இருளும் நாட்கள்


கோவை செட்டிபாளையம் அருகேயுள்ள பெரியகுயிலி பகுதியைச் சேர்ந்த தம்பதி சிவக்குமார் - ரஞ்சிதம். இவர்களுடைய மூன்று வயதுக் குழந்தை தீபஸ்ரீ நேற்று முன்தினம் இறந்துவிட்டாள். குழந்தைக்கு சளி, காய்ச்சல் என்று மருத்துவமனையில் சேர்த்திருக்கின்றனர். சிவக்குமார் கையிலிருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் இன்று செல்லாதவை. மருத்துவமனையில் வாங்க மறுத்திருக்கிறார்கள். மனிதர் பணத்துக்காக அலைக்கழிந்திருக்கிறார். கையில் பணம் இல்லாத உயிருக்கு இந்நாட்டில் மதிப்பேது? பிள்ளை போய்ச் சேர்ந்துவிட்டது.

இரு நாட்களுக்கு முன்பு ஒடிசாவைச் சேர்ந்த சுதர்சன் சுரின் தன் பிள்ளையைப் பறிகொடுத்தார். உடல்நலம் குன்றிய குழந்தையைத் தூக்கிக் கொண்டு பக்கத்து ஊரான மெகபாலில் உள்ள மருத்துவமனைக்கு ஓடியிருக்கிறார். அவர்கள் அங்கே பார்க்க முடியாது என்று சொல்லி சம்பல்பூர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லச் சொல்லியிருக்கிறார்கள். சுதர்சனிடம் இருந்த பழைய நோட்டுகளை ஆட்டோ ஓட்டுநர்கள் வாங்க மறுத்துவிட்டனர். இரண்டரை வயது ஆண் குழந்தை இறந்துவிட்டது.

மும்பை, கோவந்தி பகுதியைச் சேர்ந்தவர்கள் ஜெகதீஷ் - கிரண் தம்பதி. பிரசவ வலியெடுத்த கிரணுக்கு மருத்துவமனைக்குச் செல்லும் முன்னரே குறைப் பிரசவம் ஆகிவிட்டது. மனைவியையும் சிசுவையும் தூக்கிக்கொண்டு ஓடினார் ஜெகதீஷ். தனியார் மருத்துவமனையில் ரூ.6,000 முன்பணம் கேட்டிருக்கின்றனர். அவர்கள் முன்பணமாகக் கேட்ட முழுத் தொகையும் புதிய நோட்டுகளாக ஜெகதீஷிடம் இல்லை. மருத்துவமனையில் சேர்க்க முடியாது என்று கைவிரித்திருக்கிறார்கள். பணத்தை ஏற்பாடு செய்வதற்குள் அந்த சிசு மூச்சை நிறுத்திவிட்டது.


உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பள்ளிக்கூட ஆசிரியர் ரகுநாத் வர்மா இன்று இல்லை. திருமணத்தை எதிர்பார்த்திருந்த மகள் செய்வதறியாது நிற்கிறார். பிஹாரைச் சேர்ந்த விவசாயி சோனார் இன்று இல்லை. மகள் சித்தப்பிரமை பிடித்தவரைப் போல மூலையில் முடங்கிக் கிடக்கிறார். 

வங்கி முன் மணிக்கணக்கில் வரிசையில் காத்திருப்பவர்களிடமிருந்தும் பிணங்கள் விழுகின்றன. வங்கிக்கு உள்ளே காலையிலிருந்து நள்ளிரவு வரை ஓய்வு ஒழிச்சலின்றி உழைத்துக்கொண்டிருப்பவர்களிடமிருந்தும் பிணங்கள் விழுகின்றன.

உத்தரப் பிரதேசத்தில் 11 உயிர்கள்; தெலங்கானா, பிஹார், மஹாராஷ்டிரம், கேரளம், கர்நாடகத்தில் தலா 2 உயிர்கள், ஒடிசா, ஆந்திரம், டெல்லி, சத்தீஸ்கர், ராஜஸ்தான், வங்கத்தில் 7 உயிர்கள்; அசாம், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், குஜராத்தில் தலா 3 உயிர்கள் என்று பிரதமர் மோடியின் நவம்பர் 8 அறிவிப்புக்குப் பிறகு, கடந்த 10 நாட்களில் மட்டும் நாடு முழுவதும் 40 உயிர்கள் போயிருக்கின்றன. ஒவ்வொரு உயிருக்கும் பின்னுள்ள கதைகளைப் படிக்கையில் மனம் நொறுங்கிப்போகிறது. இவர்களும் இவர்கள் குடும்பத்தினரும் செய்த தவறுதான் என்ன?

ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவி
ப்புக்கு அவர் சொன்ன நோக்கத்தை ஆதரிப்பவன் நான். நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்புக்குச் சரிபாதி அளவுக்குக் கள்ளப் பொருளாதாரம் தீவிரமாக இயங்கும் இந்நாட்டில், புழக்கத்தில் உள்ள நோட்டுகளில் ஐந்தில் ஒரு பங்கு பணம் கள்ளப்பணம் என்று சொல்லப்படும் இந்நாட்டில், இப்படியான ஒரு நடவடிக்கைக்கும் தேவை இருக்கலாம் என்று  நம்புபவன். அதேசமயம், இப்படி ஒரு நடவடிக்கை எடுப்பதற்கான முன்னேற்பாடுகள் என்று சில உண்டு. வெளியே முன்கூட்டிச் சொல்லத் தேவையில்லை என்றாலும், ஒரு அரசாங்கம் அவசியம் எடுத்திருக்க வேண்டிய முன்னடவடிக்கைகள் அவை. மோடியின் அறிவிப்புக்குப் பிந்தைய இந்த 10 நாட்களில் நாட்டுக்குத் தெரியவந்திருக்கும் முக்கியமான செய்தி: அப்படியான நடவடிக்கைகளை முன்கூட்டி இந்த அரசு எடுத்திருக்கவில்லை. தன்னுடைய தவறுகளையும் தோல்விகளையும் உணர்ந்து மாற்று நடவடிக்கைகளுக்குச் செவிமடுக்கும் நிலையிலும் இந்த அரசு இல்லை!

ரயில் பயணத்தின்போது ஈரோட்டில் ஒரு விவசாயி கேட்டார். “கள்ளப் பொருளாதாரத்தை முடக்குறேன்னு ரூ.500, ரூ.1,000 நோட்டுக்குத் தடை விதிக்கிறவங்க என்னத்துக்கு அதைக் காட்டிலும் அதிக மதிப்புள்ள ரூ.2,000 நோட்டுகளை அறிமுகப்படுத்துறாங்க? ரூ.2,000 நோட்டு சம்பந்தமா ஒரு மாசத்துக்கும் மேலா படம் ஓடிக்கிட்டிருக்கு. இப்படி ஒரு நடவடிக்கைக்கான திட்டம் அரசாங்கத்துகிட்ட இருக்குதுன்னா, அந்த நோட்டுகளை ஏடிஎம்ல வைக்கிறதுக்குத் தக்க பெட்டிகளை முன்கூட்டியே தயாரிக்க உத்தரவிட்டிருக்கலாம்ல? நாட்டுல உள்ள 100 நோட்டுல 80 நோட்டு ரூ.1,000, ரூ.500 நோட்டு; மிச்ச 20 நோட்டுதான் சில்லறை நோட்டுங்குறான். 80 நோட்டை ஒரே நாள்ல செல்லாததாக்கின அரசாங்கம், மறுநாள்லேர்ந்து அதைக் காட்டிலும் அதிக மதிப்புள்ள ரூ.2,000 நோட்டைத் தருது. வெறும் 20 சில்லறை நோட்டை வெச்சிக்கிட்டு எங்கிருந்து இந்த நோட்டுக்குச் சில்லறை வரும்? நடவடிக்கை எடுக்குறதுக்கு முன்னாடி ரூ.50, ரூ.100 நோட்டுகளைக் கொஞ்சம் அடிச்சு வெச்சிக்குறதுல என்ன சிக்கல்? ஒரு அரசாங்கத்துக்கு இதெல்லாம்கூடவா தெரியாது?”

எவ்வளவு பெரிய நிர்வாகத் தோல்வி இது!

இந்த அறிவிப்பினூடே அரசால் வெளியிடப் பட்டிருக்கும் புதிய ரூ.2,000 நோட்டு இந்த அரசின் ஓட்டைகளை மட்டும் அம்பலப்படுத்தவில்லை. கூடவே அதன் ஆன்மாவையும் வெளியே கொண்டு வந்திருக்கிறது. “போதிய அவகாசம் இல்லாததால், புதிய ரூபாய் நோட்டுகளில் முன்னதாகத் திட்டமிடப்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் சேர்க்கப்படவில்லை” என்கின்றனர் ரிசர்வ் வங்கி ஊழியர்கள். உயர் மதிப்பிலான நோட்டுகளைச் செல்லாதவையாக்கும் நடவடிக்கையின்போது முன்கூட்டித் திட்டமிட வேண்டிய நடவடிக்கைகள், இதன் பின்விளைவுகளை எதிர்கொள்ள எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், புதிதாக அறிமுகப்படுத்தும் நோட்டுகளில் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள் - இப்படி எதிலும் போதிய கவனம் செலுத்த முடியாத அரசு தன்னுடைய இந்தித் திணிப்பு நடவடிக்கையை மட்டும் கனகச்சித்தமாகச் செய்திருக்கிறது. புதிய ரூபாய் நோட்டுகளில் இதுவரை ஏனைய மொழிகளின் வரிசையில் பத்தோடு ஒன்று பதினொன்றாக இருந்த இந்தி வடிவம் இப்போது பிரதானமாகி இருக்கிறது. அரசியல் சட்டத்தின் 343-வது பிரிவின்படி முன்னதாக வழக்கத்திலிருக்கும் நடைமுறைக்கும் பன்மைத்துவத்துக்கும் விரோதமான நடவடிக்கை இது.

மக்கள் கவனிக்காமல் இல்லை. சிறுமீன்கள் சின்னாபின்னாமாகின்றன; பெருமுதலைகளிடமிருந்து சிறு சலனமும் இல்லை. ஓய்வுபெற்ற ஆசிரியர் ரகுநாத் வர்மா, ஏழை விவசாயி சோனார் போன்றவர்களுக்கு ஏற்பட்ட சங்கடம் கர்நாடகத்தைச் சேர்ந்த - நாடறிந்த ஊழல் முதலைகளில் ஒன்றான, முன்னாள் பாஜக அமைச்சர் - ஜனார்த்தன ரெட்டிக்கு ஏற்படவில்லை. கர்நாடக மாநிலமே அதிர ரூ.500 கோடியில் அவருடைய மகளின் திருமணத்தை நடந்தியிருக்கிறார். மாநிலத்தின் முக்கியமான அரசியல் தலைகள், தொழிலதிபர்கள், திரையுலகப் பிரபலங்கள் என்று 50,000 விருந்தினர்கள் பங்கேற்றிருக்கின்றனர். தங்க ஜரிகையுடன் தயாரிக்கப்பட்ட அழைப்பிதழ்களுக்கான செலவு மட்டுமே ரூ. 1 கோடி என்கிறார்கள். ரெட்டியின் மகள் பிராமணி திருமண நாளன்று அணிந்திருந்த சேலையின் மதிப்பு ரூ.16 கோடி என்கிறார்கள். நகைகளின் மதிப்பு ரூ.84 கோடி என்கிறார்கள்.

கள்ளப் பொருளாதாரத்தை முடக்குகிறேன் என்று ரூ.1,000, ரூ.500 நோட்டுகளை மூன்று மணி நேர அவகாசத்தில் செல்லாததாக்கிய ஒரு அரசு ஆட்சியில் இருக்கும்போது, இந்தத் திருமணம் எப்படி இப்படி நடந்தது? சுரங்க மோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, சுமார் மூன்றரை ஆண்டுகள் சிறையில் இருந்த ஒருவர், தனது மகள் திருமணத்துக்கு இத்தனை கோடி செலவிட எப்படி முடிந்தது? கர்நாடகத்தைச் சேர்ந்த தகவல் உரிமைச் செயல்பாட்டாளர் நரசிம்மமூர்த்தி சொல்கிறார், “வருமான வரித் துறையோ, அமலாக்கத் துறையோ, சிபிஐயோ எப்படி நடவடிக்கை எடுக்கும்? பிரதமர் மோடி உட்பட ஒட்டுமொத்த மத்திய அமைச்சரவைக்கும் அல்லவா அழைப்பிதழ் அனுப்பியிருந்தார் ரெட்டி!”

வங்கிகளில் பணம் எடுக்க வரும் சாமானிய மக்களின் கைகளில் கறுப்பு மை அடையாளமிடும் அரசின் இதே ஆட்சிக் காலகட்டத்தில்தான், இன்னொரு அறிவிப்பும் வெளியாகியிருக்கிறது. அரசுக்குச் சொந்தமான 29 வங்கிகள் வசூலிக்க முடியாத கடன் தொகை ரூ.1.14 லட்சம் கோடியைக் கணக்கிலிருந்து நீக்கியிருக்கின்றன. பெரும் முதலைகளின் சூறையாட்டம்!

எல்லாவற்றினும் பெரிய அச்சுறுத்தல், மோடியின் அகம்பாவம். 
எவ்வளவு துச்சமாக மரணங்களை இந்த அரசு கையாளுகிறது! அகம்பாவத்துடன் அதீத விளம்பர மோகமும் சாகச விழைவும் இப்போது உச்சம் தொட்டிருக்கிற நிலையில், அபாயம் புது வடிவம் எடுத்திருக்கிறது. இந்த நடவடிக்கையையொட்டி மோடியின் புகழைப் பரப்பும் வகையில், ஊடகங்களுக்குக் கசியவிடப்பட்ட செய்திகளில் ஒன்று மிகுந்த கவனத்துக்குரியது. “பிரதமர் இந்த அறிவிப்பையொட்டி நடத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்கள் செல்பேசி எடுத்துவர தடை விதித்துவிட்டார்.” இந்தத் தகவலின் மூலம் மக்கள் புரிந்துகொள்ள வேண்டிய செய்தி என்ன? அமைச்சரவைக் கூட்டத்துக்கும் அதற்குப் பிந்தைய பிரதமரின் இந்த அறிவிப்புக்கும் இடையிலான சொற்ப நிமிஷ அவகாசத்துக்குள் தமக்கு வேண்டப்பட்டவருக்கு அரசின் உச்சபட்ச ரகசியங்களைக் கடத்தும் ஆட்களைக்கொண்டு இந்த அரசாங்கம் இயங்குகிறது என்று புரிந்துகொள்வதா? தன்னுடைய விளம்பர மோகத்தின் வேகத்துக்கு உடன் பணியாற்றும் சகாக்களைக்கூடப் பலியாக்கும் மனநிலையில் பிரதமர் இருக்கிறார் என்று புரிந்துகொள்வதா?

வங்கி முன் பணம் எடுக்க மணிக்கணக்கில் காத்திருந்து பெரியவர்கள் உயிரிழக்கிறார்கள் என்று பரிதாபகரமான படங்களுடன் செய்திகள் வெளியாகும்போது, தள்ளாத நிலையிலிருக்கும் தன்னுடைய 95 வயது தாயை ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிக்கு அனுப்பிவைத்து அவருடைய படங்களை வெளிவரவைக்கும் ஒரு பிரதமரை எப்படி எதிர்கொள்வது என்பது உள்ளபடியே சிக்கலானது. எந்நடவடிக்கைக்கும் தயங்காதவராகக் காட்சியளிக்கிறார் மோடி. கிட்டத்தட்ட நெருக்கடிநிலைக்கான சிறு முன்னோட்டம்போலத்தான் இருக்கிறது இன்றைய சூழல். எதையும் நியாயப்படுத்தும் அரசின் மனநிலை அபாயகரமானது. எந்நடவடிக்கையும் தன் மீது விழும் சாத்தியத்திலிருக்கிறது இந்தியா. இதை எதிர்கொள்ள என்ன வழி நம்மிடம் இருக்கிறது?


நவம்பர், 2016, ‘தி இந்து’

13 கருத்துகள்:

  1. Well done samas... actually i am waiting for ur cover story about it.......bt we could not do anything in the situation

    பதிலளிநீக்கு
  2. மருத்துவமணைகள் பழைய நோட்டுகளை வாங்கிக்கொள்ளும் என்று அறிவித்த பின்னும் வாங்காமல் வைத்தியம் செய்ய மறுத்தது செல்லா நோட்டு அறிவிப்பின் பிரச்சனை தானா ? அந்த குழந்தைகளைக் கொன்றது மோடியா? இல்லாவிடில் யார் ? - மேலோட்ட்மான கட்டுரை!

    பதிலளிநீக்கு
  3. எந்த செயலுக்கும் காங்கிரசைக் கை காமிக்கும் பிஜேபி அரசு அவர்கள் ஒரு முறை கொண்டு வந்தார்கள் நாங்கள் ஒரு முறை கொண்டு வருவோம் என்று கூட் சொல்லலாம்.அத்வானி ஏற்கனவே எச்ச்ரித்திறிக்கிறார்.கவனிக்கப்படவேண்டியது?????

    பதிலளிநீக்கு
  4. எந்த செயலுக்கும் காங்கிரசைக் கை காமிக்கும் பிஜேபி அரசு அவர்கள் ஒரு முறை கொண்டு வந்தார்கள் நாங்கள் ஒரு முறை கொண்டு வருவோம் என்று கூட் சொல்லலாம்.அத்வானி ஏற்கனவே எச்ச்ரித்திறிக்கிறார்.கவனிக்கப்படவேண்டியது?????

    பதிலளிநீக்கு
  5. துக்ளக்கைத்தான் இதுவரை கோமாளித்தனமான அரசாண்டவர் என்று கேள்விப்பட்டுள்ளோம்.ஆனால் மோடி கோமாளித்தனத்தில் ,மோசமான நிர்வாகத்தில்,யாரும் தன்னை கேள்வி கேட்கக் கூடாது என்ற திமிரிலும் உச்சத்தில் உள்ளார்.10 லடசத்தில் சட்டை அணிபவருக்கு ஏழைகலின் துன்பம் எங்கே தெரியும்.மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஏழைகளுக்கு சனி திசைதான்.அவர் அம்பானி.அதானி போன்றவர்களுக்குத்தான் உழைக்கிறார்.விளம்பர தூதராக செல்பி போஸ் வேறு கொடுக்கிறார்.ஆதார் ரகசியங்கள் அம்பானி ஜியோ அட்டை வாங்க வெளியிடப்பட்டுள்ளன.ஏழைகளுக்கு விமானக் கட்டணத்தை மிஞ்சிடும் அளவு ரெயில் கட்டண உயர்வு,வார,வாரம் பெட்ரோல் விலை உயர்வு,அரிசிக்கு கொடுக்கப்படும் மானியம் குறைப்பு என்று வாரி,வாரி வழங்குகிறார்.இப்போது கூட மோடியை விமர்சிப்பவர்கள் அடித்தட்டு மக்கள்தான்.கருப்பு பணமுதலைகள் வாழ்த்துகிறது.

    பதிலளிநீக்கு
  6. I was waiting for your article actually. Well written as always... I too had some confidence that demonetization of 500 -100 rs notes will curb the black money issue to some extent. This is a serious management disaster and arrogance..
    But i lost complete hope, when they announced sbi loans of 63 corporate owners has been waived, even though finance minister has said its just a change of accounts for easy operation.. still in reality banks are not in pressure to get back the money.. Did any relation between this demonetization and modi's announcement of increasing the limit of money transfer to foreign accounts before 10 months? I expect you to write a article about it.. I respect your writings as i see truth and unbiased view.

    பதிலளிநீக்கு
  7. சமஸ் போன்றவர்களிடமிருந்து இந்த மாதிரி கட்டுரை நிச்சயம் எதிர் பார்க்கவில்லை .
    எப்படியோ உண்மையை சொன்ன உரக்க உங்களுக்கு வாழ்த்துக்கள் .

    பதிலளிநீக்கு
  8. சரியான முன்னெச்சரிக்கை எடுத்து நடவடிக்கை எடுத்திருக்கத் தவறிவிட்ட நிலை கடப்பாரையை விழுங்கிவிட்டு சுக்குக்கசாயம் குடிப்பதைப் போல உள்ளது.

    பதிலளிநீக்கு
  9. ரூ.500 மற்றும் ரூ.1000 செல்லாது என்று அறிவித்த நிமிஷத்திலிருந்தே புதிய் 500ரூ. நோட்டுக்கள் புழக்கத்தில் விட்டிருந்தால் இவ்வளவு பிரச்னைகள் வந்திருக்காது. பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை அவரவர் வங்கிக் கணக்குகளில் செலுத்திவிட்டு தேவைக்கான் புதிய 500 ரூ. நோட்டுக்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று அறிவித்திருக்கலாம். வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் அதிகபட்சம் ரூ.5000/ வரை மட்டுமே பழைய ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்களை மாற்ற முடியும் என்றும் அதற்குமேல் மாற்ற விரும்புவர்கள் வங்கிக் கணக்குகளை உடனடியாகத் தொடங்கி தங்களைன் புதிய வங்கிக் கணக்குகளில் பணத்தை செலுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தியிருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  10. இந்தக் கட்டுரையை எழுத்தாளர் ஜெயமோகனுக்கு அனுப்புங்கள் திரு.சமஸ் அவர்களே! அந்த நாற்பது பேரும் எந்தக் காரணங்களால் செத்தார்கள், அவர்கள் உடல்நிலை என்ன, அவர்கள் சூழ்நிலை என்ன என எதுவுமே ஆராயாமல் இந்த அறிவிப்புக்குப் பிறகு செத்த அத்தனை பேரும் மோடியால் கொல்லப்பட்டவர்களாகவே கருதுவதா என்கிறார் ஜெயமோகன். உங்களையும் திட்டியிருந்தார், கவனித்தீர்களா?

    பதிலளிநீக்கு
  11. பக்தி போற்றுவோம்

    அறங்காவலரின் அறிவிப்பால்

    பக்தர்களின் பல்லாயிர பால் குடங்களுடன்

    கோயிலில் குடமுழக்கு திருவிழா !

    துளி தீர்த்த பாலுக்கு

    திண்டாடும் தியாக கூட்டத்திற்கு

    தெரியாது !!

    பாவம் ! சொல்லி விடாதீர்கள்

    புரவலர்களின் கருப்பு பூனைகள்

    கோயிலின் புழக்கடை வழி

    குட பால் குடித்து திமிறுவதை

    பதிலளிநீக்கு