லண்டன்: இயந்திரமும் விலங்கும்


நண்பர்களிடமிருந்து இரவு உணவுக்கான அழைப்பு வந்தது. அன்று மால்ட்பீ வீதிக்கு அழைத்துச் செல்வதாகச் சொல்லியிருந்தார் ஆசாத். பிராட்வே, பெர்விக், ப்ராக்லி, கேம்டன், மால்ட்பீ இவையெல்லாம் லண்டனில் சாலையோரக் கடைகளுக்குப் பிரசித்தமான சந்தை வீதிகள். உலகின் பல்வேறு நாடுகளையும் சேர்ந்த ஆயிரம் வகை உணவுகள் இந்த வீதிகளில் ஒரே இடத்தில் கிடைக்கும். மால்ட்பீ வீதியிலுள்ள மெக்ஸிகன் உணவகம் ஒன்றில் சால்மன் மீன் வறுவல் விசேஷம் என்று சொன்னார் ஆசாத். வழக்கத்துக்கு மாறாக எனக்கு வெளியே எங்கும் செல்ல அன்று மனதில்லாமல் இருந்தது. தாமதமாக விடுதி திரும்பியவன் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தேன். மனம் இருநூற்றைம்பது வருடங்கள் பின்னோக்கி தொழில்மயமாக்கல் காலகட்டத்தில் நிலைகொண்டிருந்தது.

இன்று நாம் எதிர்கொண்டுவரும் எத்தனையோ பிரச்சினைகளுக்கான வேர்கள் தொழில் புரட்சியோடு பிணைக்கப்பட்டிருக்கின்றன. மனிதகுல வரலாற்றிலேயே பெரும் திருப்புமுனையை உண்டாக்கிய தொழில் புரட்சியானது, அளவில் சின்னதான பிரிட்டனை வேறு எந்த நாட்டைவிடவும் செல்வாக்கும் அதிகாரமும் கொண்டதாக மாற்றியதோடு மட்டும் நிற்கவில்லை; ஒட்டுமொத்த உலகின் போக்கையும் திருப்பியது. உலகின் எல்லாக் கலாச்சாரங்கள், விழுமியங்கள் மீதும் மோதியது. நவீனத்துவத்தை ஏகாதிபத்தியமாக்கியது.

ரஷ்யப் புரட்சி, பிரான்ஸ், ஜெர்மனியின் எழுச்சி, அமெரிக்காவின் பாய்ச்சல், இரு உலகப் போர்கள் தந்த பின்னடைவு, சீனாவின் விஸ்வரூபம் இவற்றுக்கெல்லாம் பிறகு இன்று பிரிட்டன் சிறுத்துவிட்டிருக்கலாம். ஆனால், அது முன்னெடுத்த பாதையைத் தனக்கேற்பக்   கட்டமைத்துக்கொள்வதன் வாயிலாகவே நவீனப் பேரரசுகள் உருக்கொள்கின்றன. பிரிட்டன் உருவாக்கிய கற்பனையிலிருந்து உலகத்தால் விடுபடவே முடியவில்லை. தொழில்மயமாகும் எல்லா நாடுகளும் தங்களுக்கான நியாயத்தை வளர்ச்சிவாதத்திலிருந்தே பெறுகின்றன.



தேம்ஸ் நதிக்குச் சென்றிருந்தபோது ஹெலன் சொன்னார், “சமஸ், இந்த தேம்ஸ்தான் லண்டனின் ஆதாரம். பிரிட்டன் தொழில்மயமாக்கலுக்குள் நுழைந்தபோது, வளர்ந்து கொண்டேயிருந்த பொருளாதாரமும் பணமும்தான் எல்லோர் நினைவுகளையும் ஆக்கிரமித்திருந்தது. தேம்ஸ்தான் எங்கள் தலையில் தட்டி தொழில்மயமாக்கலின் இன்னொரு முகத்தைச் சுட்டிக்காட்டியது. ‘இந்த நதி செத்துவிட்டது’ என்று சொல்லும் அளவுக்கு இடைப்பட்ட காலத்தில் கிட்டத்தட்ட 150 வருடங்கள் இது மாசுபட்டுக் கிடந்தது.  தேம்ஸில் செல்லும் படகுகளை எலும்புக்கூடுகள் ஓட்டிச்செல்வதான படங்களாக வரைந்தார்கள் ஓவியர்கள். இன்று நதியை நிறைய மீட்டெடுத்திருக்கிறோம். தொழில்மயமாக்கல் உச்சத்தில் இருந்த நாட்களில் லண்டன் நகரம் புகை மண்டலமாகவும் தேம்ஸ் சாக்கடையாகவும் இருந்தது. இன்றைக்கும் பணம் மட்டும் வாழ்க்கை இல்லை என்று தேம்ஸ் சொல்லிக்கொண்டே இருக்கிறது.”


பிரிட்டனில் 1700-களின் மத்தியில், முதலில் வேளாண் துறையில் பெரும் மாற்றம் நடந்தது. வேளாண் துறைக்குள் கொண்டுவரப்பட்ட புதிய வகை விதைகள், புதிய தொழில்நுட்பங்கள், அறிமுகப்படுத்தப்பட்ட இயந்திரங்கள் இவை எல்லாமும் கூடி விளைச்சலை அதிகரித்தன. அதேசமயம், விவசாயத்திலிருந்த வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கையையும் குறைத்தன. உலகின் பல பகுதிகளிலும் தங்கள் காலனியாதிக்கத்தை நிலைநிறுத்திக்கொண்டிருந்ததன் மூலம் பிரிட்டனுக்கு அன்று சாத்தியமாகியிருந்த தங்கு தடையில்லா கச்சாப்பொருள், அடுத்தடுத்து அறிமுகமான புதிய கண்டுபிடிப்புகள், ஒரு புதிய பெருக்கத்துக்குத் துடித்துக்கொண்டிருந்த மூலதனம் எல்லாம் சேர்ந்து பிரிட்டனைத் தொழில்மயமாக்கலில் இறக்கியபோது கிராமப்புறத்தின் வேலைவாய்ப்பின்மையே அதற்கான சமூக நியாயம் ஆனது. கிராமப் புத்துயிர்ப்புக்கான கற்பனை ஆவியாகியிருந்தது.

அதுவரை உள்ளூர் அளவிலானதாக வீடுகளிலும் சமூகங்களிலும் நடந்துவந்த உற்பத்தி பொது இடம் நோக்கி நகர்ந்தது. தொழிற்சாலைகள் உருவான இடங்கள் நகரங்கள் ஆயின. நகரங்கள் பெருநகரங்களாக விரிந்தன. மக்களை இந்த நகரங்கள் அலையலையாக இழுத்தன. 1750-ல் விவசாயப் பண்ணைகளில் இருந்த பிரித்தானியர்களின் எண்ணிக்கை 80%; 1850-களில் இது 50% ஆகக் குறைந்தது. தொழில்மயமும் நகரமயமும் ஒன்றை ஒன்று ஆரத்தழுவி வளர்த்துக்கொண்டன. உலக அளவில், கிராமப்புற மக்கள்தொகையைவிட நகர்ப்புற மக்கள்தொகை அதிகம் என்ற நிலை
2009-ல் உருவாகியிருப்பதை ஐநா சபை அறிவித்தது.

வரலாற்றில் எது ஒன்றையும் முழுக்க கருப்பு அல்லது வெள்ளையாக அணுக முடியாது. முரணியக்கத்திலேயே வரலாறு பயணிக்கிறது.

சுதந்திரப் பொருளாதாரம், அரசு தலையீடற்ற தொழில் – பொருளாதாரச் சூழலுக்கான முதலாளித்துவச் சித்தாந்தங்கள் இவையெல்லாம்தான் தொழில் புரட்சியின் பின்சக்திகளாகத் திகழ்ந்தன. முதலாளிகளின் ஈவிரக்கமற்ற உழைப்புச் சுரண்டல், தொழிலாளர்கள் மீது திணிக்கப்பட்ட அடிமை நிலை, கொடுங்கோன்மைச் சூழல் இவற்றிலிருந்து பீறிட்டெழுந்த உணர்வுகளும் குரல்களும் சமூக இயக்கங்களுக்கு வித்திட்டன. தொழிலாளர் உரிமைக்கான இயக்கங்கள், பெண்ணுரிமைக்கான இயக்கங்கள், சமத்துவத்துக்கான இயக்கங்கள் எல்லாம் தொழில் புரட்சியின் தொடர் விளைவுகளாகத் தோன்றியவை. பிரிட்டனுக்கும் ஜனநாயகத்தை அதுவே கொண்டுவந்தது. தொழிலாளர் உரிமைக்கான குரல் கூடவே ஜனநாயகத்துக்கான குரலாகவும் விரிந்தது.


சிக்கல் என்னவென்றால், தொழில்மயமாக்கல் எனும் இயந்திரத்தைக் கையாள மனித குலத்தால் முடியவில்லை. மாறாக, அது மனிதகுலத்தையும் இயற்கையையும் தன் கையில் எடுத்துக்கொண்டது. பிரிட்டனிலேயே அப்படிதான் அது தொடங்கியது. இன்றைக்குத் தொழில்மயமாக்கலில் சீனாவும் இந்தியாவும் இருக்கும் இடத்தில் பிரிட்டன் இருந்த நாட்களில் பிரிட்டனின் தொழில்பட்டறையாக இருந்தது மான்செஸ்டர் நகரம். அப்போது பிரிட்டன் முழுவதும் மக்களின் சராசரி ஆயுள் காலம் 41 ஆண்டுகள். மான்செஸ்டரிலோ 27 ஆண்டுகள். உயிருக்கும் பணத்துக்குமான தொடர்பு அப்போதே துலக்கமாக வெளிப்பட்டிருக்கிறது.

நூறு ஆண்டுகளுக்கு முன்பு லண்டன் இருந்த நிலையை அன்றைய பத்திரிகைகளைப் படிக்கும்போது தெரிந்துகொள்ள முடிகிறது. “கருமேகம்போல நகரத்தைச் சூழ்ந்திருக்கிறது ஆலைகளின் புகை. காற்றில் கலந்திருக்கும் அமிலங்கள் நகரத்துக் கட்டிடங்களிலும், பாலங்களிலும் சிலைகளிலும் உள்ள உலோகங்களை உருக்கின, பாறைகளை அரிக்கின்றன. இந்த மாசு தங்களுடைய உடம்பையும் அரிக்கும்; உருக்கும் என்பதை உணராதவர்களா லண்டன்வாசிகள்? மூச்சுத்திணறலும், நெஞ்செரிச்சலும், கண்ணெரிச்சலும் எந்த ஆலைகளிலிருந்து உற்பத்தியாகின்றன என்பது புரியாதவர்களா லண்டன்வாசிகள்?”

1952-ல் ‘கொலைப் புகைமூட்டம்’ என்று வர்ணிக்கப்பட்ட மோசமான புகை ஐந்து நாட்களுக்கு லண்டன் நகரைச் சூழ்ந்திருந்திருக்கிறது. “காற்றில் மாசு கலந்திருப்பதால் வெளியில் செல்ல வேண்டாம், குழந்தைகள், பெரியவர்கள், சுவாசக் கோளாறு உள்ளவர்கள் கதவுகளை இறுக மூடிவிட்டு வீட்டுக்குள்ளேயே இருக்கவும்” என்று அரசு பொது அறிவிப்பு செய்யும் அளவுக்கு மாசு சூழ்ந்திருக்கிறது. இதற்கு அடுத்த ஆறு மாதங்களுக்குள் பல நூற்றுக்கணக்கானோர் காற்று மாசால் உயிரிழந்திருக்கின்றனர். இப்படியான தொடர் பாதிப்புகள், மரணங்கள், இழப்புகள் எல்லாம் சேர்ந்து படிப்படியாக பிரிட்டனை வேறு ஒரு பாதை நோக்கித் திருப்பியிருப்பதை உணர முடிகிறது. ஒருபுறம், தீவிரமான மாசுக் கட்டுப்பாட்டுச் சட்டங்களையும் மாசு

தவிர்ப்புச் செயல்திட்டங்களையும் முன்னெடுக்கிறார்கள். மறுபுறம், அதிக லாபமற்ற உற்பத்தியைத் தவிர்க்கிறார்கள்.

லண்டனில் அதிகம் கூட்டம் குவியும் ‘ப்ரைமார்க்’ பல்பொருள் அங்காடிக்குச் சென்றிருந்தபோது இதை உணர முடிந்தது. சென்னையிலுள்ள ‘சரவணா ஸ்டோர்ஸ்’ அங்காடியுடன் ஒப்பிடத்தக்க எல்லா விலையிலும் எல்லாம் உள்ள அங்காடி இது. ஆச்சரியமூட்டும் வகையில், நான் கையில் எடுத்துப் பார்த்த எந்த ஒரு துணி, பொருளும் பிரிட்டன் தயாரிப்பு இல்லை. சீன, இந்திய, வங்கதேசத் தயாரிப்புகள்  ஆக்கிரமித்திருந்தன. “ஒரு உடையால் கிடைக்கும் லாபத்தைவிட அந்த உற்பத்தியால் ஏற்படும் சூழல் இழப்பு அதிகம் என்றால் அதைத் தவிர்த்துவிடுவதே நல்லது என்ற முடிவுக்கு மேற்குலகம் வந்து வெகு நாட்கள் ஆகின்றன. இன்றைக்கும் ஐரோப்பாவில் அதிகம் மாசு உண்டாக்கும் தொழிற்சாலைகளின் பட்டியலில் பிரிட்டன் தொழிற்சாலைகளும் இருக்கின்றன. ஆனால், பிரிட்டனின் மாசை சீனாவின் மாசுடனோ, இந்தியாவின் மாசுடனோ ஒப்பிட முடியாது” என்று சொன்னார் ஆசாத். எனக்குத் திருப்பூரின் வருமானப் பெருக்கமும் நொய்யல் நதியின் சாவும் கண்ணில் தோன்றி மறைந்தன.

விளைவுகள் வெளிப்படையாகத் தெரிகின்றன. உலகிலேயே நிலக்கரியை இன்று அதிகம் வெட்டியெடுக்கும், நுகரும் நாடு சீனா. ஆண்டுக்கு ஒரு கோடி டன் நிலக்கரிச் சாம்பலையும், ஒன்றரைக் கோடி டன் சல்பர் டை-ஆக்சைடு வாயுவையும் சீன ஆலைகள் காற்றில் கலக்கவிடுகின்றன. அப்படியென்றால், லண்டன் காற்றைவிட சீனக் காற்று நூறு மடங்கு அசுத்தமாகத்தானே இருக்க முடியும்?

உலகிலேயே அதிகமாக மாசால் உயிரிழப்பவர்கள் சீனர்கள். அடுத்த இடத்தில் இந்தியர்கள் இருக்கிறோம். ஆண்டுக்கு 25 லட்சம் உயிர்கள் இங்கே மாசால் போகின்றன.  பிரிட்டன் தொழில்மயமாக்கலை முன்னெடுத்தபோது அதற்கு முன்னுதாரணம் கிடையாது. விளைவாகப் பெரும் சேதத்தை விலையாகக் கொடுத்தது. பிரிட்டன் தொடங்கி சீனா வரை ஏராளமான வரலாறுகள் நம் கண் முன்னே இருக்கும்போதும் பாடம் கற்க ஏன் நாம் மறுக்கிறோம்? மேற்குலகு தன்னிடம் நஞ்சைக் குறைத்துக்கொள்ளும் ஒரு உத்தியாக மூன்றாம் உலக நாடுகளைப் பயன்படுத்துகின்றன. நாம் ஒருவேளை நான்காம் உலக நாடுகளை உருவாக்கும் திட்டத்தில் இருக்கிறோமா?

தன் உடலைத் தானே தின்னும் ஒரு விலங்கு கண் முன்னே உலவுகிறது!

ஆகஸ்ட் 2018, 'இந்து தமிழ்'

1 கருத்து:

  1. சிறப்பு. பல புதிய தகவல்களை உங்கள் பதிவினூடாக அறிந்து கொண்டேன். அருமையான எழுத்து நடை. சுவாரசியமாக இருந்தது.

    நமது வலைத்தளம் : சிகரம்
    இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்

    https://newsigaram.blogspot.com/

    பதிலளிநீக்கு