வரலாற்றில் நம்முடைய இடம் எது?

  
                                            பெர்லின் சுவர் தகர்க்கப்பட்டபோதோ, சோவியத் ஒன்றியம் சிதறுண்டபோதோ, உங்களால் என்ன செய்திருக்க முடியும்? ஒன்றுமே செய்திருக்க முடியாமல் போயிருக்கலாம். ஆனால், நீங்கள் அப்போது என்ன நினைத்தீர்கள் என்பதும் என்ன சொன்னீர்கள் என்பதும் முக்கியம். காலம் அதைக் குறித்து வைத்திருக்கும்.
 வரலாறு என்பது எப்போதுமே இப்படிதான். அரபு உலகில் இப்போது அதுதான் நடந்துகொண்டு இருக்கிறது. இந்த எளிய புரிதல் இந்தியாவுக்கு இருக்கிறதா?

                                              துனிஷியாவின் ஸைன் அல் எபிடைன் பென் அலி; எகிப்தின் ஹோஸ்னி முபாரக்; லிபியாவின் மம்மர் கடாபி... இவர்கள் எவருமே மேற்கு உலகுக்கு எதிரிகள் அல்லர்; குறிப்பாக அமெரிக்காவுக்கு!
 
                                            உலகின் பெட்ரோலியச் சுரங்கமான அரபு உலகின் இத்தகைய சர்வாதிகாரிகளே - மக்கள் நலனுக்கு எதிரானவர்களே - தங்களுடைய பதவியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக மேற்கு உலகின் அடிவருடிகளாக இருப்பவர்களே - அமெரிக்க, ஜரோப்பிய ஆளும் வர்க்கத்தின் நெருக்கமான நண்பர்கள். ஆகையால், மத்திய கிழக்கின் மக்கள் எழுச்சிக்கு ஆதரவாக மேற்கு உலகம் ஆடும் ஆட்டம் ஒரு முற்போக்கு நடவடிக்கையோ, தன்னெழுச்சி நடவடிக்கையோ அல்ல; அது ஒரு நிர்ப்பந்தம். அரபு மக்களின் வெறுப்பிலிருந்து தப்பித்துக்கொள்வதற்கும் எண்ணெய் அரசியல் தங்கள் பிடியிலிருந்து கை நழுவிடாமல் இருப்பதற்குமான கடைசி வழி. அதேசமயம், மனிதாபிமான அடிப்படையிலும்  ஜனநாயக அடிப்படையிலும்  பார்த்தால், கால தாமதமான நடவடிக்கை!
 
                                            இத்தகைய சூழலில் இந்தியா என்ன செய்ய வேண்டும்? சர்வாதிகாரத்துக்கும் அடக்குமுறைக்கும் எதிராகக் குரலாவது கொடுத்து இருக்க வேண்டாமா?  நாம் தொடர்ந்து எதிர்மறையாக - மௌனத்தையே பதிலாகத் தந்துகொண்டு இருக்கிறோம்.  எகிப்து புரட்சியின்போது, இந்தியாவின் மௌனம் குறித்தும் அரசின் நிலைப்பாடு குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது நம்முடைய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா சொன்னார்: ‘‘இத்தகைய சூழல்களின்போது நாம் நிலைப்பாடு எடுப்பதில்லை.’’ எண்ணிப் பாருங்கள், சுதந்திர எகிப்தியர்கள் இந்தியர்களை வரலாற்றில் எந்த இடத்தில் வைப்பார்கள்? ஐ.நா. சபை லிபியா தொடர்பாக தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் புறக்கணித்த இந்தியாவின் தூதர் ஹர்தீப் சிங் சொன்னார்: ‘‘இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கான போதிய காரணங்கள் சொல்லபடவில்லை.’’ எண்ணிப் பாருங்கள், எதிர்வரும் சுதந்திர லிபியா இந்தியாவை வரலாற்றில் எந்த இடத்தில் வைக்கும்?

                                              இப்போது சீனாவில் சானியா நகரில நடைபெற்ற ‘பிரிக்ஸ்’ (பிரேசில், ரஷ்யா, சீனா, தென் ஆப்பிரிக்கா கூட்டமைப்பு) மாநாட்டிலும் பிரதமர் மன்மோகன் சிங் வழக்கம்போல மௌனத்தை உதிர்த்துவிட்டு வந்து இருக்கிறார். இதோ, ஏமனிலும் சிரியாவிலும் ஜோர்டானிலும் படுகொலைகள் தொடங்கிவிட்டன. அங்கிருந்து வரும் மரண ஓலத்துக்கும் நாம் எதிர்க்குரல் கொடுக்கப்போவதில்லை.
 
                                            அன்று சோவியத் ஒன்றியம் ஆப்கனை ஆக்கிரமித்தபோதும் சரி; நேற்று ஈழத்தில் தமிழினத்தை ராஜபக்ஷ கொன்றழித்தபோதும் சரி; இன்று ஏமனிலும் சிரியாவிலும் நடக்கும் படுகொலைகளின்போதும் சரி; நம்முடைய நிலைப்பாடு மௌனம்தான் என்றால் வரலாற்றில் நம்முடைய இடம் எது? கை கட்டி, வாய்ப் பொத்தி வேடிக்கை பார்த்திருப்பதுதான் நம்முடைய நிலைப்பாடு என்றால், ஜ.நா. சபையின் பாதுகாப்பு அவையில் நமக்கு எதற்கு நிரந்தர இடம்? 
நன்றி: ஆனந்த விகடன் 2011

1 கருத்து: