லண்டன்: சாலையில் முன்னுரிமை மனிதர்களுக்கா, வாகனங்களுக்கா?


லண்டனை சைக்கிளில் சுற்ற விரும்பினேன். இந்தப் பயணத்தில் அந்த ஆசை கைகூடவில்லை. நண்பர்கள் அனுமதிக்கவில்லை. சாலைகளில் சைக்கிள்களுக்கு என்று அமைக்கப்பட்டிருந்த தடங்களில் உற்சாகம் பொங்க கடந்த சைக்கிளோட்டிகளைப் பார்க்கும்போது ஏக்கமாக இருந்தது. நகரில் சைக்கிள்களுக்கான அதிவேகத் தடம் அமைப்பதில் இப்போது உத்வேகமாக இருக்கிறார்கள். “நீங்கள் விரும்பினால், விக்டோரியா வீதி, வால்டிங் வீதி, ப்ரெட் வீதி வழியே ஒரு சுற்றுச் சுற்றி வரலாம். சிலிர்ப்பை உணர வேண்டும் என்று விரும்பினால், ‘சிஎஸ்3’ அதிவேகத் தடத்தில் சைக்கிள் ஓட்ட வேண்டும். டவர்ஹில்லில் கிளம்பி வெஸ்ட்மினிஸ்டர் வரைக்குமான பாதையில் ஒருமுறை பயணித்தால் அந்த அனுபவத்தை வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டீர்கள்” என்றார் ஹெலன்.

மனிதக் கண்டுபிடிப்புகளில் சைக்கிள் ஒரு எளிய அற்புதம். நிதானப் பயணத்துக்கு ஏற்ற, சூழலைப் பெரிதாக நாசப்படுத்தாத, ஆபத்துகள் அதிகம் விளைவிக்காத, எவ்வளவு எளிமையான வாகனம். ஐந்தாண்டுகளுக்கு முன்புவரை அலுவலகத்துக்கு சைக்கிளில் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். திருச்சியில் இருந்தபோது ஒரு நாளைக்கு 20 கி.மீ. சைக்கிள் மிதித்தேன். சென்னை வந்த பிறகு அது 25 கி.மீ. ஆக உயர்ந்தது. நீண்ட நாளைக்கு அந்த சந்தோஷம் நீடிக்கவில்லை. பெருகிவரும் மோட்டார் வாகன நெரிசலானது இப்போதெல்லாம் அருகிலுள்ள கடைவீதிக்குச் சென்று திரும்புவதோடு சைக்கிளுடனான உறவைச் சுருக்கிவிட்டது.

சென்னையில் சைக்கிள் ஓட்டுவது என்பது இன்றைக்கு உயிரைப் பணயம் வைத்து நடத்தும் ஒரு சாகசம். இந்தியாவில் மோட்டார் வாகனப் பெருக்கம் மிகுந்த நகரங்களில் முன்னிலையில் இருக்கிறது சென்னை. தமிழர்கள் இதற்காகப் பெருமை கொள்ள முடியாது. அதிகரிக்கும் மோட்டார் வாகனங்களின் அடர்த்தி சுற்றுச்சூழலிலும் சுகாதாரத்திலும் எவ்வளவு மோசமான பாதிப்புகளை உண்டாக்குகிறது என்பதை வருஷம் முழுக்க ஊடகங்கள் பேசுகின்றன. ஆட்சியாளர்கள் காதில் எது விழுகிறது?

பொதுவாகவே நம்முடைய சமூகத்தில், எந்தப் பாதிப்பையும் நாம் தனிநபர்கள் சார்ந்ததாகச் சுருக்கிவிடுகிறோமோ என்ற எண்ணம் எனக்கு உண்டு. வீட்டில் குழந்தைக்கு மூச்சிரைப்பு இருக்கும். அதற்குத் தனியே சிகிச்சை நடக்கும். நகரைச் சூழும் காற்று மாசு குறித்து பத்திரிகையில் செய்தி வெளியாகும். இந்த வாசிப்பு தனியே நடக்கும். இரண்டையும் பொருத்திப் பேசவோ, சுயமாற்றம் தொடர்பில் பரிசீலிப்பதோ நடக்காது. தீபாவளி அன்று மூச்சிரைப்புக் குழந்தை உள்ள வீட்டிலும் பட்டாசுகள் வெடிக்கும்.

கென் லிவிங்ஸ்டோனைச் சந்திக்க விரும்பினேன். நேரம் அமையவில்லை. லண்டன் மேயராக இருந்தபோது பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவதில் பெரும் அக்கறை காட்டியவர் இவர். லண்டன் நகர வாடகை சைக்கிள் திட்டம் லிவிங்ஸ்டோன் எண்ணத்தில் உருவானது. இவருக்கு அடுத்து மேயராக வந்த போரீஸ் ஜான்ஸன் அதை அறிமுகப்படுத்தினார். நகரத்தில் ஜனசந்தடி மிக்க 70 இடங்களில் சைக்கிள் நிறுத்தகங்களை அமைத்திருக்கிறார்கள். இந்த நிறுத்தங்களில் எங்கு வேண்டுமானாலும் வண்டியை எடுக்கலாம், விடலாம். பத்தாயிரம் சைக்கிள்கள் இப்படி ஓடுகின்றன. நாள் வாடகை இரண்டு பவுண்டுகள். முதல் அரை மணிப் பயன்பாட்டுக்கு வாடகை ஏதும் கிடையாது. பத்தாண்டுகளில் 7.35 கோடிப் பயணங்கள் நடந்திருக்கின்றன என்கிறார்கள்.

பிரிட்டனின் சைக்கிள் வரலாற்றில் இந்த ஆண்டுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. பிரிட்டன் சாலைகளில் தன்னுடைய இருநூறாவது வருஷத்தை இந்த ஆண்டில் முடித்திருக்கிறது சைக்கிள். 1818-ல் லண்டனில் முதல் சைக்கிள் ஓடியது. இன்று ஒவ்வொரு பத்தாவது விநாடியிலும் பிரிட்டன் வீதியில் ஒரு புது சைக்கிள் இறங்குகிறது. “சைக்கிள் வாங்க மக்கள் ஒரு பவுண்டு செலவிட்டால் பிரிட்டனின் பொருளாதாரத்துக்கு அது நான்கு பவுண்டுகள் வலு சேர்க்கிறது. சாலைகளில் நெரிசல் குறைகிறது. நகர மக்களுக்குக் கிடைக்கும் சுத்தமான காற்றின் அளவு அதிகரிக்கிறது. மக்களுடைய சுகாதாரம் மேம்படுவதால், நாட்டின் மருத்துவச் செலவு குறைகிறது. ஆண்டுக்கு 1,000 கோடி பவுண்டுகள் இதன் மூலம் மிச்சமாகும் என்று கணக்கிடுகிறார்கள். ஆகையால், 2025-க்குள் சைக்கிள் பயன்பாட்டை இரட்டிப்பாக்க அரசு திட்டமிடுகிறது. சைக்கிள்களுக்கான தடங்கள் அமைப்பதற்காகவே 770 மில்லியன் பவுண்டுகளை ஒதுக்கியிருக்கிறார் இன்றைய மேயர் சாதிக் கான்” என்று ஹெலன் சொன்னார்.

ஒரு நகரத்தின் முகத்தை சைக்கிள்கள் எப்படி வேகமாக மாற்றுகின்றன என்பதைச் சமீபத்திய ஆண்டுகளில்தான் பிரிட்டன் மக்கள் உணரத் தொடங்கியிருக்கிறார்கள். லண்டன் மாநகரவாசிகள் 88 லட்சம் பேரில் 6.5 லட்சம் பேர் - 7 சதவீதத்தினர் - மட்டுமே தினமும் சைக்கிள் ஓட்டுகின்றனர் என்றாலும், அதுவே சூழலில் நல்ல தாக்கத்தை வெளிப்படுத்துகிறது என்கிறார்கள். சைக்கிளோட்டம் அதிகரிக்கத் தொடங்கிய பத்தாண்டுகளில் லண்டன் நகரில் நெரிசல் நேரத்தில் இயக்கத்தில் இருந்த கார்களின் எண்ணிக்கை 86,000 என்பதிலிருந்து 64,000 ஆகக் குறைந்திருக்கிறது. “சைக்கிள் ஓட்டுவதை நிறையப் பேர் விரும்புகின்றனர். ஆனால், உள்ளும் புறமுமாக நிறையத் தடைகள் இருக்கின்றன. வெளியே நாடு முழுக்க சைக்கிளோட்டிகளுக்கான பாதுகாப்பான சூழல் சாலைகளில் உருவாக்கப்பட வேண்டும். உள்ளே சைக்கிள் ஓட்டுவது ஒன்றும் அந்தஸ்து குறைவில்லை என்ற எண்ணம் மக்களிடம் உருவாக வேண்டும். லண்டனை எடுத்துக்கொண்டால் சைக்கிளோட்டிகளில் ஆண்கள், வெள்ளையர்கள், உயர் மத்திய தர வர்க்கத்தினரே அதிகம். பெண்கள், கருப்பர்கள், புலம்பெயர்ந்தவர்கள், அடித்தட்டு வர்க்கத்தினர் எண்ணிக்கை குறைவு” என்றார் ஹெலன். ஆனால், சூழலை மேம்படுத்துவதற்காக ஒலிக்கும் குரல்கள் உத்வேகம் அளிக்கின்றன.

இந்தப் பயணத்தினூடாக அறிந்துகொண்ட சுவாரஸ்யமான சில மனிதர்களை அவ்வப்போது எழுத நினைக்கிறேன். பொதுப் போக்குவரத்து மேம்பாட்டுக்காகக் குரல் கொடுத்துவரும் ரோஸ்லின் அவர்களில் ஒருவர். “சூழலுக்கு உகந்த நகரமாக லண்டன் உருமாற சைக்கிளோட்டிகளுக்கேற்ப சாலைகளை வடிவமைப்பதே ஒரே வழி” என்பவர் இவர். “லண்டன் நகரத்தில் வெறும் 3% சாலைகளில் மட்டுமே சைக்கிள்களுக்கு இன்று தனித்தடம் இருக்கிறது. அதேசமயம், கார்களை நிறுத்த 68 கார் நிறுத்தங்கள் உள்ளன. இவற்றின் மொத்தப் பரப்பளவு 78.5 ச.கி.மீ. ஒவ்வொரு நகரத்திலும் கார்கள் இப்படி எடுத்துக்கொள்ளும் பரப்பைக் கணக்கிடுங்கள். சாலைகளை மட்டும் அல்ல; நம்முடைய நகரங்களையும் கார்கள் ஆக்கிரமித்திருப்பது உங்களுக்குப் புரியவரும். ஒரு சாலையில் ஒரு மணி நேரத்துக்கு 2,000 கார்கள் போக முடியும் என்றால், அதே நேரத்தில் 14,000 சைக்கிள்கள் எளிதில் கடந்துவிட முடியும். கார்கள் மூலம் நடக்கும் ஆக்கிரமிப்பு நகர்ப்புற வாழ்க்கையில் பெரிய வன்முறை” என்கிறார் ரோஸ்லின்.

ஹெலனிடம் பேசிக்கொண்டு வந்தபோது டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில், இந்த ஆண்டில் கார்களின் எண்ணிக்கையை சைக்கிள்களின் எண்ணிக்கை மிஞ்சியிருப்பதைச் சுட்டிக்காட்டினார். “கோபன்ஹேகனில் இன்று 62% பேர் சைக்கிளிலேயே வேலைக்குச் செல்கின்றனர். அந்த நகரின் சாலைகள் - கார்களுக்காக அல்ல - சைக்கிள்களுக்கேற்ப வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. விளைவாக நகரில் கார்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் சைக்கிள்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்திருக்கிறது. 2018 மே கணக்குப்படி கோபன்ஹேகனில் கார்கள் எண்ணிக்கை 2.52 லட்சம். சைக்கிள்கள் எண்ணிக்கை 2.65 லட்சம். லண்டனிலும் அப்படியான சூழலை உருவாக்க வேண்டும்” என்றார்.

முன்னேறிய நாடுகள் பலவற்றிலும் இன்று இது தொடர்பில் தீவிரமாக யோசிக்கிறார்கள். “நகரின் மையப் பகுதிக்கு இனி கார்கள்-டாக்ஸிகள் வரக் கூடாது” என்று அயர்லாந்தின் டப்ளின் நகர நிர்வாகம் அறிவித்திருக்கிறது. “2019 முதல் நகரில் கார்களுக்கு இடம் இல்லை” என்று முடிவெடுத்திருக்கிறது நார்வேயின் ஆஸ்லோ நகர நிர்வாகம். ஸ்பெயினின் மாட்ரிட் நகரில், “பிரதானமான மைய வீதிகளுக்குள் சொந்த வீட்டுக்காரர்களைத் தவிர மற்றவர்கள் கார்கள் வரக் கூடாது” என்று தடை விதித்திருக்கிறார்கள். எல்லோருக்குமே ஹாலந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாம் மீது ஒரு தனிக் கவனம் இருக்கிறது. ஆம்ஸ்டர்டாமில் சைக்கிளோட்டிகள்தான் ராஜாக்கள். நகரின் எல்லாப் பகுதிகளும் சைக்கிள் ஓட்டும் பாதைகளால் இணைக்கப்பட்டிருக்கின்றன. 1973 யோம்கிப்பூர் போரின்போது இஸ்ரேலை ஆதரித்த மேற்கு நாடுகளுக்கு பெட்ரோல்-டீசலை விற்க மாட்டோம் என்ற முடிவை அரபு நாடுகள் எடுத்தன. எண்ணெய் விலை நான்கு மடங்கு உயர்ந்தபோது, தனியார் போக்குவரத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டுகோள் விடுத்த பிரதமர் டென் உய்ல், ஒரு மாற்றுச் செயல்திட்டமாக சைக்கிள் பயணத்தை முன்வைத்தார். இன்று ஹாலந்தில் 22,000 மைல் நீளத்துக்கு சைக்கிள் ஓட்டும் தனிப்பாதைகள் உள்ளன.

ஹெலன், “ஜெர்மனி விஷயம் கேள்விப்பட்டீர்களா?” என்றார். “தெரியும், நான் எங்கள் ஊரைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறேன்” என்றேன். சாலையோரத்தில் ஒரு பிரெஞ்சுக்காரர் அபாரமாக வயலின் வாசித்துக்கொண்டிருந்தார். சுற்றி நின்ற கூட்டத்தோடு தன்னைக் கரைத்துக்கொண்டார் ஹெலன். சூரியன் பரிபூரணமாகக் கீழே இறங்குவதுபோல இருந்தது. குளிரைத் துளைத்துக்கொண்டு வந்த சூரியக் கதிர்கள் உடலுக்குள் ஊடுருவிப் பரவின. தங்கள் தொப்பிகளைக் கழற்றி வெயிலை உள்வாங்கிய இரு குழந்தைகள் பாதையில் எதிர்ப்படுவோருக்கு வணக்கம் சொன்னபடி கடந்தனர். சைக்கிள்களில் செல்பவர்களிடம் பரவும் வெயில் உற்சாகம் வாகனத்தில் வேகம் கூட்டுகிறது. ஜெர்மனி மட்டும் அல்ல; மேற்கின் பல நாடுகள் இப்போது சைக்கிளோட்டிகளுக்கான அதிவேகப் பாதைகளை அமைப்பதில் தீவிரமான கவனத்தைச் செலுத்திவருகின்றன. இந்தியாவிலோ நாம் மோட்டார் வாகனப் பெருக்கத்தை ஊக்குவிக்க எட்டு வழி அதிவேகச் சாலைகளைத் திட்டமிடுகிறோம்!

 செப்.2019, ‘இந்து தமிழ்’

6 கருத்துகள்:

  1. லண்டனில் மட்டுமல்ல, பெரும்பாலான ஐரோப்பிய நகரங்களில் அப்படித்தான். இங்கே நெதர்லாந்தில் சைக்கிள் ஓட்டுவது ஒரு சுகானுபவம்.

    பதிலளிநீக்கு
  2. மிகவும் அருமையான இந்தியாவுக்கு தேவையான பதிவு . தமிழர்கள் இந்தியாவில் மோட்டார் வாகனப் பெருக்கத்தை - கார் வைத்திருப்பதை பெருமையாகவும், சைக்கிள் என்றால் இழிவாகவும் கருதுபவர்கள்.

    பதிலளிநீக்கு
  3. I bought a new cycle for my daughter and from the shop I was riding the same to my home. It took 5 minutes to cross a road in between as no one wants to give way to a cyclist.

    That's the prevailing condition in Chennai

    பதிலளிநீக்கு
  4. சைக்கிள் அனுபவத்தைப் பார்க்கும்போது சிறிது நேரம் பள்ளிக்கால நினைவுகள் மனதில் தோன்றி மறைந்தன.

    பதிலளிநீக்கு
  5. For Ex : chennai has become so hot , it is very difficult to travel in cycle. More over most of the work places are far away IT companies once we travel in hot sun and get drenched with sweat it will be impossible to sit in the office with that smell.. what we need to do is improve public transport system like bus, trains increase the frequency allow only sitting and make people to use. Most of us buy bike and car because of the above said reasons

    பதிலளிநீக்கு
  6. //பொதுவாகவே நம்முடைய சமூகத்தில், எந்தப் பாதிப்பையும் நாம் தனிநபர்கள் சார்ந்ததாகச் சுருக்கிவிடுகிறோமோ என்ற எண்ணம் எனக்கு உண்டு. வீட்டில் குழந்தைக்கு மூச்சிரைப்பு இருக்கும். அதற்குத் தனியே சிகிச்சை நடக்கும். நகரைச் சூழும் காற்று மாசு குறித்து பத்திரிகையில் செய்தி வெளியாகும். இந்த வாசிப்பு தனியே நடக்கும். இரண்டையும் பொருத்திப் பேசவோ, சுயமாற்றம் தொடர்பில் பரிசீலிப்பதோ நடக்காது.//
    சத்தியமான உண்மை. எனக்கு சுவாச கோளாறு உள்ளது. ஆனால் வாசிப்பு பழக்கம் உள்ள என்னாலயே என்னோட இந்த சுவாச கோளாறு பிரச்சனைக்கும், சுற்றுசூழல் சீர்கேடுக்கும் உள்ள தொடர்பை இணைத்து இவ்வளவு நாள் யோசித்ததில்லை. இப்பே நீங்கள் சொன்ன பிறகு தான் புரிகிறது

    பதிலளிநீக்கு