புத்தகம் என்ன சக்களத்தரா?


சென்னைப் புத்தகக் காட்சியில் வழக்கமான ஜனவரி பனிச் சூழல் கோலாகலத்தை இந்தாண்டு ஜூன் வெம்மைச் சூழலில் பார்க்க முடியவில்லை. வெள்ளத்தின் தொடர்ச்சியாக தள்ளிவைக்கப்பட்டு நடத்தப்படும் இந்தப் புத்தகக்காட்சியில் சனி, ஞாயிறு இரண்டு நாட்களைத் தவிர்த்து வாரத்தின் ஏனைய நாட்களில் கூட்டம் இல்லை. ஊருக்கு மூட்டை கட்டிக்கொண்டிருந்த ஒரு பதிப்பாளர், “டீ செலவை ஈடுகட்டுற விற்பனைகூட இல்லை” என்றார். ஒரு கவிதைப் புத்தகத்தைக் கையில் கொடுத்தார். அட்டையே சாதாரண காகிதத்தில் அச்சடிக்கப்பட்டிருந்தது. “கவிதைப் புஸ்தகம் வாங்க ஆளே இல்லை. இந்தப் புத்தகம் இருபது ரூபாய். ரெண்டு டீ காசு. எறநூத்தம்பது அடிச்சோம். ஒண்ணு விக்கலை” என்றார்.

பிரபலமான பெரிய, ஏற்கெனவே பலமான வாசகர் வட்டத்தைப் பெற்றிருக்கிற பதிப்பகங்கள், ஊடக நிறுவனங்கள் நீங்கலாக பெரும்பாலான பதிப்பகங்கள் இம்முறை பாதிக்கப்பட்டிருக்கின்றன. “சென்னையில் ஜனவரியில் புத்தகக்காட்சி நடக்கும்போது மார்கழி இசை விழா, நாட்டிய விழா, புத்தாண்டு பொங்கல் கொண்டாட்டங்களோடு அதுவும் கூட்டு சேர்ந்துகொள்கிறது. புத்தகக்காட்சிக்குக் குடும்பத்தோடு செல்வதும் ஆளுக்கொரு புத்தகமேனும் வாங்குவதும் அப்போது ஒரு பொழுதுபோக்கு சம்பிரதாயம் ஆகிவிடுகிறது. இந்தக் கோடையில் அப்படி யாரும் வருவதில்லை. தீவிர வாசகர்களின் வருகை மட்டுமே விற்பனைக்குப் போதுமானதாக இல்லை” என்று சொன்னார்கள்.

இந்த முறை புத்தகக் காட்சி நடக்கும் இடமான தீவுத்திடலுக்கு ஒரு வரலாறு உண்டு. சென்னையில் வருஷத்தின் எல்லாப் பருவங்களிலும் ஏதாவது ஒரு பொருள்காட்சி நடக்கும் இடம் இது. எந்தப் பொருள்காட்சியும் கூட்டம் இல்லை என்று சொல்லி முடங்கியதாகத் தெரியவில்லை. வெயில் புழுக்கம் பெரும் சங்கடம் என்றாலும், அதை மட்டுமே காரணமாகச் சொல்ல முடியுமா என்று தெரியவில்லை.


பொதுவாக நம்மூரில், “ஏன் புத்தகக் காட்சிக்குப் போவதில்லை அல்லது ஏன் புத்தகங்கள் வாங்குவதில்லை?” என்ற கேள்விக்கு நம்மவர்கள் சொல்லும் பதில்களைத் தொகுத்து ஒரு புத்தகமாகவே போடலாம். புத்தக விலை அதீதம் என்று காரணம் சொல்பவர்கள் அனேகம். அதிலும் ஜூன் ஆகாத மாதம்.

ஒரு புத்தகம், எழுத்தாளரிடம் தொடங்கி வாசகரை வந்தடைவதற்குள் எத்தனை பேரைக் கடக்க வேண்டியிருக்கிறது? பதிப்பகத்தில் பதிப்பாளர், தட்டச்சாளர், பிழை திருத்துநர், பக்க வடிவமைப்பாளர், ஏனைய ஊழியர்கள்; அச்சகத்தில் உரிமையாளர், அச்சகர், புத்தகக் கட்டுநர், ஏனைய ஊழியர்கள்; புத்தகக்கடைகளில் புத்தக விற்பனையாளர், விற்பனைப் பிரதிநிதிகள், ஏனைய ஊழியர்கள்; இடையில் காகித விற்பனையாளர், போக்குவரத்தில் மூட்டை தூக்கி இறக்குபவர், வண்டி ஓட்டுநர், வண்டிக்காரர் இப்படி ஒவ்வொரு புத்தகத்திற்கும் பின், எத்தனை பேரின் உழைப்பும் எத்தனை குடும்பங்களின் பிழைப்பும் கலந்திருக்கிறது? நூறு ரூபாய்க்கு ஒரு புத்தகத்தை ஒருவர் வாங்கும்போது, உண்மையில் இவர்களுக்கெல்லாம் என்ன போய் சேரும்?

ஒரு அறிவார்த்த சமூகமானது தனக்கு சந்தையில் கிடைக்கும் எந்தப் பொருளின் விலையின் பின்னணியிலும் இயங்கும் தொழிலாளர்களையும் பொருளியலையும் சிந்திப்பது அவசியம். பல இடங்களில் உழைப்புச் சுரண்டலையே வெளிப்பூச்சில் மலிவு என்ற பெயரில் நாம் அழைக்கிறோம்.

குடும்பத்தோடு திரையரங்கம் சென்றால், மூன்று மணி நேரத்துக்குள் ஆயிரம் ரூபாயை அநாயசமாகச் செலவழிக்கும் ஒரு சமூகம், புத்தகங்கள் விலை பத்துக்கும் இருபதுக்கும் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதன் நியாயத்தைப் புரிந்துகொள்ளவே முடிவதில்லை.

தமிழகத்தில் எல்லாப் பத்திரிகைகளுமே ஜூன் மாதத் தொடக்கத்தில் ஒரு சின்ன சரிவைச் சந்திப்பது சகஜம். விசாரித்தால், பிள்ளைகளுக்குக் கல்விக் கட்டணம் செலுத்த வேண்டிய மாதம் இது என்று பின்னணி சொல்வார்கள். பத்திரிகையின் மாதச் சந்தா சில நூறு ரூபாய். கல்வி நிலையக் கட்டணமோ லட்சத்தைத் தொடுவது! ஒரு விஷயம் தெளிவு, பத்திரிகைகள், புத்தகங்கள் படிப்பது அனாவசிய செலவீனம் என்று நம் பொதுப் புத்தியில் எங்கோ ஆழமாகப் பதிந்திருக்கிறது.

எத்தனையோ முறை ரயில்களில் படித்துவிட்டு, வீட்டுக்குப் பயந்து அப்படியே புத்தகங்களை விட்டுச்செல்லும் ஆண், பெண்களைப் பார்த்திருக்கிறேன். தொலைக்காட்சியைத் திறந்தால் விதியழிந்தும் ஆபாசமாகவும் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கில் குப்பை கொட்டுகிறது. வீடுகளில் எந்தக் கணவன் மனைவிக்கும் இருவரும் சேர்ந்தோ, இருவரில் ஒருவர் தனித்தோ தொலைக்காட்சி பார்ப்பதில் யாருக்கும் எந்தச் சிக்கலும் இல்லை. அதே வீடுகளில் கணவனோ, மனைவியோ ஒரு மணி நேரம் புத்தகம் வாசிப்பது பல குடும்பங்களில் இன்றைக்கு சிலாக்கியமான காரியம் இல்லை. புத்தகம் சக்களத்தர் ஆகிவிடும்!

அடிப்படையில், புத்தகங்களை அவற்றின் உண்மையான பெறுமதியோடு பார்க்கும் தன்மையைப் பெருமளவில் நாம் இழந்துகொண்டிருக்கிறோம்; இது ஒரு பண்பாட்டு உளவியல் கோளாறாகவே தோன்றுகிறது.

ஒரு மாதத்துக்கு முன் அகமதாபாத்தில் புத்தகக்காட்சி நடந்திருக்கிறது. பிரமாண்டமான கூட்டமாம். ஆண்டுதோறும் அகமதாபாத் மாநகராட்சி நிர்வாகமே முன்னின்று கோடையில் குளிர்ச்சியூட்டப்பட்ட அரங்க வளாகத்தில் இந்நிகழ்வை நடத்துகிறது. “மோடி முதல்வராக இருந்தபோது, ‘வான்சே குஜராத்’ (வாசி குஜராத்) என்ற பெயரில் முன்னெடுத்த வாசிப்பு இயக்கத்தின் நீட்சி இது. குஜராத்திகளிடம் புத்தக வாசிப்பு விழிப்புணர்வை வளர்த்தெடுக்கும் விதமாக சனிக்கிழமைதோறும் கல்விக் கூடங்களில் மாணவர்கள் கூட்டாக அமர்ந்து பாடப்புத்தகங்களுக்கு அப்பாற்பட்ட புத்தகங்கள் வாசிப்பதை அரசு ஒரு வழக்கமாக்க முயற்சித்தபோது, மக்களிடம் தாக்கத்தை உருவாக்க மோடியும் அவர் அமைச்சர்களும் நூலகத்துக்குச் சென்று வாசித்தார்கள்” என்று சொன்னார்கள் அங்குள்ள நண்பர்கள். இங்கே புத்தகக் காட்சிக்கும் அரசாங்கத்துக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பதைத் தேட வேண்டிய நிலையிலேயே நாம் இருக்கிறோம். ஒட்டுமொத்த சமூகமும் சேர்ந்தே ஒரு புத்தகத்தை உருவாக்குகிறது. ஒரு புத்தகத்தின் மதிப்பு ஒட்டுமொத்த சமூகத்தையும் பிரதிபலிக்கிறது!


ஜூன், 2016, ‘தி இந்து’ 

6 கருத்துகள்:

  1. படிக்கும் பழக்கம் உள்ளவன் எனும் முறையில் இதுவரை வாசிப்புப் பற்றி எத்தனையோ கட்டுரைகள் படித்துவிட்டேன். ஆனால், இது கொஞ்சம் ஆழமானது!

    //ஒரு விஷயம் தெளிவு, பத்திரிகைகள், புத்தகங்கள் படிப்பது அனாவசிய செலவீனம் என்று நம் பொதுப் புத்தியில் எங்கோ ஆழமாகப் பதிந்திருக்கிறது// - முற்றிலும் உண்மை!

    பதிலளிநீக்கு
  2. 'புத்தகம் வாங்குவது வீண் செலவு என பொதுபுத்தியில் பதிந்திருக்கிறது'. உண்மைதான் அய்யா. அதனினும் கொடுமை பெண்கள் புத்தகம் வாங்குவது மகா வீண் செலவு எனக் கருதப்படும் மனநிலை நிறைய ஆண்களை ஆட்கொண்டிருப்பததுதான் என்பதை வேதனையுடன் இங்கு பகிர்கிறேன்.

    பதிலளிநீக்கு
  3. ஆனால் வாராவாரம் சீசன்கள் கணக்கில்லாமல் தியேட்டர்கள் நிரம்பி வழிகின்றன... அடிப்படையில் நமது டிசைன் அப்படி.

    பதிலளிநீக்கு
  4. உண்மைதான். புத்தக வாசிப்பு என்பது ஒரு பழக்கமாக(habit) வளர்த்தெடுக்கப்பட வேண்டும். என்றால் மட்டுமே அது தினசரி வாழ்வின் ஒரு அங்கமாக(TV பார்ப்பதைப்போல) மாறும்.அதற்கு, அது ஒரு அரசியல் சமூக செயல்பாடாக முன்னெடுக்கப்பட வேண்டும். இதில் பள்ளிகளின் பங்கு மிக இன்றியமையாதது.


    #ஒரு அறிவார்த்த சமூகமானது தனக்கு சந்தையில் கிடைக்கும் எந்தப் பொருளின் விலையின் பின்னணியிலும் இயங்கும் தொழிலாளர்களையும் பொருளியலையும் சிந்திப்பது அவசியம். பல இடங்களில் உழைப்புச் சுரண்டலையே வெளிப்பூச்சில் மலிவு என்ற பெயரில் நாம் அழைக்கிறோம்.# -அருமையான வரிகள் சமஸ்.

    பதிலளிநீக்கு
  5. வாசிப்பிலும், மென்மேலும் தெரிந்துகொள்ளவேண்டும் என்பதிலும் ஆர்வம் காட்ட வேண்டும். அவ்வாறே குழந்தைகளுக்கு அவ்வெண்ணத்தை ஊட்டிவிடவேண்டும். நூல் வாங்குவதை பழக்கமாகக் கொள்ளவேண்டும். வீட்டில் ஒரு சிறிய நூலகம் அமைக்கவேண்டும். இவ்வாறான ஒரு நிலை ஒருவரை பல வகையில் மேம்படுத்தும்.

    பதிலளிநீக்கு
  6. சமூக ஊடகங்கள் பெருகிவிட்டன. கைப்பேசியில், கணினியில் எல்லாம் படித்து விடுகிறோம். உங்களின் புத்தகம் இ புத்தகமாக இருக்கிறதா வாங்கிக்கொள்கிறேன் அல்லது இணையத்தில் இருந்தால் சொல்லுங்கள் என்று சொல்லத்தான் தோன்றுகிறது. வீட்டில் ஏற்கனவே வாங்கிய படித்து விட்ட புத்தகங்களை எத்தனை பேருக்கு அன்பளிப்பாகக் கொடுத்தாலும் தீர்ந்து போகாமல் தான் புத்தகங்கள் இருக்கின்றன. இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டியிருக்கிறது. ஒரே ஒரு 'கிண்டில்' நம் கையில் இருந்தால் ஒரு நூலகமே நம் கையில் இருக்கிறது என்று சொல்கிறார்கள் இளைய தலைமுறையினர். புத்தகப் பதிப்பகத்தார் இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டும். தவிர வாசிப்புப் பழக்கத்தை இளையோரிடம் வளர்க்க பெற்றோர், ஆசிரியர், அரசு எல்லாரும் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதை நான் வரவேற்கிறேன். நன்றி!

    பதிலளிநீக்கு