காவிரி தீர்ப்பு இந்தியாவெங்கும் உருவாக்கப்போகும் சேதம் என்ன?


ஊரில் ‘ஆனது ஆகட்டும், கிழவியைத் தூக்கி மணையிலே வை’ என்று ஒரு சொலவடை உண்டு. அரை நூற்றாண்டு அலைக்கழிப்பின் தொடர்ச்சியாக காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை இந்நாட்டின் ஊடகங்களும் கருத்தாளர்களும் பெரும்பான்மை அரசியல் கட்சிகளும் அணுகும் விதத்தைப் பார்க்கையில், ஒரு வார காலமாக இந்தச் சொலவடைதான் திரும்பத் திரும்ப மனதில் ஓடுகிறது. ‘ஏதோ ஒருவிதத்தில் இது முடிவுக்கு வந்துவிட்டால் சரி’ என்ற நினைப்பு பலரிடத்திலும் உருவாகிவிட்டிருப்பதை உணர முடிகிறது. ஆனால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பானது ஒரு விவகாரத்தின் முடிவாக அல்ல; எண்ணற்ற விவகாரங்களின் தொடக்கமாகவே தோன்றுகிறது.

எந்த ஒரு நதியின் நீரும் அது பாயும் எல்லாப் பகுதிகளுக்கும் உரிய வகையில் பங்களிக்கப்பட வேண்டும். காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பான ஆரம்ப கால ஒப்பந்தங்கள், கர்நாடக விவசாயிகளின் சமகாலத் தேவைகளைக் கருத்தில் கொள்ளவில்லை என்றால், மாறியிருக்கும் காலச் சூழலுக்கேற்ப உரிய நியாயம் செய்யப்பட வேண்டும் என்றே நான் கருதுகிறேன். எல்லா உயிர்களும் ஓர் உயிரே, எல்லா விவசாயிகளும் ஓர் நிறையே!

காவிரி நடுவர் மன்றம் தமிழ்நாட்டின் பங்காக ஒதுக்கிய 192 டிஎம்சி தண்ணீரை 177.5 டிஎம்சி ஆக இந்தத் தீர்ப்பில் குறைத் திருக்கிறது உச்ச நீதிமன்றம். இதனால், தமிழ்நாடு தன்னு டைய பங்கில் மேலும் 14.5 டிஎம்சி தண்ணீரை இழந்திருக்கிறது. ஒரு டிஎம்சி தண்ணீர் என்பது 100 கோடி கன அடி தண்ணீரைக் குறிக்கும். விவசாயிகளின் கணக்கில், ஒரு டிஎம்சி தண்ணீர் என்பது கிட்டத்தட்ட 7,000 ஏக்கர் நெல் பாசனத்தைக் குறிக்கும். அதாவது, நம்மூரில் 1,00,000 ஏக்கர் நிலம் இனி தரிசாகிவிடும். குறைந்தபட்சம் 50 லட்சம் வேலைநாட்களை, விவசாயிகளின் வேலைவாய்ப்புகளை இது காலியாக்கிவிடும்.

போகட்டும். இந்தப் பக்கம் தமிழக விவசாயிகளுக்கு இழப்பாகும் நீரும் பலன்களும், அந்தப் பக்கம் கர்நாடக விவசாயி களுக்கு வரவாகும் என்றால், அது கர்நாடக விவசாயிகள் இதுநாள் வரை கோரிவந்த நியாயத்துக்கான ஈடாக அமையும் என்றால், எல்லா வலிகளைத் தாண்டியும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கலாம். ஆனால், அந்தத் தண்ணீர் யாருக்குச் செல்லவிருக்கிறது? “பெங்களூரு மாநகரத்தின் குடிநீர்த் தட்டுப்பாடு அதிகரித்திருப்பதையும், தொழிற்சாலைகளுக்கான நீர்த் தேவை அதிகரித்திருப்பதையும் கருத்தில் கொண்டே கர்நாடகத்துக்கான தண்ணீர் ஒதுக்கீட்டை அதிகரித்திருக்கிறோம்” என்கிறது உச்ச நீதிமன்றம். சிக்கல் இங்கே பிறக்கிறது!கிட்டத்தட்ட ஒரு கோடி மக்கள் வசிக்கும் மாநிலத்தின் தலைநகர் என்கிற வகையில், பெங்களூருவின் தண்ணீர்ப் பற்றாக் குறையைப் பூர்த்திசெய்ய, காவிரியிலிருந்து தண்ணீர் ஒதுக் கும் முடிவானது இயல்பானது மட்டும் அல்ல; நியாயமானதும்கூட. நகர்மயமாக்கல் சூழலில், உலகெங்கும் நகரங்கள் எதிர்கொள்ளும் அதீதமான தண்ணீர்த் தேவையை இப்படித்தான் சமாளிக்கப் பழகியிருக்கின்றன மூன்றாம் உலக நாடுகளிலுள்ள பெரும்பான்மை அரசாங்கங்கள். அதாவது, நதித் தடத்திலுள்ள, பாரம்பரியமாக அந்தத் தண்ணீருக்கு உரிமை உடையவர்களுக்கான (பெரும்பாலும் கிராம மக்கள், விவசாயிகள், பழங்குடிகள்) ஒதுக்கீட்டிலிருந்து தண்ணீரைப் பறித்து நகரங்களுக்கு அனுப்புவது!

நகரவாசிகளும் வாழ வேண்டும். அவர்களுக்கும் தண்ணீர் வேண்டும். அதேசமயம், தம்முடைய சொந்த ஊரின் இருப்பிலிருந்து தம்முடைய தண்ணீர் தேவையைப் பூர்த்திசெய்துகொள்ள முடியாத நகரங்களுக்குத் தண்ணீர் ஒதுக்கப்படுவதில் ஒரு கட்டுப்பாடும் வேண்டும். நிச்சயமாக, பாரம்பரிய நீர் உரிமையைக் கொண்ட மக்களைக் காட்டிலும் கூடுதலான ஒதுக்கீடு இப்படி இரவல் தண்ணீரைப் பெறும் நகரங்களுக்கு அளிக்கப்படக் கூடாது. மேலும், இப்படியான இரவல் தண்ணீர் விநியோக முறையே நிரந்தரமான தீர்வாகவும் அனுமதிக்கக் கூடாது. சுயாதீனமான முறையில் ஒரு நகரம் இயங்குவதற்கான நீர் மேலாண்மை வழிமுறைகளை நோக்கியே அத்தகைய நகரங்கள் வழிநடத்தப்பட வேண்டும்.

இந்தியா இது விஷயத்தில் மிகப் பெரிய தோல்வியை நோக்கிச் செல்கிறது. முறையான திட்டமிடல் இன்றி பெரும் ஊளையாக விரியும் இந்திய நகரங்கள், கண்ணுக்குத் தெரியாத கிராமப்புறங்களை அழித்துக்கொண்டிருக்கின்றன. இந்தப் போக்குக்கு இன்று முதன்மையான உதாரணம் பெங்களூரு. சில ஆண்டுகளாகவே பெங்களூருவின் அபாயகரமான போக்கு தொடர்பிலான செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக, காவிரி விவகாரத்தில் தீர்ப்பு வெளியாவதற்கு ஓரிரு நாட்கள் முன் சர்வதேச அளவில் வெளியான ஒரு செய்தி, உச்ச நீதிமன்றம் அவசியம் தன்னுடைய கவனத்தில் எடுத்துக்கொண்டிருக்க வேண்டியதாகும்.

நவீன உலகில் இதுவரை நடந்திராத நிகழ்வாகக் கடந்த வாரம் தன்னுடைய நகரத்தில் நீராதாரம் வற்றியதால் குடிமக்களுக்கான குடிநீர் வழங்கலை நிறுத்தியது தென்னாப்பிரிக்கா வின் கேப் டவுன் பெருநகர நிர்வாகம். உலகையே அதிரச்செய்த இந்நிகழ்வின் தொடர்ச்சியாக, உலகெங்கும் இப்படியான மோசமான தண்ணீர் சிக்கல் அபாயத்தை எதிர்கொள்ளவிருக்கும் நகரங்கள் அந்தச் செய்தியில் பட்டியலிடப்பட்டிருந்தன. அதில் பிரேஸிலின் சாவ் பவ்லோவுக்கு அடுத்த இடத்தில் பட்டியலிடப்படிருப்பது பெங்களூரு.

நாட்டிலேயே தன்னுடைய இருப்புக்குப் பொருத்தம் இல்லாத வகையில், அதீதமாக நீரைப் பயன்படுத்துவதில் முதலிடத்தில் உள்ள மாநகரம் பெங்களூரு. ஒட்டுமொத்த கர்நாடக மாநிலம் முழுவதற்கும் வீடுகளின் பயன்பாட்டுக்கு எவ்வளவு தண்ணீர் தேவையோ அதில் சரிபாதி - 50% - பெங்களூரு மாநகரத்தால் மட்டும் நுகரப்படுகிறது. தவிர, அன்றாடம் குடிநீர் வழங்கல் அமைப்புகள் மூலம் அனுப்பப்படும் தண்ணீரில் 50% வரை வீணடிக்கும் நகரமும் அது.

பாரம்பரியமாக பெங்களூருக்குத் தண்ணீர் கொடுத்த 54 ஏரிகளில் பெரும்பாலானவை இன்று பயனற்றவை ஆகியிருக்கின்றன. காவிரியின் துணை நதியான அர்க்காவதியின் நிலையும் குறிப்பிடுவதற்கு இல்லை. ஹெசரகட்டா, திப்பகொண்டனஹள்ளி உள்ளிட்ட முக்கியமான நீராதாரங்களின் நீர்ப்பிடிப்பு வெகுவாகக் குறைந்துவிட்டது. எல்லாவற்றுக்குமான பிரதான காரணம், மோசமான நீர் மேலாண்மை. குழாய்களில் தண்ணீர் கொட்டும்போது யாருக்கு வேண்டும் குளங்களும் ஏரிகளும்?

துல்லியமாகச் சொல்ல வேண்டும் என்றால், முறையாகத் திட்டமிடப்படாத இந்திய நகர்மயமாக்கலின், ஊதாரித்தன மான இந்திய நகர்மயக் கலாச்சாரத்தின் கோரமான விளைவு இது. கேள்வி என்னவென்றால், இதற்கான விலையை ஏன் இந்தியக் கிராமங்களும் விவசாயிகளும் கொடுக்க வேண்டும்? இத்தனை நாட்களும் இதைக் கேட்பதற்கு ஒரு வாய்ப்பு இருந்தது. உச்ச நீதிமன்றத்தின் இப்போதைய தீர்ப்பு அதையும் உடைத்து நொறுக்கிவிட்டது.

கொஞ்சம் விரிவாகவே பேசலாம். 1. இன்றைக்கு பெங்களூருவின் தேவையைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டுக்கான தண்ணீரைக் குறைத்திருக்கிறது உச்ச நீதிமன்றம். அடுத்த 15 ஆண்டுகளுக்கு இத்தீர்ப்பே நீடிக்கும் - மேல் முறையீடு கூடாது என்கிறது உச்ச நீதிமன்றம். கர்நாடகத்தின் மக்கள்தொகைப் பெருக்கத்தைப் போல 13 மடங்கு வேகமாக வளரும் பெங்களூருவின் மக்கள்தொகை அடுத்த பத்தாண்டுகளில் மேலும் மேலும் பெருகும்போது, அதன் தண்ணீர்த் தேவை இன்றைக்குப் போல மூன்று மடங்காகிவிடும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அப்போது உச்ச நீதிமன்றம் என்ன செய்யும்? 2. குடகில் உற்பத்தியாவதில் தொடங்கி பூம்புகாரில் கடலில் கலப்பது வரையில் 800 கி.மீ. வழிநெடுகிலும் பெங்களூரு போல முறையற்ற வகையில் பல நகரங்கள் காவிரிக் கரையில் வளர்ந்துவருகின்றன. அவை எல்லாம் நாளை இதே தீர்ப்பின் அடிப்படை யில் தண்ணீர் கேட்டால், அதை மறுக்க உச்ச நீதிமன்றத்திடம் என்ன நியாயம் இருக்கிறது? 3. பெங்களூருவில் மட்டும் 1,247 பூங்காக்கள், 8 பெரிய கோல்ஃப் மைதானங்கள், ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீரை வாரியிறைக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட சொகுசு விடுதிகள் இருக்கின்றன. நகரங்களின் நீர்த் தேவை என்பது இவற்றையும் உள்ளடக்கியதுதான். குடிநீர்த் தேவை, தொழிலகத் தேவை என்றெல்லாம் சொல்லி, பாரம்பரியப் பயனாளிகளிடமிருந்து அவர்களுடைய வாழ்வாதாரமான விவசாயத்துக்கான தண்ணீரை முதற்கொண்டு பறித்து நகரங்களுக்குத் தண்ணீரை வழங்குகிறோம். நகரங்களின் அநியாய தண்ணீர்ப் பயன்பாட்டைத் தடுத்து நிறுத்த என்ன வழி நம்மிடம் இருக்கிறது?

பெங்களூரு இங்கே ஓர் உதாரண நகரம்தான். 50 ஆண்டு களுக்கும் மேலாகத் தன்னுடைய குடிநீர்த் தேவைக்காக கடலூர் வீராணம் ஏரித் தண்ணீரைச் சுரண்டும் சென்னையின் கதை, பெங்களூருவின் கதையிலிருந்து எந்த வகையிலும் வேறுபட்டது அல்ல. சென்னைவாசிகள் கணிசமானோர் எந்தக் குற்றவுணர்வுமின்றி தங்களுடைய கழிப்பறைக்குப் பயன்படுத் தும் ‘மெட்ரோ தண்ணீர்’, கடலூரில் காவிரிக் கரையோரக் கிராமவாசிகளுக்குக் குடிக்கவும் கிடைக்காதது. காவிரிப் படுகையில் கடந்த ஆண்டு வறட்சியில் பயிர்கள் கருகி, கூடவே விவசாயிகளின் பிணங்களும் எரிந்துகொண்டிருந்த நாட்களிலும் சென்னைக்காக வழக்கம்போல காவிரியிலிருந்து தண்ணீர் உறிஞ்சப்பட்டுக்கொண்டுதான் இருந்தது. சென்னையின் கோல்ஃப் மைதானங்களும் நட்சத்திர விடுதிகளும் தண்ணீரை வாரியிறைத்துக்கொண்டுதான் இருந்தன. யாருடைய கண்களையும் ஏன் இது உறுத்தவில்லை?

நாடாளுமன்றத்தில் தொடங்கி ஊடகங்கள் வரையிலான நம்முடைய நவீன அமைப்பானது, அப்பட்டமாக நகர்மயப் பார்வையையே கொண்டிருக்கிறது. எல்லாவற்றையும் எண்களின் வழியே பார்க்க முற்படுவதோடு, எல்லாவற்றையும் கூட்டல்கள், கழித்தல்கள் வழி எண்களுக்குள் அடக்கிவிட முடியும் என்றும் அது நம்புகிறது. எண்களுக்குள் உயிருள்ள உருப்படிகள் உலவுவதை அது காண்பதில்லை. கிராமங்களை நோக்கிச் செல்லும் தண்ணீர் குறையக் குறைய கிராமங்கள் காய்ந்து ஆவியாவதையும் விளைவாகவே நகரங்கள் ஊதிப் பெருகி உடைந்து சீழாக வழிவதையும் அது புரிந்துகொள்வதில்லை. பெருநகரங்களில் எதிர்பாராத நேரங்களில், அசாதாரணமான சந்தர்ப்பங்களில், சில்லறையை எதிர்நோக்கி கார்களுக்குள் கைகளை நீட்டும் முகங்கள், அப்படித் தங்களால் தீர்ப்பளிக்கப்பட்ட எண்களிலுள்ள ஆன்மாக்கள் என்பதையும், வளர்ச்சியின் பெயரால் சீரழிக்கப்பட்ட அவை நகரங்களைத் துரத்தித் துரத்தி அடிக்கும் என்பதையும் ஒருபோதும் உணர்வதே இல்லை!

- பிப்.2018, ‘தி இந்து’

5 கருத்துகள்:

  1. Superb,in-depth analysis !! An intensive plan for revival of villages, towns into sustainable models is the need of the hour. Not smart cities.Thanks for the great article .

    பதிலளிநீக்கு
  2. தண்ணீரை அதிகம் பயன்படுத்தினால்தான் சுத்தம் என்று கருதுகிறோம்.பல் தேய்க்கும்வரை குழாயை திறந்து வைத்துக் கொள்ளும் எத்தனையோ பேர் இன்னும் இருக்கிறார்கள். தண்ணீர் இல்லா முதல் நகரமாக தென்னாப்ரிக்காவின் கேப் டவுன் ஆகப் போகிறதாம். இந்திய நகரங்களுக்கும் இந்த நிலையை விரைவில் எதிர்பார்க்கலாம். நீர்ப் பயன்பாட்டிற்கான சட்டங்கள் கடுமையாக்கப் பட வேண்டும்.

    பதிலளிநீக்கு
  3. முன்னாள் பிரதமர் மன்மோகன் 2011 ல் சொன்னார். அனைவரும் தண்ணீரை காசு கொடுத்துதான் உபயோகிக்க வேண்டும் என்று. இது அனைவருக்கும் பொருந்தும்.இன்னும் நாம் எத்தனை வீட்டில் வாட்டர் tankai ஒழுக விடுகிறோம். 2011 மன்மோகன் அவர்களை திட்டாதவர்களே இல்லை. அந்த மாபெரும் சிந்தனை வாதி சொல்வதை நாம் அன்றே கேட்டு பின்பற்றி இருதோம்னா..இந்நேரம் இவ்ளோ அபாய நிலைமைக்கு நாம் சென்று இருக்க மாட்டோம். என்னை பொறுத்த வரை மிருகங்கள் மட்டுமே இலவச நீர் குடிக்க தகுதி உடையவை.

    பதிலளிநீக்கு