எப்போது கொடூரங்களை நிறுத்தப்போகிறோம்?


அடித்து நொறுக்கப்பட்ட வீடு. நூறை நெருங்கும் ஒரு மூதாட்டி. கூரை ஓடுகள் சிதறிக்கிடக்கும் வீட்டின் வாசலில் சிதைவுகளின் நடுவே கால்கள் ஒடுங்கி  உட்கார்ந்திருக்கிறாள். அவளுடைய வெடவெடுத்த இரு கைகளும் கூப்பியிருக்கின்றன. இடுங்கிய கண்களிலிருந்து கண்ணீர் வழிகிறது. அவள் இறைஞ்சுகிறாள். நடந்ததை ஒரு கிராமத்தின் இரு சமூகங்களுக்கு இடையிலான மோதலாகச் சுருக்கிவிடுவது விஷயத்தை ஏறக்கட்டிவிட்டுக் கடக்க வசதியானது.


ஆயிரக்கணக்கான போலீஸார் ஒவ்வொரு மாவட்டத்திலும் குவிக்கப்பட்டு, உச்சபட்ச பாதுகாப்பு வளையத்தின் கீழ் வாக்குப் பதிவு நடத்தப்படும் தேர்தல் நாளிலும்கூட ஊரை வளைத்து, தலித்துகள் தங்கள் பிரதிநிதியைத் தேர்தெடுப்பதற்கான அவர்களுடைய வாக்குரிமையைக்கூடத் தடுக்கும் விதமாகப் பட்டப்பகலில் மணிக்கணக்கில் அவர்கள் மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதலானது சுதந்திரத்துக்கு எழுபதாண்டுகளுக்குப் பிறகும்கூட இந்தியாவில் ஜனநாயகம் யாரை அண்டி வாழ வேண்டியிருக்கிறது என்பதையே வெளிப்படுத்துகிறது. எனக்கு அந்த மூதாட்டி – இந்நாட்டின் மூத்த குடிமகள்களில் ஒருவர் – இந்திய ஜனநாயகமாகத் தோன்றுகிறார். அவர் ஒரு உருவகமாகிறார்.

நாம் ஒரு கேள்வி கேட்டுக்கொள்வோம், இந்தியாவில் ஜனநாயகமானது உண்மையாகவே சாதியை முற்றொதுக்குவதாக அமையும் என்றால், அப்படிப்பட்ட ஜனநாயகத்தை நம்முடைய சாதியமைப்பு விட்டுவைக்குமா; சாதியை எதிர்த்து இயங்கும் வல்லமை இந்திய ஜனநாயகத்துக்கு இருக்கிறதா?

பொன்பரப்பி சம்பவத்துக்கு மறுநாள் இந்தத் தேர்தலின் மாபெரும் காட்சிகளில் ஒன்று மைன்புரியில் அரங்கேறியது. நாட்டின் பெரிய மாநிலமும், டெல்லி அரசியலைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிப்பதுமான உத்தர பிரதேசத்தின் இரு பெரும் தூண்களான சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி இருவரும் 24 வருட இடைவெளிக்குப் பின் முதல் முறையாக ஒரே மேடையில் தோன்றினார்கள்.

தேசிய ஊடகங்கள் அத்தனையும் முகாமிட்டிருந்த அந்தப் பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில், முதுமையில் ஆடி அடங்கிவிட்டிருக்கும் முலாயமால் ஏழெட்டு நிமிடங்கள்தான் பேச முடிந்தது. அவருடைய சொந்த தொகுதி மைன்புரி. நான்கு முறை அவர் வென்ற தொகுதி. இம்முறை தொகுதியை வெல்ல அவர் போராட வேண்டியிருக்கிறது. தொகுதியின் பெரும்பான்மைச் சாதியான சாக்கியாக்களிலிருந்து ஒருவரை முலாயமுக்கு எதிராக நிறுத்தியிருக்கிறது பாஜக. முலாயம் கட்சியின் எதிர்காலத்துக்கு மட்டுமல்லாது, முலாயம் வெற்றிக்கே இம்முறை மாயாவதியின் உதவி தேவைப்படுகிறது; தலித்துகளின் ஆதரவு தேவைப்படுகிறது. ‘இந்த ஒருமுறை கடைசியாக வாக்களியுங்கள்; உதவுங்கள்’ என்று வாக்காளர்களை மட்டுமல்லாது மாயாவதியையும் சேர்த்துத்தான் கேட்டுக்கொண்டார் முலாயம். தனக்காக ஓட்டு கேட்க வந்திருக்கும் மாயாவதியின் பெருந்தன்மைக்கு நன்றி கூறினார்.

அடுத்துப் பேசினார் மாயாவதி. நாட்டின் எதிர்காலம் கருதியும் மக்கள் நலன் கருதியும் பழைய கசப்பான சம்பவங்களை மறக்க முற்படுவதாகக் கூறியவர், லக்னௌ விருந்தினர் மாளிகைச் சம்பவத்திலிருந்து இன்று வெகுதூரம் வந்துவிட்டதாகக் கூறினார். உள்ளபடியே, அதைச் சொல்ல - ஒரு பெண் அப்படியொரு அநீதியையும் அவமானத்தையும் தாண்டிவர, வரலாற்றை மறக்க - பெருநெஞ்சம் வேண்டும்.

கொடூரமான அந்தத் தாக்குதல் 1995 ஜூன் 2 அன்று நடந்தது. சமாஜ்வாதி கட்சியும் பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணியில் இருந்தன. முலாயம் முதல்வராக இருந்தார். இரு கட்சிகள் இடையேயான பிணக்குகளின் விளைவாக, ஜூன் 1 அன்று கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தார் மாயாவதி. ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தார் - பாஜக அவரை ஆதரித்தது. மறுநாள் உத்தர பிரதேச முதல்வராகப் பதவியேற்கவிருந்த நிலையில் ஜூன் 2 அன்று தலைநகர் லக்னௌவில் தன் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுடன் அரசு விருந்தினர் மாளிகையில் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். இருநூறுக்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் - சமாஜ்வாதியின் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலரும் அதில் அடக்கம் - அன்று மாலை விடுதியைச் சுற்றிவளைத்தது. கைகளில் ஆயுதம், கண்களில் வெறி பொங்கக் கொலைக் கூச்சலிட்டு வருபவர்களைப் பார்த்த மாத்திரத்தில் மாயாவதியையும் மூத்த உறுப்பினர்களையும் ஒரு அறைக்குள் தள்ளினர் அவருடைய சகாக்கள்; அறைக்குள் தள்ளப்பட்டவர்கள் கதவுகளை உள்புறமாகத் தாளிட்டுக்கொண்டு பதுங்கினர். வெளியில் வன்முறை. கொடுந்தாக்குதல். இடையிலேயே கட்டிடத்தின் குடிநீர், மின்சாரம், தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டன. கதவை உடைக்கும் முயற்சி பலனளிக்காத நிலையில் மாயாவதியின் வெளியேறுதலுக்காக வெளியிலேயே காத்திருக்கின்றனர். அடிபட்டவர்களின் அலறலும், அடித்தவர்களின் ஆவேசக் கூச்சலும் எதிரொலித்துக்கொண்டே இருக்க உயிரைக் கையில் பிடித்தபடி அறைக்குள் பதுங்கியிருக்கிறார் மாயாவதி. நள்ளிரவு வரை நீடித்த இந்தப் பயங்கரம் காங்கிரஸார் வழியே பிரதமர் நரசிம்ம ராவுக்குக் கொண்டுசெல்லப்பட்டு, ஆளுநர் தலையீட்டின் விளைவாக மத்தியப் படையினர் அனுப்பப்பட்டு இறுதியாக மீட்கப்பட்டார் மாயாவதி. அறைக்கு வெளியே வந்தபோது அவருடைய சுடிதார் கால்சட்டை முழுவதும் ரத்தமயமாகி இருந்தது - மாதவிடாயிலிருந்தவர் கிட்டத்தட்ட பிணைக்கைதிபோல அந்த அறையில் ஏராளமானோர் மத்தியில் அடைபட்டிருந்ததால், ஆடை முழுக்க உதிரப்போக்கு பரவ எல்லோர் முன்பும் கூனிக்குறுகி நின்றார். நினைத்துப்பாருங்கள், மறுநாள் இந்நாட்டின் மிகப் பெரிய மாநிலத்தின் முதல்வர் அவர். முதல் நாள் இதுதான் கதி.

அங்கிருந்துதான் இன்று வெகுதூரம் வந்துவிட்டதாகவும் நாட்டின் எதிர்காலம், மக்கள் நலன் கருதி பழைய விஷயங்களை மறந்துவிட்டதாகவும் கூறுகிறார் மாயாவதி. இங்கே மறதியின் வழி அவர் தருவது மன்னிப்புதான். இந்நாட்டில் சமூகத்துடன் ஒன்றுகலக்கவும் சமூகத்தின் முன்னேற்றத்துக்காகவும் மறதி வழி மன்னிப்பை வழங்கிக்கொண்டேதான் இருக்கிறார்கள் தலித்துகள். நாம் எப்போது கொடூரங்கள் வழி நினைவுகளை  நிறுத்தப்போகிறோம்?

- ஏப்ரல், 2019, ‘இந்து தமிழ்’

3 கருத்துகள்:

 1. நினைத்தே பார்க்க முடியாத அளவிலான கொடூரம். இவற்றுக்கெல்லாம் முடிவு எப்பொழுதோ?

  பதிலளிநீக்கு
 2. இந்தியாவில் சாதி ஒரு புற்றுநோய். மாண்டு போவதை தவிர வேறு வழியில்லை என்றே நினைக்கிறேன். முடிந்தவரை வேறுநாடுகளுக்கு சென்று அவர்களுடன் கலந்து விடுங்கள். காலம்காலமாக இழிவுபடுவதை விட இது மேலானது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வேறு நாடுகளுக்குச் சென்றிருக்கும் தமிழர்களைப் பற்றி விசாரித்துப் பாருங்கள். அங்கும் சாதியாகத் திரண்டு அந்நாட்டவரையே கலவரப்படுத்தும் தமிழரின் மேன்மை குறித்துக் கேள்விப்பட்டதில்லையா நண்பரே! “சாதி ஒழித்திடல் ஒன்று, நல்ல தமிழ்வளர்த்தல் மற்றொன்று, பாதியை நாடு மறந்தால், மற்றப் பாதி துலங்குதல் இல்லை” எனத் தன்னிடம் பாரதி கூறியதாக பாரதிதாசன் கூறுவதை உற்றுக் கவனியுங்கள் நண்பா!

   நீக்கு