சூப்பர் ஸ்டார் கல்கி




அவையோர் அனைவருக்கும் வணக்கம்!

தமிழ்நாட்டில் தீவிரமான வாசிப்பைக் கொண்ட, புதிதாக எழுத வரும் எவரும் தன்னுடைய பயணப் பாதையின் குறுக்கே கல்கியைச் சந்திக்காமல் இருக்கவே முடியாது. தமிழ்ப் பத்திரிகை உலகைப் பொறுத்தமட்டில், அவர்தான் முதல் சூப்பர் ஸ்டார்; எப்படி சினிமாக்காரர்களுக்கு எம்.கே.தியாகராஜ பாகவதரோ அப்படி. ஆகையால், என்னுடைய ஆதர்ஷங்களில் ஒருவராகவும் கல்கி நிலைப்பெற்றதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

நான் நேரடியாக கல்கியிடம் சென்றவன் இல்லை; ரொம்ப சின்ன வயதிலேயே அவர் மறைமுகமாக என்னை வந்தடைந்திருந்தார். ‘கல்கி குழுமம்’ கொண்டுவந்த ‘கோகுலம்’ என் சிறு பிராயத்தை ஆக்கிரமித்திருந்த இதழ்களில் ஒன்று. அங்கிருந்து அடுத்தகட்டம் நோக்கி  நகர்ந்தபோது ‘கல்கி’ இதழ் நான் புதிதாகப் படிக்க ஆரம்பித்த இதழ்களின் பட்டியலில் இருந்தது. அப்புறம் கல்கியின் எழுத்துக்கள். இப்படிப் படிப்படியாக கல்கியின் வாசகன் ஆகியிருந்தேன். பின்னாளில் அவரும் காந்தியர்; காவிரிப்படுகையைச் சேர்ந்தவர் என்று அறிந்தபோது சந்தோஷம் அதிகமானது. நானும் ஒரு பத்திரிகையாளனானபோது இதழியலில் என்னுடைய முன்னோடிகளில் அவரும் ஒருவராகிவிட்டார். கல்கியின் நினைவைப் போற்றும் நிகழ்வில் கலந்துகொள்வதையும், அவருடைய கட்டுரை நூல் வெளியீட்டில் பங்கேற்பதையும் பொருத்தமானதாகவே கருதுகிறேன்.

நான் கல்கியை ‘பத்திரிகையுலக முதல் சூப்பர் ஸ்டார்’ என்று வர்ணித்ததில் ஆழமான  அர்த்தம் உண்டு. தமிழ்ப் பத்திரியுலகில் கல்கி கோலோச்சிய கால் நூற்றாண்டுதான் அதன் முதல் பொற்காலம். பலதுறை ஜாம்பவான் எஸ்.எஸ்.வாசனால் வாங்கப்பட்டு, ‘ஆனந்த விகடன்’ புத்தெழுச்சி பெறும் 1931-ல்தான்தான் அதன் விற்பனை 1200 பிரதிகளில் இருந்து 16000 ஆக உயர்ந்தது. வெளியில் இருந்து அதுவரை எழுதிவந்த கல்கி, அதன் பொறுப்பாசிரியராக இணைகிறார். அடுத்து, எஸ்.எஸ்.வாசனுடன் இணைந்து அங்கு கல்கி  பணியாற்றிய 11 ஆண்டுகள்; தொடர்ந்து 1941 முதல் சதாசிவத்துடன் இணைந்து அவர் உருவாக்கிய ‘கல்கி’யில் அவர் மறையும் 1954 வரை பணியாற்றிய 14 ஆண்டுகள்... ஆக இந்தக் கால் நூற்றாண்டு தமிழ் இதழியலும் அதன் வாசகப் பரப்பிலும் பெரும் மாற்றங்களை நிகழ்த்திய முக்கியமான காலகட்டங்களில் ஒன்று.

தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றோடு இந்தக் காலகட்டத்தைப் பொறுத்தினால், இதே காலகட்டத்தில்தான் பெரியாரும் திராவிட இயக்கமும் விஸ்வரூபம் எடுக்கிறார்கள். நீதிக் கட்சி சிதைந்து திராவிடர் கழகம் உருவெடுக்கிறது. இதே காலகட்டத்தில்தான் திராவிட இயக்கத்தின் மாபெரும் மக்கள் தலைவராக அண்ணா உருவெடுக்கிறார்; 1949-ல் திராவிட முன்னேற்றக் கழகம் பிறக்கிறது. ராஜாஜி அரசியல் வாழ்வின் எழுச்சியும் வீழ்ச்சியுமாக அவருடைய வாழ்வின் உச்சகட்டமாக இந்தக் காலகட்டமே இருக்கிறது. நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம், எல்லோருமே பத்திரிகையையும் எழுத்தையும் முக்கியமான அரசியல் ஆயுதமாக ஏந்தியிருக்கின்றனர். சின்னதும் பெரிதுமாக சுமார் ஐந்நூறுக்கும் மேற்பட்ட பத்திரிகைகள் வந்துகொண்டிருந்த இந்தக் காலகட்டத்தில் தமிழ்நாடு தீவிரமாகவே வாசித்திருக்கிறது. 1953-ல் இந்தியாவிலேயே ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் அதிகம் விற்கும் இதழாக ‘கல்கி’ உருவெடுத்தபோது, 71 ஆயிரம் பிரதிகள் அது விற்றிருக்கிறது. தமிழ் பேசும் மக்களின் ஜனத்தொகை அக்காலகட்டத்தில் இரண்டு கோடி சொச்சம் என்பதையும், அன்றைக்கு நூற்றுக்கு நாற்பது பேர்தான் படிப்பில் அடியெடுத்துவைப்பதற்கான கட்டமைப்பே தமிழ்நாட்டுப் பள்ளிக்கூடங்களில் இருந்தது என்பதையும் நாம் இங்கே நினைவில் கொண்டால், கல்கியின் சாதனை எத்தகையது என்பது புரியவரும்.

கல்கியின் ஆகிருதிமிக்க அந்த எழுத்துகள், இன்றைக்கும் செல்வாக்கு செலுத்துகின்றன. இந்தியாவின் பெரிய புத்தகக் காட்சிகளில் ஒன்றான, இந்தச் சென்னைப் புத்தகக்காட்சியிலும் கல்கியின் புத்தகங்கள் விற்றுத் தீர்கின்றன. கல்கியின் புனைவுகளை அவருடைய பத்திரிகை எழுத்தின் நீட்சியாகவே நான் பார்க்கிறேன். எழுநூறுக்கும் மேற்பட்ட அரங்குகள் நிறைந்த இந்தப் புத்தகக் காட்சியில், குறைந்தது நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகளில் அவருடைய புத்தகங்கள் இருந்தன. பத்துக்கும் அதிகமான பதிப்பகங்கள் அவருடைய புகழ்பெற்ற ‘பொன்னியின் செல்வன்’ புதினத்தை பதிப்பித்துக்கொண்டே இருக்கின்றன. கல்கியின் கட்டுரை நூல்களும் அவர் மறைந்து அறுபதாண்டுகளுக்குப் பிறகும் தொடர்ந்து பதிப்பிக்கப்படுகின்றன; வாசிக்கப்படுகின்றன.

ஆளுமைகளைக் கொண்டாடுவதில் தமிழ்ச் சமூகம் வஞ்சனை வைக்காது என்றாலும், எந்த இடத்திலும் சம்பந்தப்பட்ட ஆளுமையின் முழு ஆகிருதியோடு அது அங்கீகரிக்கவோ, போற்றவோ இன்னும் பழகவில்லை என்பதையும் சுட்டிக்காட்டத்தான் வேண்டும். மறைந்த முதல்வர் கருணாநிதியைப் பற்றிப் பேசுகையில், ‘கலைஞரைப் போலக் கடின உழைப்பாளி கிடையாது’ என்று மெச்சி அவர் கதையை முடிப்பதுபோலத்தான். ஜனநாயக அரசியலில் தொடர்ந்து அறுபதாண்டு காலம் - தன்னுடைய மரணம் வரையில் ஆட்சி மன்றத்துக்குத்  தேர்ந்தெடுக்கப்பட்டவரை, தமிழ்நாட்டின் மிக நீண்ட நாள் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், நவீன தமிழகத்தின் சிற்பிகளில் ஒருவர் என்கிற அடையாளத்துக்குரியவரை ஒரு உடலுழைப்புத் தொழிலாளியின் சிறப்பைக் கூறும் வாசகத்தோடு வரையறுப்பதானது அவருக்கு முழு மரியாதை செய்வதாகாது.

கல்கி போற்றப்படுகிறார். எதற்காக? அவருடைய எழுத்துகளுக்காக! ஆனால், அது மட்டுமா கல்கி? ஒரு வெற்றிகரமான வெகுஜன எழுத்தாளர், பத்திரிகையாளர் என்பதோடு, கல்கியிடம் நாம் போற்ற வேண்டியதும், நினைவுகூர வேண்டியதும், கவனிக்கத் தவறியதுமான மிக முக்கியமான அம்சம் என்று நான் கருதுவது, தனித்துவமிக்க அவருடைய பத்திரிகையாசிரியர்த்துவம் - எடிட்டர்ஷிப். ஜனநாயகத்திலும், அரசியல் என்று தான் நம்பிய கொள்கையிலும் அவர் காட்டிய உறுதி. கடந்துவந்த காலங்களைவிடவும் கல்கி இன்று கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறார் என்று கருதுகிறேன்.

இன்றைக்கு இந்தியா முழுக்க பத்திரிகைகள் சரிந்துகொண்டிருக்கின்றன; குறிப்பாக, பருவ இதழ்கள் செல்வாக்கிழக்கின்றன; பல இதழ்கள் மூடப்படுகின்றன. கல்கியின் காலத்தில் இல்லாத பெரும் எழுத்தறிவுமிக்க கூட்டம், குக்கிராமங்களையும் சென்றடையக் கூடிய போக்குவரத்து வலை, கடைசி வாசகனுக்கும் பத்திரிகை வெளியாவதைத் தெரிவிக்கும் வசதி,  மேம்பட்ட நவீன தொழில்நுட்பம், பெரும் முதலீடுகள்… இவ்வளவு இருந்தும் பத்திரிகைகள் சரியக் காரணம் என்ன? என்னென்னமோ காரணம் சொல்கிறார்கள்; நான் மிக முக்கியமாக நினைப்பது பத்திரிகையாசியர் படுகொலைகள் - அதாவது பத்திரிகைகளில் ‘ஆசிரியர்’ என்ற பணியிடத்துக்கான செல்வாக்கின் வீழ்ச்சி - இதைத் தொடர்ந்தே பத்திரிகைகள் சாகின்றன.

ஆகப் பெரும்பாலான பத்திரிகை நிறுவனங்கள் இன்றைக்குப் பத்திரிகையின் பெயர் - பிராண்ட் - இருந்தால் போதும், சந்தைப்படுத்திவிடலாம் என்று நினைக்கின்றன. என்னிடம் பல நூறு கோடி இருக்கிறது. அதனால் பல கப்பல்களை வாங்கிவிடுவேன். அதற்கு கேப்டன் என்று ஒருவர் தேவையில்லை அல்லது கேப்டனுக்கு முற்றதிகாரங்கள் தேவையில்லை என்று ஒரு கப்பல் நிறுவனம் முடிவெடுப்பதற்கு ஒப்பானதுதான் இது. அப்படி முடிவெடுக்கப்பட்ட கப்பல்கள் கதி என்னவாகும்? பத்திரிகைத் துறையில் ஆசிரியர்களின் எல்லைகளை மட்டுப்படுத்துவதானது ஒட்டுமொத்த ஆசிரியர் இலாகாவின் மீதான தாக்குதல்தான். விவசாயத்தில் இருந்துகொண்டே ஒரு பண்ணையாளர் விவசாயிகளுக்கு எதிராகச் சிந்திப்பதற்கு ஒப்பானது இது. வெள்ளாமை  என்னவாகும்?

இன்றைக்கு இந்தியா முழுக்க பத்திரிகைகள் சரிந்துகொண்டிருக்கின்றன; குறிப்பாக, பருவ இதழ்கள் செல்வாக்கிழக்கின்றன; பல இதழ்கள் மூடப்படுகின்றன. கல்கியின் காலத்தில் இல்லாத பெரும் எழுத்தறிவுமிக்க கூட்டம், குக்கிராமங்களையும் சென்றடையக் கூடிய போக்குவரத்து வலை, கடைசி வாசகனுக்கும் பத்திரிகை வெளியாவதைத் தெரிவிக்கும் வசதி,  மேம்பட்ட நவீன தொழில்நுட்பம், பெரும் முதலீடுகள்… இவ்வளவு இருந்தும் பத்திரிகைகள் சரியக் காரணம் என்ன? என்னென்னமோ காரணம் சொல்கிறார்கள்; நான் மிக முக்கியமாக நினைப்பது பத்திரிகையாசியர் படுகொலைகள் - அதாவது பத்திரிகைகளில் ‘ஆசிரியர்’ என்ற பணியிடத்துக்கான செல்வாக்கின் வீழ்ச்சி - இதைத் தொடர்ந்தே பத்திரிகைகள் சாகின்றன.

ஆகப் பெரும்பாலான பத்திரிகை நிறுவனங்கள் இன்றைக்குப் பத்திரிகையின் பெயர் - பிராண்ட் - இருந்தால் போதும், சந்தைப்படுத்திவிடலாம் என்று நினைக்கின்றன. என்னிடம் பல நூறு கோடி இருக்கிறது. அதனால் பல கப்பல்களை வாங்கிவிடுவேன். அதற்கு கேப்டன் என்று ஒருவர் தேவையில்லை அல்லது கேப்டனுக்கு முற்றதிகாரங்கள் தேவையில்லை என்று ஒரு கப்பல் நிறுவனம் முடிவெடுப்பதற்கு ஒப்பானதுதான் இது. அப்படி முடிவெடுக்கப்பட்ட கப்பல்கள் கதி என்னவாகும்? பத்திரிகைத் துறையில் ஆசிரியர்களின் எல்லைகளை மட்டுப்படுத்துவதானது ஒட்டுமொத்த ஆசிரியர் இலாகாவின் மீதான தாக்குதலும்தான். விவசாயத்தில் இருந்துகொண்டே ஒரு பண்ணையாளர் விவசாயிகளுக்கு எதிராகச் சிந்திப்பதற்கு ஒப்பானது இது. வெள்ளாமை  என்னவாகும்?

அடிப்படையில் ஒவ்வொரு பத்திரிகையும் ஒரு மக்கள் இயக்கம்; சமூகத்தில் ஏதோ ஒரு மக்கள் திரளை அது பிரதிநிதித்துவப்படுத்துகிறது; அவர்களுடைய அபிலாஷைகளை போஷித்து வளர்க்கிறது; தன்னுடைய மக்களுடைய குறிப்பிட்ட தேவையை அந்தப் பத்திரிகை உணர்ந்து, அதை நிறைவேற்றும் வரையில்தான் அது உயிரோடு இருக்க முடியும். பத்திரிகை நிறுவனங்களும் வணிகம் சார்ந்தவை என்றாலும், ஒரு பத்திரிகை நிறுவனம் முழு வணிக நிறுவனம் கிடையாது. அப்படி ஒரு பத்திரிகை தன்னையே நினைத்துக்கொள்ளத் தொடங்கும்போது அதன் அழிவு தொடங்குகிறது. பத்திரிகை துறை முழுக்க பணமயமாவதன் ஆபத்து என்னவென்றால், அது ஒரு மக்கள் இயக்கம் என்பதை மறந்துவிட்டு, தன்னை வெறும் பணம் சம்பாதித்துத் தரும் ஒரு தகவல் சொல்லும் சாதனமாகக் கருதிக்கொள்ளலாவதாகும். ஆக, பத்திரிகை அலுவலகத்தில் பத்திரிகையாசிரியரைவிடவும், பணத்தின் பெயரால் அமர்த்தப்படும்  நிர்வாகிகள் முக்கியத்துவம் படைத்தவர்களாகிறார்கள். பத்திரிகையாசிரியர்கள்  சுயாட்சியை இழக்கும்போது எல்லா அழிவுகளும் ஒன்றுகூடலாகின்றன; பத்திரிகைகள் படிப்படியாக ஆவியைவிட ஆரம்பிக்கின்றன.

இன்றைய பத்திரிகை நிறுவனங்கள் பெரிதும் விரும்பும் ‘அரசியலற்ற பத்திரிகையாளர்’ என்ற இடத்தில் தன்னை இருத்திக்கொண்டவர் அல்ல கல்கி. பத்திரிகைக்கு வருவதற்கு முன்பே ‘நான் யார்?’ என்பதை அவர் உணர்ந்திருந்தார்; அந்த அடையாளத்தைப் பிரகடனப்படுத்தியபடியே அவருடைய வருகை அமைந்தது; அவர் - காந்தியர். தன்னுடைய இருபது வயதில் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு, நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் தன்னை அர்ப்பணித்துக்கொண்ட காந்தியர் கல்கி. அவருடைய முழு வாழ்வையும் இந்த அடையாளமும், அது சார்ந்த விழுமியங்களும்தான் வழிநடத்தின. என்னைப் பொறுத்த அளவில் இதுதான் சரி என்பேன். என்னைப் பொறுத்த அளவில் எந்த ஒரு பிரதியும் அரசியலற்றது அல்ல; பிள்ளையார் கோயில் திருவிழாவுக்கு அடிக்கப்படும் நோட்டீஸும் விதிவிலக்கு அல்ல. நம் எல்லோருக்குமே இந்த உலகம் சார்ந்து, நம்முடைய சமூகம் சார்ந்து  நிச்சயமாக ஒரு பார்வை இருக்கிறது; அது சார்ந்த ஒரு சார்பு இருக்கிறது. அதைக் கட்சிசார் அரசியல் சார்பாகப் புரிந்துகொள்வது அரைவேக்காடான பார்வை. விழுமியங்கள்சார் சார்பாக அதைச் சொல்லலாம். அப்படியென்றால், உங்களுடைய சார்பை நீங்கள் பகிரங்கமாக அறிவித்துவிட்டே செய்யுங்கள் என்கிறேன்.

ஐயா, நான் ஒரு காந்தியன்... இந்த அடையாளத்துடனேயே நான் எழுதுகிறேன். காந்தியம் என்று இங்கே நான் சொல்லும்போது, இதை காங்கிரஸ் அல்லது காங்கிரஸ் போன்ற ஒரு கட்சி சார்போடு நீங்கள் பொருத்திப் பார்த்தால் அது உங்களுடைய அபத்தம்; மாறாக, என்னளவிலான காந்தியம் என்பது ‘கடையனுக்கும் கடைத்தேற்றம்’ எனும் அதன்  சாராம்சத்தில் நிலை கொண்டிருக்கிறது; அதற்கான வழிமுறையாக அதிகாரப்பரவலாக்கலை நம்புகிறது; பயணத்துக்கான கட்டுப்பாட்டு சக்தியாக சத்தியத்தையும் அகிம்சையையும் அது பிணைத்துக்கொண்டிருக்கிறது. ஆக, இப்படி நான் ‘காந்தியன்’ என்று என்னை  அடையாளப்படுத்திக்கொள்ளும்போது என்னையும் என் எழுத்துகளையும் என் வாசகர்கள் கூடுதல் எளிமையோடு புரிந்துகொள்ள முடியும் என்று நம்புகிறேன்; எனை நோக்கி அவர்கள் கேள்வி கேட்க இது வசதி என்று நம்புகிறேன்; முக்கியமாக நான் சில விழுமியங்களுக்குப் பொறுப்பெடுத்துக்கொள்கிறேன்; அதுதான் என்னுடைய தார்மிகம்; இந்த விழுமியங்களிலிருந்து நான் காந்தியையும் விமர்சிக்கலாம்; வாசகர்கள் என்னையும் விமர்சிக்கலாம். ஏனென்றால், சில விழுமியங்களுக்கு, நம்முடைய கருத்துகளுக்கு நாம் பொறுப்பெடுத்துக்கொள்கிறோம். ‘நான் எதுவும் சாராதவன்’ என்பது வசதியான பதுங்கல்; அனுகூலங்களைப் பாதுகாத்துக்கொள்வதற்கான அச்சம்; பத்திரிகையாசிரியர்களோ, பத்திரிகையதிபர்களோ, பத்திரிகை நிறுவனங்களோ அப்படி இருந்திட முடியாது. உங்களுக்கு என்று ஒரு கருத்து இல்லாவிட்டால் ஏன் பத்திரிகை துறைக்கு வருகிறீர்கள்? 

கல்கி கைகொண்ட வாழ்வின் விழுமியங்கள் என்னை வாழ்க்கையைப் பல முறை தூக்கிப்பிடித்திருக்கின்றன. ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த அந்த மனிதர், இருபது  வயதில் படிப்பை விட்டுவிட்டு நாட்டுக்காகப் போராடி ஒரு வருடம் சிறை செல்கிறார். அடுத்து திருமணமாகி குடும்பஸ்தனாகி மீண்டும் போராட்டம்; மீண்டும் ஆறு மாதம் சிறைவாசம். பிற்பாடு, ‘ஆனந்த விகடன்’ போன்ற ஒரு நிறுவனத்தில் பொறுப்பாசிரியர் பணி, நல்ல வாழ்க்கை; ‘போராடப்போனால் வேலை பறிபோகும்’ என்கிறார் எஸ்.எஸ்.வாசன்; துணிந்துதான் வேலையை உதறிவிட்டு மூன்று மாதம் சிறை தண்டனையை ஏற்கிறார் கல்கி. நினைவில் கொள்ளுங்கள், தன்னுடைய இருபதுக்கும் நாற்பதுக்கும் இடையில் அவர் விரும்பியேற்ற போராட்ட வாழ்வு இது. இந்தத் தார்மீகம்; அதுதான் கல்கியின் தனித்துவம் என்று நினைக்கிறேன்.

காந்தியிடம் அவரது அரசியலின் முக்கிய இலக்குகள் என்னவென்று கேட்டபோது, பிரிட்டீஷாரை வெளியேற்றுவதை அவர் இலக்காகச் சொல்லவே இல்லை. மூன்று விஷயங்களை இலக்குகளாகக் குறிப்பிட்டார். முதலாவது, இந்து முஸ்லிம் ஒற்றுமை; இரண்டாவது, தீண்டாமை ஒழிப்பு; மூன்றாவது, சுதேசி. ஏனென்றால், ஒரு ராஜதந்திரியான காந்தி இந்தியாவை விட்டு பிரிட்டீஷார் வெளியேறுவது கால கட்டாயம் என்றே கருதியிருப்பார். ஆனால், ‘இந்தியா என்ற கருத்து - இந்தியா என்கிற நாடு’ நீடிக்க மேற்கண்ட மூன்றும் என்றைக்கும் முக்கியம்; இதற்காக இந்தியராக தன்னை உணரும் ஒவ்வொருவரும் உழைப்பது முக்கியம் என்பதையே காந்தி சொல்லாமல் சொல்லிச் சென்றார்.

ஒரு காந்தியரான கல்கி காந்தி சொன்ன மூன்று இலக்குகளுக்கும் தன் இதழியலையும் வாழ்க்கையையும் வாகனமாக்கினார். ஒரே ஒரு விஷயத்தை மட்டும் சுட்டிக்காட்டலாம் என்று நினைக்கிறேன். 1942 மே 16 தேதிய ‘கல்கி’ இதழில், ‘வடநாட்டுத் தலைமை’ என்ற கட்டுரையில் அவர் எழுதுகிறார். “வட இந்தியத் தலைவர்கள் போட்ட தேசியத் திட்டங்களை எல்லாம் நாம் நன்கு நடத்திவந்திருக்கிறோம். எந்த தேசியத் திட்டத்திலும், நாம் எந்த வட இந்திய மாகாணத்துக்கும் பின்வாங்கிவிடவில்லை. அநேகமாக எல்லாத் திட்டங்களிலும் முதன்மையே வகித்திருக்கிறோம்... இப்படி எல்லாம் ஒவ்வொரு திட்டத்தையும் நிறைவேற்றிவந்திருக்கும் நமக்கு, வட இந்தியத் தலைவர்களைப் பார்த்து, ‘சுயராஜ்யம் எங்கே? ஏன் இன்னும் கிடைக்கவில்லை?’ என்று கேட்கும் பாத்யதை உண்டு... நமது வட இந்தியத் தலைவர்கள் போடும் சுயராஜ்ய போர்த்திட்டத்திலோ, அதை நடத்தும் முறையிலோ ஏதோ பெரிய குறை இருக்கிறது... ஆமாம், ஒரு முக்கியமான விஷயத்தில் வட இந்தியத் தலைவர்கள் குருட்டுத்தனமான பிடிவாதத்தில் இருந்துவந்திருப்பதானலேயே நமது சுயராஜ்ய முயற்சிகள் எல்லாம் நிஷ்பலனாகப் போயிருக்கின்றன. அது ஹிந்து - முஸ்லிம் பிரச்சினைதான்... வட நாட்டில் ஹிந்து - முஸ்லிம் சச்சரவு காரணமாக ஏற்படும் பின்னடைவுகளுக்குத் தென்னாட்டில் நாம் இனிமேலும் ஆளாக முடியாது. நம்முடைய நன்மைகளை நாம் பார்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் இப்போது நேர்ந்துவிட்டது. தீர்க்கதிருஷ்டி வாய்ந்த நமது ஒப்பற்ற தலைவர் ராஜாஜியை ஒரு முகமாகப் பின்பற்றுவதே நமது கடமை...”

கல்கியைக் கவனியுங்கள். காந்திக்கும் சேர்த்துதான் அவர் அறிவுரை சொல்கிறார். ஜப்பான் சென்னையைத் தாக்கலாம் என்றிருந்த சூழலில், தென்னிந்தியாவில் காங்கிரஸும் முஸ்லிம் லீக்கும் சேர்ந்து பணியாற்றுவது; வட இந்தியாவில் தொடர்ந்தும் சச்சரவுகள் நீடிப்பதைத் தடுக்க முஸ்லிம் லீக் கேட்பதுபோல பாகிஸ்தான் பிரிவினைக்கு சம்மதித்துவிடுவது என்று காங்கிரஸுக்கும் காந்திக்கும் ராஜாஜி யோசனை சொன்ன சமயம் அது. தன்னுடைய ஆசானின் வழியிலேயே கல்கி இதை எழுதுகிறார்.

பாகிஸ்தான் விவகாரத்திலோ, காஷ்மீர் விவகாரத்திலோ ராஜாஜியின் தாராளமான கருத்துகளை ஆதரித்துப் பேசுவோரும்கூட, ‘நடைமுறை சார்ந்து சிந்திப்பவர்’ என்று ராஜாஜியின் இந்தப் பார்வையைக் குறுக்கிவிடுவதுண்டு. அது குள்ளப் பார்வை. பாகிஸ்தான் விவகாரத்திலும் சரி, காஷ்மீர் விவகாரத்திலும் சரி; ராஜாஜி தீர்வை முன்வைத்துப் பேசியபோது மிக முக்கியமான ஒரு தார்மிகக் கேள்வியை எழுப்பினார், “நான் சுய நிர்ணய உரிமைக்காகப் போராடியவன். எப்படி இன்னொருவரின் சுய நிர்ணய உரிமையை என்னால் மறுக்க முடியும்?”

ராஜாஜியின் அதே தார்மீகத்தைத்தான் கல்கியும் பிரதிபலித்தார். தீண்டாமை ஒழிப்புக்காக காந்தியை மடாதிபதிகள் எதிர்த்தபோது, மடாதிபதிகளுடன் மோதியவர் கல்கி. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் அல்ல; ஏன் மொத்த இந்து மதத்துக்கும் அல்ல; அட, ஒரு சாதிக்கும்கூட அல்ல; வெறும் அவரவர் மடங்களுக்கான பிரதிநிதிகளே என்று மடாதிபதிகள்; எதிரே நிற்கும் காந்தி யார் தெரியுமா என்று மடாதிபதிகளுக்கு அவர்களுக்கான இடத்தைக் காட்டியவர். தன்னாலான அளவில் ராஜாஜியோடு இணைந்து கல்கி தீண்டாமை ஒழிப்புச் செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். சுதேசி என்பது சுயராஜ்ஜியம்தான் என்பதில் அவருக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

இந்தத் தார்மீகத்தைத்தான் கல்கியிடமிருந்து இன்றைய பத்திரிகை உலகம் மீள எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த 2020-ல்  கல்கி இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்? இன்று குடியரசு நாள். நாடு இன்று பெரிதாகப் பேசிக்கொண்டிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை பற்றிப் பேசாமல் இந்நாளைக் கடக்க முடியாது. சரி, கல்கி குடியுரிமைத் திருத்தச் சட்டம் தொடர்பில் என்ன முடிவை எடுத்திருப்பார்? தன்னுடைய ஆசிரியர் ராஜாஜியின் வழியைத்தான் சமூகத்துக்கு அவர் போதித்திருப்பார். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை இன்று ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் பலரும் ஏதோ தம்மை ஒரு சட்ட வல்லுநர்போல இருத்திக்கொண்டு விவாதித்துவருவதை நாம் பார்க்கிறோம். ஆனால், ஒரு சட்ட வல்லுநரும் கல்கியின் ஆசானுமான ராஜாஜி குடியுரிமையை ஒரு தேசம் எந்த அளவுகோலைக் கொண்டு அணுக வேண்டும் என்று கூறினார் தெரியுமா? ‘அகதிகள் விவகாரத்தை அணுகும்போது, ஒரு நாடு கடைப்பிடிக்க வேண்டிய அளவுகோல் காருண்யம்’ என்று கூறினார் ராஜாஜி.

கருணை என்கிற ஒரு மதிப்பீடு போதும். இந்த உலகின் எல்லாப் பிரச்சினைகளையும் எளியோரின் பக்கம் நின்று நாம் சிந்திக்க! காந்தியப் பார்வை என்பது அதுதான்!

என்னுடைய எல்லா பார்வைகளும் கல்கியின் பார்வைகளோடு ஒத்துப்போவதில்லை; நிறைய அவரோடு மாறுபடுபவன் நான். ஆனால், கல்கி ஒரு பத்திரிகையாசிரியராகத் தான் உண்மை என்று நம்பிய விழுமியங்கள் மீது கொண்டிருந்த பற்றுறுதியை என் இறுதிக்காலம் வரை என் பணியிலும் வாழ்விலும் கடைப்பிடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

இப்படியொரு நிகழ்வை ஒழுங்கமைத்து நிகழ்வுக்கு என்னை அழைத்த ‘கல்கி குழும’த்தினர் திரு.ராஜேந்திரன், திருமதி. சீதா ரவி, திருமதி. லட்சுமி நடராஜன் மூவருக்கும் என் நன்றியை உரித்தாக்குவதோடு எதிர்வரும் காலத்தில், ‘கல்கி நிறுவனம்’ தன் பழைய ஆகிருதியை மீண்டும் அடைய வேண்டும் என்ற வாழ்த்துகளை அதற்குக் கூறுவதோடு, ‘கல்கி நினைவு  அறக்கட்டளை’ இங்கே பல துறைகள் சார்ந்து விருதுகளை வழங்கியது - அது  இதுவரை வழங்கிவரும் விருதுகளோடு, கல்கி பெயரில் ஒரு விருதை நிறுவி பத்திரிகையாளர்களுக்கு ஆண்டுதோறும் அதை அளிக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்து விடைபெறுகிறேன். நன்றி!

-    ஜனவரி, 2020, ‘கல்கி நினைவு நிகழ்ச்சி’ உரைக்கான எழுத்து வடிவ சாராம்சம்

1 கருத்து:

  1. As usual, Excellent writing! I am glad to see that you have a set principles and strive to follow it throughout lifetime. We Tamils need a writer like you to keep reminding us the principles (It is hard to find one in the Press/Media). Please keep writing more.

    பதிலளிநீக்கு