கண்ணியத்துக்கான மாற்றீடல்ல பிழைப்பு

அன்புக்குரிய சகோதரர்களே, வணக்கம்!

ஒரு ரயில் பாதை. அதன் நடுவே ரத்தம் தோய சிதறிக் கிடக்கும் சப்பாத்திகள். பக்கத்திலேயே சிதைந்த உடல்களின் பாகங்கள். இந்த ஒரு காட்சி கரோனா வரலாற்றிலிருந்து அகலப்போவதே இல்லை. எத்தனை நூற்றாண்டுகள் கழித்தாலும், எதிர்வரும் தலைமுறைகள் நினைவுகூர்கையில் கரோனாவை இந்தியா எதிர்கொண்ட ஒட்டுமொத்த சூழலையும் ஓர் உருவகமாக அந்தக் காட்சி சொல்லும். ஊரடங்கின் விளைவாகப் பிழைப்பை இழந்து, போக்குவரத்து முடக்கப்பட்ட நிலையில், சொந்த மாநிலத்துக்கு ரயில் பாதை வழியே கால்நடையாகச் செல்லத் துணிந்து, ஔரங்காபாத் அருகே சரக்கு ரயிலில் அடிபட்டு உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் பதினாறு பேரும் அந்தக் கொடிய அதிகாலையில் எழுப்பிய மரண ஓலம் இந்த நாட்டின் மனசாட்சி நோக்கி விடுக்கப்பட்டிருக்கும் பெரும் அறைகூவல்.

இந்தியாவின் அமைப்பில் உள்ள சகல பலவீனங்களையும் கரோனா அம்பலமாக்குகிறது. வணிகத் தலைநகரம் - முன்னேற்றத்தின் முகம் என்று நாம் கொண்டாடிவந்த மும்பைதான் இன்று நாட்டிலேயே மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நகரம். நாட்டுக்கே பொருளாதார வளர்ச்சிக்கு முன்மாதிரி என்று தூக்கிப்பிடிக்கப்பட்ட குஜராத், கரோனா மரணங்களில் முன்வரிசையில் இருக்கிறது. ஆலைகளுக்கும் தொழில்களுக்கும் பேர்போன குஜராத்தி நகரங்களால் தம் தொழிலாளர்களை சில வாரங்களுக்குக்கூட நிம்மதியாகப் பார்த்துக்கொள்ள முடியவில்லை. குஜராத்தின் சண்டோலாவிலுள்ள ஆலை ஒன்றில் கூலியாக வேலை பார்த்துவந்த ஜாதவ் அசாமின் கதாரியா கிராமத்துக்குப் புறப்பட்டார்; 25 நாட்கள் நடந்தும், இடையிடையே தென்பட்ட வண்டிகளில் தொற்றியபடியும் 2,800 கி.மீ. பயணித்து, தன் சொந்த ஊரை அவர் அடைந்தபோது ஜாதவின் உடல் நைந்துபோயிருந்தது. ‘எங்களை விடுங்கள்; ஜாதவ் மாதிரியேனும் ஊர் போய் சேர்கிறோம்’ என்று சூரத்திலுள்ள பல ஆயிரம் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியபடியே இருக்கின்றனர்.

ஊரடங்கு தொடங்கியதிலிருந்தே இந்தியாவின் பெருநகரங்களிலிருந்து பல ஆயிரம் தொழிலாளர்கள் மனைவி, குழந்தைகளுடன் தங்கள் சொந்த ஊர் நோக்கி நடந்தே கடக்கின்றனர். கொடும் வெயிலில் கால்கள் புண்ணாகத் தேம்பித் தேம்பி அழுதபடி தாய் - தந்தை கரங்களைப் பற்றியபடி நடக்கும் குழந்தைகளின் கால் வழியே கசியும் ரத்தமும் வலியும் துயரமும் இந்திய நகரங்களின் தார் சாலைகளிலேயே புதைந்துவிடப்போவதில்லை.

இந்திய நகரங்களின் உயிரோட்டமான இயக்கத்தின் முக்கியச் சக்கரங்களான தொழிலாளர்கள் அரசு தடுத்தும் ஏன் இவ்வளவு பதற்றமாக நகரங்களை விட்டு ஓடுகிறார்கள்? ஏனென்றால், நம் நகரங்கள் அவர்களைத் துரத்துகின்றன. இங்கே அவர்களுக்கு இடம் இல்லை. நம் தேவையின் நிமித்தம் நகரங்களில் நாம் அவர்களுக்குத் தற்காலிகமாக ஒதுக்கும் நெருக்கடியான தகரக் கொட்டகைக் கொத்தடிமைக் கூடார வாழ்க்கையும்கூட ஒரு வாரத்துக்கு மேல் உழைப்பின்றி அவர்கள் நகரத்தில் வாழ அனுமதிப்பதில்லை. இதை மீறி நகரங்களை அவர்கள் தம் சொந்த ஊராக்கிக்கொண்டால் என்னவாகும்? ஆசியாவின் மிகப் பெரிய சேரியாகக் காட்சியளிக்கும் மும்பையின் தாராவிதான் அதற்கான பதில்.

இந்த கரோனா காலகட்டத்தில், நாம் சேரிகளை முழுக்கவுமே கைகழுவிவிட்டோம். எப்போதுமே சேரிகள் அரசப் பார்வையின் விளிம்பில் இருக்கின்றன என்றாலும், இப்போது அரசு முற்றிலுமாகவே கண்களை மூடிக்கொள்கிறது. ஏனென்றால், எல்லோருக்குமானதாகப் பேசும் பாவனையில் கீழ்த்தட்டு மக்களை முற்றிலுமாகப் புறக்கணித்துவிட்டு அரசு நிகழ்த்தும் எல்லாப் பிரசங்கங்களும் சேரிகள் முன் அபத்தமாகிவிடுகின்றன. தொற்றைத் தவிர்க்க சுத்தமும், மூன்றடி தனிநபர் இடைவெளியும் முக்கியம் என்கிறோம். வெறும் இரண்டு சதுர கி.மீ. பரப்பளவில் கிட்டத்தட்ட பத்து லட்சம் பேர் அடைபட்டிருக்கும் தாராவியில், இரண்டடி அகலச் சந்துகளும் பாதைகள்; நான்கில் மூன்று பங்கு வீடுகளுக்குத் தனிக் கழிப்பறை கிடையாது; நூறு பேர் பயன்படுத்தும் கழிப்பறைகளுக்குப் போதிய தண்ணீர் வசதியும் கிடையாது; எப்படி சுத்தம், தனிநபர் இடைவெளி பேணுவது? கொத்துக் கொத்தாகக் கிருமித் தொற்றுக்குள்ளாகும் சேரிகள் இந்த நாட்டின் வளர்ச்சிப் பிரகடனங்களைப் பார்த்துக் காறி உமிழ்கின்றன.

நாட்டின் ஆகப் பெரும்பான்மையினரான முறைசாரா தொழிலாளர்களின் கண்ணியமான வாழ்க்கையை இந்தியா இதுவரை சிந்தித்ததே இல்லை. இப்போதேனும் சிந்திப்போமா? நாம் நம் அரசமைப்பில் இந்தியாவை ‘சமதர்மக் குடியரசு’ என்று குறிப்பிடுகிறோம். இப்படியான எந்த டாம்பீகப் பிரகடனத்தோடும் தொடர்பில்லாத பல நாடுகள் - முதலாளித்துவத்தைக் கைக்கொள்ளும் நாடுகள் உள்பட – தம் வளர்ச்சிப் பயணத்தில் சகல குடிமக்களுக்குமான குறைந்தபட்ச கண்ணிய வாழ்வை அவர்களுடைய பொருளாதாரச் சுதந்திரத்தின் வழி இன்றைக்கு உத்தரவாதப்படுத்தியிருக்கின்றன. எந்த ஒரு வேலையில் ஈடுபடும் ஒரு தொழிலாளிக்குமான ‘கண்ணியமான குறைந்தபட்ச வாழ்வூதிய நிர்ணயம்’ இதில் முக்கியமான காரணி. இந்தியாவால் இதை இன்னும் சாத்தியமாக்க முடியவில்லை; ஏன்?

தன்னுடைய குடிமக்களின் பிழைப்புக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவதையே ஒரு பெரிய சேவையாகக் கருதிவிடுகிறது இந்திய அரசு. அதைத் தாண்டிய கற்பனை அதற்கு இல்லை. பிழைப்பைத் தாண்டிய கண்ணிய வாழ்க்கைக்குத் தன்னுடைய  உழைக்கும் தொழிலாளர்களைத் தகுதியுடையவர்களாக அது கருதியதே இல்லை. உடலுழைப்புத் தொழிலை இழிவாகவும் இந்த இழிவை இயல்பாகவும் கருதும் வெட்கக்கேட்டை எந்த லஜ்ஜையுமின்றி தொடர நம்முடைய தீண்டாமை வரலாறு நமக்கு வசதியாக உதவுகிறது.

2020-ல் ஒரு மணி நேரத்துக்கு 8.72 பவுண்டுகளை (ரூ.817) பிரிட்டனும், ஒரு மாதத்துக்கு 1,557 யூரோக்களை (ரூ.1.29 லட்சம்) ஜெர்மனியும் குறைந்தபட்ச வாழ்வூதியமாக நிர்ணயித்திருக்கின்றன. தொழிலாளியின் ஊட்டச்சத்துமிக்க உணவு, நல்ல உடைகள், வாழ்வதற்குரிய வீடு, குழந்தைகளின் எதிர்காலத்துக்கான குறைந்தபட்சத் திட்டமிடல் இவற்றுக்கு மட்டும் அல்ல; தொழிலாளியின் குடும்பத்தின் கேளிக்கைகள், பிறந்த நாள் விருந்துகள், வருஷ சுற்றுலாவுக்கும்கூட சேர்த்துத்தான் இந்தக் குறைந்தபட்ச வாழ்வூதியம் நிர்ணயிக்கப்படுகிறது. இப்படி நிர்ணயிக்கப்பட்ட கூலிக்குக் குறைவாக தொழிலாளிக்கு வழங்கப்பட்டால் அது கடும் தண்டனைக்குரிய குற்றம்.

நூறாண்டுகளாக இப்படி ஒரு நியாயமான வாழ்வூதிய நிர்ணயத்துக்காக இந்தியாவில்  தொழிலாளர்கள் போராடிவருகின்றனர். சுதந்திரத்துக்குப் பிந்தைய 1948 சட்டமும் சரி; மிகச் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட 2019 சட்டமும் சரி; அதைப் பூர்த்திசெய்யவே இல்லை. ஒரு நாளைக்கு 2,700 கலோரி உணவு, மாதத்துக்கு 18 கெஜம் துணி, இவற்றின் விலை மதிப்புக்கேற்ற வீட்டு வாடகை, அதற்கேற்ற வீதத்தில் ஏனைய செலவீனங்கள், இவற்றைத் தாண்டி ஒரு தொழிலாளியின் உலகத்தை இந்தியா சிந்திக்கவில்லை. அரசு நிர்ணயித்த நிபுணர் குழுவே பரிந்துரைத்த சொற்பத் தொகையான ‘ரூ.375 குறைந்தபட்ச ஒரு நாள் கூலி’ பரிந்துரையில் பாதிகூட இங்கே அமலுக்கு வர முடியவில்லை; ஒரு நாளைக்கான குறைந்தபட்சக் கூலி ரூ.178; அதற்குக் குறைவாக அளிக்கப்பட்டாலும், ஏன் என்று கேட்க ஒரு நாதி கிடையாது என்பதே 2020-ல் இந்திய நிதர்சனம்.

இந்தியாவில் ஒரு கடைநிலை அரசு ஊழியரின் சராசரி தொடக்க மாத ஊதியம் ரூ.18,000; அதாவது, ஒரு நாளைக்கு ரூ.600; ஒரு மணி நேரத்துக்கு ரூ.75. இதையே ஏன் எல்லா வேலைகளுக்குமான குறைந்தபட்ச கூலியாக நிர்ணயிக்கக் கூடாது? சாத்தியமற்றதல்ல இது; கேரள அரசின் நிர்ணயம் இப்போதே அதுதான். ‘தொழில் துறையைப் பாதுகாக்கிறோம்; ஏற்றுமதியில் சர்வதேசத்துடன் போட்டியிடுகிறோம்’ என்ற பெயரில், இந்தியா இதுவரை கடைப்பிடித்துவரும் மலிவுக் கூலிக் கலாச்சாரமானது சமூகச் சுரண்டலே அன்றி வேறில்லை. பெருநகரங்களின் அங்காடிகளில் நாம் நூறு ரூபாய்க்கு வாங்கும் ஒரு உள்ளாடைக்குக் கூடுதலாக இருபது ரூபாய் கொடுப்பதால் ஒரு நுகர்வோர் எந்த வகையிலும் குறைந்துவிடப்போவதில்லை. ஆனால், அந்த இருபது ரூபாயானது கூலியில் சேர்ந்தால், அந்த அங்காடியில் பணியாற்றும் ஊழியர்கள் வாழ்க்கை சமூகப் பாதுகாப்பு நிலையில் அடுத்த படி நோக்கி நகரும்.

அசாமின் வனங்களிலிருந்தும் சத்தீஸ்கரின் மலைகளிலிருந்தும் டெல்லி நோக்கி வரும் பழங்குடி இளைஞர்களுக்கு நம்முடைய இன்றைய பொருளாதாரக் கொள்கையும் நம்முடைய வளர்ச்சிக் கோட்பாடும் நிச்சயமாக அவர்கள் கிராமத்தில் கிடைக்காத ஏதோ ஒரு பிழைப்பைத் தருகின்றன; கொஞ்சம் பணத்தைத் தருகின்றன. ஆனால், அவர்களுடைய சொந்த ஊர்களில் இருந்த பாதுகாப்பான, நிம்மதியான வாழ்க்கைச் சூழலின் கண்ணியத்தைக் கொஞ்சமேனும் மேம்படுத்தியிருக்கின்றனவா? இதற்கு நியாயமான பதிலை நம்மால் அளிக்கவே முடியாது. பிழைப்பும் கூலியும் கண்ணியத்துக்கான மாற்றீடு அல்ல. ஆனால், புலம்பெயர் தொழிலாளர்களை நாம் அடிமைகளாகவே ஆக்கிவிட்டோம். ஒட்டுமொத்த தொழிலாளர்களின் நிலைமையை மேலும் மோசமாக்கிவிட்டோம். கரோனாவின் விளைவாக உண்டாகியிருக்கும் பொருளாதாரத் தேக்கத்திலிருந்து மீள வேலை நேரத்தைப் பன்னிரெண்டு மணியாக உயர்த்துவது என்பதில் தொடங்கி,  தொழிலாளர்கள் உரிமைகளைப் பாதுகாக்கும் எல்லா சட்டங்களையும் மூன்றாண்டுகளுக்கு முடக்கிவைப்பது என்பது வரையிலான இன்றைய கூத்துகள் நம்மைத் தூக்கி நிறுத்தாது; நெடிய போக்கில் சமூகச் சிதைவையே உண்டாக்கும். அழிவிலிருந்து மீள ஆரோக்கியச் சிந்தனை முக்கியம்.

உடலுழைப்பை மரியாதையோடு அணுகும் சமூகங்களே ஆரோக்கியமான குடிமைச் சமூகங்களாகப் பரிணமிக்க முடியும். இந்தியாவின் சிந்தனையில் இந்த மாற்றம் உருவாகும்போது நம் நகரங்களின் முகம் மட்டும் அல்ல; கிராமங்களின் முகமும்கூட உருமாறும்!

- மே, 2020, ‘இந்து தமிழ்’

3 கருத்துகள்:

  1. புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அடிமைளாகவே ஆக்கிவிட்டோம். வேதனைக்குரிய விஷயம்.

    பதிலளிநீக்கு
  2. உண்மை

    இந்திய போன்ற மக்கள் தொகை அதிகம் உள்ள அரசியல் விழிப்புணர்வு இல்லாத நாட்டில் இதை அரசியல் பிழைப்போர்யிடம் எதிர் பார்க்க முடியாது
    சுய பொருளாதார தரும் விவசாயம் அதன் மதிப்பு கூட்டு பொருட்கள் சுய உற்பத்தி இது சார்ந்த சுயசிந்தனை கூட்டு முயற்சியே வழியாகும் என்று நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு