சமச்சீர்க் கல்வி எனும் பெருங்கனவு

அதிர்ச்சியாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கிறது, நம்முடைய அரசியல்வாதிகளால் மிகப் பெரிய விஷயங்களில்கூட எவ்வளவு சர்வ சாதாரணமாகவும் வேகமாகவும் முடிவுகளை எடுக்க முடிகிறது என்பதைப் பார்க்கும்போது!
புதிதாகப் பொறுப்பேற்ற தமிழக அமைச்சரவையின் முதல் கூட்டம் அது. சில மணி நேரங்கள் மட்டுமே கூட்டம் நடக்கிறது. விவாதங்கள் ஏதும் இல்லை. கூட்டத்தில் பல முக்கியமான முடிவுகள் எடுக்கப்படுகின்றன. நாடு குடியரசான காலம் தொட்டு முதல் முறையாக மேட்டூர் அணையில் முன்கூட்டியே தண்ணீர் திறந்துவிடுவது என்பது முதல், சமச்சீர்க் கல்விப் பாடத்திட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்திவைப்பது என்பது வரை!
ஒரு பாடத்திட்டம் என்பது வெறும் புத்தகங்கள் அல்ல; ஒரு தலைமுறையின் தலைவிதியை நிர்ணயிக்கும் கருவி. ஆனால், நாம் எந்த அளவுக்கு அதைப் புரிந்துகொண்டு இருக்கிறோம்?
உலகிலேயே விசித்திரமான கல்விமுறை கடைப்பிடிக்கப்படும் இடம் தமிழகம்தான் என்றால், நீங்கள் நம்புவீர்களா? அதுதான் உண்மை!
உலகில் தமிழகத்தைப்போல, ஒரே அரசின் கீழ் 4 வகையான கல்வி வாரியங்கள் வேறு எந்த நாட்டிலும் கிடையாது. இந்தியாவின் பிற மாநிலங்களிலும்கூட மாநில வாரியம் (ஸ்டேட் போர்ட்), மத்திய வாரியம் (சிபிஎஸ்சி) என இரு வாரியங்கள்தான் செயல்படுகின்றன. நிறைய காசு உள்ளவனுக்கு ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள், கொஞ்சம் குறைவாக உள்ளவனுக்கு மெட்ரிக் பள்ளிகள், அடுத்த நிலையில் உள்ளவனுக்கு ஓரியன்டல் பள்ளிகள், ஒன்றுக்குமே வழி இல்லாதவனுக்கு அரசுப் பள்ளிகள் என்னும் ‘சமூக நீதி’யை நாம் மட்டுமே கடைப்பிடிக்கிறோம்.
இந்த அநீதியான சூழல் மாற்றப்பட வேண்டும்; எல்லாக் குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான கல்வியைக் கொண்டுவரப்பட வேண்டும் என்ற நோக்கிலேயே ‘சமச்சீர்க் கல்வி’ எனும் கோரிக்கை முளைத்தது.
சமச்சீர்க் கல்வி என்பது தி.மு.க-வின் கண்டுபிடிப்பு அல்ல. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வியாளர்கள் வலியுறுத்திவரும் ‘பொதுப் பள்ளிமுறை’ கோரிக்கை அது. கடந்த 2006 சட்டப்பேரவைத் தேர்தலின்போது, தேர்தல் அறிக்கையில் இந்தக் கோரிக்கையைச் சேர்க்கச் சொல்லி பல்வேறு கட்சிப் பிரதிநிதிகளையும் சந்தித்தனர் கல்வியாளர்கள். பொதுப் பள்ளிமுறை கோரிக்கை தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் ‘சமச்சீர்க் கல்வி’ என்ற பெயரில் இடம் பெற்றது இப்படிதான்!
ஆட்சிக்கு வந்ததும் எழுத்தாளர்கள், கல்வியாளர்களின் தொடர் வலியுறுத்தல்களால், சமச்சீர்க் கல்வி குறித்து ஆராய பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் எஸ். முத்துக்குமரனை நியமித்தது தி.மு.க. அரசு. அரசுப் பள்ளிகளில் கட்டமைப்புகளைப் பலப்படுத்துவதில் தொடங்கி தாய்மொழிக் கல்வி வரை 109 பரிந்துரைகளோடு அரசு கொண்டுவர வேண்டிய சமச்சீர்க் கல்விமுறைக்கு வழிகாட்டினார் முத்துக்குமரன். அந்த அறிக்கையை வாங்கவே தயக்கம் காட்டிய அரசு, கடைசியில் அதில் இருந்த ‘எல்லோருக்கும் ஒரே பாடத்திட்டம்’ என்கிற பரிந்துரையை மட்டும் ஏற்றது.
நல்ல சூழலில் பள்ளிக்கூடங்கள், போதுமான அளவுக்கு ஆசிரியர்கள், தாய்மொழிக் கல்வி, குழந்தைகளுக்கு ஏற்ற மொழியில் பாடத்திட்டம், குழந்தைகள் பங்கேற்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் கற்பித்தல் முறை, எல்லோருக்கும் ஒரே கல்வி என்னும் சமச்சீர் பெருங்கனவு வெறுமனே ஒரே வகையான பாடப்புத்தகங்கள் என்பதாகச் சுருங்கிப்போனது!
நம் கல்விமுறையில் உச்சபட்ச அதிகாரம் மிக்கவை பாடப்புத்தகங்கள்தான். ஆகையால், இதுவேகூட ஒரு நல்ல தொடக்கம்தான் என்று கருதினார்கள் கல்வியாளர்கள். தமிழகத்தில் காலங்காலமாக அரசுக்கு வேண்டிய - கட்டுப்பெட்டித்தனத்திலும் பிற்போக்குத்தனத்திலும் ஊறிய - பேராசிரியர்களே பாடப்புத்தகங்களை உருவாக்குபவர்களாக இருந்து இருக்கிறார்கள். ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, தமிழில் மொழிபெயர்க்கப்படும் முறையே கடைப்பிடிக்கப்பட்டது. முதல் முறையாக சர்வதேச அணுகுமுறையில் கலை, இலக்கியம், அறிவியல், விளையாட்டு என்று பல்வேறு துறையினரும் பங்கேற்ற பாடத்திட்டத் தயாரிப்பு சமச்சீர்ப் பாடப்புத்தகங்கள் மூலம் சாத்தியமானது. இறுக்கமான வடிவைப்பு மாறியது. குழந்தைகளிடம் வாசித்துக் காட்டி, அவர்களுடைய புரிதலுக்கு ஏற்ப மொழிநடை மாற்றப்பட்டது. ஓர் உயரிய இடத்தை நோக்கி நகர்ந்தன நம் பாடப் புத்தகங்கள். ஆனால், கடைசிக் கட்டத்தில் வழக்கமான அரசியல் உள்ளே புகுந்தது. ஒரு மூத்த அமைச்சர் சொன்னார் என்பதற்காக ‘நாட்டுப்புறம்’ என்கிற சொல் ‘நாட்டுப்புரம்’ என்பதாக பாடப்புத்தகங்களில் மாறியது ஓர் உதாரணம். கட்டுப்பெட்டிப் பேராசிரியர்கள் உள்ளே நுழைய, எழுத்தாளர்கள் வெளியேறினர். சமச்சீர்க் கல்விப் பாடத்திட்டம் என்ற பெயரில், பழைய ஆட்களின் பல்லவியே புத்தகங்களில் நிரம்பியது. ஆனாலும், சில மாற்றங்கள் நடந்து இருக்கின்றன என்கிற குறைந்தபட்ச ஆறுதலைதான் இப்போது குலைத்து இருக்கிறது புதிய அரசு!
தமிழகத்தில் அரசியல் காரணங்களுக்காகப் பாடப் புத்தகங்கள் திருத்தப்படுவது இது முதல் முறை அல்ல. சொல்லப்போனால், அது இங்கு ஓர் அரசியல் கலாசாரமாகவே வளர்ந்துவிட்டது. காரணங்கள் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், நாம் மாணவர்களுக்கு எதைத் தரப்போகிறோம் என்பதே கேள்வி!
புளூட்டோ என்பது 1930 முதல் 2006 வரை ஒரு கோள். இப்போதோ ஒரு குறுங்கோள். அதாவது, அது ஒரு கோளே இல்லை. 2006&ல் தயாரிக்கப்பட்ட நம்முடைய பழைய பாடப்புத்தகங்கள் புளூட்டோவையும் சேர்த்து மொத்தம் 9 கோள்கள் என்கின்றன. மீண்டும் பழைய புத்தகங்களைக் கொடுப்பதன் மூலம் புளூட்டோவும் ஒரு கோள் என்று சொல்லப் போகிறோமா?
நீங்கள் எவ்வளவோ படித்தவர்களாக இருக்கலாம். ஆனால், நெகிழி என்றால், பிளாஸ்டிக் என்று தெரியுமா உங்களுக்கு?
நம்முடைய குழந்தைகள் இப்படிப்பட்ட தமிழைத்தான் படிக்கிறார்கள். பழைய பாடப்புத்தகங்கள் பால்வீதியை (மில்கி வே கேலக்ஸி) பால்வெளி அண்டம், பால்வளித் திரல் என்றெல்லாம் குறிப்பிட்டுக் கொன்றன என்றால், புதிய பாடப்புத்தகங்கள் காமராஜரை ‘அரசரை உருவாக்குபவர்’ (கிங் மேக்கர்) என்று கொல்கின்றன!
பன்னெடுங்காலமாக தாய்மொழிக் கல்விக்காகப் பேசிக்கொண்டு இருக்கிறோம் நாம். ஆனால், நம் குழந்தைகளுக்குத் தாய்மொழியில் அவர்களுக்கேற்ற எளிய மொழி நடையில் இன்னும் ஒரு பாடப்புத்தகத்தைக்கூட தர முடியவில்லை நம்மால்!   
தமிழக அரசுக்கு கல்வித் துறை சார்ந்து இப்படி நிறைய சவால்கள், பணிகள் காத்துக் கிடக்கின்றன. ‘சமச்சீர்க் கல்வி’ என்பதற்குப் பாடப் புத்தகங்களைத் தாண்டி முழு அர்த்தம் கொடுப்பதும்கூட அவற்றுள் முக்கியமான பணிகளில் ஒன்று. ஆனால், அந்தப் பணிகளை அரசியலுக்கு அப்பாற்பட்டு கல்வித் துறையை அணுகும் முறையில் இருந்துதான் தொடங்க வேண்டும். அரசியல் பின்புலத்தோடு, கல்வித் துறையை ஆக்கிரமித்து இருக்கும் அதிகார வர்க்கத்தை அகற்றுவதில் இருந்துதான் தொடங்க வேண்டும்!
ஆனந்த விகடன் 2011

1 கருத்து:

  1. //சமச்சீர்க் கல்வி’ என்பதற்குப் பாடப் புத்தகங்களைத் தாண்டி முழு அர்த்தம் கொடுப்பதும்கூட அவற்றுள் முக்கியமான பணிகளில் ஒன்று//

    நல்ல பதிவு சமஸ்!!

    நானும் தற்கால கல்விமுறை சார்ந்த எனது புலம்பல்களை பதிவு செய்துள்ளேன்.

    http://kudimakan.blogspot.com/2011/06/blog-post.html

    பதிலளிநீக்கு