முதல்வர் வேட்பாளர்: ஜனநாயகமா, சர்வாதிகாரமா?


தொடர்ந்து பயணங்கள். குறுக்கும் நெடுக்குமாக. தேர்தல் சூடு பரவும் சூழலில், தமிழக மக்களின் மனநிலை ஓரளவுக்குப் பிடிபடுவதுபோலவே தோன்றுகிறது. ரயிலோ, பஸ்ஸோ, ஆட்டோவோ உடன் பயணிப்பவர்கள் யாராக இருந்தாலும் பேச்சில் இயல்பாக வந்து அரசியல் ஒட்டிக்கொள்கிறது. நம்மூரில் மக்கள் தயக்கத்தைவிட்டு அரசியல் சூழலை விமர்சிக்க ஆரம்பித்துவிட்டாலே, ஆளுங்கட்சிக்கு அனர்த்தம் என்று அர்த்தம். வெளிப்படையாக அதைப் பார்க்க முடிகிறது. அடுத்து யார் என்று கேட்டால், பொதுவாக, மறுபடியும் இவங்களேதான் சார் என்றோ அடுத்த பெரிய கட்சியின் தலைவர் பெயரோதான் பதிலாக இருக்கும். இப்போது அவற்றைத் தாண்டி “இரண்டு பேருமே வரக்கூடாதுங்க” என்கிற குரல்களும் சகஜமாக கேட்கின்றன. “சரி, அப்போ வேற யாரு?” என்றால், “அதாங்க குழப்பமா இருக்கு. நம்பிக்கையா யாருமே கண்ணுல தெரியலீயே!” என்கிறார்கள்.

தமிழகத்தில் ஏனைய கட்சிகளைத் தாண்டி இடதுசாரிகள் மூன்றாவது அணியாக உருவாக்கியிருக்கும் ‘மக்கள் நலக் கூட்டணி’ எல்லோர் கவனத்திலும் விழுந்திருக்கிறது; ஆனால், மக்கள் நம்பிக்கையை வென்றெடுக்கும் கூட்டணியாக அதுவும் உருவெடுக்கவில்லை. “கூட்டணியெல்லாம் சரி, யாரை நம்பி ஓட்டுப்போட? ஜெயிக்குறதுக்கு முன்னாடியே எங்காளு இவருதான்னு ஒத்துமையா ஒருத்தரை அவங்களால காட்ட முடியலீயே!” என்று கேட்டார் ஆட்டோக்காரர் குமரேசன். மக்களால் தங்களுக்கு எது வேண்டும் என்பதைத் துல்லியமாகச் சொல்ல முடியாமல் இருக்கலாம்; தங்கள் தேவையைக் கோடிட்டுக் காட்ட ஒருபோதும் அவர்கள் தவறுவதில்லை.

“தேர்தலுக்கு முன்பே முதல்வர் வேட்பாளரை அறிவிக்க எங்கள் கட்சி ஒன்றும் பூர்ஷ்வாக்களின் கட்சி அல்ல” என்று சொல்லியிருக்கிறார் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் சீதாராம் யெச்சூரி. கேரளத்தில் இடது கூட்டணிக்கான முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு அவர் அளித்திருக்கும் பதில் இது. தமிழகத்தில் இதே பதிலை வெவ்வேறு வார்த்தைகளில் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். மேற்கு வங்கத்திலிருந்தும் சத்தம் கேட்கிறது.

மோடி தந்த தோல்வியிலிருந்து இடதுசாரிகள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்களில் முக்கியமான ஒன்று, மக்களிடம் மாற்றை முன்னிறுத்துவது. மோடி வரக் கூடாது என்று பேசியவர்கள் எவரும் அவருக்கு மாற்று வேட்பாளராக மக்களிடம் ஒருவரை முன்னிறுத்தவே இல்லையே? கிட்டத்தட்ட போட்டியே இல்லாமல்தானே மோடி வென்றார்! “அப்படியெல்லாம் தேர்தலுக்கு முன்பே முதல்வர்/பிரதமர் வேட்பாளரை அறிவிப்பது தனிநபர் வழிபாட்டைக் கொண்டாடும் கட்சிகளின் வழக்கம்” என்றார் ஒரு இடதுசாரித் தோழர். “நாட்டிலேயே நீண்ட கால முதல்வராக இருந்தவர் ஜோதிபாசு. மேற்கு வங்கத்தின் 34 வருட இடதுசாரி அரசாட்சியில் 24 ஆண்டுகளுக்கும் மேல் முதல்வராக இருந்தவர் அவர். மறந்துவிட்டீர்களா?” என்று கேட்டேன்.

தனிமனித வழிபாடு வேறு; தனிமனித ஆளுமையை அங்கீகரிப்பது வேறு. பெங்களூரு தனி நீதிமன்றத்தால் ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா ஜாமீனில் திரும்பி வருகிறார். அன்றைக்கு ஒரு உணவகத்தில் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன். ஜெயலலிதாவின் கார் நெருங்கும்போது, ஒட்டுமொத்த உணவகமும் தடபுடவென ஓடுகிறது, ஜெயலலிதாவைப் பார்க்க. தோசைக்கு நானேதான் சாம்பார் வாளியைத் தேடி ஊற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. மக்களுக்கு ஒருவரை ஏன் பிடிக்கிறது, மக்களை ஒருவர் ஏன் ஈர்க்கிறார் என்பதற்கெல்லாம் விஞ்ஞானரீதியாக விவாதித்து வியாக்கியானங்கள் கொடுத்துக்கொண்டிருக்க முடியாது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கத்தை கேரளத்தில் அமைத்தவர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாடு. அப்படிப்பட்ட நம்பூதிரிபாடால் அச்சுத மேனனுக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. நம்பூதிரிபாடு தலைமையிலான மார்க்சிஸ்ட் கட்சிக்கே சவாலாக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பின்னாளில், அச்சுத மேனனுக்குப் பிறகு செல்வாக்கை இழந்தது.

அச்சுத மேனனுக்குப் பின் கிளர்ந்தெழுந்த மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஈ.கே.நாயனார் பலம் பொருந்திய முகமாக இருந்தார். இரு முறை முதல்வராகவும் மக்கள் தலைவராகவும் திகழ்ந்த அவரை ஓரம்கட்டிவிட்டு 1996 தேர்தலில் அச்சுதானந்தனை முன்னிறுத்தியது மார்க்சிஸ்ட் கட்சி. நாயனார் சட்டப்பேரவை உறுப்பினர் பதவிக்குக்கூட அப்போது போட்டியிடவில்லை. இடது கூட்டணி 80/140 இடங்களை வென்றது. அச்சுதானந்தன் தோற்றார். அப்போதும் விட்டுக்கொடுக்காத கட்சி மேலிடம் சுசீலா கோபாலனை முதல்வராகக் கொண்டுவர விரும்பியது. கட்சியின் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களோ நாயனாரை மீண்டும் அழைத்தார்கள். மூன்றாவது முறையாக முதல்வரானார்.

இப்போது சக்கரத்தின் ஆரக்கால்கள் தலைகீழாக நிற்கின்றன. அன்றைக்கு ஒரு தொகுதியில் தோற்ற அச்சுதானந்தன், இன்றைக்கு மாநிலத்தில் கட்சியின் மக்கள் முகம். முன்னாள் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவரான அச்சுதானந்தனுக்கு ஓய்வு கொடுக்க கட்சி விரும்புகிறது. ஆனால், மக்கள் இன்னமும் 92 வயது கிழவர் முகத்தைப் பார்க்கத்தான் கூடுகிறார்கள். இத்தனைக்கும் கட்சியை அங்கே கைக்குள் வைத்திருக்கும், கட்சி முன்னிறுத்த விரும்பும் பினரயி விஜயன் ஒன்றும் இளைஞர் அல்ல. அவருக்கும் 72 வயதாகிறது. மக்கள் ஏற்க வேண்டுமே!

தமிழ்நாட்டில் ஜீவாவுக்குப் பின் இரு இடதுசாரிக் கட்சிகளிலும் நூற்றுக்கும் மேற்பட்ட தலைவர்கள் வந்துபோய்விட்டார்கள். மக்கள் மத்தியில் இன்றைக்கு நல்லகண்ணுவுக்கு உருவாகியிருக்கும் பெயர் அரிதானது மட்டும் அல்ல; வரலாற்று வாய்ப்பு. இதற்கான அர்த்தம், நல்லகண்ணுவை அறிவிப்பதாலேயே தலைகீழ் அற்புதம் நடந்துவிடும் என்பது இல்லை; மாறாக, ஒரு கவனிக்கவைக்கும் முதல்வர் வேட்பாளரை தங்கள் தரப்பிலிருந்து நிறுத்தும் அளவுக்கு இடதுசாரிகள் வலுவடைந்திருக்கிறார்கள் என்பதை உணர்த்துவதற்கான வாய்ப்பு. நல்லகண்ணு போன்ற ஒருவரின் எளிமை, நேர்மை, தியாகம் ஆகியவற்றைப் பேச ஆரம்பிப்பதன் மூலம் இப்படியான பல தலைவர்கள், இளைஞர்கள் இன்றைக்கும் இடதுசாரி இயக்கங்களிடம் இருக்கிறார்கள் என்பதை மக்களிடம் கொண்டுசெல்வதற்கான ஒரு வழி. எல்லாவற்றுக்கும் மேல் இடதுசாரிகள், கூட்டணிக் கட்சிகளின் வாக்கு வங்கிகளைத் தாண்டி மாற்றம் விரும்பும் பொது வாக்காளர்களின் வாக்குகளையும் ஈர்க்க இப்போதைக்கான ஒரே வழி. இன்றைக்கு எல்லாத் தரப்புகளாலும் ஏற்கப்பட்ட, நம்பகத்தன்மை கொண்ட மக்கள் தலைவராக மக்கள் நலக் கூட்டணியில் நல்லகண்ணு மட்டுமே இருக்கிறார் என்பதை அவர்கள் உணர வேண்டும்.

முதல்வர்/பிரதமர் வேட்பாளர் என்பதையே அரசியல் சட்டம் சொல்லவில்லை என்று சொல்லலாம். முதல்வர்/பிரதமர் வேட்பாளர் கூடாது என்றும் அரசியல் சட்டம் சொல்லவில்லையே! முதல்வர்/பிரதமர் என்பவர் தேர்ந்தெடுக்கப்படக் கூடிய அவையில் மேலும் ஒரு உறுப்பினர் அல்ல; கிட்டத்தட்ட ஜனநாயகரீதியாக ஆளவிருக்கும் ஒரு ராஜா. ஒரு வாக்காளரைப் பொறுத்தவரை அவருடைய ஒவ்வொரு ஓட்டும் ஒவ்வொரு சாவி. இந்த நாட்டின், அரசாங்கத்தின் சாவிக்கொத்து யாரிடம் இருக்கப்போகிறது என்று அவர் தெரிந்துகொள்ள விரும்புகிறார் என்றால், அதைத் தெரிவிப்பதுதான் ஜனநாயகம். 234 தொகுதிகளின் வேட்பாளர்களுடைய விவரங்களையும் ஒரு வாக்காளர் அறிந்துவைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு வாக்களிக்க முன்வருகிறார் என்பதாலேயே, அரச நிர்வாகத்தின் சுக்கானை நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் வழங்கிக்கொள்ளும் அதிகாரத்தையும் பெயரற்ற காசோலையாகத் தர வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை.

அரசியலில் எந்தச் சித்தாந்தத்தைவிடவும் பெரியது ஜனநாயகம். வாக்கு அரசியலும் தேர்தலும் ஜனநாயகத்தை அண்டியிருப்பவை. இதை ஒரு கட்சி ஒப்புக்கொள்ள மறுக்கலாம். ஆனால், தேர்தல் அரசியலில் அந்தக் கட்சி எடுபட முடியாது. மக்களின் நியாயங்களுக்குக் காது கொடுக்காமல், மக்களிடம் தங்களுடைய நியாயங்களைத் திணிக்கும் வரை மாற்றுக்குரல்கள் எடுபடுவதில்லை!

பிப்ரவரி, 2016, ‘தி இந்து’

5 கருத்துகள்:

 1. வறண்ட நாவு துளித் தண்ணீரை எதி்ர்பார்ப்பது போலவே, இன்றைய அரசியற்சூழலைப் பார்க்கிறேன். வாசிப்புப் பழக்கமுள்ள என் நண்பர்களே, நல்லகண்ணு அவர்களைப் பற்றிப் பேசும்போது ஆர்வமாகவும், "போட்டுப் பார்ப்போமா" என்றால், தயங்குவதையும் பார்க்கிறேன். எல்லாவற்றிலும் 'பெரும்' தாராளமயமாக்கலுக்குப் பழகிவிட்ட நமக்கு, இருக்கும் தயக்கங்கள் புரிந்து கொள்ளக் கூடியதே என்று நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 2. ஏன் fbல comments block செய்துருக்கீங்க. More the comments more is its reach, fb algorithm is built that way. உங்கள் பதிவு அதிக மக்களை போய் சேரவேண்டும்.

  பதிலளிநீக்கு
 3. நான்கு கட்சிக்கூட்டணி குறித்த ஒரு focussed பிம்பம் என்பது அவசியம் தான். பெண்களிடமும் எளிய மக்களிடமும் இக்கூட்டணியைக் கொண்டு சேர்க்க இப்பிம்பம் நிச்சயம் உதவும்.அதுவும் போக,
  உளவியல் ரீதியாக, தனி மனித வழிபாட்டில் ஈடுபாடு கொண்டவர்கள் தானே நாம் ஒவ்வொருவரும்!
  Good article with necessary justifications!

  பதிலளிநீக்கு
 4. மிக மிக மிக அருமையான பதிவு! மற்ற கட்சிகளை விட 'மக்கள் நலக் கூட்டணி' மக்களிடையே கவனத்தை ஈர்த்திருக்கிறது எனும் நல்ல தகவலுக்காக முதலில் நன்றி! "முதல்வர்/பிரதமர் வேட்பாளர் என்பதையே அரசியல் சட்டம் சொல்லவில்லை என்று சொல்லலாம். முதல்வர்/பிரதமர் வேட்பாளர் கூடாது என்றும் அரசியல் சட்டம் சொல்லவில்லையே!" என்ற வரி மக்கள் நலக் கூட்டணித் தலைவர்களுக்குச் சரியான பதிலடி.

  நல்லகண்ணு ஐயாவை முதல்வர் வேட்பாளராக நிறுத்தினால் காமராசர், அண்ணா போன்றோருக்கு நிகரான நேர்மையான தலைவர் ஒருவர் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழ்நாட்டுக்குக் கிடைப்பார் என்பதில் ஐயமில்லை. ஆனால், நல்லகண்ணு அவர்கள் மட்டுந்தான் அந்தக் கூட்டணியிலேயே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படத் தகுதியானவர் என்பது போல நீங்கள் பேசியிருப்பதும், இடதுசாரிகள் மூன்றாவது அணியாக உருவாக்கியிருக்கும் மக்கள் நலக் கூட்டணி என்கிற உங்கள் வரியும் வை.கோ என்கிற தனிமனிதன் மீது நீங்கள் கொண்டிருக்கும் காழ்ப்புணர்வையே காட்டுகிறது. உங்களுக்கெல்லாம் ஒரு மனிதன் நேர்மையாக இருந்தால் மட்டும் போதாது, அவர் ஏழையாகவும் இருந்தாக வேண்டும். கொஞ்சம் செல்வம் படைத்தவனாக இருந்து அந்த மனிதன் எவ்வளவுதான் நேர்மையாக இருந்தாலும் அந்த மனிதனை நேர்மையானவர்களின் பட்டியலில் ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள். தமிழர் பிரச்சினைகளுக்காகக் காலம் காலமாய்ப் போராடுகிறவர் வை.கோ. ஆனால் அவரை யாருக்குமே பிடிப்பதில்லை. ஏதாவது ஒரு குறையைப் பூதக்கண்ணாடி வைத்துத் தேடிப் பார்த்துச் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். மேற்படி கட்டுரையின் படத்தில் மட்டுமாவது நீங்கள் வை.கோ-வை இடம்பெறச் செய்திருப்பது உங்கள் பெருந்தன்மையையே காட்டுகிறது!

  பதிலளிநீக்கு
 5. திரு சமஸ் அவர்களுக்கு வணக்கம். இக்கட்டுரை பற்றி மட்டுமல்ல, ஏற்கெனவெ டிசம்பரில் இதே பொருளில் நீங்கள் எழுதிய கட்டுரைக்கும் சேர்த்து நான் எனது கருத்தை ஒரு தனிப்பதிவாகவே எழுதியிருக்கிறேன். அதை எனது பக்கத்தில் சில ஆயிரம் நண்பர்கள் பார்த்திருக்கிறார்கள். இங்குப் பின்னூட்டமாக ஒரு முழுக் கட்டுரையை வெளியிட முடியாது என்றாலும் அந்தக் கட்டுரையே உங்கள் கட்டுரைக்கான எனது பின்னூட்டம்தான். பார்க்க வேண்டுகிறேன் -http://valarumkavithai.blogspot.com/2016/02/blog-post_26.html நன்றி வணக்கம்.

  பதிலளிநீக்கு