அன்புதான் என்னிடமுள்ள ஒரே செய்தி - இரோம் ஷர்மிளா


உலகின் நீண்ட, 16 வருட உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்து, மருத்துவமனையிலிருந்து இரோம் ஷர்மிளா திரும்பிய மறுநாள் அவரைச் சந்திக்கப் போயிருந்தேன். மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள ஜவாஹர்லால் நேரு மருத்துவமனையின் முன் நிறுத்தப்பட்டிருந்த காவல் படையினரின் எண்ணிக்கையில் பெரிய மாறுதல் ஏதும் ஏற்பட்டிருந்ததாகத் தெரியவில்லை. இங்குதான் ஷர்மிளா வைக்கப்பட்டிருந்தார். இதுவே நீண்ட காலம் அவரது சிறைக் கூடமாகவும் இருந்தது.

ஊரின் முக்கிய இடங்கள், கடை வீதிகள், சாலை முக்குகள் எங்கிலும் இந்தியப் படையினர் நிறைந்திருந்தார்கள். சாலையில் ரோந்து வாகனங்கள் வந்து சென்ற வண்ணம் இருந்தன. மாலை ஆறு மணிக்கெல்லாம் ஊரடங்கு சூழல் ஊரின் மேல் ஒரு கம்பளிப் போர்வைபோல மூடிவிடுகிறது. நிறுவனங்கள், கடைகள் அடைக்கப்பட்டு, ஆளரவமற்ற சாலைகளில் ரோந்து வாகனங்களும் படையினரும் மட்டுமே தென்படுகின்றனர். அங்கொன்றும் இங்கொன்றுமாக சின்ன பெட்டிக் கடைகள், உணவு விடுதிகள் மட்டும் திறந்திருக்கின்றன. கடைவீதிகளில் அரிதாக ஆட்கள் அவசர அவசரமாகக் கடந்து செல்கிறார்கள்.


அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஆயுதப் படையினருக்கான சிறப்பு அதிகாரச் சட்டம் அமலில் உள்ள மாநிலம் இது. சுதந்திர மணிப்பூர் போராட்டம், அது போக மாநிலத்தில் உள்ள 30-க்கும் மேற்பட்ட இனக் குழுக்கள் தமக்குள் நிகழ்த்திக்கொண்டிருக்கும் குழு மோதல்கள் என மணிப்பூர் கொந்தளிப்பில் இருந்த 1958-ல், இங்கு மத்திய அரசால் ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டம் அமலாக்கப்பட்டது. இந்தியாவில் மிச்சமிருக்கும் காலனியாதிக்கக் கால ஜனநாயக விரோத கருப்புச் சட்டங்களில் ஒன்று இது. ராணுவப் படையினர் எவர் வீட்டிலும் புகுந்து யாரையும் விசாரிக்கவும், கைதுசெய்யவும், சுட்டுக் கொல்லவும், எந்த விசாரணையும் இன்றி வருடக்கணக்கில் சிறையில் அடைத்து வைக்கவும் உதவும் சட்டம். பிரிவினைவாதிகளையும் எல்லைக்கு வெளியிலிருந்து ஊக்கம் பெறும் தீவிரவாதக் குழுக்களையும் ஒடுக்க இந்தச் சட்டம் தேவை என்கிறது இந்திய ராணுவம். மணிப்பூரிகள் இந்தச் சட்டத்துக்கு நிறைய பலி கொடுத்துவிட்டார்கள். ஆரம்ப நாளிலிருந்து, இச்சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்திப் போராடிவருகிறார்கள்.


எதிலும் பெண்கள் துணிச்சலாக முன்னே நிற்கும் மரபைக் கொண்ட மணிப்பூரில், ஒரு சாதாரணக் குடும்பத்திலிருந்து வந்தவர் இரோம் ஷர்மிளா. 2000-ல் நடந்த இளம்பெண் மெர்ஸி காபோயின் பாலியல் படுகொலை ஏற்கெனவே ஷர்மிளாவை நிலைகுலைய வைத்திருந்தது. தொடர்ந்து அதே ஆண்டு நவம்பர் 2 அன்று நடந்த மாலோம் படுகொலை அவரைக் காலவரையறையற்ற ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தை நோக்கித் தள்ளியது. ராணுவத்தினரின் தாக்குதல் என்று கூறப்படும் அந்தப் படுகொலைச் சம்பவத்தில், மலோம் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பொதுமக்கள் 10 பேர் கொல்லப்பட்டார்கள். இறந்தவர்களில் இருவருடைய மரணம் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஒருவர் லிஷன்பம் கிபிடோபி - 62 வயது மூதாட்டி. மற்றொருவர், சினம் சந்திரமணி - 1988-ல் சிறார்களுக்கான இந்திய அரசின் வீரதீரச் செயல்களுக்கான விருதை வென்றவர். இந்தச் சம்பவத்துக்கு எதிரான கண்டனப் பேரணி ஏற்பாட்டுக் கூட்டத்தில் பங்கேற்க வந்தார் ஷர்மிளா. ‘ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தை இந்திய அரசு திரும்பப் பெறும்வரை உண்ணாவிரதம்’ எனும் முடிவை அங்கு எடுத்தார். அதன் பின்னர் ஷர்மிளாவின் உயிர் மணிப்பூர் போராட்டக் களத்தின் உக்கிரமான உயிர்நாடியானது.

அரசாங்கம் ஷர்மிளாவைக் கைதுசெய்து மருத்துவமனையில் அடைத்தது. அங்கே மூக்கு வழியாகத் திரவ உணவுகளையும், மருந்துகளையும் உட்செலுத்தியது. தற்கொலைக்கு முயன்றதாக அவர் மீது வழக்கு. ஓராண்டு சிறைத் தண்டனை. ஒரு வருடம் முடிந்ததும், ஷர்மிளா பெயரளவில் விடுவிக்கப்படுவார். விடுவிக்கப்பட்ட மறுநாள், உண்ணாவிரதம் என்ற பெயரில் தற்கொலைக்கு முயற்சித்ததாகச் சொல்லி, மீண்டும் அவரைக் கைதுசெய்து உள்ளே அடைத்துவிடுவார்கள். அவருடைய இளமைக் காலத்தின் பெரும் பகுதி இப்படியே கழிந்தது. இந்த 16 ஆண்டுகளில் ஒரு துளி தண்ணீர் அவர் நாவை நனைக்கவில்லை.

ஷர்மிளா தன்னுடைய கோரிக்கையைப் பிரதமருக்கும், குடியரசுத் தலைவருக்கும் மட்டுமின்றி, சர்வதேச மனித உரிமைச் செயல்பாட்டாளர்களுக்கும் தொடர்ந்து அனுப்பிக்கொண்டே இருந்தார். அதிகரித்த அழுத்தங்கள் காரணமாக இடையில் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தில், இந்தச் சட்டத்தை மறுபரிசீலனை செய்வதற்காக ஆணையங்களை அமைத்தது இந்திய அரசு. மனிதத்தன்மையற்ற செயல்பாடுகளுக்கு வழிவகுக்கும் இச்சட்டத்தின் மோசமான கூறுகளை அரசுக்குச் சுட்டிக்காட்டினர், அதை ஆராய்ந்தவர்கள். எனினும், ராணுவத்தின் எதிர்ப்பை மீறி சட்டத்தைத் திரும்பப் பெறும் முடிவை எடுக்க அரசால் முடியவில்லை.

வரலாற்றுரீதியாகவும், புவியியல்ரீதியாகவும் வெகு தூரத்தில் இருக்கும் வடகிழக்கு மாநிலங்களில் என்ன நடந்தாலும் பெரும்பான்மை இந்தியா அதைப் பற்றி அலட்டிக்கொண்டதில்லை. இரோம் ஷர்மிளா போராட்டம் ஆண்டுகள் பல கடந்த நிலையில், அவர் மீதான கவனம் மணிப்பூரைத் தாண்டி அம்மக்களின் பிரச்சினைகளைப் பேச வைத்தது. ஆகவே, மணிப்பூர் மக்கள் தங்கள் போராட்டத்தின் அடையாளமாக அவரைப் பார்த்தனர். ஷர்மிளா ஒரு புனித பிம்பம் ஆனார். போராட்ட காலத்தில், நேரில் சென்று பார்க்கும்போது அழ நேர்ந்தால், அது தன் மகளின் போராட்டத்தைப் பலவீனப்படுத்திவிடுமோ என்று கருதி ஷர்மிளாவைச் சந்திப்பதையேகூட வைராக்கியமாகத் தவிர்த்தார் அவருடைய தாய் ஷக்கி தேவி. ஷர்மிளாவை உந்துசக்தியாகக் கொண்டு உருவான போராட்டக் குழுவினரே அவருடைய ஒரே ஆறுதலாகவும் ஊக்கமாகவும் இருந்துவந்தனர். ஷர்மிளா 15 நாட்களுக்கு ஒருமுறை காவல் நீட்டிப்புக்காக நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்படும் நாட்களில் அவர்கள் அங்கே வருவார்கள். ஷர்மிளாவையும் மணிப்பூரையும் உயர்த்திப்பிடிக்கும் பாடல்களைப் பாடுவார்கள். முழக்கமிடுவார்கள். ஷர்மிளாவை மையப் பாத்திரமாகக் கொண்ட நாடகங்களோடு நாடெங்கும் அவர்கள் செல்வார்கள். ஒரு சின்னக் கூட்டம் என்றாலும், துடிப்பான கூட்டம் அது.

இன்றைக்கு அந்தக் குழுவே வாழ்வின் மிகப் பெரிய தர்மசங்கடமாக ஷர்மிளா முன் நிற்கிறது. சில ஆண்டுகளுக்கு முன், கடிதம் வழியே அறிமுகமான பிரிட்டன் இளைஞர் டெஸ்மண்ட் கொட்சி, உறைந்திருந்த ஷர்மிளா வாழ்வில் மின்னலென ஊடுருவினார். இந்தக் காதல், ஷர்மிளாவைச் சுற்றியிருந்தவர்களைப் பெரும் பதற்றத்தில் தள்ளியது. ஷர்மிளாவைச் சந்திக்க டெஸ்மண்ட் கொட்சி வந்தபோது அவர்கள் அவரை அனுமதிக்க மறுத்தார்கள். டெஸ்மண்ட் கொட்சி தன் காதலியின் வழியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் உட்கார்ந்தார். பிரச்சினை பெரிதான பின் அவரை அனுமதித்தார்கள். ஷர்மிளாவின் போராட்டத்தில் பெரும் பிளவை அவர் உண்டாக்குவார் என்றும் அவர் இந்திய அரசின் உளவாளி என்றும் பேச ஆரம்பித்தார்கள். ஷர்மிளாவோ போராட்டத்துக்கு இணையான பிடிமானத்தைக் காதலிலும் கொண்டிருந்தார். டெஸ்மண்ட் கொட்சி அவருக்கு அளித்த, ‘ஐ லவ் யூ’ எழுத்துகளைத் தாங்கிய கரடி பொம்மை அவருக்கு உற்ற துணையானது. அதேசமயம், தன் வாழ்நாள் முழுமையும் தன் சமூகத்துக்கானது என்றும் தன்னுடைய காதலரும் போராட்டத்தில் இணைந்துகொள்வார் என்றும் அவர் சொல்லிவந்தார்.

இந்தச் சூழலில் 2016 ஆகஸ்ட் 9 அன்று தன்னுடைய போராட்டத்தைக் கைவிட்டு, அரசியலில் இறங்கும் முடிவை அவர் அறிவித்த பின்னர், சூழலில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டன. “போராட்டத்தைப் பாதியில் கைவிட்ட அவர் தங்கள் வீட்டுக்கு வரக் கூடாது’’ என்றார் அவருடைய அண்ணன். ஆதரவாளர்கள் குழு பிளந்தது. மருத்துவமனையிலிருந்து புறப்படும்போது போக்கிடம் இல்லாத நிலை ஷர்மிளாவுக்கு உருவானது. தன்னுடைய நண்பர் ஒருவரின் வீட்டுக்கு அவர் செல்லத் திட்டமிட்டபோது, அங்கே அவர் தங்கக் கூடாது என்று அந்தப் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மருத்துவமனையில் இருந்த அவர், இப்போது ஒரு ஆசிரமத்தில் தங்கியிருக்கிறார். மலைகள் சூழ்ந்த இம்பால் பள்ளத்தாக்கின் மேற்குப் பகுதியிலுள்ள லங்கோல் மலையடிவாரத்தில் அமைந்திருக்கிறது அந்த ஆசிரமம். அடுத்தடுத்து திருப்பங்களாக நகர்ந்துகொண்டிருக்கும் இந்த நாட்களில், அவரைச் சந்திக்கும் முயற்சி அத்தனை சுலபமானதாக அமையவில்லை. ஷர்மிளாவின் ஆதரவாளர்களில் ஒருவர் மூலம் இந்தப் பயணம் சாத்தியமானது.

மிக மோசமான சாலைகளின் வழியே நாங்கள் பயணமானோம். இடையில் ஓரிடத்தில் ஜீப்பை நிறுத்தச் சொல்லி இறங்கிய அவர், இரண்டு வாழைப் பழங்களை வாங்கி வந்தார். “ஷர்மிளா தங்கியிருக்கும் இடத்தில் எதுவும் கிடைப்பது கஷ்டம்’’ என்றார். “ஷர்மிளாவிடம் இன்றைக்குப் பத்து ரூபாய்கூடக் கிடையாது. எல்லாமே இப்படி அவரைச் சுற்றியிருப்பவர்களால் நடக்க வேண்டும். இந்தப் போராட்டக் காலம் முழுக்க அவருடன் புத்தகங்கள் மட்டுமே இருந்தன. பரிசாக வந்த நூற்றுக்கணக்கான புத்தகங்களையும் படித்து முடித்த பின் இம்பாலில் உள்ள பொது நூலகத்துக்குக் கொடுத்துவிட்டார். தன் கையில் பணம் என்று அவர் ஒரு பைசாவைக்கூட வைத்துக்கொண்டதில்லை. மிகச் சாதாரணமான குடும்பப் பின்னணியிலிருந்து வந்தவர் அவர். எங்களுக்காக ஒட்டுமொத்த வாழ்வையும் கொடுத்தார். அவரைக் குறை கூறுவது எங்களை நாங்களே காறி உமிழ்ந்துகொள்வதற்குச் சமம். இன்றளவு வரை அவர் செய்திருக்கும் தியாகமே எந்த ஒரு மணிப்பூரியின் தியாகத்தைக் காட்டிலும் உயர்வானது. அரசியல் போராட்டங்களைத் தேர்ந்தெடுப்பவர்களுக்கு ஆசாபாசம் இருக்கக் கூடாதா?” என்று அவர் கேட்டார். பின், மணிப்பூரிகளின் மன இயல்பைப் பற்றிப் பேசிவந்தவர் “சூழல் ஒவ்வொரு நாளும் மாறும். எந்த இடத்தில் மக்கள் அவரை உள்ளே வரக் கூடாது என்று கூறிப் போராட்டத்தில் ஈடுபட்டார்களோ அந்த மக்களே நேற்று சாயங்காலம் அவரைத் திரும்ப அழைத்தனர். அவர்கள் மத்தியில் சென்று ஷர்மிளா உரையாற்றிவிட்டு வந்தார். ஒரு வகையில் அவர் பேசிய முதல் பொதுக்கூட்டம் இது” என்றார்.

சேறும் சகதியும் நிறைந்த கரடுமுரடான பாதைகளில் திக்கித்திணறி, நாங்கள் மேலே முன்னேறினோம். வழிநெடுகத் தென்பட்ட வீடுகள் மோசமான வறுமையைப் பகிரங்கப்படுத்தின. தகரம் வேயப்பட்ட சின்னச் சின்ன வீடுகள். கள்ளிப்பெட்டி மரப் பலகைகளையும் மூங்கில் பிளாச்சுகளையும் வைத்துக் கட்டப்பட்ட கடைகள். பிள்ளைகள், பெரியோர் இரு தரப்பினரின் வெற்று உடம்புகளும் ஏழ்மையை வெளிக்காட்டி நின்றன. இடையே எங்கேனும் பெரிய கட்டிடங்கள் வந்தபோது, நவீன ரகத் துப்பாக்கிகளை ஏந்திய, சீருடை ஏதும் அணியாத ஆட்களை அங்கே காவல் பணியில் பார்க்க முடிந்தது. வண்டி மலையடிவாரத்தை நெருங்கியது.

கொஞ்சம் தனிமையான கட்டிடம் அது. பாழடைந்த இடம் என்றுகூடச் சொல்லலாம். ஆசிரமம் என்றாலும், கொஞ்சம் பேர் வசிக்கும் பெரிய வீடு அல்லது விடுதிபோலவே அது இருந்தது. சுற்றியுள்ள மலைவாழ் மக்களுக்கு இயற்கை மருத்துவச் சிகிச்சையளிக்கும் ஒரு கூடமாகவும் அது செயல்படுவதாகச் சொன்னார்கள். கட்டிடத்துக்குப் பின்னே வனம், ஒரு அமைதியான பூதம் நிழலாக விரவிப் பதுங்கியிருப்பதுபோல மலை முகடுகளில் பரவிக் கிடந்தது. மலைக் காட்டை ஆக்கிரமித்திருக்கும் பூச்சிகளின் இருப்பை அவற்றின் இடைவிடாத சத்தம் சொல்லியது. நாங்கள் உள்ளே நுழைந்தோம். ஷர்மிளா மேலே மாடியில் இருக்கிறார் என்றார் எதிரே தென்பட்ட ஒரு பெண். மாடியில் ஒரு அறையில் மாணவர் விடுதி அல்லது அரசு மருத்துவமனையின் பொதுப் பிரிவில் கிடப்பதுபோல நான்கைந்து இரும்புக் கட்டில்கள். அவற்றில் சீரமைக்கப்பட்ட ஒன்று, ஷர்மிளாவுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. கட்டிலில் தலையணையின் அருகிலேயே அந்தக் கரடி பொம்மை உட்கார்ந்திருந்தது. அதன் அட்டைப் பெட்டி மீது டெஸ்மண்ட் கொட்சியின் சிறு புகைப்படம் ஒட்டியிருந்தது. மணிப்பூரிகளின் இயல்பான உடையில் வரவேற்றார் ஷர்மிளா.

உண்ணாவிரதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டாலும்கூட, இரோம் ஷர்மிளா தலைமுடியை இன்னும் பின்னிப்போடவில்லை. நகங்களை வெட்டிக்கொள்ளவில்லை. ஒப்பனையற்ற முகம். வாஞ்சையான பார்வை. இடையிடையே அவருடைய நினைவு பரபரவென்று எங்கோ செல்வதையும் சடாரென்று மோதி பழைய இடம் நோக்கித் திரும்புவதையும் அவருடைய பார்வைகளின் போக்கினூடே யூகிக்க முடிகிறது. ஆங்கிலத்தில் உரையாடுகையில், நிதானமாக யோசித்து யோசித்துப் பேசுபவராகவும், மணிப்பூரியில் பேசுகையில் கடகடவென்று கொட்டுபவராகவும் தெரிந்தார். சிரிக்கும்போது சத்தமாக வாய்விட்டுச் சிரிக்கிறார். இக்கட்டான விஷயங்களைப் பேசுகையில், மௌனத்தில் ஆழ்ந்துவிடுகிறார். மூழ்கடிக்க முயலும் விரக்தி, ஏமாற்றம், வலி, எதிர்காலம் குறித்த குழப்பம், நிச்சயமின்மை... இவை யாவற்றின் மத்தியிலிருந்தும் விதியின் கைப்பற்றி விடுதலையை நோக்கி பிய்த்துக்கொண்டு பாய்பவர்போல இருந்தார். அரசியலைக் காட்டிலும் ஆன்மிகமே அவரை வழிநடத்துவதாகத் தோன்றியது. மணிப்பூர் களச் சூழலை உணர்ந்தபோது, அரசியல்ரீதியாக அவர் எடுக்கும் முடிவுகள் சரியானவைதானா என்று சொல்லத் தெரியவில்லை. அவரிடம் நிறைய அறியாமை (innocence) வெளிப்பட்டது. அதுவே அவரிடம் அறத்தைத் தாங்கி நிற்கும் அடிவேராகவும் தோன்றியது.

எப்படி இருக்கிறீர்கள்?

கூண்டிலிருந்து வெளியே வந்த மாதிரி. அங்கே மருத்துவமனையில், அந்தச் சிறையில் யாரும் என்னை அவ்வளவு எளிதாகச் சந்திக்க முடியாது. அனுமதி வாங்க வேண்டும். நான் பெரிய இழப்பாக நினைத்தது மக்களைச் சந்திக்க முடியாததைத்தான். இப்போது யாரையும் நான் சந்திக்கலாம். எங்கேயும் போகலாம்.

ஏன் இந்த ஆசிரமத்தைத் தேர்ந்தெடுத்தீர்கள்?

இந்த இடத்தை நான் தேர்ந்தெடுக்கவில்லை. கடவுள் இங்கு அனுப்பிவைத்தார். கடவுள் இட்ட வழியில் நான் செல்கிறேன். இப்போது அவர் நான் உள்ளார்ந்து என்னைக் கவனிக்க வேண்டும் என்று சொல்கிறார். அமைதிக்கு உகந்த இடம் இது. இங்கே நீங்கள் பேசுவதை நீங்கள் கேட்க முடியும்.

வழக்கமான ஆகாரம் எடுத்துக்கொள்ள ஆரம்பித்துவிட்டீர்களா? உடல் ஏற்றுக்கொள்கிறதா?

பிரத்யேகமான ஆகாரமெல்லாம் இல்லை. நண்பர்கள் கொடுப்பதைச் சாப்பிடுகிறேன்.

கிட்டத்தட்ட 16 வருடங்கள் உணவைத் தொடாமலேயே இருந்திருக்கிறீர்கள். இந்த உண்ணாவிரதத்தைத் தொடங்கு வதற்கு முன்பு, நீங்கள் சாப்பிட்டபோது இருந்த உணவின் சுவைக்கும், இப்போதைய உணவில் இருக்கும் சுவைக்கும் வித்தியாசம் ஏதும் தெரிகிறதா?

ரொம்ப ரொம்ப ருசியாக இருக்கிறது… (சத்தமாக வாய்விட்டுச் சிரிக்கிறார்…)

பொதுவாக மணிப்பூரிகள், விதவிதமான உணவு வகைகளுக்குப் பேர் போனவர்கள். சின்ன வயதில், உங்களுக்குப் பிடித்தமான உணவு வகை எது? அதை இப்போது சாப்பிட்டுப் பார்த்தீர்களா?

எனக்கு அது பிடிக்கும், இது பிடிக்காது என்கிற பழக்கம் சின்ன வயதிலிருந்தே இல்லை. அசைவத்தை மட்டும் தவிர்ப்பேன். மற்றபடி, வீட்டில் என்ன கொடுக்கிறார்களோ அதைச் சாப்பிட்டுப் பழகியிருக்கிறேன். உணவை வீணாக்கியதில்லை. இப்போது எல்லாவற்றையும் சாப்பிட வேண்டும்போல இருக்கிறது.

எந்த மாதிரியான தருணத்தில், உணவை ஒறுத்தல் எனும் முடிவைப் போராட்ட வடிவமாக எடுக்க முடிவெடுத்தீர்கள்?

என்னால் என் சமூகத்துக்கு என்ன செய்ய முடியும் என்று கேட்டுக்கொண்டபோது, அஹிம்சை வழியில் எனக்கு அது ஒன்றே வழியாகத் தெரிந்தது. பொதுவாக, நாங்கள் வியாழக்கிழமைகளில் விரதம் இருப்பது வழக்கம். அப்படியொரு வியாழக்கிழமை விரதத்தின் தொடர்ச்சியாகவே இந்தப் போராட்டத்தைத் தொடங்கினேன்.

இந்த 16 ஆண்டு காலத்தில் சாப்பிட்டாக வேண்டும் என்ற வேட்கையைத் தூண்டிய, உங்கள் விரதத்தோடு மல்லுக்கு நின்ற உணவு எது? அதுபோன்ற வேட்கை மிக்க தருணங்களில் எப்படி அந்தச் சவாலை எதிர்கொண்டீர்கள்?

எந்த உணவையும் பார்த்து அப்படி ஒரு வேட்கைக்கு ஆளானதில்லை. ஆனால், சில சமயங்களில் தண்ணீரைப் பார்த்து அலாதியான தாகம் ஏற்படும். அப்படியே அதை நினைத்துக்கொண்டே தூங்கிப்போவேன். ஓரிரு முறை தண்ணீர் குடிப்பதுபோலக் கனவு வந்திருக்கிறது. கனவில் அம்மா கொண்டுவந்து தண்ணீர் கொடுப்பார்.

என்னைப் போன்றவர்களால் ஒரு முழு நாள்கூட விரதமிருக்க முடிவதில்லை. சில பொழுதுகள் விரதத்தின்போதும்கூட மனம் உணவின் மீதே வட்டமடித்துக்கொண்டிருக்கும். எப்படி இந்த 16 ஆண்டுகளை எதிர்கொண்டீர்கள். எது உங்களுக்குத் தார்மீக பலத்தைத் தந்தது?

ஆன்மப் பரிசோதனைக்கு முகம் கொடுக்கத் தயாராக இருந்தால், அது எல்லோராலும் சாத்தியம் என்றே நினைக்கிறேன்.

உலகில் உள்ள அத்தனை உயிர்களின் இயக்கத்துக்கும் உந்துசக்தி தாகமும் பசியும் பாலுறவு வேட்கையும். சந்நியாசிகள் பாலுறவு வேட்கையைக் கடந்துவிட முடியும் என்கிறார்கள். அவர்களாலும்கூட தாகம், பசியைக் கடக்க முடியும் என்று தோன்றவில்லை. தாகம், பசியை எதிர்கொள்ளும் உங்கள் உணவு ஒறுத்தலுக்கான மைய நோக்கமாகத் தனிப்பட்ட வகையில் எதைக் கொண்டிருந்தீர்கள்?

என்னுடைய நிலைமை கொஞ்சம் விசித்திரமானது. சந்நியாசிகள் விரதம் இருந்தால்கூட, குறைந்தபட்சம் தாகம் - பசி அவர்கள்கூட இருக்கும். ஒருவகையில் விரதம் இருப்பவர்களுக்குத் தாகமும் பசியும் ஒரு துணை. எனக்கு அந்தத் துணைகளைக்கூட யாரும் விட்டுக்கொடுக்கவில்லை. அதாவது, செயற்கையான முறையில் தொடர்ந்து என் வயிற்றை அவர்கள் நிரப்பிக்கொண்டே இருப்பார்கள். மூக்கு வழியாக ஆகாரத்தையும் மருந்துகளையும் புகட்டிக்கொண்டே இருப்பார்கள். வருஷக்கணக்காக இப்படி நடக்கும்போது அந்த உணவைப் பார்க்க எப்படி இருக்கும்? (ஆழ்ந்து போகிறார்…) நான் அதைத் தண்டனையாகவோ, சுமையாகவோ பார்க்கவில்லை. அது என் சமூகத்துக்காக நான் ஏற்றுக்கொண்ட ஒரு கடமை, பொறுப்பு. அது ஒரு தனி மனுஷியின் வலி அல்ல. ஒரு சமூகம் அன்றாடம் எதிர்கொள்ளும் வலியின் ஒரு பகுதி. எனக்குத் தாங்கும் சக்தி இருந்தது. நான் எடுத்துக்கொண்ட லட்சியமும் மன வலிமையும் அதை எனக்குத் தந்தன. யோகப் பயிற்சி என்னை ஒருமுகப்படுத்திக்கொள்ளப் பெரிய அளவில் உதவியது என்று நினைக்கிறேன்.

உயரிய நோக்கத்தைக் கொண்ட உங்களுடைய போராட்டம் கணிசமாக வென்றிருக்கிறது. இன்றைக்கு நாடு முழுவதும் மணிப்பூர் மக்களின் துயரங்கள் தெரிகிறது என்றால், ஆயுதப் படையினருக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்துக்கு எதிரான குரல்கள் நாடெங்கும் ஒலிக்கின்றன என்றால், அதற்கு உங்களுடைய 16 ஆண்டு கால உண்ணாவிரதப் போராட்டம் முக்கியமான காரணம். எனினும், உங்கள் போராட்டம் அதன் முழு இலக்கை எட்டிவிடவில்லை. உங்களுடைய கோரிக்கையை இன்றுவரை இந்திய அரசு ஏற்கவில்லை. இந்தச் சூழலில், உங்களுடைய மனநிலை என்ன? அடுத்து என்ன செய்யப்போகிறீர்கள்?

(கீழே குனிந்துகொள்கிறார்… மௌனம்…) என் வாழ்க்கையில் நான் எடுத்த கஷ்டமான முடிவு இது. போராட்டத்தைத் தொடங்கும்போதுகூட நான் இவ்வளவு சிரமப்படவில்லை. அரசாங்கம் என்னுடைய குரலுக்குச் செவிசாய்த்திருக்கலாம். வன்முறை வழியில் போராடிக்கொண்டிருப்பவர்கள் மத்தியில் அது ஒரு புது நம்பிக்கையை விதைத்திருக்கும். நான் என் உயிரையும் கொடுக்க எப்போதும் தயாராக இருந்தேன். ஆனால், எந்த மாற்றத்தையும் என் போராட்டம் ஏற்படுத்தவில்லை. என் வலிகளுக்கு எந்த மதிப்பும் இங்கு இல்லை. இப்போது தேர்தல் அரசியலில் பங்கேற்கும் முடிவை எடுக்கும்போதும்கூட அதைப் போராட்டத்தின் இன்னொரு வடிவமாகவே நினைக்கிறேன்.

தொலைநோக்குப் பார்வையில் நீண்ட காலத் திட்டத்துடன், சமூகச் சீர்திருத்தத்தில் ஈடுபடுவதற்கும், உடனடியாகத் தேர்தலில் நின்று அதிகாரத்தைக் கைப்பற்றும் தேர்தல் அரசியலுக்கும் இடையே பெரிய இடைவெளி இருப்பதாகத் தோன்றுகிறது. கிட்டத்தட்ட இரண்டும் இருவேறு பாதைகளாகத் தெரிகின்றன. தேர்தல் அரசியலில் கலந்து, வெறுமனே பதவிகளைக் கைப்பற்றுவதன் மூலம் மட்டும் என்ன மாற்றத்தை ஏற்படுத்திவிட முடியும் என்று நம்புகிறீர்கள்?

முதல்வரை எதிர்த்து நான் போட்டியிட நினைக்கிறேன். நேர்மையான மனிதர்கள் மாநிலம் முழுவதும் இப்படிப் போட்டியிடுவார்கள். எங்கள் சமூகத்தின் பெரிய துயரம் ஒற்றுமையின்மை. சமூக ஒற்றுமைக்கும் அரசியல் மீதான நன்னம்பிக்கைக்கும் என்னுடைய இந்த முடிவு வித்திடும் என்று நம்புகிறேன். அரசியலை அரசியல்வாதிகள் மட்டும் கெடுக்கவில்லை. நம் எல்லோருக்குமே அதில் பங்கிருக்கிறது. நம்முடைய மனங்களில் உள்ள ஊழலின் ஒரு பகுதியே அரசியல் வழியே நம் கண்கள் முன் வருகிறது. நமக்குள்ளிருக்கும் அசிங்கத்திலிருந்து விடுபடுவதையே நான் பேசுவேன்.

நான் மணிப்பூரில் தங்கி இங்குள்ளவர்களுடன் கலந்துரையாடியபோது, இங்கு பல்வேறு பிரச்சினைகள் மக்களை அழுத்தியிருப்பதை உணர முடிந்தது. வறுமை, வேலைவாய்ப்பின்மை, ஊழல் ஆகியவை ஆயுதப் படைகளைக் காட்டிலும் மக்களை வதைப்பதுபோலத் தெரிகிறது. தவிர, ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தை ரத்துசெய்யும் அதிகாரமும் மாநில அரசுக்கு இல்லை. இப்படியான சூழலில் மக்கள் உங்களைத் தேர்ந்தெடுப்பார்கள் என்று நினைக்கிறீர்களா?

மணிப்பூரிகளின் இன்றைய தேவைகளை நான் உணர்ந்திருப்பதன் தொடர்ச்சியாகவே இந்த முடிவை எடுத்தேன். தொலைநோக்குள்ள, ஊழலற்ற, வெளிப்படையான நிர்வாகத்தைத் தரும் ஒரு அரசு இன்றைய அவசியத் தேவையாக உருவெடுத்திருக்கிறது. நான் தேர்தலில் நிற்பது அதை வெளிப்படுத்தும் ஒரு அடையாளம். மாற்றத்துக்கான தார்மீக அறைகூவல். ஒருவேளை நான் தோற்றால், அது என்னுடைய தோல்வி அல்ல.

ஆனால், உங்களுடைய அரசியல் எதிரிகள், பல மடங்கு வலிமையானவர்கள். ஒருபுறம் கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் நீடித்துவரும் காங்கிரஸ் முதல்வர், இன்னொரு புறம் மத்திய ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பாஜக. எந்தப் பின்புலமும் இல்லாமல் தேர்தல் களத்துக்குச் செல்லும் முடிவை நீங்கள் எடுத்திருக்கிறீர்கள். இந்த முடிவு உங்கள் எதிர்காலத்தை எப்படி மாற்றும் என்று யோசித்தீர்களா?

உள்ளுணர்வு சொல்வதைக் கேட்கிறேன். விளைவுகளை நான் கணக்கிடவில்லை. யார் எவ்வளவு பலசாலியாக இருந்தால் என்ன, மக்கள் ஒன்றுபட்டுவிட்டால் எதுவும் சாத்தியம்.

ஆனால், எந்த மக்களுக்காக நீங்கள் போராடுகிறீர்களோ, அந்த மக்களே உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்ட உங்கள் முடிவில் பிளவுபட்டு நிற்கிறார்கள். உங்கள் அம்மாவும் அண்ணனும்கூட உங்கள் முடிவை ஏற்றதாகத் தெரியவில்லை…

என் அம்மாவுக்கு என் மீது பிரியம் மட்டும் அல்ல; மரியாதையும் உண்டு. நான் எடுக்கும் முடிவுகளில் நியாயம் இருக்கும் என்று அவர் சொல்வார். இப்போதும் என் முடிவை அவர் எதிர்ப்பதாக நான் நினைக்கவில்லை. என் அண்ணனை எதிர்த்துப் பேசும் சக்தி இன்றைக்கு அவரிடம் இல்லை. என் அண்ணனும் சரி, என்னுடைய ஆதரவாளர்களில் ஒரு பகுதியினரும் சரி; காலப்போக்கில் என்னைப் புரிந்துகொள்வார்கள் என்றே நினைக்கிறேன். என் வாழ்க்கையின் பெரும் பகுதியை என் மக்களுக்காகக் கொடுத்திருக்கிறேன். மிச்சமுள்ள வாழ்க்கையையும் என் மக்களுக்காகக் கொடுக்கவே நிற்கிறேன். இதை ஒருநாள் அவர்கள் புரிந்துகொள்வார்கள். நாமெல்லாம் கேவலம் மனிதர்கள். நானும் ஒரு மனுஷி. ஒரு உயிரின் இயற்கையான, இயல்பான உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

நீங்கள் காந்திய வழியைப் பின்பற்றுவதாகக் கூறுவதால் கேட்கிறேன், பல இனக் குழுக்கள் இங்கே ஆயுதங்கள் ஏந்தி நிற்கின்றன. அண்டை நாட்டின் உதவியையும் அவர்கள் பெறுவதாகத் தெரிகிறது. இந்தக் குழுக்கள் எல்லாம் இந்திய அரசாங்கத்தை மட்டும் எதிர்க்கவில்லை. மாறாக, மேலாதிக்க மனநிலையில் தங்களுக்குள்ளும் மோதிக்கொள்கின்றன. இந்நிலையில், ஒரு அரசாங்கத்தின் தரப்பிலிருக்கும் நியாயங்களை நீங்கள் எந்த அளவுக்குக் கருத்தில் எடுத்துக்கொண்டிருக்கிறீர்கள்? மாற்றுத்தரப்புடனான உரையாடலுக்கு எந்த அளவுக்கு நெகிழ்வுத்தன்மையோடு இருந்தீர்கள்?

நீங்கள் மணிப்பூரில் வீடுகள்தோறும் போய்க் கேளுங்கள். இதுவரை எவ்வளவு பேர் காணாமல் போயிருக்கிறார்கள், பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள், கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று ராணுவப் படைகள் செய்த அட்டூழியங்கள் ஒவ்வொன்றையும் அவர்கள் நாளெல்லாம் சொல்வார்கள். ஊழல், வறுமை, வளர்ச்சி இவையெல்லாம் மாதிரி காசு சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல இது. உயிர் வதை. நீங்கள் ஒருவரின் வலியை வெறுப்பின் துணைகொண்டு எப்படி ஆற்ற முடியும்? நான் ராணுவமே இங்கு கூடாது என்று சொல்லவில்லை. ராணுவம் தவறிழைக்கும்போது அதை எதிர்க் கேள்வி கேட்க வாய்ப்பில்லாமல் செய்யும் சிறப்பு அதிகாரச் சட்டத்தையே திரும்பப் பெறக் கேட்டேன். நான் பிரிவினைவாதத்தை ஆதரிப்பவள் அல்ல. இந்திய அரசாங்கம் என்னுடைய குரலுக்குச் செவி கொடுத்திருந்தால், அதை ஒரு நியாயமாக முன்வைத்து நான் என் மக்கள் மத்தியில் அரசுக்கு எதிரான தரப்புகளின் வன்முறை எதிராகப் பேசியிருக்க முடியும். அவர்களின் போக்கையும் மாற்ற என்னால் ஒரு முயற்சி எடுத்திருக்க முடியும். இந்தியா தன்னுடைய ஜனநாயக பலத்தை சுயசோதனை செய்துகொள்ள ஒரு வாய்ப்பாகவும் அது அமைந்திருக்கும். இப்போதும் நான் நம்பிக்கையை இழக்கவில்லை. பேச்சுவார்த்தையே எல்லாவற்றுக்கும் தீர்வு. ஆனால், நாம் எல்லோருமே காது கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும்.

இப்போது அஹிம்சா வழிப் போராட்டத்தின் மீதான உங்களது நம்பிக்கை எந்த அளவில் இருக்கிறது?

அஹிம்சாவழிப் போராட்டத்தில் நான் துளியும் நம்பிக்கை இழக்கவில்லை. இந்த நவீன வாழ்க்கையில் பெரும் சக்திகளை எதிர்த்துப் போராட, சாமானியர்களுக்கு உள்ள ஒரே வழி அதுதான். மனங்களுடன் உரையாடுவது. ஆனால், அறிவியலும் தொழில்நுட்பமும் தரும் வளர்ச்சியானது நம்முடைய மனங்களின் காதுகளைச் செவிடாக்கிக் கொண்டிருக்கிறது. லோகாயதப் பசிக்கு நாம் கொடுக்கும் முக்கியத்துவம் நம்முடைய ஏனைய எல்லா உணர்வு நரம்புகளின் துவாரங்களையும் அடைத்துவிடுகின்றன.

காந்திக்கு இன்றைக்கும் பெறுமதி இருக்கிறதா?

இந்தப் போராட்டக் காலம் முழுக்க காந்தி எனக்கு ஆன்ம துணையாக நின்றிருக்கிறார். சில மாதங்களுக்கு முன் ஒரு நாள் கனவில் வந்தார். அது எங்களுடைய பூர்வீக வீடுபோல இருந்தது. அம்மா அப்போது லூதோ விளையாடிக்கொண்டிருந்தாள். அப்போது என் கையில் ஒரு வரைபடம். அதில் காடுகளில் உள்ள எங்கள் மக்களின் இருப்பிடம் போன்று வரையப்பட்டிருந்தது. காந்தி என் பக்கத்தில் சிரித்த முகத்துடன் உட்கார்ந்திருந்தார். எதுவும் அவர் பேசவில்லை. கனவு கலைந்துவிட்டது. வாழ்க்கையில் அவரை அப்போது ஒரு முறைதான் பார்த்தேன்.


காந்தி தன்னளவில் ‘உண்மைதான் கடவுள்’ என்றார். ஷர்மிளாவின் பார்வையில் எது கடவுள்; எது அமைதி?

மிக மிக கஷ்டமான கேள்வி இது. (நீண்ட நேரம் யோசிக்கிறார்) எது கடவுள் என்றால், காந்தி சொன்னதையே நானும் ஆமோதிக்கிறேன், உண்மைதான் கடவுள். எது அமைதி என்றால், அன்புதான் அமைதி.

சமீபத்தில் கவிதை எதுவும் எழுதினீர்களா?

ம்ஹூம். என் கவிதைகள்... அவற்றை எப்படிச் சொல்வது? அவை எல்லாம் என்னுடைய புகார்கள், புலம்பல்கள். அப்படித்தான் இப்போது தோன்றுகிறது.

தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக ஒரே ஒரு கேள்வி. உங்களுடைய காதலர் எந்த வகையில் உங்களுக்கு உதவியாக இருக்கிறார்? உங்களுடைய திருமணத் திட்டம் என்ன?

ரொம்பவும் சிக்கலான விஷயம் இது. உண்மையாகவே எனக்குத் தெரியவில்லை. இந்தப் பிரபஞ்சத்தில் பிறந்த ஒவ்வொரு உயிரினத்துக்கும் காதல் இயல்பானது. அந்தரங்கத்தைப் பேச வேண்டாம் என்று நினைக்கிறேன். விதிப்படி எல்லாம் நடக்கும். நாம் யாருமே விதியோடு விளையாட முடியாது.

மணிப்பூருக்கு வெளியே இருக்கும் சக இந்திய சகோதரர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் செய்தி என்ன?

அன்பு ஒன்றுதான் என்னிடமுள்ள ஒரே செய்தி. அன்பின்வழி அரசியலை அணுகி ஒரு பெரும் ஏகாதிபத்திய அரசை வெளியேற்றிய தந்தையின் வழித்தோன்றல்கள் நாம். அந்த வழியை நாம் என்றும் மறந்துவிடக் கூடாது!


செப்டம்பர், 2016, ‘தி இந்து’


3 கருத்துகள்:

  1. சகோதரி இரோம் சர்மிளாவின் அடுத்த கட்ட போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள். தங்களின் 16 வருட தியாகத்திற்க்கு, ஒருநாள் நிச்சயம் பலன் கிட்டும்.

    மிக நெடுதூரம் சென்று, சகோதரியினை பேட்டிகண்டதற்கு சகோதரர் சமஸ் அவர்களுக்கு நன்றி மேலும் தங்களுது பணி சிறக்க எனது வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. தங்கள் மூலமாக வாசகர்கள் இந்தியாவின் முக்கிய ஆளுமையாளரை மிகவும் நெருக்கமாகக் காணும் வாய்ப்பினைப் பெற்றோம். Courtesy: The Hindu (Tamil) என்ற குறிப்புடன் ஆங்கில இதழ்கள் மொழிபெயர்த்து வெளியிடுமளவு மிகவும் சிறப்பாக அமைந்துள்ள பேட்டிக்கு எனது வாழ்த்துகள். தமிழில் இந்த அளவு ஒரு பேட்டி என்பதானது முன்னணி ஆங்கில இதழ்கள்கூட புருவத்தை உயர்த்துமளவு ஆக்கியுள்ளது என்பதே உண்மை. எந்த ஒரு முயற்சியும் தோற்றதாக வரலாறு இல்லை. ஆத்மார்த்தமாக அவர் மேற்கொண்ட முயற்சிக்கும், அவரது மன உறுதிக்கும், அவரது இலக்கிற்கும் வெற்றி கிடைக்கும் என்று நம்புவோம். காலம் அதற்கான பதிலைக் கூறும்.

    பதிலளிநீக்கு
  3. ஒப்பனையற்ற முகம். வாஞ்சையான பார்வை. இடையிடையே அவருடைய நினைவு பரபரவென்று எங்கோ செல்வதையும் சடாரென்று மோதி பழைய இடம் நோக்கித் திரும்புவதையும் அவருடைய பார்வைகளின் போக்கினூடே யூகிக்க முடிகிறது. ஆங்கிலத்தில் உரையாடுகையில், நிதானமாக யோசித்து யோசித்துப் பேசுபவராகவும், மணிப்பூரியில் பேசுகையில் கடகடவென்று கொட்டுபவராகவும் தெரிந்தார். சிரிக்கும்போது சத்தமாக வாய்விட்டுச் சிரிக்கிறார். இக்கட்டான விஷயங்களைப் பேசுகையில், மௌனத்தில் ஆழ்ந்துவிடுகிறார். மூழ்கடிக்க முயலும் விரக்தி, ஏமாற்றம், வலி, எதிர்காலம் குறித்த குழப்பம், நிச்சயமின்மை... இவை யாவற்றின் மத்தியிலிருந்தும் விதியின் கைப்பற்றி விடுதலையை நோக்கி பிய்த்துக்கொண்டு பாய்பவர்போல இருந்தார். அரசியலைக் காட்டிலும் ஆன்மிகமே அவரை வழிநடத்துவதாகத் தோன்றியது. மணிப்பூர் களச் சூழலை உணர்ந்தபோது, அரசியல்ரீதியாக அவர் எடுக்கும் முடிவுகள் சரியானவைதானா என்று சொல்லத் தெரியவில்லை. அவரிடம் நிறைய அறியாமை (innocence) வெளிப்பட்டது. அதுவே அவரிடம் அறத்தைத் தாங்கி நிற்கும் அடிவேராகவும் தோன்றியது.#

    அரசியலை அரசியல்வாதிகள் மட்டும் கெடுக்கவில்லை. நம் எல்லோருக்குமே அதில் பங்கிருக்கிறது.#

    நாமெல்லாம் கேவலம் மனிதர்கள். நானும் ஒரு மனுஷி. ஒரு உயிரின் இயற்கையான, இயல்பான உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.#
    இந்திய அரசாங்கம் என்னுடைய குரலுக்குச் செவி கொடுத்திருந்தால், அதை ஒரு நியாயமாக முன்வைத்து நான் என் மக்கள் மத்தியில் அரசுக்கு எதிரான தரப்புகளின் வன்முறை எதிராகப் பேசியிருக்க முடியும். அவர்களின் போக்கையும் மாற்ற என்னால் ஒரு முயற்சி எடுத்திருக்க முடியும்#
    அரசாங்கம் என்னுடைய குரலுக்குச் செவிசாய்த்திருக்கலாம். வன்முறை வழியில் போராடிக்கொண்டிருப்பவர்கள் மத்தியில் அது ஒரு புது நம்பிக்கையை விதைத்திருக்கும்.#


    முழுக்கட்டுரையையும் பேட்டியையுமே quote செய்யலாம் போல சமஸ்!

    கட்டுரை முலம் எங்களைக் கையோடு ஷர்மிளாவிடம் அழைத்துச் செல்கிறீர்கள்.பேட்டி முடியும் வரை(முடிந்த பின்னும் கூட) எங்களை கூடவே அமர்த்தியிருக்கிறீர்கள்.

    ஒரு பெண்ணின் வாழ்வில் 16ஆண்டுகள் என்ன சாதாரணமானதா? இந்தப் போராட்ட வாழ்வில் எத்தனை மனச்சிக்கல்கள் ஏற்பட்டிருக்கும். அவருக்கு உடல் பலமும் ஆன்ம பலமும் தொடர்ந்து கிட்டட்டும். நலம் வாழட்டும். அவரும் அவரது மணிப்பூர் சகோதர சகோதரிகளும் இயல்பு வாழ்க்கை வாழும் நாள் விரைவில் திரும்பட்டும்.

    பதிலளிநீக்கு