விவசாயிகளுக்கான போராட்டங்கள் ஏன் எரிச்சலூட்டுகின்றன?


சென்னை ஸ்ரீனிவாசா திரையரங்கம் செல்லும் வழியிலுள்ள மது விடுதியில் கோபாலசாமி அறிமுகமானார். எழுபது வயதிருக்கும். தலை முழுவதும் நரை. நல்ல தாட்டியமான உடலமைப்பு. குடியர்களுக்குப் பரிமாறிக்கொண்டிருந்தார். வெள்ளைச் சட்டை, மடித்துக் கட்டிய வேட்டி, கண்ணாடி அணிந்திருந்தவர் தன் தோளில் தேங்காய்ப்பூ துண்டைப் போட்டிருந்த விதம் அவரைத் தொடர்ந்து கவனிக்கத் தூண்டியது. சென்னைக்காரர்களின் தோற்றம் அல்ல அது. மெல்ல அவரிடம் பேசலானேன்.

தஞ்சாவூர் பக்கம். விவசாயம் நொடித்ததும், இங்குள்ள சினேகிதர் அழைக்க வந்திருக்கிறார். சினேகிதரும் விவசாயிதான். அவர் இப்போது ஒரு அடுக்ககத்தில் காவலாளியாக இருக்கிறார். கோபாலசாமிக்கு அந்த வேலையும் கிடைக்கவில்லை. இங்கும் அவருக்கு எந்தச் சம்பளமும் கிடையாது. மது குடிக்க வருபவர்கள் கேட்கும் பண்டங்களை வாங்கி வந்து பரிமாறுகிறார். புறப்படுகையில் அவர்கள் கொடுத்துச் செல்லும் பத்து, இருபது அவருக்கான வரும்படி. ஒரு நாளைக்கு இருநூறு, முந்நூறு கிடைக்கும் என்றார். எங்கே தங்கியிருக்கிறார் என்ற போது பக்கத்திலுள்ள சேரியைச் சுட்டிக்காட்டினார். ஊரில் அவருக்கு நிலம் இருக்கிறது. பிள்ளைகள் இருக்கிறார்கள். ஆனால், யாரும் யாருக்கும் உதவிக்கொள்ளும் சூழலில் இல்லை.

‘‘எங்கப்பாவுக்கு பத்து ஏக்கர் நிலம் இருந்துச்சு. என்னோட அண்ணனுக்கும் எனக்கும் சரிபாதியா பிரிச்சுக் கொடுத்தார். எனக்கு ரெண்டு பிள்ளை, ஒரு மகள். பொண்ணு கல்யாணத்தப்போ ஒரு ஏக்கர் நிலத்தை விக்க வேண்டியதாச்சு. மிச்ச நாலு ஏக்கர் நிலத்தை ரெண்டு மவன்களுக்கும் ஆளுக்கு ரெண்டு ஏக்கரா கொடுத்தேன். அந்த ரெண்டு ஏக்கரா நெலத்துல விளையறது அவனவன் குடும்பத்துக்கே சாப்பாட்டுக்குக் காணாது. ஒரு போக சாகுபடிக்கு ஏக்கருக்கு உழுவுறது தொடங்கி அறுக்குற வரைக்கும் ஆறு ஆளுங்களுக்கு மூணு நாள் வேலை (18 வேலை நாட்கள்). டிராக்டரெல்லாம் வந்த பின்னாடி அதுவும் குறைஞ்சுடுச்சு. வயலுக்குச் சொந்தக்காரன் நெதமும் வயலுக்குப் போய் வந்தாலும் நாலு மாசத்துல நெல்லு விளைஞ்சுரும். விளைஞ்ச நெல்லு சோத்துக்குக் காணும். மிச்சத்துக்கு என்ன பண்ணுவான்? மிச்ச எட்டு மாசம் என்ன வேலைக்குப் போவான்? நம்ம யாருக்கும் சுமையா இருக்கக் கூடாது. இங்கே வந்தாச்சு. கிராமத்துல சேரியை நாம ஒதுக்குனோம். நகரத்துல சேரிதான் நம்மளைச் சேத்துக்குது.’’

கோபாலசாமி இன்னும் பேசினார். அவர் கடைசியாகச் சொன்ன விஷயத்தைத் தாண்டி என்னால் நகர முடியவில்லை. நிர்வாணப் போராட்டம் வரை எல்லாப் போராட்ட வடிவங்களை யும் பரீட்சித்துப்பார்த்திடும் உத்வேகத்தோடு விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு முன்னெடுக்கும் போராட்டங்களைக் கடந்த ஓராண்டாகத் தொடர்ந்து பார்த்துவருகிறேன். இங்கு மட்டும் அல்ல; பஞ்சாபில், மத்திய பிரதேசத்தில், மகாராஷ்டிரத் தில் எங்கும் விவசாயிகளால் போராட்டக் களத்துக்குள் பொதுச் சமூகத்தை உள்ளிழுக்க முடியவில்லை. எங்கும் ஒட்டுமொத்த சமூகத்தின் போராட்டமாக அது உருமாறவே இல்லை.

ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ராம்லீலா மைதானத்தில் அண்ணா ஹசாரே, ஊழல் ஒழிப்பை முன்னிறுத்தி உண்ணாவிரதத்தில் உட்கார்ந்தபோது, நாடே திரண்டு அவருக்குக் கொடுத்த ஆதரவையும் இந்த மாதம் அதே இடத்தில் விவசாயிகள் பிரச்சினையை முன்னிறுத்தி அவர் உண்ணாவிரதத்தில் உட்கார்ந்த போது ஒரு வாரத்துக்குள் அவர் கூடாரம் சுருங்கிக் காணாமல்போனதையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். காவிரி விவகாரத்தை முன்னிறுத்தி தமிழ்நாட்டில் கடந்த வாரங்களில் நடந்த போராட்டங்களின்போது இந்தப் பிளவு மேலும் துல்லியமாக வெளிப்பட்டது.

கால் நூற்றாண்டு இழுத்தடிப்புக்குப் பிறகு, உச்ச நீதிமன்றம் அளித்த இறுதி நியாயமும்கூட கேள்விக்குள்ளானபோது தமிழக மக்களிடம் கொந்தளிப்பைக் காண முடிந்தது. ஒருங்கிணைந்தார்கள். ஆனால், இந்த ஒருங்கிணைப்பு முழுக்க விவசாயம் சார்ந்ததா, இங்கு சமீப காலமாக மேலெழுந்துவரும் மாநில உரிமைகள் சார்ந்ததா என்ற கேள்வி எனக்கிருக்கிறது. அண்ணா சிலைக்கு எதிரே எங்கள் அலுவலகம் இருக்கிறது. சென்னையில் போராட்டக் களமான பகுதி இது. போராட்டத்தில் மாநில உரிமை சார்ந்த கோஷங்கள், கொந்தளிப்புகளே ஆதிக்கம் செலுத்தின. அனைத்துத் தரப்புகளாலும் ஆதரிக்கப்பட்ட போராட்டம் என்றும் அதை என்னால் சொல்ல இயலவில்லை.

ஒரு சாரார் அப்போதே போராட்டத்தை விமர்சித்தார்கள். எப்போது வாய் திறக்கலாம் என்று காத்திருந்தவர்களுக்கு, ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிவைத்தது வாய்ப்பாக அமைந்தது. அடுத்த ஒரு வாரத்தில் போராட்டத்துக்கு ஆதரவாகப் பேசிக்கொண்டிருந்தவர்கள் குரல்களும் மெல்லத் தேயத் தொடங்கின. ‘பொழுதன்னிக்கும் போராட்டம்.. போராட்டம்னா என்னாகுங்க?’, ‘விவசாயிகளை வெச்சு அரசியல் செய்றாங்களோன்னு தோணுது’, ‘முதலீடு போய்டும்’ என்றெல்லாம் பேச்சு முளைக்கலாயிற்று. போராட்டத்தைப் புறந்தள்ளுவதற்கான நியாயங்களை உருவாக்கத் தொடங்கினார்கள். ‘மக்களுக்குத் தொல்லை கொடுக்காம போராட முடியாதா?’ என்ற கேள்வி அவர்கள் வந்தடைந்த இறுதிநிலை.

சுவாரஸ்யமான ஒரு கேள்வி. இங்கே மக்கள் என்பது யார்? போராட்டத்தால் போக்குவரத்து நெருக்கடியில் கொஞ்ச நேரம் சிக்கிக்கொள்பவர்கள் மக்கள் என்றால், வாழ்க்கையே நெருக்கடிக்குள் சிக்கிப் போராட வந்திருக்கும் விவசாயிகளும் போராட்டக்காரர்களும் யார்? எல்லோருமே மக்கள் என்றால், இங்கே பிளவு எங்கே விழுகிறது? ஒரு போராட்டம் காரணமாகச் சில மணி நேரம் வாகனத்தில் காத்திருப்பதே பாதிப்பு என்றால், அதே சாலையில் அன்றைய நாளின் முடிவு எங்கு கொண்டுபோய்விடும் என்ற எந்த உறுதிப்பாடும் இல்லாமல், பல மணி நேரமாக வெயிலில் போராடிக்கொண்டிருப்பவர்களின் நிலையை என்னவென்று சொல்வது? ஏன் இதை நம்மால் உணர முடிவதில்லை?

இங்கே ‘மக்களுக்குத் தொல்லை கொடுக்காத போராட்டங்கள்’ தொடர்பில் பேசும்போது, நாடு முழுக்க அன்றாடம் எத்தனை போராட்டங்கள் அப்படி நடக்கின்றன என்பது ஞாபகத்துக்குவருகிறது. டெல்லி ஜந்தர்மந்தர் அதன் உச்ச உதாரணம். அரசு என்பது மக்களுக்கானது என்று இன்னமும் நம்பிக்கொண்டு, பத்து வருடங்களாக, பதினைந்து வருடங்களாக என்று அங்கேயே கூடாரம் போட்டுத் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, என்றாவது தங்கள் கோரிக்கை நிறைவேறும் என்று காத்திருக்கும் அபலைகளை டெல்லி செல்லும்போதெல்லாம் பார்க்கலாம். சென்னையில் சேப்பாக்கம் அரசினர் விருந்தினர் மாளிகை அமைந்துள்ள பகுதி தமிழ்நாட்டின் ஜந்தர் மந்தர். ஒரு அபத்த நாடகக்காரர்களைப் போல காலையிலிருந்து நாளெல்லாம் வெயிலிலும் மழையிலும் உட்கார்ந்து தங்களுக்குள் கோஷங்களை எழுப்பி, உரையாற்றி, தீர்மானம் நிறைவேற்றி, அந்தப் பகுதியைக் கடப்பவர்களிடம் நோட்டீஸ்களை விநியோகித்து, மாலையில் கலைந்து செல்லும் போராட்டக்காரர்களை ஒவ்வொரு நாளும் பார்க்கலாம். சாலையை மறிக்கும் போராட்டக்காரர்களைப் பார்த்து உபதேசிக்கும் எவரேனும் என்றைக்காவது இவர்களைத் திரும்பியாவது பார்த்திருப்பார்களா?

இந்தப் பிளவும் குரல்களும் தமிழ்நாட்டின் தனித்த குரல்கள் அல்ல. சமகால இந்தியக் குரலின் ஒரு அங்கம். போராட்டங்கள் வெறும் அடையாள நிமித்தமானவையாக மாறிவருவதற்காக அரசியல்வாதிகளை நாம் குற்றஞ்சாட்டுகிறோம். நேரடியாகத் தம்மோடு பிணைந்தவை நீங்கலாகப் போராட்டங்களைப் பெருமளவு மக்கள் வெறுக்கும் காலகட்டத்தில்தான் நாம் இருக்கிறோம். ஒருவேளை, காலத்துக்கேற்ற புதிய போராட்ட வடிவங்கள் இன்று தேவைப்படுகின்றனவா? இருக்கலாம். ஆனால், சகலவற்றாலும் மிதிக்கப்பட்டு கதறிக்கொண்டுவரும் ஒரு கதியற்றவனைப் பார்த்து ‘நீ படைப்பூக்கத்தோடு போராடப் பழகு!’ என்று சொல்வது மேட்டிமையின் வன்முறையாகவே தோன்றுகிறது. நகரத்தின் ஒழுங்கு கொஞ்சம் குலைவதும் இங்கே எல்லோரையும்  பதற்றத்துக்குள்ளாக்குகிறது. மறுபுறம் நகர்மயச் சிந்தனையால் கிராமங்கள் மொத்தமாகவே நிலைகுலைந்து கிடப்பது யார் பிரக்ஞையையுமே தொடவில்லையே ஏன்?

இந்தியப் பொதுச் சமூகத்துக்கு விவசாயம் - விவசாயிகள் தொடர்பில் அக்கறை, கரிசனம் இல்லை என்று கூற மாட்டேன். விவசாயிகள் மீது கழிவிரக்கம் இருக்கிறது. ‘பாவம் அவர்கள்’ என்ற பச்சாதாபம் இருக்கிறது. ஆனால், அவர்களுடைய பிரச்சினை இவர்களுடையதும் என்றாலும், அவர்களுடைய போராட்டம் இவர்களுடையதாகவில்லை. ஏனென்றால், இந்தியாவின் கருத்தைத் தீர்மானிக்கும் இடத்திலிருக்கிற நடுத்தர வர்க்கத்தின் உலகத்திலிருந்து விவசாயம் வெளியேற்றப்பட்டு வெகுநாட்கள் ஆகின்றன. 

இந்திய விடுதலைப் போராட்டம் முதலான எவ்வளவோ முன்னெடுப்புகளுக்கான உயிர்ச் சக்தியாக இருந்த இந்திய நடுத்தர வர்க்கத்தின், நகர்ப்புற வர்க்கத்தின் ஆன்மா கிராமங்களிலிருந்து துண்டிக்கப்பட்டுவிட்டது. தவிர, மறைமுகமாகக் கிராமத்தின் வீழ்ச்சி இன்றைக்கு இவர்கள் வரித்துக்கொண்டிருக்கும் நகரத்துக்குச் சகாயம் தருவதாகவும் இருக்கிறது. கிராமங்கள் தன்னுடைய சுயகதியில் நின்றால், எங்கிருந்து இத்தனை மலிவான கூலிக்குத் தொழிற்பேட்டைகளில் ஆட்கள் கிடைப்பார்கள்? நீங்கள் செல்வந்தராக இருக்க வேண்டும் என்றால், யாரோ சிலர் ஏழைகளாக இருக்க வேண்டும். அக்கிரஹாரம் எவ்வளவுக்கு எவ்வளவு சுத்தமாக உருவாக்கப்படுகிறதோ அவ்வளவுக்கு அவ்வளவு சேரி அந்தக் குப்பையையும் சேர்ந்து சுமக்க வேண்டும்.

இந்த இடத்தில்தான் விவசாயிகளை நான் தலித்துகளோடு ஒப்பிடுகிறேன். தலித்துகள், பழங்குடிகள் என்ற விளிம்புநிலை வரிசைகளின் தொடர்ச்சியில் அடுத்து விவசாயிகளுக்கான வரிசை ஒன்றை நாம் உருவாக்கிக்கொண்டிருக்கிறோம். நேற்று சாதிய மேலாண்மையின் ஊடாக தலித்துகள் புறந்தள்ளப்பட்ட தைப் போல், இன்று நகர்மய மேலாண்மையின் ஊடாக விவசாயிகள் புறந்தள்ளப்படுகிறார்கள். இன்றைய இந்தியப் பொதுச் சமூகத்துக்குத் தலித்துகள் மீது கழிவிரக்கம் உண்டு. வரலாற்று நியாயத்தையும் அங்கீகரிப்பார்கள். ‘பாவம் தலித்துகள்’ என்பார்கள். ஆனால், தீண்டாமையோ, சாதியோ, தலித்துகளின் ஏனைய பிரச்சினைகளோ மைய விவாதமாவதை ஒருகட்டத்துக்கு மேல் சகித்துக்கொள்ளவே மாட்டார்கள். தலித்துகளின் போராட்டம் இவர்களுடைய சகிப்புத்தன்மையின் எல்லையின் விளிம்பில் இருக்கும். கிராமம் - நகரம் வேறுபாடு மட்டும் அல்ல இது. இரு உலகங்களுக்கு இடையிலான வேறுபாடு.

1951-2001 காலகட்டம் வரையிலான ஐம்பதாண்டுகளில் இந்தியாவில் நகரங்களின் எண்ணிக்கை 5,161. அடுத்த பத்தே ஆண்டுகளில் இது 7,935 ஆக உயர்ந்தது. கூடவே, நகரங்களிலுள்ள வீடற்றவர்களின் எண்ணிக்கை, வீடுகளுக்கான தேவை இரண்டு கோடி யாக உயர்ந்தது. 100 பொலிவுறு நகரங்களை உருவாக்குவதற்காக ரூ.7,000 கோடியை அறிவித்த இந்திய அரசு, இந்த வீடற்றவர்களுக்குச் செய்த ஒதுக்கீடு என்ன? பொலிவுறு நகரங்களுக்கான ஒதுக்கீட்டைத் தலைப்புச் செய்தியாக்கிக் கொண்டாடும் ஊடகங்கள் இதை ஏன் பொது விவாதம் ஆக்கவில்லை? உன் உலகம் வேறு, என் உலகம் வேறு!

ஒரு இக்கட்டான காலகட்டத்தின் மையப் பகுதியில் நாம் இப்போது நுழைந்திருக்கிறோம். சுதந்திரச் சிந்தனைகளை ஆதரித்துப் பேசிக்கொண்டே எதேச்சதிகாரத்துக்கான நியாயங்களை உருவாக்குவது; சமத்துவத்தைப் பேசிக்கொண்டே மைய அதிகாரத்தின் துடியான கையாளாக நிற்பது. இரட்டைப் பேச்சும் ஒரே நாக்கில்! இந்திய நகர்மயச் சமூகம் மேற்கு நோக்கித் தியானித்திருக்கிறது. மேற்கிலிருந்து வரும் நவீனத்தின் சாதகங்கள் அனைத்தும் நமக்கு வேண்டும். ஆனால், அந்தப் பொறுப்புகள், சமூக விழுமியங்கள் எதுவும் வேண்டாம். மிகப் பெரிய துரதிர்ஷ்டம், நம்முடைய மரபில் மிச்சமிருந்த பொறுப்புகள், சமூக விழுமியங்களை நாம் தொலைத்தும் பல பத்தாண்டுகள் ஆயிற்று.

இந்திய நகர்மய வர்க்கம் அதன் போலிமை அல்லது இரட்டைமையின் உச்சம் நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. அது இதோடு நிற்கப்போவதில்லை என்பதே என் அச்சம். நகர்மய வர்க்கம் இரட்டையாகப் பேசுகையில், அதன் எண்ணிக்கை தாறுமாறாக அதிகரிக்கையில் உலகில் எங்குமே குடியரசுத்தன்மை அதன் பண்பாக இருந்ததில்லை. சர்வாதிகாரத்துக்கு அஞ்சி அதை நியாயப்படுத்துவதைக் காட்டிலும் ஆபத்தானது, சர்வாதிகாரத்தை ஜனநாயகம் என நம்பச் சொல்லி நியாயப்படுத்துவது. நகர்மய இந்தியா இப்போது அது நோக்கிக் காலடி எடுத்துவைத்தாயிற்று. எல்லா அடுக்குகளிலும் இந்நாட்டில் கிராமங்கள், விவசாயிகள், தலித்துகளே கீழிருக்கிறார்கள். அவர்களுக்கான நியாயத்தைப் பேசிக்கொண்டே அவர்களை நாம் அழித்துவிடுவோம் என்று அஞ்சுகிறேன்.

- ஏப்ரல், 2018, ‘தி இந்து’


3 கருத்துகள்:

  1. It's good time to remind this as central govt planning smart cities at cost who or how many villages will be affected near smart a city their agriculture employment becos to satisfy the smart cities water needs just for sake of 20 mncs and 2000 staffs there how much we are gng to loose bcos of creating one smart city pls take this issue to next level thanks

    பதிலளிநீக்கு
  2. ஒருவேளை, காலத்துக்கேற்ற புதிய போராட்ட வடிவங்கள் இன்று தேவைப்படுகின்றனவா? இருக்கலாம். ஆனால், சகலவற்றாலும் மிதிக்கப்பட்டு கதறிக்கொண்டுவரும் ஒரு கதியற்றவனைப் பார்த்து ‘நீ படைப்பூக்கத்தோடு போராடப் பழகு!’ என்று சொல்வது மேட்டிமையின் வன்முறையாகவே தோன்றுகிறது.

    மிகச்சரியாக சொன்னீர்கள்.

    பதிலளிநீக்கு
  3. சமஸ் கட்டுரையைப் படித்தேன். உயிர்-பிழைத்தல் எனும் கட்டாய உழைப்புமுகாமுக்குள் அடைபட்ட

    மானுட குலம் துண்டுபட்டுச் சிதறிக் கிடக்கிறது. வாழ்க்கைப் பார்வையற்ற சமுதாயம் எப்படியாவது

    உயிர்-பிழைத்தாக வேண்டும் எனும் கட்டாயத்தால் உந்தப்பட்டு - தான், தன் குடும்பம் எனும் சுய

    நலத்தினால் மேன்மேலும் சிறு சிறு துண்டுகளாக உடைந்து நொறுங்கிப் போய்க்கொண்டிருக்கும்

    நிலையில், "பொதுச் சமூகம்" என்ற ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை! எனக்கு ஒரு பாதிப்பு,

    பிரச்சினை என்றுவரும் போதுதான், நான் 'பொதுச் சமூகம்' பற்றி எண்ணுகிறேன்; அதுவரையிலும்

    நான் பொதுச் சமூகம் பற்றி நினைப்பதேயில்லை!

    நகர மயமாக்கம் என்பது திட்டமிட்டு கிராமங்களை அழிப்பதன் மூலம் செய்யப்பட்டதல்ல; மாறாக,

    கிராமங்களின் அழிவு பொதுவான நவீனம், வளர்ச்சி ஆகியவற்றின் பக்க விளைவாக நிகழ்ந்தேறிய

    தாகும். இன்னும் ஒவ்வொரு நகரத்திற்கும் ஒரு மறுபக்கம், அல்லது கொல்லைப்புறமும் உண்டு

    அதுதான் 'ஸ்லம்' எனப்படும் பின்கடைச்சந்து அல்லது, நகரத்துச் சேரி.

    சமஸ்-ன் கட்டுரையில், "அரசு என்பது மக்களுக்கானது என்று இன்னமும் நம்பிக்கொண்டே..."

    என்றொரு வரி வருகிறது. ஆனால், அரசு என்பது என்றைக்குமே மக்களுக்கானதாக இருந்ததில்லை;

    இனியும் அதை மக்களுக்கானதாக மாற்றமுடியுமா என்பதும் சந்தேகமே! அரசைப்போலவே,

    'சனநாயகம்' என்பதும் முறையான சனநாயகமாக இதுவரையிலும் இருந்ததல்ல! இனியும் நம்மால்

    பூரணமான சனநாயகத்தை நிறுவவியலுமா என்பதும் சந்தேகமே! இன்றைய வாழ்க்கை என்பது ஒரு

    மாபெரும் எந்திரம் போலச் சுழல்கிறது; நாமெல்லோரும் அதன் பாகங்களாக அங்கங்கே ஒட்டிக்

    கொண்டு அதனுடன் சேர்ந்து சுழன்றுகொண்டிருக்கிறோம்! சென்னை நகரின் மையப்பகுதியில் உள்ள

    பத்திரிகை அலுவலகத்தில் பணிபுரிந்துகொண்டு இவ்வாறெல்லாம் சமுக அக்கறையுடன்

    கட்டுரைகளை சமஸ் அவர்களால் எழுத முடிகிறது என்பதில் ஆறுதல் அடைவதற்குமேல்,

    அவராலும், அவரது கட்டுரைகளை வாசித்து விவாதித்து விமர்சித்து அடுத்த நாள் வேறொரு

    கட்டுரை, வேறொரு எரியும் பிரச்சினை குறித்த கட்டுரையினால் திசை திருப்பப்பட்டு... இப்படியே

    போய்க்கொண்டிருப்பதற்கு மேல் நம்மாலும் என்ன செய்ய முடியும்?

    இத்தகைய கரிய சித்திரத்தை தீட்டுவதில் எனக்குத் தனிப்பிரியம் ஏதுமில்லை; இன்னும்

    எதிர்மறையாகத் தோற்றம் தரும் இச்சித்திரம் யதார்த்த நிலைகளிலிருந்துதான் எழுகிறது!

    நம்பிக்கையுடன் உலகை எதிர் நோக்குபவர்கள் சிலர் இருக்கலாம்! "தனிமனிதனின் பிரச்சினையை

    ஒட்டுமொத்த சமூகத்தின் பிரச்சினையாகக் காணவேண்டும்!" என்றெல்லாம் சங்கமம் கையெழுத்துப்

    பத்திரிகை நடத்திய காலத்தில் நானும் எழுதியதாக ஞாபகம்!

    சமஸ் கட்டுரையின் தலைப்பான, "விவசாயிகளுக்கான போராட்டங்கள் ஏன் எரிச்சலூட்டுகின்றன?"

    என்பதில், "எரிச்சலூட்டுகின்றன?" என்பது அவ்வளவாகப் பொருத்தமாக இல்லை? "எரிச்சலூட்டு

    கின்றன?" என்றால் யாருக்கு, சமஸ் அவர்களுக்கா, அல்லது பொதுமக்களுக்கா?.......அடுத்து,

    "விவசாயிகள் நம்முடைய அடுத்த தலித்துகள்". பொதுவாக, எரியும் ஒரு பிரச்சினை ஏன் பரவலாக

    கவனம் பெறுவதில்லை என்பதற்கு பல காரணங்கள் உள்ளன. ஒரு பிரச்சினையை இன்னொரு

    பிரச்சினையுடன் இணைத்து இனம் காண்பதன் வழியே ஒரு இயலாமையுடன் இன்னொரு

    இயலாமையைச் சேர்ப்பதில் அது முடிகிறது.......

    ஒன்று மட்டும் நிச்சயம். ஒட்டு மொத்த உலகம், நாடு, சமூகம் போகிற போக்கு சரியானதாக

    இல்லை! உலகம் எதை நோக்கிப் போகிறதோ அதிலிருந்து எவரும் தப்பிக்க முடியாது! பணம்

    படைத்தவர்கள் தப்பித்துக்கொள்ளலாம் என்று எண்ணலாம்; ஆனால், எல்லோரது பிழைப்பும் நாறப்

    போகிறது!

    மா.க./18:47 30-04-2018

    பதிலளிநீக்கு