நோஞ்சான் இந்தியா!


       இந்தியா தன்னுடைய 65-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடிக்கொண்டிருந்தபோது வெளியான மோசமான செய்தி இது. நாட்டின் சுகாதாரத் துறையில், கிட்டத்தட்ட 75 சதவிகிதம் அளவுக்கு ஆட்கள் பற்றாக்குறை நிலவுகிறது. அதுவும் அரசு மருத்துவத் துறையில் பெரும் வெற்றிடம் ஏற்பட்டு இருக்கிறது. மத்திய அரசு வெளியிட்டு இருக்கும் 2011-ம் ஆண்டுக்கான கிராமப்புறச் சுகாதாரப் புள்ளிவிவரத்தின்படி, மருத்துவர்கள் பற்றாக்குறை 76 சதவிகிதம். 1,09,484 பேர் தேவைப்படும் இடத்தில், 26,329 பேர்தான் இருக்கிறார்கள். சிறப்பு நிபுணர்கள் பற்றாக்குறை 88 சதவிகிதம். 58,352 சிறப்பு பேர் தேவைப்படும் இடத்தில், 6,935 பேர்தான் இருக்கிறார்கள். செவிலியர்கள் பற்றாக்குறை 53 சதவிகிதம். 1,38,623 பேர் தேவைப்படும் இடத்தில் வெறும் 65,344 பேர்தான் இருக்கின்றனர். பரிசோதனைக்கூடத் தொழில்நுட்ப வல்லுநர்கள் நிலையோ படுமோசம். தேவை 94,896. இருப்பது 18,429 பேர்தான். 81 சதவிகிதம் பற்றாக்குறை. ஏழைகளின் ஆபத்பாந்தவனான ஆரம்ப சுகாதார நிலையங்கள் பற்றாக்குறை 18 சதவிகிதம்; அரசு மருத்துவமனைகள் பற்றாக்குறை 34 சதவிகிதம்!

       ஒரு நாட்டின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதில், அங்கு நிலவும் வாழ்வதற்கான அடிப்படைச் சூழல் முக்கியமானது. வறுமை ஒருபக்கமும் சுற்றுச்சூழல் கேடுகள் மறுபக்கமுமாகச் சேர்ந்து இந்தியாவில் வாழ்வதற்கானச் சூழலை மோசமாகி நீண்ட காலம் ஆகிவிட்டது. சுவாசிக்க புகையும் தூசியும் கலந்த காற்று, குடிக்க நச்சுத் தண்ணீர், சாப்பிட பூச்சிக்கொல்லியும் ரசாயனமும் கலந்த உணவு என்று விதிக்கப்பட்ட இந்தியர்களின் மருத்துவத் தேவைகள் அதிகம். ஆனால், மோசமான மருத்துவக் கட்டமைப்பையே நாம் பெற்று இருக்கிறோம்.
         ஒரு நாட்டில் வலுவான மருத்துவத் துறை இருக்க 10,000 பேருக்கு குறைந்தது 20 மருத்துவர்கள் இருக்க வேண்டும் என்கிறது உலகச் சுகாதார நிறுவனம். வளர்ந்த நாடுகளில் இந்த எண்ணிக்கை: பிரான்ஸ் 34; அமெரிக்கா 25; இங்கிலாந்து 23; கனடா 21. இந்திய அரசு 10,000 பேருக்கு ஐந்து மருத்துவர்கள் போதும் என்று நினைக்கிறது. மத்திய அரசு வெளியிட்டு இருக்கும் புள்ளிவிவரம் அந்த எண்ணிக்கைக்கும் ஆபத்து வந்திருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது.
         இந்தியாவில் 345 மருத்துவக் கல்லூரிகள் இருக்கின்றன. ஆண்டுக்கு 40,525 மருத்துவர்களை நாம் உருவாக்குகிறோம். ஒரு மருத்துவருக்கு ஒரு செவிலியர் என்கிற விகிதாச்சாரம்கூட செவிலியர்களை உருவாக்குவதில் இல்லை. மருத்துவம் சார் துணைப் படிப்புகளை முடித்து வெளியேறுவோர் எண்ணிக்கையோ இன்னும் படுமோசம். நம்முடைய எதிர்காலத் தேவையோடு ஒப்பிடுகையில், இதெல்லாம் யானைப் பசிக்குச் சோளப்பொறி!
         அடுத்த 20 ஆண்டுகளில் நமக்கு 52 லட்சம் மருத்துவர்கள் தேவை. இப்போதுள்ள கட்டமைப்பைக் கொண்டு கணக்கிட்டால் இதில் ஐந்தில் ஒரு பங்கு மருத்துவர்களே அப்போது இருப்பார்கள். உள்ளபடியே நமக்குத் தேவையான மருத்துவர்களையும் செவிலியர்களையும் உருவாக்க மேலும் 2400 கல்லூரிகள் தேவை. ஆனால், ஏற்கெனவே உள்ள மருத்துவக் கல்லூரிகளிலேயே பெரும்பாலான கல்லூரிகள் மோசமான உள்கட்டமைப்பில், போதிய பேராசிரியர்கள்கூட இல்லாமல் திண்டாடிக்கொண்டிருக்கும் சூழலில் அரசே நினைத்தாலும் இத்தனை மருத்துவக் கல்லூரிகளை உடனடியாக உருவாக்கிவிட முடியாது.
         இத்தகைய சூழலில், இந்தியா தன்னுடைய சுகாதாரக் கொள்கையை மாற்றி அமைப்பது அவசியம். முதல்கட்டமாக, ஊருக்கு ஊர் ஊட்டச்சத்து மையங்களைத் தொடங்குவது குறித்தும் துணை மருத்துவர்களை உருவாக்குவதுகுறித்தும் அரசு யோசிக்க வேண்டும். வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள - ஊட்டச்சத்துக் குறைவினால் பாதிக்கப்பட்டோருக்கு ஊட்டச்சத்து மாவு, மாத்திரைகள் போன்றவற்றை இந்த மையங்கள் மூலம் வழங்கலாம். இதேபோல, கிராமப்புறம், நகர்ப்புறம் என்று வேறுபாடு இல்லாமல், இரண்டு ஆண்டுகள் அல்லது மூன்று ஆண்டுகள் பட்டயப் படிப்பாக துணை மருத்துவர் படிப்பை அரசு உருவாக்க வேண்டும். சாதாரணக் காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி போன்ற தொடக்க நிலை உடல் பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்கவும் அடுத்தகட்ட நோயாளிகளை மருத்துவர்களுக்குப் பரிந்துரைக்கவும் இவர்களை அனுமதிக்கலாம். மூச்சு திணறும் தேசத்துக்கு கொடுக்க வேண்டிய சுவாச வாயு நடவடிக்கைகள் இவை!
டாக்டர் விகடன் நவ.2012

3 கருத்துகள்:

  1. நவீன சித்தன்30 ஜனவரி, 2013 அன்று PM 10:49

    தனியார்மயத்தின் கோரமுகம் இதுதான்.... தேவை மற்றும் பற்றாக்குறையையெல்லாம் தாண்டி , இன்றைக்கு இருக்கும் மருத்துவர்கள் , செவிலியர்கள் , மருத்துவப் பணியாளர்களை அரசுப் பணியில் அமர்த்தினாலே உடனடி பிரச்சினைகளை சமாளிக்கப் போதுமானது.....ஒருபுறம் தனியார் கல்லூரிகளிலிருந்து ஏராளமான செவிலியர் மற்றும் மருத்துவ சார் படிப்பை முடித்தவர்கள் வெளிவந்துகொண்டேயிருக்கிறார்கள்..மறுபுறம் வேலை கிடைக்காமல் அல்லது தனியார் மருத்துவமனைகளில் அடிமாட்டு சம்பளம் பெற்று வாழ்க்கையே வெறுத்துப் போகிறார்கள்..வெறும் 10 வகுப்பு தகுதி உடைய சில நூறு அரசுப்பணிக்கு கூட லட்சக்கணக்கில் , முதுநிலைப் பட்டதாரிகள் விண்ணப்பித்து போட்ட்டியிடும் காட்சிகளை காண்கிறோம்.... ஆனால் மருத்துவ துறையில் காணும் காட்சி இதற்கு நேர்மாறானது.இங்கு மட்டும்தான் , அரசுப் பணியை மிகச்சாதாரணமாக உதறிவிட்டு செல்லும் காட்சியைக் காணமுடியும்.. எதனால் ?? மாதம் 60 , 70 ஆயிரம் சம்பளம் வாங்கும் ஒரு அரசு மருத்துவர் , அந்த வேளையைவிட்டு , தனியாக மருத்துவமனை ஆரம்பித்தால் , பல லட்சங்களை , ஏன் சிலவேளை கோடிகளில் சம்பாதிக்கமுடிகிறது.....காரணம் தானியார்மயத்தை அரசே ஆதரிக்கிறது.... உலக வங்கி , சர்வதேச நிதியம் போன்றவற்றின் கட்டளைக்கு கீழ்படிந்து , மருத்துவத் துறையை முழுதும் கை கழுவிக் கொண்டிருக்கிறது....பொதுத்துறை - தனியார் பங்கேற்பு(public - private partnership ) என்பதன் பொருள் இதுதான்...இன்னொருபுறம் பன்னாட்டு மருந்துக் கம்பெனிகளே இந்த நாட்டின் மருத்துவக் கொள்கைகளை , இங்கிருக்கும்(மருத்துவம் , பொது சுகாதாரம் சார்ந்த ) தொண்டு நிறுவனங்கள் மூலம் பல புள்ளி விவரங்களை உருவாக்கி தீர்மானிக்கிறது....எனவே தனியார் மயத்தையும் ஏகாதிபத்தியத்தின் சுரண்டலையும் உடைக்காத வரை இதை நம்மால் ஒன்றும் செய்யமுடியாது என்பது மட்டுமல்ல....நிலைமை இன்னும் கொடூரமாகத் தான் போகிறது.......

    பதிலளிநீக்கு
  2. சுகாதாரத்திற்கான அரசின் ஒதுக்கீடு ஒவ்வொரு ஆண்டும் 1.2% அளவே உள்ள நம் நாட்டில் வேறென்ன எதிர்பார்க்க முடியும்? கடந்த வருடம் வெளியான 12 வது ஐந்தாண்டு திட்டத்தில் தனியார்-அரசு பங்கேற்பைப்பற்றியும், பெரும்பான்மையாக மருத்துவ சிகிச்சையை காப்பீட்டு நிறுவனங்களிடம் விடவும் அதாவது தனியாரிடம் விடவும், சில நோய் தடுப்பு நடவடிக்கைகளையும், ஆரம்ப சுகாதார நிலையங்களை மட்டும் அரசி்ன் பொறுப்பில் விடவும் முடிவு எடுக்கப்பட்டு நடைமுறைபடுத்தப்படும் நிலையில், தேசிய மருந்து தயாரிப்பில் சிறந்து விளங்கிய நம் நாட்டில் இன்று 100% அன்னிய முதலீடு கொண்டு வரப்பட்டு பன்னாட்டு கம்பெனிகள் மருந்துகளின் விலையை நிர்ணயிக்கும் நிலையில் பெரும்பான்மை மக்கள் மருந்துவமனைக்கும் செல்ல முடியாது, மருந்துகளும் வாங்க முடியாத நிலை ஒருபுறமும், மறுபுறம் பன்னாட்டு முதலாளிகளுக்கும் உள்நாட்டு தரகு முதலாளிகளுக்கும் நாட்டை தாரைவார்த்தால் மண், நீர், காற்று, உணவு மாசுபட்டு நோயாளிகளாக்கப்பட்டுக்கொண்டுள்ளனர்.இந்த கொடுமைகளுக்கான தீர்வு மருத்துவதுறை அரசுடைமையாதலே.நம் மக்களுக்கான சேவையை நாமே செய்வோம்.ஏகாதிபத்தியத்திய தனியார்மய ஆளுமையை மருத்துவ துறையிலிருந்து நீக்காமல் தீர்வு ஏற்படாது.

    பதிலளிநீக்கு