண்டி, உணவு, கல்வி, சுகாதாரம் என நம் அன்றாட வாழ்வின் அத்தியாவசியத் தேவைகளோடு நேரடித் தொடர்புடையவை இவை. இந்தச் சங்கங்களுக்கெல்லாம் இல்லாத முக்கியத்துவத்தை எது மூவாயிரத்துச் சொச்ச உறுப்பினர்களைக் கொண்ட
நடிகர் சங்கத்துக்கும் அதன் தேர்தலுக்கும் கொடுக்கவைக்கிறது?

நண்பர் ஒருவரின் அனுபவம் இது: “டிவியில் நடிகர் சங்கத் தேர்தலைக் காட்டும்போதெல்லாம் எனக்குப் பற்றிக்கொண்டு வந்தது. ஆனால்,என்னாலேயே நம்ப முடியவில்லை. ஒருகட்டத்துக்கு அப்புறம் திட்டிக்கொண்டே நானும் அதைப் பார்க்க ஆரம்பித்தேன். தேர்தல் முடிந்த மறுநாள் பத்திரிகைகளில் நான் தேடிய முதல் செய்தி, தேர்தலில் யார் ஜெயித்தார்கள் என்பதுதான். இப்போதும் நான் ஊடகங்களைத் திட்டுவேன். ஆனால், அன்றைக்கு நான் எப்படி மாறினேன் என்பது எனக்குத் தெரியவில்லை!”

ஆக்கிரமிப்பு என்பது ஆயுதங்கள் சகிதமாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை மட்டும் அல்ல. ஒரு மாயையை உருவாக்கி, உளவியல்ரீதியாக மேற்கொள்ளப்படும் தாக்குதலும் ஆக்கிரமிப்புதான். உண்மையில், இதை உளவியல் போர் என்று சொல்லலாம். கனடிய பேராசிரியர் மார்ஷல்மெக் லூகான் ஊடகங்களின் இப்படியான செயல்பாட்டைத்தான் கூறுகிறார்: “முதலில் நாம் கருவியை வடிவமைக்கிறோம்; பின்னர், கருவி நம்மை வடிவமைக்கிறது.’’

இயனஸ்கோ எழுதி 1959-ல் பிரெஞ்சில் வெளியான நாடகம் ‘காண்டாமிருகம்’ (ரைனோசரஸ்). அந்த நாடகத்தில் முதலில் ஒரு மனிதர் காண்டாமிருகமாக மாறுவார். இதையடுத்து, எங்கு பார்த்தாலும் காண்டாமிருகம் பற்றிய பேச்சுகள் தொடங்கும். தொடர்ந்து வெவ்வேறு மனிதர்கள் காண்டாமிருகங்களாக மாறுவர். கடைசியில் ஒரேயொரு மனிதரைத் தவிர்த்து எல்லோருமே காண்டாமிருகங்களாக மாறிவிடுவர். தொடக்கத்தில் ஆக்கிரமித்தலின் அபாயத்தை உணராதவர்கள் எப்படியெல்லாம் சிறிதுசிறிதாக ஒத்துழைத்து கடைசியில் ஆக்கிரமிப்புக்கும் ஏகாதிபத்தியத்துக்கும் இரையாக நேரிடுகிறது என்பதை ‘காண்டாமிருகம்’ நாடகம் அற்புதமாகச் சொல்லும்.

செய்திகள் இல்லாமல் இல்லை. சரத்குமார் - நாசர் யுத்தத்தில் இரண்டறக்கலந்து புழுதியில் புரண்டிருந்த அதே நாளில், அதே சென்னையில், இன்னும் கொஞ்ச தூரத்தில் ஒரு மாநாடு நடந்துகொண்டிருந்தது. அடுத்த தலைமுறைக்குத் தொழில்நுட்ப உதவியோடு தமிழை எடுத்துச் செல்வது எப்படி என்று தீவிரமாக விவாதித்துக்கொண்டிருக்கிறார்கள் உலகின் பல்வேறு மூலைகளிலிருந்தும் அங்கு வந்திருந்த கணினித் தமிழறிஞர்கள். அமெரிக்காவிலிருந்து வந்த இரு பெரியவர்கள் - ஜானகிராமன், சம்பந்தம் - ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழுக்கு ஒரு இருக்கை ஏற்படுத்தும் முயற்சிக்காக சென்னையில் சந்திப்புகளை நடத்திக்கொண்டிருந்தார்கள்.
நானும் போகவில்லை; தமிழுக்கும் காண்டாமிருகங் களுக்கும் என்ன சம்பந்தம்!


அக்.2015, ‘தி இந்து’

9 கருத்துகள்:

  1. ஊடகம் என்னும் ஆயுதம் எதற்காக பயன்படுத்தப்பட வேண்டும் என்பதை ஆயுத பூஜை அன்று மிகச்சிறப்பாக எடுத்துரைத்துள்ளீர்கள். மக்களுக்குப்பிடித்ததைத்தான் எழுதுவேன், திரையிடுவேன் என்று கூறி படிப்படியாக மக்களின் ரசனையைத் தன் போக்கில் வழிநடத்தும் பணியையே ஊடகங்கள் சில தசாப்தங்களாகச் செய்து வருகின்றன.

    பதிலளிநீக்கு
  2. தலைப்பே ஒரு சாட்டையடி போலுள்ளது. சாமானியனின் உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டு அவனது உள்ளக் கிடக்கைகளையும், ஏக்கங்களையும் வெளிப்படுத்தி, அதற்கு தீர்வு காணும் வகையில் அமைகின்ற உங்களின் எழுத்துக்களுக்கு எங்கள் வணக்கங்கள். உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  3. அய்யா தங்களின் கருத்து மிக அருமையானது ஆழமானது. நன்றி.

    பதிலளிநீக்கு
  4. அய்யா தங்களின் கருத்து மிக அருமையானது ஆழமானது. நன்றி.

    பதிலளிநீக்கு
  5. அய்யா தங்களின் கருத்து மிக அருமையானது ஆழமானது. நன்றி. engelsdgl@gmail.com

    பதிலளிநீக்கு
  6. அய்யா தங்களின் கருத்து மிக அருமையானது ஆழமானது. நன்றி. engelsdgl@gmail.com

    பதிலளிநீக்கு
  7. மக்களின் கவனத்தை
    முக்கிய நிகழ்வுகளில் இருந்து திசைமாற்றும் பணியை அல்லவா
    ஊடகங்கள் செய்து வருகின்றன
    தங்களின் கருத்திற்கு நன்றிஐயா

    பதிலளிநீக்கு
  8. அந்த மாநாடு பற்றி இன்னும் கொஞ்சம் விபரம் சொல்லுங்க , படிக்கணும் போல இருக்கு ஆர்வம்.

    பதிலளிநீக்கு
  9. மிக அருமையான கட்டுரை. படிக்கும்போது “ஏதாலேயோ” அடி வாங்கியது போல இருந்தது, ஏனென்றால் அன்றைக்கு நாள் முழுவதும் நானும் காண்டமிருகமாத்தான் இருந்தேன். நம்மை போன்ற மக்களும், இது போன்ற ஊடகங்களும் இருக்கும் வரை இங்கு எந்த “மல்லிகை புரட்சி”யும் “அரபு வசந்தமும் வராது.

    பதிலளிநீக்கு