சாதி ஒழிப்பில் நெருக்கக் கூட்டாளி திராவிட இயக்கம்! - தொல்.திருமாவளவன் பேட்டி


தமிழகத்தில் தலித் அரசியல் எழுச்சியின் சமகால வடிவம் தொல்.திருமாவளவன். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர். அம்பேத்கரையும் பெரியாரையும் ஒரு புள்ளியில் இணைத்து நெருக்கமாகப் பார்ப்பவர். அம்பேத்கரிய இயக்கங்களில் நாட்டிலேயே துணை தேசியத்தை - இங்கே தமிழ்த் தேசியத்தைச் சாதி ஒழிப்புக்கான ஒரு அரசியல் ஆயுதமாகக் கையில் எடுத்தவர். நூறாண்டு திராவிட இயக்கத்தின் பணி, அரை நூற்றாண்டு திராவிடக் கட்சிகளின் ஆட்சி, கருணாநிதியின் அறுபதாண்டு சட்ட மன்றப் பணி மூன்றையும் சாதி ஒழிப்பு - சமூக நீதித் தளத்தில் மதிப்பிட்டார். ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ நூலிலிருந்து...

திராவிட இயக்கத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

இந்தியச் சமூகம் சாதியக் கட்டமைப்புகளால் ஆனது. சாதியக்கூறுகள் இல்லாமல் ஒரு தனி மனிதனின் வாழ்க்கை இங்கே நகர்வதில்லை. இது ஆயிரக்கணக்கான தலை முறைகளாக நிலவுகிறது. சாதிக்கு எதிராக, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்று வள்ளுவர் பாடிய காலத்தில் இருந்து, ‘ஆண் சாதி பெண் சாதி ஆக இரு சாதி. வீண் சாதி மற்றதெல்லாம்’ என்று சித்தர்கள் பாடிய காலத்திலிருந்து எதிர்க் குரல்களும் ஒலிக்கின்றன. சாதியை எதிர்த்துப் போராடியவர்கள் சாதியை ஒழிக்கவில்லை. காரணம், முடியவில்லை. ஆனால், ஒவ்வொரு போராட்டமும் ஒரு தாக்கத்தையும் விளைவையும் உருவாக்கியிருக்கிறது. திராவிடர் இயக்கத்தையும் இதன் நீட்சியாகவே நான் பார்க்கிறேன்.

பெரியாருடைய பணிகளை இன்றைக்கு எப்படிப் பார்க்கிறீர்கள்?

தமிழகத்தைப் பொறுத்தவரை பெரியாருக்கு முன், பெரியாருக்குப் பின் என்றே இரண்டாகப் பகுக்கலாம். பெரியாருக்கு முன் இங்கே இரட்டைமலை சீனிவாசன், அயோத்திதாசப் பண்டிதர், எம்.சி.ராஜா என்று தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே சாதி அமைப்புக்கு எதிராக அரசியல் தளத்தில் பேசியிருக்கிறார்கள். பெரியார்தான் இதை உடைக்கிறார். பிராமண ஆதிக்க எதிர்ப்பை மையமாகக் கொண்டிருந்தாலும் நீதிக் கட்சி சாதி ஒழிப்பைப் பிரதானப்படுத்தவில்லை. சமூக நீதியை, இட ஒதுக்கீட்டை ஒரு ஆயுதமாக அது கைக்கொண்டது சாதி அமைப்புக்கு அது கொடுத்த வலுவான அடி. என்றாலும், சாதி சமத்துவத்தை நோக்கியே அது நகர்கிறது; சாதி ஒழிப்பை நோக்கி அல்ல. பெரியார்தான் அந்தப் புள்ளியை நோக்கி நகர்கிறார். சாதி ஒழிப்பைப் பேசுகிறார். பெண் விடுதலையை உயர்த்திப்பிடிக்கிறார். மொழி, இன உரிமைகளையும் பேசுகிறார். பெரியார் ஏன் கடவுள் மறுப்பை முன்வைக்கிறார் என்று நாம் ஆராய்ந்தால், அவருடைய அக்கறையையும் தொலைநோக்கையும் நாம் விளங்கிக்கொண்டுவிடலாம். சாதியத்தை இங்கே கட்டிக்காப்பது மதமும் கடவுளும் என்று பெரியார் உணர்கிறார். மக்கள் கடவுளுக்கு அஞ்சுகிறார்கள், மதத்திற்குக் கட்டுப்படுகிறார்கள். ஏற்றத்தாழ்வுகள், தீண்டாமை எல்லாம் கடவுளாலும் மதத்தாலும் ‘முற்பிறவியின் பயன்’ என்று நியாயப்படுத்தப்படுகின்றன. ஆகையால்தான், ‘மதமும் பிழை, கடவுளும் பொய்’ என்று சொல்ல வேண்டிய நிலை பெரியாருக்கு ஏற்படுகிறது. சாதி ஒழிப்பானது குடும்பம் என்ற அமைப்பிலிருந்தே கற்பிக்கப்பட வேண்டியது. ஏனென்றால், குடும்பத்திலிருந்துதான் கடவுள் நம்பிக்கை கற்பிக்கப்படுகிறது, உயர்வு தாழ்வு கற்பிக்கப்படுகிறது, சாதிப் பெருமை, சாதித் தாழ்வு கற்பிக்கப்படுகிறது. பெண்கள் துணையின்றி குடும்பத்தில் சீர்திருத்தம் சாத்தியம் இல்லை. ஆனால், குடும்ப அமைப்பானது பெண்களையும் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது. அவர்களுடைய சிந்தனையையும் அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது. ஆகையால், பெண் விடுதலையைப் பேசுகிறார். இதனூடாகவே மொழிரீதியாக, இனரீதியாக நிகழ்கிற ஒடுக்குமுறைகளையும் எதிர்க்க வேண்டும் என்கிற நிலைக்கு அவர் வருகிறார். அதற்குக் காரணம் இந்து என்கிற பெயரால், இந்தியா என்கிற கட்டமைப்பு இங்கே நிறுவப்பட்டிருக்கிறது. இந்தியா என்கிற கட்டமைப்பின் பெயரால் இந்தி பேசுகிறவர்களின் ஆதிக்கம், வடவர் ஆதிக்கம் நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. விளைவாக தமிழ் உள்ளிட்ட ஏனைய மொழிகள் நசுக்கப்படுகின்றன. தமிழர் கள் உள்ளிட்ட ஏனைய இனத்தவர் நசுக்கப்படுகிறார்கள். ஆகையால், அந்தந்தப் பிராந்திய மொழிகளுக்கான உரிமைகளை உயர்த்திப் பிடிப்பதன் மூலமாகவே இந்த ஆதிக்கத்தைத் தகர்க்க முடியும் என்று கருதுகிறார். இப்படிப் பெரியார் பிராமண ஆதிக்க எதிர்ப்பில் தொடங்கி, சமூக நீதி, சாதி ஒழிப்பு, பெண் விடுதலை, மொழி, இன உரிமை, மாநில உரிமை என்று முன்னெடுத்த அரசியலானது சாதாரணமானதல்ல. இன்றைக்கு நாடு எதிர்கொள்ளும் ‘இந்து - இந்தி - இந்துஸ்தான்’ ஆதிக்க அரசியலுக்கு நேர் எதிர் அரசியலை, தீர்வை முன்வைப்பது. அம்பேத்கரியத்துக்கு மிக நெருக்கமான அரசியல் கருத்தாக்கமாகவே பெரியாரியத்தைப் பார்க்கிறோம்.


பெரியாரின் திக சென்ற பாதையில் பின்னர் வந்த திராவிடக் கட்சிகள் எந்த அளவுக்குப் பயணித்திருப்பதாகக் கருதுகிறீர்கள்?

தேர்தல் அரசியலைப் புறக்கணித்து, பண்பாட்டு அரசியல் தளத்தில் பணியாற்றியவர் பெரியார். சமரசமற்ற அந்த உறுதியைத் தேர்தல் அரசியலில் ஈடுபடும் கட்சிகளிடம் எதிர்பார்க்க முடியாது – அதேசமயம் பெரியாரிய இயக்கங்கள் அந்தப் பாதையில் தொடர்ந்து செல்கின்றன. திராவிடக் கட்சிகளைப் பொறுத்த அளவில் ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பிறகு, பெரியாரியத்தை நடைமுறைப்படுத்துவதில் திராவிடக் கட்சிகள் எப்படி நடந்துகொண்டன என்பதன் வாயிலாக நாம் மதிப்பிட முயற்சிக்கலாம். சாதி ஒழிப்பில் அண்ணா நிச்சயமாக முக்கியப் பங்காற்றியிருக்கிறார். பெயருக்குப் பின்னால் சாதியைப் போட்டுக்கொள்வதில்லை என்கிற நிலைப்பாட்டைக் கடைப்பிடித்தார்கள். தலித் இயக்கங்கள் நீங்கலாக இந்தியாவில் வேறு எந்தக் கட்சியில் இது நடைமுறையில் இருக்கிறது? திமுகவின் ஆரம்பக் காலகட்டங்களில் கட்சி நிர்வாகிகள் தேர்விலும் வேட்பாளர் தேர்விலும் சாதியின் ஆதிக்கம் மிகக் குறைவு என்பதை இங்கே நாம் நினைவில் கொள்ள வேண்டும். சாதியச் சமூகம் கோலோச்சுகிற பொது நீரோட்ட அரசியல் களத்தில், சாதிய அடுக்குகளில் கீழ் நிலையிலுள்ள கருணாநிதி திமுகவின் தலைவராக அண்ணாவுக்குப் பிறகு பொறுப்பேற்றதே ஒரு புரட்சி. பெரியாரின், அண்ணாவின் உழைப்புக்குக் கிடைத்த வெற்றி என்றே இதைச் சொல்ல வேண்டும். சாதி ஒழிப்புப் பாதையில் கருணாநிதி இன்னும் வேகமாகப் பயணித்தார். அவருடைய முதலாவது ஆட்சிக் காலகட்டத்தில் எடுக்கப்பட்ட பல நடவடிக்கைகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். எம்ஜிஆரின் அதிமுக உருவாக்கத்துக்குப் பிறகு இந்தப் பயணத்தில் வேகம் குறைகிறது. சுற்றியிருந்த சூழல்களுடனும் நாம் இதை ஒப்பிட வேண்டும்.

சாதியப் பாதையில் எம்ஜிஆர் சென்றதாக நினைக்கிறீர்களா?

அதிமுகவைச் சாதியப் போக்குக் கட்சி என்று கூற மாட்டேன். ஆனால், திராவிட இயக்கக் கொள்கைகளின் நீர்த்த வடிவம் அது. கொள்கைகளை விடவும் தேர்தல் வெற்றிகளுக்கே எம்ஜிஆர் முக்கியத்துவம் கொடுத்தார். நிர்ப்பந்தங்களுக்கு அவர் சாய்ந்துகொடுத்தார். இந்தியா முழுவதிலும் சமூகம் சாதியாகப் பிரிந்து கிடப்பதால், அதைப் பயன்படுத்திக்கொள்வது அரசியல்வாதிகளின் இயல்பாக இருக்கிறது. என்றாலும், இங்கே ஒரு இயக்கம் பெரும் வேலை பார்த்திருக்கிறது; அதன் வழியில் வந்த நாம் அதற்கு முரணாக நடந்துகொண்டுவிடக் கூடாது என்று எம்ஜிஆர் நடந்துகொள்ளவில்லை. கட்சி நிர்வாகிகள் தேர்வு, வேட்பாளர் தேர்வுகளில் சாதியின் ஆதிக்கம் திராவிடக் கட்சிகளில் தலை தூக்க அவரே வழிவகுத்தார். எம்ஜிஆருக்குப் பிறகு, ஜெயலலிதா காலகட்டத்தில் அதிமுக மேலும் நீர்த்துப்போனது. ஆனாலும்கூட, திமுகவும் அதிமுகவும் சாதி ஒழிப்பு என்கிற கருத்துக்கு எதிராக இல்லை; சமூக நீதி விஷயத்தில் உறுதியாக நின்றன என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும். எம்ஜிஆர் காலத்தில் நிகழ்ந்த இரண்டு மாற்றங்களைச் சாதி ஒழிப்புக்கான அவருடைய பங்களிப்பாகப் பார்க்கிறேன். ஒன்று, கிராம நிர்வாக முறையில் அவர் ஏற்படுத்திய புரட்சி. நெடுங்காலமாக ஆதிக்க சாதியினர்கள் ஆதிக்கம் நிலவிய கிராம நிர்வாகத்தில், ‘விஏஓ’ பணியிடங்களைக் கொண்டுவந்ததன் மூலமாக அந்த ஆதிக்கத்தை உடைத்தெறிந்தார். விளைவாகவே, இன்றைக்கு தாழ்த்தப்பட்ட சமூகத்தினரும் கிராம நிர்வாக அதிகாரிகளாக உட்கார முடிந்திருக்கிறது. இரண்டாவதாக வீதிகளின் பெயரில், கடைகளின் பெயரில் இனி சாதிப் பெயர்கள் ஒட்டு இருக்கக் கூடாது என்று ஓர் அரசாணை பிறப்பித்தார். அதை நடைமுறைப்படுத்தவும் செய்தார். ஆக, சாதிக்கு எதிராகச் செயல்படும் மனம் எம்ஜிஆருக்கும் இருந்தது. ஆனால், நிர்ப்பந்தங்களுக்குக் கட்டுப்பட்டுக் காய்களை நகர்த்தினார்.

கருணாநிதியின் செயல்பாடுகளை எப்படி மதிப்பிடுகிறீர்கள்?

சாதி ஒழிப்பில் அவர் காட்டிய அக்கறைக்கு, பெரியார் நினைவுச் சமத்துவபுரம் திட்டம் ஒரு சான்று போதும் என்று நினைக்கிறேன். இந்தியா முழுவதும் இந்த நாடு இரட்டை இந்தியாவாகத்தான் இருக்கிறது. ஒன்று, ஊர்த்தெரு இந்தியா; இன்னொன்று சேரி இந்தியா. ஒரே ஊராக எந்தக் கிராமமும் இல்லை. சுடுகாடுகள்கூட இங்கு இரண்டுதான். எல்லாச் சாதி மக்களையும் ஒரே இடத்தில் வாழ வைக்க முடியாதா என்று யாரும் கவலைப்படாதபோது, பெரியார், அம்பேத்கர் வழியில் கருணாநிதி அப்படி யோசித்தார். எல்லாச் சாதியினரும் ஓரிடத்தில் வாழ ஒரு நகரமைப்பை உருவாக்கினார். நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அவர் தொடங்கிய சமத்துவபுரங்கள் எவ்வளவு பெரிய கனவு! சாதி ஒழிப்பில் அவர் காட்டிய அக்கறை, அடையாள அரசியலுக்கானது அல்ல. அம்பேத்கர் சிலையைப் பார்த்தாலே சாணியெடுத்து வீசும் வெறுப்பு நெருப்பாய்த் தவித்துக்கொண்டிருக்கிற நிலையில், அம்பேத்கரின் பெயரில் சட்டக் கல்லூரி அமைத்தார். அதுவும் எப்போது? மகாராஷ்டிரத்தில் அம்பேத்கர் பெயரில் சட்டப் பல்கலைக்கழகம் அமைக்கக் கூடாது என்று சிவசேனையினர் போராடியதோடு மட்டுமில்லாமல், அம்பேத்கரின் பெயரில் அமைந்த நூலகத்தை எரித்தும் சாம்பலாக்கினார்கள். வன்முறை வெறியாட்டத்தில் இறங்கினார்கள். தலித் மாணவர்கள் வீதியிலே உயிரோடு கொளுத்தப்பட்டார்கள். அப்போது அதைக் கண்டித்த கருணாநிதி, அந்தக் கண்டனம் பெயர் அளவிலானது அல்ல என்று உணர்த்தும் வகையிலேதான் தமிழகத்தில் உருவான சட்டப் பல்கலைக்கழகத்துக்கு அம்பேத்கர் பெயரைச் சூட்டினார். எவ்வளவோ விஷயங்களை இப்படிப் பட்டியலிடலாம்.

நீங்கள் திமுக கூட்டணியில் இருந்ததோடு, கருணாநிதியோடு நெருக்கமான உறவிலும் இருந்தீர்கள். தனிப்பட்ட வகையில் உங்களுடைய கோரிக்கைகளை அவர் எப்படி அணுகுபவராக இருந்தார்?

என் மீது தனிப்பட்ட வகையிலும் அவருக்கு அபிமானம் உண்டு. நான் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்றுகூட அவ்வளவு மெனக்கெட்டார். அது தனி. விசிக முன்வைக்கும் கோரிக்கைகள் பொதுவாக சாதி ஒழிப்பு, தமிழ் - தமிழர் நலன் சார்ந்ததாகத்தான் இருக்கும் என்பதால், எப்போதுமே உடனடிக் கவனம் கொடுப்பார். முக்கியமான இரு கோரிக்கைகளைக் குறிப்பிடலாம். பாப்பாப்பட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டக்காச்சியேந்தல் ஆகிய ஊராட்சி மன்றங்களுக்கு 10 ஆண்டு காலம் தேர்தல் நடத்த முடியாத சூழல் இருந்தது. சாதி வெறியர்களின் எதிர்ப்பே காரணம். மேலவளவு கிராமத்தில் சாதி வெறியர்களை மீறி தேர்தலில் நின்று வென்றார்கள் என்ற காரணத்தாலேயே தலித் சமூகத்தைச் சேர்ந்த முருகேசன், அவருடன் பயணம் செய்த 6 பேர் என்று மொத்தம் 7 பேர் ஓடும் பேருந்தில் வெட்டிக் கொல்லப்பட்டார்கள். அதே காலகட்டத்தில்தான் இந்தக் கிராமங்களிலும் தாழ்த்தப்பட்ட மக்கள் வேட்புமனுவே தாக்கல் செய்ய முடியாத நிலை இருந்தது. கருணாநிதி மீண்டும் முதல்வரானபோது இந்தப் பிரச்சினை யைச் சுட்டிக்காட்டினோம். பெரிய முயற்சி எடுத்து, எதிர்ப்புத் தெரிவித்த சாதியவாதிகளையெல்லாம் அழைத்துப் பேசி, அவர்களையும் வெறுப்புக்கு உள்ளாக்காமல் நெளிவுசுளிவாக, நிதானமாக அவர்களைக் கையாண்டு அங்கு தேர்தலை நடத்திக் காட்டினார். அதேபோல, அரசு சார்பில் எளியோருக்குக் கட்டிக்கொடுக்கிற வீடுகள் மிகவும் சிறியவை என்று சுட்டிக்காட்டி, ‘தனியே சமையல் அறை, வரவேற்பறை, ஒரு படுக்கை அறை கொண்ட 400 சதுர அடி அளவுக்காவது வீடு அமைய வேண்டும்’ என்று நாங்கள் எங்கள் கட்சி மாநாட்டில் கேட்டபோது, அந்த மாநாட்டிலேயே அதை நிறைவேற்றுகிற வகையில் புதிய வீடு வழங்கும் திட்டத்தை அறிவித்தார் கருணாநிதி. நாங்கள் தீர்மானத்தில் பயன்படுத்திய அதே சொற்றொடரைப் பயன்படுத்தி மத்திய அரசுக்கு அவர் கடிதம் எழுதினார். சாதி ஒழிப்பு, சமூக நீதி, ஏழை மக்கள் மீதான கரிசனம் இதிலெல்லாம் அவருக்குத் தனித்த அக்கறை எப்போதும் உண்டு.

தமிழ்நாட்டில் பெரியாருக்கு எதிராக அம்பேத்கரையும் திராவிட அரசியலுக்கு எதிராக தலித் அரசியலையும் முன்னிறுத்தும் ஒரு போக்கு இப்போது தீவிரமாகியிருக்கிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

நான் இந்துத்துவத்தை எதிர்ப்பதற்குக் காரணம், அது இந்துத்துவமாக இருப்பதால் அல்ல. ஆதிக்கம் திணிக்கப்படுவதால் அதை எதிர்க்கிறேன். நான் சாதியை எதிர்ப்பதற்குக் காரணம், அது எனக்குப் பிடிக்காத அல்லது நான் பிறக்காத சாதி என்பதால் அல்ல. ஆதிக்கம் திணிக்கப்படுவதால் அதை எதிர்க்கிறேன். என் தாய்மொழி தமிழ் என்ற உணர்ச்சிக்காக அல்ல; தமிழன் என்ற இனத்தின் மீது இந்தியின் வழியே வடவர் ஆதிக்கம் திணிக்கப்படுவதாலேயே இந்தியை எதிர்க்கிறேன். ஆக, ஆதிக்கம்தான் இங்கே பிரச்சினை. ஆதிக்கமும் ஒடுக்குமுறையும் எதற்காக நிகழ்த்தப்படுகின்றன என்றால், சுரண்டலுக்காக நிகழ்த்தப்படுகின்றன. மானுடத்தின் மீது இந்த மூன்றும் எப்போதும் நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது. ஆகவே எதிர்க்கிறோம். சாதிரீதியிலான ஒடுக்குமுறைக்கு எதிராக எவ்வளவு தீவிரமாக இருக்கிறேனோ அதே அளவுக்கு மொழி - இனரீதியிலான ஆதிக்கத்துக்கு எதிராகவும் தீவிரமாக இருப்பவன் நான். பொது நீரோட்டத்தில் தலித்துகளை இணைக்கிற போராட்டம் இருக்கிறதே, அதுதான் சாதி ஒழிப்புப் போராட்டத்திற்கான முதல் படி. ஆக, தமிழன் என்ற அடையாளமும், சாதி ஒழிப்பு என்ற அடையாளமும் வேறு வேறு அல்ல. இந்திய அளவில் எந்த அம்பேத்கரிய இயக்கமும், மொழி வழி தேசியத்தை இணைத்துப் பேசியதில்லை. நாங்கள்தான் அதைத் தூக்கிப் பிடிக்கிறோம். ஏனென்றால், சாதியின் பாதுகாப்பு அரணாக இருக்கும் இந்து மதம் இன்று இவ்வளவு வலுவாக இருப்பதற்கு இந்திய தேசியமும் ஒரு காரணம். நான் முன்னரே குறிப்பிட்டபடி ‘இந்தி-இந்து-இந்துஸ்தான்’ ஒற்றைக் கலாச்சாரத்துக்கு எதிரான மாற்று பெரியாரிடத்தில் இருக்கிறது. திராவிடக் கட்சிகள் சாதி ஒழிப்பை மையமாகக் கொண்டிராவிட்டாலும் சாதி ஒழிப்பில் அக்கறை கொண்ட வர்களுக்கு, குறிப்பாக தலித் இயக்கங்களுக்கு அவர்களே இங்கு நேச சக்திகள். இதை உணராதவர்கள் அல்லது இந்த இரு இயக்கங்கள் இடையில் ஒற்றுமை நீடிக்கக் கூடாது என்று விரும்புபவர்கள் இரண்டு தரப்பினருக்கும் இடையில் கொம்பு சீவிவிடுகிறார்கள். அதைக் கடக்க வேண்டும். திராவிட இயக்கத்தினரோடு கை கோத்து சாதி ஒழிப்பை நோக்கி நாம் நகர வேண்டும். நம்முடைய எதிரியான சாதி மிகப் பெரிய ராட்சதன். கோடி கைகள் அதை எதிர்க்க வேண்டும். அதனால் கோடி கைகள் இணைய வேண்டும்!

- நவம்பர், 2017, ‘தி இந்து’

4 கருத்துகள்:

  1. கோடி கைகள் இணையவேண்டும். ஆம். இப்போதைய சூழலில் அது சாத்தியமா என்று எண்ணத் தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு
  2. திருமாவளவன் எனும் அரசியல்வாதி முனை மழுங்கினாலும் அவருக்குள் இருக்கும் அந்த அறிவு இன்னும் கொஞ்சம் கூடக் கூர் மழுங்கவில்லை. அற்புதமான நேர்காணல்!

    பதிலளிநீக்கு
  3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  4. நான் இந்துத்துவத்தை எதிர்ப்பதற்குக் காரணம், அது இந்துத்துவமாக இருப்பதால் அல்ல. ஆதிக்கம் திணிக்கப்படுவதால் அதை எதிர்க்கிறேன். நான் சாதியை எதிர்ப்பதற்குக் காரணம், அது எனக்குப் பிடிக்காத அல்லது நான் பிறக்காத சாதி என்பதால் அல்ல. ஆதிக்கம் திணிக்கப்படுவதால் அதை எதிர்க்கிறேன். என் தாய்மொழி தமிழ் என்ற உணர்ச்சிக்காக அல்ல; தமிழன் என்ற இனத்தின் மீது இந்தியின் வழியே வடவர் ஆதிக்கம் திணிக்கப்படுவதாலேயே இந்தியை எதிர்க்கிறேன். ஆக, ஆதிக்கம்தான் இங்கே பிரச்சினை. ஆதிக்கமும் ஒடுக்குமுறையும் எதற்காக நிகழ்த்தப்படுகின்றன என்றால், சுரண்டலுக்காக நிகழ்த்தப்படுகின்றன. மானுடத்தின் மீது இந்த மூன்றும் எப்போதும் நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது. ஆகவே எதிர்க்கிறோம்.

    ***************************************

    ஆதிக்கம்,ஒடுக்குமுறை,சுரண்டல் பற்றி இவ்வளவு அழகாகச் சொன்னவர் எனக்குத் தெரிந்து திருமா மட்டுமே! மிகவும் அழகாகப் பதிவு செய்துள்ளார்.

    பதிலளிநீக்கு