இஸ்ரோ புஸ்...!

ந்திய விஞ்ஞானிகளின் ரகசிய உலகத்தை நாட்டுக்கு லேசாகத் திறந்துகாட்டி இருக்கிறார் மாதவன் நாயர்! 
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) தலைவராக 2003 முதல் 2009 வரை இருந்தவர் மாதவன் நாயர். ‘இஸ்ரோ’வின் 25 செயல்திட்டங்களை வெற்றிகரமாக முன்னின்று வழிநடத்தியவர். ‘பத்ம விபூஷண்’ விருது பெற்றவர்.
கடந்த 2005 -ல் ‘இஸ்ரோ’வின் வணிகப் பிரிவான ‘ஆன்ட்ரிக்ஸ்’, ஏலம் ஏதும் நடத்தாமல் ‘தேவாஸ் மல்ட்டிமீடியா’ என்ற தனியார் நிறுவனத்துக்கு ‘எஸ் பேண்ட்’ அலைக்கற்றையை ஒதுக்கீடு செய்தது. ‘இஸ்ரோ’வில் அறிவியல் பிரிவுச் செயலராகப் பணியாற்றிய டாக்டர் எம்.ஜி.சந்திரசேகரால் தொடங்கப்பட்ட நிறுவனம்தான் ‘தேவாஸ் மல்ட்டி -மீடியா’. இந்த ஒதுக்கீட்டுக்காக ‘ஜிசாட் 6’, ‘ஜிசாட் 6ஏ’ என்ற இரு செயற்கைக்கோள்களை ‘இஸ்ரோ’ விண்ணில் ஏவுவது என்றும் இவற்றின் மூலம் பெறப்படும் அலைவரிசையின் (70 மெகா ஹெர்ட்ஸ்) 90 சதவிகிதத்தை ‘தேவாஸ் மல்ட்டிமீடியா’ 12 ஆண்டுகளுக்குப் பயன்படுத்திக்கொண்டு, கட்டணமாக ரூ.  1,000 கோடி ‘இஸ்ரோ’வுக்குச் செலுத்துவது என்றும் இரு நிறுவனங்களும் ஒப்பந்தம்செய்துகொண்டன.
தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகத்தின் ஆய்வின் கீழ் இந்த ஒதுக்கீடு வந்தபோது, இந்த ஒப்பந்தத்தில் நடந்த முறைகேடுகள் அம்பலமாயின. இதே ‘எஸ் பேண்ட்’ அலைக்கற்றை (15 மெகா ஹெர்ட்ஸ்) பொதுத் துறை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். ஆகியவற்றுக்கு ரூ. 67,719 கோடிக்கு ஒதுக்-கப்பட்ட நிலையில், ‘தேவாஸ் மல்ட்டிமீடியா’ மீது ‘இஸ்ரோ’ காட்டிய கரிசனத்தால், அரசுக்கு  ரூ. 2 லட்சம் கோடி இழப்பு என்றது தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அலுவலகம். மேலும், சில நூறு கோடிகள்   செலவில் சொந்தமாக செயற்கைக்கோள்களை ஏவிவரும் நிலையில், இந்த செயற்கைக்கோள்களை ஏவுவதற்காக ரூ. 2,400 கோடியில் ‘ஏரியன் ஸ்பேஸ்’ என்ற ஐரோப்பிய நிறுவனம் மூலம் ‘இஸ்ரோ’ முயற்சிகள் மேற்கொண்டதும் அம்பலத்துக்கு வந்தன.
‘ஒருவேளை இந்த ஒப்பந்தம் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்தால், இந்தியா முழுக்க ஒரே நேரத்தில் நேரடித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், செல்பேசி, தொலைபேசி, இணையச் சேவைகளை வழங்க வாய்ப்பு அளிக்கும் இந்த அலைக்கற்றையைப் பயன்படுத்தி, அடுத்த 10 ஆண்டுகளில் இந்தத் துறையே ‘தேவாஸ் மல்ட்டிமீடியா’ ஏகாதிபத்தியத்தின் கீழ் வந்துவிடும்’ என்றன தொலைத்தொடர்பு நிறுவனங்கள்.
நாடே அதிர்ந்தது. ஆனால், ‘இஸ்ரோ’-வைத் தன்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டில்வைத்து இருக்கும் பிரதமரோ, எதுவுமே தெரியாது என்றார். பின்னர், அவசர அவசரமாக ஓர் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி, ஒப்பந்-தத்தை ரத்துசெய்தார். ஒதுக்கீடு தொடர்பாக விசாரிக்க இரு விசாரணைக் குழுக்களை அமைத்தார். இந்த விசாரணைக் குழுக்கள் அளித்த அறிக்கைகளின் தொடர்ச்சியாகவே, ‘எந்த அரசுப் பணியும் வகிக்கக் கூடாது’ என்கிற கறுப்புப் பட்டியலில் இடம் பெற்று இருக்கிறார்கள் மாதவன் நாயரும் அவருடைய மூன்று கூட்டாளிகளும்.
அரசாங்கம் தங்களுக்கு விதித்து இருக்கும் தடை அநீதியானது. இதற்குப் பின் பெரிய சதி இருக்கிறது என்று கூறும் மாதவன் நாயரின் வார்த்தைகளில் கவனிக்க வேண்டிய இரு விஷயங்கள் இருக்கின்றன.
ஒன்று, இந்த முறைகேட்டின் பின் உள்ள சூத்திரதாரிகள். ‘‘இந்த ஒதுக்கீடு தொடர்பாக ‘ஆன்ட்ரிக்ஸ்’ - ‘தேவாஸ் மல்ட்டி மீடியா’ இடையே 18 கூட்டங்கள் நடைபெற்றன. அவை தொடர்பான எல்லா விவரங்களும் அரசுக்குத் தெரியப்படுத்தப்பட்டன!’’ என்கிறார் மாதவன் நாயர். மாதவன் நாயரின் இந்தக் குற்றச்சாட்டை அரசோ, பிரதமரோ இதுவரை மறுக்கவில்லை. எனில், எப்படி இந்த முறைகேடு அனுமதிக்கப்பட்டது? அதனால், பலன் அடைந்தவர்கள் யார், யார்? உண்மையில், இந்த முறைகேட்டின் பிரதான குற்றவாளி யார்? ஒருவேளை மாதவன் நாயர்தான் என்றால், அவர் மீது ஏன் வழக்குப் பதிவுசெய்யப்படவில்லை? ஏன் அவரிடம் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை? ஏன் அவரிடம் அரசு மென்மையான போக்கைக் கடைப்பிடிக்-கிறது? அரசு யாரைப் பாதுகாக்க நினைக்கிறது?
இரண்டாவது, ‘இஸ்ரோ’வில் நிலவும் மோசமான சூழல். ‘‘இந்திய விண்வெளி ஆய்வு மையத் தலைவர் ராதாகிருஷ்ண-னுக்குத் தொழில்நுட்பம்குறித்து எதுவும் தெரியாது. அவர் ஒரு பேரழிவுச் சக்தி. அந்த நிறுவனத்தை அவர் கொன்றுவிடுவார்’’ என்று  வர்ணித்திருக்கிறார் மாதவன் நாயர். ‘இஸ்ரோ’வில் நிலவும் உள் அரசியலுக்கு இது ஓர் உதாரணம். ‘‘இது தனிப்பட்ட தாக்குதல் அல்ல’’ என்று விளக்கம் அளித்து இருக்கும் மாதவன் நாயர், ‘‘இந்தியாவின் தொழில்நுட்பத் துறையின் எதிர்காலத்தை அடுத்த 10 ஆண்டுகளுக்கு முன்கூட்டித் திட்டமிடும் நிறுவனம் ‘இஸ்ரோ’. ஆனால், கடந்த இரு ஆண்டுகளாக அதன் நிலைமை என்ன என்பது எல்லோருக்குமே தெரியும்!’’ என்று ‘இஸ்ரோ’வின் சமீப காலப் பின்னடைவுகளைச் சுட்டிக்காட்டி இருக்கிறார். ‘இஸ்ரோ’-வின் முன்னாள் தலைவர்களில் ஒருவரான யு.ஆர். ராவ் சமீபத்தில் அளித்திருக்கும் பேட்டி மாதவன் நாயரின் கருத்துகளை ஊர்ஜிதப்படுத்துகின்றன. ‘‘ஒருகாலத்தில் விண்வெளித் துறையில் முன்னோடியாக இருந்தோம். ஆனால், இன்றைக்கு சீனாவைவிட நாம் வெகுவாகப் பின்தங்கியிருக்கிறோம்!’’  என்கிறார் ராவ்.
இந்தியாவில் பாதுகாப்புத் துறைக்கு அடுத்து, அதிகமாக நிதி ஒதுக்கப்படுவது விண்வெளி ஆய்வுக்குத்தான். பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி ‘இஸ்ரோ’வுக்கு ஒதுக்கப்படும் நிதி, அதன் செலவீனங்கள் எதுவும் மக்கள் பார்வைக்கோ, நாடாளுமன் றத்தின் பார்வைக்கோ வைக்கப்படுவது இல்லை. அங்கு பதவிக்கு வருவோரின் தகுதிகள், அங்கு நடக்கும் உள்ளடி வேலைகள் எதுவும் வெளியே தெரிவது இல்லை. இன்னும் எவ்வளவு காலத்துக்கு இந்தச் சூழலை அனுமதிக்கப்போகிறோம்?
இந்த நாடு விஞ்ஞானிகளின் வாய்களை எப்போதும் கட்டியே வைத்-திருக்கும் நாடு. நம்முடைய விஞ்ஞானிகளைக் கொஞ்சம் பேசவிடலாம் என்று தோன்றுகிறது!
ஆனந்த விகடன் 2012

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக