விஜய் அரசியல் பேசினால் என்ன தவறு?



தன்னைக் கடந்து சென்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பைக் கோபம் கொப்பளிக்க சிறுமி கிரியத்டா துன்பர்ரி முறைக்கும் காணொலியைப் பார்த்தபோது, ட்ரம்ப் இதே காணொலியைப் பார்த்தபோது எப்படி உணர்வார் என்று தோன்றியது. உலகின் கவனம் ஈர்க்கும் சூழல் செயல்பாட்டாளராக உருவெடுத்திருக்கும் பதினாறு வயது மாணவிகிரியத்தா துன்பர்ரிக்காக அவருடைய சொந்த நாட்டினரான ஸ்வீடன்காரர்கள் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். உலகின் மிக சக்தி வாய்ந்த நபருக்கு எதிரான கிரியத்தா துன்பர்ரியின் சீற்றம் அவருடைய தார்மிகத்தோடு, ஸ்வீடன் தன் குடிமக்களிடம் வளர்த்தெடுத்திருக்கும் துணிச்சலான ஜனநாயக மாண்பையும், தாராளச் சிந்தனையையும் சேர்த்தே வெளிப்படுத்தியிருக்கிறது. சமீபத்தில் பத்தாவது பேரக் குழந்தைக்குத் தாத்தாவான ட்ரம்பின் மூத்த பேத்தியான கய் ட்ரம்பைவிடவும் நான்கே வயது மூத்தவர் கிரியத்தா துன்பர்ரி; அபூர்வமாகவேனும் ட்ரம்ப் கனிவாக அவரை எதிர்கொள்வார் என்று எதிர்பார்த்தேன். தன் வயதுக்கு இணையான எதிரியை எதிர்கொள்வதுபோலவே கிரியத்தா துன்பர்ரியையும் கிண்டலடித்திருக்கிறார் ட்ரம்ப்.

நியூ யார்க்கில் உலகத் தலைவர்கள் பங்கேற்ற ஐ.நா. சபையின் பருவநிலை உச்சி மாநாட்டில் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை நன்றாகவே பயன்படுத்திக்கொண்டார் கிரியத்தா துன்பர்ரி.  “உங்கள் வெற்று வார்த்தைகளால் எனது கனவுகளையும் என் குழந்தைப் பருவத்தையும் நீங்கள் திருடிவிட்டீர்கள். மக்கள் துயருறுகிறார்கள். மக்கள் செத்து மடிகிறார்கள். ஒட்டுமொத்த உயிர்ச்சூழலும் சிதைந்தழிகிறது. பேரழிவின் தொடக்கத்தில் இருக்கிறோம். ஆயினும் நீங்கள் பேசுவதெல்லாம் பணத்தைப் பற்றியும் நீடித்த பொருளாதார வளர்ச்சியைக் குறித்த கதைகளைப் பற்றியும்தான். எவ்வளவு துணிச்சல் உங்களுக்கு!” என்று பருவநிலை மாற்றத்தை அலட்சியமாகக் கையாளும் உலகத் தலைவர்களை நோக்கி அவர் கேட்டதைப் புதிய தலைமுறையின் அறைகூவல் என்றே சொல்ல வேண்டும்.


சென்ற ஆண்டில் சக மாணவ - மாணவியரோடு சேர்ந்து ஸ்வீடன் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டதிலிருந்தே கிரியத்தா துன்பர்ரி கவனம் ஈர்த்தார். அங்கு தொடங்கிய அவர்களுடைய ‘பள்ளிக்கூட வேலைநிறுத்த இயக்கம்’ பருவநிலை மாற்றத்துக்குத் தேவையான நடவடிக்கை எடுக்கக் கோரி உலகெங்கும் பரவிவரும் பல போராட்டங்களுக்கும் தூண்டுகோலாக இருந்தது. சென்னை சாய்ராம் கல்லூரி வளாகத்தில் நடந்த தன்னுடைய ‘பிகில்’ திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசிய நாளில்  ‘இதுவரையிலான வரலாற்றில் மிகப் பெரிய பருவநிலைப் போராட்டம்’ என்று சொல்லத்தக்க அளவுக்கான பிரம்மாண்ட போராட்டம் தோராயமாக 185 நாடுகளில் நடைபெற்றது.  விஜயின் பிரதான ரசிகர்களான மாணவ - மாணவிகள் அவருடைய பேச்சுக்காகக் காத்துக்கிடந்த நேரத்தில் ஆஸ்திரேலியாவில் மட்டும் மூன்று லட்சம் பேர் பேரணிகளில் பங்கேற்றிருந்தனர். பிரிஸ்பேர்னில் பத்து வயது மாணவன் பார்க்கர் ஆட்சியாளர்களுக்கு எதிராக வாசித்த கவிதையை அந்த நாடே கொண்டாடிக்கொண்டிருந்தது.

அப்போது இங்கே சென்னையில் என்ன நடந்தது? விஜய் நிகழ்ச்சிக்கு வந்து நெரிசலில் சிக்கிக்கொண்டிருந்தார்கள் நம்முடைய இளைஞர்கள். தள்ளுமுள்ளில் ஈடுபட்டார்கள் என்று கூறி மாணவர்கள் மீது தடியடி நடத்தியது காவல் துறை. எனக்கு அந்த மாணவர்கள் மீது பெரிய புகார்கள் இல்லை. அவர்களை அந்த இடத்தில் நாம்தான் நிறுத்தியிருக்கிறோம்.. பெற்றோர்கள், ஆசிரியர்கள், ஊடகர்கள், ஆட்சியாளர்கள், எல்லோருமே! அந்த இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் போகிறபோக்கில் அரசியல்வாதிகளைப் பற்றி சில நிமிஷங்கள் நடிகர் விஜய் பேசியதற்கே நிகழ்ச்சி நடத்தப்பட்ட கல்லூரியின் நிர்வாகம், ‘அரசியல் பேசும் சினிமா நிகழ்ச்சிக்கு கல்லூரியில் எப்படி அனுமதி அளிக்கப்பட்டது?’ என்று ஆட்சியாளர்களால் குறிவைக்கப்பட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் செய்திகளை எப்படிப் புரிந்துகொள்வது?

இது புதிதல்ல. ஆறு மாதங்களுக்கு முன் அன்றைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்ற ஒரு நிகழ்ச்சிக்காக ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரிக்கு தமிழக அரசின் உயர்கல்வித் துறை நோட்டீஸே அனுப்பியது. மூன்று மாதங்களுக்கு முன் மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரிகளுக்கு, “கல்லூரிகளில் நடக்கும் நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்களில் கலந்துகொள்ளும் விருந்தினர்கள் அரசியல் பேசக் கூடாது; அவ்வகையான நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கக் கூடாது” என்றும் “அப்படியான நிகழ்ச்சிகள் நடந்தால் சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் உயர்கல்வித் துறை இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியதையும் இங்கே நினைவுகூரலாம்.

விஜய்க்கோ, ராகுலுக்கோ கல்லூரிகளில் பேச அனுமதியளிப்பதில் என்ன தவறு இருக்கிறது அல்லது அங்கு அவர்கள் அரசியல் பேசுவதில்தான் என்ன தவறு இருக்கிறது? நம்முடைய ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் எந்த யுகத்தில் இருக்கிறார்கள்? “கம்ப ராமாயணம், பெரிய புராணம் ஆகியவற்றை நாங்கள் ஏன் எரிக்கிறோம்?” என்று அண்ணாவும் ஈழத்தடிகளும், அவர்களை எதிர்த்து “நம்முடைய இலக்கியச் சொத்துகள் அழிக்கப்படக் கூடாது” என்று ரா.பி.சேதுபிள்ளையும் சோமசுந்தர பாரதியும் விவாதங்களை நடத்தியது பள்ளி - கல்லூரி வளாகங்களில்தான். 19.02.1943 அன்று முதல் விவாதம் நடந்தது சென்னை சட்டக் கல்லூரியின் மண்டபத்திலும் 14.03.1943 அன்று அடுத்த விவாதம் நடந்தது சேலம், செவ்வாய்ப்பேட்டை தேவாங்க பாடசாலை மண்டபத்திலும். இவ்வளவுக்கும் அன்றைக்கு நாம் இருந்தது காலனிய ஆட்சியின் கீழ்; இன்றைக்கு எழுபதாண்டு குடியரசு ஆட்சியின் கீழ் இருப்பதாகச் சொல்லிக்கொள்கிறோம். வெட்கக்கேடாக இல்லையா?

அமெரிக்காவில் ஓராண்டுக்கு முன் நடந்த இரு பட்டமளிப்பு விழாக்கள் இந்த நேரத்தில் நினைவுக்கு வருகின்றன; அதிபர் ட்ரம்பை நேரடியாகவே கடுமையாக இந்த விழாக்களில் சிறப்புரையாளர்கள் விமர்சித்ததும்தான். டெக்ஸாஸ் பல்கலைக்கழக விழாவில் பேசிய நியூ யார்க் மேயர் மிஷேல் ப்ளூம்பெர்க், “என் வாழ்நாளிலேயே அரசியலில் இப்போதுதான் இவ்வளவு கேவலத்தைச் சகித்துக்கொள்ள வேண்டியிருக்கிறது” என்றார். “இப்படிப்பட்ட தலைவர்களைக் காட்டிலும் அபாயகரமானவர்கள் அவர்களது பொய்களை ஆதரிக்கிறவர்கள்” என்றார். அடுத்த சில நாட்களில் அதையே யேல் சட்டக் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் வழிமொழிந்தார் ஹிலாரி கிளின்டன். “நமது ஜனநாயக வரலாற்றிலேயே மிக இக்கட்டான காலக்கட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்” என்று மாணவர்களுக்கு அறிவுறுத்திய ஹிலாரி, “ஜனநாயகம் பிழைத்திருக்க வேண்டும் என்றால், கண்களை மூடிக்கொண்டிருக்கக் கூடாது, கவனமாக இருக்க வேண்டும்” என்றார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர், “இருநூறு ஆண்டுகளாக இந்தியாவைக் காலனியாதிக்கத்தின் கீழ் சுரண்டியது பிரிட்டன். அதற்காக இந்தியாவுக்கு பிரிட்டிஷார் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும்” என்று பேசிய புகழ்மிக்க உரை எங்கு நிகழ்த்தப்பட்டது என்று நினைவில் இருக்கிறதா? பிரிட்டனில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஆக்ஸ்போர்டு யூனியன் கூட்டத்தில் நடந்தது அது. யூதர்கள் இனப் படுகொலை, இஸ்லாமிய வெறுப்பு, அமெரிக்க உளவு நிறுவனங்களின் அரசியல் என்று எவ்வளவோ சர்ச்சைக்குரிய விஷயங்கள், பிரிட்டன் அரசே விமர்சிக்கப்படும் விவகாரங்கள் அங்கே விவாதிக்கப்படுகின்றன; 190 ஆண்டுகளாக; எதற்கும் தடைச் சூழல் இல்லை. சசி தரூர் போன்று வெளிநாட்டிலிருந்து ஒரு அரசியலர் நம் நாட்டிலுள்ள கல்வி நிறுவன வளாகத்தில் வந்து, நம் நாட்டை விமர்சித்துப் பேசிச் சென்றால், அந்தக் கல்வி நிறுவன நிர்வாகம் இன்று என்ன கதிக்கு ஆளாகும்? ஆயின், நாம் முன்னோக்கிச் செல்கிறோமா, பின்னோக்கிச் செல்கிறோமா?

அச்சத்திலிருந்து விடுவிப்பதுதான் கல்வியின் முதன்மைப் பணி. கல்வியாளர்கள் வழியே அச்சத்தை வளர்த்தெடுப்பதும், நிறுவனமயப்படுத்துவதும் அல்ல. கல்வி நிறுவனங்கள் என்றில்லை; மக்கள் அரசியல் பேசுவதையே வெறுக்கும் போக்கு கொஞ்சம் கொஞ்சமாக இங்கே எப்படியோ உருவாகிவிட்டது. கிட்டத்தட்ட ஒரு கோடி பேர் வாழும் நகரம் சென்னை; மேலும், எட்டு கோடி தமிழர்களின் தலைநகரமும் அது. பாரீஸிலுள்ள பிளேஸ் டி லா பாஸ்டில், லண்டனிலுள்ள டிரஃபால்கர் சதுக்கம், நியூயார்க்கிலுள்ள  யூனியன் ஸ்கொயர், கெய்ரோவில் உள்ள தாரீர் சதுக்கம், பிராக்கிலுள்ள  வென்ஸ்லாஸ் சதுக்கம்,  மெக்ஸிகோ சிட்டியிலுள்ள பிளேஸ் டி லாஸ் டிரெஸ் கல்சுராஸ், கீவிலுள்ள சுதந்திரச் சதுக்கம்போல சென்னையின் வெறும் ஒரு சதவிகித மக்கள் அறவழியில் ஒன்றுகூடி நியாயமான ஒரு கோரிக்கையை அரசிடம் வலியுறுத்த அரசால் அனுமதிக்கப்பட்ட இடம் ஒன்று இன்று நம் தலைநகரத்தில் இருக்கிறதா? ஒரு குடியரசு நாட்டில் அறப்போராட்டத்துக்கான இடம்கூட இல்லை என்ற பரிதவிப்பு ஏன் நம் சமூகத்திடம் இல்லை? நிலப்பரப்பின் குறுக்கம் அல்ல இது; ஜனநாயகப் பரப்பின் குறுக்கம். ஒரு சமூகத்தின் சுதந்திரவுணர்வையோ, ஜனநாயகவுணர்வையோ முதலில் சட்டங்கள் தீர்மானிப்பதில்லை; அங்கு வாழும் மக்களின் குடிமையுணர்வோ, அடிமையுணர்வோதான் தீர்மானிக்கிறது!

செப்டம்பர், 2019, ‘இந்து தமிழ்’

1 கருத்து:

  1. நன்றீ சமஷ,
    தொடர்ந்து மனதில் பட்ட கருத்துக்கலை, எந்தவித சமரசமின்றி தரவுகலோடு முன்வைப்பதர்க்கு.

    பதிலளிநீக்கு